ஓபிஎஸ் செயல்பாட்டால் இரட்டை இலை முடங்காது... ஜெயக்குமார் நம்பிக்கை

ஓ.பி.எஸ் விரக்தியின் விளிம்பில் உள்ளார். அவரின் கருத்தை ஒரு பொருட்டாக கருதவில்லை என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் இல்லத்தில் வைத்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’’ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக எங்கள் தரப்பு போட்டியிடுகிறது. இரட்டை இலை சின்னத்திற்கான முழு உரிமை எங்களுக்கு உள்ளது. இரட்டை இலை சின்னத்திற்காக ஒருங்கிணைப்பாளராக நான் கையெழுத்திடுவேன். வரும் 2026ம் ஆண்டு வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் அனுமதி அளித்துள்ளனர். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது. எங்களிடம் கூட்டணி கட்சிகள் பேசிக் கொண்டு தான் உள்ளன. அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே எனது விருப்பம்.’’ எனத் தெரிவித்து இருந்தார் ஓ.பி.எஸ்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ’’ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு வேட்பாளரை நிறுத்தினால் கூட, இரட்டை இலை முடங்காது. இரட்டை இலை முடக்கப்படும் என்பது வதந்தி. அது எந்த வகையிலும் நடக்காது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு , நீதிமன்றம் அங்கீகரித்த நிலையில் ஏ படிவம் பி படிவத்தில் கையெழுத்திடும் உரிமை அவருக்கு மட்டும் தான் உள்ளது’’ எனத் தெரிவித்தார்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே