3 பட்டாசு அறைகளில் பரவிய தீயைத் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
சிவகாசியைச் சேர்ந்த கேசவன் என்பவருக்கு ஏழாயிரம் பண்ணை அருகே புல்லக்கவுண்டன்பட்டியில் பட்டாசு ஆலை உள்ளது. அங்கு ஆண், பெண் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று விபத்து ஏற்பட்டு 3 பட்டாசு அறைகள் தீ பற்றி எரிந்து வெடித்துச் சிதறின. பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று 3 பட்டாசு அறைகளில் பரவிய தீயைத் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
அப்போது அறை வெடித்துச் சிதறியதில் பாறைப்பட்டியை சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மனைவி ஜெயசித்ரா (24) என்பவர் உடல் கருகி இறந்தார். பிறகு பிணத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்குச் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வெடி விபத்தால் ஏற்பட்ட தீ பட்டாசு ஆலையின் வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர மோட்டர் வாகனங்களுக்கும் பரவியது. இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் டேங்கில் தீ பற்றியதில் அவை அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியது.
விபத்து குறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரித்த போது கேசவனுக்குச் சொந்தமான அந்த பட்டாசு ஆலையின் உரிமம் மார்ச் 31ம் தேதி காலாவதியானதும், உரிமத்தைப் புதுப்பிக்காமல் சட்ட விரோதமாகத் தொழிலாளர்களைக் கொண்டு பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர் கேசவன், போர்மென் முனியசாமி ஆகிய 2 பேர் மீது ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.