கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருக்கும் மர்மம் விலக்கப்படுமா? - நாளையும் சசிகலாவிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருக்கும் மர்மம் விலக்கப்படுமா? - நாளையும் சசிகலாவிடம் விசாரணை

நாளைய தினமும் சசிகலாவிடம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட இருக்கிறது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1991 - 1996 ல் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் ஒரு எஸ்டேட்டினை பங்களாவுடன் இணைத்து வாங்கினார். கொடநாடு எஸ்டேட் எனப்படும் இந்த சொத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் பங்கு உண்டு. 

ஜெயலலிதா கட்சி ரீதியாகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ எடுக்கப்படும் முக்கியமான முடிவுகளை ஆளும் கட்சியாக இருக்கும் போதும், எதிர்கட்சியாக இருக்கும்போதும் இந்த கொடநாடு பங்களாவில் வைத்துதான் எடுப்பார். ஆனால், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு 2017, ஏப்ரல் 23 ஆம் தேதி இரவு கூலிப்படை ஒன்று கொடநாடு பங்களாவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. 

இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டது. பின்னர் கட்சியின் நன்மை கருதி இரு அணிகளும் இணைந்தனர். அதேசமயம், இந்த சம்பவம் நடந்தபோது எடப்பாடிபழனிசாமி முதல்வராக இருந்தார். 

இதில் பங்களாவின் காவலர் ஓம் பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். மேலும் ஒரு காவலாளியான கிருஷ்ணாவின் கை, கால்களை கட்டிப் போட்டிருந்தனர். இப்படியான பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம், போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஒட்டுநர் கனகராஜ் சேலம் அருகே நடைபெற்ற கார் விபத்தில் காலமானார். 

தொடர்ந்து சயான் என்பவர் கேரளாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தனது மனைவி, குழந்தைகளை இழந்தார். அதேபோல, கொடநாடு பங்களாவில் சிசிடிவி காட்சிகளை கண்காணித்து வந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

எனவே, வாளையார் மனோஜ், சாயான், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய 10 நபர்கள் கைது செய்யப்படு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நீலகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இதற்கு இடைப்பட்ட காலத்தில் தான் 2019 ஆம் ஆண்டில், தெஹல்கா முன்னாள் ஆசிரியரான மேத்யூ சாமுவேல் வெளியிட்ட வீடியோவில், சாயானும் வாளையார் மனோஜிற்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தனர். இதனால், மேத்யூ சாமுவேல் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, எஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் விசாரணைய தீவிரப்படுத்தியது. 

இந்த சூல்நிலையில், மறைந்த ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் ரமேஷ் என்பவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் இருக்கின்றனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட தினேஷ் வீட்டாரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இவ்வாறாக இதுவரை 103 நபர்களிடன் விசாரணையையும், 40 பேரிடம் மறுவிசாரணையையும் நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் முக்கிய திருப்பமாக சசிகலாவிடம் இன்று தென்மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இன்று காலை துவங்கிய இந்த விசாரணையில் கிட்டத்தட்ட 100 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், மதியம் 1.35 மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்டது. 

பின்னர் துவங்கிய விசாரணை மாலை நிறைவு பெற்றது. இந்த விசாரணையில் சசிகலாவிடம், கோடநாடு பங்களா சாவி யாரிடம் இருக்கும்?, பங்களா பொறுப்பு யாரிடம் இருந்தது?, ஓட்டுநர் கனகராஜ் போயஸில் பணியாற்றினாரா?, ஜெயலலிதா, உங்கள் அறையில் இருந்த ஆவணங்கள் என்ன?, சம்பவத்திற்கு பின் நேரில் சென்று பார்த்திர்களா?, தற்கொலை செய்துகொண்ட தினேஷ் கோடநாடு பங்களாவில் என்னவாக இருந்தார்?, அவரை உங்களுக்கு தெரியுமா? என்ற கேள்விகளும் இதில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்