- தேவிபாலா1“ரெண்டு பேருக்கும் பாஸ்போர்ட் இருக்கு. ஹனிமூனுக்கு வெளிநாட்டுக்குப் போகலாமா நந்தினி?’‘“வேண்டாம்.’‘“சின்ன பாக்கேஜா போட்டுக்கலாம். மால்தீவ்ஸ் போகலாம். இல்லைன்னா சிங்கப்பூர், மலேஷியான்னு ட்ரை பண்ணலாம். என்ன சொல்ற?’‘அவினாஷ் கேட்ட கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.“சரி, உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லு. அங்கே புக் பண்ணலாம். ஃப்ளைட் டிக்கெட் போடணுமில்லை? ரெசார்ட் புக் பண்ணணும். சம்மர் சீசன் வேற. கிடைக்கிறது கஷ்டம் நந்தினி.’‘“உனக்குப் புது வேலை கிடைச்சு, நீ எப்ப ஜாயின் பண்ணினே அவி?’‘“இந்தக் கேள்வி இப்ப எதுக்கு? சம்பந்தமில்லாம இருக்கே?’‘“நான் என்ன கேட்டாலும், அதுக்கொரு காரணம் இருக்கும் அவி. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.’‘“நான் புது வேலைல ஜாயின் பண்ணி, நாலு மாசமாச்சு. மூணு சம்பளம் வாங்கிட்டேன்.’‘“சரி, உன் சேமிப்புல என்ன வச்சிருக்கே?’‘“நம்ம கல்யாண செலவுக்காக, அப்பாவுக்கு மூணு லட்சம் குடுத்தேன். ரெண்டு லட்சம் என் கையில இருக்கு.’‘“அதுல பெரிய பாக்கேஜ் தேனிலவுக்குப் போனா, ஒண்ணரை போயிடும். மீதி அம்பதாயிரம்தான் இருக்கும்... இல்லையா?’‘“போதுமே! புது சம்பளம் பிடித்தம் போக, கையில எண்பதாயிரம் வருமே!’‘“அது போதுமா?’‘“அதுல குடும்ப செலவுக்காக அப்பா கையிலஇருபத்தஞ்சாயிரம் தருவேன். மீதி நமக்குத்தானே? நீயும் மாசம் எழுபதாயிரம் வாங்கறியே நந்தினி?’‘“அதுல உங்கப்பாவுக்கு ஏதாவது தரணுமா?’‘“சேச்சே... நீ தந்தாலும் அவங்க வாங்க மாட்டாங்க. நீ உன் அம்மாவுக்குத் தரலாம்.’‘“நான் என்னிக்குமே அவங்களுக்குத் தந்ததில்லை. ஒரு மகளை ஆளாக்கி கட்டிக்குடுக்கறது பெத்தவ கடமை. காலம் முழுக்க பெத்தவங்களுக்கு கப்பம் கட்டிக்கிட்டிருந்தா, நாம வாழறது எப்ப?’‘அவினாஷ் எதுவும் பேசவில்லை.“நான் சம்பாதிக்கத் தொடங்கி, மூணு வருஷமாச்சு அவி. என் செலவு போக, இந்த மூணு வருஷத்துல நான் சேமிச்ச பணம் வட்டியோட பதினஞ்சு லட்சம். எனக்கு நிறைய எதிர்கால திட்டங்கள் இருக்கு. அதையெல்லாம் நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகு பேசலாம். தேனிலவுக்காக லட்சங்கள்ல தண்டம் அழ வேண்டாம். உள்ளூர் ஏற்காடு மாதிரி போயிட்டு முப்பதாயிரத்துல முடிச்சுக்கலாம். சரியா? வாழ்க்கையை உணர்ச்சிபூர்வமா பாக்கறதை விட, அறிவுபூர்வமா பாக்கறது நல்லதில்லையா? போகலாமா அவி?’‘“சரி, ஓட்டல்ல டின்னர் முடிச்சிட்டுப் போகலாம். ஏதாவது தீம் ரெஸ்டாரென்ட்ல சாப்பிடலாம்.’‘“ரெண்டாயிரம் செலவு. அவரவர் வீட்ல போய் சாப்பிடலாம்.’‘அவனை, அவன் வீட்டுத் தெரு முனையில் இறக்கி விட்ட நந்தினி, தன் டூ வீலரை எடுத்தாள்.அப்படியே நின்றான் அவினாஷ்.இதைப் படித்ததும், இவர்கள் காதலர்கள் என்று யாருக்காவது தோன்றினால், நீங்கள் அப்பாவி.முறையாக ஜாதகம் பார்த்து பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட கல்யாணம். படிப்பு, வேலை, அழகு, அறிவு எல்லாமே அவி, நந்தினி இருவருக்கும் உண்டு. அவி, இரண்டு மூத்த சகோதரிகளுக்குப் பிறகு பிறந்த கடைசி மகன். அப்பா டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் மூலம் சம்பாதித்து, இரண்டு பெண்களை கட்டிக்கொடுத்து, மகனையும் படிக்க வைத்து, வீடு, கார் என வசதியாக வாழ்பவர். அம்மா குடும்பத்தலைவி. அனுசரணையான பெண்மணி. அதனால் அனுராதா என்ற பெயருக்கேற்ப வாழ்பவர்.தங்களுக்கு வரும் மருமகள் சீர் கொண்டு வர வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கவில்லை. பாசமாக, குடும்பத்தோடு இணைந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனும்மாவுக்கு அதிகம். தீர்மானித்து, நந்தினிதான் என முடிவானது. மற்றவர்கள் பத்து வார்த்தைகள் பேசினால் நந்தினி அரை வார்த்தை பதில் சொன்னால் அதிகம். அவளுக்குச் சிரிக்க தெரியுமா என அவி குடும்பமே சந்தேகப்படும் அளவுக்கு இறுக்கமான முகம். அவியின் இரண்டாவது அக்கா நீரஜா, கலகலப்பான பெண். ஜாலியாக பேசுவாள்.“நீ சிரிக்கவே மாட்டியா நந்தினி? முதல்ல எங்க அவிக்கிட்ட எப்படிச் சிரிக்கறதுன்னு கத்துக்கோ!’‘“எனக்கு யார்க்கிட்டேயும் எதையும் கத்துக்க வேண்டிய அவசியமில்லை. நான் பத்து பேருக்கு கத்துக்குடுப்பேன். எதுக்கெடுத்தாலும் சிரிச்சா, பைத்தியம்னு சொல்லுவாங்க. அவி சிரிப்பை குறைக்கணும். குறைக்கறேன்.’‘நீரஜாவுக்கு சரியான அடி. தன் அம்மா அனுவிடம் வந்தாள்.“என்னம்மா... இப்படி முகத்துல அடிச்ச மாதிரி பேசறா? நான் என்ன தப்பா கேட்டுட்டேன்?அவிக்கு நான் அக்கா. அந்த மரியாதையை இவ தர வேண்டாமா? கடுவன் பூனை மாதிரி இருந்தா நல்லாருக்காம்மா?’‘“நீ எதுக்கு அவக்கிட்ட வாயை குடுக்கற? அவ ரிசர்வ்டான பொண்ணு. இதப் பாரு நீரஜா... ஒரு பெண் வாழ வரும்போது, புகுந்த வீட்ல அவளோட முதல் எதிரி, நாத்தனாராத்தான் இருப்பா.எதுக்கு? உன் தம்பி அவியை விட்டு நீ மனசளவுல விலகக்கூடாது நீரு!’‘ மூத்தவள் சொர்ணா, அம்மா சொல்வதை ஆமோதித்தாள்.“அம்மா... நம்ம குடும்பம் கலகலப்பான குடும்பம். மனுஷங்க நிறைய. நீயும் அப்பாவும் யாரையும் விட்டுத்தர மாட்டீங்க. நாங்களும் அப்படித்தான் வளர்ந்திருக்கோம். அவிக்கும் நிறைய மனுஷங்க வேணும். இவ இந்தக் கட்டமைப்பை காப்பாத்துவாளா?’‘“சரிடீ, அவி காதுல இதைப் போடாதே!’‘அக்கா சொல்லா விட்டாலும் நிச்சயம் முடிந்து, முதல் இரண்டு சந்திப்புகளில் அவினாஷ் புரிந்து கொண்டான். அவனிடமும் அதேதான். வார்த்தைகளை அளந்துதான் பேசினாள்.ரொமான்ஸுக்கான எந்த ஒரு சிக்னலையும் அவள் தரவில்லை. வார்த்தைகளில் மட்டுமல்ல, பணத்திலும் படு கறாராக இருந்தாள். அவனுக்கொரு பரிசு, சின்ன சந்தோஷங்களை தர அவள் முயற்சிக்கவே இல்லை. அவனாக சில விலையுயர்ந்த பரிசுகளை வழங்க,“இத்தனை காஸ்ட்லியா ஏன் வாங்கினே அவி?’‘“பணத்தை ஏன் பாக்கற நந்தினி? இன்னும் ரெண்டு மாசத்துல நீ எனக்கு வாழ்க்கை துணை ஆகப்போறே!’‘“அதனாலதான் பாக்கறேன் அவி. நாம பொறுப்போட வாழணும் இல்லையா? அடுத்தபடியா, நீ பாட்டுக்கு வாங்கிட்டு வந்து நிக்கற. என் ரசனை என்னானு கேக்க மாட்டியா?’‘“நான் செலக்ட் பண்ணி வாங்கிட்டு வந்தா, நீ ஏத்துப்பேங்கிற நம்பிக்கைலதான் நந்தினி வாங்கினேன்.’‘“இதுக்குப் பேரு என்ன தெரியுமா? உணர்ச்சிகளின் வெளிப்பாட்டுல எடுக்கிற அவசர தீர்மானம். எனக்கு யார் செலக்ட் பண்ணினாலும் பிடிக்காது. எனக்குப் பிடிச்சதை நான் தேர்ந்தெடுக்கணும். இதையே எங்கம்மா செஞ்சிருந்தா அவங்களை உலுக்கி எடுத்திருப்பேன். இதைத் திருப்பிக் குடுத்துடு அவி.’‘அவன் முகம், சிரிப்பை ரத்து செய்தது.“இனி இந்த மாதிரி என்னை கேக்காம எதுவும் செய்யாதே அவி.’‘மூட் அவுட்டாகி, வீட்டுக்கு வந்தான் அவி. சாப்பிடக்கூட பிடிக்கவில்லை. அம்மா அனு, சாப்பிட அழைத்தாள்.“பசிக்கலைம்மா. எதுவும் வேண்டாம்.’‘“வயிறு ஒட்டிக் கிடக்கு. பசில கண்கள் சுருக்கியிருக்கு. உனக்கு பசி இருக்கு அவி. நீ பொய் சொல்றே. உன் முகமும் வாட்டமா இருக்கு. உன்னைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா? என்னங்க... வந்து உங்க பிள்ளையை என்னானு கேளுங்க.’‘அப்பா ரவி அருகில் வந்தார்.“ஆமாம் அனும்மா. இவன் முகம் சரியா இல்லையே?ஆஃபீஸ்ல பிரச்னையாப்பா?’‘“அவன் இன்னிக்கு லீவு. நந்தினிகூட வெளில போயிருக்கான்.’‘அப்பா ரவி அவனை உற்றுப் பார்த்தார். திரும்பி தன் மனைவி அனுவைப் பார்த்தார்.“அனும்மா... ரெண்டு பேரும் வெளில சாப்பிட்டிருக்கலாம். களைப்பா இருப்பான். நீ போய் படு அவி. போப்பா.’‘“இல்லீங்க... அவன் சாப்பிடலை. வயிறு சொல்லுது. எனக்குத் தெரியாதா என் பிள்ளையைப் பத்தி?’‘“அனும்மா.. ப்ளீஸ், புரிஞ்சுகோ. நீ போ அவி.’‘அவன் உள்ளே போய் கதவை தாழிட்டதும், ரவி அனுவிடம் வந்தார்.“அனும்மா... இது நம்ம காலம் இல்லை. கல்யாணம் நிச்சயமானதும் அடிக்கடி வெளில சந்திக்கற பழக்கமெல்லாம் அப்ப இல்லை. ஒரு நாள்கூட நாம கல்யாணத்துக்கு முன்னால வெளில போனதில்லை. பெரியவங்க அனுமதிக்கவும் மாட்டாங்க. இப்ப தினசரி பாக்கறாங்க. இருபத்தி நாலு மணி நேரமும் சாட் பண்றாங்க. அப்படிப் பேச என்ன இருக்கும்? ஒரு கட்டத்துல அலுப்புத் தட்டும். பல விஷயங்கள் மறைவா இருக்கற வரைக்கும்தான் வசீகரம். ஓப்பன் ஆகிட்டா, அந்த சார்ம் போயிடும். சண்டை வரும். விவாதங்கள் பெரிசாகும். நிஜமான குணம் வெளில வரும். அவ ஏற்கெனவே ரொம்ப ரிசர்வ்டான பொண்ணு. நீரஜா வாங்கி கட்டிக்கிட்டு, சின்ன கசப்போட ஒதுங்கிட்டா. அவ ஒதுங்கலாம். இவனால ஒதுங்க முடியாது.’‘“என்ன சொல்றீங்க?’‘.“இவனும் கலகலப்பான பேர்வழி. ரொம்ப எதிர்காலம் பத்தி யோசிக்க மாட்டான். இன்னிக்கு சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கற, குழந்தைத்தனமான, குதூகலமான பையன். அவ, இவன் மனசு வாடற மாதிரி நடந்திருக்கலாம். அதுல அவி அப்செட் ஆகியிருக்கலாம்.’‘“அது என்னான்னு தெரியணுமே?’‘“மூணு குழந்தைகளை பெத்தவ பேசற பேச்சாடீ இது?’‘“இதப் பாருங்க... அவங்க கல்யாணம் நடந்து முடிஞ்சிருந்தா, இதைப் பத்தி நான் பேச மாட்டேன். இப்ப அவளை விட பெத்தவங்க நாமதான் முக்கியம். நமக்குத்தான் அதிக உரிமை. புரியுதா? நம்ம குழந்தைக்கு ஒரு மனக்கஷ்டம்னா, அதைத் தீர்த்து வைக்கறது நம்ம கடமை.’‘“இரு அனும்மா... பதறாதே! சொல்லலாம்னா, அவனே சொல்லியிருப்பானில்லை? ஏன் சொல்லலை? அவளை நம்மகிட்ட விட்டுக்குடுக்க அவன் தயாரா இல்லை. அதுதான் சரியும்கூட!இப்பவே அந்த பெண் மேல இவன் கசப்பான ஒரு முத்திரையை நம்ம முன்னால குத்தினா, நாம அவளை எப்படீ ரிசீவ் பண்ணுவோம். கசப்போட அந்த உறவு உள்ளே வர்றது சரியா? அது யாருக்குமே நல்லதில்லை அனும்மா.சின்ன மனஸ்தாபங்களை அவங்களே பேசி சரி பண்ணிப்பாங்க. நீ தலையிடாதே. நமக்கு எதைச் சொல்லணுமோ, அதை அவனே சொல்லுவான்.ஒண்ணு தெரிஞ்சுகோ. இனிமே அவி அவளுக்குத்தான் முழு உரிமை! புரியுதா?’‘“அது கல்யாணம் முடிஞ்ச பிறகு. இவன் கலகலப்புக்கு, வாழ்க்கையை எப்பவும் வசந்தமா பார்க்க நினைக்கற மனசுக்கு, அவ சரிப்படுவாளா? ஏதாவது தப்பா தெரிஞ்சா, இப்ப சரி பண்ண முடியும்.நாம தயங்கி, அது அவிக்கு பாதகமா முடிஞ்சிட கூடாது.’‘“சரி பண்றதுன்னா, என்ன அர்த்தம் அனும்மா?’‘“உடைச்சுச் சொல்லட்டுமா? நம்ம அவி சிரிப்பு, அவளால தொலையும்னா, இந்தக் கல்யாணம் நடக்க வேண்டாம்.’‘“என்ன அனு உளர்ற? ஒரு நாள் நம்ம பிள்ளையோட முகம் சுருங்கினதுக்கு, இப்படியொரு அவசர, மூர்க்கத்தனமான முடிவா?’‘“அவி அஞ்சாவது படிக்கும்போது, செய்யாத தப்புக்கு ஒரு வாத்தியார் இவனை அடிச்சு, இவனுக்கு ஜுரம் வந்த காரணமா, நீங்க புகார் பண்ணி, அந்த வாத்தியார் மேல பள்ளிக்கூட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலையா? ஒரு ஆரம்பப் பள்ளிக்கே இந்த முடிவை எடுத்திருக்கோம். இது நம்ம மகனோட வாழ்க்கை!’‘அப்பா ரவிக்கு பதட்டம் வந்தது..2அவி, நள்ளிரவு வரை தூங்கவேயில்லை. ஆசையாக வாங்கி வந்த பரிசை அவள் திருப்பித் தரச் சொன்னது அவமானமாக இருந்தது. பல சந்திப்புகளில் அவள் இறுக்கமாக இருப்பது தெரிந்தது. கல்யாணம் நிச்சயமான நிலையில் ஒரு இளம்பெண், தன் வருங்கால கணவனுடன் எத்தனை குதூகலமாக இருக்க வேண்டும்? அது எதுவும் கடுகளவுகூட இல்லை நந்தினியிடம்.ஏன்? அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லையா? அப்படியானால், சொல்லலாமே? தன் மனதில் பட்டதைச் சொல்லும் பெண்தான் நந்தினி! எதற்காகவும் யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாத பெண். காலம் முழுக்க இவளுடன் தாம்பத்திய ரேசில் ஓட முடியுமா?முதலில் ஏமாற்றமாக, கோபம், எரிச்சல் கலந்து, Ôஇவளோடு வாழ்க்கை அமைந்தால் சரிப்படுமா?’ என்ற கேள்வி புறப்பட்டு விட்டது. உடனே அதிர்ச்சியாக இருந்தது.“என்ன ஆள் அவி நீ? உனக்குப் படிப்பும் பக்குவமும் இல்லையா? கல்யாணம் நடந்து முடிந்து இந்தக் கேள்வி வந்திருந்தால், உன்னால் நந்தினியை உதற முடியுமா?’‘“சரி, அப்படி என்ன தப்பாக நடந்து விட்டது? கொஞ்சம் ரிசர்வ்டான பெண். பண விஷயத்தில் ப்ராக்டிக்கலாக இருப்பது தப்பா? எதிர்காலம் பற்றி இப்போதே யோசிப்பது உனக்கும் நல்லதுதானே? அவளுக்குப் பிடித்ததை அவள்தான் தேர்ந்தெடுப்பாள் என்பது அவளுடைய உரிமையல்லவா?அவள் யாருக்காகவும் நடிக்கவில்லை. அவளிடம் பாசாங்கு, நடிப்பு இல்லை. யதார்த்தமான பெண். இது நல்லதில்லையா? வாழ்க்கை என்றுமே இனிப்பாக, வண்ணமயமாக இருக்க வாய்ப்புண்டா? அது திகட்டாதா? இதை நீ ஏன் புரிந்து கொள்ளவில்லை?’‘இரண்டு விதமாக அலசியதில் அவள் மேலிருந்த கோபம் மாறி, தப்பாக படவில்லை.அவளுக்கென்று நிச்சயமாக ஒரு தனித்தன்மை இருக்கும். நான் அதை சரியாக புரிந்துகொண்டால் குழப்பமில்லை. ஒவ்வொரு ஆணுக்கும் ஆரம்ப காலம் வேறு. குழந்தையாக, செல்லமாக பெற்றவர்களிடம், உடன் பிறப்புகளிடம் வாழும்போது பல பேருக்கு பொறுப்புகளை சுமக்க வேண்டிய கட்டாயம் இல்லை. குடும்பமும் அதை எதிர்பார்க்காது. ஆனால், ஒருத்திக்கு புருஷனாகும்போது வாழ்க்கையின் விளையாட்டுத்தனங்களும் ஜாலியான மனப்போக்கும் மாறி, பொறுப்பை சுமக்க தயாராக வேண்டும்.‘இந்தப் புது வேலை வர்றவரைக்கும் என்ன உன் சேமிப்பு?’நியாயமான கேள்வி! இருபத்தைந்து வயதில் அவள் சேமிப்பு, பதினைந்து லட்சங்கள். நான் பூஜ்யம். அவள் யாரையும் நம்பவில்லை. ஆனால், நான் இந்த நொடி வரை அப்பாவை சார்ந்து வாழ்கிறேன். பெண்கள் முன்பு போல இப்போது இல்லை. யாரையும் சார்ந்து வாழ விரும்பவில்லை. சொந்தக்காலில் நிற்க ஆசைப்படுகிறார்கள். நந்தினி அந்த ரகம். அவளுடைய மனப்போக்கில் தப்பில்லை என மனசு சொல்லியதும், உள்ளே இருந்த பாரம் இறங்கி, உறக்கம் கண்களை அழுத்தியது.அவனுக்கு, வரும்போது இருந்த மனநிலையில், அம்மா அவன் முகம் பார்த்து மனதை படிக்க முயற்சிக்க, நல்ல காலம் உளறித் தொலைக்கவில்லை. தன் கோபத்துக்கான காரணத்தை அவி உளறியிருந்தால், நந்தினி மேலுள்ள மரியாதை குடும்பத்தில் இறங்கியிருக்கும்.காலையில் எழுந்து குளித்து அவன் டிபன் சாப்பிட வர, அப்பா, அம்மா தயாராக இருந்தார்கள்.அவி, தன் வழக்கமான சிரிப்புடன் வந்து உட்கார்ந்தான்.“ராத்திரி தூங்கினியாப்பா?’‘“நல்லா தூங்கினேன்மா. இடியாப்பமும் திருநெல்வேலி சொதியுமா? சூப்பர்மா! உன்னை அடிச்சுக்க, சமையல்ல யாரும் இல்லை.’‘அம்மா சந்தோஷமாகச் சிரித்தாள். அப்பா அவனை நெருங்கி,“உங்கம்மாவை விட உன்னை புரிஞ்சவங்க யாரு அவி?’‘“அது எனக்குத் தெரியாதா?’‘“நான் கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காதே அவி. நந்தினிகூட நேத்திக்கு உனக்கு ஏதாவது பிரச்னையா?’‘அம்மா நேரடித் தாக்குதலில் இறங்கி விட்டாள். அவி சுதாரித்துக் கொண்டான்.“அம்மா... காலைல போய் ரெண்டு பேரும் பானிபூரி சாப்பிட்டு முடிச்சோம். அதுக்குள்ள எங்க புராஜெக்ட் மேனேஜர் வரச் சொல்லவும், நான் உடனே புறப்பட்டேன். அங்கே தலைக்கு மேல வேலை டென்ஷன். அந்தக் கடுப்புல நான் கொஞ்சம் கோவப்பட்டு பேசிட்டேன். அது தப்புன்னு பட்டுது.அதான் வீட்டுக்கு வந்தும் சாப்பிட பிடிக்கலை. நந்தினி ராத்திரி சாட் பண்ணினப்ப, காலைல பேசறேன்னு சொல்லிட்டேன். இனிமேல்தான் பேசணும். நேரமாச்சு. புறப்படறேன்.’‘அவன் பைக்கை எடுத்து விட்டான்.“நாமதாங்க அவனை தப்பா நினைச்சோம்.’‘“அவனை இல்லை. அவளை! கல்யாணம் நடக்கணுமான்னு கேக்கற அளவுக்கு நீ போயிட்டே. அவன் தெளிவா இருக்கான். வேலையை பாரு.’‘அனு உள்ளே போய் விட்டாள். ரவி புறப்படத் தயாரானார். ஆனால், அவினாஷ் எதையோ மழுப்பி, திசை திருப்புகிறான் என்று அவர் உள் மனசில் பட்டது. அடுத்த ஒரு மாதத்தில் நந்தினி அதே விறைப்புடன்தான் இருந்தாள். இந்த நேரம் நந்தினியின் குடும்பம் பற்றியும் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.நந்தினியின் அண்ணன் டெல்லியில் வேலை பார்ப்பவன். குடும்பத்தில் சின்ன வயது முதலே பற்று இல்லாதவன். நந்தினியின் அப்பா, அவளுக்கு ஆறு வயதாக இருக்கும்போதே ஓடிப்போனவர்.அவர் எந்த வேலையிலும் நிலைத்து நிற்காத மனிதர். பொறுப்பில்லை. நந்தினியின் அம்மாவுக்கு அரசாங்க உத்தியோகம். ஆரம்பத்தில் குமாஸ்தா நிலையில் இருந்து, உத்தியோகத்தில் இருந்தபடியே உயர்க்கல்வி கற்று, படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு, இன்று பெரிய அதிகாரி.பிள்ளைகள் இருவரையும் தனி ஒரு மனுஷியாக இருந்து வளர்த்தவள். உறவுகள் யாரையும் கிட்ட சேர்க்காதவள். காரணம், அவள் தனித்து நின்றபோது எந்த உறவும் உதவிக்கு வரவில்லை. தன் சொந்தக்காலில் நின்று போராடியவள் மந்தாகினி. இந்த உலகத்தின் சுயநலம் பார்த்து கசந்து போனதால் அவளிடம் இருந்த பெண்மையும் மென்மையும் விடைபெற்று, ஒரு மூர்க்கத்தனம் வந்து விட்டது. அதன் இன்னொரு வார்ப்புதான் அவள் மகள் நந்தினி.மந்தாகினியின் கணவர் ஓடிப்போக காரணமே, இவள் கொடுத்த டார்ச்சர்தான் என பலரும் சொல்வதுண்டு. அண்ணனும் பள்ளிப் படிப்பு முடித்ததும், வேலை தேடி, டெல்லியில் ஒருபஞ்சாபி கம்பெனியில் அது கிடைக்க, போய் விட்டான். மகள் நந்தினி படித்து வேலைக்குப் போய் முதல் சம்பளம் வாங்கி, அம்மா மந்தாகினியிடம் தர,“வேண்டாம். எனக்கு நீ எதுவும் தர வேண்டாம். என் புருஷனோ பிள்ளையோ தரலை. நான் பதினாறு வயசு முதல் என் கால்லதான் நிக்கறேன். யாரையும் எதிர்பாக்கலை. அதனால உன் பணமும் வேண்டாம். உனக்கு நல்ல வரனா பார்த்து நான் கல்யாணம் செஞ்சு வைக்கறேன்.ஆனா, எத்தனை நல்லவனா இருந்தாலும் உன் புருஷனை நம்பாதே. இங்கே எந்த ஆம்பளையும் நல்லவன் இல்லை. பொம்பளை ரத்தத்தை உறிஞ்சற அட்டைகள். அதனால கவனமா இரு. குடும்பம் உன் கன்ட்ரோல்ல இருக்கணும். அதுதான் உனக்கு பாதுகாப்பு!’‘ஆண்கள் மேல் ஒரு கசப்பை உருவாக்கிவிட்ட அம்மா. நல்லவர்கள் பலர் இருந்தாலும் இவர்கள் அடிபட்டதால் உண்டான எச்சரிக்கை. முறையாக வரன் பார்த்து, மந்தாகினிக்கு திருப்தி ஏற்பட்ட பிறகுதான், நந்தினியை பெண் பார்க்க ஏற்பாடு செய்தாள். பார்க்க வந்த ரவி, அனுவிடம் மந்தாகினி எதையும் ஒளித்து பேசவில்லை.‘’பொறுப்பில்லாத கணவன், என்னை விட்டுப் பிரிஞ்சி இருபது ஆண்டுகள் முடிஞ்சாச்சு. அவர் இப்ப எங்கே இருக்கார்னு தெரியாது. என் மகன் டெல்லில வேலை. ஆனா, அவனுக்கும் குடும்பத்துல பற்றுதல் இல்லை. இங்கே நாங்க ரெண்டு பேர்தான். என் மகளுக்கு ஒரு குறையும் வைக்காம நான் செய்வேன். என்னை நம்பி, என் மகளோட தகுதிகள், உங்களுக்கு சரின்னு பட்டா, இந்தக் கல்யாணத்தை நடத்தலாம்!’’ரவிக்கும் அனுவுக்கும் அந்த நேர்மையான பேச்சு பிடித்திருந்தது. தனியாக அவியை அழைத்து வந்து கேட்க, அவன் வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், நீரஜா, அம்மாவை தனியாக அழைத்தாள்.“அம்மா... நம்ம வீட்ல எல்லாம், என்னிக்கும் அப்பா வச்சதுதான் சட்டம். நாங்க வேலைக்குப் போய் சம்பாதிச்சாலும், எங்க புருஷனை எதிர்த்து வாழணும்னு நினைக்கலை. இங்கே ஆண் வாசனையே இல்லாத குடும்பமா இருக்கு. இதுல போய் தம்பி அவி மாட்டணுமாம்மா?’‘அப்பா ரவி குறுக்கிட்டார்.“இல்லை நீரஜா. பொறுப்பில்லாத ஆண்கள் காரணமா குடும்பத்தை தாங்கற கட்டாயம், இன்னிக்கு பல பெண்களுக்கு வருது. அந்த மாதிரி பெண்களுக்கு ஆம்பளைங்க மேல வெறுப்பு வந்தா அதுல தப்பில்லை. அதைக் காரணமா வச்சு, இந்த வரனை நாம ஒதுக்க வேண்டியதில்லை.’‘அனுவுக்கும் அவர் கருத்தில் உடன்பாடு இருந்தது. அதனால் இந்த வரனையே முடிக்கலாம் என முடிவு செய்தார்கள்.“இந்த அம்மா, ஆம்பளை துணை இல்லாம எப்படித் தனிச்சு கல்யாணம் பண்ணப்போறான்னு நீங்க சந்தேகப்பட வேண்டாம். ஒரு குறை வைக்க மாட்டேன், என் மகளுக்கு!’‘.3நிச்சயதார்த்தம் பிரமாண்டமாகவே நடந்தது. நகை, சீர் வரிசைகள், மாப்பிள்ளை மரியாதை என எதையும் குறைக்கவில்லை. மூக்கில் விரல் வைக்கும்படியாக இருந்தது. ஒரு ஆண் இருந்து நடத்தினால்கூட இத்தனை கம்பீரமாக நடக்காது. எந்த ஒரு குறையும் இல்லை. பெரிய மண்டபம் புக் செய்து விட்டாள். நகரில் பிரபலமான கல்யாண கான்ட்ராக்டர்.இன்று வரை குறையில்லாமல் நடக்கிறது. ஆனால், நந்தினி அவியை சந்திக்கிறாள், பேசுகிறாள். ஆனால், அவன் குடும்பத்துடன் ஒட்டிப் பழகாதது மனசுக்குள் உறுத்தலை தருகிறது. அவர்கள் அடிபட்டதால் இறுகி விட்டார்கள் என இவர்களே சமாதானம் செய்து கொண்டு விட்டார்கள். அவி ஒரு முறை இதைக் கேட்டே விட்டான்.“நீ அதிகம் சிரிக்காம, கலகலப்பா பழகாம இருக்க காரணம், உங்கப்பாவால உங்களுக்கு ஏற்பட்ட கசப்புனு நினைக்கறேன். சரியா நந்தினி?’‘“அப்படி நான் நினைக்கலை. இது என் இயல்பு. அம்மா நல்ல உழைப்பாளி. யாரையும் எதிர்பார்க்காம தன்னோட கால்ல இப்பவும் நிக்கறாங்க. அதுக்குக் காரணம், அவங்க வளர்த்துக்கிட்ட தைரியம், தன்னம்பிக்கை, படிப்பு, பதவி. அம்மா கையில உள்ள பணம்தான் அவங்களை நிமிர்ந்து நிக்க வைக்குது. அதுக்கு அம்மா தன்னோட பல சந்தோஷங்களை தியாகம் செஞ்சிருக்காங்க. அதைத்தான் நான் பின்பற்றப்போறேன். என் ரோல் மாடல் எங்கம்மாதான். அம்மா மட்டும்தான்.’‘ஒருவருடைய விருந்து, அடுத்தவருக்கு விஷம்!.4அவன் பரிசு தந்தால் அதன் விலையை கவனிப்பாள். அவன் சந்தோஷமாக சினிமா, மால் என அழைத்தால் சில சமயம் வருவாள். பல சமயம் மறுத்து விடுவாள். சில நாட்கள் அவளே லீவு போட்டு திடீரென அவனை அழைப்பாள். சில சமயம் அவன் லீவு போடச் சொன்னாலும் மறுத்து விடுவாள். திடீரென அவனுடைய ஆஃபீஸுக்கு வந்து நின்று, Ôமதிய உணவுக்கு வெளியே போகலாம்’ என்பாள்.ஒரு நாளைக்கு முப்பது முறை சாட் செய்வாள். சில நேரம் மூன்று நாட்களுக்கு போன் செய்தால்கூட எடுக்க மாட்டாள். அவளை புரிந்து கொள்ள முடியாமல் அவினாஷ், திக்கு முக்காடி நின்றான். ஒரு மாதிரி ஆயாசமாக இருந்தது. இவளுடன் வாழ்நாள் முழுக்க ஓட முடியுமா?கேள்வி வந்தது. கல்யாணத்துக்கு ஒரு மாதம் இருக்கையில் நந்தினிக்கு கூறை சேலை, தாலிக்கொடி மற்றும் கொஞ்சம் நகைகள், துணிகள் எடுக்க அம்மா அனு தீர்மானித்து, அதை முறையாகச் சொல்ல வேண்டும் என போனில் பேசி, அப்பா ரவியும் அம்மா அனுவும் நந்தினி வீட்டுக்கு வந்தார்கள்.அம்மா மந்தாகினி வரவேற்றாள். காபி தந்தார்கள். நந்தினி ஆஃபீஸுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். இவர்களைப் பார்த்து சிரிக்கக்கூட இல்லை. புறப்படும் அவசரம் தெரிந்தது. இவர்கள் வருவது ஒரு நாள் முன்பே தெரிந்தும், லீவுகூட போடவில்லை. அனு விவரம் சொல்லி,“வர்ற சன்டே கடைக்குப் போகலாமா? நீங்க ரெண்டு பேரும் நேரா வந்துடுங்க.’‘“இன்னும் மூணு ஞாயிறு என்னால முடியாது.’‘“அதிக அவகாசம் இல்லைம்மா.’‘“நானும் அம்மாவும் எங்களுக்கு நேரம் கிடைக்கும்போது கடைக்குப் போய் வாங்கிக்கறோம்.’‘அனுவின் முகம் மாறி விட்டது.“இதை நாங்கதான்மா செய்யணும். அது குடும்பப் பழக்கம். உன்னையும் கூட்டிட்டுப் போய் உனக்குப் பிடிச்சதா வாங்கலாம்.’‘“நாங்க வாங்கிடறோம். எனக்கான பொருள்தானே அது? நீங்க பணத்தை அம்மாகிட்ட குடுத்துடுங்க.’‘நீங்கள் கடைக்கு வர வேண்டாம் என்பதை நாசூக்காக சொல்லி விட்டாள். மந்தாகினியே அதை ரசிக்கவில்லை. சட்டென சமாளித்து சிரித்து,“அவளுக்குப் புது புராஜெக்ட். ஞாயிறுகூட வரச்சொல்றாங்க. கல்யாணத்துக்கு லீவு போடணுமில்லையா? ஒண்ணு செய்யலாம்! அவளுக்கு தோதுபடற நாளுக்கு முதல் நாள், உங்களுக்குச் சொல்றோம். நாங்க சொல்ற கடைக்கு நீங்க வந்துடுங்க.’‘“தாலியும் கூறையும் மெட்டியும் வாங்க நாள் பார்க்கணும். தோதுபடற நாள்ல வாங்கிட முடியாது.’‘எரிச்சலை மறைத்துக் கொண்டு அனு சொல்ல, நந்தினி முகம் மாறியது. மந்தாகினி முந்திக் கொண்டாள்.“வேணும்னா இப்படிச் செய்யலாம். நீங்க நல்ல நாளா ஒரு மூணு தேதி குறிச்சு அனுப்புங்க. அதுல ஒண்ணை நந்தினி தேர்ந்தெடுக்கட்டும். என்ன நந்தினி?’‘“எனக்கு நேரமாச்சும்மா. இப்ப பேச டயமில்லை. நான் புறப்படறேன்.’‘நந்தினி வாசலில் இறங்கி விட்டாள். அனு, கணவர் ரவி முகத்தைப் பார்த்தாள்.“இருங்க... நான் டிபன் ரெடி பண்றேன்.’‘“வேண்டாம். நாங்க புறப்படறோம். மன்னிக்கணும், கல்யாணம்னு வரும்போது பரஸ்பரம் விட்டுத் தருதலும் அனுசரணையும் வேணும். அப்பத்தான் நிம்மதி நிலைக்கும். நந்தினி சின்னப் பொண்ணு. அவளுக்கு நீங்க புரிய வைங்க. நாங்க வர்றோம்.’‘இருவரும் வீட்டுக்கு வந்து விட்டார்கள். நீரஜா வந்து விவரம் கேட்க, அம்மா அனு புலம்பித் தீர்த்தாள். சகலமும் சொன்னாள்.“நாங்க வர்றோம்னு முதல் நாளே சொல்லியாச்சு. எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லை. அம்மாக்காரி நைட்டியில இருக்கா. நந்தினி, தொடை தெரிய அரை ட்ரவுசர், மேலே இறுக்கமா ஒரு சட்டை. அப்பா ஒரு ஆம்பளை. சம்பந்தியா வரப்போறவர். சரி அதை விடு. லட்சக்கணக்கா நாங்க பணம் போட்டு கூறையும் தாலியும் வாங்கப் போறோம். அது முறை. கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர். அதுக்கு நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து வாங்க வேண்டாமா?அவளுக்குத் தோதுபடணுமாம். அவங்க வாங்கிட்டுப் பணத்தை நாம அனுப்பி தரணுமாம். கேட்டியா? எங்களைப் பார்த்ததும் ஒரு சிரிப்பு, வாய் நிறைய வாங்கன்னு ஒரு அழைப்பு இப்படி எதுவும் இல்லைடி. அவ புறப்படற அவசரத்துல இருக்கா. எனக்கு மொத்த சந்தோஷமும் வடிஞ்ச மாதிரி இருக்கு. இவ நம்மகூட ஒட்டுதலா, இந்தக் குடும்பத்துல வாழ்வான்னு எனக்குத் தோணலை.’‘“அம்மா... இதைத்தான் நான் அன்னிக்கே சொன்னேன். நீயும் அப்பாவும் கேக்கலை. அப்பா பெரிசா கடை வச்சு, இப்பவும் கை நிறைய சம்பாதிக்கறார். உனக்கு ராஜ வாழ்க்கைதான் என்னிக்கும். நீ யார் தயவுலேயும் இல்லைம்மா. ஆனா, நம்ம அவி, நிம்மதியா வாழ முடியுமா இவகூட?’‘“நீரஜா... உங்கம்மா ரொம்ப குழம்பிப் போயிருக்கா. இந்த நேரத்துல நீ அவளை ஏத்திவிடறியா?’‘“என்னப்பா, இப்படிப் பேசறீங்க? நான் இந்த வீட்ல எதையும் எதிர்பார்க்கலை. வர்றவ காலடியில நிக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. இது என் பிறந்த வீடு. எங்கம்மா வீடு. நான் இங்கே வர்றதை யாராலும் தடுக்க முடியாதுப்பா. எனக்கு நந்தினி தயவு தேவையில்லை. ஆனா, என் தம்பியோட நிம்மதி இவளால சிதறக்கூடாதில்லையா? ஒரு அக்காவா இருந்து அதைச் சொல்ற உரிமைகூட எனக்கில்லையா?’‘“இப்ப நீ என்ன சொல்ல வர்றே? இன்விடேஷன்கூட அடிச்சாச்சு. கல்யாணத்தை நிறுத்தச் சொல்றியா? ரெண்டு குடும்பத்தோட மானம், மரியாதை இந்தக் கல்யாணத்துல இருக்குனு நான் சொல்லணுமா?’‘“நிறுத்தச் சொல்லி எப்ப நான் சொன்னேன்பா? ஆனா, நம்ம பார்த்ததை, உணர்ந்ததை அவிக்கிட்ட சொல்லாம இருக்கிறது சரியா? அவனுக்கும் நடப்பு என்னானு தெரியணும் இல்லையா? வாழப்போறவன் அவன்தான்.’‘“தெரியாமலா இருக்கும்? ஏறத்தாழ தினசரி சந்திப்பு, சாட் பண்றான். அவனும் புத்திசாலிதான். அவளோட சுபாவம் அவனுக்குத் தெரியாமலா இருக்கும்?’‘“அப்புறமா ஏன் சகிச்சுக்கிட்டு இருக்கான்?’‘“காரணம், அவனுக்கு அவளைப் பிடிச்சிருக்கு. அவக்கிட்ட உள்ள நல்ல பக்கத்தை மட்டுமே அவன் பாக்கறான். அதுதான் சரி. நல்ல பக்கங்களை மட்டுமே பார்த்தா, குறைகள் ரொம்ப கண்ணுக்குத் தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் அதைப் பெரிசா எடுத்துக்க மனசு ஒப்பாது. நேர்மறை சிந்தனைதான் வாழ்க்கைல நிம்மதியைத் தரும். நெகட்டிவ் பக்கங்களை பார்க்கத் தொடங்கினா, எல்லாமே தப்பா தெரியும். அதனால அந்த நபர் மேல வெறுப்பும் கசப்பும் அதிகமாகும். இந்தக் குணம் நீடிச்சா, நமக்கு மனுஷங்களே இல்லாம போகும். தனித் தீவா நிப்போம். அவன் இதுவரைக்கும் அவக்கிட்ட எதையும் தப்பா பார்க்கலை. இது அவன் வாழ்க்கை. யோசிக்க மாட்டானா?’‘“எல்லாம் சரிங்க... எனக்கு ஏற்பட்ட அதிருப்தி இன்னிக்கு நியாயமானது. அவங்க நடந்துக்கிட்ட விதம் உங்களுக்கும் பிடிக்கலை. நம்ம மனநிலையை அவிக்கிட்ட நான் சொல்லத்தான் போறேன்.’‘“அவன் சந்தோஷத்தை கெடுத்து, அவன் மனசுல ஒரு பயத்தை உண்டாக்கணுமா? நீ உன் அதிருப்தியை நாசூக்கா நந்தினி அம்மாக்கிட்ட வெளிப்படுத்தியாச்சு. இனி அவங்க பார்த்துப்பாங்க. விட்ரு அனு.’‘அனு எதுவும் பேசாமல் உள்ளே போய் விட,“நீரஜா... நீ அம்மா கிட்ட...’‘“அப்பா... உங்க குடும்ப வாழ்க்கையோட நிம்மதியை நிச்சயமா பெண்கள் நாங்க குலைக்க மாட்டோம். நிம்மதிக்காக சில விஷயங்களை மூடி வைக்கறதுல தப்பில்லை. அப்படி மூடி வைக்கிற காரணமா பல சமயம் நிம்மதி குலையவும் வாய்ப்பு உண்டு. பார்த்துக்குங்க. நான் வர்றேன்.’‘மகள் சொல்வதில் இருக்கும் நியாயம் புரிந்தாலும், அப்பாவால் அதைச் செயல்படுத்த முடியவில்லை..5மந்தாகினி மாலை ஏழு மணிக்கு விளக்கைகூட போடாமல் கூடத்தில் இருட்டில் அமர்ந்திருந்தாள்.அனு கடைசியாக பேசிய சொற்கள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.“பரஸ்பரம் விட்டுத் தருதலும் அனுசரணையும்தான் வாழ்க்கையில நிம்மதியை நிறுத்தி வைக்கும். நந்தினி சின்னப் பொண்ணு. இதை நீங்க சொல்லி புரிய வைங்க!’‘இந்தச் சொற்கள் குத்திக்கொண்டேயிருந்தது. ஆஃபீஸில் சரியாக வேலை கூட ஓடவில்லை.மந்தாகினிக்கு ஓரளவு நெருக்கமான பெண் சாரதா. அவள் வந்து, “என்னாச்சு? நீ மூட் அவுட்ல இருக்கற மாதிரி தெரியுது. கல்யாணத்துக்கு முழுசா ஒரு மாசம்கூட இல்லை. நீ தனி ஒருத்தியா நின்னு எல்லாத்தையும் சாதிக்கறவ. எப்பவும் எதுக்கும் கலங்கமாட்டியே? பணப் பற்றாக்குறையா மந்தா?’‘“அதெல்லாம் இல்லை.’‘“சரி விடு. சொல்ல விரும்பலைன்னா விட்ரு.’‘நடந்ததை மந்தாகினிச் சொல்ல, “நீங்க நடந்துக்கிட்டது தப்பு. ஏற்கெனவே நந்தினி யார்கிட்டேயும் பழக மாட்டா. காரணம் நீதான்! வாழ்க்கைல உன் புருஷனால, மகனால நீ அடிபட்டதால, ஆண்கள் மேல உனக்குள்ள அவ நம்பிக்கையும் வெறுப்பும் தப்பில்லை. அது அப்படியே உன் மகள் மனசுல படிஞ்சுப் போச்சு.அதையே அளவுகோலா வச்சு, வரப்போற புருஷனை நந்தினி எதிர்கொள்றது சரியில்லை. எல்லாரும் தப்பா இருக்கணும்னு அவசியமும் இல்லை. எச்சரிக்கை உணர்வு நியாயம். ஆனா, வந்தவனும் அப்படி நடந்தா தண்டிக்கலாம். கூறை, தாலி வாங்கணும்னு உங்களை அழைக்க வந்தவங்கக்கிட்ட நந்தினி பக்குவம் இல்லாம நடந்தா, நீ சொல்ல வேண்டாமா மந்தா?உன் மகள் மேல அவங்களுக்கு இன்னிக்கு ஒரு அதிருப்தி உண்டாகியிருக்கும். அவங்க மகன்கிட்ட இதை அவங்க சொல்லாம இருப்பாங்களா? அவர் இதை நந்தனிக்கிட்ட கேட்டா, உடனே அவரையும் சராசரி ஆண்கள் வரிசைல சேர்த்து ரெண்டு பேரும் நாங்க நினைக்கிறது நியாயம்னு கூவுவீங்க.உன் மகள் நல்லா வாழணும்னா, முதல்ல உன்னை நீ மாத்திக்கணும். உன் பழைய கசப்புகளை அவ மேல ஏற்றி, ஏற்றி அவ வாழ்க்கையை நீயே கெடுத்துடாதே மந்தா. நான் சொன்னது பிடிக்கலைன்னா ஸாரி.’‘வீடு திரும்பிய மந்தாகினி, பலவற்றையும் யோசிக்க, ஒரு பதட்டம் வந்தது. தன்னுடைய இத்தனை நாளைய கசப்பு, ஆழமாக நந்தினியின் உடம்பு முழுக்க பரவி விட்டதா? அவள் சிரிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய நான்தான் காரணமா? இது ஏன் எனக்குத் தோணலை? அவளுக்கு ஒரு மலர்ச்சியான வாழ்க்கை அமையணும்னு முன்கூட்டியே பல விஷயங்களை நான் யோசிச்சிருக்க வேண்டாமா?என்னை மாதிரி ஒரு தப்பான புருஷன் உனக்கு அமையணும்னு அவசியமில்லை. அதனால உன் இறுக்கம் தளரணும்! இப்படிச் சொல்லி, அவளை தயார்படுத்த நான் தவறி விட்டேனா? அவள் என்னிடம் எதையும் சொல்றதில்லை. அவினாஷ்கிட்ட அவ எப்படி நடந்துகறா? இவனும் ஒரு சராசரி ஆண்தான்னு கடுமையா நடக்கறாளா? எனக்கு இதையெல்லாம் ஏன் யோசிக்க இத்தனை நாள் தோணலை? அவக்கிட்ட நான் பேச வேண்டிய நேரம் வந்தாச்சு. இனி தாமதிக்கக் கூடாது. அவ மனநிலை எனக்குத் தெரிஞ்சாகணும்.மந்தாகினிக்கு ஒரு மாதிரி பயமும் குற்ற உணர்ச்சியும் உண்டானது. கணவன் பொறுப்பில்லாமல் மனைவி, இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு பல வருஷங்களுக்கு முன்பு வீட்டை விட்டுப் போனபோதுகூட மந்தாகினி, முதல் இரண்டு நாட்கள்தான் குழந்தைகளை நினைத்து நிலை கொள்ளாமல் தவித்தாள். அதன் பிறகு தெளிந்து விட்டாள். கணவன் துணை இல்லாமலும் தன் குழந்தைகளை ஒரு பெண்ணால் வளர்த்து ஆளாக்க முடியும் என வாழ்க்கையை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கி விட்டாள். சகல சந்தோஷங்களையும் தியாகம் செய்து, கடமையே கண்ணாக நின்றாள். அடுத்த அடியை மகன் வளர்ந்ததும் தந்தான். அப்பனின் ரத்தம். அதற்கும் கலங்கவில்லை.“ஆம்பளைல எவனும் யோக்கியன் இல்லை!’‘ இதைச் சொல்லிச் சொல்லி நந்தினியை வளர்த்தது அன்றைக்கு சரியாக இருந்தது. ஆனால், அதுவே இன்று முள்ளாகக் குத்துகிறது. அவள் எனக்கு மட்டும் மகளாக காலம் முழுக்க இருக்க முடியாது. ஒருவனுக்கு மனைவியாக வாழ்ந்து, பிள்ளை பெற்று, ஆண்கள் சமுதாயத்தில் ஊடுருவி நிற்க வேண்டும் என்பது ஏன் மறந்து போனது?விளக்கைகூட போட தோன்றாமல் மந்தாகினி இருட்டில் அமர்ந்திருக்க, இரவு எட்டு மணிக்கு நந்தினி வந்து விளக்கை போட்டாள்.“ஏன்மா இப்படி இருட்டுல ஒக்காந்திருக்கே?’‘“உனக்கொரு வெளிச்சமான வாழ்க்கையை தரத்தான் இந்த இருட்டு!’‘“நீ பேசறது புரியலை எனக்கு.’‘“முகம் கழுவி, டிரெஸ் மாத்திட்டு வா நந்தினி. நிறைய பேசணும்.’‘“எனக்கு பசிக்குதும்மா.’‘“நான் தோசை ஊத்தறேன். இப்பவே சட்னி அரைச்சிடறேன். சாப்பிட்டுட்டுப் பேசலாம்.’‘நந்தினியை சாப்பிட வைத்தாள். தானும் பேருக்கு சாப்பிட்டாள்.“நந்தினி... இன்னிக்கு சம்பந்தி, நம்ம வீட்டுக்கு வந்தப்ப, நாம நடந்துக்கிட்ட விதம் சரியில்லை. அவங்க வர்றதா முதல் நாளே அதுக்கான காரணத்தையும் சொல்லியும், நம்ம நடத்தை சரியில்லை. நம்ம டிரெஸ் கோட் தப்பு. பேசினது தப்பு. முறையா நடக்கலை.முதல்ல அவங்க ரெண்டு பேர்கிட்ட மன்னிப்புக் கேக்கணும். அவங்க குறிச்ச தேதியில நாம அவங்க சொல்ற கடைக்கு, சொல்ற நேரத்துக்குப் போய், தாலி, கூறையை தேர்ந்தெடுக்கணும்.’‘“உனக்கு என்னாச்சு? ஏன் இப்படிப் படபடப்பா இருக்கே? இது உன்னோட இயல்பு இல்லையே? எதையும் ஈஸியா எடுத்துக்கிட்டுப் போவியே!’‘“அது பிறர் விஷயத்துல சரி. ஆனா, உன் சங்கதியில தப்புன்னு புரிஞ்சுக்கிட்டேன். உன் மேல இப்பவும் தப்பில்லை. சில பாரம்பரிய விஷயங்களை ஒரு அம்மாதான் தன் மகளுக்குச் சொல்லி புரியவைக்கணும். நாம இன்னிக்கு அவியைப் பெத்தவங்களை அவமானப்படுத்தியிருக்கோம்னு என் மனசுக்குப் பட்டு, ரொம்ப உறுத்தலா இருக்கு நந்தினி.’‘“என்ன பேசற நீ? அவங்களை வாசல்ல பூரண கும்ப மரியாதையோட வரவேற்கணுமா? உடைகள் நம்ம உரிமை! அதை நம்ம வீட்ல, நாம போட யார் முகம் பார்க்கணும்?’‘“நிச்சயமா பார்க்கணும். ஒரு சபை நாகரிகம் வேண்டாமா நந்தினி? அவர் ஆம்பளை வேற.’‘“நீதான் ஆண்களை மதிக்க மாட்டியேம்மா. இப்ப ஏன் இந்த மாற்றம்?’‘“எனக்கு ஏற்பட்ட கசப்புக் காரணமா நல்ல ஆண்களையும் அதே தட்டுல வச்சு எடை போட்டது தப்பு. உனக்கு ஒரு கணவனும் புகுந்த வீடும் வரும்னு யோசிக்காம, உன் மனசுல ஆண்களை பற்றின தப்பான இமேஜை அழுத்தமா பதிய வச்சது என்னோட மிகப்பெரிய தப்பு.’‘“ஏன் இப்படிப் புலம்பற?’‘“கல்யாணம்னா தாலியும் கூறையும் பிரதானம். நம்ம வீடு தேடி வந்து, அதை வாங்க அவங்க நம்மை அழைக்க, Ôஞாயிறு முடியாது. நாங்க போய் வாங்கிக்கறோம். நீங்க பணத்தை மட்டும் குடுங்க’ன்னு சொன்னது எத்தனை பெரிய தப்புத் தெரியுமா? நீ பாட்டுக்கு புறப்பட்டு போனது அதை விட தப்பு. இதையெல்லாம் நான் அனுமதிச்சிருக்கக் கூடாது. Ôஅனுசரணை, விட்டுக்குடுத்தலை உங்க மகளுக்குச் சொல்லி புரியவைங்க’ன்னு அந்தம்மா சொல்லிட்டு போனாங்க.’‘“ஏன் அப்படிச் சொன்னாங்க?’‘“நாம நடந்துகிட்ட விதத்துக்கு இதைக்கூட சொல்லலைன்னா எப்படி? வீட்டுக்கு வந்தவங்களை எப்படி மரியாதையா நடத்தறதுன்னு நம்ம ரெண்டு பேருக்குமே ஏன் தெரியாம போச்சு? ஆண் வர்க்கத்தை கடுமையா விமர்சிக்கறோமே! Ôஇவ ராட்சசி... அதனாலதான் புருஷனும் மகனும் இவளை விட்டு ஓடினாங்க’ன்னு ஏற்கெனவே ஊர்ல எனக்கொரு கெட்ட பேர் பரவலா இருக்கு.Ôஇப்ப மகளையும் அதே மாதிரி வளர்த்து வச்சிருக்கா’ன்னு சொல்வாங்க. எல்லாத்துக்கும் இன்னொரு பக்கம் உண்டு நந்தினி. அதை நான் மறந்துட்டேன். அவங்கக்கிட்ட மன்னிப்புக் கேட்டு உடனே இதை சரி செய்யணும்.’‘“இல்லைம்மா. நாம தப்பு செஞ்சதா நான் நினைக்கலை. நான் யார்கிட்டேயும் மன்னிப்புக் கேட்க முடியாது. உன்னையும் மத்தவங்க முன்னால நான் தலை குனிய ஒரு நாளும் விட மாட்டேன். வேலையை கவனி.’‘அவள் குரலில் உறுதியும் திடமும் இருந்தது!.6மூத்த அக்கா சொர்ணா, போன் செய்து அவியை வரச்-சொல்லியிருந்தாள். காலையில் சீக்கிரமே புறப்பட்டு அவி வந்திருந்தான். முதல் நாள் மாலை அம்மா அனு, சொர்ணாவிடம் பேசி, ஒரு குரல் அழுது தீர்த்திருந்தாள்.“அப்பா எதையும் அவிக்குச் சொல்ல வேண்டாம்னு உத்தரவே போட்டிருக்கார். நீரஜா படபடன்னு பேசுவா. கொஞ்சம் அவசரமும் படுவா. ஆனா, உனக்கு நிதானம் உண்டு. வார்த்தைகளை விட மாட்டே. ஆனா, எனக்கு நந்தினியோட போக்குப் பிடிக்கலை சொர்ணா. இவன் வாழ்க்கையில அந்தப் பொண்ணால நிம்மதி போயிடாம இருக்கணும். நீ என்ன சொல்ற? இவங்க போக்கை அவனுக்கு தெரிவிக்கணும்டி.’‘“நீ சொல்றதுல தப்பில்லைம்மா. ஆனா, அவன் இதை எப்படி எடுத்துப்பான்னு தெரியலையேம்மா.’‘“இப்படி எல்லாரும் தயங்கி, என் பிள்ளையோட வாழ்க்கை பாழா போகாம இருக்கணுமேன்னு நான் கவலைப்படறேன்.’‘“அதுவும் சரிதான். அவளை தினசரி அவி சந்திக்கிறான். அவன் புத்திசாலிம்மா. கொஞ்சம்கூட அவனுக்கு அவ கேரக்டர் புரியாம இருக்குமா? அழகான பொண்ணுகளை பார்த்து ஜொள் விடற சராசரி ரகம் இல்லை என் தம்பி. சரி, இதை நான் யோசிக்கறேன்.’‘தன் கணவன் நவீனிடம் கலந்து பேசினாள் சொர்ணா.“அத்தை சொல்றதுல தப்பில்லை. Ôஉங்களுக்கு நந்தினி மேல மாற்றுக்கருத்து இருந்தும், ஏன் யாருமே அதை எங்கிட்ட சொல்லலை?’னு அவி நாளைக்குக் கேட்டா, உங்க குடும்பமே குற்றவாளி கூண்டுல நிக்கணும் சொர்ணா. நீ நிதானமா பேசிடு. உனக்கு அப்ரோச் தெரியும்.’‘அதனால் சொர்ணா அவனிடம் பேச வேண்டும் என அவியை அழைத்தாள். தன்னை பார்க்க அவன் வருவது அப்பா, அம்மாவுக்குத் தெரிய வேண்டாம் என்றாள். ஏற்கெனவே நந்தினி குடும்பம் பற்றிய சகலமும் சொர்ணாவுக்குத் தெரியும். இதில் தன் அம்மாவுக்கு சொர்ணா சொல்லாத ஒரு தகவல் உண்டு. நந்தினி வீட்டுப் பக்கம் உள்ள காய்கறி வண்டி நடத்தும் பெண், சொர்ணாவீட்டுக்கும் வியாபாரத்துக்கு வருவாள். அவளுக்கு இந்த சம்பந்தம் முடிவானதும், சொர்ணாவிடம் பேசினாள்.“ஏம்மா, அந்தப் பொம்பளை மந்தாகினி, புருஷனை நாய் மாதிரி நடத்தி, அந்த ஆள் அவமானம் தாங்காம வீட்டை விட்டு ஓடிட்டார். மகனை ரொம்ப கட்டு திட்டத்தோட வளர்த்து, பொண்ணுக்கு மட்டுமே எல்லா சலுகைகளையும் தந்து, பையன், படிப்பு முடிஞ்சு வேலை கிடைக்கட்டும்னு பல்லை கடிச்சிட்டு பொறுத்துக்கிட்டான். வேணும்னே டில்லியில நண்பர்களை வச்சு வேலை வாங்கி, ராட்சசி அம்மாகிட்டேயிருந்து தப்பிச்சா போதும்னு பறந்துட்டான். ஆம்பளையை மதிக்காத ஆத்தாளும் மகளும். அவங்க வீட்டுக்கா உங்க தம்பி மாப்ளையா ஆகணும்? இவளுங்க பிசாசுங்க. ஆம்பளையை மதிக்க மாட்டாங்க. யோசனை பண்ணுங்கம்மா.’‘அம்மாவிடம் அவர்கள் குடும்பம் பற்றி விசாரிக்க, “பாவம்டி. தனியா நின்னு குடும்பத்தை நடத்தறா அந்த மந்தாகினி. புருஷன் உதவாக்கரைன்னா, பொம்பளை போராடித்தானே புள்ளைங்களை வளர்க்கணும்?’‘பெற்றவர்களுக்கு அவர்கள் மேல் நல்ல அபிப்ராயம் இருந்தது. அவிக்கு நந்தினியை மிகவும் பிடித்திருந்தது. நந்தினி அழகாகவும் இருந்தாள். படிப்பு, நல்ல உத்தியோகம், பெரிய சம்பளம் என இருக்க, ஒரு காய்கறிக்காரியின் பேச்சை சொர்ணா பெரிதாக கருதவில்லை. அது இப்போது வேறு வடிவில் பூதாகரமாகிறது.இதோ தம்பி அவி வந்து விட்டான்.“மாமா ஃபேக்டரிக்கு போயாச்சாக்கா?’‘“போயாச்சு. முதல் ஷிஃப்ட் அவி. வா... முதல்ல டிபன் சாப்பிடு.’‘“எதுக்கு திடீர்னு வரச் சொன்னேக்கா? உனக்கு ஏதாவது பிரச்னையா?’‘“தம்பி... நான் சுத்தி வளைக்க விரும்பலை. நமக்குள்ளே பீடிகை எதுக்கு? நேராவே பேசிடலாம். அதுக்கு முன்னால நந்தனி மேல உன் அபிப்ராயம் என்ன?’‘“கல்யாணத்துக்கு மூணு வாரங்கள்கூட இல்லைக்கா. இப்ப எதுக்குக் கருத்துக் கணிப்பு எடுக்கறே?’‘“தேர்தல் நெருங்கும்போது கருத்துக் கணிப்பு ஏன் எடுக்கறாங்க? மக்களுக்கு எந்த ஆட்சி மேல நாட்டம் இருக்குன்னு தெரிஞ்சுகறது நல்லதுதானே? அஞ்சே வருஷ பதவி காலத்துக்கே இத்தனை தவிப்புன்னா, இது ஆயுள் முழுக்க வரக்கூடிய மனைவிங்கற பதவி இல்லையா?’‘“இந்த கேள்விகள் உன்னோட நேரடி கேள்விகளா? இல்லைன்னா, அம்மா கேக்கச் சொன்னாங்களா?’‘ஆடிப் போனாள் சொர்ணா.“ஏண்டா... உன் அக்கா நான். எனக்கு அந்த உரிமை இல்லையா?’‘“நேத்திக்கு கூறை, தாலி விஷயமா பேசணும்னு அப்பா, அம்மா நந்தினி வீட்டுக்குப் போயிருக்காங்க. அதோட பின்விளைவா இது?’‘“நீ புத்திசாலின்னு எனக்குத் தெரியும் அவி. இனி நேரா பேசிடலாம். அம்மா சொன்ன விவரங்களை உங்கிட்ட நான் சொல்லிடறேன். நம்ம அம்மா பொய் சொல்ல மாட்டாங்கன்னு உனக்கும் தெரியும்!’‘ முழு விவரத்தையும் சொன்னாள்.“நீ சின்னப்பையன். இந்தக் கால யூத். நீ நம்ம வீட்ல ரெண்டு சகோதரிகளுக்கு மத்தியில, செல்லமா வளர்ந்த காரணமா, சில பாரம்பரிய விஷயங்கள் உனக்குத் தெரிஞ்சிருக்க நியாயமில்லை. ஆனா, பெரியவங்களோட அந்த நம்பிக்கைகளை விமர்சிக்கற உரிமை யாருக்கும் இல்லை அவி. இவங்க செய்யற முறை அது. அவளுக்கு எதுவுமே புரியாதுன்னா, அவங்கம்மா பச்சக்குழந்தையா? மற்ற பெண்களை விட அதிகமா அடி வாங்கின பெண்மணி. அந்த நிலைமை தன்னோட மகளுக்கு வர, இவங்களே காரணமா இருக்கக் கூடாதில்லையா? இவங்க அங்கே போய் ஏறத்தாழ அவமானப்பட்டிருக்காங்க. அப்பா பேச மாட்டார். காரணம், அவர் ஆம்பளை. ஒரு மருமகளுக்கும் அவருக்கும் இடைல உள்ள பந்தம் எந்த அளவுக்கு இருக்கும்? ஆனா, மாமியார் உறவு அப்படியில்லை. அவ அதிகமா பழக வேண்டிய நபர் நம்ம அம்மாதான்.’‘“நல்லதுதானே?’‘“உள்ளே வர்றதுக்கு முன்னாலயே, இந்த அளவுக்கு விலகி நிக்கற நந்தினி, உறவுன்னு ஆன பிறகு இன்னும் விலகி நின்னா, அந்தப் பாதிப்பு அம்மாவை விட, எங்களையெல்லாம் விட உனக்குத்தாண்டா. உன் சந்தோஷம் முக்கியமில்லையா? சொல்லு அவி.’‘அவன் பேசவில்லை.“கல்யாணத்துக்கு அதிக நாட்கள் இல்லை. நீ ஒரே பையன். உன் மேல எமோஷனல் பாண்டிங் குடும்பத்துக்கே ரொம்ப அதிகம். குறிப்பா, அம்மாவுக்கு! அவளுக்கு அப்பா பக்கத்துல இல்லை.அண்ணனும் விலகிட்டதா சொல்றாங்க. இருக்கிற ஒரே உறவு அம்மாதான். நம்ம குடும்ப சூழல் வேற. பணத்தை விட பாசத்துக்கு அதிக மரியாதை தர்ற குடும்பம், நம்ம குடும்பம். இதை நீ நந்தினிக்கு புரிய வச்சாதான் உனக்கு நல்லது. என்னப்பா?’‘அவனுடைய மௌனம் தொடர்ந்தது.“நான் உன்னை கேக்கற இந்தக் கேள்வி கொஞ்சம் வரம்பு மீறினதுதான். ஆனாலும், கேக்கறேன். தினசரி சந்திக்கறே அவளை, ஏறத்தாழ ரெண்டு மாசங்களா. அவ கேரக்டர் உனக்கு பிடிபடலையா அவி?’‘நிமிர்ந்து அக்காவைப் பார்த்தான் அவி.“அக்கா... உன் கல்யாணம் நடந்தது பத்து வருஷங்களுக்கு முன்னால. அப்பவே பெண்கள் அதிகமா யோசிக்கத் தொடங்கியாச்சு. இப்ப அது உச்சக்கட்டத்தை எட்டியாச்சு. நீ பெண்ணா இருந்தும் இப்போதைய பெண்களை உனக்குப் புரியலை. குடும்பங்கள் அவங்களுக்காக எந்த கோடும் போடறதில்லை. போட்டாலும், அவங்க அந்தக் கோட்டை அழிக்கவோ தாண்டவோ தயங்கறதேயில்லை. தன்னை பற்றி மட்டுமே பெண்கள் அதிகமா யோசிக்கிற காலம் இது. இந்தக் கல்யாணம் யாரோட நிம்மதியையும் குலைக்காம முடிஞ்ச வரைக்கும் நான் முயற்சி பண்றேன்கா.அவங்க குடும்பம், ஆண்களை மறந்த குடும்பம். நம்ம வீடு Ôஅப்பா’ங்கிற தலைவனால தாங்கப்படற குடும்பம். ரெண்டும், ரெண்டு துருவம். நான் பேலன்ஸ் பண்ண, ட்ரை பண்றேன். நான் புறப்படறேன்கா.’‘அசந்து போய் நின்றாள் அக்கா சொர்ணா..7இரவு அவியிடம் போனில் பேசி, காலை சீக்கிரம் சந்திக்கலாம் என நந்தினி சொல்ல, அவி சீக்கிரமே எழுந்து குளித்து புறப்பட்டான். அவனை அனு எதுவும் கேட்கவில்லை. அப்பா ரவி, வீட்டில்தான் இருந்தார். அவன் போய் அரை மணியிலேயே சொர்ணாவும் நீரஜாவும் வந்தார்கள்.அப்பா, புருவம் உயர்த்தினார்.“நீ இவங்க ரெண்டு பேரையும் வரச் சொன்னியா அனு?’‘“ஆமாங்க. அதுல என்ன தப்பு? இது நம்ம வீடு. நம்ம பொண்ணுங்க இங்கே வர யாரை கேக்கணும்?’‘“அப்படி நான் சொல்லலை. ஆனா, நீ குழம்பியிருக்கே. இப்ப மூணு பேரும் கலந்து பேசினா, குழப்பம் அதிகமாகும் அனு.’‘“நம்ம பையன் மனசு விட்டு எதையும் பேசறதில்லை. நீங்க அழுத்தமா இருக்கீங்க. நான் பேசினா, வாயை அடைச்சிடறீங்க. என்னோட குமுறல்களை என் பொண்ணுங்களை தவிர, நான் யார்கிட்ட சொல்ல முடியும்?’‘“சரி, நீ பேசு. அதனால ஏதாவது உபயோகம் இருக்கா?’‘“அவங்க வீட்டுக்குப் போன நம்மை, அவங்க அவமானப்படுத்தியிருக்காங்க. உங்களை இது பாதிக்கலையா?’‘“அதை நான் அவமானமா நினைக்கலை அனு. அவளுக்கு ஆஃபீஸுக்கு போற அவசரம். டிரெஸ் அவங்க சுதந்திரம். வாங்கற கூறைக்கும் தாலிக்கும் பணம் நாம தந்தாலும், அது அவளுக்கான பொருள்ங்கிற காரணமா, அவளே பார்த்து வாங்கிக்கறா. உபசார வார்த்தைகளை அவ விரும்பலை. மனசுல உள்ளதை அவ சொல்றா. இதுல அவமானம் எங்கே வந்தது? இதப்பாரு அனு... காலங்கள் மாறுது. பத்து வருஷங்களுக்கு முன்னால இருந்த மனநிலை இப்ப உள்ள பெண்களுக்கு இல்லை. நம்ம பொண்ணுங்களும் மாமியாரை, நாத்தனாரை நேசிக்கிறாங்களா? நீங்க மூணு பேரும் ஒண்ணு சேர்ந்தா அவங்க தலைகளை உருட்டாம இருக்கீங்களா? மனசுக்குப் பிடிக்காம உள்ளே சாபம் விட்டுட்டு வெளில நடிக்கிறீங்க. இப்ப உள்ள பொண்ணுங்க நடிக்கிறதில்லை. பிடிக்கலைன்னா, முகத்துக்கு நேரா சொல்லிடறாங்க!’‘“அப்பா... நேத்திக்கு அவியை நான் வரச் சொல்லி, என் வீட்டுக்கு அவன் வந்தான். நான் ஓப்பனா பேசினேன். அவனும் நீங்க பேசற மாதிரிதான் பேசறான். ‘அக்கா... பத்து வருஷங்களுக்கு முன்னால நீங்க இருந்த மாதிரி இப்ப உள்ள பொண்ணுங்க இல்லை’ன்னு சொல்றான்!’‘ சொர்ணா சொல்ல,“நீ ஓப்பனா பேசினே. அவன் பேசினானா?’‘ நீரஜா கேட்க,“அவனும் பேசினான். ஆனா, ஓப்பனா பேசின மாதிரி தெரியலை.’‘“அவ மேல அவனுக்கு அதிருப்தி இருக்கா சொர்ணா?’‘“தெரியலை.’‘“அவனுக்கு இருக்கலாம். ஆனா, நம்மக்கிட்ட சொல்ல மாட்டான். அவளை கல்யாணம் செஞ்சுக்க அவனுக்குத் தடை இல்லை. நம்ம குடும்பம், தலைவனை சார்ந்த குடும்பம். இங்கே அப்பாதான் நாயகன்! ஆனா, அது தலைவன் இல்லாத குடும்பம். அதனால ரெண்டையும் நான் பேலன்ஸ் பண்றேன்னு சொல்றான்.’‘“சபாஷ்! நம்ம அவி தெளிவா இருக்கான். அவன் யாரையும் விட்டுத் தராம இருக்க முயற்சி பண்றான். இந்தக் கல்யாணத்தை அவன் விரும்பறான். இதுக்கு மேல, இது தொடர்பா நாம விவாதிக்கறது அநாகரிகம்னு எனக்குத் தோணுது. விட்ருங்க.’‘“அவங்க வீட்டுக்கு நாம போயும் நந்தினி காட்டின அலட்சியம் அவனை பாதிக்கலையா?’‘“அதை அவன் அலட்சியமா நினைக்கலை. அது அவளோட சுபாவம்னு அவன் நினைக்கிறான்.’‘“இவனை மதிப்பாளா அவ? இல்லை, அவங்கம்மா புருஷனை விரட்டி விட்ட மாதிரி இவளும் செய்வாளா?’‘“அனு... நீ ஓவரா பேசறே. நீதான் ஒரு சமயத்துல, அவங்களை பாவம்னு பாராட்டியிருக்கே. இப்ப பேச்சு மாறுது.’‘“அன்னிக்கு மேம்போக்கா பார்த்தப்ப, எனக்கு விளங்கலை. உள்ளே நுழைஞ்சப்பதானே ஊழல் தெரியுது. அவ நம்மகூட இணங்கி வாழ்வான்னு எனக்கு நம்பிக்கை இல்லை.’‘“ஏன் நீ இப்படி இருக்கே? இது ரொம்ப அபாயகரமான மனப்போக்கு. நம்ம பிள்ளை நிம்மதியை, அவளுக்கு முன்னால நாம குலைச்சிடக்கூடாது. ஒரு சம்பவத்தை வச்சு எடை போடறது ரொம்ப தப்பு.’‘“பல சம்பவங்கள் நடந்து, முழுசா நம்ம பிள்ளையோட நிம்மதி பறி போகணுமா?’‘“என்னால பேச முடியலை. சொர்ணா நீயே பேசு.’‘“அம்மா... நீ பதட்டத்தை விடு. அப்பா சொல்றதுல ஒரு நியாயமும் தொலைநோக்கு சிந்தனையும் இருக்கு. அவனுக்கு எல்லாரோட குணாதிசயங்களும் புரிஞ்சிருக்கு. இல்லைன்னா ‘பேலன்ஸ்’கிற வார்த்தை வராது.’‘“இதையேதான் சொர்ணா நானும் நினைச்சேன்.’‘“எதுக்கு? நம்ம பையன் அழகா இருக்கான். நல்ல படிப்பு, பெரிய சம்பளம், கண்ணியமான குடும்பப் பின்னணி எல்லாம் இவனுக்கு இருக்கு. அப்புறமா எதுக்கு பேலன்ஸ் பண்ணணும்? அவ பக்கம்தான் பலவீனம் அதிகம். அவளோட அப்பா விலகிப்போய், பெண்கள் ராஜ்யம் நடக்கிற குடும்பம் அது. அவதான் வாழ வர்ற இடத்துல பேலன்ஸ் பண்ணணும். இவன் எதுக்கு இறங்கிப் போகணும்?’‘“அனு... நீ நெருப்புல கை வைக்கிற! அவங்க குடும்பப் பின்னணி பற்றி நீ அலசறது சரியில்லை. அது புகைச்சலை அதிகமாக்கும். பிரிவுக்கு வழிவகுக்கும். குடும்பத்துல பேலன்ஸ் தேவைதான். ஆம்பளை ஈகோ இல்லாம பேலன்ஸ் பண்ணினா குடும்ப நிம்மதிக்கு அது நல்லதுதானே?’‘“நீங்க அதைச் செஞ்சீங்களா? நான் உங்களுக்கு வாக்கப்பட்டு இந்த முப்பத்தெட்டு வருஷ காலத்துல, நான்தான் இந்தக் குடும்பத்தை பேலன்ஸ் பண்ணியிருக்கேன். உங்கம்மா, சகோதரிகள் எல்லாரும் என்னை படுத்தின பாடு என்னானு உங்களுக்கே தெரியும். அப்பவும் எங்ன்னைத்தான் ‘அட்ஜஸ்ட் பண்ணி போ’ன்னு நீங்க சொல்லியிருக்கீங்க. அவங்களையும் தட்டிக் கேட்டிருந்தா, அது பேலன்ஸ். இந்த குடும்பத்துல என்னிக்குமே ஆணாதிக்கம்தானே நடக்குது?’‘“என்ன அனு ஓவரா பேசற?’‘“பேசாத மனைவி பேசறப்ப கோபம் வருதா?’‘“அம்மா... என்னாச்சு உனக்கு? அப்பாக்கிட்ட இந்த மாதிரி நீ பேச மாட்டியே. தம்பிக்குக் கல்யாணம் நடக்கப்போற நேரத்துல உங்க மத்தில பிளவு வரலாமா?’‘ அனு அழத் தொடங்கினாள்.“இல்லைடி சொர்ணா... நான் உண்மையைத்தானே சொன்னேன்? இது பொய்யா இருந்தா உங்கப்பா இந்த நேரம் என்னை வெட்டிப் போட்டிருக்க மாட்டாரா? அனுசரணையோட உச்சத்துல நீ இருப்பேன்னு நம்பி உனக்கு ‘அனு’ன்னு பேர் வச்சாங்களான்னு கேட்டவர் உங்கப்பா. இல்லைன்னு சொல்லச் சொல்லு...’‘“உங்கம்மா சொன்ன எதையும் நான் மறுக்கலையே சொர்ணா?’‘“உங்கப்பாவே தலைவனா இருக்கணும். அதைத்தான் நானும் இந்தக் குடும்பமும் விரும்புது. அப்படியிருக்க, என் பிள்ளை மட்டும் எதுக்கு பேலன்ஸ் பண்ணணும்? எனக்குப் புரியலை. என்னை மன்னிச்சிடுங்க... நான் சொல்றது தப்பாக்கூட இருக்கலாம். ஆனா, அல்லி ராஜ்யம் நடக்கற ஒரு குடும்பத்துல, ஆண் வாசனையை மறந்த குடும்பத்துல, அவி போய் சிக்கிட்டானோன்னு எனக்குக் கலக்கமா இருக்கு.’‘“அப்படியெல்லாம் அவசர முடிவை எடுக்க வேண்டாம்மா. இப்ப எல்லா பெண்களும் அப்படித்தான் இருக்காங்க. அவங்க பர்சனல் மேட்டர்ல நாம மூக்கை நுழைக்காம, நாசூக்கா ஒதுங்கினா அது எல்லாருக்கும் நல்லது. நீ மனசுல இப்பவே ஒரு சம்பவத்தை வச்சு கசப்பை வளர்த்தா, அது பெரிசாகி உன் நிம்மதி போயிடும்.’‘“அவியை நான் இழக்கணுமா?’‘“என்னம்மா நீ? பக்குவமில்லாம பேசறே? அவனுக்குனு ஒருத்தி வந்துட்டா, அவளோடதான் அவன் வாழ்க்கை. இதை சகிச்சுக்கிற சக்தி உனக்கு இல்லைன்னா, நீ உன் பிள்ளைக்குக் கல்யாணம் செய்யாம உன் மடியிலதான் அவனை உட்கார வச்சுக்கணும்.’‘“அப்படிச் சொல்ல நான் பைத்தியம் இல்லை. அம்மாவும் மகளுமா சேர்ந்து இவனை அடிமைப்படுத்திடுவாங்களோனு எனக்கு பயம்மா இருக்கு. உங்கப்பா உள்ளே நுழைஞ்சு, ஏன்னு கேட்க அங்கே ஒரு ஆம்பளைகூட இல்லை. என் கவலை அதுதான்.’‘“எல்லாம் அவி பார்த்துப்பான். நான் பேசறேன் அவன்கிட்ட! நீ மனசைப் போட்டுக் குழப்பிக்காம இரு அனு.’‘சொல்லிவிட்டு அப்பா விலகி வந்தாலும், அவருக்குள் ஒரு அச்சம் படரத்தான் செய்தது. அதைத் தடுக்க முடியவில்லை..8அவி, அந்த உணவகத்தில் காத்திருந்தான். நந்தினி பத்து நிமிஷங்கள் தாமதமாக வந்தாள்.“டிபன் ஆர்டர் பண்ணட்டுமா நந்தினி?’‘“எனக்கொரு பொங்கல், வடை மட்டும்.’‘அவனுக்கும் அதையே சொல்லி விட்டு, நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான்.“சொல்லு நந்தினி... எதுக்கு இத்தனை சீக்கிரம் சந்திப்பு?’‘“எதுக்குனு உங்களுக்குத் தெரியலியா அவி? உங்கப்பா, அம்மா உங்கக்கிட்ட எதையுமே சொல்லலியா? நிச்சயமா சொல்லியிருப்பாங்க. நடிக்காதீங்க அவி! எனக்கு பிராக்டிகலா இருந்தாத்தான் பிடிக்கும்.’‘“நீ இத்தனை கோவப்பட என்ன இருக்கு? நான் உன்னை வரச்சொல்லி கூப்பிட்டேனா? நீதானே வரச்சொன்ன? நான் உன்னை வரச்சொல்லியிருந்தா, உன்கிட்ட புகார் படிக்கன்னு நீ நினைக்கலாம். ஆத்திரப்படலாம். ஆனா, நான் அப்படி எந்த ஐடியாவும் வச்சுக்கலியே. அப்புறம் உனக்கேன் கோபம்? சரி, அழைச்சது நீ. காரணத்தை நீயே சொல்றதுதானே முறை?’‘நந்தினி ஆடிப்போனாள். அவசரப்பட்டு விட்டோம் என்று தோன்றியது.“சொல்லு நந்தினி...’‘“ ‘விட்டுக்குடுத்தலும் அனுசரணையும் என்னானு உங்க பொண்ணுக்கு நீங்க புரிய வைங்க’ன்னு உங்கம்மா, எங்கம்மாக்கிட்ட சொன்னாங்களாம். நான் யாரை அனுசரிக்கணும்? எதை விட்டுத்தரணும்?’‘“எங்கம்மா சொன்னது உங்கம்மாக்கிட்ட. இதுக்கு உனக்கு நான் எப்படிப் பதில் சொல்ல முடியும்?’‘“அவங்க வந்தப்ப, நான் வாசல்ல நின்னு வரவேற்கணுமா அவி?’‘“அது உன் விருப்பம்.’‘“தாலி, கூறை ரெண்டும் எனக்கு. அதை என் வசதிக்கு எங்கம்மாவை கடைக்குக் கூட்டிட்டுப் போய், நான் வாங்கறது தப்பா?’‘“வாங்கித் தர்ற பெரியவங்களுக்கு சில எதிர்பார்ப்புகள் இருக்கும் நந்தினி. தாலினு வரும்போது உன் இஷ்டத்துக்கு வாங்க முடியாது. மாமியார் என்ன டிஸைன் மாங்கல்யம் போட்டிருக்காங்களோ, மருமகளும் அதே டிஸைன்லதான் போடணும். இது பாரம்பரிய குடும்பப் பழக்கம். இது சாதாரண நகை இல்லை... தாலி! எங்கம்மா என்ன மாதிரி தாலி அணிஞ்சிருக்காங்கனு உங்க வீட்ல தெரியுமா நந்தினி? அதனாலதான் உங்களையும் கடைக்குக் கூட்டிட்டுப் போகணும்னு விரும்பறாங்க. இதுல தப்பென்ன இருக்கு நந்தினி?’‘அவள் வாயடைத்துப் போனாள்.“அதை வாங்க நல்ல நாளும் நேரமும் பாக்கறது முறையில்லையா?’‘அவள் பேசவில்லை. ஆனால், தன்னை பெற்றவர்களின் நியாயத்தை பொட்டில் அடித்த மாதிரி அவன் சொல்லி விட, அவளால் பதிலே சொல்ல முடியவில்லை. ஒரு குற்ற உணர்ச்சியும், தான் தோற்றதால் உண்டான கோபமும் அவள் முகத்தை மாற்றி வைக்க,“சரி விடு.. உன் மேல நான் குற்றம் சாட்டலை. நீ என்னை கூப்பிட்டு இதைக் கேக்கலைன்னா, நான் சொல்லியே இருக்க மாட்டேன். உனக்கு இது தெரியாம இருக்கலாம். இப்ப தெரிஞ்சுக்கிட்டே. விட்ரு. இயல்பா இருப்போம்.’‘“ஓகே... ஸாரி அவி.’‘“எதுக்கு? நீ ஸாரி சொல்லணும்னு நான் எதிர்பார்க்கலையே நந்தினி?’‘“இல்லை... என் மனசுல பட்டதை நான் சொல்லிடறேன். என் மேல உங்களைப் பெத்தவங்களுக்கு இப்ப ஒரு மாற்றுக் கருத்து உண்டாகியிருக்கும். கல்யாணத்துக்குப் பிறகு அது அதிகமா என் மேல ரிஃப்ளெக்ட் ஆக வாய்ப்பிருக்கு.’‘“அப்படி எதுவும் இல்லை. எனக்கு என் குடும்பத்து மேல சில சமயம் கோபம் வரும். அவங்களுக்கும் என்கிட்ட அதிருப்தி உண்டாகலாம். அதெல்லாம் நீடிக்காது நந்தினி. நீர்க்குமிழி மாதிரி உடைஞ்சு போயிடும். பந்தங்களுக்கு மத்தியில பகை ஏன் வரணும்? உன் மனசை இந்தச் சம்பவம் உறுத்தினா, என்கூட எங்க வீட்டுக்கு வந்து எங்கம்மாக்கிட்ட கை குலுக்கிடு. சரியா போயிடும்.’‘“அதாவது, மன்னிப்புக் கேக்கச் சொல்றீங்களா?’‘“பார்த்தியா? நான் அப்படிச் சொன்னேனா? சிநேகமா கை குலுக்கறதுக்குப் பேரு மன்னிப்பா? சின்ன சிரிப்பும் உன் வரவும் அம்மா கையால குடிக்கிற காஃபியும் எல்லாத்தையும் மறக்கடிக்கும்!’‘“எங்கம்மா, உங்கம்மாக்கிட்ட மன்னிப்புக் கேக்கணும்னு சொன்னாங்க!’‘“அட, அப்படியா?’‘“நான் முடியாதுன்னு சொன்னேன். உன்னையும் யார் கால்லயும் விழ அனுமதிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்.’‘“எதுக்கு இதை இத்தனை சீரியஸா எடுத்துக்கற? சரி, உனக்குப் பிடிக்கலைன்னா, நீ வர வேண்டாம். நீ எப்படியும் கல்யாணம் முடிஞ்சதும் அங்கேதான் வரணும். இப்ப நட்போட ஒரு முறை வந்துட்டா, அப்புறம் வர்றது இன்னும் இதமா இருக்கும். நான் கட்டாயப்படுத்தலை. உன் விருப்பம்.’‘“நான் சுதந்திரமா வளர்ந்தாச்சு அவி. எங்கம்மா சொல்ற சில கருத்துகளுக்கே நான் முரண்படுவேன். சரி, சில சங்கதிகளை இப்பவே பேசி முடிவு செய்யணும்.’‘“சொல்லு நந்தினி...’‘“கல்யாணம் முடிஞ்ச பிறகு நாம உங்க வீட்லதான் இருக்கப் போறோமா?’‘“ஆமாம்! வேற எங்கே போகணும்?’‘“உங்களுக்கு அப்பா, அம்மா ரெண்டு பேரும் இருக்காங்க. இப்பவும் உங்கப்பாதான் குடும்பத் தலைவன்!’‘“அவர் கை நிறைய சம்பாதிச்சு, குடும்பம் நடத்தறார் நந்தினி. உங்க வீட்ல உங்கம்மாதானே நடத்தறாங்க?’‘“நான் அதை மாத்தச் சொல்லலை அவி. யாரோட உரிமையையும் பறிக்கிறதுல எனக்கு உடன்பாடு இல்லை. என் உரிமைகளை அதே மாதிரி நான் விட்டுத்தரவும் மாட்டேன்.’‘“சரி, நீ என்ன சொல்ல வர்றே?’‘“உங்களைச் சுற்றி மனுஷங்க நிறைய. ஆனா, நானும் கல்யாணம் முடிஞ்சு வந்துட்டா, எங்கம்மா தனி மனுஷி ஆகிடுவாங்க. அவங்க பல வருஷங்களா பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. இனிமே தனிமையை அவங்களுக்கு நானும் தர தயாரா இல்லை.’‘“அதனால? நம்ம குடித்தனம் உன் அம்மா வீட்ல ஆரம்பிக்கணும்னு சொல்றியா?’‘அவள் மௌனம் சாதிக்க, அவி அவளுடைய பதிலுக்காக காத்திருந்தான்.“ஏன்? கல்யாணம் நடந்தா, ஒரு பெண்தான் தன் குடும்பத்தை விட்டு, புருஷன் வீட்டுக்கு வரணும்னு இருக்கா? ஆம்பளையும் தன்னோட குடும்பத்தை விட்டுட்டு மனைவி பின்னால வரலாம் இல்லையா? காலம் மாறுது அவி.’‘அவனுடைய மௌனம் தொடர்ந்தது.“பெண்ணும் ஆணுக்கு மேல அதிகமா சம்பாதிக்கறா. பெரிய படிப்புப் படிக்கிறா. பெரிய நிறுவனத்துல தலைமை பதவியில இருக்கா. நாட்டையே ஆண்ட பெண்களும் உண்டு. அவங்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு... இல்லையா?’‘“ஸோ, உன் வீட்டுக்கு நான் வாழ வரணும்னு நீ சொல்ற?’‘“இல்லை அவி. உங்கப்பா ஆளற குடும்பத்துல வந்து வாழ எனக்கு சம்மதமில்லை. அதே மாதிரி எங்கம்மா தலைமையில குடும்பம் நடத்தவும் நான் தயாரா இல்லை.’‘“தனிமையை உங்கம்மாவுக்கு தர நீ தயாரா இல்லைன்னு சொன்னே... இப்ப இப்படிப் பேசற? முரண்பாடா இருக்கு நந்தினி.’‘“இல்லை. நாங்க இப்ப இருக்கிற குடியிருப்புல ஒரு ஃப்ளாட் காலியா இருக்கு. மூணு பெட் ரூம் வீடு. பெரிசாவே இருக்கும். அதை வாடகைக்கு எடுத்து, நம்ம குடித்தனத்தை ஆரம்பிக்கறோம். நாம யார் நிழல்லேயும் நிக்கிறது எனக்குப் பிடிக்கலை. அதை நான் விரும்பலை. எங்கம்மாவோட எதிர் வீடுங்கிற காரணமா, அவங்களையும் தனியா விட்டுட்டு வந்த மாதிரி ஒரு ஃபீல் இருக்காது. என்ன சொல்றீங்க?’‘“உங்கம்மாவை நீ தினசரி பார்க்க எதிர் வீட்ல இருந்தாத்தான் ஆச்சா? இதே உள்ளூர்ல எங்கேயிருந்தாலும் வரலாமில்லையா?’‘“ஏன்? இங்கே வர்றதுல உங்களுக்கு என்ன கஷ்டம்? உங்களை பெத்தவங்க தடை போடுவாங்களா? உங்க கால்ல நிக்க நீங்க விரும்பலையா?’‘“நான் எப்பவுமே என் கால்ல நிக்கறவன்தான் நந்தினி. நீ இனிமேல்தான் என் வாழ்க்கையில வரப்போறே. ஆனா, என்னை பெத்தவங்க இருபத்தி ஏழு வருஷங்களா என்கூட இருக்காங்க. ஒரு முடிவை நீ எடுத்ததும் நான் படக்குன்னு சம்மதம் சொல்லிட முடியாது நந்தினி. யோசிக்கணும். கலந்து பேசணும். அதுதான் முறை!’‘“நீங்க இதைச் சொன்னா உங்கப்பா, அம்மா சம்மதிப்பாங்களா? நிச்சயமா மாட்டாங்க. அவங்களை நீங்க மீற மாட்டீங்க. நான் சொல்றது நடக்காது. அப்படித்தானே அவி?’‘“இரு... உங்கம்மா மன்னிப்புக் கேக்கலாம்னு சொன்னதும் நீ கேட்டியா? அட அதை விடு... நட்போட கை குலுக்க என்கூட வான்னு அழைச்சதும் வந்தியா? மத்தவங்க முடிவுக்கு நீ கட்டுப்பட மாட்டே! ஆனா, நீ கேட்டதும், நான் மட்டும் சரின்னு சொல்லணுமா? எப்படி நந்தினி? என்ன நியாயம் இது?’‘“தனியா ஒரு தாயை விடக்கூடாதுன்னு ஒரு மகள் சொல்றதுல நியாயம் இருக்கா? இல்லையான்னு இந்த உலகத்துல யாரை வேணும்னாலும் கேட்டு பாருங்க. அதுவும் உங்களை எங்கம்மா வீட்ல நான் இருக்க சொல்லலை. கல்யாணம் ஆன அன்னிக்கே தனியா போறதை இங்கே யாருமே செய்யலையா?’‘“நந்தினி... நான் எதையும் மறுக்கலை. ஆனா, பெத்தவங்கக்கிட்ட இதைச் சொல்லாம முடிவெடுக்கிறதுல எனக்கு சம்மதமில்லை.’‘“நான் எங்கம்மாவுக்கு சொல்லாமதானே முடிவெடுத்தேன்?’‘“அது உன் சுபாவம். இது என் இயல்பு. உனக்கு உன் சுதந்திரம் உசத்தினா, எனக்கு என் தீர்மானங்கள் பெரிசு. நீ சொல்ற எல்லாத்துக்கும் யோசிக்காம, நான் உடனே தலையாட்ட முடியாது நந்தினி.’‘அவள் படக்கென எழுந்து விட்டாள்.“போகலாம் அவி. எனக்கு நிறைய வேலையிருக்கு.’‘“ஓகே... ஸீ யூ லேட்டர்.’‘அவனும் வெகு இயல்பாக நகர, நந்தினி அப்படியே நின்றாள். சில நாட்களாக பழகிய பழக்கத்தில், நந்தினி அவனிடம் இதை எதிர்பார்க்கவில்லை. அதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை..9அப்பா ரவி வேலைக்கு புறப்பட, “நீங்க போற வழியில கோயில்ல என்னை இறக்கி விட்ருங்க.’‘“என்ன அனு... ஆண்டவன்கிட்ட அப்பீலா?’‘“வேற வழி? நீங்க என் மனசை புரிஞ்சுக்கிற நிலையில இல்லை. அவி, பேலன்ஸ் பண்றேன்னு ஏதோ சொல்லியிருக்கான். நம்ம பொண்ணுங்க ஒரு கட்டத்துக்கு மேல எதுவும் பேச முடியாது. அப்புறம் கடவுளை தவிர யார்கிட்ட நான் முறையிட முடியும்?’‘“அனு... இத்தனை சீரியஸா நீ யோசிக்கிற அளவுக்கு இதுல பிரச்னை எதுவும் இல்லை. மாங்கல்யம் எங்க வழக்கப்படி எடுக்கணும்னு சொன்னா அவங்க புரிஞ்சுப்பாங்க.’‘“போதுங்க.... பொண்ணு கழுத்துல இன்னும் தாலி ஏறலை. அம்மா கழுத்துல தாலி இருக்கானே தெரியலை. அதனால தாலியைப் பத்தி அந்தக் குடும்பத்துக்குப் புரியவைக்க முடியுமான்னு எனக்குத் தெரியலை.’‘“அனு... ஏன் இப்படிப் பேசற?’‘வாசல் கதவு திறந்திருந்தது.“நான் உள்ளே வரலாமா?’‘குரல் கேட்டு இருவரும் திரும்ப, அதிர்ந்து போனார்கள். நந்தினியின் அம்மா மந்தாகினி நின்றிருந்தாள்.அனுவுக்கு மயக்கமே வந்து விட்டது. ‘தாலி பற்றிய என் கடுமையான விமர்சனம் இந்தம்மா காதில் விழுந்திருக்குமா? ச்சே... கதவு திறந்து கிடக்க, நான் இப்படிக் கவனமில்லாமல் பேசலாமா?Õ“மன்னிக்கணும். ரெண்டு பேரும் வெளியில கிளம்பற மாதிரி தெரியுது. நான் முன்னறிவிப்பு இல்லாம வந்தது தப்புதான்.’‘“அய்யோ... அதெல்லாம் எதுவும் இல்லை. உள்ளே வாங்கம்மா!’‘அப்பா ரவி அழைக்க, சுதாரித்து அனுவும் அழைத்தாள்.“வாங்க... உக்காருங்க.’‘“மாப்ளைக்கு மோதிரம், செயின், பிரேஸ்லெட் வாங்கணும். அவர் ரசனைப்படி வாங்கிக்கட்டும். அதுக்கு பணம் தந்துட்டுப் போகத்தான் வந்தேன். கல்யாண பட்டு வேஷ்டி, ரிசப்ஷன் சூட், மற்ற வைபவங்களுக்கும் அவருக்கு வாங்கணும். நகைகளுக்கு மூணு லட்சமும் டிரெஸ்ஸுக்கு ஒரு லட்சமும் சேர்த்து, நாலு லட்சம் இதுல இருக்கு. வாங்கிக்குங்க.’‘“இதெல்லாம் எதுக்கும்மா?’‘“இது வரதட்சணை இல்லை. ஆசை, முறை... என் மாப்ளைக்கு நான் செய்யற மரியாதை. அவ்ளோதான். வாங்கிக்குங்க.’‘“வாங்க... நீங்களே பூஜை ரூம்ல கொண்டு வந்து வைங்க.’‘“இல்லை. காரணம் எதுவா இருந்தாலும், நான் புருஷனோட வாழாதவ. ஆனா, நீங்க தழைச்சு வாழறீங்க. உங்க கையால வாங்கிக்குங்க. இன்னிக்கு நான் வந்தப்ப கண்ணியமா நடத்தறீங்க. ஆனா, அன்னிக்கு முன்னறிவிப்பு தந்து முறையா கூறை, தாலி பற்றி நீங்க பேச வந்தப்ப, நாங்க சரியா நடந்துகலை. அதுக்கு உங்க ரெண்டு பேர்க்கிட்ட மன்னிப்புக் கேக்கத்தான் முக்கியமா நான் வந்தேன். பாரம்பரியமா வாழற அம்மாவை அவ பாக்கலை.அவமானப்பட்ட அம்மாகூட வாழ்ந்த காரணமா அவளுக்கு உலகம் புரியலை. நான் புரிய வைக்கறேன். விட்டுக் குடுத்தலும் அனுசரணையும் என்னாங்கிறதை நான் அவளுக்குக் கற்பிக்காதது என்னோட தப்புதான். இனிமே சொல்லித் தர்றேன். மன்னிச்சிடுங்க.’Õகை கூப்பி விட்டாள் மந்தாகினி. குரல் இடற, கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தன கண்களின் விளிம்பில். அனு நொந்து போனாள். சட்டென வந்து மந்தாகினியின் கைகளை பற்றினாள்.“அப்படியெல்லாம் பேசாதீங்க. உங்க மனசு, என் வார்த்தைகளால புண்ணாகியிருந்தா, நான் உங்கக்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கறேன். உங்க மேல கடுகளவுகூட எங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் இல்லை. மனுஷ புத்தி, ஆத்திரம் வரும்போது தடுமாறி, தப்புத் தப்பா யோசிக்குது.கோபத்துல நாக்குத் தடம் புரளுது. எங்க மகனுக்கு நந்தினியை ரொம்பப் பிடிச்சிருக்கு. அதுதான் முக்கியம். எல்லாம் சரியாகும். நாம ஒண்ணா கடைக்குப் போகலாம். தாலி, கூறை, அவியோட நகைகள்னு எல்லாத்தையும் ஒரே நாள்ல வாங்கலாம். அதுக்கு இன்னிக்கே, இப்பவே நாள் குறிக்கலாம். நீங்க சாப்பிடாம போகக்கூடாது. உள்ள வாங்க.’‘ஒரு மன்னிப்பு, சகல கோபங்களையும் நொடியில் மாற்றி விட்டது!மந்தாகினியும் சந்தோஷமாகி விட்டாள். அனுவுடன் சமையல் கட்டுக்கு வந்தாள். உதவிகள் செய்தாள்.“அய்யோ... நீங்க ஏன் செய்யணும்?’‘“என்னை நீங்க மூணாவது மனுஷியா நினைச்சா, நான் செய்யலை. இனிமே இந்த வீட்ல நானும் ஒருத்தினு நீங்க நினைச்சா செய்யறேன்.’‘“வாங்க... வந்து சட்னியை அரைங்க.’‘சந்தோஷமாக இருவரும் சிரித்தார்கள்.“சம்பந்தியம்மா...’‘“வேண்டாம். என்னை அனுன்னே கூப்பிடுங்க. நான் உங்களை மந்தானு கூப்பிடறேன். அப்பதான் நெருக்கம் தெரியும்.’‘“சரி அனு. நான் சில விஷயங்களை சொல்லணும். இந்தக் கால பசங்க மனப்போக்கே வேற. பணமோ மற்ற முடிவுகளோ அவங்களுக்குத் தன்னைப் பற்றின சிந்தனைதான். சுயநலம் அதிகம்.பெத்தவங்க, பெரியவங்க கஷ்டங்களை பார்க்க மாட்டாங்க. அவங்க கஷ்டப்படவே பிறந்த மாதிரி எந்த நேரமும் முனகுவாங்க. நேரத்தை பராமரிக்கறது சுத்தமா இல்லை. பெரியவங்களை கலந்து முடிவெடுக்கறது அறவே இல்லை.பெண்களைப் பொறுத்தவரை, மாமியாரை விட அம்மாக்களை அவங்க படுத்தற பாடு கொஞ்சமில்லை. நீங்களும் பெண்ணை பெத்தவங்க. உங்களுக்கும் இது தெரிஞ்சிருக்கும். இது சப்பைக்கட்டோ சுய விளக்கமோ இல்லை. என் மகளைப் பொறுத்தவரைக்கும் அவ எடுக்கற பல முடிவுகளை நான் ஆதரிக்கிறதில்லை. அதுல எனக்கு உடன்பாடும் இல்லை. அவ அதைப் பற்றி கவலைப்படறதும் இல்லை.அதனால உங்க வீட்டுக்கு அவ வாழ வந்தப் பிறகு, உங்களுக்கு அவளை மெச்ச தோணினா, அந்தப் புகழுக்கு சொந்தக்காரி அவ மட்டும்தான். அம்மாவோட வளர்ப்புன்னு என்னை பெருமைப்படுத்தாதீங்க. அதே சமயம் உங்களுக்கு அவ மேல எரிச்சல் ஏற்பட்டா, அதுக்கும் நான் பொறுப்பு இல்லை. நீங்க கணவரை ஒட்டி வாழ்ந்த நல்ல மனைவி. நான் பொறுப்பில்லாத புருஷனுக்கு வாக்கப்பட்ட போராளி. அடுத்த தலைமுறையை தப்பா நான் எடை போடலை. அவங்க புத்திசாலிகள். அவங்க வெற்றிக்கும் தோல்விக்கும் அவங்க மட்டுமே காரணம். பெத்தவங்க நிச்சயமா இல்லை.’‘“சபாஷ்மா!’‘ரவி பின்னால் நின்று கை தட்ட, மந்தா கூச்சத்துடன் திரும்ப,“ஒரு பெண்ணை பெத்த அம்மா, போராடி இத்தனை காலம் வாழ்க்கையை சந்திச்சவங்க, இதை விட அழகா விளக்கம் தர முடியாது. இதுல பல அர்த்தங்கள் இருக்கு. புத்தியுள்ளவங்க புரிஞ்சுக்கணும். எமோஷன், வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் பயன் தராதுன்னு புரிய வைக்கறீங்க.’‘“அய்யோ சார்... என்னை விட உங்களுக்கு உலக அனுபவம் அதிகமா இருக்கும். பெண்ணை, புருஷன் இல்லாம ஆளாக்கின ஒருத்தி, தன்னிலை விளக்கம் தர்றது என் கடமைன்னு நான் கருதினேன். தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க.’‘“எதுக்கு மந்தா, இப்படி பொசுக் பொசுக்குனு மன்னிப்புக் கேக்கறீங்க.’‘“நல்லவங்கக்கிட்ட எத்தனை தடவை மன்னிப்பு கேட்டாலும் அதுல தப்பில்லை!’‘மூன்று பேருமாக உட்கார்ந்து காலை சிற்றுண்டியை சாப்பிட்டார்கள்.“நீங்க பிரமாதமா சமைக்கறீங்க அனு! நான் சுமார்தான். பல நாள் வெளி ஆர்டர். வேலை முடிஞ்சு வர தாமதமாகும். நந்தினியும் சுமார்தான்.’‘“அவ இங்கே வந்தா எதுவும் செய்ய வேண்டாம். நான் செஞ்சுப்பேன். என் பொண்ணுங்களுக்கு நான் செஞ்சுத் தரலியா?’‘மூவரும் உட்கார்ந்து நல்ல நாள், நேரம் குறித்தார்கள், கடைக்குப் போய் தாலி, கூறை வாங்க!“இது அவி, நந்தினிக்கு தோதுப்படுமா?’‘ அனு கேட்க,“நாட்கள் அதிகமில்லை. அவங்க சம்மதிச்சு, வந்துதான் ஆகணும். இந்த மாதிரி சில சங்கதிகளுக்கு பெரியவங்க முடிவை ஏத்துக்கத்தான் வேணும்!’‘மந்தாகினி உறுதியாகச் சொன்னாள்.“சரிம்மா. நீங்க வந்து மனசு விட்டுப் பேசினதுல ஒரு நிறைவு வந்தாச்சு. இனிமே எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்பிக்கை வந்தாச்சு.’‘“நான் உத்தரவு வாங்கிக்கறேன்.’‘மந்தாகினிக்கு, தாம்பூலத்தில் சேலை வைத்துத் தந்தாள் அனு.“எதுக்கு அனு இதெல்லாம்?’‘“இவரோட சகோதரிகள் எப்ப வீட்டுக்கு வந்தாலும், அந்த மரியாதை உண்டு. அந்தப் பட்டியல்ல இப்ப நீங்களும்!’‘மந்தா நெகிழ்ந்து போனாள். வாசல் வரை இருவரும் வந்து வழியனுப்பி விட்டு உள்ளே வந்தார்கள்.“அனு... பாசம் காட்டினா நீ மெழுகா உருகறே. வெறுப்பு வந்தா, பொங்கிக் கொட்டற. உன்னை முழுசா என்னால இப்பக்கூட புரிஞ்சுக்க முடியலை.’‘“மந்தாகினி நல்ல மனுஷிதான். அந்த அளவுக்கு நந்தினி இருப்பாளா?’‘“எதிர்பார்க்காதே. இதுல பத்து சதவிகிதம் கூட அந்தப் பெண் தேறாது. நந்தினி, நமக்கு பல அதிர்ச்சிகளை தரலாம்னு கணிச்சு எத்தனை நாசூக்கா பேசறாங்க மந்தாகினி. நீ அதைப் புரிஞ்சுக்கலையா? ‘என் மகள் கருத்து, என் கருத்து அல்ல!’னு சொல்லிட்டாங்க.’‘“அப்படீன்னா?’‘“நம்ம பையன் சந்தோஷம் முக்கியம் நமக்கு! முடிவுகளை நந்தினிதான் எடுப்பா. அதுக்கு அவி கட்டுப்படுவானா இல்லையாங்கிறது நமக்குத் தெரியாது. இன்னிக்கு பல இடங்கள்ல பெண்ணோட அம்மாக்கள், தங்களோட மகளைத் தூண்டி விட்டு, குடும்பங்களை உடைக்கிறாங்க. பையனை பெத்தவங்களை பிரிக்கிறாங்க. ஆனா, மந்தாகினி நிச்சயமா அதைச் செய்ய மாட்டாங்க. நந்தினியா முடிவெடுத்தா அதுக்கு இவங்களை நாம குறை சொல்ல முடியாது. அவ இங்கே எப்படி வாழ்வான்னு அவங்களால உத்தரவாதம் தர முடியாது. நாம தெளிவாகணும்.’‘“அவிக்குத்தானே அவஸ்தை?’‘“நீ ஆவரேஜ் அம்மாவா இருக்காம கொஞ்சம் மாற்றி யோசி. அது முக்கியம். நம்ம மரியாதையை நாமதான் காப்பாத்திக்கணும். சரியா?’‘அனுவுக்கு அடி வயிற்றில் அமிலம் சுரந்தது..10மந்தாகினி, அரை நாள் வெளி வேலைகளை முடித்துக் கொண்டு, மாலை ஆறு மணிக்கு வீடு திரும்ப, நந்தினி இருந்தாள்.“சீக்கிரமே வந்துட்டியே! நீ இன்னிக்கு ஆஃபீஸுக்குப் போகலியா?’‘“இல்லை. வெளியில கொஞ்சம் வேலை இருந்தது. நீயும் போகலியா?’’“நான் அவியோட அப்பா வீட்டுக்குப் போனேன். அவிக்கு மாப்பிள்ளை நகைகள், டிரெஸ்ஸுக்கு பணம் தரப் போனேன்.’‘“எங்கிட்ட ஏன் சொல்லலை? எவ்வளவு பணம் குடுத்தே?’‘“நாலு லட்சம்.’‘“எதுக்கு அவ்வளவு பணம் தந்தே?’‘“அவிக்கு நகைகள், துணிகள் வாங்க. உனக்கு அவங்க நல்லா செய்யப் போறாங்க. நாம எந்த விதத்திலும் குறையக்கூடாது நந்தினி.’‘“என்கிட்ட நீ கேட்டிருந்தா, இவ்வளவு தொகை தர்றதுக்கு விட்டிருக்க மாட்டேன்.’‘“அதனாலதான் கேக்கலை. நீ சம்பாதிக்கறே. என்னை கேக்கறியா? இது என் சேமிப்புல செய்யறது. உன்னை நான் கேக்க வேண்டிய அவசியம் இல்லை!’‘ நந்தினிக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.“பணத்தை குடுத்துட்டு கையோட கால்லயும் விழுந்தியாக்கும். என் மானத்தையும் அங்கே கடத்தினியா?’‘“நான் யார் கால்லயும் விழலை. அவங்க அதை எதிர்பார்க்கவும் இல்லை. அன்னிக்கு நானும் புத்தி கெட்டு, உன் காற்று என் மேல பட்ட காரணமா, ஆணவமா நடந்தேன். அதுக்கு மன்னிப்பு கேட்டேன். அவங்க நான் போனதுமே எத்தனை கண்ணியமா நடந்துகிட்டாங்கனு தெரியுமா? வீட்ல ஆண்கள் தலைவனா இருந்தா, அங்கே அகங்காரம் இருக்காது போல!’‘“உனக்கு மூளை சலவை நடந்த மாதிரி தெரியுது.’‘“இல்லை... பண்பாடும் பக்குவமும் அடக்கமும் அங்கே அதிகமா இருக்கு. சரி, எதுக்கு நமக்குள்ளே சர்ச்சை? வர்ற ஞாயிறு அன்னிக்குக் கடைக்குப் போறோம். உனக்கும் அவிக்கும் எல்லாமே வாங்கறோம். கடை திறந்ததும், பத்து மணிக்கு ஆரம்பிச்சா, ராத்திரி ஒன்பதுக்குள்ளே, ஒரே நாள்ல கல்யாண ஷாப்பிங் முடிக்கறோம். ரெண்டு குடும்பமும் ஒண்ணா சேர்ந்து போறது சந்தோஷம்தானே?’‘“என்னை நீ கேட்டியா?’‘“எதுக்கு? பாரம்பரியமா கல்யாண பர்ச்சேஸ்னா, பெரியவங்க முடிவெடுக்கிறதுல தப்பில்லை. அவி நிச்சயமா அவரோட பெத்தவங்க பேச்சை கேட்டு வருவார்னு அவங்க உறுதியா இருக்காங்க. என் மகள் என்னை மதிக்க மாட்டான்னு அவமானத்தை எனக்கு நீ தேடித் தரப்போறியா? புருஷனும் புள்ளையும் சேத்தை வாரி பூசியாச்சு. உன் பங்குக்கு நீயும் செய்யணும்னா செஞ்சிடு நந்தினி!’‘அம்மாவின் கரகரத்த குரல் நந்தினியை என்னவோ செய்தது. அருகில் வந்தாள்.“நான் வர மாட்டேன்னு எப்ப சொன்னேன்மா? வர்றேன்!’‘“தேங்க்யூ நந்தினி. அவங்க ரொம்ப நல்ல மனுஷங்க!’‘என ஆரம்பித்து தன்னிடம் பாசம் காட்டி, பேர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருங்கியதைச் சொல்லி, ஒரு சகோதரி ஸ்தானத்தில் வைத்து, தனக்கு தாம்பூலம் வழங்கியதையும் சொன்னாள்.“நல்ல குடும்பம். அங்கே போய் வாழ நீ கொடுத்து வச்சிருக்கே நந்தினி. உன்னை அவங்க நல்லா பார்த்துப்பாங்க.’‘நந்தினி படபடவென கைகளை தட்டி விட்டு, உரக்கச் சிரித்தாள்.“ஏண்டீ இப்ப சிரிச்சே?’‘“என்னை அவங்க நல்லா பார்த்துப்பாங்களா? நான் கைக்குழந்தையா? இல்லை, ஃப்ராக் போட்ட சிறுமியா? என்னை யாரும்மா பார்த்துக்கணும்? சைல்டிஷ்ஷா பேசற. நான் லட்சத்தைத் தொட்டு சம்பாதிக்கிறேன். நான் பத்து பேருக்கு சோறு போடுவேன். உன்னை உன் புருஷன் விட்டுட்டு ஓடினப்ப, யார் பார்த்துக்கிட்டாங்க? உன் பிள்ளை உன் கையை உதறிட்டு போனப்ப நீ கலங்கினியா? தன்னம்பிக்கையோட, தனி ஒருத்தியா நின்னு, மகளையும் வளர்த்த நீயா இப்படி மெச்சூரிட்டி இல்லாம பேசற? நீ எங்கேம்மா தொலைஞ்சு போனே?’‘“நிறுத்துடி. நல்ல குடும்பத்துல தன் மகள் வாக்கப்படும்போது ஒரு நல்ல தாயோட வாய்லேருந்து வர்ற வார்த்தைகள்தான் என் வாய்லயும் வந்திருக்கு. நாமும் பெண்ணா இருக்கப் பழகணும் நந்தினி. உங்கப்பா சரியில்லைன்னா, அதை மட்டுமே அளவுகோலா வச்சு, எல்லா ஆண்களையும் எடை போடறது தப்பு. இந்த மாதிரி பேசறதை நீ இனி விடணும் நந்தினி.’‘“சரி, இன்னிக்கு நீ வேற மாதிரி இருக்கே. உனக்கே இதுலேருந்து மீண்டு வரத்தெரியும். நீ சந்திக்காத போராட்டங்களா?’‘“ஆமாண்டீ. போராடிப் போராடி களைச்சாச்சு. சாஞ்சுக்க தோள் தேடற மனநிலை வந்தாச்சு. இனிமே இந்த வயசுல, அது உன் மூலம் மட்டும்தான் எனக்கு வாய்க்கும். இந்தக் குடும்பம் பாசம் காட்டினப்ப, அந்த நம்பிக்கை எனக்கு வலுவா இருக்கு நந்தினி.’‘“நான் பேச வந்ததை பேசலாமான்னு தெரியலியே?’‘“சொல்லுடி. எங்கிட்ட சொல்லாம நீ யார்கிட்ட சொல்லுவே?’‘காலிங் பெல் அடிக்க, நந்தினி போய் கதவை திறந்தாள். எதிர் வீட்டம்மா நின்றாள்.“நந்தினி... எங்க ஹவுஸ் ஓனர் வந்திருக்கார். நீ சொன்னதை நான் அவர்க்கிட்ட சொன்னேன். அவருக்கு சம்மதம். நீ வந்து பேசலாம்.’‘“நானும் அம்மாவும் வர்றோம். அவரை இருக்கச் சொல்லுங்க.’‘“எனக்கு ஒண்ணும் புரியலியே நந்தினி?’‘“அம்மா... எதிர் வீடு, மூணு பெட்ரூம் ஃப்ளாட்னு உனக்குத் தெரியும். கல்யாணி அக்கா காலி பண்ணிட்டு நாக்பூர் போறாங்க. அந்த வீட்டைத்தான் நான் வாடகைக்குக் கேட்டிருக்கேன்.’‘“யாருக்குடி?’‘“எனக்குத்தான்! கல்யாணம் முடிஞ்சு, நானும் அவியும் குடித்தனம் வரத்தான்.’‘“என்னடி பேசற? இந்த முடிவை எப்ப எடுத்தே? எங்கிட்ட சொல்லவேயில்லையே?’‘“எதுக்கு உனக்கு இத்தனை ஷாக்? கல்யாணம் ஆனதும் தனியா குடும்பம் அமைக்கிறது பெரிய பாதகமா என்ன? இதப் பாரு... நானும் போயிட்டா, நீ தனி மனுஷி ஆகிடுவே. அதுக்காக நம்ம வீட்லயே வந்தா, அவிக்கு மட்டுமில்லை, இனி எனக்கும் சரிப்படாது. ஆனா, உன் பக்கத்துல, உனக்கு பக்கபலமா இருக்கணும். அதனாலதான் இந்த ஏற்பாடு.’‘“இதை அவிக்கிட்ட சொன்னியா?’‘“இன்னிக்கு காலையிலதான் சொன்னேன்.’‘“அவர் உடனே சம்மதிச்சாரா?’‘“அவரும் சராசரி ஆம்பளைதானே? சம்மதிச்சிடுவாரா என்ன? வீட்ல விவாதிச்சிட்டு சொல்றேன்னு சொன்னார்.’‘“அதுதான் நியாயம்! நம்ம பார்வையில எல்லா ஆண்களும் தப்பா இருக்காங்க. ஆனா, பெத்தவங்களை மதிக்கற மனசு பெண்களை விட ஆண்களுக்கு இருக்கு! அவங்களை கேக்காம அவர் முடிவெடுக்க தயாரா இல்லை. ஆனா நீ? முடிவெடுத்தப் பிறகு எங்கிட்ட சொல்றியே... சரி, எதுவா இருந்தாலும் அவி இதுக்கு சம்மதிக்க மாட்டார்.’‘“ஏன்? அவி சம்மதிக்க மாட்டாரா? இல்லை... அவரை பெத்தவங்க சம்மதம் கிடைக்காதா?’‘“அது எனக்குத் தெரியாதுடி. ஆனா, இதுக்கு என் சம்மதம் நிச்சயமா இல்லை.’‘“சூப்பர்! உனக்காக, உன்னை விட்டுப் பிரியாம, கண் முழிச்சதும் உன் முகத்துல முழிக்கணும்னு நான் இங்கே குடித்தனம் வர நினைச்சா, நீ இப்படியா என்னை அசிங்கப்படுத்துவே?’‘“நான் அசிங்கப்படுத்தலை நந்தினி. புரிஞ்சுக்கோ... அருமையான புகுந்த வீடு அமையும்போது, முதல் நாளே அதை ஏன் உதறித் தனியா வரணும்? வாழத் தொடங்கி, நெளிவு சுளிவுகள் தெரிஞ்ச பிறகு அதுக்கு தக்க முடிவுகளை எடுக்கலாமில்லையா? இப்பவே நீ அவசரப்பட்டா, உனக்கும் கெட்ட பேரு. எனக்கும் அது கௌரவமில்லைம்மா.’‘“ஏம்மா... கல்யாணமானவங்க தனியா வர்றதுல தாயோட கௌரவம் என்ன பாதிக்கப்படப் போகுது?’‘“புரிஞ்சுக்கோ நந்தினி. நம்ம சமூக அமைப்புல, பெண் புகுந்த வீட்டுக்கு வாழப்போறதுதான் அழகு. அதை மாற்றும்போது சன்னமா மனசுல ஒரு விரிசல் விழுமில்லையா?’‘“விமானம் ஏறி வெளிநாட்டுக்குப் போனா அது இயல்பு. உள்ளூரா இருந்தா விரிசலா? நீயாம்மா இத்தனை கட்டுப்பெட்டித்தனமா யோசிக்கற? இதப்பாரு... நான் எதிர் வீட்டை பார்க்கப் போறேன். நீ வர்றியா? இல்லையா?’‘“நான் வரலை. ஆனா, அவி சம்மதம் சொல்லாம, வீட்டை நீ எப்படி முடிவு செய்வே? அவி வேண்டாம்னா என்ன செய்வே?’‘“அவி வருவார். வந்தாகணும். வரவைப்பேன்.’‘சொல்லிவிட்டு அவள் எதிர் வீட்டுக்குப் போக, மந்தாகினி ஆடிப் போனாள்..11இரவு உணவை பரிமாறிக் கொண்டே, அம்மா அனு, மந்தாகினியை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தாள்.“நான்கூட அவசரப்பட்டு அவங்களை தப்பா எடை போட்டுட்டேன் அவி. ஆனா, அவங்க அப்படி இல்லை. ஆம்பளை உள்ள வீட்லகூட இத்தனை சீதனம் தர்றதில்லை. எந்தக் குறையும் வைக்காம தனியொரு பெண் இப்படி நடத்தறது ஆச்சரியம்! ரொம்ப வெளிப்படையான மனசு. மன்னிப்பும் கேக்கறாங்க.’‘அப்பாவும்கூட, நந்தினி அம்மாவை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார்.“நீ என்னடா எதுவும் பேசமாட்டேன்கிற? ஞாயிறு கடைக்குப் போகலாமில்லையா?’‘“நான் தயார்மா. நந்தினி வருவாளான்னு எனக்குத் தெரியாது.’‘“என்னடா இப்படிப் பேசற? நீ வரும்போது அவ வர மாட்டாளா?’‘“அம்மா... அப்பா நடந்தா, அவரோட காலடி சுவடுகளை பின்பற்றி நீ வரலாம். இப்பல்லாம் அப்படி நடக்காது. இங்கே எல்லாரும் தனி மனுஷங்கதான். ஒரு தாலியை கட்டிட்ட காரணமா, கையை காலை கட்டிட முடியாது. யாரையும் எதுக்கும் கட்டாயப்படுத்த முடியாது. அவரவர் சுதந்திரம்னு ஒண்ணு உண்டு. அதுக்குள்ளே நுழைய யாருக்கும் இங்கே அனுமதி இல்லைம்மா. அவகிட்ட நான் பேசறேன். அவ வரலைன்னாலும், நான் வர்றேன்.’‘சாப்பிட்டு முடித்து எழுந்து போனான்.“என்னங்க... இவன் இப்படிப் பேசறான்?’‘“முன்னமே அழகா தன்னிலை விளக்கம் தரலியா மந்தாகினி? நாம பார்க்க வேண்டியது நிறைய இருக்கு அனு. பொறுத்திருந்து பாரு.’‘உள்ளே வந்து கதவை சாத்திக் கொண்டான் அவி.காலையில் நந்தினி பேசியது உள்ளே ஓடிக்கொண்டிருந்தது. அவள் தனியாக போவதில், அதுவும் அம்மா வீட்டுக்கு எதிரில் குடித்தனம் போவதில் குறியாக இருப்பது தெரிந்தது. சொர்ணா அக்கா இவனிடம் பேசும்போது சொன்ன ஒரு வாக்கியம் உள்ளே அவிக்கு நெருடியது.“தம்பி... நான் இப்படிச் சொல்றேன்னு நினைக்காதே. எல்லா அம்மாக்களுக்குமே ஒரு குசும்புத்தனம் உண்டு. அதுக்கு நம்ம அம்மாவும் விதிவிலக்கில்லை. ஆனா, நம்ம வீட்ல ஒரு எல்லைக்கு மேல அம்மாவை பேச அப்பா விட மாட்டார். ஆனா, இது அப்பா இல்லாத குடும்பம். அதனால நந்தினிக்கு அவங்கம்மா என்ன போதனை தருவாங்கன்னு தெரியாதில்லையா? ஆண் வாசனை இல்லாத குடும்பம்.’‘“ஒருவேளை, நீ என் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என மறைமுகமாக நந்தினியை அவள் அம்மா தூண்டுகிறார்களா? நந்தினிக்கு தாயின் இன்ஃப்ளுயென்ஸ் கூடுதலாக இருக்க வாய்ப்பு அதிகம். நான் அவள் மேல் கோபப்படாமல் இதைச் சாதுர்யமாக அணுக வேண்டுமோ?’‘வீட்டுக்கு வரும் வரை இதைத்தான் நினைத்தான். ஆனால், வந்தப் பிறகு நந்தினியின் அம்மாவை இருவரும் உச்சியில் வைத்து கொண்டாட, தன் செயலுக்கு மன்னிப்பும் கேட்டு, மாப்பிள்ளைக்கு சீதனமும் தந்து இவர்களுடன் ஒன்று கலந்ததை கண்டதும் அவிக்குக் குழம்பிப் போனது. கொஞ்சம் யோசித்தான். நந்தினி வீட்டுக்கு எதிரே குடித்தனம் போவதில் அவள் அம்மாவுக்கு உடன்பாடு இல்லையோ? இது நந்தினியின் ஏற்பாடுதானா? இருக்கலாம். நந்தினி சுயநலமான பெண்தான்.ஆசையுடன் இவன் வாங்கிய பரிசை திருப்பித் தரும்படி சொன்னவள்தானே? நிச்சயமா இதை அம்மா சொல்லியிருக்க வாய்ப்பில்லை. நம் எந்த ஒரு செயலுக்கும் பெரியவர்கள் மேல் பழி போடக்கூடாது.நந்தினிக்கு போன் போட்டான். உடனே எடுக்கவில்லை. அடுத்தடுத்த அழைப்பை அவள் ஏற்கவில்லை.“நான் பளிச்சென பேசிவிட்டு வந்தது பிடிக்கலையோ? அவளுடைய தனிக்குடித்தன விருப்பத்துக்கு நான் செவி சாய்க்காதது அவளை பாதித்து விட்டதா? அப்படியெல்லாம் கோவப்பட்டா, அந்தக் கோபத்தை நான் மதிக்க வேண்டிய அவசியமில்லை. விளக்கை அணைத்து படுத்து விட்டான்.நந்தினி எதிர் வீட்டுக்குப் போகும்போது மொபைலை கொண்டு போகவில்லை. சைலன்டில் போட்டிருந்த காரணத்தால் அது அடிக்கவில்லை.எதிர் வீட்டை நந்தினி பார்த்திருந்தாலும், நன்றாக ஒரு முறை பார்த்துக் கொண்டாள். இருவருக்கு அது பெரிய வீடுதான். ஓனரிடம் வந்தாள்.“சொல்லுங்க சார்.’‘“முதல்ல வாழ்த்துகள்மா. உங்களுக்கு அது சொந்த வீடு. ரெண்டு பெட் ரூம் வீடு. உனக்கு கல்யாணமாகி அம்மா வீட்டுக்கு எதிர்ல உள்ள என் வீட்டுக்கு நீ வாடகைக்கு வர்றது சந்தோஷம். வாழ்த்துகள். உங்க குடும்பம் பத்தி பதினஞ்சு வருஷங்களா எனக்குத் தெரியும்!கல்யாணி இப்ப இருபதாயிரம் வாடகை தர்றாங்க. உனக்கு நான் ஏத்தலை. அதையே குடு. ஆறு மாச முன் பணம் வேணும். எப்ப தருவே?’‘“நல்ல நாள் பார்த்து சார்.’‘“நாளைக்கே அற்புதமான நாள். கல்யாணமான உடனே குடித்தனம் வந்துடுவீங்களா? பால் காய்ச்சிக் குடிக்கிறதும் அப்பத்தானா?’‘“நாளைக்கே நான் சொல்லிடறேன்.’‘“இந்த வீட்டை என் நண்பரும் கேக்கறார். நீ நாளைக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டா, அவருக்கு இல்லைன்னு நான் சொல்லிடுவேன்மா.’‘“காலையில பேசறேன் சார்.’‘தன் வீட்டுக்கு வந்து விட்டாள்.“என்ன பேசிட்டு வந்தே நந்தினி?’‘“நாளைக்கு அட்வான்ஸ் குடுக்க போறேன்மா.’‘“என்னடீ சொல்ற? நீ முடிவே பண்ணியாச்சா? இன்னும் மாப்ளைக்குச் சொல்லலை.’‘“இப்ப சொன்னா ஆச்சு!’‘“அவர் சம்மதிப்பார்னு எனக்குத் தோணலை. அப்படியே ஆனாலும் பெத்தவங்களை கேக்க வேண்டாமா நந்தினி?’‘“பெத்தவங்க பத்து கிலோ மீட்டர் தாண்டியா வாழறாங்க? அதே வீட்லதானே இருக்காங்க.கேக்கறது கஷ்டமா? நான் எடுக்கற முடிவுக்கு அவங்க சம்மதம் எதுக்கு? முன் பணம்கூட, என் பணம்தான். மத்தவங்க அனுமதி எதுக்கு?’‘“நீ தப்பு பண்றே நந்தினி. கழுத்துல தாலி ஏறும் முன்னால இத்தனை ஆணவம் கூடாது. அது நல்லதுக்கு இல்லை!’‘“நிறுத்தும்மா... இதுல ஆணவம் எங்கே வந்தது? என் குடித்தனம் பத்தி முடிவு பண்ற உரிமை எனக்கில்லையா?’‘“உன் புருஷனா வரப்போற அவி சம்மதிக்க வேண்டாமா?’‘“அவரை சம்மதிக்க வைக்கிறது என் வேலை. நீயேன் கவலைப்படற? பேசாம இரு. நான் பார்த்துக்கறேன்.’‘அவள், போனை பார்த்தாள். அவி மூன்று முறை முயன்றது தெரிந்தது. அவளே அடிக்க, அவி எடுத்தான்.“ஸாரி அவி, நான் போனை வீட்ல வச்சிட்டு வெளியில போயிட்டேன். இப்பத்தான் பார்த்தேன்.’‘“உங்கம்மா, எங்க வீட்டுக்கு வந்தாங்களாம்.’‘“எல்லாம் சொன்னாங்க. ரெண்டு அம்மாக்களும் கட்டி புரளாத குறைதான். ஞாயிறு கடைக்குப் போற செய்திதானே? போகலாம் அவி. நான் ரெடி!’‘அவிக்கு ஆச்சரியம். அவள் மறுப்பாள் என நினைத்தான். உடனே சரியென்று சொல்லி விட்டாள்.இதை அவி எதிர்பார்க்கவில்லை. ‘நாம கொஞ்சம் திடமாக பேசியதால் இறங்கி வர்றாளா?Õ என்று யோசித்தான்.“சரி நந்தினி, வேற ஒண்ணுமில்லை. நான் தூங்கப் போறேன்.’‘“இருங்க அவி... நான் முக்கியமான விஷயம் பேசணும்.’‘“சொல்லு நந்தினி.’‘“நான் காலையில உங்கக்கிட்ட சொன்னேனே அந்த எதிர் வீடு... அதைப் பேசி முடிச்சிட்டேன். நாளைக்கு அட்வான்ஸ் தரச் சொல்லியிருக்கார் அந்த ஓனர்.’‘“அப்படியெல்லாம் அவசரப்பட முடியாது நந்தினி. அந்த வீடு வேண்டாம்.’‘“அவி... என்ன பேசறீங்க? அம்மா எதிர்ல இருக்கணும்னுதானே, அந்த வீட்டை நான் புடிச்சேன்? நாளைக்கு முன் பணம் தரலைன்னா, அந்த வீடு கையை விட்டுப் போயிடும் அவி.’‘“போகட்டும் விடு.’‘“நெவர். என்ன பேசறீங்க? உங்கப்பா, அம்மாக்கிட்ட பேசி, அவங்க வேண்டாம்னு சொன்னாங்களா?’‘“கொஞ்சம் இரு. அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதே. அவங்கக்கிட்ட இன்னும் இதைப் பத்தி நான் சொல்லவேயில்லை. அது சரி, உங்கம்மா உன் கூடத்தானே இருக்காங்க? அவங்க இதுக்கு சம்மதம்னு சொன்னாங்களா?’‘“அவங்க சம்மதம் இல்லை. உங்க வீட்டுக்கு வந்து, தன் மூளையை கழட்டி, உங்கம்மாக்கிட்ட தந்துட்டு வந்திருக்காங்களே... அப்புறமா எப்படிச் சம்மதிப்பாங்க?’‘“முடிஞ்சு போச்சா?’‘“எது முடிஞ்சு போச்சு அவி? இது நம்ம குடித்தனம். இதுக்கு எங்கம்மா சம்மதம் அவசியமில்லை சார்.’‘“ஒப்புக்கறேன். என் சம்மதம் வேணுமில்லையா? நானும் நீயும் நடத்தப்போற குடும்பத்துக்கு என் சம்மதம் வேணுமில்லையா? ஏன் எங்கப்பா, அம்மாக்கிட்ட சொல்லலை? எனக்குச் சம்மதம்னா, அவங்க அனுமதிக்காக நான் காத்திருக்க மாட்டேன். எனக்கே விருப்பமில்லை. அப்புறமா அவங்கக்கிட்ட ஏன் சொல்லணும்? அதான் சொல்லலை.’‘“ஏன் நீங்க சம்மதிக்கலை?’‘அவள் இதை உரக்கக் கேட்டது மந்தாகினியின் காதில் விழுந்தது. அவி இதை ஏற்கவில்லை என தெரிந்ததும், அம்மா மனசு சந்தோஷப்பட்டது. கூடவே கவலையும் வந்தது. இவள் மோசமான பிடிவாதக்காரி. தான் நினைத்ததை அத்தனை சுலபத்தில் சாதிக்காமல் விட மாட்டாள். அதற்காகப் போராடுவாள். எந்த எல்லைக்கும் போவாள். அங்கே விவாதம் அனல் பறந்தது.“ஏன் நீங்க சம்மதிக்கலை?’‘“எனக்கு இப்ப தனிக்குடித்தனம் அவசியம்னு தோணலை.’‘“எனக்குத் தோணுதே.’‘“அப்ப நீ தனியா போயிடு. நான் தடுக்கலை.’‘“தப்பாப் பேசறீங்க அவி.’‘“நந்தினி... நீ கோவப்பட்டதால உபயோகமில்லை. கல்யாணம் ஒரு கை ஓசை இல்லை. ரெண்டு கை தட்டற தாளம். தாம்பத்திய சங்கீதம். இதுல ஒருத்தர் முடிவு விவேகமல்ல. காலம் முழுக்க எங்க வீட்ல கூட்டுக்குடித்தனமா நீ இருக்கணும்னு நான் சொல்லலை. திடீர்னு நீ காலையில முடிவெடுத்து, சாயங்காலம் வீட்டை பார்த்து, மறு நாள் முன் பணம் தர்ற அளவுக்கு வேகம் வேண்டாம். இது குடும்பம்.உங்கம்மா போராடி வாழ்க்கையைப் பார்க்கிறவங்க. இதுக்கு சம்மதிக்கலை. எங்கம்மா, அப்பாவுக்கு விவரமே தெரியாது. வாழப்போற அந்த வீட்டை நான் இன்னும் பார்க்கலை. அப்படியிருக்க, நீ ஒருத்தியா எல்லா முடிவுகளையும் ஒரே நாள்ல எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?தனி மனித அவசர முடிவுகள், ரொம்ப தப்பா முடிஞ்சிடும் நந்தினி. இப்பவும் இந்த முடிவை நீ எடுத்த காரணமா உங்கிட்ட நான் கோவப்படலை. குளிர்க்காலத்துல குழந்தை ஐஸ்க்ரீம் கேக்கற மாதிரி. இப்ப வேணும்னு அது பிடிவாதம் புடிச்சா, வாங்கித் தர முடியுமா? அதோட ஆரோக்கியம், பெத்தவங்களுக்கு முக்கியம். வாழ்க்கை ஆரோக்கியமா இருக்கணும்னா தனி மனித பிடிவாதம் கூடாது நந்தினி. குட் நைட். நாளைக்குப் பேசிக்கலாம்.’‘போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டான். நந்தினி எரிமலையாக சீறிக்கொண்டிருந்தாள்..12அம்மா மந்தாகினிக்கு, அவன் மறுத்து விட்டான் என்பது தெரிந்தது. நந்தினி அது பற்றி அம்மாவிடம் எதுவும் பேசவில்லை. தன்னுடைய அறைக்குப் போய் தாளிட்டுக் கொண்டாள்.அம்மாவுக்குக் கலக்கமாக இருந்தது. நந்தினி நினைத்தது நடக்கா விட்டால், அதை நடத்த எல்லாவித முயற்சிகளையும் எடுப்பாள். அதற்காக எந்த எதிர்ப்புக்கும் தயாராக இருப்பாள். தன்னுடைய எண்ணம் நிறைவேறா விட்டால், அவர்களை வெறுத்து ஒதுக்குவாள். நாளை விடியல் எப்படி இருக்கும் என மந்தாகினிக்குக் கலவரமாக இருந்தது. கல்யாணத்தை நடத்த விடாமல் ரகளை செய்வாளா?ஞாயிறு அவள் கடைக்கு வருவாள் என தோன்றவில்லை. அதற்கு என்ன காரணம் சொல்ல போகிறாள்? அப்பா ஓடிப் போனதால் உண்டான மனக்கசப்பை இவளிடம் பகிர்ந்து, எல்லா ஆண்களையும் தப்பாக விமர்சனம் செய்ததால் வந்த விபரீதம், மூர்க்கமாக உருவாகி விட்டாள் நந்தினி. இதை அவியால் மாற்ற முடியுமா?நல்ல குடும்பம். அனுசரணையான பெரியவர்கள். அவர்களோடு இணக்கமாக வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும். நாளை நந்தினியின் மூடை பார்த்து நான் பேச வேண்டும். என்னை தவிர அவளுக்கு நல்லதை எடுத்துச் சொல்ல ஆளில்லை. அவள் நிம்மதியாக வாழ்வதற்கு, நான் அவளுக்குப் பகையாக மாறினாலும் தப்பில்லை.மந்தாகினி உறங்கவேயில்லை. காலை தாமதமாக கண் விழித்தாள். நந்தினி வீட்டில் இல்லை.இத்தனை சீக்கிரம் எங்கே போனாள் என தெரியவில்லை. மந்தாகினி குளித்து விட்டு வர, நந்தினி இயல்பாக இருந்தாள்.“டிபன் எடுத்து வைம்மா. நான் ஆஃபீஸுக்குப் போகணும்.’‘அவளிடம் எந்த ஒரு கோபமும் தெரியவில்லை. ஆவேசத்தில் இருந்தால் சாப்பிட மாட்டாள். அவளாக பிரச்னை பண்ணாத வரை நான் குத்திக் கிளறக் கூடாது. அவி சொன்னதை ஏற்றுக் கொண்டு விட்டாளா? அவளுடைய தனிக்குடித்தன விருப்பத்துக்கு, பெற்ற அம்மா உள்பட, யார் ஆதரவும் இல்லை என தெரிந்ததும், பின்வாங்கி விட்டாளா? அப்படியானால் நல்லது.அவி நல்லவன். அதனால் அவியின் கை ஓங்கினால் தப்பில்லை. நல்ல ஆண்கள் தலைமை பொறுப்பை ஏற்கும் குடும்பம், சமூகத்தில் மரியாதையுடன் இருக்கும். பெண் உசத்திதான். ஆனால், தலைமையை அவர்களிடம் தந்து அடி பணிந்தால், பத்துக்கு எட்டு கூத்தாடும். ஆண்களை காலடியில் போட்டு மிதிக்கும். உனக்கு எதுவும் தெரியாது என ஓரம் கட்டும். அல்லி ராஜ்யம் தொடங்கும். பெட்டி கோட் அரசாங்கம் ஆரோக்கியமானதல்ல.நந்தினி உணவு முடித்து புறப்பட்டு விட்டாள். அவள் ஆஃபீஸ் போனதும், அவி போன் செய்தான்.“நான் உங்க ஆஃபீஸ் வாசல்ல இருக்கேன். மேலே வரவா?’‘“நான் இறங்கி வர்றேன் அவி.’‘அவளுடைய மனநிலையை தெரிந்து கொள்ளத்தான் அவி வந்தான். நந்தினி இயல்பாக இருந்தாள்.“நேத்திக்கு ஆன்லைன்ல லேடீஸ் வாட்ச் ஒண்ணு வாங்கினேன். உனக்குப் பிடிச்சிருக்கா பாரு...’‘“அழகா இருக்கே!’‘இருக்கும் வாட்சை கழட்டி உடனே இதைக் கட்டிக் கொண்டாள்.“தேங்க்யூ அவி!’‘“சரி, நீ போ. நானும் வேலையை பார்க்கறேன். ஞாயிறு ப்ரோக்ராம் கன்ஃபர்ம்தானே?’‘“அதுல எதுக்கு சந்தேகம்? கண்டிப்பா போறோம். பெரியவங்க முடிவு செஞ்ச பிறகு அதை மாற்ற முடியுமா?’‘ சொல்லி விட்டு அவள் போக,‘இவ இயல்பா சொல்றாளா? இல்லை, இதுல ஊசி இருக்கா? ச்சே... நான் ஏன் தேவையில்லாம சந்தேகப்படணும்? தனிக்குடித்தன எண்ணத்தை கைவிட்டிருக்கலாம். தன்னோட அம்மாவும் அதை ஏற்கலைன்னு ஆனப்ப, எதிர்க்க வேண்டாம்னு கருதியிருக்கலாம். நியாயத்துக்கு அடிப்பணிஞ்சா நல்லதுதானே? அவளோட அம்மாவால உண்டான மன மாற்றமா இது? எப்படி இருந்தா என்ன?’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.அடுத்த மூன்று நாட்கள் ஓடி, சனி இரவு வர, மந்தாகினி, அனுவிடம் ப்ரோக்ராம் கேட்டுக்கொண்டாள்.“நந்தினி... நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கு நம்மை அவி வந்து கார்ல பிக்கப் பண்றாராம். நேரா ஓட்டலுக்கு போய், அஞ்சு பேரும் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு, ஷாப்பிங்கை ஆரம்பிக்கறோம்னு அனு சொன்னாங்க.’‘“சரிம்மா. எட்டரைக்கு ரெடியா இருக்கணுமா?’‘“ம்... போதும் நந்தினி.’‘காலையில் சீக்கிரமே எழுந்து மந்தாகினி குளித்து விளக்கேற்றி, சாமியை தொழுதாள்.‘தெய்வமே! என் மகள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் எல்லாத்துக்கும் இணங்கி வர்றா. அவளுக்குப் புத்தியில ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கு. அதைக் கொண்டு வந்தது நீதான். இதை நீடிக்க வை. அவ சந்தோஷமா வாழ்ந்தா, இத்தனை நாள், நான் பட்ட காயங்களுக்கு அது மருந்தா இருக்கும்!Õமகளை எழுப்பி, குளிக்க வைத்தாள். காலிங் பெல் அடிக்க, திறந்தால் எதிர் வீட்டு கல்யாணி.“நாங்க இன்னிக்கு காலி பண்றோம். பேக்கர்ஸ் கம்பெனி வந்தாச்சு. உங்கக்கிட்ட சொல்லிக்கத்தான் வந்தேன். சாவியை ஓனர் உங்கக்கிட்ட தரச் சொன்னார்.’‘“நந்தினி கல்யாணத்துக்கு வாங்க.’‘“உடனே வர்றது சிரமம். நாங்க அப்புறமா வந்து பார்க்கிறோம்.’Õநந்தினி வெளியே ஓடி வந்தாள். அதில் பதட்டம் இருந்ததை அம்மா கவனித்தாள். கல்யாணி, நந்தினியிடம் சொல்லி கொண்டாள்.“சாவியை அம்மாக்கிட்ட குடுத்திருக்கேன் நந்தினி. நான் வர்றேன்!’‘ அவள் போனதும்,“சாவி சங்கதியை உங்கிட்ட ஏன் சொல்றா கல்யாணி?’‘“ஓனர், நல்ல பார்ட்டியா சொல்லுங்கன்னு எங்கிட்ட சொன்னார்.’‘“நீ வேண்டாம்னு சொல்லிட்டே இல்லையா?’‘நந்தினி பதில் சொல்வதற்குள் போன் அடித்தது.“சொல்லுங்க அவி. நாங்க ரெடி. பத்து நிமிஷத்துல வந்துடுவீங்கள்ல? வாசலுக்கு வந்துடறோம்.’‘“மூணு பேரும் உள்ளே வரட்டும் நந்தினி.’‘“லேட்டாயிரும்னு அவி வாசலுக்கு வரச் சொன்னார்மா.’‘அவர்கள் வர, காரில் ஏறிக் கொண்டார்கள். அவி ஓட்ட, அப்பா முன்னால் இருந்தார். அனு, மந்தாவின் கைகளைப் பிடித்து கொண்டாள். நந்தினியும் ஏற, கார் புறப்பட்டது.ஓட்டலில், அதன் பிறகு கடைகளில் நந்தினி அதிகம் பேசவில்லை. சிரிக்கும் இயல்பு அவளுக்கு எப்போதுமே இல்லை. ஆனால், எதையும் நிராகரிக்கவில்லை. தாலி தவிர அவளுக்கு நெக்லஸ், வளையல்கள், ஹாரம் என நிறைய நகைகளை அனு வாங்கினாள். அவளுடைய விருப்பத்தைக் கேட்டு அவளையே தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். பட்டுச்சேலை கடைகளிலும் அதேதான். அவளை சுதந்திரமாக விட்டார்கள்.மாப்பிள்ளைக்கு செயின், மோதிரம் என நிறைய வாங்கினார்கள். அவிக்கும் துணிகள். பெரியவர்களுக்கு, வீட்டு பெண்களுக்கு என துணிமணிகள் வாங்கினார்கள். அவள் அவியிடம்கூட தனியாக பேச முயற்சிக்கவில்லை. அவன் அப்பா, அம்மாவிடமும் அதிகமாக பேசவில்லை.அளவாக ஒரு சில வார்த்தைகள். அனுவுக்கு அது கொஞ்சம் குறையாக இருந்தது. வரப்போகும் மருமகள் நிறைய பேசி, கலகலப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தாள். அதை மந்தாகினி புரிந்து கொண்டாள். நந்தினியிடம் அதைச் சொல்ல போக, வேதாளம் முருங்கை மரம் ஏறக்கூடாது என அமைதி காத்தாள்.பல லட்சங்கள் செலவு செய்தார்கள். மந்தாகினியும்கொஞ்சமும் சளைக்காமல் செலவழித்தாள். இரவு உணவையும் முடித்துக் கொண்டு, பத்தரை மணிக்கு அம்மா, மகளை அவர்கள் வீட்டில் விட்ட பிறகு அவி, காரை எடுத்தான்.எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், இப்படி நந்தினி இருந்த இந்தச் சில மாதங்களில் அவன் பார்க்கவில்லை. மற்றவர்களை பொருட்படுத்தாமல் அவனுடன் தனியாக வந்து நிற்பாள். இங்கு அதையும் செய்யவில்லை. இந்த அமைதிக்கான காரணம் புரியவில்லை.இதே சந்தேகம் அம்மா மந்தாகினிக்கும் நிறையவே இருந்தது. ஏதாவதொரு புயலுக்கான அறிகுறியா இது?.13“இப்ப உனக்கு மனசுக்கு திருப்தியா அனு?’‘ அப்பா கேட்க,“அவ கடைக்கு வந்து, நாம வாங்கித் தந்ததையெல்லாம் சந்தோஷமா ஏத்துக்கிட்டதுல எனக்கும் திருப்திதான்.’‘“நீதான் அவளுக்கு முழு சுதந்திரம் தந்து, அவளை இயல்பா விட்டுட்டியே.’‘“ஆமாங்க... சின்னப்பொண்ணு. நானும் ரெண்டு பொண்ணுங்களுக்கு அம்மா. எனக்கும் அவங்க மனப்போக்கு தெரியாதா? அதெல்லாம் சரிதான். ஆனா, ஒரு நாள் முழுக்க, ஏறத்தாழ பன்னிரண்டு மணி நேரம் ஒண்ணா இருந்திருக்கோம்.மூணு வேளை ஒண்ணா ஒக்காந்து சாப்பிட்டிருக்கோம். அவ பத்து வார்த்தைகள் பேசியிருந்தா அதிகம். ஆனா, மந்தா நிறைய பேசினா. இவ முகத்துல சிரிப்பும் சுத்தமா இல்லை.’‘“அனு, நீ ஆரம்பிச்சிட்டியா?’‘“அய்யோ... இல்லீங்க. எதையும் நான் ஆரம்பிக்கலை. இதனால எந்தப் பிரச்னையும் வராது. நான் அவக்கிட்டயா சொன்னேன்? ஒரு பொண்ணோட அழகு முகத்துல, ஒடம்புல மட்டுமில்லை. அவ சிரிப்புலதான் இருக்கு. அழகில்லாத பெண்கள்கூட சிரிச்சா, முகத்துக்கு தனி அழகு வந்துடும்!நாலு வார்த்தை கலகலப்பா பேசினாத்தானே நெருக்கம் வரும்?’‘“அனு... இதெல்லாம் அவளோட இயல்பா இருக்கலாம். எல்லா பெண்களுக்கும் முதல் ஹீரோ அப்பானு சொல்லுவாங்க. இவளுக்கு அந்தக் குடுப்பினை இல்லை. அம்மா படற அவமானங்களை, பல வருஷங்களா நேர்ல பார்த்த பொண்ணு. அதான் அவ சிரிப்பை மறந்திருக்கா. கலகலப்பா பழகாம இருக்கவும் இதுதான் காரணம்.நம்ம குடும்பத்துக்கு வாழ வந்து, கலந்து பழகி, சொந்த பந்தங்கள் புடைசூழ வாழ ஆரம்பிச்சா சரியாகும் அனு. எதுக்குமே அவசரப்படக் கூடாது. ஒரு நாள்ல எந்த மாற்றத்தையும் கொண்டு வரவும் முடியாது. அது கசப்புல முடியும். அவங்கம்மா தங்கமான பெண். அவங்களுக்காக நந்தினியை சகிச்சுக்கணும் அனு.’‘உள் அறையில் இருந்தான் அவி. அவன் காதில் சகலமும் விழுந்தது. அப்பாவின் பக்குவமான பேச்சு எப்போதும் அவனுக்கு பிடிக்கும். அவனுடைய ரோல் மாடல் என்றுமே அப்பாதான்.வர்த்தகத்தில் அப்பா இன்றளவும் வெற்றிகரமாக இயங்கி சம்பாதிக்கக் காரணம், அவருடைய குணம்தான். மற்றவர்களின் குறைகளை பெரிதாக பார்க்காமல், நிறைகளை மட்டுமே பார்த்து, நல்லனவற்றை உடனே பாராட்டி, குறைகளை உறுத்தாமல் சுட்டிக் காட்டி, நட்பை வளர்த்தவர்.அவருக்கு எதிரிகள் மிக மிக குறைவு. அவரை பின்பற்றி வளர்ந்தவன் அவி. அதனால் எதற்கும் பதட்டப்பட மாட்டான். ஆனாலும், நந்தினியை கையாள்வது நேற்று வரை அவனுக்கும் சவாலாகத்தான் இருந்தது. இந்த ஒரு நாள் அவளிடம் உறுத்தும்படியான குறைகள் தெரியவில்லை.ஆனால், ஏதோ ஒரு நெருடல் சொல்லத் தெரியாமல் அவனுக்குள் இருந்தது. பல தரப்பட்ட மக்களை சந்தித்த அப்பாவுக்கும் அது இருந்தது. சரி, கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு வாரங்கள்தான் இருக்கு. நடப்பவை எல்லாம் நல்லதாக இருக்கட்டும்!மறு நாள் காலையில் நந்தினி புறப்பட, “நந்தினி... வாங்கின பட்டுச் சேலைகளுக்கு ரவிக்கை தைக்கணும். அப்புறமா ரிசப்ஷனுக்கு செட் நகைகள் வாங்கணும். நிறைய வேலை இருக்கு. இன்விடேஷன்ஸ் நாளைக்கு வந்துடும். அதைக் குடுக்கணும்.’‘“எதுக்கு நேர்ல குடுக்கற? போஸ்ட்ல அனுப்பு. வாட்ஸ்ஆப்ல போடு. போன்ல பேசிடு.’‘“அது மரியாதை இல்லை நந்தினி.’‘“உனக்குப் புருஷனே ஓடின பிறகு, புருஷன் வீட்டு பந்தம்னு எதுவும் கிடையாது. உன் பக்கத்து ஆட்களும் நல்லவங்க இல்லை. குத்தலும் தொத்தலுமா பேசிட்டு, உன்னை நோகடிச்சவங்கதான் அதிகம். அப்புறமா யாருக்கு நீ நேர்ல தரணும்? அதுக்கும் தப்பான விமர்சனங்கள் வரும். உன் மனசு புண்படும்.தனி ஒரு மனுஷியா, கம்பீரமா, பொண்ணு கல்யாணத்தை நீ நடத்தற பொறாமை உள்ளே புகுந்து உன்னை அவமானப்படுத்த வைக்கும். உன் ஆஃபீஸுக்கு, சக அதிகாரிகளுக்கு ஆஃபீஸ்ல வச்சு குடு. போதும்மா. தவிச்சு நின்னப்ப உன்னை தாங்கி பிடிக்க யாரும் வரலை. இப்ப எதுக்கு அவங்களுக்கெல்லாம் அழைப்பு?’‘மகள் கோவக்காரியாக இருந்தாலும், அவளுடைய பேச்சில் நியாயம் இருந்தது!“சரி, நீ எப்ப முதல் லீவு போடறே நந்தினி?’‘“கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னால. ஒரு வாரம் லீவு.’‘“அது போதுமா? அவங்க வீட்ல குலதெய்வ பிரார்த்தனை இருக்கும்.’‘“அம்மா... அதையெல்லாம் நான் பார்த்துப்பேன். அவி அம்மா உன்னை பேர் சொல்லி அழைச்சு, நீங்க நெருக்கமாயிட்ட காரணமா, என் மேல எதையும் நீ திணிக்காதே. கடைக்கு வந்து நாள் முழுக்க நான் இருந்த காரணமா, எனக்கு வேற முகத்தை நீயே ஒட்ட வைக்காதே.என் இயல்பு எதுவும் மாறலை. நான், நானாத்தான் இருக்கேன். இனிமேலும் இருப்பேன். உன் தோழமைக்கு நான் குறுக்கே வரலை. அதுக்காக நான் புது அவதாரம் எடுக்க முடியாது.’‘“நீ ஏன் இப்படிப் பேசற? ஒரு பெண் அப்படியே இருக்க முடியாது. நீ இப்ப மகளா மட்டும் இருக்கே. இந்த வாழ்க்கை வேற. இனி மனைவியாகப்போறே! அப்புறமா தாயா மாறுவே. அப்பவும் இதே படபடப்போட பேசிட்டு வாழ முடியுமா?நிறைய சகிப்புத்தன்மை தேவை. எனக்கு அது இல்லாம போயிருந்தா, நீயெல்லாம் இந்த உயரத்துக்கு வர முடியுமா? உங்கப்பா ஓடினப்ப, எனக்கேன் பாரம்னு உங்களை தூக்கி போட்டுட்டு, நான் ஏன் போகலை? போயிருந்தா, எனக்குப் பேரு தாய் இல்லை... பேய்! புரியுதா?’‘“எதுக்கு நீ இத்தனை சீரியஸா உபதேசம் பண்ற?’‘“என்னை தவிர உனக்கு யாரும் சொல்ல முடியாது. இது ரயில் பயணம் மாதிரி. ஆரம்பத்துல வந்த சக பயணி அம்மா. நான் உன் ரயிலை விட்டு இறங்கற நேரம் வந்தாச்சு. அவி ஏறப்போறார். புருஷன் காலம் முழுக்க வர்றது இயல்பு. எனக்கு அதுவும் வாய்க்கலை. உனக்காக நீ வாழணும்!ஆனா, உனக்காக மத்தவங்களும் வாழணும்னு நினைச்சா, அது சரியா வராது. பார்த்து நட. பழக முயற்சி செய். சிரிக்க கத்துக்கோ. நான் சிரிப்பா சிரிச்சவள். அப்படியும் சிரிப்பை விடலையே? சிரிப்பு நடிப்பாவே இருந்தாலும், நமக்கு நாலு மனுஷங்களை கொண்டு வர்றது சிரிப்புதான்.சரி... நேரமாச்சு, நான் அடுத்த வாரத்துலேருந்து லீவு. தலைக்கு மேல நிறைய வேலைகள் இருக்கு.’‘“அம்மா... ஒரு நிமிஷம். இது வரைக்கும் என் கல்யாணத்துக்காக எத்தனை லட்சங்கள் நீ செலவழிச்சிருப்பே?’‘“அந்தக் கணக்கு எதுக்கு? செய்யறது என் கடமை. உன்னை நல்ல இடத்துல சேர்க்க, நான் செலவழிக்கிற பணம் எனக்குப் பெரிசா தெரியலை. கவனமா வாழணும். அதுக்காக பணக் கணக்கை மட்டுமே பார்த்து வாழ்ந்தா, மனக்கணக்குகள் எல்லாமே தப்பாயிடும் நந்தினி. ஒரு முடிவை எடுக்கும்போது அது என்னல்லாம் பின்விளைவுகளை உண்டாக்கும்னு கொஞ்சம் யோசிச்சு செய்யறது நல்லது.’‘“இதை எதுக்காக எங்கிட்ட நீ சொல்ற?’‘“உன் பயணத்துல நான் இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு. அவி ஏறப்போறார். எடுக்கிற முடிவுகள் எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் பேசின பிறகு எடுங்க. அதுதான் சரியா இருக்கும்.’‘நந்தினி மௌனமாக இருந்தாள். இருவரும் புறப்பட, அம்மா ஆட்டோவுக்காக காத்திருந்தாள்.நந்தினி தன்னுடைய வாகனத்தில் புறப்பட்டு போக, ஆட்டோ வந்து நிற்க, கல்யாணியின் ஹவுஸ் ஓனர் வந்து இறங்கினார்.“பைக் ரிப்பேர். அதான் ஆட்டோ. நீங்க போறதுக்குள்ளே வந்துட்டேன். சாவி உங்கக்கிட்ட இருக்கில்லையா? அதைத் தர முடியுமா?’‘மந்தாகினி தன்னுடைய வீட்டை திறந்து, சாவியை எடுத்து வந்தாள்.“நந்தினிதான் வீட்டை ஒயிட் வாஷ் மற்றும் பெயின்ட் பண்ணி தரச் சொன்னாங்க. ஆள் இன்னிக்கு வர்றாங்க. ஒரு வாரம் தேவைப்படும். எந்த ஃபேனையும் நான் கழட்டலை. பெட்ரூம் ஏ.சி.யை விட்டு வச்சிருக்கேன். உங்க பொண்ணுக்கிட்ட சொல்லிடுங்க. அதே வாடகைக்கு ஏன் சம்மதிச்சேன்? உங்க மகள்ங்கிற ஒரே காரணம்தான்!’‘மந்தாகினிக்கு சாவி நேற்று வந்தபோதே நெருடியது.“உங்க பொண்ணும் கறாருக்கு தக்க நியாயமா இருக்காங்க. அடுத்த நாளே, ஆறு மாச வாடகையை முன் பணமா ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயை டாண்ணு நெட்ல என் கணக்குக்கு மாற்றிட்டாங்களே. அப்ப நானும் சொன்னபடி நடக்க வேண்டாமா?’‘சாவியை வாங்கிக் கொண்டு வீட்டை அவர் திறக்க, மந்தாகினி அதிர்ச்சியில் உறைந்து போனாள்.‘அவியைக் கேட்காமல் அட்வான்ஸ் தர என்ன துணிச்சல் இவளுக்கு? அல்லது அவியின் சம்மதம் வாங்கி விட்டாளா? அவியின் பெற்றோருக்கு இது தெரியாதா? இல்லை, அவிக்கே தெரியாதா?Õபடபடப்பில் தலை சுற்றியது மந்தாவுக்கு..14மந்தாகினிக்கு வேலைக்குப் போகவே ஓடவில்லை.‘அவியைக் கேக்காம தனிக்குடித்தனத்தை இவளே முடிவு செஞ்சு அட்வான்ஸ் குடுத்திருந்தா, அதை அவியால பொறுத்துக்க முடியுமா? கல்யாணம் நெருங்கிற நேரத்துல எத்தனை பெரிய விபரீத செயல் இது? இதை நான் தடுத்தே ஆகணும்! சொந்த காசுல இவளே சூன்யம் வச்சுக்கறாளா?என்ன ஒரு நெஞ்சு தைரியம் இவளுக்கு? சாயங்காலம் வரைக்கும் காத்திருக்க முடியாது. இப்பவே நான் கேட்டாகணும்.Õபோன் போட்டாள் மந்தாகினி. முதலில் நந்தினி எடுக்கவில்லை. விடாமல் முயல, எடுத்தாள்.“அம்மா... நான் ஒரு க்ளையன்ட் மீட்டிங்ல இருக்கேன். ஏன் விடாம போன் பண்ற? ஒரு மணி நேரத்துல நானே உன்னை கூப்பிடறேன்.’‘“உன்னோட மீட்டிங் முடிஞ்சதும் நீ வீட்டுக்கு வா. விஷயம் அவசரம்.’‘மந்தாகினி தன்னுடைய வீட்டைத் திறந்து உட்கார, அரை மணியில் பெயின்ட் செய்யும் ஆட்கள் அதற்கான உபகரணங்களுடன் வந்து விட்டார்கள். ஓனர் அவர்களுக்கு வேண்டிய உத்தரவுகளை பிறப்பித்து விட்டு இவளிடம் வந்தார்.“நீங்க வீட்ல இருந்தா கொஞ்சம் பார்த்துக்குங்கம்மா. உங்க மகள்தானே வரப் போறாங்க?’‘மந்தாகினிக்கு பற்றி எரிந்தது. உட்கார முடியாமல் ஒரு தவிப்பு பரவியது.“ச்சே... எத்தனை நல்ல குடும்பம். அவியும் நல்ல பையன். இவளுக்கு நல்ல வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்ளும் யோகமில்லையா? இது எத்தனை பெரிய தப்பு?’‘மதியம் பன்னிரண்டு மணிக்கு நந்தினி வந்து விட்டாள்.“எதுக்கு என்னை அவசரமா நீ வரச் சொன்னே? நான் லீவு போடலை. பர்மிஷன்ல வந்திருக்கேன். என்ன பிரச்னை?’‘அம்மா எதிர் வீட்டை கைகாண்பித்தாள். நந்தினி பார்த்ததும் முதலில் குழம்பி, அதன் பிறகு அம்மாவைப் பார்க்க,“யாரைக் கேட்டு வீட்டுக்கு நீ அட்வான்ஸ் குடுத்தே. அன்னிக்கு நீ போன்ல அவிக்கிட்ட பேசறதை நான் கேட்டேன். அவர் வேண்டாம்னு சொன்னது எனக்குப் புரிஞ்சது. இதுல அவருக்கு சம்மதமில்லை. அப்படியிருக்க, எப்படி நீ அட்வான்ஸ் தரலாம்? அவருக்கு இது தெரியுமா? தெரியாதா?’‘நந்தினி திடமாக நிமிர்ந்தாள். அம்மாவை நேராக பார்த்தாள்.“தெரியாது. அவருக்கு இனி மேல்தான் நான் சொல்லணும்.’‘“என்ன துணிச்சல் உனக்கு? வேண்டாம்னு அவி சொன்னதை மீறி, நீ தனிக்குடித்தனம் பண்ண முன் பணம் தந்திருக்கே. அவர் வர மாட்டேன்னு திடமா சொன்னா, நீ என்ன செய்வே? நீ மட்டும் வருவியா? கழுத்துல தாலி ஏறினதும், வாழாவெட்டியா வந்து எனக்கு எதிர்ல ஒக்காரப் போறியா?‘தான் வாழாம போனது போதாதுன்னு தன் மகளையும் வாழாவெட்டியாக்கி, தன் பக்கத்துலேயே குடித்தனம் வச்சிருக்கா மந்தாகினி’ன்னு உலகம் என்னை காறித் துப்பணுமா? சொல்லுடி.’‘“நீ ஏன் இத்தனை டென்ஷன் படற? இத்தனை ஆவேசமா தப்புத் தப்பா நீ பேசற அளவுக்கு இப்ப என்னாச்சு?’‘“செய்யறதையும் செஞ்சிட்டு என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு? தப்புத் தப்பா நான் பேசறேனா? உன்னை ரொம்ப தப்பா நான் வளர்த்திருக்கேன். புகுந்த வீட்டு ஆட்களை மதிக்காதது இப்ப உள்ள பெண்களுக்கு ரத்தத்துல ஊறின சுபாவமா இருக்கு.ஆனா, வர்றதுக்கு முன்னாலயே புருஷனை கிள்ளுக்கீரையா நினைக்கற தைரியம் எப்படீடி உங்களுக்கெல்லாம் வருது? ஒரு தப்பான புருஷன் கூடவே பல வருஷங்கள் போராடி களைச்சவ நான். அப்பவும் நான் விரட்டலை.அந்த மனுஷனா ஓடிப்போனார். அவி தாலி கட்டினதும் விலகணுமா? இல்லை தாலியே கட்டாம போகணுமா? எதுடி நடக்கப் போகுது?’‘நந்தினி பேசவில்லை.“அந்த ஓனருக்கு போன் பண்ணி, இப்பவே அட்வான்ஸ் பணத்தைத் திரும்ப தரச் சொல்லி கால்ல நான் விழறேன். அவர் மறுத்தா, கல்யாண செலவுல இன்னொரு ஒண்ணரை லட்சம்னு கணக்கு எழுதிட்டு போறேன்.’‘“இரு... ஓவரா குதிக்காதே. இது நான் எடுத்த முடிவு. அவியை இங்கே எப்படிக் கொண்டு வரணும்னு எனக்குத் தெரியும். இது என் வாழ்க்கை. நான் திடமா முடிவெடுத்துதான் வீட்டை ஃபிக்ஸ் பண்ணி, பணமும் தந்திருக்கேன். இதுல தலையிட உனக்கு எந்த உரிமையும் இல்லை.உன் பாஷைல நான் பேசட்டுமா? என்னோட பயணம் பண்ணின நீ, இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தாச்சு. இறங்கி போயிட்டே இரு. நான் எந்த கம்பார்ட்மென்ட்ல பயணிக்கணும்னு நீ முடிவு செய்யாதே. புரியுதா?’‘“நான் இறங்கறேன்டி. ஆனா, உன் கம்பார்ட்மென்ட்ல அவி ஏறினாத்தான் உனக்குப் பாதுகாப்பான பயணம். அவர் ஏற மறுத்துட்டா, நீ தனி மனுஷிதான். அதைப் புரிஞ்சு, வேற யாராவது இதே பெட்டில ஏறினா, உன் நிலைமை என்ன? இதுக்கும் மேல பெத்த அம்மாவை பேச வைக்காதேடி. உன்னோட முடிவை மாத்திக்கோ. இப்படியொரு காரியத்தை நீ செஞ்சது, அவிக்கோ அவங்க குடும்பத்துக்கோ தெரிய வேண்டாம்.’‘“நான் எந்தக் குற்றமும் செய்யலை. இதை நான் பாத்துக்கறேன். நீ உன் வேலையைப் பாரு. எனக்கு ஆஃபீஸ்ல நிறைய வேலை இருக்கு. நான் வர்றேன்.’‘அவள் போய்க் கொண்டேயிருந்தாள். மந்தாகினிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.‘இதை அவிக்கு இவள் எப்போது சொல்வாள்? கல்யாணம் முடிந்த உடனேயா? அவரால் இந்தத் தான்தோன்றித்தனத்தை ஏற்க முடியுமா? அந்தக் குடும்பம் இதை எப்படி ஏற்கும்? எனக்கு எதுவுமே தெரியாதுன்னு நான் சொல்ல முடியுமா? பெத்த அம்மாவுக்கு, அதுவும் எதிர் வீட்ல இருந்துட்டு எதுவும் தெரியாதுன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா?நான் நாடகமாடி மகளை தூண்டி விட்டு இங்கே வரவழைத்தேன் அப்படிங்கிற பழி என் மேல் திரும்பாதா? இத்தனை நாள், நான் அவர்களிடம் காட்டிய மரியாதை, நடிப்பு என்று தோன்றாதா?Õபல கேள்விகள் மந்தாகினியிடம் புறப்பட, உடம்பு முழுக்க அனல் வீசியது.‘உடனே நான் ஏதாவது செஞ்சாகணும். என்ன செய்யப் போறேன்? என்ன செய்யப் போறேன்?’‘உடம்பும் மனசும் புத்தியும் பரபரத்தன..15மந்தாகினி பல முறை யோசித்தப் பிறகு தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்தாள். அது, அவியை உடனே சந்தித்து பேசுவது என்ற முடிவு.இதைச் சொன்னால், மகளை விட்டுக்கொடுத்தது போல ஆகும். ஆனால், வேறு வழியில்லை. தெரிய வேண்டிய அவிக்கு தெரிந்துதான் தீர வேண்டும்.எப்படியும் புயல் வீசப்போவது உறுதி. அதைப் பெரிய சேதாரம் இல்லாமல் திசை திருப்பி விட வேண்டும். பல முறை யோசித்தப் பிறகு அவியை சந்திப்பது என முடிவு செய்தாள். உடனே அவிக்கு போன் செய்தாள்.“நான் உங்களை உடனே பார்க்கணும். நந்தினிக்கு இந்த சந்திப்புத் தெரியக் கூடாது.’‘மாலை நாலு மணிக்கு அவி ஒரு இடத்தை சொன்னான். மந்தாகினி புறப்பட்டாள். ஒரு மாதிரி படபடப்பாக இருந்தது. இது சரியா தப்பா என்றுகூட புரியவில்லை. வந்து விட்டாள். அவி காத்திருந்தான். அருகிலுள்ள உணவகத்துக்குள் நுழைந்தார்கள். அவி, காஃபிக்குச் சொல்லி விட்டு நிமிர்ந்து பார்த்தான்.“சொல்லுங்க ஆன்ட்டி. நந்தினிக்கே தெரிய வேண்டாம்னு என்னை நீங்க சந்திக்க வந்தா, பிரச்னை பெரிசுன்னு புரியுது. எதுவானாலும் சொல்லுங்க ஆன்ட்டி.’‘“முதல்ல உங்கக்கிட்ட நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன் மாப்...ஸாரி அவினாஷ்.’‘“மாப்ளைன்னு சொல்ல வந்து பாதில கட் பண்ணிட்டீங்க. ஏன்? எதுக்காக மன்னிப்பு?’‘“இப்ப நான் சொல்லப்போறதை நீங்க கேட்டா, மாப்ளைன்னு நான் கூப்பிடற அளவுக்கு வருமான்னு தெரியலை.’‘“ப்ளீஸ்... சொல்லுங்க ஆன்ட்டி.’‘“நந்தினி, நீங்க தடுத்தும், அந்த எதிர் ஃப்ளாட்டுக்கு அட்வான்ஸ் தந்தாச்சு. எங்கிட்ட கூட அதை இவ சொல்லலை. காரணம், நான் எதிர்க்கறதால! அந்த ஓனர் சொல்லித்தான் எனக்கே தெரியும்!’‘ என காலையில் நடந்த சகல விவரங்களையும் சொன்னாள்.“எனக்குப் பதட்டமா இருக்குப்பா. ஊர் என்னைத்தானே பழிக்கும். என் மேல ஒரு நல்ல அபிமானத்தை வச்ச உங்கப்பா, அம்மாவுக்கு அது கலையும். அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். கட்டிக்கப் போறவர் நீங்க. அதை நீங்க மறுத்தும், அவ இதைச் செய்யறான்னா, எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. இது எங்கே போய் முடியும்னு புரியலை. எனக்கு அவளோட அம்மானு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு தம்பி.’‘அவி எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான்.“உங்களுக்கு இது பிடிக்கலைன்னு தீர்மானமா சொல்லிடுங்க. இதன் காரணமா கல்யாணம் நின்னாலும் பரவால்லை. ஒரு அம்மா சொல்லக்கூடாத வார்த்தைகள் இது. எனக்கு வேற வழியில்லை. ஒரு புருஷன் பேச்சை, கழுத்துல தாலியை வாங்கறதுக்கு முன்னாலயே ஒருத்தி மதிக்காம, அவ நினைச்சது நடக்கணும்னு இத்தனை அகங்காரமா முடிவெடுத்தா, கல்யாணம் முடிஞ்ச பிறகு எப்படி அவ புருஷனை மதிப்பா? இதனால அவ வாழ்க்கையும் கெடும். நல்ல குடும்பத்துல பிறந்த உங்களுக்கு இது அவசியமில்லை தம்பி.’‘“சரி, நான் வேண்டாம்னு சொன்னா அவ கேப்பாளா?’‘“உங்கக்கூட வாழணும்னா, அவ கேட்டுத்தான் ஆகணும் தம்பி. நான் சொன்னேன்னு நீங்க பேசி, அவ முடிவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைங்க.’‘“ஆன்ட்டி... இந்த விஷயம் இத்தனை தூரம் வந்தப் பிறகு, நான் ஒண்ணு சொன்னா நீங்க கேப்பீங்களா?’‘“சொல்லுங்க தம்பி.’‘“எங்கப்பா, அம்மாக்கிட்ட இதைச் சொல்லணும். அவங்க கருத்து வேணும் ஆன்ட்டி.’‘“உங்கம்மா காறித் துப்புவாங்க. அவி வேண்டாம்னு சொல்லியும் வீட்டுக்கு ஒருத்தி அட்வான்ஸ் தர்றான்னா, அவ எந்த மாதிரி பொண்ணு? எப்படி என் மகனை, எங்களை மதிப்பா? இப்படி ஒருத்தி என் பிள்ளைக்கு மனைவியானா, அவன் வாழ்க்கையே நாசமாகும்னு கல்யாணத்தை நிறுத்தச் சொல்வாங்க.’‘“ஆன்ட்டி... நீங்க சொல்ற மனநிலையில எங்கம்மா இருப்பாங்க. நான் மறுக்கலை. ஆனா, அப்பா பக்குவமானவர். யதார்த்தமா யோசிப்பார். மனுஷங்களை சரியான விதமா எடை போடுவார்.கல்யாணம் நடக்க ரெண்டு வாரம்கூட இல்லை. அழைப்பிதழ் பல பேருக்கு தந்தாச்சு. ரெண்டு குடும்ப கௌரவமும் இதுல சம்பந்தப்பட்டிருக்கு ஆன்ட்டி. எடுத்தேன், கவிழ்த்தேன்னு முடிவெடுக்க முடியாது.’‘“இந்த விவேகமும் அறிவும் அவளுக்கு எங்கே போச்சு அவி?’‘“பக்குவமில்லாம இருக்கலாம்.’‘“இல்லை... ஆணவம்! இத்தனை ஆன பிறகு கல்யாணத்தை நிறுத்த மாட்டாங்கனு நம்பிக்கை. இதை வளர விட்டு அத்தனை பேரும் முட்டாளா நிக்கணுமா அவி?யாரா இருந்தாலும் நியாயத்தை பேசணும். நீங்க என் மகனா இருந்தா, இப்படி ஒருத்தியை என் மருமகளா நான் ஏத்துக்க மாட்டேன்.’‘“என் மேல நீங்க மதிப்பு வச்சிருக்கீங்களா?’‘“என்ன தம்பி இப்படிக் கேக்கறீங்க? உங்க மேல பெரிய மரியாதை எனக்குண்டு. உங்கப்பா, அம்மா மேல அதைவிட!உங்களோட நல்ல குடும்பத்துக்கு இவ வேண்டாம் தம்பி. தெரிஞ்சே ஒரு பாவத்தைச் செய்ய நான் தயாரா இல்லை.’‘“இதை அப்பா, அம்மாவுக்குச் சொல்றோம். நான் மட்டுமில்லை. நீங்களும் எங்க வீட்டுக்கு நாளைக்குக் காலையில வர்றீங்க?’‘“என்னை அவங்க உள்ளே சேர்க்க மாட்டாங்க. இவளால நல்லவங்களை நான் இழக்கப் போறேன்.சரி, வர்றேன். இது நல்ல தொடக்கம்னு அன்னிக்கு வந்தப்ப நினைச்சேன். இப்ப முடிவுன்னு தீர்மானிச்சு வர்றேன்.’‘“உங்களை உங்க வீட்ல ட்ராப் பண்ணட்டுமா?’‘“வேண்டாம் தம்பி. கல்யாணத்தையே ட்ராப் பண்ற நேரம் வந்தாச்சே.’‘கசப்புடன் நடந்தாள் மந்தாகினி..16மந்தாகினி வீட்டுக்கு வந்து விட்டாள். இரவு எட்டரை மணிக்கு நந்தினி வந்தாள். சாப்பிட்டாள்.எதிர் வீட்டில் போய் எந்த அளவுக்கு வேலை நடந்திருக்கிறது என பார்த்தாள். உள்ளே வந்தாள்.“நந்தினி... நான் சாயங்காலம் அவியை போய் பார்த்தேன். வீட்டு விவகாரத்தைச் சொன்னேன்.’‘அவள் அதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை.“எங்கப்பா, அம்மாக்கிட்ட நாளைக்குச் சொல்லிடலாம் இதை. நீங்களும் வாங்கன்னு அவர் சொன்னார். நான் போறேன்.’‘“யார் வேணும்னா கலந்து பேசுங்க. எனக்குத் தடை இல்லை. நான் உன் எதிர்ல வர முடிவெடுத்தாச்சு. ஒரு தாயை தனியா விட விரும்பாத மகள், அவங்க பக்கத்துல குடித்தனம் வர்றதை யாரும் எதிர்க்க மாட்டாங்க. அப்படி எதிர்க்கிற ஆட்களை நான் மதிக்கலை.’‘“இந்தக் கல்யாணம் நடந்தாத்தானே அவி உன்கூட அந்த வீட்டுக்கு வருவார்? இல்லைன்னா, நீ மட்டும்தான் அங்கே குடித்தனம் போக முடியும்?அம்மாவும் மகளும் ஆளுக்கொரு வீட்ல ஆண் வாசனை படாம வாழலாம். இதப்பாரு... இதோட விபரீதம் புரிஞ்சு, இன்னியோட உன் முடிவை மாத்திக்கோ. இந்த ஒரு ராத்திரிதான் நீ பெண்ணா மாற அவகாசம். அப்புறம் உன் இஷ்டம்.’‘அந்த இரவு மந்தாகினி தூங்கவேயில்லை. அதே நேரம், தன் வீட்டுக்கு வந்த அவி,“அம்மா... ரெண்டு அக்காவையும் உடனே வரச் சொல்லு. முக்கியமான விஷயம் பேசணும். உடனே வரச் சொல்லு.’‘சொர்ணாவும் நீரஜாவும் அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கே இருந்தார்கள்.“நான் சொல்றதை பதட்டப்படாம எல்லாரும் கேளுங்க. எங்க கல்யாணம் முடிஞ்சா, நந்தினி அம்மா காலம் முழுக்க தனியா இருக்கணும். ஏற்கெனவே வாழ்க்கையில ரொம்ப அடிபட்டவங்க.அவங்கம்மாவை தனியா விட நந்தினிக்கு விருப்பமில்லை.’‘“அது நியாயம்தானே? மந்தாவும் நம்ம வீட்டுக்கே வந்துடட்டும்.’Õ அனு சொல்ல,“அதெப்படீம்மா? உத்தியோகம் பார்க்கறவங்க. புருஷன் விலகியும் தனியா போராடி தன் பசங்ளை ஆளாக்கினவங்க. அவங்க மகள் வீட்ல வந்து இருப்பாங்கன்னு எனக்குத் தோணலை.’Õ சொர்ணா சொல்ல,“அதனால நந்தினி, அம்மா வீட்டுக்கு எதிர்லயே ஒரு ஃப்ளாட் காலியாகுதுன்னு அங்கே ரெண்டு பேரும் குடித்தனம் போகலாம்னு எங்கிட்ட சொன்னா.’‘“நினைச்சேன். அவ இங்கே வந்து வாழமாட்டான்னு எனக்கு தெரியும்!’‘“நீரஜா... அவசரப்படாதே. அவன் பேசி முடிக்கட்டும்.’‘“அதுக்கு நானும் சம்மதிக்கலை. அவங்கம்மாவும் ஒப்புக்கலை. அம்மா _ மகள் மத்தில பெரிசா பிரச்னை போகுது. அந்த வீடு கை விட்டுப்போற நிலை. இதை விட்டா, அம்மா எதிர்ல குடித்தனம் போக வாய்ப்பில்லை. அதனால நந்தினி என்னை கேக்காம அட்வான்ஸ் குடுத்துட்டா.’‘“மந்தாவுக்கு இது தெரியுமா?’‘ பதட்டமாக அனு கேட்க,“இன்னிக்கு காலையில ஓனர் சொல்லி தெரிஞ்சிருக்கு. பெரிய வாக்குவாதம் போயிருக்கு. அவங்க நேரா என்னை பார்க்க வந்துட்டாங்க. நானும் அவங்களும் பேசினதை அவங்களுக்கே தெரியாம நான் ரெக்கார்ட் பண்ணிட்டேன். எதுக்கு? அதை நீங்க எல்லாரும் கேக்கத்தான்.’‘அவன் அதை ப்ளே பண்ண, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மந்தாகினி, அவியிடம் பேசியது தெளிவாக ஒலித்தது. அத்தனை பேரும் வாய் மூடாமல் கேட்டார்கள்.“நாளைக்கு அவங்களை இங்கே வரச் சொல்லியிருக்கேன். அவங்களைப் பொறுத்தவரை, இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு முடிவுக்கு வந்தாச்சு. நாளைய சந்திப்பு, கடைசி சந்திப்புன்னு நினைக்கிறாங்க. இனி நீங்கள்லாம் கலந்து பேசலாம். எது நியாயமோ அதுக்கு நான் கட்டுப்படறேன்.’‘அவினாஷ் உள்ளே போய் விட்டான். அனல் பறக்க விவாதம் ஆரம்பமானது.அம்மாவும் இரண்டு பெண்களும் ஆவேசமாக பேசத் தொடங்கினார்கள். அப்பா ரவி எதுவுமே பேசாமல் மௌனமாக இருந்தார்.“அப்பா பேசலை. அவியும் எதுவும் சொல்லாம உள்ளே போயிட்டான். அவ முடிவெடுத்து முன் பணமும் தந்தாச்சு. இந்தக் கட்டத்துல நாம மூணு பெண்கள் என்ன முடிவெடுக்க முடியும்?’‘“நாளைக்கு மந்தாகினி வரட்டும். அனு, நீ உள்ளே வா. காலையில பேசிக்கலாம்.’‘அப்பா உள்ளே போக, அம்மாவுக்கு முடிவு தெரிந்து விட்டது!.17மறு நாள் காலை மந்தாகினி சீக்கிரமே எழுந்து, குளித்து பூஜையை முடித்து புறப்பட தயாரானாள்.நந்தினி ஒருவேளை மனசு மாறியிருக்கலாம் என ஒரு சபலம் இருந்தது மந்தாவுக்கு.இது அவள் வாழ்க்கை என்பதால் ஒரு இரவு அவளை மாற்றியிருக்கலாம் என்ற நம்பிக்கை நெஞ்சின் ஓரத்தில் இருந்தது.ஆனால், நந்தினியோ எதுவும் பேசாமல் புறப்பட்டாள். மந்தா, தாள முடியாமல் கேட்டே விட்டாள்.“நீ எதுவும் சொல்லலை நந்தினி?’‘“என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை.’‘“அந்த முடிவெடுக்கற சுதந்திரம் எல்லாருக்கும் உண்டு. அவி உன் அடிமை இல்லை. அந்தக் குடும்பமும் நீ சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டும்னு நினைக்காதே. நானே இந்தக் கல்யாணத்தை நடக்க விட மாட்டேன். ஒரு நல்ல குடும்பத்துக்கு உன்னை மாதிரி ஒரு ராட்சசி, மருமகளா போறதுல எனக்கு உடன்பாடு இல்லை.’‘நந்தினி அதற்கும் பதில் தராமல் புறப்பட தயாரானாள். அம்மாவுக்கு அவளைக் கொன்று போடலாம் என தோன்றியது.மந்தா தயாராகி விட்டாள். ஒரு ஆட்டோவை பதிவு செய்து காத்திருந்தாள்.நந்தினி முகத்தில் முழிக்கவே பிடிக்கவில்லை. நந்தினி புறப்பட, ஆட்டோவும் வந்து விட்டது.அவி வீட்டு வாசலில் போய் நிற்கவே கூசியது.அனு பார்த்து விட்டாள்.“வாங்க மந்தா... ஏன் வெளியில நிக்கறீங்க?’‘“இந்த வீட்டுக்குள்ள கால் பதிக்கிற தகுதி இனி எனக்கில்லை. ஆனாலும், கடைசியா பேச வேண்டிய சூழ்நிலை. அதனால வந்திருக்கேன்.’‘ரவியுடன் அவியும் வந்தான். இரண்டு பெண்களும் தள்ளி நின்றார்கள்.“உள்ள வாங்க. உங்களுக்கு எல்லா தகுதிகளும் எப்பவும் உண்டு! வாங்க...’‘மந்தாவை கைப்பிடித்து அனு அழைத்து வர,“அவினாஷ் உங்களுக்கு எதுவுமே சொல்லலையா?’‘“நீங்க ரெண்டு பேரும் பேசினது எண்பத்தி ஏழு நிமிஷம். அதை ரெக்கார்ட் பண்ணி, எங்களுக்குப் போட்டுக் காட்டிட்டான்.’‘“அப்படியுமா என்னை உள்ளே கூப்பிடறீங்க?’‘“நீங்க எங்க கட்சிதானே? அப்புறமா உங்க மேல நாங்க எதுக்கு கோவப்படணும்?’‘“ஆனா, நந்தினியோ மனசை மாத்திக்கறதா இல்லை. உங்க மகன் அடிமை இல்லை. இந்த நல்ல குடும்பத்துக்கு மருமகளாக அவளுக்குக் குடுத்து வைக்கலை. அதனால கல்யாணத்தை நிறுத்திடலாம். உங்களுக்கு ஆன நஷ்டத்தை நான் குடுத்துடறேன். வாழ்க்கையில நஷ்டப்படறது எனக்குப் புதுசில்லை. நல்லவங்களை தக்க வச்சுக்க எனக்கு யோகமில்லை!’‘கடைசி வாக்கியத்தில் அழுது விட்டாள். அத்தனை பேரும் வேதனையுடன் பார்த்தார்கள்.அனு வந்து மந்தாவின் அருகில் அமர்ந்து கைகளைப் பிடித்துக் கொண்டாள்.“ஏன் அழறீங்க மந்தா? உங்களை நாங்க ஏதாவது சொன்னோமா?’‘“அதுதான் என் நெஞ்சை அறுக்குது அனு. என்னை வாசல்ல நிக்க வச்சு நீங்க எல்லாரும் கேள்வி மேல கேள்வியா கேட்டிருந்தா, எனக்கு ஒரு ஆணவக்காரியை மகளா பெத்ததுக்கு தண்டனையா அது இருந்திருக்கும். இந்த மரியாதை எனக்கு மரண தண்டனையா இருக்கு அனு.’‘“நீங்க பேசி முடிச்சாச்சா?’‘“எல்லாமே முடிஞ்சது. இனி பேச என்ன இருக்கு?’‘ரவி முன்னால் வந்தார்.“எதுவும் முடியலைன்னு சொல்லு அனு. இனி நாம பேசலாம். இதப் பாருங்கம்மா. ஒரு பெண்ணுக்கு இத்தனை பிடிவாதம், அகங்காரம் கூடாதுங்கிறதெல்லாம் நியாயம்தான்.இந்தக் காலத்துல ஒரு பெண் திமிரா இருக்க காரணமே பெரும்பாலும் அவளோட அம்மாதான். அவங்க ஆணவத்தை கொம்பு சீவி விட்டு அவங்களை அடங்கா பிடாரிகளாக்கி, புருஷன் குடும்பத்தோட ஒட்ட விடாம செய்யற அம்மாக்கள். ஆனா, நீங்க விதிவிலக்கு. அவ செய்யற தப்புக்கு கல்யாணத்தையே நிறுத்தற அளவுக்கு வந்திருக்கீங்க. எந்த ஒரு தாயும் எடுக்காத முடிவு இது.’‘“நல்ல குடும்பத்தை நாசப்படுத்த நான் விரும்பலை.’‘“அம்மா... அவ செயல்கள், தன்னிச்சையான முடிவு. தப்பா இருந்தாலும் அதுல ஒரே ஒரு நியாயம் இருக்கு. போராடி களைச்ச ஒரு தாய்க்கு, பந்தம்னு சொல்லிக்க நந்தினி ஒருத்திதான் இருக்கா.அதனால என்னோட அம்மாவை தனியா விடாம, அவங்க எதிர்லயே நான் வாழணும்னு அவ நினைக்கிறதை தப்புனு யாருமே சொல்ல முடியாது.நீங்க இங்கே வந்திருக்கிறது உங்க தன்மானத்துக்கு இடம் தராது. அவி உங்க வீட்டோட தங்குறது அவனுக்கு சரிப்படாது. கல்யாணம் ஆன முதல் நாளே தனிக்குடித்தனம் போறது தப்புனு யாரும் சொல்ல முடியாது. அதை அம்மா எதிர்ல உள்ள வீட்டுக்கே போகணும்னு அவ நினைச்சதுல என்ன தப்பு?’‘யாருமே பேசவில்லை.“எதையுமே நாம பார்க்கிற பார்வையிலதான் இருக்கு. முதல்ல இதை நான் சொன்னப்ப அனு ஏத்துக்கலை. என் பிள்ளை என்னை விட்டு தனியா போறதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்னு சொன்னா. அவியும் அம்மா பக்கம். இதே உணர்வு, தன்னுடைய அம்மாவை விட்டு வரக்கூடாதுன்னு நந்தினிக்கு இருந்தா அது தப்பா? இங்கே அவி போனாலும் எங்களுக்கு ரெண்டு பெண்கள் இருக்காங்க. நாங்க ரெண்டு பேர் இருக்கோமில்லை? ஆனா, உங்களுக்கு இந்தப் பொண்ணை தவிர யார் இருக்கா? அப்ப அவ நினைக்கறதுல என்ன தப்பு?’‘“அவி வேண்டாம்னு சொன்ன பிறகும், அவரை கேக்காம எப்படி அவ அட்வான்ஸ் தரலாம்?’‘“அம்மா... எதிர்ல இருக்கற அந்த வீடு கைவிட்டுப் போயிடும்.’‘“போகட்டுமே. எதிர்ல குடி வரணும்னு கட்டாயமா என்ன? நானும் காலையில எட்டு மணிக்கு போனா ராத்திரி எட்டு மணிக்கு வர்றேன். படுத்து தூங்கணும். பாதுகாப்பான குடியிருப்பு. வார கடைசில சந்திச்சா போதாதா?அவி சொல்ற ஒண்ணை இவ கேட்டா, இவ சொல்ற நூறை அவர் கேப்பார். எனக்குத் தப்பான புருஷன். நான் வாழலை. இவளுக்குத் தங்கமான புருஷன் அமையும்போது, அம்மா முக்கியம்னு அந்த வாழ்க்கையில மண்ணை அள்ளிப் போட்டுக்கணுமா?’‘“இல்லைம்மா. அவளை கட்டாயப்படுத்தி இந்த வீட்டுக்கு வரவழைச்சா, அவியோட நந்தினி சந்தோஷமா வாழ மாட்டா. எல்லார் நிம்மதியையும் அவ கெடுப்பா. அதுக்குப் பதிலா அவ விருப்பத்துக்கு இணங்கி, அவ ஏற்பாடு செஞ்ச உங்க எதிர் வீட்டுக்கே குடித்தனம் வந்துட்டா, சந்தோஷமா இருப்பா இல்லையா?நம்ம பசங்க வாழணும்னுதானே இத்தனை செலவழிச்சு கல்யாணம் பண்றோம். நாமும் வீம்பு புடிச்சா, எல்லார் சந்தோஷமும் கெடுமில்லையா? அது வேணுமா? முதல்ல அவி உள்பட யாருமே ஒப்புக்கலை. நான் எடுத்துச் சொன்னதும் அனு கன்வின்ஸ் ஆயிட்டா. மத்தவங்களை மகன் உள்பட, அவ கன்வின்ஸ் பண்ணிட்டா.’‘“இந்த ஒரு சங்கதியில நந்தினியை நாம ஜெயிக்க விட்டா, அவளோட ஆணவம் அதிகமாகும். நாம என்ன சொன்னாலும் நடக்கும்னு ஒரு இறுமாப்பு வரும். அவளை அடக்க யாராலும் முடியாது.இது அவிக்குப் பாதகமா முடியும். வேண்டாமே! இவளை விட்டா வேற தகுதியுள்ள பெண் அவிக்குக் கிடைக்க மாட்டாளா? நானே பார்த்து ஏற்பாடு பண்றேன். உங்க குடும்பத்துக்கு இவ வேண்டாம். தெரிஞ்சே படு குழியில விழாதீங்க.’‘குடும்பமே ஸ்தம்பித்தது. இப்படி ஒரு நியாயமான தாயை யாரும் பார்த்திருக்க முடியாது. அவி அருகில் வந்தான்.“ஆன்ட்டி... உங்களை கும்பிட தோணுது. உங்களை மாதிரி ஒரு தாயை தனியா விடறது நியாயமில்லைனு எனக்கே தோணுது. இந்த ஒரு பாயின்ட்லதான் நந்தினி ஜெயிக்கறா. அதை ஊரும் உலகமும் ஏத்துக்கும். என் குடும்பமும் அதனாலதான் ஏத்துக்கிட்டாங்க.கல்யாணம் முடிஞ்ச பிறகு நந்தினியை எப்படிக் கையாளணும்னு எனக்குத் தெரியும். நான் அடிமையா யாருக்கும் சேவகம் செய்ய மாட்டேன். கல்யாணம் நடக்கட்டும். நீங்க கவலையே படாதீங்க!’‘மந்தாகினி அத்தனை பேரையும் பார்த்தாள்.“எங்க எல்லாருக்கும் பூரண சம்மதம். அவங்க ரெண்டு பேரும் ஆனந்தமா வாழணும். உங்களை இழக்க இந்தக் குடும்பமும் விரும்பலை. கல்யாணம் நடக்கட்டும். உங்க வீட்டுக்கு எதிர்ல அவங்களை நாங்களே வந்து குடித்தனம் வைக்கறோம்.’‘கோரஸாக குடும்பமே பாடியது!“இப்பத்தான் எனக்கு இன்னும் குற்ற உணர்ச்சியா இருக்கு அனு.’‘“எதுக்கு? அவியே, நந்தினிக்கிட்ட சொல்வான். நாங்களும் பேசறோம். நீங்க சாப்பிடாம போகக்கூடாது.’‘“நந்தினி புண்ணியம் செஞ்சிருக்காளா? இல்லை நீங்க பாவம் செஞ்சிருக்கீங்களான்னு எனக்குப் புரியலை.’‘அன்று மாலை வீடு திரும்பியப் பிறகு மந்தாகினி எதுவும் பேசவில்லை. நந்தினி எதுவும் கேட்கவும் இல்லை. ஆனால், அம்மா எதையும் சொல்லாததால் நந்தினியிடம் ஒரு குழப்பம் இருந்தது.கல்யாணத்தை நிறுத்தப் போகிறேன் என்று ஆவேசமாக போன அம்மா எதுவும் பேசாதது ஏன்?மறு நாள் காலை அவி அழைக்க, நந்தினி புறப்பட்டு போனாள்.“உங்கம்மா வந்து விவரம் சொன்னாங்க. எனக்கும், எங்க வீட்ல உள்ள எல்லாருக்கும், உங்கம்மா வீட்டுக்கு எதிரே நாம குடித்தனம் போறதுல பூரண சம்மதம். யாரும் தடை சொல்லலை.உங்கம்மா மாதிரி ஒரு அம்மா யாருக்கும் கிடைக்கப் போறதில்லை. காரணம் உனக்கே புரியும். நம்ம கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னால பாலை காய்ச்சிக் குடிச்சிடலாம். அப்பத்தான் கல்யாணம் முடிஞ்ச அன்னிக்கே குடித்தனம் வர சரியா இருக்கும்.நம்ம புது குடித்தனத்துக்குத் தேவையான எல்லா பொருள்களையும் அப்பா வாங்கி தர்றேன்னு சொல்லிட்டார். அம்மாவே வந்து பால் காய்ச்சுவாங்க நந்தினி. இப்ப உனக்கு சந்தோஷம்தானே?இனி நம்ம வாழ்க்கையை நீ ப்ளான் பண்ணிக்கலாம்.முடிஞ்சா உன்னை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க.’‘“நான் இன்னிக்கே வர்றேன்!’‘ நந்தினி சந்தோஷமாக தலையசைத்தாள்.மாலை அவனுடன் அவன் வீட்டுக்குப் போனாள். அனு ஆரத்தி எடுத்தாள்.“நீங்க எங்கக்கூட சேர்ந்து வாழலைன்னாலும், நீ இந்த வீட்டு மருமகள் ஆகப்போறே. உங்கம்மா மாதிரி ஒரு தாய், யாருக்கும் அமையாது. என்ன ஒரு நியாயம்? அவங்களை மனசுல வச்சு, அவங்களுக்கு ஆதரவா எங்க மகன் இருக்கணும்னுதான், இதுக்கு நாங்க எல்லாருமே சம்மதிச்சோம்.’‘நந்தினிக்கு என்னவோ போல இருந்தது.“சரிம்மா. வீட்டுக்குத் தேவையான பொருள்களை நாங்க வாங்கி தர்றோம். ஆறு லட்சம் பட்ஜெட்.நீ பட்டியல் பார்த்துக்கோ. ஏதாவது விடுபட்டிருந்தா, சொல்லு. நாங்களே வந்து பாலை காய்ச்சறோம்.’‘நந்தினி வீடு திரும்பி, சகல விவரங்களையும் சொன்னாள். அஅம்மா எழுந்து உள்ளே போக, “அம்மா, நில்லு... உன்னை விட்டுப் பிரியக்கூடாதுன்னுதான் நான் இந்த அதிரடி முடிவை எடுத்தேன். நீ அதனால ஆத்திரப்பட்டு கல்யாணத்தை நிறுத்தற அளவுக்கு வந்தே!இப்ப அவங்களே முழு மனசோட சம்மதிச்சாச்சு. அவங்களே வந்து பால் காய்ச்ச போறாங்க. அத்தனை பொருள்களையும் அவியோட அப்பா வாங்கித் தர்றார். என் புகுந்த வீடே முழு மனசோட இதை ஏத்துக்கிட்ட பிறகும் உனக்கென்ன கோபம்?’‘எந்தப் பதிலும் சொல்லாமல் மந்தாகினி உள்ளே போய் விட்டாள். நந்தினிக்கு பெரும் குற்ற உணர்ச்சியும், கூடவே கோபமும் வந்தது. யாரிடமும் கலந்து பேசாமல் அட்வான்ஸ் தந்தபோது இருந்த நெஞ்சழுத்தம் இப்போது காணாமல் போயிருந்தது. எதிர்ப்பு இருக்கும் வரைதான் ஆட்டத்தில் ருசி. விட்டுக் கொடுத்து கிடைக்கும் வெற்றி, ஒரு மாதிரி தோல்விதான்.“எனக்கிது வெற்றியா? தோல்வியா?’‘.18அடுத்து வந்த நாட்களில் கல்யாண வேலைகளை துரிதமா கவனிக்கத் தொடங்கி விட்டாள் மந்தாகினி. அவள் பார்த்து பார்த்து எதையும் விடாமல் செய்வதை நந்தினி கவனித்தாள்.ஆனால், நந்தினியிடம் மட்டும் பேச்சு வார்த்தையே மந்தாகினி வைத்துக்கொள்ளவில்லை. நந்தினி பொறுக்க முடியாமல், ஒரு வாரம் கழித்து இதை கேட்டே விட்டாள்.“என் மேல உள்ள கோபத்தால கல்யாணத்தை நிறுத்தறேன்னு சொன்னே. அவங்க என் தனிக்குடித்தன முயற்சிக்கு தடை சொல்லலை. இப்ப நீயும் கல்யாண வேலைகள்ல ஒரு குறையும் வைக்காம பார்த்துப் பார்த்து செய்யறே. ஆனா, எங்கிட்ட முகம் கொடுத்து பேசறதில்லை.எதுக்கு உன் கோபம் நீடிக்குதுன்னு எனக்கு சத்தியமா புரியலை. நீ பேசலைன்னா விடு. நானும் பேசலை. உனக்கு எதிர்லதான் வந்து குடியிருக்க போறேன். அப்ப நீ எங்கிட்ட பேசித்தானே தீரணும்? எத்தனை நாள் உன் மௌனம் நீடிக்குதுன்னு நானும் பாக்கறேன்.’‘நாட்கள் வேகமாக நகர, கல்யாணத்துக்கு இன்னும் மூன்றே நாட்கள் என்ற நிலையில், அன்று காலை வீட்டுக்குத் தேவையான அத்தனை பொருள்களும் ஒரு லாரியில் வந்து இறங்கின. முதல் நாளே அனு இதை மந்தாவிடம் சொல்லி விட்டாள்.“நாளைக்கு அவங்க குடித்தனத்துக்குத் தேவையான சகல பொருள்களோட நாங்க மூணு பேரும் வர்றோம் மந்தா.’‘“ஸாரி அனு. கல்யாண வேலைகள் எனக்கு கொஞ்சம் பாக்கி இருக்கே. அதை தள்ளிப்போட முடியாதே.’‘“சரி, நீங்க போங்க மந்தா. நந்தினி இருப்பாளே!’‘இது தெரிந்த நந்தினி சீறினாள்.“அவங்க ஆறு லட்சம் செலவழிச்சு குடித்தனத்துக்கு தேவையான சகலத்தையும் நாளைக்குக் கொண்டு வர்றாங்க. நீ இந்த நேரத்துல வீட்ல இல்லைன்னா மரியாதையா?’‘மந்தாகினி உஷ்ணமாக ஒரு பார்வை மட்டும் பார்த்தாள். பதிலே பேசாமல் உள்ளே போய் விட்டாள்.மறு நாள் காலையில் சீக்கிரமே அத்தனை பொருள்களும் வர, அனு, ரவி, அவி மூவரும் வந்து அதை ஒழுங்கு படுத்தினார்கள். நந்தினி அவர்களுக்கு, அம்மா வீட்டில் சமையல் செய்து மரியாதையுடன் உபசரித்தாள்.புது வீடு பிரமாதமாக ஜொலித்தது. மாலை வரை வேலை இருந்தது. அனு பூஜை அறையை அழகாக வடிவமைத்தாள். இரவு எட்டு மணிக்குத்தான் புறப்பட்டார்கள்.“நாளைக்கு காலையில ஆறு மணிக்கு பால் காய்ச்சறோம்.அஞ்சரைக்கு நாங்க எல்லாரும் வந்துடுவோம். உங்கம்மா-கிட்டபோன்ல நாங்க பேசறோம்.’‘இரவு ஒன்பது மணிக்கு மந்தா வந்தாள்.“வீட்டை வந்து பாரம்மா. என் மாமியார் அத்தனை அழகா எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிட்டாங்க. மூணு வேளையும் நான்தான் அவங்களுக்கு சமைச்சு போட்டேன். நாளைக்கு ஆறு மணிக்கு பால் காய்ச்சறோம். அஞ்சரைக்கு அவங்க குடும்பமே வருது.’‘மறு நாள் காலை நாலு மணிக்கே எழுந்து குளித்தாள் மந்தாகினி. நந்தினி குளித்து பட்டுச் சேலை கட்டி தயாராக, மந்தாகினி புறப்பட்டு விட்டாள்.“அம்மா நீ எங்கே போறே?’‘பதில் தராமல் மந்தாகினி கிளம்பினாள். நந்தினி நொந்து போனாள். வந்த அவி குடும்பமும் மந்தாவின் விலகலுக்குக் காரணம் புரியாமல் குழம்பியது.அடுத்த இரண்டு நாட்களில் கல்யாணம். அதில் எந்த ஒரு குறையும் வைக்காமல் முழுமையாக ஈடுபட்டு, தன்னுடைய மகள் கல்யாணத்தை, ஒரு குறையும் வைக்காமல் நடத்தினாள் மந்தாகினி.நந்தினி கழுத்தில் அவி கட்டிய தாலி ஏறி விட்டது. மற்ற சடங்குகள் முடிந்தன. புது வீட்டில் சாந்தி முகூர்த்தம் என முடிவாக, மதியமே குடும்பம் மொத்தமும் மந்தா வீட்டுக்கு வர, இரண்டு அம்மாக்களும் ஆரத்தி எடுத்தார்கள்.மதியம் மூன்று மணிக்கு பேக்கர்ஸ் வந்தார்கள். மந்தா தன் வீட்டை காலி செய்து லாரியில் ஏற்ற, அத்தனை பேரும் திடுக்கிட, “நான் டெல்லிக்கு மாற்றல் வாங்கியாச்சு, பதவி உயர்வோட! இந்த வீட்டை காலி பண்ணி, பொருள்கள் ரெண்டு நாள்ல வந்து சேரும். நான் இன்னிக்கு விமானத்துல போறேன். நாளைக்கு டியூட்டியில ஜாயின் பண்ணணும்.’‘.“ஏன்மா இந்த முடிவு? நான் குடித்தனம் பண்ணப் போற வீட்ல நீ கால்கூட பதிக்கலை. என் வாழ்க்கை தொடங்கப் போற நேரம், நீ இங்கே இல்லை. எதுக்காக இந்தத் தண்டனை எனக்கு?’‘“இதப் பாரு... உனக்கு எதிரே இருந்து, தினமும் உன் முகத்துல முழிச்சு, உன் திமிரை வளர்க்க எனக்குப் பிடிக்கலை. உங்கப்பா, அண்ணன் என்னை புரிஞ்சுகலை. நீயும் என் பேச்சை மதிக்கலை. எனக்கு யாரும் இல்லை. நான் அனாதை.ஆனா, உனக்கு ஒரு குடும்பம் இருக்கு. அதை நல்லபடியா தக்க வச்சுக்கோ. ‘மகளுக்கு மாதாதான் சத்ரு’னு சொல்வாங்க. அதை உண்மைன்னு நிரூபிக்க நான் தயாரா இல்லை.ரவி சார், அனுவை விட நல்ல அப்பா, அம்மா உலகத்துல இல்லை. அனு, நான் சென்னைக்கு ஆஃபீஸ் வேலையா வருவேன். என் மகள் வீட்டுக்கு வர மாட்டேன். அண்ணன் வீட்டுக்குத்தான் வருவேன். நான் புறப்படறேன்.’‘நந்தினி, அவி தலையில் கைவைத்து ஆசீர்வதித்த மந்தாகினி புறப்பட்டு விட்டாள்.நந்தினி வாய் விட்டு அழுதாள். அதில் அவளுடைய ஆணவம், அகங்காரம், திமிர் அத்தனையும் கரைய, மந்தாகினி ஆசைப்பட்ட ஒரு பெண் உருவாக தொடங்கி விட்டாள்!(முற்றும்)