தண்டவாளத்தில் பெரு விரிசல்; ஊழியரின் செயலால் விபத்திலிருந்து தப்பிய ரயில்!

தண்டவாளத்தில் பெரு விரிசல்; ஊழியரின் செயலால் விபத்திலிருந்து தப்பிய ரயில்!

இராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக நடக்கவிருந்த விபத்தை சாமார்த்தியமாக தடுத்து நிறுத்திய ரயில்வே ஊழியர்.

இராமநாதபுரம்  அருகே வாலாந்தரவை என்ற பகுதியில் ரயில் நிலையம் ஒன்று  உள்ளது. இங்கு வழக்கம்போல் தனது ரயில்வே பணிகளை செய்து வந்த கீ மேன் வீரப்பெருமாள் என்ற இளைஞர் வாலாந்தரவை ரயில் தண்டவாளங்களை சரி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ரயில் நிலையம் அருகே 100 மீட்டர் தூரத்தில் தண்டவாளத்தில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதைக் கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார். அதே நேரத்தில் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.

இதையடுத்து உடனடியாக  தனது கைகளில் இருந்த சிவப்பு வண்ணக் கொடியை தூக்கி பிடித்தபடி ரயில் தண்டவாளத்தில் 200 மீட்டர் தூரம் ஓடி வந்து ஆபத்து உள்ளதை லாபகரமாக ரயில்வே ஓட்டுனர்களுக்கு தெரிவித்து  ரயிலை நிறுத்தினார்.

இதைதொடர்ந்து ரயில்வே கார்டு மற்றும் ஓட்டுநர்கள் சாமர்த்தியமாக அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை குறைத்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ரயிலை நிறுத்தினர். பின்னர் ரயில்வே ஊழியர்கள் மூலம் தற்காலிகமாக தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டு எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 5 மணி நேரமாகப் போராடி ரயில் தண்டவாளத்தின் விரிசலை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்தும் விசாரித்து வருகின்றனர். பெரும் விபத்திலிருந்து ரயில் பயணிகளை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் வீரப்பெருமாளை அப்பகுதி பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Find Us Hereஇங்கே தேடவும்