சென்னை மண்டல மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்
தமிழ்நாடு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு இயற்பியல் மற்றும் உயிரியல் கேள்வித்தாள்கள் மிகமிக கடுமையாக இருந்ததாகவும், ஆனால், மும்பை மற்றும் டில்லி உள்ளிட்ட பிற 4 மண்டல கேள்வித்தாள்கள் மிகமிக எளிமையாக இருந்ததாகவும், எனவே, 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது. 'தமிழ்நாடு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு இயற்பியல் & உயிரியல் கேள்வித்தாள்கள் மிகமிக கடுமை.
மும்பை, டில்லி உள்ளிட்ட பிற நான்கு மண்டல கேள்வித்தாள்கள் மிக எளிமை. ஆகவே, சென்னை மண்டல மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் எனக்கேட்டு கடிதம் எழுதியிருந்தேன்.
அதற்கு சி.பி.எஸ்.இ. தேர்வு ஆணையர் பதில் அளித்துள்ளார். இந்த பிரச்சனையை தீர்க்க பாட நிபுணர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கி முடிவெடுக்க கூடிய உள்கட்டமைப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
எங்கள் மாணவர்களுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன். பல பாடத் திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஒற்றைத் தேர்வு என்று "நீட்"டைத் திணிக்கும் மத்திய அரசே, ஒரே பாடத் திட்டத்திற்கு பல கேள்வித்தாள் என்பது நகை முரண் அல்லவா? கொள்கை குழப்படி அல்லவா?
பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ்நாட்டு மாணவர்களுக்கு முழுமையான நீதி வழங்கு' என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.