பிள்ளையார் பிரம்மச்சாரியாக இருப்பதன் காரணம் என்று சுவையான ஒரு கதையை தெற்கத்தி கிராமபுறங்களில் சொல்வார்கள். அது என்னவாம்? சிவபெருமானும் பார்வதியும் விநாயகருக்கு திருமண வயது வந்தவுடன், அவரை அழைத்து, தாங்கள் அவருக்கும் பெண் பார்க்க இருப்பதாகவும், பெண் எப்படி அமைய அவருக்கு விருப்பம் என்றும் கேட்டார்களாம். அதற்கு பிள்ளையார் தனக்கு அன்னையைப் போன்றே பெண் அமைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தாராம். இந்த நிபந்தனையைக் கேட்டு அசந்து போன பெற்றோர், "சரிதானப்பா! நீயே உனக்கு விருப்பமான பெண்ணை தேர்ந்தெடுத்து விட்டு, எங்களிடம் சொல்!" என்று சொல்லி விட்டார்களாம் பெற்றோர். எனவே, பிள்ளையாரும் பூமிக்கு வந்து ஆற்றங்கரையிலும், முச்சந்தியிலும், வீதிகளிலும் அமர்ந்து, தனக்கு ஏற்ற பெண்ணை தேடிக்கொண்டிருக்கிறாராம்.ஆனால், இன்றுவரை அவருக்கு பொருத்தமான பெண் கிடைக்கவில்லையாம்.