மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட 57 மாநிலங்களவை உறுப்பினர்களில் 27 பேர் பதவியேற்பு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட 57 மாநிலங்களவை உறுப்பினர்களில் 27 பேர் பதவியேற்பு

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட 57 மாநிலங்களவை உறுப்பினர்களில் 27 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களில் 27 பேர், இன்று அரசியலமைப்பு சாசனப்படி முறையாகப் பதவியேற்று கொண்டனர். அவர்கள் அனைவரும் மாநிலங்களவை அவைத் தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். 

பதவியேற்பு விழாவில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணைய அமைச்சர் முரளீதரன் ஆகியோர் உடனிருந்தனர். மாநிலங்களவை எம்.பி.க்களாக இன்று பதவியேற்ற 27 பேரில் 18 பேர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் எனபது குறிப்பிடத்தக்கது. 

10 மாநிலங்களைச் சேர்ந்த இந்த 27 உறுப்பினர்கள் வெவ்வேறு மொழிகளில் பதவியேற்றுக்கொண்டனர்.  அதாவது, இந்தி மொழியில் 12 உறுப்பினர்களும், ஆங்கிலம் மொழியில் 4 உறுப்பினர்களும், சமஸ்கிருதம், கன்னடம், மராத்தி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் தலா இருவரும் மற்றும் பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தலா ஒருவரும் பதவியேற்றுள்ளனர். 

இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட உறுப்பினர்களில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரும் அடங்குவர். பியூஸ் கோயல் மராட்டிய மாநிலத்தில் இருந்தும், நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்தும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

அதிமுகவை சேர்ந்த ஆர்.தர்மர் இன்று பதவியேற்றுக் கொண்டார். மொத்தம் 57 உறுப்பினர்களில் 14 பேர் மீண்டும் இரண்டாவது முறையாக சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இன்று பதவியேற்காத எஞ்சிய எம்.பி.க்கள், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் பதவியேற்க வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநிலங்களவையில் உள்ள 72 உறுப்பினர்கள் ஜூலை மாதத்திற்குள் ஓய்வு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்