கேலா விருத்தி : 200 கிழங்குகள் மூலம் 2,000 கன்றுகள் வாழை ஆராய்ச்சி நிலையத்தின் கலக்கல் தொழில்நுட்பம்

ஒரு வாழை மரத்திலிருந்து 12 கன்றுகளை மட்டுமே பெற முடியும். அதிலும் அனைத்து பக்க கன்றுகளும் நடவுக்குப் பயன்படாது.
கேலா விருத்தி : 200 கிழங்குகள் மூலம் 2,000 கன்றுகள்
வாழை ஆராய்ச்சி நிலையத்தின் கலக்கல் தொழில்நுட்பம்

தொன்று தொட்டு பக்க கன்றுகள் மூலமாகவே இனப்பெருக்கம் செய்யப்படுகிறது வாழை. வாழை சாகுபடியில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது விதை தேர்வு. சீரான வளர்ச்சிக்கும், நல்ல மகசூலைப் பெறவும் தரமான கன்றுகளைத் தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். விதையைத் தவிர தாவரங்களின் பாகங்கள்மூலம் நாற்றுகளை உற்பத்தி செய்யும் முறைக்கு 'விதையில்லா இனப்பெருக்கம்' என்று பெயர்.

தற்போது இந்த முறையில் மட்டுமே வாழை கன்றுகள் தேர்வு செய்யப்படுகின்றன. விதையில்லா இனப்பெருக்க நாற்றுகள் பல்வேறு பண்புகளில் தாய் தாவரங்களை ஒத்திருக்கின்றன. இந்த முறையில் குறைந்த காலத்தில் மகசூல் பெறப்படுகிறது. நோய் மற்றும் பூச்சித்தாக்குதல் இல்லாத தாய் மரங்களைத் தேர்வு செய்து, அதிலிருந்து விதையில்லா இனப்பெருக்கம் மூலம் கன்றுகள் உருவாக்கப்படுகின்றன. அப்படி உருவாக்கப்படும் மரங்களிலிருந்து பெறப்படும் பழங்களின் தரம் ஒரே மாதிரி இருப்பதால் வணிகத்திற்கு ஏற்றதாக உள்ளது.

'திசு வளர்ப்பு' வாழை

பன்னெடுங்காலமாக இருந்த பக்க கன்றுகள் மூலமான இனப்பெருக்கம், விஞ்ஞான வளர்ச்சியால் 'திசு வளர்ப்பு மூலம் இனப்பெருக்கம்' என்ற நிலையை எட்டியுள்ளது. ஒரு தனிப்பட்ட தாவர செல்லுக்கு ஒரு முழு தாவரத்தை உருவாக்கும் உள்ளார்ந்த திறன் உள்ளது. அந்த வகையில் தாவரங்களின் திசுக்களையும், செல்களையும் செயற்கை சோதனை சாலைகளில் வளர்க்கும் முறைக்கு, 'திசு வளர்ப்பு' முறை என்று பெயர். இந்த தொழில்நுட்பம் மூலம் குறைந்த இடத்தில் நச்சுயிரி இல்லாத, அதிக வாழை கன்றுகளை உற்பத்தி செய்ய முடியும்.

கன்றுகள் வாங்குவதில் கவனம்

பல தனியார் நிறுவனங்கள், திசு வளர்ப்பு மூலம் உருவாக்கப்பட்ட வாழை கன்றுகளை விற்பனை செய்கின்றன. நோய் தாக்காத, நல்ல தாய் மரத்தில் எடுக்கப்பட்ட, திசு வளர்ப்பு மூலம் உருவாக்கப்பட்ட வாழை கன்றுகள் பொதுவாக நல்ல வளர்ச்சியும், மகசூலும் தரும். சில சமயங்களில் திசு வளர்ப்பு கன்றுகளில் அபரிமிதமான அளவு வளர்ச்சி வேற்றுமையும் காணப்படலாம். எனவே திசு வளர்ப்பு கன்றுகளை வாங்குவதற்கு முன், அந்தக் கன்றுகள் நல்ல விளைச்சலைத் தரும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

பக்கக்கன்று மூலம் நடவு செய்யும்போது விதை கன்றுகள் விலை குறைவு. ஆனால் கன்று எடுப்பு கூலி, கன்று கிடைக்கும் இடம் அறிதல், போக்குவரத்து செலவு மிக அதிகம். இதில் நமக்கான ரகத்தைத் தேர்வு செய்வதில் சில சமயம் சமரசம் செய்துகொள்ள வேண்டி வரும். நோய் தாக்காத தாய் மரத்தைக் கண்டறிவதும் சிரமம்.

விலை அதிகம்

திசு வளர்ப்பு கன்றுகளுக்கு, அவற்றை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்கள் உத்திரவாதம் கொடுக்கின்றன. ஆனால், இதனை விவசாயிகள் செய்ய முடியாது. திசு வளர்ப்பு மூலம் வாழை கன்றுகள் உற்பத்தி செய்ய ஆய்வுக்கூடம் தேவை. இதற்குப் பெரிய அளவு முதலீடு தேவைப்படும். அதற்கான பணியாட்கள், மின்சாரம், உற்பத்தி செலவு காரணமாகத் திசு வளர்ப்பு வாழை கன்றுகளின் விலை அதிகமாகவே இருக்கும்.

 விவசாயிகளே உற்பத்தி செய்து கொள்ளலாம்

இந்தச் சூழ்நிலையில் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் 'கேலா விருத்தி' என்ற வாழைக்கன்றுகள் உற்பத்தி செய்யும் புதிய, எளிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளது. விவசாயிகளே உற்பத்தி செய்து கொள்ளும் இந்தத் தொழில்நுட்பம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுதொடர்பாக பேசிய, தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானியும், நபார்டு வங்கி திட்ட ஒருங்கிணைப்பாளருமான முனைவர். கார்த்திக்,

விவசாயிகளுக்குப் பயிற்சி

"கேலா விருத்தி என்பது எளிமையான, சிறப்பான, சிக்கனமான தொழில்நுட்பம். இந்த முறையில், திசு வளர்ப்பு கன்றுகளுக்கு மாற்றாகக் குறைவான இடத்தில், குறைந்த இடுபொருட்களைக் கொண்டு அதிக அளவு வாழை கன்றுகளை உற்பத்தி செய்யலாம். இதனை விவசாயிகளே செய்து கொள்ள முடியும். அதற்கான பயிற்சியை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம். இந்த கேலா விருத்தி தொழில்நுட்பம் குறித்த ஆய்வு, 2006-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த முறையில் வாழை கன்றுகளை உற்பத்தி செய்து, நிலத்தில் நடவு செய்து மகசூல், நோயின் தாக்கம், பூச்சித்தாக்குதல் குறித்த சோதனைகள் பல்வேறு கட்டமாக நடைபெற்று வருகிறது.இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையும் திருச்சிராப்பள்ளி நபார்டு வங்கியின் திட்ட உதவியுடன் இணைத்து இந்தத் தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்குப் பயிற்றுவிக்கிறோம்.

வாடல் நோயால் மதிப்பிழந்த திசு வாழை

வாழை சாகுபடியில் மிகவும் சிக்கலாக இருப்பது கன்றுகள் உற்பத்திதான். ஒரு வாழை விவசாயி தனக்குத் தேவையான வாழை கன்றுகளை மற்றொரு வாழை விவசாயி நிலத்தில் இருந்து பறித்து வந்து நடவு செய்ய வேண்டும். இதனால் மண்ணின் மூலம் நோய் கிருமிகள் பரவுகின்றன. இதனால் 100 வாழை கன்றிற்கு 10 வாழை கன்றுகள் அதாவது 10 சதவிகிதம் நோயினால் பாதிக்கப்படுகின்றன. இந்த நோய் பாதிப்பைக் குறைக்க, திசு வளர்ப்பு வாழை கன்று அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் திசு வளர்ப்பு முறையில் பாரம்பரிய வாழை ரகங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. G9 ரக வாழை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. திசு வளர்ப்பு வாழை கன்றின் விலை 20 ரூபாய் வரை இருக்கிறது. இதனால் சிறு, குறு விவசாயிகளால் திசு வளர்ப்பு வாழை கன்றுகளை வாங்க முடிவதில்லை. மேலும் G9 ரக வாழை வாடல் நோய் பாதிப்பால் மதிப்பை இழந்துள்ளது.

எளிய தொழில்நுட்பம்

இந்த சூழலில் கேலா விருத்தி முறை விவசாயிகளிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் இந்த எளிய, குறைந்த செலவிலான தொழில்நுட்பம் வாழை உற்பத்திக்கு பெரிய அளவில் துணை புரியும். இதில் வளர்ச்சி ஊக்கியாக 'பென்சைல் அமினோ பியூரின்' பயன்படுத்தப்படுவதால் வாழை கன்று வேகமாக வளர்கிறது. உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியம் மண் வளத்தைக் காத்து தேவையான சத்துக்கள் கிடைக்கச் செய்கின்றன.

ஈட்டி இலை கன்று

கேலா விருத்தி மூலம் ஒரு வாழை கன்றிலிருந்து சுமார் 25 நாற்றுகள் உண்டாக்கலாம். 25 மடங்கு நாற்றுகள் கிடைப்பதற்கு, தாய் மரத்திலிருந்து பக்க கன்றுகள் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நோய் தாக்காத, தரமான தாய் வாழையில் நன்கு உருண்டு திரண்ட கிழங்கை உடைய, ஈட்டி இலை கன்றுகளைத்தான் தேர்வு செய்ய வேண்டும். பூவன், நெய் பூவன், கற்பூர வள்ளி, செவ்வாழை என நமது பகுதிக்கேற்ற, நல்ல விற்பனை வாய்ப்புள்ள, உற்பத்தித் திறனுள்ள வாழை ரகத்தின் கன்றுகளைச் சேகரிக்க வேண்டும்.

வாழை கன்றுகள் வந்ததும் பக்கக்கன்றுகளின் கறுப்பு பகுதிகளைச் சுத்தமாக சீவி எடுக்க வேண்டும். தண்டுப்பகுதி அரை அடி நீளம் போதுமானது. மீதமுள்ள பகுதியை நீக்கி விட வேண்டும். அடுத்து தொற்று நீக்கம் செய்ய வேண்டும். அதற்கு வெட்டி சுத்தம் செய்த வாழை கன்றுகளை சணல் சாக்குகளில் கட்டி, கை சூடு பொறுக்கும் அளவில் உள்ள சுடுதண்ணீரில் முக்கி எடுத்து நிழலில் ஆறவிட வேண்டும். பிறகு, 50 லிட்டர் தண்ணீரில் 50 கிராம் 'பெவிஸ்டின்' கலந்து அதில் வாழை கன்றுகளை முக்கி எடுக்க வேண்டும்.

அடுத்த கட்டமாக வாழை கிழங்கை, கிழங்கு மட்டத்தில் வெட்டி, கீறிவிட வேண்டும். கீறிய பின் மடல்களைப் பிரித்து விட வேண்டும். கிழங்குகளைக் கீறி விடும்போது நீள்வட்ட கோடு போட்டுக் கீற வேண்டும். கீறல்கள் மட்டும்தான் போட வேண்டும். ஆழமாக வெட்டி துண்டு போட்டு விடக்கூடாது.

ஈரப்பதம் பராமரிப்பது அவசியம்

வாழை கிழங்கில் முளைக்கும் குருத்து, முளை தண்டிற்குக் கீழ் இருக்கும். இந்தக் குருத்து முளையைத் தோண்டி நீக்கி விட வேண்டும். இவ்வாறு வெந்நீரில் போட்டு, 'பெவிஸ்டின்' பூஞ்சண கொல்லியால் தொற்று நீக்கம் செய்யப்பட்ட வாழை கிழங்குகளை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள படுக்கையில், வரிசையாக, நெருக்கமாக, இடைவெளியின்றி அடுக்க வேண்டும்.

இதற்கு மேல், தொட்டிக்குத் தயார் செய்த கலவையைக் கொண்டு மூடி விட வேண்டும். 10 முதல் 15 நாட்கள் லேசாகத் தண்ணீர் தெளிக்க வேண்டும். மண் எப்போதும் புட்டு பதத்தில் இருப்பது போல ஈரப்பதம் பராமரிப்பது அவசியம். 15 நாட்களில் கிழங்கு துளிர்க்கத் துவங்கும். 10 முதல் 15 துளிர்கள் காணப்படும். இந்தத் துளிர்களை வெட்டி நீக்கி, அந்தப் பகுதியையும் மீண்டும் கீறி விட வேண்டும். மறுபடியும் மேல் மண் கொண்டு மூடுதல் அவசியம். மறுபடியும் 20 முதல் 25 நாட்களில் துளிர்க்கும். அதையும் மண்ணில் இருக்கும்படியே வெட்டி சிதைக்க வேண்டும். லேசாக மண் கொண்டு மூட வேண்டும்.

எப்போதும் ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீர் தெளிக்க வேண்டும். அதிக தண்ணீரும், தண்ணீர் பற்றாக்குறையும் தவிர்க்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். 30 நாட்களுக்குப் பிறகு, மீண்டும் கன்றுகள் வளர்ந்து இருக்கும். அந்தக் கன்றுகளை 2 அல்லது 3 இலை வரும் வரை தாய் படுக்கையில் வளர்க்க வேண்டும். மூன்று இலைகள் வந்ததும் பிரித்து, துளையிட்ட கருப்பு பாலித்தீன் பைகளில் மண் நிரப்பி, நடவு செய்து அடுத்து 2 இலை வரும் வரை குடிலுக்குள் வைக்க வேண்டும். பிறகு, இந்த பை நாற்றுகளை, வெளியே கொண்டு வந்து பாதி வெயில் பாதி நிழலில் வைத்து சூழல் பழக்க வேண்டும். பின்னர் நேரடி வெயிலில் ஒரு வாரம் வைத்து நடவுக்கு அனுப்பலாம்'' என்றவர் நிறைவாக,

200 கிழங்குகள் மூலம் 2,000 கன்றுகள்

''20 அடிக்கு 10 அடி கூடாரத்தில் 200 வாழை கிழங்குகள் மூலம் குறைந்தபட்சம் 2,000 வாழை கன்றுகளை உற்பத்தி செய்யலாம் என்பதே இந்த கேலா விருத்தி தொழில்நுட்பத்தின் சிறப்பு. ஒரு வாழை கன்றின் விலை 10 ரூபாய் என விற்பனை செய்தால் கூட 90 நாட்களில் 20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மேலும் இதைப் பற்றி அறிய திருச்சி தாயனூர் தோகைமலை ரோட்டில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தை அணுகலாம்'' என்றார்.

 பெட்டிச் செய்தி

 கன்று உற்பத்தி

 கேலா விருத்தி மூலம் வாழை கன்று உற்பத்தி செய்ய 10 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட பனிக்கூடாரம் (Humidity shed) தேவை. இது 'பாலிஹவுஸ்' போன்ற சிறிய அமைப்பு. நீண்ட வளர்ப்பு தொட்டி அமைக்க சிமெண்ட் 'ஹாலோ பிளாக்' கற்கள் தேவை. இந்தக் கற்களை ஒரு கல் உயரத்தில் 4 அடி அகலம், 10 அடி நீளத்தில் பாத்தி போன்று அடுக்க வேண்டும். இடையில் 2 அடி நடைபாதை அமைக்க வேண்டும். மறுபுறம் ஏற்கெனவே அமைத்தது போல 4 அடிக்கு 10 அளவில் ஒரு பாத்தி என அமைத்துக்கொள்ள வேண்டும்.

 இந்தப் பாத்தியில் நன்கு மட்கிய தொழு உரம், வேக வைத்து ஆற வைத்த மரத்தூள், 20 கிலோ மண்புழு உரம், 5 கிலோ வேம், தலா ஒரு கிலோ வேப்பம்பிண்ணாக்கு, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியம், சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, தலா 500 கிராம், தோட்ட மேல் மண், கற்கள் நீக்கப்பட்ட செம்மண் ஆகியவற்றை நன்கு கலந்து இந்தத் தொட்டியில் நிரப்ப வேண்டும். இந்தக் கலவையில் பிளாஸ்டிக், பீங்கான், கட்டி, கல், குச்சி கோல் இல்லாமல் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். நிரப்பப்பட்ட கலவையில் தினசரி லேசாகத் தண்ணீர் தெளித்து கலவையில் உள்ள வெப்பத்தைக் குறைக்க வேண்டும். தொட்டியில் உள்ள கலவையைத் தினசரி கிளறிவிட்டு பொல பொலப்பாக வைக்க வேண்டும்.

குறைந்தது ஒரு வார காலத்திற்குத் தண்ணீர் தெளித்து, மண் கலவையைக் கிளறி விட்டு வந்தால் பாத்தி தயாராகி விடும். இந்த கேலா விருத்தி தொழில்நுட்பத்தின் மூலம் வாழை ரகங்கள், இஞ்சி, மஞ்சள் போன்றவற்றைக் கன்றுகளாக பல மடங்கு பெருக்கலாம்.

நடவு பணி
நடவு பணி

பெட்டிச் செய்தி

2 முதல் 3 அடி உயரமுள்ள கன்றுகள்

பக்க கன்றுகள் மூலம் இனப்பெருக்க முறையில் அதிகபட்சமாக ஒரு வாழை மரத்திலிருந்து 12 கன்றுகளை மட்டுமே பெற முடியும். அதிலும் அனைத்து பக்க கன்றுகளும் நடவுக்குப் பயன்படாது. தாய் மரத்திற்குப் பக்கத்தில், கிழங்கிலிருந்து வளரும் 2 முதல் 3 அடி உயரமுள்ள, சுமார் 3 மாத வயதான, ஈட்டி இலை கன்றுகளே சிறந்தவை. ஒரு கன்றின் எடை ஒன்றரை கிலோவுக்கு குறையாமலும், இரண்டரை கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கன்றுகளின் பருமனும், எடையும் ஓரளவுக்கு ஒரேமாதிரியாக இருக்குமாறு தேர்வு செய்து நட வேண்டும். வைரஸ் நோய், கிழங்கு அழுகல் நோய் மற்றும் நூற்புழுக்களின் தாக்குதலுக்கு அதிக அளவு இலக்காகாத தோட்டங்களில் இருந்துதான் வாழை கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

 பெட்டிச் செய்தி

உலக வர்த்தகம்

உலக வேளாண் வர்த்தகத்தில் அதிகளவு வர்த்தகமாகும் விளைபொருள் வாழை. இந்தியா, பிரேசில் நாடுகள் உலக அளவில் பெரிய உற்பத்தியைக் கொண்டுள்ள போதும், அதன் உள்நாட்டுத் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கின்றன.

- ஊரோடி வீரக்குமார்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com