ராவணன் மரணமே இல்லாத அமர வாழ்வு வாழ வேண்டும் என்று மிகவும் விரும்பினார். சிவ பக்தரான அவர், இமய மலையில் இருந்த அடர்ந்த காடுகளில் கடுமையாக தவம் செய்தார். இறைவனைக் குறித்து பல பாடல்களையும் இசையமைத்துப் பாடியும், உணவு, நீர் எதுவும் இல்லாமல் தவம் செய்தும் சிவபெருமானின் மனதைக் குளிர வைக்க முயற்சி செய்தார். பல ஆண்டுகள் கழித்து சிவபெருமான் ராவணனுக்குக் காட்சி கொடுத்து, வேண்டும் வரத்தைத் தருவதாக வாக்களித்தார். "எனக்கு இறப்பே வரக் கூடாது, நான் உயிரோடு இருக்கும் வரை யாரும் என்னைத் தோற்கடிக்கக் கூடாது! இந்த இரு வரங்களையும் எனக்கு வழங்குங்கள் ஈசனே!" என்று இறைஞ்சினார் ராவணன். கேட்டவர்களுக்குக் கேட்ட வரம் அளிக்கும் கருணாகரனான இறைவனும் மிகவும் புனிதமான ஆத்மலிங்கத்தை அளித்து. "இந்த லிங்கத்தை உன் அரண்மனையில் பிரதிஷ்டை செய்து, முறைப்படி பூஜித்தால் உனக்கு அழிவே இல்லை, உன்னை யாராலும் வெல்லவே முடியாது. ஆனால் நீ இந்த ஆத்ம லிங்கத்தை எடுத்துச் செல்லும் வழியில் இதை எங்கேயும் கீழே வைக்கவே கூடாது. ஆத்மலிங்கம் கீழே வைக்கப்பட்டு விட்டால் பிறகு அங்கிருந்து அதை எடுக்கவே முடியாது." என்று அருளிச் செய்தார். மிகவும் மனம் மகிழ்ந்த ராவணன், ஆத்மலிங்கத்தை பக்தியோடு வாங்கி புஷ்பக விமானத்தில் இலங்கையை நோக்கிப் பறக்க ஆரம்பித்தார்.