- கே.ஜி.ஜவஹர்1‘கடல் அலைகளை எண்ணினாலும் எண்ணிவிடலாம்.ஒரு கன்னிப் பெண்ணின் மனதில் எழும் காதல் அலைகளை எண்ணிவிட முடியாது!’விவேக் சொன்னதை நினைத்துக் கொண்டாள் வினோதினி.சரியாகத்தான் சொல்லியிருக்கிறான்.இல்லாவிட்டால், வளைக்குள்ளிருந்து வெளியே வருவதும் பக்கவாட்டிலேயே வேகமாக ஓடி மறைவதுமான நண்டுபோலிருக்குமா நினைவுகள்!‘காதல்’ என்பது வள்ளுவன் சொன்னதுபோல் மிகவும் வித்தியாசமான உணர்வுதான். அது வித்தியாசமான நெருப்பும்தான். அவன் நெருங்கி இருந்தால் உடல் குளிர்கிறது. தள்ளி இருந்தால் உடல் சுடுகிறதே!‘‘விவேக் சீக்கிரம் வா..!’’“அக்கா... சுண்டல் வேணுமாக்கா?’‘கசங்கிய டிராயரும் கிழிந்த சட்டையுமாய் இருந்த அந்தச் சிறுவன் மண்டியிட்டு அவள் அருகே அமர்ந்தான். அவள் நினைவுகள் சட்டென்று கலைந்தன.வினோதினி அவனையே உற்றுப் பார்த்தாள்.பின்னொரு நாள் அவள் வாழ்க்கையில் அவன் நுழையப்போகிறான் என்று அறியாதவளாய்.அவன் பார்வையில் வாஞ்சையும் இருந்தது.அடிக்கடி அவனை பீச்சில் பார்க்கிறவள்தான்.இன்று ஏனோ அவனிடம் கொஞ்சம் பேசவேண்டும் போலிருந்தது.ஒரே நிகழ்வோ செய்கையோ மனநிலைக்கு ஏற்றவாறு ரசிக்கவோ அல்லது ரசிக்காமல் கடந்து போகவோ செய்து விடுகிறது.சாதாரணமாக இருக்கும் பாடல்கள்கூட பயண நேரத்தில் மிக இனிமையாக இருப்பது மாதிரி!அந்தச் சுண்டல் சிறுவன் அழகாக சிவப்பாய் இருந்தான். நெற்றியில் விபூதி. முகத்தினில் சிரிப்பு. அழகான பற்கள். இன்னும் முழுமையாக உடையாத குரல்.“சொல்லுங்க அக்கா...’‘ என்றவாறே அவளை அண்ணாந்து பார்த்தான். இறங்கு வெயிலுக்கு கண்களுக்கு கைகளைத் தொப்பியாக்கினான்.“பேர் என்னடா?’‘“பாபு..! எவ்வளுக்கா தரட்டும்..? பத்து ரூபாய்க்கா அல்லது இருபது ரூபாய்க்கா?’‘“இருடா சொல்றேன்... கொஞ்சம் பேசேன்டா...’‘“அக்கா... நிறைய விக்கணும்கா...’‘“விக்கலாம்டா... என்ன படிக்கிறே?’‘“எட்டாம் வகுப்புக்கா... அக்கா... அக்கா... எவ்வளவு தரட்டும்கா..அத்தானுக்கும் சேர்த்து தந்திரவாக்கா?’‘திடுக்கிட்டாள்.“என்னடா சொல்றே? அத்தானா?’‘சிரித்தான். ‘‘போங்கக்கா... அடிக்கடி உங்கள பார்க்க வர்றவரு அத்தான் இல்லாம பின்ன யாராம்?’‘“அடப்பாவி... அவர் என் ஃப்ரெண்ட்ரா!’‘“எல்லாரும் முதல்ல அப்படித்தாங்கா சொல்வாங்க... எத்தனை பேர பார்க்கிறேன்..!’‘“நல்லா பேசறேடா..!’‘சிரித்தான். கன்னத்தில் அழகான குழி.‘பயலுக்கு கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணர் வேஷம் போட்டால் அழகா இருப்பான்... இவனுக்குத்தான் பரிசு..!’“டேய்... சொல்லுறா... கூடப் பிறந்தவங்க எத்தனை பேருடா..?’‘“ஒரே அக்காதான்..! அக்கா... போகணும் கா...’‘மென்மையாய்க் கெஞ்சினான்.“டேய் போலாம்டா... எவ்வளுடா விற்கும்?’‘“ஐநூரு ரூபாய்கா.’‘“நான் தரேன்...’‘“வேணாம்கா... எனக்கு ஃப்ரெண்சும் வேணும்கா...’‘“என்னடா சொல்றே?’‘“உங்களுக்கே எல்லாம் கொடுத்துட்டா மத்தவங்க காத்து இருப்பாங்களே அக்கா.’‘அவன் பதிலால் வியந்தாள். ஒரு பைசாவிற்காக அடித்துப் பிடித்து கோர்ட் வரை போய் முட்டாள்தனமாக ஆயிரக்கணக்கில் செலவழிக்கும் மனிதர்கள் இருக்கும்போது இவன் நிச்சயம் தங்கம்தான்!கடற்காற்றில் சிலுசிலுத்த அவனுடைய தலைமுடியை வருடினாள். பட்டுப் போலிருந்தது.“அப்ப ஐநூறு வெச்சிக்க... சுண்டல் வேண்டாம்..!’‘“ஐயோ அக்கா... அது எப்படிக்கா சரியாகும்..? விக்காத சுண்டலுக்கு காசு வாங்கினா பிச்சை எடுக்கிற மாதிரி ஆகிருமேக்கா..!’‘அவன் வெள்ளந்திப் பேச்சு அவளை ஓங்கி அறைந்தது.“டேய் உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியலடா... இந்தா முப்பது ரூபா... அதுக்குக் கொடு...’‘“அப்படி வாங்க வழிக்கு...’‘அவன் வேகமாக பொட்டலங்களை மடித்துக் கட்டிக் கொடுக்கும் நேரம் விவேக் வந்து விட்டான்.உண்மையில் அவள் யாரென்று தெரிந்தால் அவன் இப்படி உட்காரக்கூட மாட்டான்!“ஹாய் விவேக்... வாங்க... ஏன் லேட்..?’‘“லேட்டாயிருச்சு...’‘ என்றான், பாபுவைப் பார்த்தவாறே.“பேரு பாபு... ரொம்ப நல்லா பேசறான் விவேக்...’‘“ஆமா... பெரிய ஸ்டாரு இவரு..! அறிமுகப்படுத்தறா... நான் பார்த்துகிட்டேதான் வந்தேன்... என்ன பேச்சு ரொம்ப நேரமா இந்த அன்னக் காவடி பயல்கிட்ட?’‘விவேக்கை பார்த்து லேசாக அதிர்ந்தான் பாபு. ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டாலும் வினோதினிக்குச் சுருக்கென்று கோவம் வந்துவிட்டது.“ஏங்க... பாவம்... அவன ஏன் அப்படிச் சொன்னீங்க..?’‘‘‘என்ன பாவம்..? இருக்க வேண்டிய இடத்துல இருக்கணும்... நீயும் ஆட்களோட தராதரம் பார்த்து பழகணும்... அந்தப் பய உனக்கு ஏதாவது ஓசி சுண்டல் கொடுத்தானா?’‘வினோதினிக்கு கோபம் இன்னும் ஏறியது.“என்னங்க சொல்றீங்க நீங்க..?அந்தப் பையன் ஜெம்ங்க... எல்லா சுண்டலையும் நான் வாங்க தயாரா இருந்தபோதும், ரெகுலர் கஸ்டமருக்கும் வேணும்னான். ‘சரி, ரூபாய வாங்கிக்க... சுண்டல் வேண்டாம். கொஞ்ச நேரம் பேசு’ன்னு சொன்னேன். ‘அய்யோ அக்கா... அப்ப அது பிச்சை எடுக்கிற மாதிரி ஆகிரும்’னு சொன்னான்... கிரேட்ங்க அவன்!’’“யேய்... யேய்... இரு... இரு... என்ன கொஞ்சம் விட்டா அந்தப் பரதேசிப்பயலை நோபல் பரிசு ரேஞ்சுக்கு கொண்டு விட்றுவ போலியே... எல்லாம் இதால...’‘ என்றவன், வினோதினி பதறித் துடிக்கிற மாதிரி ஒரு காரியம் செய்தான்.அவள் கையில் இருந்த அந்த சுண்டல் பொட்டலங்களை வெடுக்கென்று பிடுங்கி, ஓடிப்போய் கடலில் எறிந்தான். விவேக்கின் இந்த கேவலமான செயலால் அதிர்ச்சி அடைந்து நின்றாள் வினோதினி.‘அந்தச் சிறுவன் பாபுவைக் கூட்டிவா. அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறேன்’ என்று ஒரு நாள் விவேக் அழப்போகிறான் என்று அவளுக்கும் தெரியாது. விவேக்கிற்கும் தெரியாது!.2இந்த மனது பண்ணுகிற அழிச்சாட்டியம் இருக்கிறதே... சொல்லி மாளாது.பரீட்சை சமயத்தில் தூங்கக் கூடாது. ஆனால், மனதோ, ‘நீ தூங்கு...நல்லா தூங்கு..!’ என்று கட்டளையிடும். அதனால் தூக்கம் தூக்கமாய் வரும். அதே சமயம் எக்ஸாம் முடிந்து, ரிசல்ட் வரும் நேரம் நிம்மதியாய் தூங்கலாம்... ஆனால், மனதோ, ‘தூங்காதே தூங்காதே... கவலைப் படு..!’ என்று அழிச்சாட்டியம் பண்ணும்.கனகா கவலைப்பட்டுக் கொண்டே இருந்தாள். காலையில் ரிசல்ட்.வணிகவியல் நன்றாகத்தான் எழுதியிருந்தாள். நல்ல மார்க் வரும். ஆனால், தூக்கம்தான் வரவில்லை.அதிகாலையில் எழுந்து, கிழக்குப் பார்த்து, Ôசூரிய ராஜனே... இன்னிக்கு நான் ஃப்ர்ஸ்ட்... முழிக்கிறதுல..!’ என்று சொல்லி, பூஜை அறைக்குள் நுழைந்து, சாமியிடம் நன்றாக வேண்டிக் கொண்டாள்.‘என்னுடைய எதிர்காலம் இதில் அடங்கியிருக்கிறது... அம்பிகே... மகாலட்சுமி... தாயே... அன்னலட்சுமி...’ மனமுருக வேண்டினாள்.திருப்தியுடன் வெளியே வந்தவள், அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.கண்ட காட்சி திடுக்கிடவைத்தது.பாபு தூக்கத்தில் விம்மிக் கொண்டிருந்தான். அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தால்கூட துடித்துப் போவாள். ஏன் அழுதுகொன்டிருக்கிறான்? ஏதாவது கெட்ட சொப்னம் காண்கிறானா?“டேய்... பாபு... பாபு...’‘அவனை உலுக்கி எழுப்பினாள். அவன் முழித்த பிறகும் சிணுங்கினான்.“பாபு... பாபு... ஏண்டா அழறே..?’‘’“சார்... சார்... ஏன் சார் என்ன அன்னக் காவடின்னு சொன்னீங்க... ஏன் சார்..?’‘ விசும்பினான்.பழுக்க காய்ச்சிய செம்புக்கம்பியை ஐஸ் வாட்டரில் போட்டது போல் ‘சுர்’ என்று சத்தம் தோன்றியது கனகாவின் மனதிற்குள்.என் பாசத் தம்பியை ‘அன்னக் காவடி’ன்னு யாரோ திட்டியிருக்கிறார்கள். அது அவன் மனதைப் பாதித்து, கனவிலும் வந்துவிட்டது.பாபுவை நன்றாக எழுப்பி, அவன் முகத்தில் நீர் தெளித்து, சுய நிலைக்குக் கொண்டுவந்தாள். அவனிடம் பரிவாகக் கேட்டாள்.அவன் தயங்கிக் தயங்கி, முதல் நாள் பீச்சில் நடந்ததைச் சொல்லி விட்டான்.‘‘இடியட்... அப்படியா சொன்னான்... இரு... சாயங்காலம் வந்து அவனைக் கேட்கிறேன்... நீ சொல்றதப் பார்த்தா அடிக்கடி பீச்சிற்கு வர்றவன் மாதிரிதான் தெரியுது...’‘அவன், கனகாவின் கையைப் பிடித்துக் கொண்டான்.பாபு இளகிய மனசு சிறுவன்.“அக்கா வேணம்கா... விட்றலாம்கா...’‘ கெஞ்சினான்.‘‘நீ அடிக்கடி பாடுவியே ஒரு பழைய பாட்டு... ‘பறவைகள் பல விதம்... ஒவ்வொன்றும் ஒரு விதம்’னு அது மதிரி கஸ்டமர்கள் பலவிதம்...ஒவொருத்தரும் ஒரு விதம்கா..!’’ சிரித்தான்.அவனுடைய மெச்சுரிட்டியைக் கண்டு வியந்தாள்.“அக்கா... சொல்ல மறந்துட்டேங்கா... அந்த ஆளுதான் கொஞ்சம் மொரடா பேசினார்கா... ஆனா, அவருகூட இருந்த அக்கா எங்கிட்ட ரொம்ப அன்பா பேசினாங்கக்கா... எனக்கு அம்மா ஞாபகம் வந்துருச்சுக்கா.’‘அவன் குரல் தழுதழுப்பதை உணர்ந்தாள் கனகா. தாயை இழந்த பாபுவிற்கு அம்மாவின் நினைவை அன்பாக வரவழைத்த அந்தப் பெண் யார்?“உனக்கு நல்லா பழக்கமாடா..?’’“இல்லக்கா... ஆனா, அடிக்கடி சாயங்காலம் பார்ப்பேன். சுண்டலும் வாங்குவாங்க. நேத்துதான் உட்காரவெச்சு பரிவா பேசுனாங்க. தலயக்கூட பாசமா வருடினாங்க..!’‘“பேரு தெரியுமாடா..?’‘“சரியா தெரியாதுக்கா... ஆனா, ஒரு நாள் அந்த ஆளு அவங்ககிட்ட ஏதோ சொல்லி, ‘நீ வித்தியாசமான பொண்ணு வினோதினி’ன்னு சொல்லிகிட்டு இருந்தாரு...’‘.“யார்டா அவர்..?’‘“அந்த அக்காவ கல்யாணம் பண்ணிக்க போறவர்னு நினைக்கிறேன்கா.’‘கனகாவிற்கு அவளைப் பார்க்க ஆவலாக இருந்தது. ஆனால், எப்படிப் பார்ப்பது என்றுதான் தெரியவில்லை.வாழ்க்கையில் சில சமயங்களில் சில விஷயங்கள் இப்படித்தான். அது தோட்டத்தில் பறக்கிற ஒரு வண்ணத்துப் பூச்சி மாதிரி. பிடிபடுகிற மாதிரி இருக்கும். சட்டென்று பறந்துவிடும். நம்மையும் அலைக்கழித்து விடும்.எப்படியும் பாபுவிற்கு பிடித்துவிட்ட அந்த அக்காவை ஒரு முறை பார்த்துவிடவேண்டும் என்று நினைத்தாள்.நல்ல குணமுடையவர்கள் என்று தெரிந்தால், அவர்களிடம் தானாகவே வழியச் சென்று நட்புப் பாராட்டுவது கனகாவிற்குப் பிடித்த ஒன்று!நேரம் ஆக ஆக கனகாவிற்கு படபடப்பாக இருந்தது.பாபுவிற்கு தேங்காய் சாதம் பண்ணி, உருளை வறுவல் செய்ய வேண்டும்.தனக்கு கட்டித் தயிர்சாதம். இரவு ஊறப்போட்ட மூக்குக் கடலையை குக்கரில் போட்டு வேகவைத்து தனியே வைத்துவிட்டுக் கிளம்பினாள்.நெட் சென்டரில் கூட்டம் இருந்தது. இப்போது கம்ப்யூட்டர் மடிக் கணிணி இல்லாத வீடு இல்லை.ஆனாலும், இல்லாத வீடுகளும் இருந்தன. அவற்றில் கனகா வீடும் ஒன்று.ஆகவே ரிசல்ட் பார்க்க வந்திருந்தாள்.மெள்ள எட்டிப் பார்த்தாள். அந்த சென்டரில் ஆறு சிஸ்டம்கள் இருந்தன.ஏ.சி., குளிர் கனகாவை சட்டென்று கட்டிப் பிடித்தது.உள்ளே ஓரமாய் காத்திருந்தவளிடம், ஒரு பெண் வந்து, “நீங்க இங்க வாங்க...’‘ என்றாள்.கனகா அவளை வியப்புடன் பார்த்தாள்.அந்தக் குரலில் இருந்த கனிவு பசக்கென்று மனதில் ஒட்டிக் கொண்டது. சிலரின் முக ராசி வசீகரித்து விடும்.‘‘என்னோட சிஸ்டம் ஃப்ரீயாத்தான் இருக்கு... வாங்க..!’’ என்று அழைத்துச் சென்றாள்.கனகாவும் அவள் பின்னாடியே சென்றாள்.அவள்தான் அந்த சென்டரின் உரிமையாளர் என்று அவளுடைய நடை, உடை, பாவனையிலேயே தெரிந்து விட்டது.அதையும் தாண்டி அந்தப் பெண்ணிடம் ஒரு ராஜ கம்பீரமும் நிறைகுடத்தின் அழகையும் கண்டாள் கனகா.அப்போது அப்பெண்ணிற்குப் போன் வந்தது.“வினோதினி ஹியர்...’’ என்றாள்..3கரையில் ஒரு நிறம். வெளிர் நீலம். நடுவில் ஒரு நிறம். சற்று அடர் நீலம். தூரத்தே நடுக்கடலில் கரு நீலம். ஒரே நீர்... பல நிறங்கள்!மனிதர்களில் சிலர் இப்படித்தான் இருக்கிறார்களோ என்று பாபுவிற்கு தோன்றியது.விவேக் சொன்னது அவன் மனதை வெகுவாகப் பாதித்து விட்டது. அக்கா கனகா பலமுறை ஆறுதல் சொல்லியும் அவன் ஆதங்கம் போகவில்லை.‘’டேய் சாமியாரே... யோசிக்க ஆரம்பிச்சிட்டியா?’‘குரல் கேட்டுத் திரும்பினான் பாபு. ஜலஜா நின்று கொண்டிருந்தாள்.அவனுடைய சிநேகிதி. பாவாடை _ சட்டையில் அழகாக ஒரு பொம்மை மாதிரி இருப்பாள். அவளுக்கும் பாபுவின் வயதுதான் இருக்கும். அவளும் ஸ்கூல் விட்டதும் சுண்டல் விற்க வந்துவிடுவாள்.அவள் அம்மா ரத்னாவும் கனகாவும் குடும்ப நண்பர்கள்.ரத்னாவிற்கும் வீட்டில் சிரமதிசை. தெற்கிலிருந்து வந்து சென்னையில் கூடு கட்டிக் கொண்ட ஏழைப் பறவைகளில் ரத்னாவும் ஒருத்தி.கணவர் இல்லை. ஒரே பெண் ஜலஜா.“என்னடா யோசனை..?’‘விவேக்கின் கனல் சொற்களைச் சொன்னான்.‘‘இதுக்குப் போய் கவலைப் படுறியேடா... நீ அப்படிப்பட்டவன் இல்லையே..!’‘“ஆமாம் ஜலஜா... இதவிடல்லாம் திட்டு வாங்கியிருக்கேன்..!’‘“சரி, விட்றா...’‘ என்றவள், தான் சொல்ல வந்ததைச் சொல்ல வேண்டாம் என நினைத்தாள்.அன்று விவேக்கிற்கு பாபு கொடுத்ததையும் அவன் அதை ஏதோ கோபத்தில் கடலில் எறிந்ததையும் பார்த்துக் கொண்டுதான் வந்தாள். இதெல்லாம் பாபுவிற்குத் தெரியாது. தெரிந்தால் இன்னும் மனம் வருந்துவான்.இப்ப கூட அது பற்றித்தான் யோசிச்சிட்டு இருக்கான். அவன் கொடுத்த சுண்டலுக்கு பணம் வாங்கியாச்சு. இனிமே வாங்கினவன் பாடு. சுண்டல் பாடு. அவன் அதை என்னமும் பண்ணிட்டுப் போறான். இப்படித்தான் ஒரு நாள் ஒருத்தன் சுண்டலை சட்டைப் பாக்கெட்டிற்குள் திணித்ததும், இவனுக்கு சிரிப்பும் கோபமும் ஒரு சேர வந்தது.“சார்... உடனே சாப்பிடுங்க சார்... நல்லா இருக்கும்... தேங்கா போட்டிருக்கு சார்... கெட்டுப் போயிறும்.’‘“டேய்... நீ காசு வாங்கிட்டீல்ல... போடா வேலய பார்த்துக்கிட்டு...’‘ என்று கத்தினான் வாங்கியவன். பாவம் அவனுக்கு என்ன டென்ஷனோ?அந்த இடத்தை விட்டு பாபு அகன்றான். பாபுவுக்கு மென்மையான மனது!‘‘இந்தா ஜலஜா... சாக்லெட்..!’‘“எதுக்குறா..?’‘“அக்கா முதல் வகுப்புல பாஸ் பண்ணிட்டா..!’‘“ஹையா... இனிமே நல்ல வேலைக்குப் போயிட்டு உன்ன நல்லா கனிச்சுக்குவாங்கடா... இனிமே இந்தக் கிழிந்த சட்டை, தபால் பெட்டி டிராயல்லாம் போட்டு வராதே...’‘சொல்லிக் கொண்டிருக்கும்போதே தொலைவில் சென்ற அவள் கண்கள் திடுக்கிட்டன. சுண்டலை எறிந்த அவன்தான் வந்து கொண்டிருக்கிறான்!இன்றைக்கு அவனை அவள் காக்க வைப்பாள் போலிருக்கிறது.“பாபு... நான் கிளம்பறேண்டா... கூட்டம் வர ஆரம்பிச்சிருச்சு..!’’ என்றவள், அவன் உட்கார்ந்த இடம் நோக்கிச் சென்றாள்.“சார்... சுண்டல் சார்...’‘விவேக் சுண்டல் வாங்காமல் ஜலஜாவையே பார்த்தான்.‘வேணுமா... வேண்டாமா சார்..?’ மனதுள் கத்தினாள்.‘‘அழகா இருக்கேடா... என்ன பேரு...’’ என்றவன், கன்னத்தை நறுக்கென்று கிள்ளினான். ஜலஜா இதை எதிர்பார்க்கவில்லை.‘‘சார்... என்ன சார் கிள்ளறீங்க... சுண்டல் வேணுமா சார்?’’“ஏய் குட்டிப் பொண்ணு... நீயே இவ்வளவு அழகா இருந்தா உன் அம்மா எவ்வளவு அழகா இருப்பா... பார்க்கணுமே... வீடு எங்கடா செல்லம்..?’‘ஜலஜாவிற்குக் கோபம் தலைக்கு ஏறியது. விருட்டென்று கிளம்பினாள். அவன் சட்டென்று கையைப் பிடித்து இழுக்க, அவள் உதறினாள்.“அட... ரோசக்கார குட்டி...’‘ என்றவன், நூறு ரூபாய் எடுத்து ஒரு பொட்டலம் வாங்கிவிட்டு, ‘‘எனக்கு சில்லறை வேணாம்..!’’ என்றான்.ஜலஜா முறைத்துவிட்டு சில்லறையைத் திணித்துவிட்டுச் சென்றாள்.வினோதினி வந்ததும், அவனைத் திட்டினாள்.“ஏங்க... எப்பப் பார்த்தாலும் இல்லாதவங்கள கரிச்சுக் கொட்றீங்க... பாவம் அவங்க விதி... அப்படி இருக்காங்க... உங்களுக்கு ஒரு காரு... ஒரு பங்களா...கொஞ்சம் நிலம்னு இருக்கு..! குஜராத் போனீங்கன்னா அவனவன் தங்கத்துல வீடு கட்டி வைரத்துல பாய் விரிக்கான். அப்ப அவன் முன்னாடி நீங்களும் நானும்..? கொஞ்சம் நினைச்சுப் பார்த்தீங்க்களா..?’‘வினோதினியை எரிச்சலுடன் பார்த்தான் விவேக்.“கழுதய கன்னத்துல கிள்ளி, தாறுமாறாப் பேசி வெறுப்பேத்திவிட்டேன்...சாவட்டும்.’‘“சின்னக் குழந்தைங்க அவ.’‘பீச்சின் ரொமான்டிக் மூடே மாறிக் கொண்டிருப்பது மாதிரி இருந்தது அவனுக்கு.ஆனால், வினோதினி சட்டென்று இயல்பு நிலைக்கு வந்தாள். அவள் எப்போதுமே அப்படித்தான். டி.வி.யில் சேனல் மாற்றுவது மாதிரி. அடுத்த வேலைக்குத் தயாராகிவிடுவாள்.சமயங்களில் வரிந்து கட்டி சண்டைக்கு வருவாள். மறுநாள் எதுவுமே நடவாத மாதிரி, “சாப்பிட்டீங்களா?’‘ என்பாள்.பிஸினஸில் இருந்தால் அந்த நினைவு. வீட்டிற்கு வந்தால் வீட்டு நினைவு. அப்படித்தான் அவள் கம்யூட்டர் கடைக்கு வந்த கனகா, அவள் நினைவுக்கு சட்டென்று வந்தாள்.“விவேக்... ஒண்ணு சொன்னா கேட்பீங்களா..?’‘‘‘சொல்லு...’‘“அதை ஏன் கடுவன் பூனையாட்டம் சொல்லுறீங்க..? கொஞ்சம் சிரிச்சிட்டேதான் சொல்லுங்களேன்...’‘‘‘நீ ஏதாவது ஆப்ளிகேஷனோடவே இருப்பே...’‘“ஏன் நான் நாளைக்கி உங்க பொண்டாட்டி ஆகப் போறவ... கேட்கக்கூடாதா..?’’“சரி... சரி... கேளு... கொஞ்சம் மடியத்தான் காட்டேன்... படுத்துக்கறேன்...’‘“ச்ச்சீ... பார்கிறவங்க என்ன நினைப்பாங்க..?’‘“அன்னியோன்ய காதலர்கள்னு..!’‘‘‘இங்கிதம் தெரியாத லோக்கல் ஜோடின்னு நினைப்பாங்க..!’‘‘‘இத பாரு... நம்ம ஸ்டேடஸுக்கு இந்த பீச்சே முதல்ல கூடாது.நமக்கெல்லாம் மகாபலிபுரம், ஈ.சி.ஆர்.தான் சரிப்படும்... போலாமா..?’‘“போலாம்... தாலி கட்டியப் பிறகு..!’‘“தாலி... தாலி... தாலி... ஐயோ இந்த சென்டிமென்ட் போகவே போகாதா..?’‘சிப்பி ஒன்றை எடுத்து, ஆத்திரத்தில் எறிந்தான் விவேக்.அவளுக்கு வியப்பாக இருந்தது. இவன் ஏன் இப்படி அவ்வப்போது நடந்து கொள்கிறான் என்று தெரியவில்லை. பேச்சை மாற்ற நினைத்தாள்.“பார்த்தீங்களா... சில நாட்களுக்கு முன்பு என்னுடைய நெட் கஃபேயில் ஒரு பெண் வந்து ரிசல்ட் பார்த்தாள். நல்ல இன்டெலிஜென்ட் போல் தெரியுது. பார்க்கவும் மிக நல்லவளாக இருக்கிறாள். அவளுக்கு நீங்க ஒரு வேலை போட்டுக் கொடுக்கணும்...’‘“ம்... அதானே பார்த்தேன்... என்னடா இன்னும் நீ வாயத் திறக்கலையேன்னு..!’‘“சரி... திறந்துட்டன்ல... சீக்கிரம் ஆனத கவனியுங்க... அவ என்ன ரொம்பவே இம்ப்ரெஸ் பண்ணிட்டா..!’‘“ஓகே... ஒகே... நீ எப்ப உங்க ஜமீன் பாட்டிக்கிட்ட என்னைப் பற்றி இம்ப்ரெஸ் பண்ண போறே? எனக்கு கூன் விழுந்தப் பிறகா..?’‘“நம்ம கல்யாணத்திற்கு இப்ப என்ன அவசரம்? கம்பெனி இன்னும் முதல் இடத்திற்கு வரட்டும்...’‘“சரியாப் போச்சு... கல்யாணம் சொர்க்கத்துல நிச்சயிக்கப்படுதுன்னு சொல்வாங்க... ஆனா, நம்ம கல்யாணமே சொர்க்கத்துலதான் நடக்கும் போலிருக்கு..!’’‘‘ஓகே... ஜோக்குனு ஒத்துக்கிறேன்..!’‘முறைத்தாள் வினோதினி.‘‘ஏன் இப்படி கல்யாணம் கல்யாணம்னு -பறக்குறீங்க... கிணத்து தண்ணி நான்... ஆத்து வெள்ளம் கொண்டு போகாது..!’‘“அதரப் பழசு... சென்னையில மழை இருக்காது. மழை வந்தா ஒரு கிணறு இருக்காது... காரணம், வெள்ளத்துல எல்லா கிணறும் மூழ்கிபோயிருக்கும்... நீ என்னடான்னா கிணற்று நீர், ஆற்று நீர்ன்னு டயாலாக் விடற...’Õ- எரிச்சலுடன் பதில் சொன்னான்.அப்போது பாபு வந்தான். சுண்டல் பொட்டலத்தாளில் இருந்த நயன்தாராவின் போட்டோவை ரசித்துக் கொண்டிருந்தான் விவேக்.பாபுவைப் பார்த்து கண்சாடையில் போய்விடச் சொன்னாள் வினோதினி. இன்றைக்கும் அந்த அப்பாவிச் சிறுவனிடம் ஏதாவது மனம் நோகப் பேசிவிட்டான் என்றால்?பாபு புரிந்து கொண்டான்.சற்று நகர்ந்து போய், ‘அக்கா... பேரு?’ என்றான், ஜாடையில்.எதற்குக் கேட்கிறான்... தெரியவில்லையே..?அவன் ஜாடையிலேயே, ‘எங்கக்கா கேட்டுவரச் சொன்னாங்க..!’வினோதினி அவனை வியப்பாகப் பார்த்தாள்.‘’ஆமாம்கா... என் அக்கா பேர் கனகா..!’’ஒரு கணம் ஆச்சரியப்பட்டுப் போனாள் வினோதினி. சடசடவென்று வானத்தில் பறவைகள் கூட்டமாக சந்தோஷமாக வட்டமடித்தன.இவன் கனகாவின் தம்பியா!.4‘ஸீகல்ஸ்’மிகப் பிரமாண்டமான அந்தப் பித்தளை போர்டு கனகாவை வரவேற்றது.ஒரு கணம் போர்டையே பார்த்து வியந்தாள். மிரண்டாள். அந்த மிகப்பெரிய கண்ணாடிக் கதவின் அருகே நின்று கொண்டிருந்த அந்த செக்யூரிட்டி அவளுக்கு வியப்பூட்டினான். ஏதோ சோழர் காலத்து கற்சிலை ஞாபகம் வந்தது.ஜில்லென்ற குளிர். ஒரு கணம் உடம்பு நடுங்கியே விட்டது. கால்பந்து மைதானம் போலிருந்த அந்த வரவற்பறையில் பச்சைக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்த மாதிரி இருந்தது. ஒரு மெல்லிய நறுமணம் எங்கும் வியாபித்து இருந்தது.கனகா அப்போதுதான் கவனித்தாள். அங்கு அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்து கொண்டிருந்தவர்கள் அத்தனை பேரும் மிக நாகரிகமாக உடை அணிந்திருந்தார்கள்.பெண்கள் டைட்டான உடை அணிந்து ஏதோ மியாமி பீச்சில் உலக அழகிப் போட்டியில் அழகிகள் பூனை நடை நடப்பது போல் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் நிச்சயம் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. சிலுசிலுத்த தலைமுடியும் டைட்டான உடையும் கிசுகிசுப்பது மாதிரியான ஆங்கிலப் பேச்சும்... வியந்துதான் போனாள் கனகா.ஒரு பெண் மிக அழகாக நடந்து வந்து அவளிடம், ‘‘கொஞ்சம் உட்காருங்க...’‘ என்று சொல்லிவிட்டுப் போனாள். இல்லை. கொஞ்சிவிட்டுப் போனாள்!கனகா அந்த சோபாவில் உட்காரும்போது ஏதோ மேகப்பொதிகையின் கூடாரத்தில் விழுந்தது போலிருந்தது. ஜெமினி சர்க்கஸின் இரு உடை அழகி ஒருத்தி, கம்பி மீது ஜிவ்ஜிவ் வென்று குதிப்பது போலிருந்தது அவளுக்கு!வினோதினி அவளிடம் சொல்லும்போது பெரிய கம்பெனியில் சொல்லியிருக்கேன் என்றுதான் சொன்னாளே ஒழிய இத்தனை பிரமாண்டம் என்று சொல்லவேயில்லை.சட்டென்று தன்னையே குனிந்து பார்த்தாள். வெட்கம் வந்தது. அழகிற்கு ஒன்றும் குறைச்சலில்லை அவளுக்கு.தெருவில் நடக்கையில் பெண்களே திரும்பிப் பார்க்கும் அழகு.பூங்காவின் தோட்டத்துப் பூக்களில் பெயர் தெரியாத மலர் ஒன்று அழகாக இருப்பதுபோல் இருந்தாள் கனகா.அந்தப் பெண் மிக நளினமாக நடந்து வந்து, “நீங்கள் கனகாவா?’‘ என்றாள்.“ஆம்...’‘ என்றாள் படபடப்பாக.அவள் சென்ற மறுநிமிடம் இன்னொருத்தி வந்து கனகாவை சுவர் ஓரமாக நிற்கவைத்து, மொபைலில் போட்டோ எடுத்துச் சென்றாள்.சற்று நேரத்தில் ஒரு பெண் வந்தாள். எல்லோர் முகத்திலும் குடிகொன்டிருக்கும் நிரந்தரப் புன்னகை இவள் முகத்திலும் இருந்தது.கனகாவிடம் கேட்காமலேயே அவள் கழுத்தில் அடையாள அட்டையை மாட்டிச் சென்றாள். அதிலிருந்த தன்னுடைய படத்தைப் பார்த்த கனக இன்ப அதிர்ச்சி அடைந்தாள். அவள் படம் அவ்வளவு அழகாக இருந்தது!இவர்கள் மட்டும் ஆதார் புகைப்படம் எடுத்தார்கள் என்றால் இந்தியா முழுக்க அழகிகள்தான். அழகன்கள்தான்!அவள் மறுபடி இருக்கையில் அமர்ந்தாள்.ஒரு முழ உயர கண்ணாடி கிளாஸ் ஒன்றில், செந்நிற பானம் ஒன்றைத் தந்துவிட்டுச் சென்றாள் ஒருத்தி.‘ஜில்’லோ ஜில்... அப்படி ஒரு ஜில்!கனகாவிற்கு இன்னும் வியப்பு அடங்கிய பாடில்லை.ஒரு சாதாரண நெட் சென்டர் உரிமையாளர் வினோதினி. அவளுக்கு இவ்வளவு பவரா? இவ்வளவு பெரிய கம்பெனியில் செல்வாக்கா? வினோதினியின் சொல், செயல் எல்லாம் ஏனோ அவளைக் கட்டிப்போட்டது.ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் ஒரு எனர்ஜி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அது எதிர் நபருக்குப் பொருந்தி வந்தால்தான் ஒருவருக்கொருவர் ஈடுபாடு வரும். நட்பு மலரும்.சிலரைப் பார்த்தவுடனே எரிச்சல் வருவதும் சிலரிடம் பார்த்தவுடனேயே பேச வேண்டும்போல் இருக்கும் உணர்வும் இதனால்தான்.வினோதினியிடம் எப்படி சில மணி நேரங்களிலேயே நெருக்கம் ஏற்பட்டு விட்டது. அது இப்படித்தான்.இன்னும் அவளிடம் குடும்ப விஷயம் எதுவும் ஷேர் பண்ணிக்கொள்ளவில்லை. ஷேர் பண்ணினாலும் தப்பில்லை என்ற அளவிற்கு மனது சென்றுவிட்டது.அவள் பலவாறு யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு அழகு தேவதை வந்தாள்.‘பிரம்மன் ஓவர் டைம் போட்டு இந்த அழகிகளைப் படைத்து விட்டானோ!’ என்று அவள் நினைத்தாள்.“கனகா...’‘ என்ற தேன்குரலில் ஏதோ அவள் கனகாவிடம் பல வருடங்கள் நட்பில் இருப்பது மாதிரி மிகக் கனிவுடன் விளித்தாள்.கனகா சட்டென்று ஜூஸ் கிளாஸுடன் எழவே, அது தடுமாறி, கரங்களிலிருந்து நழுவி, டீபாயில் விழுந்து உடைந்து சிதறியது. அது சிவப்பாக வேறு இருந்ததால் ஏதோ ரத்தம் சிதறிய மாதிரி!கூனிக்குறுகிப் போனாள் கனகா. என்ன செய்வது என்றே தெரியவில்லை.சில பெண்கள் ஓடி வந்தார்கள்.‘‘நோ பிராப்ளம்...’‘ என்று புன்னகைத்தவாறே ஒரு பெண் யாரையோ மொபைலில் அழைத்தாள். சில நிமிடங்களில் ஒரு இளைஞன் வந்தான்.கனகாவின் வாழக்கையை அவன் திருப்பிப் போடப் போகிறான் என்று அவள் அறிந்திருக்கவில்லை.அவனும் மிக அழகான நேர்த்தியான உடையில் இருந்தான். தலையில் கிரீம் தடவி, வித்தியாசமான சிகை அலங்காரம்.வந்தவன் தன்னுடைய கையிலிருந்த ஒரு சின்ன இயந்திரத்தை இயக்கி, சில நொடிகளில் அந்த இடத்தை உலரச் செய்தான்.ஒரு பெண் வந்து கனகாவை ரெஸ்ட் ரூம் அழைத்துச் சென்றாள்.அங்கு சென்ற கனகாவிற்கு வியப்பில் மயக்கமே வந்து விட்டது.அவள் கையில் விலையுயர்ந்த ஒரு செட் உடை தரப்பட்டது.“கனகா... உங்க உடையெல்லாம் ஜூஸ் சிந்தியிருக்கிறது அல்லவா? மாற்றிக்கொள்ளுங்கள்...’‘ கனகாவிற்கு, தான் காண்பதெல்லாம் கனவா? நனவா? என்று புரியவில்லை.அவர்கள் தந்த உடை அவளுக்கு கச்சிதமாகப் பொருந்தியது. அவளுக்கும் வியப்பான வியப்பு.மீண்டும் ரிஷப்ஷனில் வந்து அமர்ந்தபோது தரையைச் சுத்தம் செய்த இளைஞன் அவளைக் கடந்து போனான். வாசல் வரைக்கும் சென்றவன், என்ன நினைத்தானோ... திரும்பி வந்தான். புன்னகை மாறவில்லை!“ஏதாவது வேணுமா?’‘ என்றான், கனிவாக.முதல் முதலாகத் தமிழ் ஒலியைக் கேட்டாள்!“ஒன்றும் வேணாங்க... நீங்க தமிழா?’‘ என்றாள், வியப்புடன்.தமிழ்நாட்டிலேயே இருந்து கொண்டு இப்படிக் கேட்கும் நிலை வந்துவிட்டது கண்டு ஒரு கணம் நொந்துதான் போனாள்.“சுத்தமான தமிழ். அதுவும் திருநெல்வேலி..!’‘ என்று அவன் சிரித்ததும், இன்ப அதிர்ச்சியாகிவிட்டது அவளுக்கு!“அட! எனக்கும் திருநெல்வேலிதான்!’‘ என்றாள்.குரல்கூட சற்று உயர்ந்துவிட அடக்கிக் கொண்டாள்.“ஆஹா... பேஷ் பேஷ்...’‘ அவன் எதையோ சொல்ல வாயெடுத்தபோது இனிமையான மணி சத்தம் கேட்டது. ஒரு பெண், ÔÔகனகா... உள்ளேபோங்க...’‘ என்றாள்.படபடப்பாக அவனிடம் விடைபெற்றுக் கொண்டு, அவர்கள் சொன்ன அறைக்குள் நுழைந்தாள் கனகா. அது நேர்முகத் தேர்வு அறையா அல்லது தேவலோகமா என்று தெரியவில்லை. ஏ.பி.நாகராஜனின் பக்திபட செட் மாதிரி இருந்தது அது!பெரிய மைதானம் மாதிரி இருந்த அந்த டேபிளின் முன்பாக அவள் அமர்ந்தாள். சிறிது நேரத்தில் மிடுக்காக அவன் வந்தான்.கனகா எழுந்து கை கூப்பினாள்.“ஸிட்டவுன்... ஸிட்டவுன்...’’ என்று கை அமர்த்தினான்.“ஐயாம் விவேக்...’‘ கை நீட்டினான்.தயங்கியவாறே கை கொடுத்தாள்.கையை சட்டென்று இழுக்கவும் முடியவில்லை.‘‘வினோதினி சொன்னாள். உனக்கு எப்படி அறிமுகம்?’‘ என்றான், சற்று இறுக்கமான முகத்துடன்.கனகாவிற்கு அவன் எடுத்த எடுப்பிலேயே அவளை ஒருமையில் அழைத்தது என்னவோ போலிருந்தது. இருந்தாலும், பொறுத்துக் கொண்டு பதில் சொன்னாள்.அப்போது ஒரு பெண் மிகவும் பணிவுடன் விவேக்கிடம் ஒரு ஃபைலை நீட்ட, அதைப் புரட்டிப் பார்த்தான் விவேக். ஃபைலிலிருந்து கண்களை கனகாவை நோக்கி உயர்த்தினான்.“கங்கிராட்ஸ் கனகா... யூ ஆர் செலக்டெட்!’‘ என்றான்.ஆயிரம் சரக்கொன்றை மலர்களை தலையில் கொட்டி அபிஷேகம் பண்ணிய மாதிரி இருந்தது கனகாவிற்கு!.5 “ஏய்... கனகா... என்ன... என்ன இதெல்லாம்..?’‘திடீரென்று காலில் வந்து விழுந்து வணங்கிய கனகாவைத் தூக்கினாள் வினோதினி.“எனக்கு வேலை கிடைச்சிருச்சி அக்கா... உங்கள என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்...’‘ தழுதழுத்தாள் கனகா.“உன் திறமைம்மா... என்னோட உட்பீகிட்ட சொல்லி வெச்சேன் அவ்வளவுதான்... ‘ஸீகல்ஸ்’ நிறுவனத்தைப் பொறுத்தவரைக்கும் படிப்பிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பழக்கவழக்கத்திற்கும் கொடுப்பாங்க... மிகப்பெரிய படிப்புப் படித்த நபருக்கு வேலை கிடைக்காம போயிருக்கு... கொஞ்சம் படிச்சவங்களுக்கு நல்ல வேலை கிடைச்சிருக்கு... உன்னைப் பொறுத்தவரை ரிஷப்ஷனில் உன் பேச்சு நடவடிக்கைகள் எல்லாம் கேமரா மூலம் கவனிக்கப்பட்டன..!’‘“அக்கா... நான் அங்க ஜூஸ கொட்டி தம்ளர உடைச்சிட்டேன்...’‘“சொன்னாங்க... அப்பகூட உன் ரியாக்ஷன், உன்னோட மூவ்மென்ட்ஸ் எல்லாம் கவனிக்கப்பட்டன... என்னோட உதவியால நீ அங்கே நுழைஞ்சே...ஆனா, அதன் பிறகு முழுக்க முழுக்க உன்னோட திறமை..!’‘“ஆனா, நான் கனவுலகூட நினைக்கலக்கா... இங்க வேலையை!’‘“இத பாரு கனகா... இப்ப எதுவுமே புதுசா நடக்கல... எல்லாம் ஏற்கெனவே எழுதப்பட்டு விட்டது... தெரியுதா... இப்ப நீயும் நானும் பேசிக்கிட்டு இருக்கிறதுகூட ஏற்கெனவே எழுதப் பட்டதுதான்..! பார்த்து நடந்துக்க... சரியா?’‘ என்றாள்.வீட்டிற்கு வந்தவளுக்கு உண்மையிலேயே வியப்பாகத்தானிருந்தது.இப்போது உள்ள குடும்பச் சூழலில் அவள் இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம்.சின்ன வயதில் அம்மா போன பின்னர் அப்பாதான் எல்லாமாய் இருந்தார். பாபு ஆரம்பப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, மாரடைப்பால் அகாலமாய்ப் போய்விட்டார்.திக்கித் திணறிய வாழ்க்கைப் படகு எப்படியோ அவரின் சொற்ப சேமிப்பில் ஓடியது. இன்னும் சில மாதங்களுக்குத்தான் தாக்குப் பிடிக்கும் என்றிருந்த நிலையில், பாபு சுண்டல் விற்ற வருமானம் யானைப்பசிக்கு சோளப்பொறியாக இருந்தது.கடவுளின் கருணை. கதவு திறந்துவிட்டது. ஒரு வருஷத்திற்கு உதவித் தொகை. நிரந்தமானால் சம்பளம் பல ஆயிரம்.வாழ்க்கை என்பது ஆச்சரியம் நிறைந்த பூந்தோட்டம் என்பதைவிட அதிசயம் கொழிக்கும் அமுதக்கடல் என்று சொல்லலாமோ? பின் எப்படி?என்னுடன் படித்த எத்தனையோ பெண்களுக்கு மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் கைக்கும் வாய்க்கும் போதாமல் சொற்ப தொகைதான் ஊதியம். ஆனால், எனக்கு?கனகாவிற்கு உண்மையிலேயே பெருமையாக இருந்தது.“பாபு...’‘ என்றாள்.“அக்கா...’‘“இனிமே நீ சுண்டல் விக்கப் போக வேண்டாம்டா..!’‘ என்றாள், சந்தோஷமாய்.“அக்கா சொல்ல மறந்துட்டேன்... அன்னிக்கு ஒருத்தன் என்ன Ôஅன்னக் காவடி’ன்னு திட்டினான்... அவன்கூட இருந்த அக்கா ரொம்ப நல்லவங்களா இருந்தாங்கன்னு சொன்னேன்ல... நீகூட பேர் கேட்கச் சொன்னியேக்கா? பேர் கேட்டேன்... வினோதினி...’‘ஒரு கணம் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போனாள் கனகா.‘என்ன... வினோதினியா? அப்ப என் தம்பியத் திட்டினவன்தான் என் பாஸா?’சட்டென்று அவள் மனதிற்குள் ஒரு வெறுமை.“அக்கா... என்னாச்சுக்கா? ஏன் சட்டென்று ஒரு மாதிரி ஆகிட்டே?’‘- பாபு ஆச்சரியமாய்க் கேட்டுவிட்டு அக்காவைப் பார்த்தான்.அவனுடைய கள்ளங்கபடமற்ற முகத்தை அவள் பார்த்தாள். இவனிடம் சொல்லலாமா? ‘டேய்... நான் உன்மேல உயிரையே வெச்சிருக்கேண்டா..!உன்மேல யாராவது ஒரு சிறு துரும்புப் போட்டால்கூட துடிச்சிருவேண்டா... எப்படி உன்னை ஆதரவா தடவிக் கொடுத்த அந்த வினோதினி மேல் அளவு கடந்த பாசம் வந்து, அவளைச் சந்திக்கத் துடித்து இறைவன் அருளால் அவளைச் சந்தித்தும் விட்டேனோ...அதைப்போல் உன்னை திட்டி மனம் நோகடித்த அவனை திட்டித்தீர்க்க காத்திருந்தேன்டா...’“அக்கா... போக்கா... உனக்கு என்னவோ ஆயிருச்சு...’‘பாபுவின் மனம் இனியும் கலங்கக் கூடாது என்று நினைத்தவள், ஒரு முடிவுக்கு வந்தாள்.விவேக்கை ஏன் நினைக்கணும்?அவனைப் பற்றிய நினைவைப் புறம் தள்ளிவிடுவோம்.பலாப்பழத்தின் இனிப்பைப் பற்றி மகிழ்ச்சியடையும்போது ஏன் அதன் முரட்டுத் தோலைப் பற்றி கவலைகொள்ள வேண்டும்?பாபுவிடம் எதுவும் சொல்லாமல் ஸ்கூலுக்கு அவனுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தயார் செய்து கொடுத்துவிட்டு அலுவலகம் கிளம்பிவிட்டாள். அலுவலகம் ரொம்ப தூரத்தில் இல்லை.அலுவலகத்தில் அவளுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. தனி உடை. அது அவளுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு ராக்கில் இருக்கும்.எல்லாம் போட்ட பிறகு அவள் உருவத்தை அங்கிருக்கும் கண்ணாடியில் பார்த்தபோது, அங்கிருக்கும் பெண்களின் அழகிற்கு சற்றும் குறைந்தவள் அல்ல என்பது போலிருந்தது. பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது.இந்த உணர்வுகள் எல்லாம் முன்பு இல்லையே என்று வியப்பாகவும் இருந்தது. ஒரு செல்ஃபி எடுத்து பாபுவிற்கு காண்பிக்க வேண்டும் என்று நினைத்து செல்லை அட்ஜஸ்ட் பண்ணியபோது பின்னால் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சட்டென்று திரும்பினாள்.அவன், கையில் அந்தத் தரைத் துடைக்கும் எந்திரத்துடன் நின்று கொண்டிருந்தான். அன்று அவள் கூல் டிரிங்ஸை சிந்தியபோது துடைக்க வந்த அதே இளைஞன்!புன்னகைத்தான். அதில் ஒரு வசீகரம் இருந்தது.“ஃப்ளோர் கிளீனிங்...’‘ என்றான், சிரித்துக் கொண்டே...“ஓ ஷுர்...’‘ என்று ஒதுங்கி நின்றாள்.ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, “ஊருக்குப் போனீங்களா..?’‘ என்றாள்.“போனேன், திருவிழாவிற்கு... இங்க அதிகம் லீவு தர மாட்டாங்க. அதனால சீக்கிரம் வந்துவிட்டேன்...’‘ என்றான் தலை நிமிராமலே.வேலையில் கண்ணாக இருந்தான். அது அவளுக்குப் பிடித்திருந்தது.“எதுவரை படிச்சிருக்கீங்க?’‘அவன் சொன்ன பதிலில் அவள் அதிர்ந்தாள்.“எ... சினியரிங்... ட்ரிப்ளீ...’‘“என்ன சொல்றீங்க?’‘“ஆமாம்... அதால கிடைக்கிற சாலரியை விட இதால கிடைக்கிற சம்பளம் அதிகம்... ஐ வான்ட் டு பி ப்ராக்டிகல்!’‘ சிரித்துக் கொண்டே அதே சமயம் வேலையையும் பார்த்துக் கொண்டு பேசிய விதம் அவளைக் கவர்ந்தது.‘‘வாழ்க்கைக்குத் தேவை பணம். அது நல்ல வழியில் இருந்து வந்தால் போதாதா?’’ எவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டான்.“ஆனா பணமே வாழ்க்கை ஆகிவிடக் கூடாது’‘ என்றான், தொடர்ந்து.“உங்க பேரு சொல்லலை...’‘ என்றாள், கனகா.“சீனிவாசன்... நீங்க என்னைய Ôசீனு’ன்னு கூப்பிடுங்க...’‘“ஏன்?’‘“எல்லோரும் என்னை ‘ஷீனு... ஷீனு...’ன்னு கூப்பிட்டு என்னை ஒரு பொண்ணாக்கிடுவாங்க போலிருக்கு..!’‘ கடகடவென சிரித்தான்.“பை... வரேன்... வழக்கமா நீங்க வர்றதுக்குள்ளே இந்த இடத்தைச் சுத்தம் செய்யணும்னு உத்திரவு. நீங்க இந்த டோர் கீயையும் எடுத்துப் போயிட்டீங்க... வெளியே ஸ்டாண்டுல மாட்டணும்.’‘“ஓ அயம் டெரிப்லி ஸாரி...’‘ அவள் பதற்றமாய்ச் சொன்னாள்.அவன் கிளம்பினான். இன்னும் கொஞ்சம் ஈரம் மிச்சமிருந்திருக்கிறது போல.அவள் வேகமாகத் திரும்பியபோது, சட்டென்று வழுக்கி விட்டது. வேகமாக விழப்போனவளைத் தன்னுடைய இரு கரங்களாலும் ஏந்திக் கொண்டான் அவன்.அவனுடைய உஷ்ணமான மூச்சுக் காற்று அவள் நாசி அருகே நடனமாடிக் கொண்டிருக்க, ஒரு கணம் சிலிர்த்துப்போனாள் கனகா.ஒரு காதல் கதவும் அங்கே திறக்கப்பட்டது!.6உலகத்தில் உள்ள அழகிய பீச்சுகளில் சென்னை மெரினா பீச்சும் ஒன்று என்று பாபுவிற்குத் தெரியும். ஆனால், அவனைப் பொறுத்தவரை அங்கிருக்கும் முதல் அழகு ஜலஜாதான்!ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு ஓடிவந்து சுண்டல் டின்னை எடுத்துக் கொண்டு பீச்சிற்கு வந்து, அவன் கண்கள் தேடுவது ஜலஜாவைத்தான்!அவளிடம் பேசக்கூட வேண்டாம். அவள் எங்காவது கண்ணில் பட்டாலே போதும். அவனுக்கு எனர்ஜி வந்துவிடும்.சுண்டல் காலியாகிவிட்ட பிறகு அவளுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பான்.அவனுக்கு கணக்கு என்றால் பிணக்கு.அதை சரி செய்தவளே அவள்தான். வயதில் அவனைவிட இளையவள்.ஆனாலும், கணக்கில் புலி.கணக்கு மற்ற பாடங்களைப் போல் இல்லை. கணக்கு சொல்லிக் கொடுப்பவர்களுக்கு அசாத்திய மனோதிடம் வேண்டும். படிப்பவன் ஒன்றும் இரண்டும் சேர்ந்தால் ‘நான்கு’ என்று சொன்னால், அதிர்ச்சி அடைந்து, ‘’ராஸ்கல்... இதுகூட தெரியலையா?’‘ என்று மண்டையில் குட்டக் கூடாது. தெரியாமல்தானே இப்படிச் சொல்கிறான்.பாபுவுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கும்போது கனகாவே டென்ஷன் ஆகியிருக்கிறாள்!ஜலஜாவை இந்த விஷயத்தில் அவனுக்குப் பிடித்த காரணம், அவளுடைய அணுகுமுறை. கனகாவே வியந்திருக்கிறாள்!அதோ ஜலஜா வருகிறாள். சுண்டல் வியாபாரம் அமோகம் என்ற திருப்தி அவள் முகத்தில் தெரிந்தது. இவன் நிறுத்திவிட்டாலும், கணக்கு படிக்க வந்திருந்தான்.“டேய்... இன்னிக்கு கணக்கு கிளாஸ் கிடையாதுடா.’‘“ஏன்..?’‘“அம்மாவிற்கு உடம்பு முடில... வயத்துவலி... சீக்கிரம் போணும்... மேலும் இரண்டு நாளா தெரு விளக்கு எரியலடா.’‘கரையின் சாலையில் சரம் பிடித்த மாதிரி மின் விளக்குகள் எரியத் துவங்கிவிட்டன.பாபுவும் ஜலஜாவும் நடக்க ஆரம்பித்தார்கள்.அப்போது எதிரே யாரோ ஓடிவருவது மாதிரி இருந்தது.பாபு முதலில் அதைக் குதிரை என்று நினத்தான்.அருகில் வரும்போதுதான் அது குதிரையல்ல மனிதன் என்பதும், அவன் பின்னால் ஒரு பெண், “யாராவது பிடிங்க... பிடிங்க...’’ என்று கத்திக் கொண்டே ஓடி வருவதும் தெரிந்தது.பாபு அந்த மனிதன் இடுப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.ஆனால், சிறுவன் என்பதால் அவனால் அதிக இறுக்கமாக பிடிக்க முடியவில்லை.ஜலஜா கத்தினாள்: Òயாராவது வாங்க... யாராவது வாங்க...’‘அந்த ஆசாமி, ஜலஜாவின் சுண்டல் டின்னை வைத்தே பாபுவை ஓங்கி அடித்தான்.பாபு அலறிச் சாய, அந்தப் பெண் பின்னாடியே வந்து விட்டாள்.அவனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள அந்த ஆசாமியை சிலர் தர்ம அடி கொடுத்தார்கள்.கீழே விழுந்த பாபுவை யாரும் கவனிக்கவில்லை. அந்த ஆசாமி அடித்ததில் சுண்டல் டின்னின் கூர்மையான முனை பாபுவின் நெற்றியில் கீறி, ரத்தம் கொட்டுவதைப் பார்த்த ஜலஜா அலறினாள்.“ஐயோ பாபு...’‘தன்னுடைய கையிலிருந்த டவலால் ரத்தத்தை நிறுத்தினாள்.கூட்டத்தில் சிலர் பாபுவைத் தூக்கினார்கள்.அப்போது அந்தப் பெண், ‘‘புறம்போக்கு... செயின் எங்கேடா..?’‘ என்று உலுக்க, அரை மயக்கத்தில் வந்துவிட்ட திருடன் உதடுகளில் ரத்தம் வழிய, ‘‘தெரியாது... எங்கோ விழுந்துருச்சு...’‘ என்று முனகினான்.“வாய்ல ரெண்டு குத்து விடுங்கடா... கக்கிடுவான்...’‘ ஒருத்தன் கத்த இன்னொருவன் முஷ்டியை ஓங்கி, அவன் மூக்கில் குத்த அலறினான்.“அடிக்காதீங்க... அவரு செயின் எங்கிட்ட இருக்கு... பிடுங்கிட்டேன்...’‘பாபுவின் குரலால் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்!செயின் கிடைத்துவிட, அந்த ஆசாமியை போலீஸ் ஸ்டேஷனுக்குத் தள்ளிக் கொண்டு போனார்கள்.செயினைப் பெற்ற பெண்ணோ பாபுவை அணைத்துக் கொண்டு “மகராசா... நீ நல்லா இருடா..!’‘ என்று வாழ்த்தி, அவன் கையில் ஒரு சில ரூபாய்த் தாள்களைத் திணித்தாள்.பாபு திட்டவட்டமாக மறுத்துவிட்டான்.அங்குள்ளவர்கள் வியந்து கலைய, அக்கா கவலைப்படுவாளே என்று பாபு வேகமாக நடந்தான். ஜலஜா அவன் பின்னாடியே ஓடி வந்தாள்.வழக்கமாக தைரியமாக சலசலவென்று பேசிக் கொண்டு வருபவள் இன்று மௌனமாக வந்தாள். நடந்த நிகழ்வுகளால் பீதியடைந்து விட்டிருந்தாள்.சில நாட்கள் கழித்து இரண்டு போலீஸ்காரர்கள் வீட்டு வாசலில் வந்து நின்று, ‘’இங்கு ‘பாபு’ங்கிறது யாரு?’’ என்று கேட்டதும், நீரில் நனைந்த கோழிக்கு... ஜுரம் வந்த மாதிரி நடுநடுங்கிப் போய்விட்டாள் கனகா.“கடவுளே... என் தம்பிதான் சார்... ஸ்கூலுக்குப் போயிருக்கான்... என்ன விஷயம் சார்?’‘ கால்கள் நடுங்கின.“ஒன்றுமில்லம்மா... ரெண்டு நாட்களுக்கு முன்ன பீச்சுல ஒரு திருடன தைரியமா பிடிச்சு நகைய காப்பாத்தி, உரியவரிடம் சேரக் காரணமா இருந்திருக்கான்... அவன பாராட்டி, ஒரு பரிசு கொடுக்கிறார் கமிஷனர்..!’‘ கனகா வியப்பின் உச்சிக்கே சென்று விட்டாள்.பாபு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறான்!நாட்டில் எது நடந்தாலும் ‘எதுவும் எக்கேடு கெட்டுப் போகட்டும். நமக்கென்ன வம்பு’ என்று சுயநலமாக பெரியவர்களே இருக்கும்போது சிறுவன் பாபுவிற்கு இருக்கும் தைரியமும் பொறுப்புணர்ச்சியும் அவளை வியப்படையச் செய்தது!இவ்வளவு நடந்திருக்கிறது. பயல் ஒன்றும் சொல்லவில்லை.நெற்றியில் பிளாஸ்டர் ஒட்டியிருந்தான். பதறி கேட்டதற்கு, ‘ஏதோ சூட்டுக்கட்டி’ என்று சொன்னான். இதுதான் விஷயமா!கமிஷனர் அலுவலக கான்ஃப்ரன்ஸ் ஹாலில் ஒரு சின்ன மீட்டிங்கில் பாபுவிற்குப் பாராட்டு.கனகா பெர்மிஷன் போட்டு வந்திருந்தாள். ஜலஜாவும் அவள் அம்மா, ரத்னாவும் வந்திருந்தார்கள். சில பத்திரிகை நிருபர்களும் வந்திருந்தார்கள்.“பாபுவைப் பாராட்டி தொழிலதிபர் இப்போது பரிசுத் தொகை வழங்குவார்... இதோ வந்துவிட்டார்...’‘ ஒருவர் அறிவிக்க, பக்கத்து அறையில் இருந்து வெளிப்பட்டான் விவேக்.ஒரு கணம் அதிர்ந்து போனார்கள் கனகாவும் பாபுவும். ஜலஜாவிற்குத் தூக்கி வாரிப்போட்டது.கனகா தன்னுடைய பாஸிற்கு முறைப்படி வணக்கம் வைத்தாள்.அந்த சமயம் வினோதினி நுழைந்தாள்!“ஆஹா... பாபு... உனக்குப் பாராட்டுகள்டா செல்லமே..!’‘ பாபுவை அணைத்துக் கொண்டாள்.இதைக் கவனித்த விவேக், கடுவன் பூனையானான். வினோதினியை எரிப்பது போல் பார்த்தான்.இதை கனகாவும் கவனித்தாள். ‘இவன் ஏன் இப்படி வெறுப்பை உமிழ்கிறான்?’ என்று நினைத்தாள் கனகா.“டேய் செல்லம்... பயங்கர ஆளுடா நீ... ஒத்த ஆளா திருடனப் பிடிச்சிட்டியே..!’‘ என்றவாறே, செல்லமாய் பாபு தலையில் குட்டுவது போல் ஓங்கிக் குட்டினான் விவேக்.வலியை அடக்கியதால் பாபுவின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது..7கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது?ஆப்பிள் ஏன் கீழ் நோக்கி விழுகிறது?தண்ணீரில் இருக்கும் குச்சி ஏன் ஒடிந்தது போல் காணப்படுகிறது?எத்தனையோ கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானத்தால்கூட கண்டுபிடிக்க முடியாதுபோல--, பாபுவைப் பார்த்தால் விவேக் ஏன் மூட் அவுட் ஆகிறான் என்று!வினோதினியும் அதைக் கவனித்துவிட்டாள்.ஷொட்டு கொடுப்பது போல் பயங்கரமாகக் குட்டு வைத்து விட்டான்.பாபுவின் கண்களில் நீர் கோத்து விட்டதைக்கூட கவனித்தாள்.பாவம். நன்றாக வீங்கியிருக்கும். போய் தடவிக் கொடுக்கலாம் என்று நினைத்தாள். மறுபடியும் ஏதாவது செய்து விட்டால்?வெளியே வந்தவனைப் பார்த்து, பயங்கரமாக முறைத்தாள்.அவனோ அவளைக் கண்டுகொள்ளவேயில்லை.அவன் முகத்தில் ஒரு குரூரத் திருப்தி நிலவியது.அவளுக்கு ஆற்றாமல் கேட்டுவிட்டாள்...“ஏங்க இப்படிச் செய்தீங்க? அவன் என்ன பாவம் பண்ணான்?’‘“உனக்கு எச்சரிக்கை. இனிமே அந்தப் பரதேசிய கொஞ்சி குலாவி ஏதாவது வெச்சுக்கிட்டே இன்னும் விபரீதமா போகும்..!’‘ விருட்டென்று கார் பறந்துவிட்டது..8ஜில்லென்ற குளிர்காற்று கனகாவின் மேனியைத் தழுவிக் கொண்டிருந்தது.வானத்தைப் பார்த்தாள்.‘நாங்கதான் கழுவி விட்டோம்Õ என்று சொல்லிவிட்டுச் சென்றன சில துண்டு கருமேகங்கள்.ஆம்... மழை நன்கு வெறித்து விட்டிருந்தது. சாலைகள் பளீரென்று இருந்தன.இதற்காகவே காத்துக் கொண்டிருந்த மாதிரி ட்ராஃபிக் ஜாம் ஜாமென்று வந்து விட்டது. பயங்கர நெரிசல்.ஆட்டோகாரர்கள் வசூல் ராஜாக்களாகி, செம ஹேப்பியில் இருந்தார்கள்.வசதியானவர்கள் காரில் போய்விடுகிறார்கள்.அடித்தட்டு வாசிகள் முடிந்த அளவு நடராஜா சர்வீஸ்தான்.மாட்டிக்கொள்பவர்கள் நடுவில் உள்ளவர்கள்தான்.கனகாவின் கைகளுக்கு வலி வந்துவிட்டது.நிறுத்தி நிறுத்திப் பார்த்தாள். எந்த ஆட்டோவும் நிற்கவில்லை. அல்லது அவர்கள் கேட்ட கட்டணம் அவளுக்கு கிலியை வரவழைப்பதாக இருந்தது.ஆஃபிஸிற்கு நேரமாகிக் கொண்டிருக்கிறது.மனதிற்குள் பரபரப்புப் பறவை படபடத்துக் கொண்டிருந்தது.அப்போது ஒரு ஸ்கூட்டர் அவள் அருகே வந்தது.“வாங்க...’‘நீல ரெயின் கோட்டும் அதே கலரில் முகம் மறைத்த ஹெல்மெட்டுமாய் ஒரு இளைஞன்.அவள் திரும்பிப் பார்த்தாள்.“இல்ல... உங்களைத்தான்...’‘அவள் திடுக்கிட்டாள். லேசான எரிச்சலும் வந்தது.முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.அவன் விடவில்லை.“வாங்க கனகா... ஆஃபிஸிற்கு நேரமாச்சு...’‘அவள் மறுபடியும் திடுக்கிட்டாள்.யாரிவன்..? யாரிவன்..? யாரிவன்..? பெயர் சொல்லிக் கூப்பிடுகிறான்?கனகாவின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட அவன், சட்டென்று ஹெல்மெட்டை எடுத்தான். அழகாக புன்னகைத்தான்.“ஓ... சீனுவாசன்..! நீங்களா..?’‘“ஆம்... நானேதான்..!’‘அவள் இதுவரை அன்னிய ஆடவனுடன் ஸ்கூட்டரில் போனதில்லை.“கமான்... ஸ்ட்ரிக்டான ஆஃபீஸ்... ஒரு நிமிடம் லேட் பன்ச்சிங்கும் ஒரு நாள் சாலரிக்கு உலை வைச்சிரும்.’‘வேறு வழியில்லை. அவன் ஸ்கூட்டரில் ஏறி அமரப் போகும்போது, ÔÔஒன் மினிட்...’‘ என்றான், சீனு.தன் முன்னால் தொங்கிக் கொண்டிருந்த லேப்டாப் பையை கழற்றி முதுகில் மாட்டிக் கொண்டான்.“ம்...’‘அவள் ஏறிக்கொண்டாள்.ஆஃபீஸ் வந்தது. ஆனால், அவளை சாலை முனையிலேயே அவன் இறக்கிவிட்டான்.“வந்துடறீங்களா..?’‘“சரி... ரொம்ப தேங்க்ஸ்... ஒரு டவுட்...’‘“கேளுங்க கனகா...’‘“லேப்டாப் எடுத்துட்டு வர்றீங்களே... எதுக்கு..?’‘சிரித்தான். பேக்கைத் திறந்து காண்பித்தான்.ஒரு பெட்ஷீட் திணித்து வைக்கப்பட்டிருந்தது.அவள் முகத்தில் வியப்புப் படர்ந்தது.“யெஸ்... யாராவது லேடீசுக்கு லிஃப்ட் கொடுக்க நேர்ந்துச்சுன்னா முதுகில் போட்டுப்பேன். அது எனக்கும் அவங்களுக்கும் இடையில் இருக்கும்.நான் வேகமாக போனோலோ அல்லது சடன் பிரேக் போட்டாலோ அவங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தாது... கம்ஃபர்டபிளா இருக்கும்..!’‘அவன் சொன்ன பதில், அவனை அப்படியே ஜிவ்வென்று வானம் அளவிற்கு உயர்த்தி வைத்தது.‘எந்தப் பொண்ணுடா நம்மகிட்ட லிஃப்ட் கேட்கமாட்டா... எப்படா அவள் நம்மீது படமாட்டா, எப்படா கட்டிப்பிடிக்க மாட்டா... எப்படா நம்ம இன்ப லோகத்திற்குப் போறது என்று அலையும் பல டூ வீலர் விடலைகள் அலையும் இப்பெருவூரில் இப்படி ஒருத்தனா..!’‘‘என்னங்க... திடீர் யோசனை? சீக்கிரம் போங்க... ஆஃபீஸ் கேமராவுல நீங்க என்னோட வர்றது பதிவாகும்... மேலிடம் வரை போகும்... எதுக்கு வம்பு? இல்லாட்டி அங்கு வரை வரலாம்...’‘“நோ... நோ... இதுவே எனக்கு பெருமகிழ்ச்சி சீனு..!’‘தன்னுடைய அறைக்குள் நுழைந்ததும், டெய்சியிடமிருந்து அழைப்பு. விவேக்கின் சில பி.ஏ.களில் டெய்சியும் ஒருத்தி.மிகவும் தேவைப்பட்டால்தான் அவளிடமிருந்து அழைப்பு வரும்!பேசினாள்.“கனகா... நீங்க வந்ததும் சார் அவரை வந்து பார்க்கச் சொன்னாங்க...’‘அவளுக்கு பகீரென்றது. பாம்பாட்டி பெட்டியைத் திறந்து முகத்தருகே பாம்பைக் காட்டிய மாதிரி இருந்தது.அவன் அழைப்பான் என்று எதிர்பார்த்ததுதான்.சீனுவுடன் வந்து இறங்கியதை யாரும் போட்டுக்கொடுத்து இருப்பார்கள்.ஆனால், மகிழ்ச்சியாக வரவேற்றான் விவேக்.“வெல் டன் கனகா. யூஎஸ்லேருந்து வந்து இறங்கியிருக்கும் ரா மெடிரியல்ஸ் சரியில்லை என்று கண்டுபிடித்து, கேன்ஸல் பண்ண நோட் போட்டு அனுப்பிட்டே. உன்னோட முடிவு எடுக்கும் திறன் அபாரம்! பல லட்சம் ரூபாய் காப்பாற்றப்பட்டது. இன்று மாலை நாம் ஹோட்டல் ஆதர்ஷாவுல சந்திக்கிறோம்... டின்னர்... லெடஸ் செலப்ரேட்..!’‘கனகாவிற்கு ஒரு கணம் என்ன சொல்வதென்று தெரியவில்லை.காரணம், தண்ணீருக்குள்ளே தடம் கண்டுபிடிப்பான் இந்த விவேக்.மாறாக, அவளுடைய வேலைக்கு மிகப்பெரிய பாராட்டு தெரிவித்து, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் டின்னரும் தருவான் என்று அவள் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.வினோதினிக்கு உடனே சொல்ல வேண்டும் போலிருந்தது. சந்தோஷப்படுவாள்.சட்டென்று சீனுவின் ஞாபகமும் வந்தது.அலுவலகத்தில் ரூம் கிளீனராக வேலை பார்க்கும் அவனுக்கெல்லாம் அழைப்பு இருக்குமா? மொத்தம் இருபது ரூம் கிளீனர்கள். அவர்களும் வருவார்களா? கடைநிலை ஊழியர்களுக்கும் இருக்குமா?அதென்னவோ விவேக்கிற்கு விளிம்பு நிலை மனிதர்களைப் பிடிப்பதில்லை என்று கண்டுபிடித்து விட்டாள் கனகா.ஆனாலும், ஒரு நாள் கேட்டே தீரவேண்டும்.‘என் தம்பியை... தங்கக் கம்பியை அன்னக் காவடி என்று சொன்னவனே! அவனிடம் மன்னிப்புக் கேள்... என்று சொல்லியே தீருவேன். அதற்கு சந்தர்ப்பம் வரும்’ மனது கருவியது. மருவியது.ஆதர்ஷா மாதிரியான டின்னர் அவளுக்குப் புதிது. பாதி டிஷ்களின் பெயரே தெரியவில்லை.பாபுவிற்கும் இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும். அவளுக்கு எதுவுமே ருசிக்காத மாதிரி இருந்தது. அப்போதுதான் அது நடந்தது.வானம் என்றாலே வானவில் மட்டுமா இருக்கும்? இடியும் இருக்கும்தானே?அழகாக போய்க்கொண்டிருந்த விருந்தில் அவன் வந்தான்.சீனு...ஒரு கணம்தான். விவேக்கின் கண்கள் அவனை நோக்கி நிலைக்குத்தின.“டேய்... உன்னை யாரு உள்ளேவிட்டது..?’‘ திடுமெனக் கத்தினான்.சீனுவிற்கோ முதலில் அவன் தன்னைத்தான் சொல்கிறான் என்று தெரியவில்லை.அப்படியே நின்றான்.கனகாவை நோக்கி முன்னேறினான்.‘‘உன்னைத்தான் கேட்கிறேண்டா...’‘அப்போதுதான் சீனுவிற்கு உறைத்தது.தான் விவேக் செக்ரடேரியட்டில் வேலைபார்ப்பது!இல்லாவிட்டால் விவேக்கிற்கு நேரடியாகத் தெரிய வாய்ப்பிலை!“சார்... கனகா மேடத்தைப் பார்க்க வேண்டிய வேலை இருந்தது... இங்க வந்து இருப்பதாகச் சொன்னாங்க...’‘ என்றவன், கனகாவை நெருங்கி,‘‘மேடம்... வண்டில வந்தபோது உங்க பையை வாங்கினேன்... திருப்பிக் கொடுக்கல... இந்தாங்க... உள்ளே வீட்டுச் சாவியெல்லாம் இருந்த மாதிரி இருந்துச்சு...’‘ என்று சொல்வதற்குள், அவன் கழுத்தைப் பிடித்து தள்ளியே விட்டான். கனகா உள்பட அனைவரும் கையைப் பிசையத்தான் முடிந்தது.ஏற்கெனவே நட்சத்திர ஹோட்டல் சாப்பாடு சாப்பிடத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த அவளுக்கு சீனுவை விவேக் வெளியே பிடித்துத் தள்ளிய காட்சியால் ஒரு சிறு துளி சாப்பாடும் இறங்கவில்லை.ஆனால், அதற்குக் கடவுள் ஒரு பதில் விவேக்கிற்கு வைத்து இருக்கிறான் என்று அப்போது யாருக்கும் தெரியவில்லை..9ஊருக்கு வெளியே இருந்த அந்தச் சின்ன விடுதியில் சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள். சின்ன வயதில் தொலைந்து போய் பெற்றோர் ஊர், எதுவும் தெரியாமல் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள்.அந்த விடுதிக்குள் கனகா நுழைந்தபோது குழந்தைகள், ‘‘அப்பா... அப்பா... யாரோ ஆன்ட்டி வந்திருக்காங்க...’‘ என்று குரல் கொடுத்தன.“இதோ வந்துட்டேன்டா செல்லங்களா..!’‘ என்றவாறே டவலால் கைகளைத் துடைத்துக் கொண்டே வந்த சீனு, கனகாவைப் பார்த்ததும் திடுக்கிட்டு விட்டான்.“நீங்களா..? எப்படி இந்த இடம் தெரியும்..? யார் சொன்னாங்க..?’‘ வியந்து கொண்டே ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டான்.ÔÔபிள்ளைங்களா... வெளியே போய் விளையாடுங்க... போங்க...’‘குழந்தைகள் தோட்டத்திற்கு ஓடிவிட்டன.“என்ன சீனு... வேலைய விட்டு நின்னுட்டீங்களாமே..? சொல்லவேயில்ல...’‘சிரித்தான்.“யார் சொன்னது... நின்னுட்டேன்னு..? சுத்தப் பொய்... நிப்பாட்டிட்டாங்க..!’Õ‘‘எப்படி உங்களால சிரிக்க முடியுது..?’‘‘‘ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொண்டால் அது பற்றி என்ன செய்தி வந்தாலும் அது நல்லதோ கெட்டதோ... நன்றாகப் புரிந்து கொண்டால் அதைச் சிரித்துக் கொண்டே கடந்து விடலாம். நான் உங்க விவேக் பற்றி நன்கு புரிந்தவன். ஆதர்ஷ் ஹோட்டல் சம்பவத்தில் அவர் என்னைத் தூக்கி விடுவார் என்று தெரிந்து விட்டது. ஆகவே ஷாக் அடிக்கவில்லை.’‘“ஸாரி... எல்லாம் என்னால் வந்த வினை.’‘“இதுகூட அபத்தம். அவரவர் செய்த வினைக்கு அவரவர் பொறுப்பு.உங்களால் வரவில்லை.’‘“சீனு... நீங்க நல்லாவே பேசறீங்க..!’‘“இந்த முகவரி யார் கொடுத்தாங்கன்னு இன்னும் நீங்க சொல்லல...’‘“வினோதினி.’‘“என்ன..?’‘“அதிர்ச்சியா இருக்குல்ல..? அவங்களுக்கு உங்கள நல்லா தெரிஞ்சிருக்கு...நீங்க சின்மயா சாரிடபிள் ட்ரஸ்ட்ல போய் உதவி கேட்டீங்களா..?’’“ஆமா.’‘“அதன் பின்னணியில இருக்கிற முக்கியமான ஆள் வினோதினி. யாருக்கும் உதவுறதுன்னா முதல்ல ஆட்களை விட்டு டீடெயில் சேகரிப்பாங்க... பிறகுதான் உதவி... நீங்க பாஸாகிட்டீங்க..!’‘’“ரொம்ப சந்தோஷம். ஆமா... எதுக்கு என்னைப் பார்க்க வந்தீங்க..?’‘“ஏன்... வரக் கூடாதா..?’‘“சாதாரண ரூம் கிளீனர். அதுகூட போயிருச்சி... நீங்க பெரிய போஸ்ட்.அரைத்தாவணி போடற வயசுல அகிலத்தையே ஆளுறீங்க... பயங்கர ஃபாஸ்ட். நான்தான உங்களப் பார்க்க வரணும்..!’‘“சும்மா பார்க்கணும்னு தோணுச்சு. மிகப்பெரிய சேவை பண்ணிக்கிட்டு இருக்கிறதா கேள்விப்பட்டேன்... வந்து பார்க்க நினைத்தேன்.’‘அவர்கள் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தபோது ஒரு பெரிய கார் வந்தது.திடுக்கிட்டார்கள் சீனுவும் கனகாவும்.வந்தது விவேக்.சுனாமி வரும்போது சொல்லிக்கொண்டா வரும்?கனகாவிற்கு ‘திக்’கென்றது.“வணக்கம் சார்...’‘ என்றாள்.அவனோ அவளைப் பார்க்காமல் சீனுவைப் பார்த்து முறைத்தான். ஒன்றும் சொல்லவில்லை.சீனு பொத்தாம் பொதுவாக வணக்கம் வைத்தான்.“மகாபலிபுரம் போயிட்டு இருந்தேன் கனகா. உன் காரைப் பார்த்தேன். இங்க எதுக்காக வந்த..?’‘“இவரைப் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்.’‘“தொர என்ன பண்றாரு..?’‘“அனாதைக் குழந்தைகளுக்கு சின்னதா விடுதி வெச்சு நடத்துறாரு.’‘“குழந்தைகளா..? குமரிகளா..?’‘“சார்... நாகரிகமா பேசுங்க...’‘ சீனுவிற்கு கடும் கோபம் வந்தது.“டேய் நாகரிகமா பேசறதுக்கு நீ எனக்குக் கற்றுக் கொடுக்கிறியா..?’‘“என்ன சார்... டேய்... கீய்னு பேசறீங்க... மரியாதை கொடுத்து மரியாதை வாங்குங்க..!’’“உனக்கு என்னடா மரியாதை... நீயே ஒரு டுபாகூர்.’‘“சார்... நான் எப்படிப்பட்டவனாகவும் இருந்துட்டு போறேன்... உங்களுக்கு என்ன சார்...? முதல்ல வெளியே போங்க...’‘“டேய்...’‘ சீனுமீது பாய்ந்தான் விவேக். சட்டையைப் பிடித்தான்.அவனை வேகமாகத் தள்ளிவிட்டான் சீனு.நிலைகுலைந்து விழப்போனவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள் கனகா.கண்கள் கோவைப் பழமாக சிவக்க, அவனை நோக்கிப் பாய்ந்தான் விவேக். கனகா பிடித்துக் கொண்டாள்.ஆத்திரம் ஒரு மனிதனை எப்படியெல்லாம் மதிப்பிழக்கச் செய்து விடுகிறது.“டேய்... நான் யார் தெரியுமா..? என்னுடைய ஆட்களை வைத்து உன்னை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவேன்..!’‘“அட போங்க சார். உங்களை நான் என்னவாவது சொன்னேனா..? செய்தேனா..? நீங்களா வந்தீங்க. காரணமே இல்லாம சண்டை போடறீங்க... போங்க... போங்க...’‘“சார் போயிறலாம் சார்...’‘ கனகா கெஞ்சினாள்.“உன் கார் நிக்குதேன்னு வந்தேன் கனகா. வந்த இடத்துல இந்த ராஸ்கல்கிட்ட பேச்சு வாங்க வேண்டியிருக்கு... உனக்காக விடறேன்... சரி, வா போலாம்...’‘சீனு அவளைப் பார்த்து, ‘போயிரு...’ என்பது போல கண் ஜாடை காட்டினான்.என்னதான் இருந்தாலும் அளுடைய சூப்பர் பாஸ் அல்லவா விவேக்.வெளியே வந்தபின்னரும் விவேக்கிற்கு படபடப்பு அடங்கவில்லை. ‘ஒரு சாதாரண ரூம் கிளீனர் சக ஸ்டாஃப் முன்னாடி துளி மதிப்பில்லாமல் பேசிவிட்டானே’ என்றுதான் யோசித்தான்.ஒருவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அராஜகமாக நடந்தால், நேர்மை, நாணயம், தன்னம்பிக்கை இவற்றை ஆயுதமாக வைத்திருக்கும் ஒரு எளிய மனிதனால் மிக எளிதாக தூக்கியெறியப்படுவான் என்று கனகா கண்கூடாகக் கண்டாள்!அமைதியாக அவன் பின்னே வந்தாள்.“வா... என் காரில் ஏறு கனகா...’‘“வேணாம் சார்...’‘“ப்ளீஸ்... வாயேன்... இந்த ராஸ்கல் வேற மூட் அவுட்டாக்கிட்டான்...ப்ளீஸ்...’‘அவள் தன்னுடைய டிரைவரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.“சரவணன்... பாபுகிட்ட சொல்லிறு... அக்கா டின்னர வெளியே பார்த்துக்கிடறாங்கன்னு...’‘கார் மகாபலிபுரம் நோக்கிப் பறந்தது.அவளுக்கு பிடிக்கவே இல்லை.“இவனை எப்படி உனக்குத் தெரியும்..?’‘ என்று பேச்சை ஆரம்பித்தான் விவேக்.அவன் கார் ஓட்டும் விதம் கலங்கடித்தது. அவ்வளவு வேகம்.என்ன சொல்ல? அமைதியாக இருந்தாள்.எது சொன்னாலும் பிரச்சனையாகும்.இவனுக்கு ஏன் அவன் மீது காண்டு?ம்... பாவம்.... ஏதுமறியாத முன்பின் பாராத பாபு மீதே அவ்வளவு காண்டு வெச்சிருக்கானே! ஏதாவது சைக்கோ டைப்பாக இருப்பானோ?எவ்வளவு பெரிய அறிஞர்களும் விஞ்ஞானிகளும் சில வித்தியாசமான குணங்களைப் பெற்றிருப்பார்களாம்!இவனும் அப்படித்தானோ?வேகமாக கார் ஓட்டியவாறே கனகாவைப் பார்த்து சிரித்தான் அவன்.‘‘உங்கிட்ட இருக்கிற நிறைய விஷயம் அவகிட்ட இல்ல.’‘“என்ன சார் சொல்றீங்க..?’‘“முதல்ல இந்த சார் போடறத நிறுத்து... எரிச்சலா இருக்கு.’‘“ஐயோ சார்...’‘“பார்த்தியா... பார்த்தியா...’‘“ஸாரி சார்... ப்ளீஸ்... வேண்டாம் சார்... ‘சார்’னே சொல்றேன் சார்...’‘“ம்... இப்ப விடறேன்... கொஞ்ச நாள் ஆனபிறகு மாற்றிக்கணும்... சரியா..?’‘அவளுக்கு அப்போதைக்குத் தப்பிக்க வேறு வழி தெரியவில்லை.“சரி ஸார்...’’ என்றாள்.“தட்ஸ் குட்...’‘ என்றவன், ‘‘எதுல விட்டேன்..?’‘“உங்கக்கிட்ட இருக்கிற நிறைய விஷயம் அவக்கிட்ட இல்லன்னு சொல்லிட்டு இருந்தீங்க...’‘“ஓ... சூப்பர்... இங்க நான் ‘அவ’ன்னு சொல்றது... வினோதினிய... உன் ஃப்ரெண்ட்..!’‘அவளுக்குத் திடுக்கிட்டது.ஏதாவது சொல்லி தர்மங்கடமாக்கிவிடுவானோ?“சொல்லுங்க சார்...’‘“உன்ன மாதிரி அவ இல்ல. சரியான பத்தாம் பசலி...’‘“என்ன சார் சொல்றீங்க..?’‘‘‘பாரேன்... நீ கூப்பிட்ட உடனே டக்குனு வந்திட்ட... அவன்னா வரமாட்டா... வாங்க பீச்சுக்குப் போலாம்பா...’‘கனகாவிற்கு தடக்கென்றது.‘நீ கூப்பிட்டவுடன் டக்குனு வந்துட்ட...’ என்னை இளக்காரமாகப் பேசுகிறானா? அல்லது வினோதினியை மட்டம் தட்டுகிறானா?“எப்பவும் தாலி கட்டின பிறகு பார்த்துக்கலாம்பா... எதற்கெடுத்தாலும் தாலி... தாலி... தாலி..!’’அடப்பாவி!“என்ன கனகா... பதிலைக் காணோம்..?’‘அவள் மௌனமாக இருந்தாள். என்ன சொல்ல?இப்படிப் பேசவா? அப்படிப் பேசவா?தடாகத்துத் தாமரைத்தண்டு போல் அவள் மேனி ஆடியது. நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள்.காரின் வேகம் பயமூட்டியது.“என்ன சொல்ற கனகா?’‘“சார்... நான் சொல்றதுக்கு என்ன இருக்கு..? வினோதினி எனக்கு நல்ல ஃப்ரெண்ட்..!’‘ஜில்லென்று வீசிய காற்று மகாபலிபுரம் வந்து விட்டதை உணர்த்தியது.தூரத்தில் நீலக்கடல் வானத்துடன் முத்தமிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.சட்டென்று அவளுக்கு தம்பியின் ஞாபகம் வந்து விட்டது.“அக்கா... மகாபலிபுரம் போலாமாக்கா?’’ என்று அவன் அடிக்கடி கேட்பான்.ஆனால், மகாபலிபுரம் எட்டாக்கனியாகவே இருந்தது.இன்று?கனகா வேலைக்கு வந்து பல மாதங்கள் ஓடிவிட்டன. கை நிறைய சம்பளம்... கலக்கான கார்... ஆனால், நேரம்தான் இல்லை. இப்போதெல்லாம் பல முக்கியமான பொறுப்புகள் அவள் தலையில் விழுகின்றன. பல முடிவுகளை அவள் எடுக்க வேண்டியுள்ளது. ஆகவே பயணங்கள் அதிகரித்து விட்டன. கார் அவளிடம் திணிக்கப் பட்டது.பாபுவிடம் செலவழிக்கும் நேரம் குறைந்து கொண்டே வருகிறது.“என்ன யோசனை கனகா..?’‘“நத்திங் சார்.’‘‘தம்பியைப் பற்றி யோசித்துக் கொன்டிருக்கிறேன் சார்...’ என்று சொன்னால் வேறு வினையே வேண்டாம்.வேகமாகச் சென்ற கார், மெதுவாகி, திருப்பத்தில் வளைந்து சென்றது.ஒருவன் குனிந்து வரவேற்றான்... மார்கெட்டிங் மேனேஜர்.விவேக் எங்கு போனாலும் அவன் அலுவலர்கள் சிலருக்கு போன் பண்ணிச் சொல்லிவிடுவான்.அவர்கள் அவனுக்கு வேண்டிய ஏற்பாடுகளை முன்னதாகவே செய்து விட்டுக் காத்திருப்பார்கள்.கார் மெள்ள அந்த ஹோட்டலின் லானில் நுழைந்தது.பெரிய நீச்சல் குளத்தில், வாழைத்தண்டு பெண்கள் வானத்தைப் பார்த்து நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார்கள்.ஆளுயர ஆசாமி ஒருவன், காரின் கதவை திறந்து விட்டான்.விவேக்கிற்கும் கனகாவிற்கும் வணக்கம் சொன்னான்.“அதே ரூம்தானே..?’‘“யெஸ் சார்.’‘விவேக் அவள் பக்கமாக திரும்பி, “நான் வந்தால் ஒரே அறையில்தான் தங்குவேன்... வியூ நல்லா இருக்கும்..!’‘ரிஷப்ஷன் மிகவும் பிரமாண்டமாக இருந்தது!மெத்தென்ற தரை. மேகப் பொதி மாதிரியான இருக்கைகள். அங்கு வியாபித்து இருந்த சுகந்தமான மணம். பார்பிக்யூ பொம்மை மாதிரியான பெண்கள். கனகாவிற்கு எல்லாமே புதிதுதான்!ரிஷப்ஷனில் ஒரு பெரிய விநாயகர் படமும் இருந்தது. பளபளக்கும் பித்தளை செய்யப்பட்டதுதான். ஆனால், தங்கம் போல மின்னியது. விலை பல லட்சங்கள் இருக்கலாம்.அதன் அருகே பெரிய மிராசுதார் மாதிரி ஒருவர் போட்டோ.ஏதோ புதுக்கோட்டை சமஸ்தான அரசர்கள் படம் போல் கம்பீரமாக இருந்தது.‘‘என்ன கனகா... ஆச்சரியமா பார்க்கிறே..? இந்த போட்டோல இருக்கிறவரு யார் தெரியுமா? இவர்தான் இந்தப் பிரமாண்டமான ஹோட்டலின் அதிபர்! பெயர் விக்னேஸ்வரப் பண்ணையார். காலமாகி விட்டார். ஆனால், இவருடைய ஒரே பெண் வாரிசு உயிரோடதான் இருக்காங்க... அவங்க யார் தெரியுமா..?’‘ஒரு கணம் நிறுத்தியவன், மெல்ல சொன்னான்...- ‘‘வினோதினி..!’’அதைக் கேட்டதும் தலை கிறுகிறுவென சுழன்றது கனகாவிற்கு..10“என்ன சொல்றீங்க சார்..?’‘ என்றாள், கனகா.இமயமலையே கவிழ்ந்து, அவள் முன்னே நிற்பது மாதிரி அதிர்ந்தாள்.அவன் சிரித்தான்.“ம்... இதுக்கே இப்படி முகத்துல பேய் அறையுது உனக்கு. இனிமே போகப் போக இருக்குது கணக்கு..!’‘அவளுடைய திகைப்பு அடங்கும் முன்னரே அங்கு ஒரு அழகி வந்தாள். நல்ல ரத்தச் சிவப்பில் வெல்வட் டைப்பில் ஒரு சிங்கிள் பீஸ் பெரிய துணி. மார்புகளையும் இரண்டு கால்களில் ஒன்றேகால் கால்களையும் மறைத்திருந்தாள்.“ஹாய் விவேக்... ரிமெம்பெர் மீ..?’‘விவேக் அவளை ஒரு கணம் பார்த்தான்.“ஹாய் சாதனா... வாட் எ ப்ளஸண்ட் சர்ப்ரைஸ்..! கோவாவில் இருந்து எப்ப வந்தீங்க..?’‘ என்றவாறே கட்டிப்பிடித்தான். அவளும் தழுவிக் கொண்டாள்.சாதனா கனகாவைப் பார்த்தாள்.“மை ஸ்டாஃப்... கனகா...’‘ என்றான்.“ஓ வாட் அ லவ்லி கேர்ள்... டிபிகல் பியூட்டிஃபுல் சவுத் இண்டியன் பியூட்டி..!’‘ என்றவள், கனகாவையும் தழுவிக்கொண்டாள்.விவேக்கைப் பார்த்து ரகசியமாகக் கண்ணடித்தாள்.அதைக் கனகா பார்த்துவிட்டாள்.“ஆல் த பெஸ்ட்..!’‘ என்று அவனைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.‘‘ஆல் இண்டியா ஃபேஷன் ஃபேருக்கு வந்திருக்கேன். இரண்டு நாள் இருப்பேன்... வாட் அபௌட் நைட் டின்னர்?’’ என்றாள், நுனி நாக்கு ஆங்கிலத்தில்.“ஸாரி டியர்... இன்னொரு முறை வரும்போது போன் பண்றியா..?’‘ என்றான் விவேக், அவளுடைய கைகளைப் பற்றிக் கொண்டு.“நோ ப்ராப்ளம்...’‘ என்ற அந்தச் சிவப்பு சிள்வண்டு பறந்து போய்விட்டது.“எங்க போனாலும் யார் கண்ணிலாவது பட்டுத் தொலைச்சிடறேன். நோ பிரைவசி...’‘ என்று அலுத்துக் கொண்ட மாதிரி கனகாவிடம் சொன்னாலும், அவன் அதை ரசிப்பது மாதிரிதான் தெரிந்தது கனகாவிற்கு.அந்த அறை மிக அழகாக இருந்தது. கிங்க் சைஸ் காட். ஏறக்குறைய ஒரு மைதானம் மாதிரி இருந்த அந்தக் கட்டிலைப் பார்த்ததும் ‘குபீர்’ என பயம் வந்து விட்டது கனகாவிற்கு.அப்படியே வெளியே ஓடி விடலாமா என்று நினைத்தாள்.“கமான் கனகா... சிட்...’‘ கட்டிலைக் காட்டினான்.அவள் தயங்கி, ஸ்டூலை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.செக்காய்க் கனத்தது அந்த ஸ்டுல்!“கனகா... என்ன சாப்பிடறே..?’‘’அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.தாமரை இலைத் தண்ணீர் போலவே இருந்தாள்.சீக்கிரம் அங்கிருந்து கிளம்ப வேண்டும் போலிருந்தது.இந்தப் பிரமாண்டமான ஹோட்டலில் விவேக்குடன் இருப்பதை அவள் மனம் சுத்தமாக ஒப்பவில்லை.‘டொக்... டொக்...’ என கதவு தட்டப்பட்டது.“யெஸ் கமின்...’‘ என்றான், விவேக்.ஒரு அழகான தட்டில் இரண்டு உயரமான கண்ணாடி தம்ளரில் ஆரஞ்சு நிறத்தில் குளிர்பானம் கொண்டு வந்தான் பணியாள்.விவேக்கிடம் கொடுத்தப் பிறகு அவளிடம் நீட்டினான். அவள் அதை வாங்கிக் கொண்டாள்.குடிக்க அச்சமாக இருந்தது. எத்தனை செய்திகளைப் படிக்கிறாள்!‘குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண் கற்பழிப்பு _ காதலன் தப்பி ஓட்டம்!’அந்தச் செய்திகள் எல்லாம் புழுதிகளாக சுழன்றடித்து அவள் மனதில் ஒட்டிக் கொண்டன.‘என்ன செய்யலாம்?’ என்று யோசித்தபோது விவேக்கிற்கு போன் வரவே டவர் கிடைக்காததால் எழுந்து வெளியே சென்றான்.அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட கனகா அந்தக் குளிர்பானத்தை வாஷ்பேஸினில் கொட்டிவிட்டு வந்தாள்.ஒன்றுமே தெரியாத மாதிரி அமர்ந்து கொண்டாள்.நிமிடம் யுகங்களாகக் கழிந்தது. நேரம் வேறு ஓடிக்கொண்டிருக்கிறது.‘பாபா... நான் சீக்கிரம் கிளம்பணும் பாபா...’தன்னுடைய ஹேண்ட் பேக்கை எடுத்துத் திறந்து, பாபா படத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.அப்போது வேகமாக உள்ளே வந்தான் விவேக்.“போச்சு... போச்சு... எல்லாம் போச்சு... கமான் கனகா... நாம உடனே கிளம்பறோம்...’‘’அவள் திடுக்கிட்டாள். இவ்வளவு பரபரப்பான டென்ஷனான விவேக்கைப் பார்த்ததில்லை.“என்னாச்சு சார்..?’‘ என்றாள், பதைபதைப்புடன்.ஆனாலும், பாபா அவளின் வேண்டுகோளை மின்னலென கவனித்துவிட்டாரே. ‘தாங்யூ பாபா!’ என்றவாறே அவன் பின்னே கிளம்பினாள்.“சார்... கூல் ட்ரிங்க்ஸ்..?’‘“தூரக் கொட்டு அத..!’‘ கடுமையான எரிச்சலுடன் பதிலளித்த விவேக், வேகமாக கீழே வந்தான்.“அந்த மதுரை சுந்தராபுரம் பைபாஸ்ல இரும்புத்தூண் மேம்பாலம் அமைக்க நாம் கொடுத்த 30 கோடி ரூபாய் டெண்டர் தள்ளுபடியாயிரும் போலிருக்கே... ரகசியத் தகவல் வந்துருச்சு.’‘“ஓ மை காட்!’‘“எப்படி விஷயம் லீக் ஆச்சுன்னு தெரில...’‘ அவன் கவலை அவளையும் தொற்றிக் கொண்டது.‘‘கனகா... நாம இப்ப நேரா ஆஃபீஸ் போறோம்... நீ கொஞ்ச நேரம் இருக்க வேண்டியிருக்கும்...’‘“சரி சார்...’‘ என்றவள், உடனே பாபுவை போனில் அழைத்தாள்.“பாபு... இன்னிக்கி நான் வர பத்து மணியாகும். இரண்டாம் தெரு கோமளா மாமிகிட்ட சொல்றீயா... அவங்கள என் ஆஃபீஸிற்கு வரச்சொல்லு...நான் அவங்ககூட வந்திடறேன்... ஆட்டோவிற்கு காசு கொடுத்து விடு... வரும்போது என்னோட கார்ல வந்திடலாம்... சரியா..?’‘“சரிக்கா.’‘விவேக் வேகமாகச் சொன்னான்:“ஏன் யாரையோ வரச் சொல்ற... நான் உன்ன வீட்ல டிராப் பண்ணிட்டு பிறகு போகிறேன் கனகா.’‘“வேண்டாம் சார்... உங்களுக்கு எதுக்கு சிரமம்..?’’ என்று சொல்லி விட்டாள்.இந்த உலகம் பொல்லாதது. ‘ராத்திரி பத்து மணிக்கு எவனோடெல்லாம் வந்து இறங்குகிறாள்!’ என்று சொல்லும். தனியாக லேட்டாக வந்தாலும், ‘பாரு... லேட்டாவே வர்றா... என்ன எழவோ?’ என்று கூசாமல் பேசும்.சென்னை வரும் வரை யோசனயாகவே இருந்தான் விவேக்.ஆஃபிஸில் அமைதி நிலவியது.ஒரு சிலர் மட்டும் வந்திருந்தார்கள். கான்ஃபெரன்ஸ் ஹால் மௌனத்தில் இருந்தது. டின்னருக்குச் சொல்லப்பட்டது.விவேக்கின் பி.ஏ.களில் ஒருத்தியான டெய்சி, எல்லோருக்கும் வெல்கம் ட்ரிங்க் மாதிரி ஒன்று கொடுத்தாள்.“மிஸ் கனகா... யூ ஆர் இன்டெலிஜன்ட்... இந்த விஷயம் எப்படிப் போச்சுங்கிறதப் பிறகு பார்க்கலாம்... எப்படி உடைக்கலாம் என்று சொல்லுங்க...’‘ என்றான் விவேக்.மற்றவர்கள் முன்பாக அவளுக்கு மரியாதை தரும் விதம் அவளுக்கு எப்பவுமே பிடிக்கும்.“சார் எனக்கு அதன் விவரத்தை என் பர்சனல் ஈ_மெயிலுக்கு அனுப்புங்க... 10 நிமிடங்களில் என்னன்னு பார்த்திடறேன்... ப்ளீஸ்...’’சொல்லிவிட்டு, அவள் அறைக்குச் சென்றாள். மெயிலில் விவரங்களை பார்த்தாள்.10 நிமிடங்களாக அவ்வளவு பெரிய கம்பெனியின் தலைவரும் அவர் கீழே இருக்கும் சில பெரிய சீனியர் ஊழியர்களும் காத்திருந்தார்கள்.அவள் இருக்கையில் அமரும் நேரம் தற்செயலாய் திரும்பிப் பார்த்தபோது, டெய்சி அவளை குரோதமாகப் பார்ப்பதும் சட்டென்று புன்னகையை வரவழைத்துக் கொண்டதும் தெரிந்து லேசாக அதிர்ச்சி அடைந்தாள்.கனகாவின் அசுர வளர்ச்சி கண்டு அவள் பொறாமைப்படுவதாக சீனு ஏற்கெனவே சொல்லியிருந்தான்.அப்போது நம்பவில்லை கனகா. இப்போது டெய்சியின் குரோதப் பார்வை சீனுவின் பேச்சை உறுதிப்படுத்திற்று!“கமான் கனகா... உங்கள் பதில் என்ன..?’‘விவேக்கின் குரலால் நினைவு கலைந்தாள் கனகா.“சார் இவ்வளவு சீனியர்ஸ் இருக்கும்போது என்னிடமும் ஒரு ஒபீனியன் கேட்டதற்கு சந்தோஷம். என் மேல் இங்கு எல்லோரும் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றிகள் ஆயிரம்..!’‘ என்றவள், கொடேஷனில் என்ன குறைகள்? எப்படி மாற்றலாம்? அதற்கு வழி என்ன? என்றெல்லாம் சொன்னபோது,“அடாடா... சூப்பர்..!’‘ என்று எல்லோரும் கைதட்டினார்கள். விவேக் எழுந்து வந்து அவளிடம் கை குலுக்கினான். தொடர்ந்து எல்லோரும் அவளிடம் கை குலுக்கினார்கள்.“மிஸ் கனகா... அன்றைக்குத்தான் உங்க திறமையைப் பாராட்டி நட்சத்திர ஹோட்டலில் விருந்து கொடுத்தேன். இதற்கும் கொடுக்கணும் போலிருக்கே... என் பர்ஸ் தாங்காதுங்க..!’‘ என்று விவேக் சொன்னதும் ஒரே கலகல!“சார்... உங்க அன்பே போதும் சார்..!’‘ என்ற கனகா, “இப்போ உங்களுக்கு போன் போடப் போறேன் சார்... தயவு செய்து எடுங்க...’‘ என்றாள். எல்லோரும் திகைத்து நிற்க, தன்னுடைய அறைக்குச் சென்றாள்.விவேக்கிற்கு போன் போட்டாள்...“சார்... சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... இந்தத் திட்டம், ஃபார்முலா எல்லாவற்றையும் நானே டைப் அடிச்சி உங்களுக்கு அனுப்பறேன் சார்...’‘திடுக்கிட்டான்.“அது என் பி.ஏ., டெய்சியோட வேலைம்மா... நீ ஸ்பெஷல் எக்ஸிகியூடிவ்... நீ டைப் அடிக்கிறதா..?’‘“ப்ளீஸ் சார்... எல்லாம் காரணமாத்தான் சொல்றேன்...’‘“ஓகே... நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்..!’‘சிறிது நேரத்தில் டெய்சி, புன்னகைத்துக் கொண்டே வந்தாள்.“சார்... டின்னர் வந்துருச்சு..!’‘ என்றவள், சீனியர் அதிகாரி ஒருவரிடம்,‘‘இந்த மீட்டிங்கிற்கான விவரங்களை டைப் செய்து மெயில் அனுப்பணுமே...’‘ என்றதும், விவேக் குறுக்கிட்டு,‘‘அதெல்லாம் ஓவராயிருச்சு. லெட்ஸ் கோ ஃபார் டின்னர்!’‘ என்றதும், டெய்சியின் முகத்தில் ஏமாற்றம், ஆத்திரம், கோபம் எல்லாம் ஒருசேர வந்து மறைந்ததை விவேக்கும் கனகாவும் கவனிக்கத் தவறவில்லை.காத்திருந்த கோமளா மாமியுடன் இரவு திரும்பினாள்.“அக்கா...’‘“என்ன பாபு?’‘ அந்த அதிகாலை வேளையில் அடுப்பில் உலை கொதித்துக் கொண்டிருந்தது.“இப்பல்லாம் நீ பழைய அக்காவா இல்லக்கா.’‘“என்னடா சொல்றே..?’‘“சரியா பேசறது இல்ல... லேட்டா வர்றே... எனக்கு போரடிக்குது அக்கா...’‘“சாரி... நம்ம நிலைமை சீராவதற்காக நாம் சில சமயங்களில் சில தியாகங்களைச் செய்தாக வேண்டியிருக்கிறதுடா...’‘“அதுக்காக... இப்படியா..?’‘“சாரிடா... இனிமே சனி, ஞாயிறு இரண்டு நாளும் உனக்காகத்தான்... வேறு அப்பாயின்ட்மென்ட் கிடையாது.’‘‘சரிக்கா... சந்தோஷம்..!’‘அவள் அப்படிச் சொன்னாளே தவிர அவளால் அவனிடம் சொன்னபடி இருக்க முடியவில்லை. சிலருக்கு சில திறமைகள் சின்ன வயதிலேலே அமைந்துவிடும்.திருநெல்வேலி சிறுமி ஒருத்தியின் ஐக்யூ 200ஐ கடந்து உலகப் புகழ் பெற்று விட்டாளாம். பெரியப் பெரிய நிபுணர்களுக்கெல்லாம் வகுப்பு எடுக்கிறாளாம். உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் இவள் வருகைக்காக காத்திருக்கிறார்களாம்..!கனகா அந்த அளவு இல்லையென்றாலும் அதீத திறமையால் கிடுகிடுவென முன்னேறிவிட்டாள்.இதனால நிறைய பேர் அவளுக்கு எதிரிகளானார்கள், பொறாமையின் மிகுதியால்!அவள் நெருங்கிய சிநேகிதியான டெய்சிகூட அவளிடம் நிறைய விஷயங்களை வாங்கி, அவள் நண்பர்களுக்கு கொடுத்துவிட, பல விஷயங்கள் கை நழுவிப்போக அதைக் கண்டுபிடித்த கனகா, அவளை என்ன செய்யலாம் என்று யோசிக்க... வினோதினியிடமிருந்து போன் வந்தது.“அக்கா... எப்படி இருக்கீங்க..?’‘“என்ன மறந்துட்டியா..?’‘“அய்யோ அக்கா...’‘“அப்ப சாயங்காலம் பீச்சுக்கு வர்றீயா..?’‘திடுக்கிட்டாள். ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது சோழிங்கநல்லூரில்.“என்ன யோசிக்கிறே..? சோழிங்கநல்லூரில் மீட்டிங் இருக்கா..?’‘அதிர்ந்தாள் கனகா. ‘‘அட... எப்படிக்கா தெரியும்..?’‘“இத பாரு கனகா... டெல்லிக்கு ராஜாவா இருந்தாலும் அன்னைக்குப் பிள்ளை..!’‘“என்னக்கா சொல்றீங்க..?’‘“புகழ்பெற்ற ஸீகல்ஸ் கம்பெனியின் அதிபராக இருந்தாலும் விவேக் என்னோட வருங்கால கணவர்... எங்கிட்ட எல்லாம் சொல்லிடுவாரு..!’‘‘‘அட... ஆமால்ல..!’‘“ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்னு கூப்பிட்டேன்...’‘“ஞாயிறு பேசலாமா அக்கா..?’‘“சரி பேசலாம்... ஒரு விஷயம் சொல்வேன்... தப்பா எடுக்துக்க மாட்டியே..?’‘அவள் சொன்ன விஷயம், அவளை நிலைகுலைய வைத்தது.“என்னக்கா சொல்றீங்க..?’‘“யெஸ் கனகா... விவேக் முன்ன மாதிரி எங்கிட்ட பேசறது இல்ல... கடந்த சில மாதங்களா... அதாவது, நீ அவர்கிட்ட வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து!’’.11கிண்டி பாம்புப் பண்ணை.பாபுவிற்கு ஏகச் சந்தோஷம். அக்காவை மகிழ்ச்சி பொங்கப் பார்த்தான்.ஜலஜாஅம்மாவுடன் வந்திருந்தாள்.குதூகலமாக ஆரம்பித்தது அன்றைய ஞாயிறு.அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள்.மாலையில் பீச் போகலாம் என்றுதான் முதலில் திட்டம். ஆனால், திடீரென ஒரு மீட்டிங் வந்துவிட்டதால் அது கேன்சல்.வகைவகையான பாம்புகள். தற்காப்பிற்காகவே அது மனிதர்களைத் தீண்டுகின்றன. பாம்பு மட்டுமல்ல... எல்லா விலங்குகளும் அப்படித்தான்!மனிதன் மட்டும் காரணமே இல்லாமல் போட்டி, பொறாமை, அடிதடி என்று இந்தச் சமூகத்தை டெரர் ஆக்கி வைத்திருக்கிறான். இனப்பெருக்கம் கூட குறிப்பிட்ட காலங்களில்தான். மனிதப் பிறவி மட்டும் வருடத்தின் எல்லா நாட்களிலும் காமம். அதனால் குரோதம், முறைதவறிய உறவுகள், கற்பழிப்பு... மனிதனுக்கு ஆறறிவை வைத்த ஆண்டவன் இதில் மட்டும் வெச்சு செய்துவிட்டான்!“ஹலோ...’‘ என்ற குரலால் நினைவுகள் கலைந்து திரும்பினாள் கனகா.ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனுடைய உடையும் ஷர்ட்டும் அவ்வளவு நாகரிகமாக இல்லை. கசங்கி, அழுக்காக இருந்தது.அவன் தலையில் எந்த நேரமும் குருவி கூடு கட்டலாம். புதராக மண்டிக் கிடந்தது. ஒருவேளை, இதுதான் நாகரிகமோ?சின்ன வயதில் அவள் பாவாடை லேசாகக் கிழிந்திருந்தது என்று அம்மா கவலைப்பட்டு, பக்கத்து வீட்டில் ஊசி, நூல் வாங்கி தைத்ததும், அதற்குப் பதிலாக பக்கத்து வீட்டுக்காரி ஊசி, நூலுடன் ஒரு கப் சர்க்கரையையும் திருப்பி வாங்கிக்கொண்டதும் நினைவுக்கு வந்தது.இந்தக் காலத்தில் மூட்டுகள் தெரிய கிழிந்த பேன்ட் போட்டுக்கொண்டு இளம் பெண்கள் போவதுதான் நாகரிகமாகக் கருதப்படுகிறது. எல்லாம் காலத்தின் கோலம்!“யாருப்பா நீ..? ஏன்ன வேணும்..?’‘‘‘உங்ககிட்ட தனியாகப் பேசணும்.’‘பீடி நாற்றம் குமட்டியது.கனகா துணுக்குற்றாள். யாரிவன்? ‘தனியாகப் பேசணும்’ என்று சொல்கிறான்.‘‘சொல்லுப்பா... நீ யாருன்னே தெரியாது... எங்கிட்ட தனியாப் பேசணும்னு சொல்றே..?’‘‘‘உங்களுக்கு என்னைத் தெரியாது... ஆனா, எனக்கு உங்களைத் தெரியும்..!’‘ வில்லன் போல சிரித்தான். விகாரமாக இருந்தது.“நீ கனகா... ஒரு பெரிய கம்பெனில உயர் பதவி...’‘“ஏய்.. நீ யாரு..?’‘“சொல்றேன்... நீ உன் திறமையால உன் பெரிய அதிகாரி... அதான் அந்த விவேக்... அவன கைக்குள்ள போட்டுகிட்டு நீ பெரிய ஆளாயிட்டே..!’‘அவளுக்கு அமிலத்தை மேலே கொட்டியது மாதிரி இருந்தது.“டேய்...’‘“கத்தாதே கனகா. இன்னும் முடிக்கல... உன்னோட பொழுதுபோக்கு வாரக் கடைசி வந்தா அவனோட ஹோட்டல்ல ரூம் போட்டு புரள்றது...’‘“டேய் ராஸ்கல்...’‘ அவன் மீது பாய்ந்தாள்.“கூல்... கூல்... உன்கூட வந்தவங்க பார்க்கப் போறாங்க...’‘அவள் திரும்பிப் பார்த்தாள். நல்லவேளை. பாபு, ஜலஜா, அவளுடைய அம்மா எல்லோரும் சற்று தள்ளி நின்று சிறுத்தைப் புலியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.“கனகா நான் ரொம்ப நல்லவன்... அனாவசியமா யாரையும் தொல்லை கொடுக்க மாட்டேன்... இப்பகூட ரெண்டு லட்சத்தை நீ வெட்டுனா, ஊர்ல போய் செட்டிலாகிருவேன். எங்க வரணும் சொல்லு... சைலண்டா வந்து வாங்கிட்டுப் போயிடறேன்..!’‘அவளுக்கு உடம்பெல்லாம் ஆத்திரத்தில் ஆடியது.சூழ்நிலை கருதி, குரலை உயர்த்தாமல் இருந்தாள்.“போடா ஃபூல்... நான் ஏண்டா உனக்கு ரெண்டு லட்சம் தரணும்... என்ன... மிரட்டறியா..?’’“நான் ஏன் மிரட்றேன் தாயி..? நான் என்ன பொய்யா சொல்றேன்..? நீயே பாரேன்... இத...’‘தன் கையிலிருந்த மொபைலைக் காண்பித்தான்.கனகா அதிர்ந்தாள்.படத்தில் அவள் அந்த மகாபலிபுரம் ஹோட்டலில் பிரமாண்டமான அறையில் இருந்தாள்.அவளருகே விவேக். இருவர் கைகளிலும் குளிர்பான கண்ணாடி தம்ளர்.ஒரு கணம் உலகமே தட்டாமாலை ஆடியது கனகாவிற்கு.விவேக் அவளிடமிருந்து சற்று தள்ளி ஸ்டூலில் அமர்ந்திருந்தாலும் விவேக் அவளை மறைத்து, கனகா கட்டிலில் அமர்ந்திருப்பது போல்தான் இருந்தது.“இத பாரு... அங்கங்க ஆள் வெச்சிருக்கேன். எவ்வளவு கெடுபிடி ஹோட்டலா இருந்தாலும் இந்த மாதிரி புடிச்சித்தர ஆள் இருக்கு..!’‘ சிரித்தான்.“சொல்லு... எங்க வரட்டும்..?’‘அவளுக்கு வியர்த்து விட்டது. என்னதான் பெரிய எக்ஸிகியூடிவ் அது இது என்றாலும் அடிப்படையில் பெண்.இப்போது இருக்கும் நிலையில் இந்தச் சூழ்நிலையை மிக எச்சரிக்கையாகக் கையாள வேண்டும்.முள்ளில் விழுந்த புடவை கதைதான்.அவளுக்கு இப்போது வேண்டாதவர்கள் அதிகமாகிவிட்டார்கள். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு என்று தெரியவில்லை.நெருங்கிய சிநேகிதி டெய்சியே அதற்கு உதாரணம்.கொடேஷன் போயிருந்தால் கனகாவிற்கு வேலை போயிருக்கும்.அதற்குள் அவள் மனம் பரபரவென்று திட்டம் போட்டுவிட்டது.சீனுவை வைத்துதான் இவனை சமாளிக்க வேண்டும்.அவன் கில்லாடி. கமோண்டோ!“சரி, பணத்தை எங்கு, எப்போது தர வேண்டும்..?’‘“அப்படி வா வழிக்கு...’‘ என்று மெள்ள சிரித்தவன், விவரத்தைச் சொன்னான்.“இத பாரு... தப்பித் தவறி போலீஸ் அதுன் இதுன்னு போனேன்னு வெச்சுக்கோ... பிறகு கதை கந்தல். உன்னோட மானம் மரியாதை எல்லாம் கப்பல் ஏறிடும். பிறகு நீ ஐயோ அம்மான்னு கத்தினாக்கூட நீ தூக்குப் போட்டு சாகறத உன்னாலயே தடுக்க முடியாது. அது மட்டுமல்லாம உன்னோட தம்பி பாபு, ரோட்ல பிச்சையெடுத்துக் கொண்டிருப்பான், ஏதாவது ஒரு கையோ காலோ இல்லாமல்..!’‘“அய்யோ... கடவுளே..! அப்படியெல்லாம் சொல்லாதே...’‘காதுகளைப் பொத்திக் கொண்டு கத்தினாள்.சிலர் பார்த்துவிட்டுச் சென்றார்கள்.அவன் “உஷ்...’‘ என்றான்.அவள் யோசித்தாள்.இதற்கெல்லாம் அசராமல் போராடலாம். ஆனால்-, விவேக் ஒரு தனி மனிதன்... கனகா ஒரு தனிமனுஷி என்றால் பரவாயில்லை. அவன் மிகப்பெரிய அதிபர். முக்கியமாக, வினோதினி அவனைக் கரம் பிடிக்கப்போகிறாள். வினோதினி, கனகாவின் தெய்வம் என்ற ஸ்டேட்டஸில் இருக்கிறாள்.இங்கு ஒவ்வொன்றும் உணர்வுபூர்வமாகப் பின்னப்பட்டு இருக்கிறது.இந்த உலகம் எதையுமே விசாரிக்காது. அதற்கு நேரமும் இல்லை. ‘நெருப்பில்லாமல் புகையாது!’ என்ற ஒற்றை வரிப் பழமொழியுடன் அவளைப் புதைகுழியில் எட்டி உதைத்து விட்டுப் போய்க்கொண்டே இருக்கும்.அவளுக்குக் கண்ணீர் வந்தது.என்னதான் பெண்கள் ஒரு நிலைக்கு வந்தாலும், விஞ்ஞானிகள் சந்திரயானை நிலவுக்கு அனுப்பினாலும் பெண்கள் என்றால் கிள்ளுக்கீரைகள்தான்.மணிப்பூர் கொடூரங்கள் தொடர்கதைகள்தான்.‘‘ஆஞ்சனேயா... காப்பாத்து...’‘சோர்வாக வேண்டிக்கொண்டு சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தாள் கனகா.தூரத்தில் பாபுவும் ஜலஜாவும் சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தனர்.திடீரென பயங்கர சத்தம். பெரியவர்களும் குழந்தைகளும் அங்குமிங்கும் ஓடினர்.ராஜ்பவன் காட்டிலிருந்து ஒரு பெரிய குரங்கு பூங்காவில் நுழைந்து, மிரண்டவாறு அங்குமிங்கும் ஓடியது. ஒரே பீதி. சிலர் தடுமாறி கீழே விழுந்தார்கள்.கனகா அதிர்ச்சியில் நின்றாள்.காரணம், சற்று முன் அவளிடம் மொபைலை காண்பித்து மிரட்டி ப்ளாக் மெயில் செய்த அந்த ரவுடி கீழே விழுந்து கிடக்க, அவன் மீது அமர்ந்து, அவன் முகத்தைப் பிராண்டிக் கொண்டிருந்தது குரங்கு. அவன் அலறினான்.யாரும் அவனிடம் நெருங்க முடியவில்லை.வாட்ச் மேன் ஓடி வந்தான்.அந்தக் குரங்கு, ரவுடியின் கையிலிருந்த மொபைலைப் பிடுங்கிக் கொண்டு வேகமாக காட்டில் ஓடி மறைந்தது!“ஐயோ என்னோட செல்போன்... என்னோட செல்போன்...’‘அவனுடைய கதறலை யாரும் சட்டை செய்யவில்லை.“அட கம்முனு கிடைய்யா... சீக்கிரம் ஆஸ்பத்திரிக்குப் போற வழியப் பாருய்யா... செல்லு போனா வரும்... உயிர் போனா வருமாய்யா..?’‘சிலர் அவனைத் திட்டினார்கள். பூங்கா அதிகாரி, ஒரு ஆட்டோவை வரவழைத்து ஆஸ்பத்திரிக்கு அவனை அனுப்பிவைத்தார்.‘தான் காண்பதெல்லாம் கனவா... நனவா..?’ என்று வியந்து கொண்டிருந்தாள் கனகா.ஒரு பெரிய பாறாங்கல் அவள் மனதிலிருந்து இறங்கிய மாதிரி இருந்தது அவளுக்கு. பூங்காவும் இயல்பு நிலைக்குத் திரும்பியது!.12 “என்ன சொல்றீங்கக்கா?’‘ என்றாள், கனகா.“ஆமா டியர்... விவேக் முன்ன மாதிரி என்கிட்ட பேசுறதில்லை. பீச்சிற்குக் கூப்பிட்டால் வர மறுக்கிறார்...’‘ஆடாத குளத்து நீரைப் பாசி மறைத்து இருப்பது போல் வினோதினியின் முகத்தையும் கவலை மறைத்திருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.மௌனமாக இருந்தாள் கனகா.சமீப காலமாக விவேக்கும் வினோதினியைப் பற்றி அவ்வப்போது குறைகள் சொல்லி வந்தான்.என்ன ஆயிற்று அவனுக்கு?ஆனால், இவ்வுலகில் எதுவும் நிலையானது இல்லை.நல்லவன் கெட்டவனாகிறான். கெட்டவன் நல்லவனாகிறான். சைவக்காரன் அசைவமாக மறுகிறான். அசைவன் சைவனாகிறான்.இங்கு இவள் இப்படிச் சொல்கிறாள்.கவலையாகத்தான் இருந்தது.திடீரென்று கேட்டாள் வினோதினி:“உன்னிடம் எப்படி நடந்து கொள்கிறார்..?’‘இந்தக் கேள்வியால் அதிர்ந்துதான் போகிறாள் கனகா.இதை என்றேனும் ஒரு நாள் கேட்பாள் என்றுதானே பயந்து கொண்டே இருந்தாள்.சொல்லிவிடலாமா?‘சொல்லாதே!’ என எச்சரித்தது மனது.சில விஷயங்களை யார் எப்படிக் கேட்டாலும் சொல்லக் கூடாது என்பதில் கனகா உறுதியாகத்தான் இருந்தாள்.எப்படிக் கல்யாணம் ஆன புதிதில் கணவன், ‘நான் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாதவன். கல்லூரி படிக்கும்போது ஒரு பெண்ணை விரும்பினேன். காதல் கைகூடவில்லை. விட்டுவிட்டேன். உனக்கு அந்த மாதிரி ஏதாவது அனுபவம் இருக்கா... சொல்லு... மனம் விட்டுப் பேசுவோம்’ என்று அன்பொழுக தேனொழுகப் பேசினாலும், ஆர்வத்தில் சொல்லிவிடக் கூடாது. அதுவே பின்னொரு நாளில் அவளைத் தாக்கும் மிகப்பெரிய ஆயுதமாக மாறிவிடும்!வினோதினி கேட்டதற்கு மௌனத்தையே பதிலாகத் தந்தாள் கனகா.அலுவலகத்தில் சில சமயங்களில் சற்று வித்தியாசமாக, ஒரு கம்பெனியின் எம்.டி., என்கிற நிலையிலிருந்து இறங்கி வந்து அவள் கையைப் பிடித்து ‘நீ அழகா இருக்கே!’ என்று சொல்வதை எப்படி வினோதினியிடம் சொல்ல முடியும்?ஆம்! அவன் மடியில் கனம் இருக்கிறது.“அக்கா...’‘ என்றாள், கனகா.‘‘விவேக் என்னிடம் நல்லபடியாகத்தான் நடந்து கொள்கிறார் அக்கா.மிகச்சிறந்த நிர்வாகி. இன்டெலிஜென்ட். இந்தக் கம்பெனி ஆல விருட்சம் மாதிரி வளர்ந்து இருப்பதற்கு முழுக் காரணமும் விவேக்தான் அக்கா..!’‘வினோதினி சிரித்தாள்.கனகாவிற்கு திடீரென ஒரு எண்ணம் வந்தது.அன்று அந்த பிரமாண்டமான ஹோட்டலில் பார்த்த படம்.விக்னேஸ்வரப் பண்ணையார்!அவர் வாரிசு வினோதினி என்று விவேக் சொன்னது!நிறைய சொல்லவேண்டியிருக்குன்னு அவன் சொன்னது!வினோதினி கோடீஸ்வரி.ஆனால், ஒரு சாதாரணப் பெண்ணாகவே எளிமையாக இருந்தாள்.அவளை முதன்முதலில் சந்தித்த அவளின் நெட் சென்டரில்கூட எந்தவித பந்தாவும் பண்ணாமல் இருப்பாள். உதவியாளர்களுக்கு உதவுவாள்!கனிவும் கருணையும் அவள் முகத்தில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும்!பாபுவிடம் அவள் காட்டிய அன்புதானே கனகாவை வினோதினி பால் முழுமையாக ஈர்த்துவிட்டது!எப்படி இவளுக்குப் போய்... எளியவர்கள், வறியவர்கள் என்றாலே எட்டிக்காயாக நினைக்கும் விவேக் மீது காதல் ஏற்பட்டது என்று தெரியவில்லை.நல்லவேளை, போன் ஒன்று வந்தது வினோதினிக்கு.எழுந்து சென்றுவிட்டாள்.போன் உரையாடலின் தொடர்ச்சியாக அப்படியே சைகை காட்டிவிட்டு காரில் கிளம்பிவிட்டாள்.எதற்குக் கூப்பிட்டாள்?‘விவேக் முன்பு போல் இல்லை’ என்று பேச்சை ஆரம்பித்தாள். அதற்குள் பேச்சு திசை மாறி எங்கோ சென்றுவிட்டது.விவேக் அவளிடமிருந்து திசை மாறுகிறானா?கொஞ்ச நாட்களாக என்னிடம் அதிகமாக பேசுகிறான். ஆஃபீஸ் மீட்டிங் சாக்கில் இப்போதெல்லாம் அடிக்கடி டின்னர் வெளியே.பாபு மிகவும் வருத்தப்படுகிறான். அவள் வெல் விஷர் கோமளாவும் கேள்வி கேட்கிறாள்.முன்பாவது சனி, ஞாயிறு அவனுடன் ஓரளவு செலவிட முடிந்தது.இப்போது அதுவும் குறைந்து வருகிறது.இதற்கெல்லாம் எப்படி முடிவு கட்டுவது என்று கனகாவிற்குத் தெரியவில்லை. எக்காரணம் கொண்டும் தன்னுடைய சாதாரண வாழ்க்கை ஆடம்பர வாழ்க்கையாக மாறிவிடக் கூடாதென்று உறுதியாக இருந்தாள்.அதேசமயம் தன்னுடைய திறமையை மெச்சி உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் விவேக் மற்றும் அலுவலக நண்பர்களுக்கு வேறு பட்டு விடக் கூடாது என்பதிலும் முனைப்பாக இருந்தாள்.சென்டரில் வினோதினியைப் பார்க்க வந்தவள், அவள் அவசரமாகக் கிளம்பி விட்டதால் இவளும் கிளம்ப வேண்டியதாயிற்று.ஆனாலும், அந்த விக்னேஷ்வர பண்ணையார்.அவர் ஒளியான முகம்.‘ராஜாதி ராஜ... ராஜ மார்த்தாண்ட...’ என்று முழங்க வைக்கும் கம்பீரம்.திரும்பத் திரும்பக் கரையில் வந்து மோதித் திரும்பும் கடல் அலைகள் போல அவள் மனதில் அந்த நினைவுகள் மோதின.போன் வந்தது.வினோதினி.“ரொம்ப சாரி டியர்... அவசரமான போன்... உன்ன வரச் சொல்லிட்டு பேசமுடியாம போயிருச்சு பாரு... ஒரு சின்ன ஹெல்ப்...’‘“ஐயோ அக்கா... என்ன இது ஹெல்ப் அது இதுன்னுட்டு... கட்டளையிடுங்க...’‘பதைபதைப்புடன் சொன்னாள் கனகா.“மேடம் பெரிய ஆளா ஆயிட்டீங்க... எங்களை எல்லாம் நினைவு வெச்சுக்குவீங்களா..?’‘“கடவுளே... அக்கா... என்ன அக்கா... இப்படி எல்லாம் சொல்றீங்க...இனியும் கலாய்ச்சீங்கன்னா உடனே ‘ஸீகல்ஸ்’ வேலையை ரிஸைன் பண்ணிட்டு உங்க நெட் சென்டர்ல ஜெராக்ஸ் காப்பி எடுத்துத்தர உதவியாளரா சேர்ந்திருவேன்...’‘“கனகா... என் செல்லமே... கொஞ்சம் பதவி உயர்ந்தா வேலை வாங்கித் தந்தவங்களையே வெளியே நிற்க வைக்கிற உலகத்தில் நீ ஒரு வித்தியாசமான பொண்ணு... எனக்கு உன்னோட நட்பு கிடைச்சது நான் முற்பிறவியில செய்த பாக்கியம்..!’‘வினோதினியின் குரல் தழுதழுப்பதை கனகாவால் உணரமுடிந்தது.“அக்கா... ஏதோ உதவின்னு ஆரம்பிச்சீங்க... பேச்சு திசை மாறிடிச்சு அக்கா...’‘“சாயங்காலம் கொஞ்சம் வீட்டிற்கு வர முடியுமா கனகா..?’‘“அக்கா... இது என்ன கேள்வி..? வர்றேன்கா... முகவரியை வாட்ஸ்ஆப்ல அனுப்புங்கக்கா... ப்ளீஸ்...’‘“நான் கார் அனுப்பறேனே...’‘“வேண்டாம்கா ப்ளீஸ்... நானே வந்துடறேன் கா...’‘சிலுசிலுத்துப் பெய்துவிட்டுப் போயிருந்த மழையின் ஈரம் தென்றலுடன் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தது.வினோதினி சொன்ன முகவரியை நெருங்கிக் கொண்டிருந்தாள் கனகா.அந்தச் சாலை நீண்டு வளைந்து சென்று கொண்டிருந்தது.இரு புறமும் வில்லாக்கள்.நீலநிற ரிஃப்ளெக்டர்கள் ‘ரிதம் என்க்ளேவ்’ என்ற தகவலைத் தந்தது.கார் திரும்பியதும் அந்தக் குளுகுளு சாலையில் இருபுறமும் அடர்ந்த மரங்கள் அவள் காரைப் பார்த்து கையசைத்தன. சில தாழ்வான கிளைகள் காருக்குள் இருக்கும் கனகாவைப் பார்க்க ஆசைப்பட்ட மாதிரி குனிந்து நிமிர்ந்தன.ஒரு பெரிய இரும்பு கேட்.அதன் வாசலில் சிறிய சதுரம்.கனகாவின் கார் சத்தம் கேட்டதும் அந்தச் சின்னக் கதவு திறந்தது.அதில் ஒருவன் முகம் மட்டும் தெரிந்தது. அவன் கண்கள் கார் நம்பர் ப்ளேட்டைப் பார்த்ததும் அவசரம் அவசரமாக கிறீச்சென்ற ஒலியுடன் கதவுகள் திறக்கப்பட்டன.சல்யூட் அடித்தான் கூர்கா.தோட்டம் அந்தி இருளில் மிக ரம்மியமாக இருந்தது. சிறிது தூரம் சென்றதும் மிகப் பிரமாண்டமான மாளிகை.சிலர் அவசரம் அவசரமாக கனகாவின் காரை நோக்கி ஓடிவந்தார்கள்.பணிவுடன் வரவேற்று அழைத்துச் சென்றார்கள்.கனகாவிற்கு ஒரு கணம், தான் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்பதே குழப்பமாகிவிட்டது. காரை திசை மாறி சொர்க்க லோகதிற்கு ஓட்டி வந்துவிட்டோமா என்று திகைத்து விட்டாள்.அத்தனை பேரழகு!சில நொடிகளில் வினோதினி வந்தாள்.அழகான ரோஜாப்பூ கலர் சாரி. அதில் லேசாக மினுமினுத்த ஜிகினாக்கள்.கையில்லாத ரவிக்கை.வித்தியாசமான அழகில் இருந்தாள்.அதுவும் மெத்தென்ற பச்சைநிற கார்ப்பெட்டில் அவள் ஒயிலாக வரும்போது ஏதோ மியாமியில் நடக்கும் உலக அழகி போட்டியில் ஒருத்தி நடந்து வருவது போலிருந்தது!“ஹாய் டியர்...’‘கனகாவின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.கனகாவிற்கு ஒரு கணம் உடம்பெல்லாம் சிலிர்த்தது.இவ்வளவு பெரிய கோடீஸ்வரி.எந்தவித பந்தாவும் இல்லாமல் எளிமையாக பழகுவதற்கு நிச்சயமாக ஏதோ முற்பிறப்பு பந்தம்தான் காரணம்!இறைவனுக்கும் பாபுவிற்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்.விவேக்கையும் சேர்த்துக்கொள்ளலாம்.அவன் பாபுவைத் திட்ட, அவனுக்கு சப்போர்ட்டாக வினோதினி பேச... என்னவெல்லாம் நிகழ்வுகள்!உலகம் சுழல்வதும் அது சுழல தூண்டிவிட்ட சக்தி எது என்ற மர்மமும் எப்படித் தீராமல் இருக்கிறதோ... அதுபோல் உலகத்தில் நடக்கும் சில நிகழ்வுகளுக்கும் இன்னும் காரணம் தெரியாமல்தான் இருக்கிறது!கனகாவிற்கு பேசுவதற்கு நா எழவில்லை.என்ன பேசுவது என்று தெரியாமல் திக்பிரமையில் இருந்தாள்.“என்ன கனகா... நீ கோடு போடுவாய் என்று நான் எதிர்பார்த்தேன்... ஆனா, நீயோ ரோடே போட்டு வருகிறாய். அதுவும் சாதா ரோடு அல்ல... எட்டு வழிச்சாலை..!’‘“ஐயோ அக்கா... எட்டு வழின்னாலே பிரச்னையாகிடும் அக்கா...’‘சிரித்தாள்.“எல்லாம் உங்க அன்பும் ஆசியும் அக்கா..!’‘ என்று நெகிழ்ந்த கனகா, அவளை கண்ணீர் மல்க பார்த்தாள்.‘‘ஏழேழு ஜென்மத்திலும் இந்த நன்றிக்கடனை அடைக்க முடியாது அக்கா...’‘“அட... கடவுள் சொல்றார்... கனகா நடக்கிறாள்... இதில் என் பங்கு ஒன்றும் இல்லையே...’’அப்போதும் வினோதினி அடக்கமாகவே பேசினாள்.“அக்கா... என்ன விஷயம்..? ஏன் வரச்சொன்னீங்க..?’‘“சொல்றேன்...’‘ என்ற வினோதினி, எழுந்து சென்றாள்.சில நிமிடங்களில் திரும்பினாள்.“வா...’‘ என்று கனகாவை அழைத்துச் சென்றாள்.அது ஒரு நீண்ட நடையாக இருந்தது.அந்த மாளிகை முழுவதும் ஒருவித சுகந்த மணம் பரவியிருந்தது. பல பணியாட்கள் இரவு, பகல் வேலை பார்த்தால் மட்டுமே இப்படி ஒரு நேர்த்தி சாத்தியம் என்று கனகா நினைத்தாள்.அவள் மெல்லிய கண்ணாடி இழை போன்ற வெளிர் நீலத்துணி தொங்கிக் கொண்டிருந்த அறை வாசலை நெருங்கி, திரையை விலக்கினாள்.அங்கு பிரமாண்டமான வேலைப்பாடு நிறைந்த கட்டில் ஒன்றில் ஒரு மூதாட்டி படுத்திருந்தாள்.அந்தக் கட்டிலில் எதிர்ப்புறம் மிகப்பெரிய ஓவியம்.அதைப் பார்த்ததும் அதிர்ந்தாள் கனகா.அன்று மகாபலிபுரம் ஹோட்டல் ரிஷப்ஷனில் பார்த்த மிகப்பெரிய உயிரோவியம்.விக்னேஷ்வர பண்ணையார்!.13திருநெல்வேலி செவலைபுரத்து ஜமீன்.வெள்ளைக்காரர்களுக்கு கப்பம் கட்ட மறுத்ததால் தூக்கில் போடப்பட்டது கட்டபொம்மன் என்று சரித்திரம் சொல்லிக் கொண்டு இருக்கிறது.ஆனால், சரித்திரத்தின் கண்களுக்குத் தப்பிய நிறைய ஜமீன்களும் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த நிறைய குறுநில அரசர்களும் இருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் விக்னேஷ்வரப் பண்ணையார்.‘ஜமீன்தார்’ என்று அழைக்கப்படாமல் ‘பண்ணையார்’ என்று அழைக்கப்படுவதையே விரும்பினார்.மக்களிடம் அவ்வளவு பாசமாக இருந்தார்.வருடங்கள் புரண்டன. நாட்கள் ஓடின.வெள்ளையர்கள் வெளியேற்றம், நாடு விடுதலை, நிலவரம்புச் சட்டம், பூமிதான இயக்கம் போன்றவற்றால் எல்லோரும் இன்னாட்டு மன்னர்கள் என்ற நிலை வந்து, விக்னேஷ்வரப் பண்ணையார் மக்கள் மனதில் இருந்து மறைந்தார். ஆந்திரா பக்கம் சென்ற அவர் வாரிசுகள், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டப் பிறகு சென்னைப்-பட்டணத்திற்கு வந்து விட்டனர்.அவர்களின் வாரிசுகளில் ஒருவர்தான் அனந்த கிருஷ்ணன். அவர் வழிவந்த சொந்தம்தான் வினோதினி!வினோதினியின் பாட்டிதான் கட்டிலில் படுத்திருக்கும் அனந்தலட்சுமி!மிகப்பெரிய கதையைச் சொல்லி முடித்த வினோதினி, ‘‘இவங்கதான் என்னோட பாட்டி அனந்தலட்சுமி. எங்கள் குடும்ப ராஜமாதா!’‘‘இதெல்லாம் எதற்கு இப்போது?’ என்று நினைத்த கனகா, ‘இவ்வளவு பெரிய ராஜகுடும்பத்து வினோதினி என்னிடம் ஒரு உதவி என்றாளே?’ குழம்பிப் போனாள் கனகா.பாட்டியைப் பார்த்து நமஸ்கரித்தாள் கனகா.வயது தொண்ணூறை நெருங்கிக் கொண்டிருந்தாலும் கண்களில் தீட்சண்யம் மின்னியது, மாதா அனந்தலட்சுமிக்கு! நல்ல எலுமிச்சை நிறத்தில் இருந்தாள். நெற்றியில் பட்டும் படாமலும் திருநீர்ப்பட்டை. சந்தனக் கலரில் பட்டு. மெலிந்த சருகான தேகம். தங்கமாய் மின்னியது, முதுமையினால் வற்றிய தோல். நீரில் ஊறிய அரசமரத்து இலைகள் நரம்புகள் போல அவள் மேனிச் சுருக்கங்கள்.எதற்கோ மிகப்பெரிய விஷயத்திற்காக வரச் சொல்லியிருக்கிறாள் வினோதினி என்று கனகாவால் யூகிக்க முடிந்தது!பாட்டி அனந்தலட்சுமி, கனகாவை கட்டிலிலே அமரவைத்து ஆதரவாய்த் தடவிக் கொடுத்தாள்.அதில் ஒரு கதகதப்பு தெரிந்தது கனகாவிற்கு!“வினோதினி எல்லாம் சொன்னாள் உன்னைப் பற்றி. சிலரிடமிருந்து வெளிப்படற நல்ல சக்திக்கு பிறரை வசீகரிக்கிற ஆகர்ஷண சக்தி உண்டு. அது உன்னிடம் இருக்கு. வினோ உன்னைப் பற்றி நிறையச் சொல்லுவா.பாபு எப்படி இருக்கான்..?’‘பாபுவைப் பற்றிகூட விசாரித்ததும், நெகிழ்ந்து போனாள் கனகா.அனந்தலட்சுமி தெளிவாக பிசிறில்லாமல் பேசினாள்.ராஜமாதாவின் கம்பீரம் தெரிந்தது.அத்தனை நேரமும் வினோதினி நின்று கொண்டேதான் இருந்தாள்.யாரும் வந்தால் பாட்டி முன்னால் உட்கார மாட்டாளாம்.அதைப்போல் உடை கலாசாரம்.வேலைபார்க்கும் அனைவரும் மிக அழகான உடையில்தான் இருக்கவேண்டுமாம்!வினோதினியின் அழகான வித்தியாசமான உடைக்கும் அதுதான் காரணமாம்!“வா... சாப்பிடப் போலாம்!’‘சாப்பாடு மேஜை மிகவும் பெரிதாக இருந்தது.சுழன்று கொண்டே இருந்தாலும், உதவிக்கு இரண்டு மூன்று பணிப்பெண்கள் இருந்தார்கள்.அந்த மாதிரி ஒரு விருந்து, கனகா சாப்பிட்டதே இல்லை!Ôராஜ உபசாரம்’ என்று கேள்விபட்டிருக்கிறாள்.அதை நேரில் அனுபவித்தாள்.‘நேரம் ஆகிக்கொண்டே போகிறதே... இன்னும் வினோதினி எதற்கு அழைத்தாள் என்று தெரியவில்லையே...’மனதில் யோசனை ஓடியது. எப்படியும் போக்குவரத்து நெரிசலை கடந்து போவதற்கு நள்ளிரவாகிவிடுமோ?பாபு கவலைப்பட ஆரம்பித்து விடுவானே?விருந்து முடிந்து மறுபடியும் கூடத்திற்கு வந்தார்கள்.பிரமாண்ட ஸ்க்ரீனில் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஏதோ இரு நாடுகளுக்கு இடையே ஃபைனல் கால் பந்து ஆட்டம் நடந்து கொண்டிருந்தது.“அதென்னவோ எனக்கு கால் பந்துன்னா அவ்வளவு ஆசை!’‘ என்றாள், வினோதினி.பெரிய மைதானத்தில் இருந்து பார்ப்பது மாதிரியே இருந்தது திரையின் பிரமாண்டம்!ஸ்பெஷலாக ஒளி _ ஒலி அமைப்பு செய்யப்படிருத்தது.மக்களின் குரலும் ஆரவாரமும் கனகாவின் காதருகே கேட்டதும் முதலில் திடுக்கிட்டே போனாள்.வினோதினி கால் பந்து ரசிகை என்றறிந்ததும் மேலும் வியப்புற்றாள்.சிவப்பு டிராயர், பச்சை சட்டை ஒரு அணி.கருப்பு டிராயர், மஞ்சள் சட்டை ஒரு அணி.ஆட்டம் முடியப் போகிறது போலும். கூட்டத்தினர் ஒரே ஆரவாரம்.இரு அணிகளும் சமநிலை. அப்போது ஒரு அணிக்கு பெனால்டி வாய்ப்பு.அரங்கமே நிசப்தத்தில், பெனால்ட்டி கோல் போஸ்டில் பட்டு தெறிக்க உற்சாகத்தில் கோலி துள்ள- அப்போது யாரும் எதிர்பாராமல் பந்து திரும்பித் துள்ளி கோலில் விழுந்து விட மைதானமே ஆர்ப்பரிக்கிறது.வாணவேடிக்கைகள் விண்ணை நிறைக்கின்றன!‘‘எப்படியெல்லாம் திருப்பம் ஏற்படுகிறது அக்கா..!’‘ என்றாள், கனகா.“ம்... மனித வாழ்க்கையிலும் அன்றாடம் இதையெல்லாம்விட நம்பமுடியாத திருப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது கனகா...நாம்தான் கவனிப்பதில்லை..!’‘ என்றாள், வினோதினி.“அக்கா... கிளம்பணும்கா...’‘ என்று பணிவாகச் சொன்னாள் கனகா.‘‘ஏதோ ஹெல்ப்னு சொன்னீங்களேக்கா...’‘சற்று நிதானித்து, கனகாவின் முகத்தையேப் பார்த்தாள் வினோதினி. அந்த நிமிடங்கள் யுகமாய்க் கழிந்த மாதிரி இருந்தது கனகாவிற்கு!வினோதினி நிதானமாக சொல்லத் துவங்கினாள்.சொல்லும்போது கனகாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.கடைசியில் வினோதினி சொன்னதைக் கேட்டதும், “அக்கா..!’‘ என்று அலறியே விட்டாள் கனகா.சற்றுமுன் வினோதினி, ‘மனித வாழ்க்கையிலும் அன்றாடம் நம்ப முடியாத திருப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாம்தான் கவனிப்பதில்லை!’ என்று சொன்னது நினைவிற்கு வந்தது.இதை மனதில் வைத்துதான் சொல்லியிருப்பாளோ?காலுக்கு அடியிலிருந்து பூமி நழுவுவதைப் போல உணர்ந்த கனகா, அப்படியே மூர்ச்சையானாள்..14கண்ணீரா? கடலா? என்று நினைக்கும் அளவிற்கு கனகாவின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.பாபுவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள்.“அக்கா... என்னாச்சுக்கா? ஏன்கா என்னைப் கட்டிப் பிடிச்சு அழறே...சொல்லுக்கா...’‘பாபுவும் கலங்கிவிட்டான்.“உன்னை விடமாட்டேன்டா... விடமாட்டேன்...’‘அவள் அழுகை நிற்கவில்லை.காரணம் தெரியாத பாபு, ஓடிப்போய் ஜலஜாவையும் அவள் அம்மா ரத்னாவையும் பயத்தில் அழைத்து வந்தான்.“ஏன் கண்ணூ... என்னாச்சு..?’‘ என்று ரத்னா கேட்க, பதில் இல்லை.விசும்பல் மேலும் கூடியது.“ஆன்ட்டி... அழாதீங்க ஆன்ட்டி... நீங்க எவ்வளவு பெரிய ஆள்...அழக்கூடாது ஆன்ட்டி...’‘ ஜலஜா, அவள் பங்குக்கு கனகாவின் கைகளைப் பிடித்துக் கலங்கினாள்.சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது.கனகா அவர்களைப் பார்த்தாள்.அக்கா விடாமல் அழுது கொண்டிருந்ததும் கவலைப்பட்டு பாபு ஓடிப்போய் அவர்களை அழைத்து வந்ததும் அவர்களும் ஆறுதல் கூறி கலங்கியதும் அவளை நெகிழவைத்துவிட்டது.‘‘இந்த அன்பை எல்லாம் இழந்துவிட ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்..!’‘ என்று மறுபடி விம்மத் துவங்கி விட்டாள்.ரத்னாவோ காரணம் புரியாமல் திணறினாள்.சிறிது நேரம் போனபிறகு கனகா நிதானத்திற்கு வந்தாள்.பாபுவின் தலையை வருடிக்கொடுத்தாள்.“ரத்னாம்மா... ஏதோ கவலை வந்துச்சும்மா எனக்கு... அதனாலதான் கலங்கிட்டேன்... நீங்கெல்லாம் வந்தததால தெம்பாயிட்டேன்மா..!’‘“என்ன நடந்துச்சும்மா... பாபு பதைபதைச்சு ஓடி வர்ற அளவிற்கு என்ன துயரம்... அழுகை..? இப்பவாவது சொல்லுங்கம்மா...’‘ரத்னாம்மாவை ஒரு கணம் பார்த்தாள் கனகா.பாபுவையும் பார்த்தாள்.ரத்னாவை மட்டும் தனியறைக்கு அழைத்துச் சென்று விஷயத்தைச் சொல்ல, ரத்னாவும் அதிர்ந்தாள்.“ஆ... அப்படியா... அது எப்படிம்மா முடியும்..?’‘“அத நினைச்சுதான் அழுதேன்...’‘அப்போது வாசலில் சத்தம். ஆச்சரியப்பட்டாள்!நின்று கொண்டிருந்தது சீனு.கண்களைத் துடைத்துக் கொண்டு அவனை வரவேற்றாள்.“ஹலோ... என்ன திடீர்னு இந்தப் பக்கம்..?’‘“குழந்தைகளை சிட்டி பிக்னிக் கூட்டி வந்திருக்கிறேன்... பீச், பார்க், வள்ளுவர் கோட்டம், எக்மோர் மியூசியம் இன்ன பிற... ஆமா... உங்கக்கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டு வரலாம்னு பார்த்தா... போனே எடுக்கல...’‘“ஓ மை காட்..!’‘ என்றவள், மொபைலை எடுத்துப் பார்த்தாள்.“சாரி சீனு... காலையில பூஜையில இருந்ததால சைலன்ட் மோடிற்கு மாற்றியிருந்தேன்... இப்பத்தான் பார்த்தேன்...’‘ என்றவள், தவறவிட்ட அழைப்புகளில் பலமுறை விவேக் அழைத்திருப்பது கண்டு திடுக்கிட்டாள்.அவனுடைய பி.ஏ.வும் அழைத்திருந்தாள்.‘அடக் கடவுளே!’“ஒரு நிமிடம் சீனு...’‘ என்றவள், விவேக்கிற்குப் போனை போட்டாள்.“என்ன மகாராணி... போனே எடுக்கல..?’‘“ரொம்ப சாரி சார்... சைலன்டில் போட்டுருக்கேன்... மறந்துட்டேன் சார்... என்ன விஷயம் சார்..?’‘“எல்லாம் நல்ல விஷயம்தான்... நீ அனுப்பிய கொட்டேஷன் வின்! மதுரை சுந்தராபுரம் ஸ்டீல் தூண் மேம்பாலம் நமக்கு ஆர்டராயிருச்சு... உனக்கு ஓராயிரம் கங்கிராட்ஸ்..!’’“சார்... உண்மையாகவா சொல்றீங்க..? ஒண்டர்ஃபுல் சார்..!’’“போன தரம் மிஸ் ஆனதற்குக் காரணம் டெய்சின்னு கண்டுபிடிச்சியே... கம்பெனி ரகசியத்தை கசியவிட்ட அவளுக்கு டிஸ்மிஸ் ஆர்டர் ரெடி..!’‘“சார் வேணாம் சார்... நான் வந்து பார்துக்கிறேன்...’’‘‘ஓ... பெண்ணுக்கு பெண் சப்போர்ட்டா..?’‘சிரித்தான்.“இல்ல சார்... வந்து...’‘“ஆமா... இன்னிக்கு அம்மா ஏன் லீவு... திடுதிப்புனு..?’‘ஒரு விஷயத்தால் கடுமையான மூட்அவுட் ஆகிவிட்டது என்று எப்படி அவனிடம் சொல்ல?அழைப்புத் துண்டிக்கப்பட்டது.“சாரி சீனு... பாபு... நீ போய் நல்ல ஸ்வீட்டா ஒரு கிலோ வாங்கிட்டு வா... அப்படியே காரமும்... கூல்டிரிங்ஸும்.’‘“என்ன விசேஷம்..?’‘ என்றான், சீனு.“ஒரு பெரிய கொடேஷன் வின் சீனு..!’‘ என்றவள், ரத்னாவிடம், ‘‘உடன் வேலை பார்த்தவர்... எங்க ஊர்க்காரர்தான்... தற்சமயம் முட்டுக்காடு பக்கம் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இல்லம் நடத்தி வருகிறார்..!’‘ என்றாள்.சீனு மாறாத புன்னகையுடன் ரத்னாவிற்கு வணக்கம் சொன்னான்.ஸ்வீட், காரம் என்று அமர்க்களப்பட்டது. அதே சமயம் சீனுவின் உதவிக்கு இருந்த பெண்மணி பொன்னம்மா குழந்தைகளுக்கு எல்லா இடமும் சுற்றிக்காண்பித்து விட்டு, அங்கு வந்து சேர ஒரே கோலாகலம்!தருணங்கள் இனிமையாக கழிந்து கொண்டிருந்தன.ஆனால், அது இயற்கை நியதி இல்லையே.பகல் வந்தால் இரவு வரவேண்டும். பௌர்ணமி வந்தால் அமாவாசை. இன்பம் வந்தால் துன்பம். பிறப்பு வந்தால் இறப்பு.இப்போது மகிழ்ச்சியான தருணம்.இது நீடிக்கலாமா?வாசலில் பெரிய கார் வந்து நின்றது.கையில் பெரிய பூக்கூடையுடன் இறங்கிக் கொண்டிருந்தான் விவேக்.ஒரு கணம் நடுங்கியே விட்டாள் கனகா.பாபு, சீனு... ஆதரவற்ற குழந்தைகள்...ஸ்வீட், காரம் கொண்டாட்டம்...இதை எல்லாம் பார்த்தால் பற்றி எரிந்துவிடுவானே?இந்தச் சூழலால் ஏற்படப் போகும் ஆத்திரத் தீயை அணைக்க ஒரே ஆத்மாவால்தான் முடியும்... அது வினோதினி.அவளுக்கு நான் இப்போ எங்கே போக?இப்படி விவேக் வருவான் என்று யார் எதிர்பார்த்தார்கள்?எப்படி எதிர்பார்க்க முடியும்?சொல்லிக் கொண்டா வரும் சுனாமி?சுந்தராபுரம் கொட்டேஷன் வெற்றிக்குக் காரணமான கனகாவைப் பாராட்ட வந்த விவேக், சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கு அவனால் விரட்டப்பட்ட சீனுவும் ‘அன்னக் காவடிப் பயல்’ என்று திட்டப்பட்ட பாபுவும்... மற்றும் குழந்தைகளும்...“வாங்க சார்...’‘ என்று பணிவு பாதி பீதி மீதியுமாக வரவேற்றாள்.“என்ன நடக்குது இங்க..?’‘ கண்கள் சிவக்கக் கேட்டான்.“சார்... வந்து...’‘‘‘என்ன... வந்து போயி..? ஏன் அலுவலகம் வரலன்னு கேட்டதற்கு... உடம்பு சரியில்ல அது இதுன்னு சொல்லி கப்சா விட்ருக்கே... இங்க இவனோட கொண்டாட்டம்..!’‘பொக்கேயைத் தூக்கி அடித்தான்.பூக்கள், ரத்தம் தெளித்த மாதிரி இறைந்து கிடந்தன.இவன் ருத்ரதாண்டவம் ஆடப் போகிறான் என்று தெரிந்த சீனு, சரேலென குழந்தைகளுடன் வெளியேறி விட்டான். பொன்னம்மாவும் முந்தானையால் வாயைப் பொத்தியவாறு வெளியேறினாள்.குழந்தைகளும் கிளம்பிவிட்டன. கைக்கு வந்த ஸ்வீட் வாய்க்கு வரவில்லியே என்ற ஆதங்கத்தில் கிளம்பின.நிலைமையைப் புரிந்து கொண்ட ஜலாஜாவும் ரத்தனாவும் நைசாக நழுவி விட, பாபு பின்வாசல் வழியே கிரவுண்டிற்கு கிரிக்கெட் விளையாட ஓடி விட்டான்.மயான அமைதி.“இப்போ சந்தோஷமா சார்..?’‘“உனக்குப் புத்தியே இல்லை. உன் கௌரவம் என்ன? அந்தஸ்து என்ன? நீ இப்போ சாதரண ஆள் இல்லை. மிகப்பெரிய கம்பெனி உயரதிகாரி. ஏன் இப்படிக் கண்ட கழிசடைகளுடனும் சரி சமமா இருக்கே? உனக்குன்னு ஒரு கௌரவம் இருக்குன்னு எத்தனை தரம் சொல்றது..?’‘கனகாவிற்குள் உலகத்தின் பயங்கர எரிமலையான கொலம்பியா நெவோடோ எரிமலையைவிட கொந்தளிப்பான எரிமலை உருவாகி விட்டிருந்தது.எதிரே இருப்பது மிகப்பெரிய கம்பெனியின் அதிபர்.இவள் அங்கு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அதிகாரி.அதனால் என்ன?ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் இறைவனையே கேள்வி கேட்டு எதிரில் வரவழைத்த முனிவர்கள் வாழ்ந்த நாடு.‘அந்தணர் அறவோர், பெண்கள், குழந்தைகள் தவிர அனைவரையும் எரித்துவிடு நடந்த அநீதிக்கு!’ என்று சாபமிட்ட பெண்கள் பிறந்த நாடு.விவேக் கோபமாக மறுபடியும் ஏதோ பேச வாயெடுத்தான்.“நிறுத்துங்க சார்...’‘ என்று சத்தமாகச் சொன்னாள் கனகா.அந்தக் குரலால் அதிர்ந்து போனான் விவேக்.“கனகா...’‘“போதும் சார்... நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்... ஏன் சார் ஆதரவற்றவங்ககிட்டயும் இல்லாதவங்ககிட்டயும் இப்படிக் கொஞ்சம்கூட இரக்கமில்லாம நடந்துக்கிட்டு இருக்கீங்க? சார் நான் கேட்கிறேன்...நீங்க பிறக்கும்போது நீங்களே வெளியே வந்தீங்களா? டாக்டரும் நர்ஸும் சேர்ந்துதானே உங்கள வெளியே இழுத்தாங்க? இப்ப கோட்டு சூட்டு போட்டு இருக்கீங்க... பிறக்கும்போது என்ன சார் போட்டிருந்தீங்க? நீங்க பிறக்கும்போது கோட்டு சூட்டு போட்டு பிறக்கலன்னு உங்க அம்மா உங்கள தூக்கி எறிஞ்சிட்டாங்களா? ஏன் சார் இப்படி நடந்துக்கிறீங்க..?இந்த உலகம் பணத்தாலும் வறட்டுக் கௌரவத்தாலும் பின்னப்படவில்லை சார். அன்பாலும் பாசத்தாலும் சூழப்பட்டது. அதைப் புரிஞ்சிக்கோங்க!’’“கனகா... நீயா இப்படிப் பேசறே? நான் மிகப்பெரிய தொழிலதிபர்..!’‘“முதல்ல எல்லோரும் மனிதன். பிறகுதான் மற்றதெல்லாம்... உயிர் போச்சுன்னா உடலுக்கு மதிப்பில்லை. மனிதம் செத்ருச்சுன்னா மனிதனுக்கே உயிரில்லை சார்.’‘கனகாவின் ருத்ர தாண்டவத்தால் கொதித்துப் போனான் விவேக். அவன் வாழ்நாளில் இதுபோன்று அவனிடம் யாரும் இதுவரை பேசியதில்லை.காரை வேகமாக எடுத்தான்.அந்த வேகம் மின்னல் வேகத்திற்கும் அதிகமாக இருந்தது.அதனால்தானோ என்னவோ சில நொடிகளில் இடி மாதிரி டமார் என்ற சத்தம்... கனகா வெளியே ஓடி வந்தாள்.அங்கு அவள் கண்ட காட்சி, ரத்தத்தை உறைய வைத்தது.“கடவுளே..!’‘ என்று அலறிவிட்டாள்..15அந்தப் பிரமாண்டமான ஆஸ்பத்திரியின் வாசலில் வெற்றி விநாயகர்தான் எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்.வருபவர்கள் வேண்டுதல்களையும் நன்றிகளையும் சமர்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்.உண்மையோ பொய்யோ, இருக்குதோ இல்லையோ இந்த மனித உலகமே ‘நம்பிக்கை’ என்ற அச்சில்தானே சுழன்று கொண்டிருக்கிறது... கனகா வேகமாக நுழைந்தாள். எங்கும் ஒருவித சுகந்த வாசனை!ஸ்ட்ரெச்சர்களின் ஒலியும் மனிதர்களின் பரபரப்பான குரலும் ஆஸ்பத்திரியை நிறைத்திருந்தன.‘எனக்கு அதிர்ஷ்டமே இல்லை!’ என்று வீட்டிற்குள் இருந்து புலம்பிக் கொண்டிருக்கும் புண்ணியக்கோடிகள் ஆஸ்பத்திரிக்கு வந்து, இந்தக் காட்சிகளையெல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே ஐ.சி.யூ.வை நோக்கி வேகமாக நடந்தாள் கனகா.அங்கு ஏற்கெனவே வினோதினி கண்ணீர் மல்க காத்திருந்தாள்.“விவரம் தெரியவில்லை கனகா... என்னாச்சு... நீதான் சொல்லணும்...’’ என்றாள், கிசுகிசுப்பாய்க் கலங்கிய குரலுடன்.விவேக் சில காரணங்களால் கோபமுற்று வேகமாக காரை எடுத்துப் போகும்போது தெரு முனையில் ஜல்லி ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த லாரி, காரில் மோத விபத்து. லாரி டிரைவர் தப்பித்து விட்டானாம். தேடிக் கொண்டு இருக்கிறார்களாம்.கனகா சுருக்கமாகச் சொன்னாள்.வினோதினி மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.சில தினங்களில் விவேக் ஐ.சி.யூ.வில் இருந்து ஸ்பெஷல் வார்டிற்கு மாற்றப்பட்டான்.அந்த நாட்களில் கனகாதான் சீஃப்பாக இயங்கினாள்.அவள் எடுத்த முடிவுகளும் தீர்மானங்களும் பலத்த வரவேற்பைப் பெறவே அனைவரும் விரும்பும் தலைவியாகிவிட்டாள்.கடைநிலை ஊழியர்களுக்காக ஒரு மீட்டிங் போட்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனே பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஒரே மகிழ்ச்சி வெள்ளம். விவேக் இருந்தபோது இதெல்லாம் பகல் கனவு.விவேக்கின் உடல்நிலை சீராகி வந்தாலும் தோள்பட்டை எலும்பு முறிவு, காலில் ஜவ்வு கிழிந்ததால் பிரச்னை போன்றவை அவனை மேலும் சில மாதங்கள் கட்டிலில் கிடத்திவிட்டன.வினோதினி அருகே இருந்து கவனித்துக் கொண்டாலும், அவன் அடிக்கொருதரம் Ôகனகா... கனகா...’ என்று கேட்டுக் கொண்டிருந்தான்.கனகாவிற்கோ நினைத்துப் பார்க்க முடியாதபடி வேலை டென்ஷன். தினமும் பாபுவை வரச் சொல்லி விடுவாள். அவன் திரும்ப வரும்போது கூட வருவான்.இரவு ஒரு மணிகூட ஆகிவிடுகிறது.விவேக் தேறி விட்டாலும், படுக்கைதான்.வினோதினி பொறுக்க முடியாமல் போனைப் போட்டாள்.“கனகா... இன்னிக்கு எப்படியாவது ஒரு விசிட் வந்துரும்மா... விவேக் நச்சரிக்கிறார், தாங்கல...’‘“அக்கா... இன்னிக்கு நிச்சயம் அக்கா...’‘ என்றவள், சாயங்காலம் ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள்.இவளைப் பார்த்ததும் எழ முயன்றான்.அமர்த்தினாள்.“சாரி சார்... அன்னிக்கு என்னாலதான்...’’அவள் வாயைப் பொத்தினான் விவேக்.‘‘நோ... நான்தான் காரணம். நான் ஒரு முட்டாள்...’‘ என்றவன், சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.பிறகு சொன்னான்:“நல்லது... இங்கு இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு.. என்னப் பார்க்க வினோதினியும் நீயும்தான்...’‘“சார்... அப்படில்லாம் சொல்லாதிங்க சார்...’‘“ஆம். நான் ஒரு அனாதை. அன்னிக்கு அந்த ஓட்டலில் பார்த்தியே. விக்னேஷ்வர பண்ணையார். அவர் ஜமீனில் வேலை பார்த்தவர்கள் என் மூதாதையர்கள். நாங்கள் வேலை பார்ப்பவர்கள் வம்சம்... எப்படி வினோதினி சென்னையில் வந்து செட்டில் ஆனார்களோ நாங்களும் சென்னையில் செட்டில் ஆனோம்... செவலைபுரம் சமூகம் பற்றி யாராவது இருக்கிறார்களா என்று நெட்டில் தேடியபோது, பள்ளிப்படிப்பை முடித்து மேற்கொண்டு படிக்க காசு இல்லாமல் கூடுவாஞ்சேரியில் ஒரு சின்ன கம்பெனியில் வேலை செய்து, அப்பா, அம்மாவுடன் சிரமமாக நாட்களை கடத்திக் கொண்டிருந்த என்னை கண்டுபிடித்த வினோதினி... அறிமுகமாகி நட்பாகி என் தரத்தை உயர்த்தி படிக்க வைத்து இன்று ஸீகல்லுக்கு சி.ஈ.ஓ.!ஒண்ணு சொல்லட்டுமா... இந்தக் கம்பனியே அவளுக்குச் சொந்தமானது!’‘“என்ன சொல்றீங்க சார்..?’‘ அதிர்ந்து கேட்டாள்.“சார்... வினோதினி அவ்வளவு பெரிய ஆளா சார்... நம்பவே முடியலை சார்.’‘“அவள்... தங்கம்... வைரம்... வைடூரியம்... இன்னும் உனக்கு என்னனெல்லாம் தோணுதோ அத்தனையும் சேர்த்துக்கோ கனகா...’‘‘பின்ன ஏன் சார் அவள அவாயிட் பண்ணிட்டு இப்ப என்ன...’ கேட்க நினத்தாள். வாயைத் திறக்க முடியுமா என்ன?“சார் பேசியது போதும்... ரெஸ்ட் எடுங்க...’‘பேசிக்கொண்டிருக்கும்போதே, “அம்மா... தலை வலிக்குதே... ஐயோ... தாங்க முடியலையே... அய்யோ...’‘கைகளினால் தலையைப் பிடித்துக் கொண்டு பயங்கரமாக அலறினான் விவேக்.கனகா கலவரமாகி, எமர்ஜென்ஸி பெல்லை அழுத்தவும், செவிலியர்கள் ஓடி வந்தார்கள்.அவர்கள் அவசரம் அவசரமாக ஒரு மருந்தை ட்ரிப்ஸில் ஏற்ற சில நிமிடங்களில் அமைதியானான் விவேக்.“கனகா... என்னை மன்னித்து விடு... விபத்து நடந்த அன்று அந்த லாரி வேகமாக வந்தபோது எமனே வந்துவிட்டான் என்று நினைத்தேன்.ஷணத்தில் வந்த உயிர்பயத்தில் நான் செய்த தவறுகள் தெரிந்தன. இறைவா என்னை மன்னித்து விடு என்று அலறியது வரை நினைவிருக்கிறது...’‘அவன் பேசுவதை அவள் நிறுத்த நினைத்தாள். முடியவில்லை. அவன் தொடர்ந்தான்.“ ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’னு நினைப்பாங்க... ஆனா, இளமையில் நான் ஏழ்மையால் பட்ட துன்பத்தால் ஏழைகளையும் இல்லாதோரயும் வறியவர்களையும் வெறுக்க ஆரம்பித்தேன்.’’திடுக்கிட்டாள் கனகா.‘அபாரோபோபியா’!ஏழைகளையும் வறியவர்களையும் கண்டால் வெறுப்போ எரிச்சலோ வந்தால் வரக்கூடிய மன வியாதிக்குப் பெயர்!“கனகா... விபத்திற்குப் பிறகு மரணத்தின் பயமும் உயிரின் நிதர்சனமும் தெரிந்துவிட்டது. நான் உன்னுடைய தம்பி பாபு, நம் ஊழியர் சீனு... இன்னும் பலர்... அவர்களிடம் மனம் திறந்த மன்னிப்பு கேட்கிறேன்... அழைத்து வா... மன்னிப்பார்களா கனகா..?’‘“அவர்களுக்கு மனதில் ஒன்றும் இல்லை சார்... சொல்லப்போனா...அன்னிக்கு அவசரத் தேவைக்கு உடனே உங்களுக்கு ரத்தம் கொடுத்தது சீனு..! வினோதினிக்கு வலதுகையா இருந்து ஓடி ஓடிபோய் மருந்து, மாத்திரை வாங்கித் தந்தது... சாப்பிடாமல் இருந்த வினோதினிக்கு கேன்டீனில் போய் சாப்பாடு, காஃபி, டீ... எல்லாம்- கூடவே இருந்து வாங்கிக்கொடுத்து, ஒரு தாய் மாதிரி அவங்களைச் சாப்பிடச் செய்தது எல்லாமே பாபுதான். என்னால் ஆஃபீஸை விட்டு நகரமுடியவில்லை..!’‘படுத்திருந்த அவனுடைய கண்களில் நீர் புறப்பட்டு, காதுகள் வழியாக வழிந்து, தலையணையை நனைத்தது.கனகா மௌனமாக இருந்தாள்.பாபு, சீனுவின் மீது அவனுக்கிருந்த வெறுப்புகள் அது மாதிரியான எரிச்சல்கள் எல்லாம் கண்ணீர் வழியாக கரைந்து, அவனிடமிருந்து வெளியேறி விட்ட மாதிரித் தெரிந்தது!புத்தனைப் போல் போதிமரம் தேவையில்லை மனிதனுக்கு! இந்த மாதிரி சம்பவங்களே போதும்!சட்டென்று அவன் குரல் தாழ்ந்தது.ஏதோ சொல்ல வருவதும் தயங்குவதும் தெரிந்தது.‘‘சொல்லுங்க சார்...’‘ என்றாள், கனகா.‘‘உங்கிட்ட ஒண்ணு சொல்லப் போறேன்...’‘தயங்கினான்.கனகாவிற்குக் கவலை வந்தது.‘ஒன்று கிடக்க ஒன்று கேட்டு விடுவானோ?’ஏற்கெனவே வினோதினி அவளிடம் வைத்த கோரிக்கைக்கு இன்னும் பதில் அளிக்காமல் அழுதுகொண்டிருக்கிறாள்.“சொல்லுங்க சார்...’‘ என்றாள், மறுபடியும்.சட்டென்று அவள் கையயைப் பிடித்துக் கொண்டான் அவன்.அவள், சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை.தொடர்ந்து மிகப்பெரிய இடி, அவள் தலையில் விழுந்தது.“கொஞ்ச நாட்களாகவே... அதாவது, நீ வந்ததில் இருந்து மனதில் மிகப்பெரிய மாற்றம். அதுவும் இப்ப விபத்திலிருந்து தப்பித்தப் பிறகு என்னுடைய மனது என் நிலையில் இல்லை. காரணமும் புரியவில்லை...’’ என்றவன்-, நிதானித்து-...“ஐ லவ் யூ கனகா..!’’ என்றான்.சட்டென்று அவனிடமிருந்து கையை உருவிக் கொண்டாள் அவள்.மேனி, கிடுகிடுவென வியர்த்தது. .16மனம் என்பது ஒரு மாயக்கண்ணாடி!கண்ணாடிக் காட்டுவது போல் இருப்பதைக் காட்டாது.ஒருவனைப் பார்த்து நல்லவனாகக் காட்டும். அவன் தீயவனாக இருப்பான்.மற்றவனைத் தீயவனாகக் காட்டும். அவன் அப்பாவியாக இருப்பான்.இதனால் வரும் பிரச்னகளால்தானே உலகமே அல்லாடிக் கொண்டிருக்கிறது. புரிதல் என்று வருகிறபோது எல்லாம் தலைகீழாகப் புரிந்து கொண்டிருப்பது புரிகிறது.சீனுவை அவள் புரிந்துகொண்டதற்கும் மேலாக நல்லவனாக இருந்தான். தனக்கு வரும் தோல்விகளையும் அவமானங்களையும் தாங்கிக்கொள்வதும், மனிதாபிமானத்தோடு இயங்குவதும், கௌரவம் பார்க்காமல் உழைக்கத் தயாராக இருப்பதும் எத்தனையோ நல்ல விஷயங்கள்!எப்போதிலிருந்து என்று தெரியாது... அவனிடமிருந்த ஒரு வசீகர வித்து, அவள் மனதுள் விழுந்து, விருட்சமாகிக் கொண்டிருந்ததை உணர்ந்தாள்!அடுத்தது வினோதினி!கனகாவின் அப்பா கார்த்திகேயன், அம்மாவைக் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஊரில் ஒதுக்கி வைக்கப்பட, சென்னைக்கு வந்தார். எப்படியோ தட்டுத் தடுமாறி ஒரு மெட்டல் கம்பெனியில் சேர்ந்து வேலைபார்த்து... அம்மா சில வீடுகளுக்குச் சென்று சமையல் செய்து, அப்பா கம்பெனி விபத்தில் போய்விட, அம்மாவின் பொறுப்பு மேலும் அதிகரிக்க, கனகானையும் பாபுவையும் அவள் வளர்க்க பட்ட பாடு. கனகா சற்று பெரியவளானதும் திடீரென்று படுக்கையில் விழுந்தாள் அம்மா. மெலிந்து கொண்டே போய் என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாமலே போய்விட்டாள்.அப்பாவின் கம்பெனி பணம், அம்மாவின் சேமிப்பு என்று எப்படியோ சமாளித்து வரும்போதுதான் ‘வினோதினி’ என்ற அதிர்ஷ்ட தேவதை கனகாவின் வாழ்க்கையையே மாற்றி விட்டாள்.அவளுக்கு துரோகம் செய்யலாமா?ஆனால், வினோதினிக்கு விவேக் துரோகம் செய்வது மாதிரி டக்கென்று சொல்லிவிட்டானே!‘ஐ லவ் யூ கனகா!’நினைத்தவுடன் மறுபடி நடுங்கியது உடம்பு.‘ஐயோ விவேக்... நான் சீனுவை லவ் பண்றேன். வினோதினி உன்னை லவ் பண்றா... இதெல்லாம் எப்படி சாத்தியம் விவேக்?’கத்த வேண்டும் போலிருந்த்து.ஆனால், இவன் வினோதினியிடம் குறிப்பால் உணர்த்தியிருக்கிறான்.இல்லாவிட்டால் அவள், ‘இப்பல்லாம் விவேக் என்னிடம் ரொம்ப கலகலப்பாக பேசறது இல்ல...Õ என்று சொல்லியிருப்பாளா?இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது?விவேக் என்னுடைய சூப்பர் பாஸாகவும் அல்லவா இருக்கிறான்?“மேடம்... உங்களப் பார்க்க வினோதினிங்கிறவங்க வந்திருக்காங்க...’‘பி.ஏ., போன் பண்ணியதும் படபடப்பாக எழுந்தாள் கனகா.‘அவங்க இந்தக் கம்பெனியின் ஓனர்... யாருக்காவது தெரியுமா?’மனதுள் பரபரத்துக் கொண்டே ரிசப்ஷனுக்கு வந்தாள் கனகா.“ஐயோ... எம்.டி., அம்மா கீழே வருவதா?’‘ சிரித்தாள், வினோதினி.‘‘முதலாளி அம்மாவே ரிசப்ஷனில் இருக்கும்போது நான் வரக்கூடாதா..?’‘ கிசுகிசுத்தாள், கனகா அவள் காதில்.அறைக்கு அழைத்துச் சென்றாள்.“நல்ல முன்னேற்றம் விவேக் உடல்நிலையில். அதற்குக் காரணம் நீதான் கனகா.’‘“என்ன... நானா..?’‘“யெஸ்... விவேக் இந்தக் கம்பெனியை அப்படிக் கட்டிக் காத்து வளர்த்து வருகிறார்... நீ அவர் கம்பெனியில் இல்லாத குறையை நீக்கியதுமல்லாமல் அவர் எட்டடி பாய்ந்தால் நீ பதினாறு அடி பாய்ந்து... இப்ப மார்க்கெட்டில் நம்ம ஷேர் மதிப்பு ஜிவ்... அதுவே அவர் உடல்நலத்தை விரைவாக குணமாக்கிவிட்டது..!’‘“அக்கா... நான் எதுவுமே செய்யவில்லை. என்னைப் படைத்த ஆண்டவன் என்னைச் சோதிச்சான். ஆனா, கைவிடவில்லை அக்கா...’‘“சரி, நான் வந்த விஷயம் ரொம்ப முக்கியமானது... தனிப்பட்ட விஷயம்.’‘வினோதினியின் முகம் சீரியஸானது.பாபுவின் விஷயத்தைக் கேட்பாளோ?இன்னும் முடிவெடுக்கவில்லையே. அதற்கான மனத்திராணி இல்லையே.மறந்திருந்த கவலைகள் மறுபடி வருகிறதே...‘‘விவேக் இப்பல்லாம் சுத்தமாக என்னைப் பொருட்படுத்தி பேசுவதில்லை.ஆனா, உன்னைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார்... உன்னிடம் ஏற்கெனவே சொன்னதுதான்...’‘கனகா திடுக்கிட்டாள். மௌனமாக இருந்தாள்.விவேக் அவள் கையைப் பிடித்து ப்ரபோஸ் பண்ணிவிட்டானே? ஷண நேரத்தில் பல நாட்களாய் காதலித்தவளை தூக்கி எறிந்து விட்டானே?ஆண் மனசு என்பது பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறாள்.ஆனால், கண்கூடாகப் பார்க்கிறாள் கனகா.“என்ன கனகா... விவேக் பற்றி சொல்லும்போதெல்லாம் மௌனம் காக்கிறாய்..? என்னை அவர் பொருட்படுத்துவதில்லை என்று சொன்னேன்... அதுக்கு ஏதாவது பதில் சொல்லு...’‘‘‘அக்கா... எனக்கு என்ன சொல்வதென்றே தெரியலைக்கா... அவர் எங்கிட்ட...’‘ அதை எப்படிச் சொல்வது என்று தயங்கிக் கொண்டிருந்தபோது கைகொடுத்தார் கடவுள்.பி.ஏ.விடமிருந்து போன்.“சரி, வரச் சொல்லுங்க...’‘கதவு திறந்தது. டெய்சி வந்தாள்.“மேடம்...’‘ என்று தழுதழுத்தவாறே கனகாவின் கால்களில் விழப்போக, அவளை நிமிர்த்தி, தழுவிக் கொண்டாள் கனகா.“நான் மிகப்பெரிய தவறு செய்தும் என்னை மன்னித்து என்னை வேலையில் சேர்த்துகிட்டீங்க... இந்தப் பாவி இந்த உதவிய வாழ்நாளில் மறக்க மாட்டேன் மேடம்...’‘“டெய்சி... என் ஆட்களை விட்டு உன் வீடு குடும்பம், சூழ்நிலை எல்லாம் விசாரித்தேன்... நீ நல்ல குடும்பத்து பெண். வீட்டில் அப்பா, அம்மா இருவரும் படுக்கையில். பயங்கர வறுமை. இதைப் பயன்படுத்தி உன்னை உன் நண்பர்கள் உனக்கு பணத்தாசை காட்டி ரகசியத் தகவல்களைக் கேட்க, ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என்ற நிலையிலிருந்த நீயும் அதற்கு உடந்தை யாகிவிட்டாய்.வறுமையும் இல்லாமையும் கொடிது. அந்த வறுமையைப் பயன்படுத்தித்தானே உலகத்தில் தீமைகளும் தீவிரவாதங்களும் வளர்கின்றன.அப்பாவிகள் குற்றவாளிகளாகிறார்கள். தவறு செய்வது மனிதன் இயல்பு. அதை மன்னித்து மறப்பது மனிதப் பண்பு... போம்மா.. உனக்கு வேற செக்ஷன் போட்டிருக்கேன்.’’ அவள், கண்களைத் துடைத்துக் கொண்டே சென்றாள்.“இங்கதான் கனகா நீ நிக்கிற... உன்னோட அப்ரோச் ஒண்டர் ஃபுல். இந்த குணம் எல்லாம் என்னோட ஆளுக்குச் சுட்டுப் போட்டாலும் வராது..!’‘ டெய்சி போனபிறகு வினோதினி சொன்னாள், அவளிடம்.மறுபடியும் தடக்கென்றது கனகாவிற்கு.‘என் ஆளுக்குச் சுட்டுப் போட்டாலும் வராது’இவளிடம் எப்படிச் சொல்வது?விவேக் இவளுடைய கையைப்பற்றி, “ஐ லவ் யூ கனகா!’’ என்று சொன்னதை.வினோதினிக்கு போன்.பேசியவள் முகம் மாறியது.“சரி... வர்றேன்...’‘ என்று அவசரமாகக் கிளம்பினாள்.“என்னக்கா..?’‘“விவேக் மறுபடியும் தாங்கமுடியாத தலைவலியால் துடிக்கிறாராம்... கேர்டேக்கர் ஸ்டெல்லா ஆஸ்பத்திரியிலிருந்து போன் பண்ணாங்க...’‘ என்று கிளம்பியவள், சட்டென்று திரும்பி வந்து,‘‘கனகா... சீக்கிரம் முடிவெடும்மா... பாபு விஷயத்துல... பாட்டிம்மா கேட்டுட்டே இருக்காங்க...’‘போய்விட்டாள்.அவளுக்கு அழுகை வந்துவிட்டது.அடக்கடவுளே... மறக்கவில்லையா இவள்?வாயைப் பொத்திக் கொண்டாள். அலுவலகம் என்பதால் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.யாரிடம் கேட்பது?அவள் உறவு உலகம் மிகச் சிறியது.அவள் சென்னை வந்ததிலிருந்து அவளுக்காக இரண்டு பேர். கோமளா, ரத்னா. இதுவே அவள் உலகம்.இப்போது சீனு.சட்டென்று மின்னலாய் ஒரு ஐடியா!‘ஏன் சீனுவிடம் ஆலோசனை கேட்கக் கூடாது?’அப்படியே தன் மனதையும் அவனிடம் சொல்லிவிடலாம்.இங்கு விவேக் பிரச்னை நெருக்க ஆரம்பித்துவிடும் போலிருக்குது.அவசரம் அவசரமாய்க் கிளம்பினாள்.களைப்புத் தெரியவில்லை.புலி துரத்துவது உணவுக்காக.புள்ளிமான் ஓடுவது உயிருக்காக!சீனுவிற்குப் போன் செய்தபோது சந்தோஷமாகப் பேசினான்.அதிர்ஷ்டம் அவள் பக்கம் இருந்தது.அவன் குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் வாங்குவதற்கு மயிலாப்பூர் வந்திருக்கிறானாம்.ஹோட்டல் ஸ்வஸ்திகாவில் டின்னர் வெச்சுக்கலாம் என்று சொன்னதும் சந்தோஷமாய் ஒப்புக் கொண்டான். அவனிடம் அவளுக்குப் பிடித்த விஷயமே இதுதான். அனாவசியமாக பந்தா பண்ண மாட்டான். அதே சமயம் வேண்டாம் என்றால் வேண்டாம்தான்.நடிக்கமாட்டான். இந்த உலகத்தில் பாதிபேர் நடிக்கிறார்கள். வள்ளலார் சொன்னதுபோல், ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்’ என்பதைக் கடைப்பிடித்தால் நட்பில் யாரும் தேற மாட்டார்கள் போலிருக்கிறதே.‘எதுக்கு சார் இன்விடேஷன் எல்லாம்? வாட்ஸ்ஆப்பில் அனுப்புங்க...’’ என்பார்கள்.பிறகு நண்பர்களிடம் போய், ‘‘கொஞ்சம்கூட மரியாதை இல்லாம நேரில் அழைக்காம வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். நானா போவேன்?’‘ என்று பெருமை அடிப்பார்கள்.“காஃபி சாப்பிடறீங்களா?’’ என்று கேட்டால், ‘‘நோ சார்... தாங்க்ஸ்..இப்பத்தான் சாப்பிட்டு வறேன்!’’ என்று சொல்லிவிட்டு, வெளியே போய், ‘‘சரியான கஞ்சன். ஒரு பேச்சுக்கு சொன்னால் காஃபியே தரல!’‘ என்பான்.சீனு அப்படியல்ல. உள்ளத்தில் உள்ளதை அப்படியே வார்த்தைகளில் சொல்லுவான். அதனாலேயே அவனிடம் மனம் விட்டுப் பேசுவாள்.ஹோட்டல் ஸ்வஸ்திகா.ஒரு அரையிருள் டைனிங் ஹால். கேண்டில் ஒளி மாதிரி லைட்டுகள் மேஜைக்கு அருகே தொங்கிக் கொண்டிருந்தன.“மெனு கார்டை படிப்பதற்கே மொபைல் டார்ச்சை ஆன் பண்ணணும் போலிருக்கே...’’ சிரித்தான் சீனு.“மேடம்... பெரிய ஹோட்டல். என் கையில் அவ்வளவு காசில்லே...’‘ சிரித்தான்.“நான்தானே உங்களைக் கூப்பிட்டேன்..?’‘“இருந்தாலும்... என் நண்பன் யாரும் என்னைக் கூப்பிட்டாலும் அவனே பே பண்ணினாலும் என்னிடம் ரிசர்வ் இருந்தாத்தான் ஒத்துப்பேன்...உங்ககிட்ட விதி விலக்கு..!’‘‘‘சரி, தேங்க்ஸ்... ஒரு வேண்டுகோள்...’‘“சொல்லுங்க...’‘“இந்த மேடம் நீங்க நாங்க போடறதல்லாம் விட்றணும்...’‘“ஏனாம்..?’‘ என்று கேட்கும்போதே அவனுடைய மொபைல் ஒலிக்க, வேகமாக வெளியே எடுத்தான்.அப்போது ஒரு விசிட்டிங் கார்டு மாதிரி வெளியே விழுந்தது.அவன் கவனிக்காமல், டவர் கிடைக்காத்தால் வெளியே எழுந்து போனான். கனகா அதை எடுத்தாள்.திடுகிட்டாள். மனது படபடத்தது. சிலிர்த்தது.அது அவள் போட்டோ!மழை மேகம் விலகி, பளீரென சூரியன் சிரிக்கும்போது மனதில் ஒரு புத்துணர்வு வருமே... அந்த உணர்வு ஏற்பட்டது கனகாவிற்கு.பழம் நழுவி பாலில் விழுந்தே விட்டது!அதே சமயம் சீனு, பேசி முடித்து விட்டு வந்தான்.சட்டென்று கனகாவின் கையிலிருந்த படத்தைப் பார்த்து விட்டான்.“ஓ மை காட்... கீழே விழுந்துருச்சா..?’‘ என்றவன், போட்டோவை மெல்ல வாங்கினான். வேறு ஒருவனாக இருந்திருந்தால், அசடு வழிந்து அப்படி இப்படி என்று கம்பிக் கட்டியிருப்பான்.“நெட்லேருந்து உங்க போட்டோவை எடுத்தேன். உங்கள் நிர்வாகத் திறமை, பிரச்னைகளை அணுகும் விதம் எல்லாமே பிடிச்சிருக்கு. போதாக்குறைக்கு உங்க அழகு. ‘கொடி அசைந்ததும் காற்று வந்ததா... காற்று வந்ததும் கொடி அசைந்தாதா...’ என்பது மாதிரி நீங்க திறமையால அழகா, அழகா இருப்பதால திறமையா இருக்கீங்களான்னு தெரியல. எப்படியோ என்னோட இதயத்திற்குப் பக்கத்தில எப்பவும் நீங்க..!’‘சிரித்தான்.அவளுக்கு அப்படியே வானத்தில் பறப்பது போலிருந்தது.அவன் இயல்பான பேச்சும் அவனிடம் இருந்த மன உறுதியும் அவனிடம் அவள் எடுத்த முடிவு, அக்மார்க் முத்திரை முடிவு என்று தெரிந்து சந்தோஷப்பட்டாள்.அப்போது பேரர் வந்தார். “எதுவும் கேட்காதப்பா. முதல்ல ஒரு ஸ்வீட் கொண்டா...’‘ என்று அனுப்பிவிட்டான். குற்றாலச் சாரல் மாதிரி இருவர் மனதிலும் சிலுசிலு!அவளுக்கு வியப்பு!எப்படி அவள் எண்ணத்தையும் புரிந்து கொண்டான்?ஸ்வீட், கோபி 65, காளான் சூப், வெஜ் பிரியாணி, பட்டர் நாண், மலாய் கோஃப்தா என்று டின்னர் அமர்க்களப்பட்டது.“தம்பியையும் கூட்டி வந்திருக்கலாம்... வருங்கால மச்சினன் ஆச்சே?’’ என்றான்.“ஆஹா..! அதுக்குள்ள வருங்கால மச்சினன் மீது பாசம் வந்துருச்சா..?’‘ சிரித்தாள்.சட்டென்று நிலவை மேகம் மறைத்த மாதிரி முகம் மாறிவிட்டது.“என்னாச்சு கனகா..?’‘ என்றான், புரிந்து கொண்ட சீனு.“அவன் விஷயமாத்தான் உன்கிட்ட ஐடியா கேட்கலாம்னு வந்தேன்..காரணம், இந்த உதவி கேட்பவள் என் ஆருயிர் வினோதினி... என் வாழ்நாளெல்லாம் அவள் செய்த உதவிக்கு கடன்பட்டிருக்கும் வினோதினி.’‘“என்ன உதவி கனகா..?’‘“அதை எப்படிச் சீனு சொல்வேன்... அவனைத் தத்து கேட்கிறா!’‘“என்ன..?’‘ அதிர்ந்தான் சீனு.“ஆமாம் சீனு... உங்களுக்கே இப்படின்னா எனக்கு எப்படி இருக்கும்? என் உயிர் அவன்..! தசரதனிடம் கைகேயி கேட்ட வரத்தை விட மிகக் கொடுமையான வரம் இது சீனு...’‘சீனு அமைதியாக யோசித்தான்.பாபு மீது கனகா வைதிருக்கும் அன்பை அவன் அறிவான்.“ஜமீன் பரம்பரைக்கு ஆண் வாரிசு இல்லையாம். ‘பாபுவைப் பற்றிக் கவலைப்படாதே... அவன் ராஜா..!’ என்கிறாள் வினோதினி.’‘‘‘கவலைப்படாதே கனகா... ஒரு நிமிடம்...’‘ என்றவன்,பாபுவின் பிறந்த தேதி முதலியவற்றைக் கேட்டான்.மொபைலில் எதையோ தேடினான்.“ஒண்டர்ஃபுல்!’‘ என்று கனகாவிற்குக் கைகொடுத்தான்.“பாபுவிற்கு ராஜயோகம் இருக்கு!’‘“என்ன சொல்றே சீனு? உனக்கு ஜாதகம் பார்க்கத் தெரியுமா?’‘சிரித்தான்.“வாழ்த்துகள் கனகா. பாபுவிற்கு லக்னாதிபதி வலுவா இருக்கு. உச்சமா இருக்கு. ஐந்தாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் பாக்ய ஸ்தானத்துல இருக்கு. பாபு அரசனாகிறான்..!’‘கனகாவிற்குக் காதுகளை நம்ப முடியவில்லை.‘கடவுளே... அப்படியென்றால்..?’“அதைத் தடுக்க முடியாது கனகா... பாருங்களேன்... நீங்க வேண்டாம்னு சொல்லமுடியாது...’‘அவள் கண்களில் இருந்து கண்ணீர்.‘ஒரு கண்ணிற்கு சுண்ணாம்பு ஒரு கண்ணிற்கு வெண்ணெய் வைக்கிறான்’ என்று கேள்விப் பட்டிருக்கிறாள்.ஆனால், இன்று அவள் ஒரு கண்ணில் இருந்து பன்னீரும் ஒரு கண்ணில் இருந்து வென்னீரும் வந்து கொண்டிருந்தது.அவளுக்கு உடனே கிளம்பி பாபுவைக் கட்டிப்பிடித்து அழவேண்டும் போலிருந்தது.சீனுவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.இன்னும் பலவித அதிர்ச்சிகள் அவளுக்குக் காத்திருக்கிறது என்று அறியாமல்.மறுநாள் ஞாயிறு. வசதியாகப் போயிற்று.கோமளா, ரத்னாம்மாவுடன் கிளம்பிவிட்டாள் கனகா, முட்டுக்காட்டிற்கு, வினோதினியைப் பார்க்க.பாபு விஷயமாக பேசி, வினோதினியின் மனதை மாற்ற வேண்டும்.“அப்ப நாங்க..?’‘ என்று ஆவலாய் வழி மறித்தார்கள் ஜலஜாவும் பாபுவும்.“நீங்க இல்லாமலாடா தங்கங்களா..?’‘ என்று அவர்களையும் காரில் ஏற்றிக் கொண்டாள்.வினோதினியிடம் எப்படியாவது பாபு விஷயத்தில் மறுத்துவிடுவது என்று திட்டம்.ஆதரவுக் குரலுக்குத்தான் கோமளாவும் ரத்னாவும்.பங்களாவில எல்லோரையும் சந்தோஷமாக வரவேற்றாள் வினோதினி.பாபுவையும் ஜலஜாவையும் ஏற்கெனவே தெரியும். தோட்டக்காரரைக் கூப்பிட்டு இருவரையும் சுற்றிக் காண்பிக்கச் சொன்னாள். அப்படியே நீச்சல் குளத்திலும் விரும்பினால் நீச்சலடிக்கட்டும் என்று குஷியுடன் அவர்களை தட்டி அனுப்பினாள்.“வாங்க...’‘ என்று அழைத்துச் சென்றவள், பெரிய அறையில் உட்கார்த்தி வைத்தாள்.காஃபி, பலகாரங்கள் வந்தன.பாபுவின் விஷயத்தை வினோதினியே ஆரம்பித்தாள்.“ஜோசியரின் ஆலோசனை. பாபு மீது கனகா வைத்திருக்கும் பாசம் அறிவேன். எங்கள் வம்சத்தில் ஆண்வாரிசு இல்லாததால் ஜோசியர் இப்படிச் சொல்லியிருக்கிறார். எல்லாம் பொருந்தி வருது... ப்ளீஸ் கனகா... யோசிக்காதே... இரு வர்றேன்...’‘ என்றவள், எழுந்து வெளியே போனாள்.உடனே கோமளாவும் ரத்னாவும் கனகாவின் கையைப் பிடித்துக் கொன்டார்கள்.“கனகா.. இது இறைவன் சித்தம்மா... நாலு காசு சேர்ந்தாலே உறவினரை ‘யார் நீ’ன்னு கேட்கிற உலகத்துல வினோதினி வைரம்... அடிப்படையில் அவள் மனது முழுக்க மனிதம்... மனிதம்... பாலைவனத்துல உள்ளபசுஞ்சோலை கனகா அவங்க. ஒத்துக்கம்மா...பாபுவை சீரும் சிறப்புமா நடத்துவாங்க. ஒரு வார்த்தை சொன்னா போறும். ஆயிரக்கணக்குல அவள் காலடியில பயலுக கிடப்பாங்க.ஆனா, அவங்க நம்ம பாபுவ தேர்ந்தெடுத்து இருக்காங்க... தயவு செய்து ஒத்துக்கம்மா...’‘கனகா திணறித்தான் போனாள்.இவர்கள் சொல்வது உண்மை. அன்றொரு நாள் முதல் சந்திப்பிலிலேயே பீச்சில் பாபுவை வாஞ்சையாகப் பார்த்து பேசியதும் அவன் சுண்டல் விற்கும் பையன்தானே என்று நினைக்காமல், அன்பொழுக பேசியதும், இதனாலேயே அவளை கனகா சந்திக்க நினைத்ததும்...இறைவன் எப்படியெல்லாம் திருவிளையாடல்களை நடத்துகிறான்!கதவு திறந்தது.ஆஜானுபாகுவான, உயரமான, கண்களில் தீட்சண்யத்தை ஏந்திக் கொண்டு நெற்றியே மறைக்க ஒரு சிவப்பு நிலா மாதிரி குங்குமம் வைத்துக் கொண்டு ஒருவர் வந்தார்.பார்த்தவுடனேயே கையெடுதுக் கும்பிடவைக்கும் தோற்றம்!“கனகாங்கிறது..?’‘ பொத்தாம் பொதுவாய் பார்த்துக் கேட்டார்.அவர் நிற்கும் தோரணை, ‘ராஜராஜ சோழன்’ படத்தில் வருகிற சிவாஜி கணேசன் நிற்பது மாதிரி இருந்தது.குறிப்புணர்ந்து கோமளாவும் ரத்னாவும் எழுந்து வெளியே சென்றுவிட்டார்கள்.டாக்டர், ‘பேஷண்டைத் தவிர மற்றவங்க எல்லாம் வெளியே போங்க’ என்று சொன்னதும், பேஷண்ட் வயிறு கலங்குமே... அதுமாதிரி கனகா வயிறு கலங்கியது. ஆனாலும், சமாளித்துக் கொண்டாள்.‘யார் என்ன சொன்னாலும் தத்துக் கொடுப்பதில்லை பாபுவை’ என்று மனதில் நினைத்திருந்த அவளுக்கு ஜோசியர் கொடுத்தார் ஒரு அடி.“இளவரசிம்மா சொல்லியிருப்பாங்களே..?’‘ என்று விஷயத்தை ஆரம்பித்தார்.வினோதினியைத்தான் அவர் ‘இளவரசி’ என்கிறார் என்று புரிந்து கொண்டாள் கனகா. தலையாட்டினாள்.இவர் பங்குக்கு என்ன சொல்லப்போகிறார் என்று பயந்தாள்.‘‘கிரிக்கெட் பார்ப்பேளா?’‘ என்றார் திடீரென.“ம்... இப்பல்லாம் டைம் இல்ல!’‘ என்றாள், குழம்பிப் போனவளாய்.“என்னதான் திட்டமிட்டு விளையாட ஆரம்பித்தாலும் அதுல வர்ற திருப்பம்தான் கணக்கு. ஒரு பால்ல ஆறு ரன் எடுக்கறதும், ஆறு பால்ல ஒரு ரன் எடுக்கறதும்... ஒரு பால் ஒரு ரன் இருக்கும்போது நோபால் விழறதும்...எத்தனை திருப்பங்கள். அது போலத்தான் வாழ்க்கையும். எத்தனையோ ப்ளான் போட்டு ஆசைப்பட்டு செய்யறோம். நடக்கிறதில்ல...’‘நிறுத்தினார். கனகாவைப் பார்த்தார்.அவளுக்கு பொறுமை போயிருந்தது.“எனக்கு உன்னோட விஷயம் எல்லாம் தெரியும். நீ நினைத்துப் பார்த்தியா.... இவ்வளவு பெரிய நிலைக்கு வருவேன்னு.நல்லா யோசிச்சிப் பாரு... அன்னிக்கு இளவரசியம்மா நெட் சென்டர்ல கூட்டமா இருக்குன்னு வேறு சென்டர் போயிருந்தேன்னா?’‘திடுக்கிட்டாள்.“எல்லாம் அப்பவே எழுதப் பட்டுவிட்டதும்மா. இளவரசியம்மா பிறந்தபோதே அவள் வாழ்வில் நீ வருவாய் என்று எழுதப்பட்டு விட்டது.’‘மௌனமாக இருந்தவர், தொடர்ந்தார்.“ஆக, நீ அவங்களுக்கு உதவணும்..!’‘‘‘ஐயா... அதுமட்டும் நடக்காதய்யா...’‘ என்று சொல்ல வாயெடுக்கும் முன்னரே அவர் சொன்னார்:“அப்படி நீ உதவாட்டி, அது வினோதினியின் உயிருக்கு ஆபத்து!’‘தீக்குழியில் விழுந்தவள் போல துடித்துவிட்டாள் கனகா.‘‘ஐயா...’‘ பதறிவிட்டாள்.“ஆம் கனகா. இதை நான் இளவரசிக்கே சொல்லலை... வரும் ஏகாதசி வளர்பிறை திதியில் பாபு இங்கு இளவரசனாக வலது காலை வைக்காவிட்டால் வினோதினி படுக்கையில் விழுவாள்.’‘“ஐயோ... ஐயா...’‘“சொல்லிட்டேன்... வர்றேன்...’‘மழையில் நனைந்த கோழிக்குஞ்சு ஒன்று மழையெல்லாம் வெறித்ததும் ஒரு சிறு செடியின் அடியில் நின்று வெடவெடத்துக் கொண்டிருக்கும். அதுபோல வெடவெடத்துக் கொண்டிருந்தாள் கனகா.என் வினோதினி அக்காவிற்கு ஒன்றும் வரக்கூடாது.எதையும் எதிர்பாராமலே ஒரு அப்பாவி ஏழைச் சிறுவனிடம் என் தம்பியிடம் அன்பு காட்டியவள்.அவளுக்கு ஒன்றும் ஆகக்கூடாது.அப்போது வினோதினி அங்கு நுழைந்தாள்.அவளைக் கட்டிக்கொண்டு விம்மினாள் கனகா.“அக்கா... நான் சம்மதிக்கிறேன்கா... பாபு உன் தம்பிக்கா...’‘“அழாதே கனகா. இது இறைவன் ஆணை. பாட்டி ராஜமாதாவின் ஆசையும். பாபு என் குழந்தைம்மா...’‘யோசித்துப் பார்த்தால், உலகத்தில் மனிதன் ‘இது தன்னால் நிகழ்ந்தது!’ என்று நினைப்பது எல்லாம் பொய்.அப்பா கார் ஓட்டும்போது, அருகில் அமர்ந்திருக்கும் ஐந்து வயதுக் குழந்தை ஸ்டியரிங்கில் கைவைத்து கையை அப்படியும் இப்படியும் அசைத்து, ‘‘நான் நல்லா ஓட்றேன்லாப்பா..?’‘ என்று பெருமையாகக் கேட்கும்.அப்பாவோ சிரித்துக் கொண்டே, “சூப்பரா ஓட்றே செல்லம்..!’‘ என்று ஓட்டிக் கொண்டிருப்பார்.‘வாழ்க்கை’ என்ற காரை ஓட்டிகொண்டிருப்பவன் இறைவன். நாம் வெறுமனே ஸ்டியரிங்கில் கைவைத்து இருக்கிறோம். அவ்வளவுதான்!வினோதினி, அவளுடைய தோளை ஆதரவாகத் தொடவும்,“சரிக்கா...’‘ என்றாள், கண்களைத் துடைத்தவாறு.அப்போது தோட்டத்து முகப்பில் இருக்கும் பிரமாண்டமான விநாயகர் கோயிலிலிருந்து ‘கண கண’ என்று மணி ஒலித்தது.“பாரு கனகா... அற்புதமான சகுனம்..!’‘அவளைக் கட்டிக்கொள்கிறாள் வினோதினி..17கார் வேகமாக திரும்பிக் கொண்டிருந்தது.பாபுவிற்கு கோமளாவும் ரத்னாவும் மாறி மாறி முத்தம் கொடுத்து, ‘‘இளவரசே... எங்களுக்கெல்லாம் மாதா மாதம் செலவுக்கு ஆயிரம் வராகன்கள் பாக்கெட் மணி தருவீர்களா..?’‘ என்று கலாய்த்துக் கொண்டு வந்தார்கள்.ஜலஜாவோ, “டேய்... அப்ப உங்கிட்ட இனிமே பேசறது கஷ்டமாடா..?’‘ என்று கவலையுடன் கேட்டாள்.‘‘இந்த அன்பான குடும்பம் சந்தோஷமாகவே இருக்கட்டும் என்று வினோதினி அக்கா கோமளாவிற்கும் ரத்னாம்மாவிற்கும் பங்களாவுலேயே வேலைபோட்டுத் தராங்க! அதுமாதிரி ஜலஜாவுக்கும் பாபு படிக்கிற பள்ளியிலேயே அட்மிஷன்.’‘“ஆ... அப்படியா..!’‘ அவர்கள், திறந்த வாயை மூடவில்லை.வாய்க்குள் ‘சந்திரயான்_4’ஐ கூட ஏவலாம்..!கார், திருவான்மியூரை நெருங்கும்போது பாபு,“அக்கா... ‘பர்கர்’னா என்னக்கா... அதைச் சாப்பிட்டதே இல்லைக்கா...’Õ என்றான்.“முன்னமே ஏண்டா சொல்லலை... இரு... இங்க ஏதாவது கடை இருக்கான்னு பார்ப்போம்...’‘ என்றவள், நவீன ஹோட்டல் ஒன்றின் முன்பாக காரை நிறுத்தினாள்.“ஹையா... மிக்கி மவுஸ்...’‘ ஜலஜா கூவினாள்.ஒரு பெரிய மிக்கி மவுஸ், குழந்தைகளுக்கு கைகொடுத்து வரவேற்றது.சில குழந்தைகள் பயந்து பின்வாங்கின.இளம் பெண் ஒருத்தி கை நீட்டினாள்.அந்த மிக்கி மவுஸோ கைகொடுக்காமல் கும்பிட்டது!இதைக் கனித்த கனகா வியந்தாள்!பெண்களிடம் வாய்ப்பு கிடைத்தால் சந்தடியில் சிந்து பாடிவிடும் ஆண்கள் மத்தியில் ஒருவன் பெண்ணிடம் கைகொடுக்காமல் கும்பிடுகிறான்.அந்த மிக்கி மவுஸிற்குள் இருப்பது ஆணாகத்தானே இருக்கும்!ஒரு வியப்பு கலந்த மரியாதையுடன் அந்த மிக்கி மவுஸைக் கடந்தபோது அது இவளைப் பார்த்ததும் ஓடி வந்து தொபீர் என்று அவள் காலில் விழுந்தது.எல்லோரும் வியப்புடன் பார்க்க, “ஏய்... எழுந்திரு...’‘ என்று கால்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள் கனகா.சட்டென்று அந்த மிக்கி மவுஸ் முகமூடியைக் கழற்ற அதிர்ந்தாள்.பலவித பயங்கரமான தழும்புகளுடன் விகாரமாக அவன்.“தெரியலையா மேடம். என் பெயர் ரொனால்ட். அன்னிக்கு கிண்டி பார்க்ல மொபைலைக் காட்டி உங்களை மிரட்டி... ஒரு குரங்கு என்னைத் தாக்கி...’‘சடசடவென்று அவளுக்கு எல்லாம் நினைவுக்கு வந்தது.ஓ... அவனா இவன்?“மேடம்... அன்னிக்கு உங்கக்கிட்ட தவறா நடந்தும் மறுநாள் என்னை ஆஸ்பத்திரியில வந்து பார்த்து... எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்து, உயிர் பிழைக்க வைத்ததாகச் சொன்னாங்க... அதுவுமில்லாம குரங்கு பிறாண்டி பிச்சிப் போட்ட என் முகத்தை சீர் செய்ய பல ஆயிரம் கொடுத்தீங்களாம்... தெய்வம் மேடம் நீங்க..!’‘ என்றவன், மறுபடி காலில் விழப்போனான்.‘‘இத பாரு ரொனால்ட்... இப்படி கால்ல விழறதெல்லாம் எனக்குப் பிடிக்காது. பெற்றவங்க கால்ல விழு... சரியா..?’’‘‘இந்த முகத்துக்கு எவன்மா வேலை கொடுப்பான்..? இந்த மாதிரி வேஷத்துல வண்டி ஓடிகிட்டு இருக்கு.’‘“வெல்டன் ரொனால்ட். எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு..!’‘“மேடம்... உலகத்துல பிழைக்கிறதுக்கு எத்தனையோ நல்ல வழி இருக்கும்போது நான் கனியிருக்க காயை எடுத்து வாழ்ந்திட்டேன். இந்த எண்ணம் ஆஸ்பத்திரியில நான் செத்துடுவேன் நினைச்சப்போ வந்தது.இந்தக் கோர முகத்துக்கே ஒரு பொருத்தமான முகமூடி வேலை கிடைக்கும்போது அந்த முகத்திற்கும் ஒரு நல்ல வேலை கிடைச்சிருக்கும்ல மேடம்..?’‘ நெகிழ்ச்சியுடன் கூறியவன்,‘‘ஒரு சின்ன ரிக்வெஸ்ட் மேடம்...’‘ என்றான்.“என்ன..?’‘ என்றவளிடம்,“நீங்கல்லாம் என்னோட கெஸ்ட்..!’‘ என்று சொல்லி, பில்லை அவனே கொடுத்தான்.நெகிழ்ந்து போனாள் கனகா.காரில் மறுபடி பயணத்தைத் தொடர்ந்த கனகாவின் மனதில் ரொனால்டே ஆக்கிரமித்திருந்தான்.இந்த உலகில் தவறு செய்தவர்களில் முக்கால்வாசி பேர் வாய்ப்பு ஏற்பட்டால் திருந்திவிடவே செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள்.அவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து, அவர்களுக்கு உதவி, வாய்ப்பு கொடுத்தால், நல்லவர்களாக மாறிவிடுகிறார்கள்!ஆனால், பரபரப்பான உலகம் இது. வெந்ததைத் தின்று வேகாததை முழுங்கி ஓடிக் கொண்டிருக்கிற மனிதர்கள்.யார், யாரைத் திருத்த?சில நாட்களில் வினோதினி மாளிகை விழாக் கோலம் பூண்டது.ஆனால், மிகமிக முக்கியமான சிலரே அழைக்கப்பட்டார்கள். உடல்நிலை கருதி விவேக் வரவில்லை.‘அவன் வராதது நல்லதுதான்!’ என்று கனகா கருதினாள். சில தர்மசங்கடங்களை அது தவிர்க்கும் என்று நினைத்தாள்.மிகமிக சிரமப்படுத்தி விட்டன அரசின் சட்ட திட்டங்கள், தத்தெடுக்கும் விஷயத்தில். வக்கீல்கள் துணையுடன் எல்லாவற்றையும் வெற்றிகரமாக முடித்து, பங்களாவினுள் பாபு நுழைந்து விட்டான்!பீச், சுண்டல் விற்பனை, அவனுடைய அன்பு வாடிக்கையாளர்கள் எல்லோரும் போய்விட்டார்கள்.வேகமான ரயில் பயணத்தில் பின்னோக்கி ஓடும் அழகுக் காட்சிகள் போல் போயே போச்!சனி, ஞாயிறுகளில் கனகா இங்கு வந்து பாபுவிடம் பொழுதை ஓட்டுவாள்.வாழ்க்கை ஒரு கணத்தில் எல்லோருக்கும் மாறிப் போனது. தோட்டத்தில் மலர்ந்த ரோஜா ஏற்ற தாழ்வு பாராமல் எல்லோருக்கும் மணம் தருவது போல் ஜலஜா, ரத்னா, கோமளா எல்லோரும் இங்கு வந்து பெரிய அவுட் ஹவுஸில் செட்டில்!அது கனகாவிற்கு பெரு மகிழ்ச்சி. காரணம், அவளுக்கு கூடவே இருந்து உதவிய உலகம் அல்லவா அவர்கள்!‘பணம் இருந்தால் குணம் இருப்பதில்லை’ என்ற சொலவடைக்கு நம்பர் ஒன் விதிவிலக்கு வினோதினி என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிந்தது கனகாவிற்கு.அப்படிப்பட்ட வினோதினிக்கும் இறைவன் சோதனை வைக்கப்போகிறான் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை..18“என்ன கனகா... யோசனை? இந்தா... காஃபி குடி...’‘மணக்க மணக்க சூடான காஃபியை நீட்டினாள் கோமளா.“என்னோட மனசு பாபுவைத் தேடுது... சாப்பாடு, தண்ணி இறங்க மாட்டேங்குது கோமளா...’‘“என்ன கனகா இது... இப்பல்லாம் பொம்பளப் பிள்ளைகளையே அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு தனியா அனுப்பி வச்சிட்டு கவலைப்படாம இருக்காங்க... இங்க இருக்கிற முட்டுக்காடு. அங்கதான இருக்கான் பாபு..!’‘“கோமளா... நல்லவேளை நீங்க வந்தீங்க... அங்க வினோதினி, பங்களாவுல உங்களுக்கு எவ்வளவு வசதி. அதை வேண்டாம்னு சொல்லிட்டு எனக்காக வந்துட்டீங்க... நன்றிம்மா..!’‘கண்கள் கலங்க அவள் கைகளைப் பிடித்துக்கொள்கிறாள் கனகா.“அட என்ன கனகா... மனுஷனா பிறந்தா ஒருத்தருக்கு ஒருத்தர் எதையும் எதிர்பாராத நட்பில் இருக்கணும்மா... எனக்கு அப்படி இருக்க ஒரு சந்தர்ப்பத்தைத் தந்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக்கிட்டு இருக்கேன்... பாபு இங்க இல்லாததை நீ பழகவரைக்கும்...’‘ என்று சொல்லிக்கொண்டே காஃபி தம்ளரை வாங்கிக் கொண்டு போனாள் கோமளா.சின்ன வயதிலேயே கணவனை இழந்தவள். காதல் திருமணம் என்பதால் ஆதரவு கிடைக்காமல் ஊரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்து, ஒரு ஏஜென்ஸி மூலம் வீட்டு வேலை கிடைத்து, சொற்ப வருவாயில் சேமித்து மெஸ் ஆரம்பித்து... இவளால் எப்படி எல்லா விஷயத்தையும் ஈஸியாக எடுத்துக்கொள்ள முடிகிறது என்று வியப்பாள்!செல்போன் சிணுங்கவே எடுத்தாள்.“ஹாய் கனகா...’‘ என்றாள் வினோதினி.“எப்படிக்கா இருக்கீங்க..? ஸாரிக்கா... வேலை ஜாஸ்தி...’‘“தெரியுமே..! அதுவும் இப்ப நீ சீஃப்..! கிரேட் கனகா நீ..!’’“எல்லாம் உங்க ஆசீர்வாதம் அக்கா.’‘“நான் இப்ப போன் போட்டது முக்கியமான விஷயம் பேசத்தான்.’‘“சொல்லுங்க அக்கா...’‘சட்டென்று அழ ஆரம்பித்து விட்டாள் வினோதினி.“அக்கா... அக்கா... அழறீங்களா அக்கா..?’‘மௌனம்.“அக்கா...’‘“ஸாரி கனகா... ஏதோ நினைவு... ஒரு சின்ன ஹெல்ப் பண்றியா கனகா..?’‘“அய்யோ அக்கா... கட்டளை இடுங்க அக்கா...’‘‘‘சாயங்காலம் பீச்சுக்கு வர்றியா... மனம் விட்டுப் பேசணும்..’‘“நிச்சயம் வர்றேன்கா..!’‘கனகாவிற்கு கவலை வந்தது. வினோதினியின் குரல் உடைந்து அழுதது, தழுதழுத்துப் பேசியது எல்லாம் மனசை என்னவோ செய்தது.மாலை, சீனுவுடன் கொஞ்சம் பேசி பொழுதைப் போக்கலாம் என்று இருந்தாள்.அதிசயமாய் சீனுவே லைனில் வந்தான்.“சி.ஈ.ஓ., அம்மாட்ட பேசவே பயமாயிருக்கு..!’‘“அட... நான் எப்பவும் உன்னோட கனகாதான். சொல்லு...’‘“எப்ப நம்ம டும்டும்டும்... நமக்குன்னு அவசரப்படுத்த ஆளில்லை. எனக்கு நீ... உனக்கு நான்! உனக்கு திடீர்னு வெளிநாடு போக வேண்டியிருந்தா என் பாடு திண்டாட்டம். ஆகவே... சீக்கிரம்...’‘ சிரித்தான்.“ஓ... அதுவும் சரிதான்... வினோதினி அக்காக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு டேட் ஃபிக்ஸ் பண்ணிடலாம்..!’‘“சரி.’‘ஆனால், அவள் எதிர்பார்த்தபடி வினோதினி மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கவில்லை.துணுக்கென்றது கனகாவிற்கு.“கனகா... பார்க்கலாம்... சாயங்காலம் வரேல்ல பீச்சிற்கு? அப்ப பேசிக்கலாம்.’‘சாயங்காலம் பீச்சிற்குப் போனதும் எல்லா நினைவுகளும் வந்தன. அது ஒரு ஆனந்த காலம்.வினோதினியின் முகம் கவலை தோய்ந்த முகமாக இருந்தது.சில நிமிடங்களுக்குப் பிறகு அவளே பேச்சை ஆரம்பித்தாள்.“விவேக் உங்கிட்ட சொன்னதை நீ மறைச்சிட்டே...’‘“அக்கா... தயக்கமா இருந்துச்சுக்கா.’‘“பரவாயில்ல. எங்கிட்ட ஓபனா சொல்லிட்டார். அவர் உன்னை விரும்புறாராம்...’‘“அக்கா...’‘“இப்படி, பழைய காதலிகிட்டேயே, ‘நீ வேண்டாம் எனக்கு. இனிமே வேறு ஒருத்தி’ என்று சொல்கிற முதல் காதல் என்னோட காதலாகத்தான் இருக்கும் கனகா.’‘“அக்கா, ‘எனக்கு சீனுதான் கணவர்’னு சொல்லிட்டேன்கா. இன்னிக்கு காலையிலகூட சீக்கிரம் ஒரு கோயில்ல வைத்து சிம்பிளா உங்க தலைமையில நடக்கும்னு ப்ளான் போட்டுட்டேன்கா...’‘அலைகளின் இரைச்சல் ஒலி பெரிதாகக் கேட்கத் துவங்கியிருந்தது.“எல்லாத்தையும் ஒதுக்கி வை கனகா...’‘கனகாவின் தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது.“அக்கா...’‘“பயப்படாதே... தற்காலிகாமாகத்தான். விவேக் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பாராம். என்னிடமே அடம் பிடிக்கிறார். நானும் சரின்னு சொல்லிட்டேன்..’‘ஒரு கணம் எதிரில் இருப்பது வினோதினி என்பதையும் மறந்து கோவம் ஜிவ்வென்று வந்து விட்டது கனகாவிற்கு.‘பாபுவைக் கேட்டாள் கொடுத்தேன். இப்போ சீனுவையும் பிடுங்குகிறாளே... நோ...’பதறியது உடம்பு.நன்றிக்கடனுக்கும் அளவிருக்கிறதே?அவளுக்காய் ஏராளமான கனவுகளுடன் காத்திருக்கும் சீனுவின் நினைவு வந்தது.அவனிடமிருந்தே போன்.“கனகா... அக்டோபர்ல... அதாவது ஐப்பசி முதல் நாள் அமோகமான நாள். அன்னிக்கே வடபழனி முருகன் கோயில்ல கல்யாணம். நூறு மீட்டர் தள்ளி இருக்கிற கிரீன்பார்க்ல சாயங்காலம் சின்ன ரிசப்ஷன். சிறப்பு விருந்தினர்கள் மேடம் வினோதினியும் விவேக் சாரும். எல்லா ஏற்பாடும் ஓவர். அட்வான்ஸ் ஒரு லட்சம் கொடுத்தாச்சு..!’‘கனகாவிற்கு படபடப்பு எகிறியது. தக்காளியின் லேட்டஸ்ட் விலையை டி.வி.யில் கேட்ட மாதிரி இருந்தது. போனைக் கட் பண்ணிவிட்டான் சீனு.உப்புக் காற்றில் குளிர் ஏறி விட்டிருந்தது.வினோதினி மெல்ல மறுபடியும் பேச ஆரம்பித்தாள்.“என்னடா விழுந்து விழுந்து காதலிச்சாங்க... இப்ப மனம் மாறி காதலனையே தாரை வார்த்து விடுகிறாளே என்றுதானே நினைக்கிறாய் கனகா..? நான் இன்னும் அவரைக் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.’‘எழுந்து கொண்டார்கள்.சர்வீஸ் சாலையில் பெரிய கோன் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டார்கள்.“விவேக்தான் தடம் மாறிட்டார். இதுக்காக அவரை நான் சட்டையைப் பிடித்து உலுக்கப் போவதில்லை. கேட்டதற்கு, ‘நீ ராஜ பரம்பரை. ஆனால், கனகாவோ என்னைப் போல் சாதாரண பரம்பரை!’ என்று என்னென்னவோ சொல்றார். இப்பத்தான் தெரிந்ததா? போகட்டும்... என் தலையெழுத்து.கல்யாணத்திற்கு முன்னதாகவே சொன்னாரே. அதைப் பாராட்டறேன்...’‘ என்றவள், சட்டென்று அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டாள்.“என்ன மன்னிச்சிரு. விவேக் என் உயிர். உன்னை விரும்பும் அவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். நீ சீனுவ விரும்பறேன்னு எனக்குத் தெரியும்.ஆனாலும், வேறு வழி தெரியவில்லை...’‘“அக்கா... உங்கள நான் இதுவரை எதுவும் எதிர்த்துக் கேட்டது இல்லை.இப்போ கேட்கிறேன். தயவு செய்து என்னை மன்னிச்சிருங்க அக்கா. ஒரு சில மாதங்கள் பழக்கத்திலேயே ஒரு பெண் எக்காரணம் கொண்டும் பழகியவனை விட்டுக்கொடுக்க மாட்டா. நீங்க என்னக்கா காதலன ஏதோ கத்திரிக்கா, வாழைக்கா மாதிரி தூக்கிக் கொடுக்கிறீங்க..?’‘“கனகா... ப்ளீஸ்மா... எதுவும் கேட்காதே. சில நாட்களுக்கு நீ நடிச்சா போதும்மா... அவர் உயிரோடு இருக்கும் வரை..!’‘கனகாவின் கையிலிருந்த ஐஸ்க்ரீம் கோன் கீழே விழுந்து சிதறியது.“அக்கா... என்ன சொல்றீங்க..?’‘“அவருக்கு ‘ப்ரெயின் கேன்சர்’. டெர்மினேடட் கேஸ். அவருக்கே தெரியாது!’’கனகாவின் காலடியில் பூமி வேகமாகச் சுழன்றது.வினோதினி தாங்கிக் கொண்டாள்..19 ‘இதுதான் வாழ்க்கை... இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது..’பி.பீ.ஸ்ரீனிவாசின் தேனில் குழைத்த தத்துவக்குரல் சீனுவின் காதுகளில் நுழைந்து மனதைக் கிழித்துக் கொண்டிருந்தது.எத்தனை உண்மை!காலத்தால் அழியாத கண்ணதாசனுக்கு வணக்கம் சொன்னான். முன்பெல்லாம் எழுந்ததும், இரண்டு உள்ளங்கைகளிலும் மஹாலட்சுமியைப் பார்ப்பான். இப்போது கனகாவைப் பார்க்கிறான்.‘பார்த்த முதல் பார்வையிலேயே வேகமாக மனதுள் படர்ந்து விருட்சமாக வளர்ந்து விட்டவளே... என்ன ஆயிற்று உனக்கு? இரண்டு மாதங்களில் கல்யாணம் என்று சொல்லியதற்கு ஆம்பல் மலர் மாதிரி அழகாக தலையசைத்தாயே? இப்போது உன் சூப்பர் பாஸிடம் இழைந்தும் குழைந்தும் பேசிக்கொண்டு இருக்கிறாயே? உனக்கு என்னை நினைவிருக்கிறதா?பார்ப்பது மிகவும் சிரமமாக இருக்கிறதே?அவன் மனம் வாட ஆரம்பித்து விட்டது.வினோதினிக்கு என்ன ஆயிற்று?அவளுக்கும் விவஸ்தை இல்லாமல் போய்விட்டதா?ஏன் இப்படி கனகாவையும் விவேக்கையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.ஒரு நாள் விவேக்கின் வீட்டிற்கு சொல்லாமல் போனான். கூர்கா விடவில்லை. சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல காம்பவுண்ட் பின்புறம் சென்று எட்டிப் பார்த்தான்.மனது வலித்தது.அவனுக்கு மிகவும் பிடித்த பாட்டுதான். ஆனால், பாடிக்கொண்டிருந்தவனும் சூழலும் சீனுவிற்கு வெறுப்பை விதைத்து விட்டன.மிகப்பெரிய புல் தரையில், கனகா, வீல் சேரில் விவேக்கை வைத்து தள்ளிக் கொண்டே போக, அவனோ, “பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே...’’ என்று பாடிக்கொண்டே போனான்.சீனுவிற்கு இதைப் பார்க்க சகிக்கவில்லை.‘இவரு பெரிய ஆலயமணி சிவாஜி கணேசன். இவ சரோஜாதேவி... அடபோங்கடா...’ஓசைப்படாமல் வெறுப்புடன் திரும்பிவிட்டான்.“கனகா...’‘ என்றான், விவேக்.“எனக்கு எப்ப சரியாகும்னு டாக்டர் எதுவும் சொன்னாரா? தலைவலிக்கு ஆபரேஷன் பண்ணாங்க. மறுபடியும் வலி வருதே? வேறு ஏதாவதா? எதுவும் சொல்ல மாட்டேங்கிறாங்க... எனக்கு பயமா இருக்கு கனகா.’‘அவள் துயரத்தை அடக்கிக் கொண்டு, “சீக்கிரம் சரியாயிரும்ங்க... ப்ளீஸ்...’‘“எப்ப சரியாகி எழுந்து... எப்ப உன் கழுத்துல மூணு முடிச்சு போடறது... வினோதினி என்ற கடவுளே வரம் கொடுத்துட்டா... இந்த டாக்டர்கள் என்ற பூசாரிங்க விடமாட்டேங்கிறாங்களே?’‘சோகையாகச் சிரித்தவனிடம் மேலும் இரண்டு வார்த்தைகள் கனிவாகப் பேசிவிட்டு அங்கு இருக்கும் நர்ஸ்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.வீட்டிற்கு வந்ததும் சீனுவிற்கு போன் போட்டாள். அவன் எடுக்கவில்லை.சில நாட்கள் கழித்துப் போட்டாள். எடுக்கவில்லை.என்ன ஆயிற்று?அவனிடம் பொறுமையாகப் பேச நினைத்தாள்.டென்ஷனான அலுவலக வேலை, விசிட்டர்ஸ், மீட்டிங் என்று பரபரப்பு. கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் விவேக்குடன் செலவழிக்க வினோதினியின் கட்டளை.என்ன செய்வது என்று தெரியவில்லை.விவேக்கிற்கு உடல்நிலை மோசமாகி விட்டது.உணவு இறங்காமல் மெலிந்து விட்டான்.வலி தாங்காமல் துடித்தான்.ஒரு அதிகாலை பொழுதில் வினோதினியிடமிருந்து போன்:“விவேக்... நோ மோர்...’‘பிழியப் பிழிய அழுதாள் கனகா.அவள் நார்மலாவதற்கு சில வாரங்கள் பிடித்தன.அதன் பிறகு கம்பெனி வேலை. தேங்கிவிட்ட முக்கிய முடிவுகளை எடுத்து அதைச் சரி செய்யவே இரவு பகலாக வேலை பார்க்க வேண்டியிருந்தது.வினோதினியின் முகத்தைப் பார்க்கத் திராணியில்லை.சீனுவின் நினைவு வந்தது.தொடர்பு கொள்ள முடியவில்லை.யோசனையில் ஆழ்ந்தாள். அவன் நிர்வகித்த ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் சென்றபோது பூட்டிக் கிடந்தது.பக்கத்தில் விசாரித்தபோது குழந்தைகளை வேறு ஒரு ஆசிரமத்தில் சேர்த்துவிட்டார் என்று சொன்னார்கள்.அவர் எங்கு போனார் என்று தெரியவில்லை என்றார்கள்.கனகாவிற்கு அழுகை வந்தது. ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியவில்லை.அவனை முதன்முதலாகச் சந்தித்தது, கீழே விழப் போனவளை தாங்கிக் கொண்டது, மழையில் லிஃப்ட் கொடுத்தது, அவளுக்காக விவேக் அவனிடம் செய்த அவமானங்களைப் பொறுத்துக் கொண்டது... சிரித்த முகம்...நினைவுகள் ஊர்வலமாகப் பெருக கண்களில் நீர் முட்டியது.வினோதினியின் நெட் சென்டருக்குப் போனாள்.“மேடம் வர ஒரு மாதமாகுமாம்..!’‘ என்றாள், அங்கு வேலையிலிருந்த ஒரு பெண்.முட்டுக்காடு சென்று பாபுவையும் பார்த்துவிட்டு அப்படியே வினோதினியையும் பார்த்துவிட்டு வந்தால் மனது ஆறுதலாக இருக்கும் என்று எண்ணினாள்.அங்கு போனால் அவர்கள் மகாபலிபுரம் போயிருக்கிறார்கள் என்று தெரியவே காரை வேகமாகத் திருப்பினாள். மொபைலில் தொடர்பு கிடைக்கவில்லை. கடற்கரை கோயிலையொட்டி அமர்ந்தாள்.அப்போது ஒரு வெள்ளைக்கார தம்பதியரிடம் ஒருவன் வேகமாக பேசிக்கொண்டு வந்தான்.ஆ..! சீனு..!!“சீனு...’‘தன்னுடைய பலமெல்லாம் திரட்டிக் கத்தினாள்.அவன் திரும்பினான். ஆனால், அவள் எதிர்பார்த்தபடி வியப்படையவில்லை. சிரிக்கவில்லை. அவர்களை அனுப்பிவிட்டு வந்தான்.“சீனு... எங்கே போயிட்ட..? உன்ன எங்கெல்லாம் தேடுறது..?’‘அவன் சொன்னான்:“நீ என்ன விட்டு தொலைஞ்சு போய்ட்டே... அதனால நானும் உன்ன விட்டு தொலைஞ்சு போய்டேன்..!’‘ என்றான், குரலில் சிறிதும் கனிவின்றி.“தொலைஞ்சு போய்ட்டேனா...? எங்கே..?’‘“விவேக்கிட்ட...’‘அவளுக்கு லேசாக ஏதோ புரிவது மாதிரி இருந்தது.“என்ன சொல்றே..? விவேக் ஆளே போயிட்டாரு...’‘“கேள்விப்பட்டேன். ஆனாலும், கூடவே தங்கி, சிசுருஷை ப்ளஸ் ஆஃபீஸ் வேலை பார்த்தாயே. டூ இன் ஒன். நானும் பார்த்தேனே... ‘பொன்னை விரும்பும் பூமியிலே... என்னை விரும்பும் ஓருயிரே...’ ’’அவளுக்கு ஜிவ்வென்று எகிறியது பீ.பி.!“நான்சென்ஸ்... என் நகம்கூட அவர் மீது பட்டது கிடையாது...’‘“ஓகே... நம்பிட்டேன். லீவிட்...’‘அப்போது சென்ற அந்த வெளிநாட்டு தம்பதியர் அவனைக் கைதட்டி கூப்பிட்டார்கள்:“ஹலோ சீன்... கெய்ட்..! கமான் டைம் இஸ் அப்...’‘சொல்லிக் கொண்டே கனகா அருகில் வந்தார்கள்.“யூ நோ ஹிம் அல்ரெடி? வொண்டர்ஃபுல் கெய்ட்... வி ஆர் டேகிங் ஹிம் டு சவுத் டூர்...’‘சீனுவை உரிமையுடன் இழுத்துக் கொண்டு போனார்கள்.கண்ணீர் கொப்புளிக்க கனகா அவன் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.அப்போது தோளில் ஒரு கரம்.திரும்பினாள்.வினோதினி.“அக்கா...’‘ என்று அவளைக் கட்டிப்பிடித்து விம்மினாள்.“கனகா... என்னாச்சு... சொல்லிட்டு அழு...’‘எல்லாவற்றையும் சொன்னாள்.அமைதியாகக் கேட்டாள் வினோதினி. முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. அப்போது காற்று அடித்து, மணல் கண்ணில் விழ, “ஆ..!’‘ என்று கத்திவிட்டாள்.“கண்ணுல ஊது கனகா...’‘கனகா கண்ணில் ஊதி, சாரியின் தலைப்பால் துடைத்துவிட்டாள்.“அயாம் ஆல் ரைட்..!’‘ என்றவள், கனகாவின் கையைப் பிடித்து நடத்திச் சென்றாள்.கடற்கரை கோயிலின் மதிற்சுவரில் உட்கார்ந்தார்கள்.“இத பாரு கனகா... இந்த உலகத்துல நல்ல மனிதர்கள்னு நாம நினைக்கிறவங்கக்கிட்ட ஏதாவது ஒரு சின்ன கரும்புள்ளி ஒட்டிக்கிட்டு இருக்கும். அது, சமயத்தில் வெளிப்பட்டு விடும்.சீனு நல்லவன்தான். ஆனா, நீ விவேக்கிற்காக சில மாதங்கள் கூடவே இருந்தது தெரிஞ்சி சந்தேகப்புத்தியால விலகிட்டான். விட்டுத்தள்ளு. நல்லதாப் போச்சு. நாளைக்கு நீ இன்னும் பெரிய ஆளா ஆகப் போற. உன்ன புரிஞ்சுப்பானான்னு தெரில. நீ கவலைப்படாதே. கண்ணில் விழுந்த மணல்துகள தூக்கி எறிஞ்ச மாதிரி நினைச்சுக்கோ.’’“எவ்வளோவோ நம்பி இருந்தேன்கா... தங்கமானவன்னு நினைச்சேன்கா அவனை..!’‘“கனகா... தங்கத்துலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோன்னு ஒரு பாட்டு உண்டு. அது அந்தக் காலம். இப்போல்லாம் கே.டி.எம்., சீல் இல்லாட்டி தங்கத்திற்கு தரமில்லன்னு ஆயிருச்சு... அழாதே... கண்ணைத் துடைச்சிக்கோ.’‘.கண்களைத் துடைத்துக்கொள்கிறாள் கனகா.“கனகா... வாழ்க்கை அடுத்த நொடியில் ஆயிரம் ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறது!சிலவற்றை சந்தோஷங்களாக... சிலவற்றைச் சங்கடங்களாக... அதைப் புரிந்து கொண்டால் போதும்..!’‘ஆம்... கனகா புரிந்து கொண்டாள்!கண்களில் மறுபடியும் நீர் வழிந்தோடியது.இதே மகாபலிபுரத்தில் விவேக்குடன் வந்ததும் மிரண்டதும்...வரும் வழியில் சீனுவை பார்த்து விவேக் அவமரியாதை பண்ணியதும் பிறகு படுக்கையில் இருக்கும்போது அவனிடம் மன்னிப்புக் கேட்க விழைந்ததும்...வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட இருவரும் அவள் மனதென்ற கடற்கரையில் கடல் அலைகளாய் மாறி மாறி அடித்தார்கள்.அவளுக்கு இப்போது தேவை இரண்டு மனம்.தன்வாழ் நாள் முடியப் போகும் நேரம் வந்து விட்டது என்று அறியாமல் அவள்மீது காதலைக் காட்டிய விவேக்கை மறப்பதற்கு ஒரு மனம்.‘தான் நினைப்பது தவறு..!’ என்று அறியாமலேயே அவளை விட்டு விலகிச் சென்றுவிட்ட சீனுவை நினைப்பதற்கு ஒரு மனம்... இறைவா!(முற்றும்)