இன்று ஆடிப் பெருக்கு விழா...!

இன்று ஆடிப் பெருக்கு விழா...!
தமிழர்களுக்கே உரிய தனிப்பெரும் பண்டிகை 'ஆடிப் பெருக்கு'. இந்த நாளில் காவிரிக் கரைத் தலங்களிலெல்லாம் மக்கள் கூடி அன்னை காவிரியை வழிபடுவர். மேலும் 'இந்த நாளில் அனைத்து நீர் நிலைகளிலும் அன்னை காவிரி எழுந்தருளியிருப்பாள்' என்பது ஐதிகம்...!

நீரைத் தெய்வமாக வழிபடும் மரபு நம்முடையது. இந்தப் பிரபஞ்சத்தின் ஆதாரசக்தியாக நீர் விளங்குகிறது. நீரால் உணவு உண்டாகிறது. உணவே உயிரை வளர்க்கிறது. அத்தகைய நீரைக் கொண்டாடும் ஒரு திருவிழா 'ஆடிப் பெருக்கு'. தமிழர்களுக்கே உரிய தனிப்பெரும் பண்டிகை இது.

நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். இந்த நாளில் ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவார்கள். அதுவும் காவிரி நதி பாயும் பகுதியில் இக்கொண்டாட்டம் பிரசித்தம். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடி விதை என்னும் முதுமொழி இதிலிருந்துதான் தோன்றியது.

அந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். மேலும்  ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

இப்படி ஆறுகளுக்கு சென்று ஆடிப்பெருக்கை கொண்டாட முடியாத மக்கள் கவலைப்பட வேண்டாம். ஆற்றுக்கு செல்ல முடியாதவர்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே விதம் விதமாக சமைத்து பலகாரம் செய்து, வீட்டு வாசலில் கோலம் போட்டு அலங்கரித்து காவிரியை, வைகையை, தாமிரபரணியை மனதால் வணங்கி ஆடி பதினெட்டாம் பெருக்கான இன்றைய நாளை கொண்டாடுவோம்.

Find Us Hereஇங்கே தேடவும்