- ஆர்.மணிமாலா1எப்பவாவது மாமியார் வீட்டுக்கு வந்துச் செல்லும் மருமகனைப் போல கதிரவன் வந்திருந்தான். என்னதான் ஆக்ரோஷம் காட்ட முயன்றாலும், அவனுடைய வீச்சு, மூணாறின் கிளைமேட்டின் முன்பு எடுபடவில்லை.பேரிக்காய், பலா மரங்களின் இண்டு இடுக்குகளின் வழியே நுழைந்து, தரையில் தங்கக்காசுகளாய் சிதறியிருந்தன சன்னமான சூரியக்கதிர்கள்!தோட்டம் முழுக்க ரம்மியமான சூழ்நிலை!.பங்களாவின் எதிரே கார் செல்ல பாதை விட்டு இரு பக்கமும், அந்த ஊரின் சீதோஷ்ணத்திற்கு ஏற்றபடி வளரும் அத்தனை மரம், செடி, கொடிகளும் வளர்ந்திருந்தன.சற்று தூரத்தில் மழை மேகத்தை சுமந்து வந்து கொண்டிருந்தனக் குளிர்காற்று! அதைச் சங்கடமாய் பார்த்து முகம் கருத்தான் சூரியன்.உதட்டிற்கிடையே சிகரெட்டை கவ்விக் கொண்டிருந்தார் வாசுதேவன். புகையை வளையம் வளையமாக விடும் மூடில்லாததால் ஊதித் தள்ளிக்கொண்டிருந்தார்.மரங்களினூடே யோசித்தபடி நடந்தார்.உயரமாய் வளர்ந்திருந்த மரத்தை அணைத்தபடி மிளகுக்கொடி படர்ந்திருந்தன.பத்துக்கு பத்தடி நிலத்தில் வனஜா ஆசையாய்ப் பயிரிட்டிருந்த காபிச் செடியில் காபிக் கொட்டைகள் சிறு திராட்சையைப் போல் சிவந்துக் காய்த்திருந்தன.அதன் அடிவேரில் சட்டென அசைவு தென்பட, சிகரெட்டை காலடியில் போட்டு நசுக்கிவிட்டு, உற்று கவனித்தார்.சிவப்பு கலரில் பாம்பு!காபிச் செடியின் வாசனைக்கு அடிக்கடி வந்து வாசம் செய்பவைதான்.விஷம் உள்ளதோ, அல்லாததோ... பாம்பு பாம்புதானே?இயல்பான பதற்றம் தொற்றிக்கொள்ள, ‘‘மாரிமுத்து... மாரிமுத்து... டேய் மாரி.!’’ சத்தமாய் அழைத்தார்.மாரிமுத்துவிடமிருந்து வடகறி வாசனை மோதியது.சாப்பிட்டுக் கொண்டிருந்திருப்பான் போல!ஐம்பது வயதைத் தாண்டியவன். இருபது வருடங்களாய் இங்கே வேலை செய்பவன்.‘‘ஐயா...’’‘‘அங்கே பார்... காபிச் செடிக்குக் கீழே...’’பார்த்தவனுடைய கண்கள் விரிந்தன.‘‘பா...ம்...பு..!’’‘‘இந்தக் காபிச் செடி வேணாம்னாலும் கேக்கிறாளா? வீட்டுக்குள்ளே எதுக்கு? அதான் தனியா, காபி, டீ எஸ்டேட்லாம் வச்சிருக்கோமே! அடிச்சுப் போட்ருவியா? ஆளை வர வைக்கவா?’’‘‘ரெண்டு நாள் முன்னாடிக்கூட வந்துச்சே? அடிச்சுப் போட்டேனே... வாரம் ஒரு முறையாவது வருதுங்களே... இதுக்கு எதுக்கு ஆள்?’’‘‘இல்லே... பாம்பை கொல்லக்கூடாது. போன் பண்ணா, அவங்களே பிடிச்சுப் போய் காட்டுல விட்ருவாங்க.’’‘‘ஐயா... இந்தக் குளிர் பிரதேசத்தில வீட்டுக்கு வீடு அவங்க அவங்க இருக்கிற இடத்தைப் பொறுத்து சின்னதோ பெருசோ தோட்டம் போட்டுக்கிறாங்க. இந்த ஊர்ல பாம்புகளும் அதிகம். வீடு தேடி நிறைய வருதுங்க. நாம ஆள் வரவைக்கிற வரைக்கும் சில விஷப்பாம்புகள் காத்திருக்கிறதில்லைங்கய்யா! பாம்பை விட மனுஷங்க உயிர் பெரிசு!’’‘‘எனக்கே பாடம் சொல்லித்தர்றே!’’ நக்கலாய்ச் சிரித்தார்.‘‘ஐயய்யோ... அப்படியெல்லாம் இல்லைங்கய்யா.’’‘‘சரி... சரி... சீக்கிரம் வேலையை முடி. வெளியே கிளம்பணும்.’’‘‘இதோ... இப்பவே..!’’‘‘அப்படியே... பழுத்து கீழே விழுந்து கிடக்கிற பலாப்பழத்தையெல்லாம் யாருக்காவது எடுத்துக் குடுத்துடு. அதைச் சாப்பிட யானை வந்துடப்போகுது..!’’உள்ளே நுழைந்தவர் எதிரே வனஜா வந்தாள்.‘‘எங்கே போயிட்டீங்க அதுக்குள்ளே? டிபன் ரெடியாயிருக்கு.’’‘‘தோட்டத்துல...’’குப்பென்று மோதிய புகை நாற்றத்திற்கு மூக்கைப் பொத்திக் கொண்டாள்.‘‘சிகரெட் பிடிச்சீங்களா? டாக்டர் அறவே இந்தப் பழக்கத்தை விடணும்னு சொல்லியும்..?’’‘‘உடனே விட்ற முடியுமா சொல்லு? கொஞ்சம்கொஞ்சமா குறைச்சுட்டுதானே வர்றேன்? சரி இதை விடு... இந்தக் காபிச் செடியெல்லாம் வீட்ல வளர்க்க வேணாம்னு சொல்றேன். கேட்டாதானே? இப்பவும் பாரு... பாம்பு வந்திருக்கு..!’’‘‘கடவுளே... அதான் மாரிமுத்து இருக்கான்ல?’’‘‘மாரிமுத்துக்கெல்லாம் காத்திருக்காம ஒரு நாள் வீட்டுக்குள்ள நுழைஞ்சிடுச்சுன்னா அப்ப தெரியும் உனக்கு..!’’‘‘பயமுறுத்தாதீங்க... காபிச் செடின்னு இல்லே... தோட்டம்னு இருந்தாலே... அதுங்க வரத்தான் செய்யும். வராத அளவுக்கு ஏதாவது வழியிருக்கான்னு என் சித்தப்பாக்கிட்ட கேக்கறேன். அவர் அக்ரிகல்ச்சர் ஆஃபீஸரா இருந்தவராச்சே!’’‘‘அப்பக்கூட அந்தச் செடிய கழிச்சிடலாம்னு வார்த்தை வருதா பாரு...’’ சலித்துக் கொண்டார்.‘‘ஏங்க... இப்ப இந்த விஷயமா முக்கியம்? நானே மானசாவை நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கேன்..!’’ என்ற வனஜா, பணக்கார பெண்மணிக்கே உரிய தோரணையுடன் இருந்தாள்.‘‘சாப்பிட்டாளா?’’‘‘இன்னும் ரூம்லேருந்து வரலே. லக்கேஜை மட்டும் செல்வி எடுத்துட்டு வந்துட்டா..!’’ அவள் கைகாட்டிய இடத்தில் மூன்று பெரிய சூட்கேஸ்கள் அமர்ந்திருந்தன.‘‘கூப்பிடு அவளை... சாப்பிடலாம்..!’’ வாசுதேவன், டைனிங் டேபிள் நோக்கிச் சென்றார்.வனஜா மகளை அழைக்க முற்பட, அவளே படியிறங்கி வந்துக் கொண்டிருந்தாள்.பளிங்குப் போன்ற முகத்தில்... மறைக்க முயன்றும் வேதனை அப்பிக் கிடந்தது.இருவரையும் பார்த்துவிட்டு மௌனமாய் அமர்ந்தாள்.அவளே தனக்கு தட்டு எடுத்து வைத்துக்கொண்டு பீங்கான் பாத்திரத்தின் மூடியைத் திறந்தாள்.‘‘இரு... நான் வைக்கிறேன்..!’’ வனஜா அவள் தட்டில் இட்லி வைத்து சாம்பார் ஊற்ற, மானசா தடுத்தாள்.‘‘சாம்பார் வேண்டாம்... கொஞ்சமாய் சட்னி!’’சிறு விள்ளலை மெல்ல மென்று... விழுங்கும்போது தொண்டை வலிக்க... முகம் சுருங்கியது மானசாவிற்கு!‘‘தேவையா இதெல்லாம்? யாரோ ஒருத்தனுக்காக?’’ வாசுதேவனுக்கு கோபம் கொப்பளித்தது.‘‘ப்ச்..!’’ வனஜா கணவனை கண்களால் கெஞ்சினாள்.‘இந்த நேரத்தில் இந்தப் பேச்சு அவசியமா?’ என்பது போல!‘‘முடியலை வனஜா. பார்த்து பார்த்து வளர்த்த நம்மளை பத்திக் கவலைப்படாம, எவனோ ஒரு பொறுக்கிக்காக சாகத் துணிஞ்சவளை கொஞ்சவா முடியும்? பொழைப்பாளா, மாட்டாளான்னு ஹாஸ்பிடல்ல நாம துடிச்சோமே... அதை இப்ப நினைச்சாலும் உயிர் போய் உயிர் வருது. இப்பவரை அவளால சரியா சாப்பிட முடியுதா, முழுங்க முடியுதா பார்...’’ வார்த்தையில் உஷ்ணம் குறைந்தபாடில்லை.‘‘சரிங்க... இப்ப பழசையேப் பேசி என்னாகப் போகுது? அவதான் தன்னோட தப்பை உணர்ந்துட்டாளே! திரும்பப் பேசி சங்கடப்படுத்தாம சாப்பிடுங்க.’’‘‘இதோ பார் வனஜா... இவக்கிட்ட சொல்லி வை. என் அக்கா வீட்ல யாருக்கும் இவ கதைத் தெரியாது. தொண்டை வலிக்குக் காரணம், விஷம் குடிச்சது... அதுவும் காதலுக்காகன்னு அவங்களுக்குத் தெரிஞ்சது... அப்புறம் நான் விஷம் குடிச்சிடுவேன்... சொல்லிட்டேன்.’’‘‘முதல்ல இப்படி அடாவடித்தனமாக பேசுறதை நிறுத்துங்க. வாயில நல்ல வார்த்தை வருதாப் பாருங்க. எல்லாம் மானசாவுக்குத் தெரியும். நாம சொல்லணும்கிற அவசியமில்லை. என்ன மானசா... புரியுதுல்லே?’’மானசா தட்டிலிருந்து கண்களை அகற்றவில்லை.‘ம்...’ என்ற சின்ன தலையசைப்புடன் சாப்பிட்டாள்.அப்பாவின் பேச்சு... கனன்று கொண்டிருந்த மன வலியை விசிறி விட்டதுப் போலிருந்தது. அந்த வெப்பத்தில் கண்கள் கசிய முற்பட்டது.‘‘லக்கேஜ் எல்லாம் கார்ல வைக்கச் சொல்லு... செபாஸ்டியனை கூப்பிடு...’’‘‘சரிங்க..!’’டிரைவரை அழைக்க நகர்ந்தவளை தடுத்து, ‘‘எனக்கும் ரெண்டு நாளைக்கு வேண்டிய டிரெஸ்ஸை வைக்கச் சொன்னேனே?’’‘‘வச்சிட்டேங்க..!’’‘‘நீங்களும் வர்றீங்களா என்ன?’’ புருவம் மேலேறக் கேட்டாள் மானசா.‘‘என்ன கேள்வி இது? என் அக்கா வீடு... நான் வந்து பார்க்க வேண்டாமா? உன்னைத் தனியா அனுப்பிட முடியுமா? மூணு வருஷம் அங்கே தங்கிப் படிக்க போறே! என்னதான் என் மாமன் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாலும் நேர்ல வந்து விசாரிக்க வேணாமா?’’‘கடவுளே... கார்ல நாள் முழுக்கப் பேசியே கொல்வாரே!’ மௌனமானாள்.வனஜா, கண்ணீர் பளபளக்க கையசைத்து விடை கொடுத்தாள் மகளுக்கு. கார் புறப்பட... மூணாறின் குளிர்ச்சியும் பசுமையும் முகத்தில் மோதியது.சென்னை நோக்கிய பயணம்.அவள் கண்கள் அவன் எங்கேயாவது தென்படுகிறானா என்று நப்பாசையுடன் தேடியது. அவன் அங்கில்லை என்று தெரிந்திருந்தாலும்... காதல் சுமந்த இதயத்தினுள் ஏதோ ஒரு நம்பிக்கை!நடந்தவையெல்லாம் நினைவில் எட்டிப் பார்க்க... கண்களை மூடிக்கொண்டாள். காதையும் பொத்திக்கொள்ள நினைத்தாள் அப்பாவின் சலசல பேச்சால்!அட்டைப் பூச்சியின் அருவருப்பு, நெருஞ்சி முள்ளின் வலியைப் போல ஓர் உணர்வை சுமந்தவாறே பயணித்தாள் மானசா..2கேட்டிற்கு வெளியே கார் நிற்கும்போதே உள்ளிருந்து நாய்களின் சத்தம் காதைப் பிளந்தது.மானசா முகத்தில் சிறு புன்னகை அரும்பியது.அவளுக்கு நாய்கள் என்றால் அவ்வளவு இஷ்டம். வீட்டில் வளர்க்க வேண்டும் என்று தன்னுடைய ஆசையை சொன்னபோது தடை போட்டாள் அம்மா..சிறுவயதில் அவளை நாய் கடித்து, தொப்புளைச் சுற்றி ஊசி போட்டதெல்லாம் நினைவிற்கு வர... Ôவேண்டவே வேண்டாம்!’ என்று பிடிவாதமாய் மறுத்தாள்.‘‘இப்பல்லாம் தொப்புளைச் சுத்தி இன்ஜெக்ஷன் போடறதில்லைம்மா. கையிலேயோ இடுப்புலேயோதான்!’’ என்று மன்றாடி பார்த்தாள் மானசா.‘‘என்னது? மறுபடி கடி வாங்க நான் ஆளில்லே!’’ என்று முறைத்ததால், நாய் வளர்க்கும் ஆசையை மறந்து விட்டாள்.‘ஆனால், இங்கே?’கேட் கதவு திறக்க... அகன்று, உயர்ந்த பெரிய கட்டடம், மார்பிள் பதித்த கற்களால் பளபளத்தது!ஏற்கெனவே மூன்று கார்கள் நின்றிருந்த போர்டிகோவில் இவர்கள் வந்த ஃபார்ச்சுனரும் போய் செருகிக் கொண்டது.பச்சை பசேல் லேன்!வெள்ளையும் பிரவுனுமாக நான்கு நாய்கள் விதவிதமாக! அதில் ஒன்று உயரமான ராஜபாளையம் நாய். லாப்ரடார் மற்றும் புஸுபுஸு ரோமங்களுடன் முகம் மறைத்திருந்த கைக்கு அடக்கமான இரண்டுச் செல்லங்கள்!மூணாறை விட இங்கே பரவாயில்லை என்றுத் தோன்றியது மானசாவிற்கு.‘‘அடடடே... மச்சான்... வா... வா... ஹேய் மானுக்குட்டி வாடா... சின்னப் பொண்ணா பார்த்தது. எவ்ளோ பெரிசா வளந்துட்டா... உள்ளே வா... ஏய், தேனு... சீக்கிரம் வா!’’ அட்டகாசமாய் சிரித்து வரவேற்றார் சக்கரவர்த்தி.ஓரளவு பாரமான தன்னுடைய உடம்பை தூக்கிக் கொண்டு ஹாலுக்கு வந்த தேன்மொழி, சில கணங்கள் யாரோ ‘அட்டாக்’ சொன்னது போல் ஸ்தம்பித்து நின்று விட்டாள்.‘‘அக்கா..!’’‘‘எவ்ளோ நாளாச்சு உன்னை பார்த்து? எப்படிடா இருக்கே? நாளைக்குத்தானே வர்றதா சொன்னே?’’‘‘நாளைக்கு மூணாறுல மழை வெளுத்து வாங்கும்னு டி.வி.யில சொன்னான். எதுக்கு ரிஸ்க்குன்னு கிளம்பிட்டோம். சஸ்பென்ஸா இருக்கட்டும்னு போனும் பண்ணலை.’’‘‘அட... மானசாவா இது? என் வீட்டுக்கு மகாலட்சுமியே வந்திருக்கா! வாடா செல்லம்... இப்படி வா...’’வாசுதேவன் கண்களால் கட்டளையிட... மானசா தேன்மொழியின் காலைத் தொட்டு வணங்கினாள். கூடவே சக்கரவர்த்தியின் காலையும்.‘‘தங்கத்தை அருமையா வளர்த்திருக்கேடா!’’ அவளை அணைத்து, நெற்றியில் முத்தமிட்டாள்.பெருமிதமாய்ப் புன்னகைத்தார் வாசுதேவன்.‘‘வனஜாவையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமே...’’‘‘இனி அடிக்கடி வருவோமேக்கா... அழைச்சிட்டு வருவேன்!’’‘‘ரொம்ப டயர்டாத் தெரியுறீங்க. அப்புறமா குளிச்சுக்கலாம். ரெஸ்ட் ரூம் போயிட்டு வாங்க... சாப்பிடலாம்!’’‘‘கொலை பசிக்கா... நானே கேட்கணும்னு இருந்தேன்.’’சற்று நேரத்தில் அத்தனை பேரும் சாப்பிட அமர்ந்தனர்.நீளமான டைனிங் ஹால்.அழகான டேபிள், அதன் மீது விதவிதமான உணவு வகைகள்! இரண்டு சமையல்காரர்கள், ஆவி பறக்க எடுத்து வந்துக் கொண்டே இருந்தனர்.‘‘இவ்வளவையும் யார் சாப்பிடறது?’’‘‘மச்சான்... நீங்க வர்றது முன்னாடியே தெரிஞ்சிருந்தா உன் அக்கா இன்னும் அதிகமா லிஸ்ட் போட்டிருப்பா. சாப்பிடுங்க...’’மானசா சாப்பிடுவதை பார்த்து வியந்தாள் தேன்மொழி.‘‘என்னடா... கொஞ்சம் கொஞ்சமா சிட்டுக்குருவி மாதிரி சாப்பிடறே?’’‘‘அ... அதில்லேக்கா போன வாரம்லாம் அவளுக்கு ஃபீவர், த்ரோட் பெயின். சரியா முழுங்க முடியல... இப்போ பரவாயில்லைக்கா!’’ என்றார் முந்திக்கொண்டு.‘‘அடடா... உனக்கு லிக்விடா ஏதாவது தரவா?’’‘‘பரவாயில்லை அத்தை. இதுவே போதும்.’’‘‘எதுக்கும் சங்கடப்படக் கூடாது மானசா. இனி இதுவும் உன் வீடுதான்!’’ என்றார், சக்கரவர்த்தி.மெல்ல புன்னகைத்து தலையாட்டினாள்.‘‘எங்கே பிரவீனைக் காணோம் மாமா? ஆஃபீஸுக்குப் போயிருக்கானா?’’‘‘இப்ப சென்னையில இல்லை. அஃபிஷியலா ஹைதராபாத்துக்கும் சிக்மகளூருக்கும் போயிருக்கான். அப்படியே அவன் தங்கச்சி பிரகதிய பார்க்க பெங்களூருவுக்குப் போயிட்டு வருவான்.’’‘‘பிசினஸ் எல்லாம் மாப்பிள்ளைகிட்டயே ஒப்படைச்சிட்டீங்க போல!’’‘‘ஆமாம் வாசு! எனக்கும் வயசாகுதுல்ல. அவன் துடிப்பாயிருக்கான்... திறமையா இருக்கான். நான் எப்பவாச்சும் ஆஃபீஸ் பக்கம் எப்படிப் பார்ப்பேன்.’’அவர் பேசப் பேச வாசுதேவன் பெருமூச்சு விட்டார். அதில் விரக்தியும் இருந்தது.புரிந்து கொண்ட சக்கரவர்த்தி, ‘‘வெங்கட்கூட நீ இன்னும் பேசுறது இல்லையா மச்சான்?’’ என்றார்.‘‘எப்படிங்க பேசுவான்? இவனுக்கும் வெங்கட் ஒரே பிள்ளைதானே? படிச்சு முடிச்சுட்டு இவன் பிசினஸை பார்த்துப்பான்னு நினைச்சா... ஒரு நேபாளி பொண்ணை லவ் பண்ணி, கல்யாணமும் பண்ணிட்டு வந்து நின்னா யாருக்குத்தான் மனசு வேகாது?’’‘‘புரியுது... ஆனா, எதையும் மாத்த முடியாது இல்லே? ஒதுக்கி வச்சாலும் வெங்கட்தானே வாரிசு? மனசை சமாதானப்படுத்திக்கிட்டு...’’‘‘இல்லே... இல்லே மச்சான். அவனை நான் மறந்து ரொம்ப நாளாகுது!’’‘‘நடந்ததை மாத்த முடியாது. அவன்தான் உன் வாரிசுங்கிறதையும் மறுக்க முடியாது. இந்த மாதிரி கலப்பு கல்யாணமெல்லாம் நம்மளால ஏத்துக்க முடியாதுதான். இதைத் திமிரு, கொழுப்பு, சுயநலம்னு நாம சொன்னாலும், எல்லாமே கர்மாதான் மச்சான். அப்பவே மேலே இருக்கறவன் போட்ட முடிச்சு. நடந்துதான் தீரும். உன் கோபம் ஒரு நாள் ஜீரணமாகும்!’’‘‘விடுங்க மாமா... அவனைப் பத்தி இப்ப எதுக்கு? எக்கேடோ கெட்டு ஒழியட்டும்.’’‘‘குழந்தைப் பிறந்துட்டதா கேள்விப்பட்டேன்!’’‘‘ஆமா... கூர்க்கா மூஞ்சியோட இருக்கிறதா யாரோ சொன்னாங்க!’’ என்றார், வெறுப்பாய்.‘‘சரி... சரி... டென்ஷனாகாதே... சாப்பிடு!’’ சிரித்தார், சக்கரவர்த்தி.மானசா தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்த பால்கனியில் நின்றிருந்தாள்.கீழே நாய்கள் ஒன்றையொன்று விரட்டி விளையாடிக் கொண்டிருந்தன. தூரத்தில் கடல் தெரிந்தது. கொஞ்சமும் களைப்பின்றி ஓடிப் பிடித்து விளையாடின அலைகள். வீட்டைச் சுற்றி அழகுக்காக வளர்க்கப்பட்ட செடிகள் வரிசையாக தொட்டிகளில். பச்சை கார்ப்பெட் விரித்தது போல் புல்வெளி. அந்தச் சூழல், மானசாவிற்கு இதமளித்தது!மூணாறும் அவளுக்கு ரொம்ப பிடித்த ஊர்தான். ஆனால், சென்னையும் அதற்கு ஈடாய் கவர்ந்தது. அந்த ஊர் இயற்கை அழகென்றால், இது மாடர்ன் சிட்டி!மூன்று வருடங்கள் இங்கே தங்கி படிக்கப் போவதை நினைத்து முன்பு மனம் வருந்தியவளுக்கு, இப்போது விசிறி விட்டது போலிருந்தது காயத்திற்கு!அவன் நினைவின் வாசம் அவள் நிழலைக்கூட தொடக்கூடாது என்பதற்காக இந்த ஊருக்கு கடத்திக் கொண்டு வந்து விட்டார் அப்பா.அதற்காக மட்டுமல்ல... அத்தையின் மகனுக்கு என்னை கல்யாணம் செய்வதாய் பிறந்தபோதே எழுதப்பட்ட சாசனம்.இதென்ன உயிலா? உயிர்!எங்கோ பிறந்து, எங்கோ வாழ்ந்து... ஏதோ ஒரு விஷயத்துக்காக அவள் இருக்கும் ஊருக்கு வரவைத்து, கண்களில் விழுந்து, இதயத்தில் அடைக்கலமாவதற்கு பெயர்தான் காதல்!திலகன்!உங்களை எப்படி மறக்க முடியும்? உங்களால் உண்டான வலியை மறக்கத்தான் முடியுமா?நினைவுக்கு வருவதெல்லாம், நினைவில் இருப்பதெல்லாம்... விட்டுப் போன உங்கள் நினைவுகள்தான். இதில் எங்கேயிருந்து மறப்பது? எங்கேயிருந்து தொலைவது?‘‘மானசா...’’குரல் கேட்டுத் திரும்பினாள்.வாஞ்சை நிரம்பிய புன்னகையுடன் தேன்மொழி.‘‘அத்தை...’’‘‘இந்த வீடு உனக்குப் பிடிச்சிருக்கா டா?’’‘‘இது வீடா அத்தை?’’ என்றாள், குறும்புடன்.‘‘கொஞ்சம் பெருசுதான். இதுக்கு எத்தனை பேர் வச்சாலும் வீடுங்கிறதுதான் சரி. உன்னோட ரூம் பிடிச்சிருக்கா? கம்ஃபர்ட்டபிளா இருக்கா? இல்லேன்னா, மேல் மாடியில் பிரவீனோட ரூம் பக்கத்துல ஒரு ரூம் இருக்கு. அங்கே கூட ஷிஃப்ட் பண்ணிக்கலாம்.’’‘‘இதுவே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அத்தை!’’‘‘சரிடி கண்ணு! உனக்கு சமையல்ல என்னென்ன பிடிக்கும்னு சொல்லு. விதவிதமா சமைக்க சொல்றேன்.’’‘‘அன்பா எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவேன். பர்ட்டிகுலரா இதைதான் சாப்பிடுவேன்கிற என்ற கொள்கை எல்லாம் என்னிடம் இல்லை. அதனால எனக்காக எந்த மெனக்கெடலும் வேண்டாம்.’’அத்தையிடம் சங்கோஜமின்றி பேச முடிந்தது அவளால்!‘‘பிரவீன் பத்தி எதுவும் கேட்க மாட்டியா பொண்ணே?’’ செல்லமாய் அவள் கன்னத்தில் தட்டிக் கேட்டாள்.‘‘என்ன கேக்கறது? அதான் அஃபிஷியலா ஊருக்குப் போய் இருக்காருன்னு மாமா சொன்னாரே...’’ என்றாள், தயக்கமாய்.‘‘இப்ப எப்படி இருப்பார்? பார்த்து பல வருஷம் ஆச்சேன்னு கேக்கலாமே... என் பிள்ளை ஹீரோ மாதிரி அழகா இருப்பான். அவன் ரூம் முழுக்க அவன் போட்டோ நிறைய இருக்கும். போய் பாரு. அவனுக்கு கிரிக்கெட் பிடிக்கும். நல்லா நீச்சல் அடிப்பான். ஸ்பீடா கார் ஓட்டுவான்!’’ அத்தை சொல்லிக்கொண்டே போக... அவள் உன் மனசின் ஆசை புரிந்தது.‘நிரந்தரமாய் நான் இங்கேயே இருக்க வேண்டும்!’அந்த நினைப்பே மானசாவை வதைத்தது.. 3‘‘அடிக்கடி வந்துட்டு போ வாசு! கூட பொறந்தவன்னுதான் பேரு. முகமே மறந்து போற அளவுக்கு இருக்கு உன் பாசத்தோட லட்சணம்!’’‘‘அக்கா நேத்திலேருந்து நூறு முறையாவது சொல்லிட்டே. வந்து பார்க்கக் கூடாதுன்னு சங்கல்பமா என்ன? சூழ்நிலைக்கா! நீங்களும்தான் வந்து பாக்கலே. நான் ஒண்ணும் கோச்சுக்கலையே! என்னை மாதிரி உங்களுக்கும் சூழ்நிலைதான் காரணமா இருக்கும்னு நான் எடுத்துக்கலையா?’’‘‘போதும்பா உங்க சண்டை! பொண்ணை இங்கே விட்டுட்டு போகும்போது... மச்சான் இனி வராம இருக்க முடியுமா?’’‘‘ஆமாம் மாமா. வனஜாவாலேயும் இவளைப் பிரிந்து இருக்க முடியாதே!’’காரில் ஏறுமுன் மகளிடம் வந்தார். ‘‘சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கில்லே? இங்கே யார்கிட்டயும் நடந்த கதையை சொல்லிட்டிருக்காதே!’’ என்றார், அமுங்கியக் குரலில்.‘‘ம்..!’’‘‘இனி இதுதான் உன் வீடு... புரியுதா?’’அந்தப் Ôபுரியுதா?’வில் அவ்வளவு பிளான்கள் புதைந்திருந்தன. மிகவும் கசப்பாய் உணர்ந்தாள்.‘‘ஒழுங்கா படி... அதைவிட ஒழுங்காய் இரு!’’‘‘ஏய்... அவக்கிட்ட என்ன முணுமுணுப்பு? புள்ள முகமே வாடிப் போச்சு. போதும் கிளம்பு!’’ என்றாள், தேன்மொழி.‘‘ஒண்ணும் இல்லேக்கா... நல்லா படிக்க சொன்னேன்!’’‘‘ஏன்... படிச்சு வேலைக்குப் போய் சம்பாதிக்கிற கட்டாயத்துல இருக்காளா?’’‘‘......!?’’‘‘அதெல்லாம் மானு நல்லாவே படிப்பா. அவளுக்கு அந்தக் காலேஜை ரொம்பப் பிடிச்சிருக்குன்னு சொன்னா. அவளை நாங்க பார்த்துக்கிறோம், கவலைப்படாதே மச்சான்.’’‘‘சரி மாமா... கிளம்பறேன். நல்லா படிக்கணும் சரியா?’’‘‘சரிப்பா..!’’வாசுதேவன், அரை மனதுடன் சின்ன பதற்றத்துடனே கிளம்பினார்.மறுநாள்!சக்கரவர்த்தியுடன் காரில் கல்லூரிக்குச் சென்றாள் மானசா.உண்மையில் அந்தக் கல்லூரி... அந்த அட்மாஸ்பியர் எல்லாமே அவளுக்கு மனதிற்கு நிறைவாய் இருந்தது.‘‘உனக்கு என்ன வேண்டுமோ தயங்காம என்கிட்டேயோ அத்தை கிட்டேயோ கேக்கணும்... சரியா மானு?’’‘‘நிச்சயமா மாமா!’’‘‘இந்த ஊர் கொஞ்சம்... கொஞ்சமென்ன நிறையவே ஹாட்! உங்க ஊரு மாதிரி எப்பவும் ஃப்ரிட்ஜுக்குள்ள உட்கார்ந்துட்டிருக்கிற மாதிரி எல்லாம் இருக்காது. ஆனா, பொழுதைப் போக்க நிறைய இடங்கள் இருக்கு. பிரவீன்கிட்ட கேட்டியான்னா, சொல்ற இடத்துக்கு கூட்டிட்டுப் போவான்.’’‘‘ஓகே மாமா!’’ என்றவள், மெல்லச் சிரித்தாள்.‘‘பிரவீன் இன்னும் ரெண்டு மூணு நாள்ல வந்துடுவான்!’’‘‘ம்...’’கல்லூரி வாசலில் கார் நின்றது.‘‘க்ளாஸ் வரை வரட்டுமா மானு?’’‘‘ஐயோ... வேணாம் மாமா. நான் பார்த்துக்கிறேன். அப்புறம் இதைப் பார்த்து என்னை ராகிங் பண்ண போறாங்க!’’‘‘அதெப்படி? என் மருமகளை ராகிங் பண்ணிடுவாங்களா? அப்படியெல்லாம் யாராவது பண்ணினாங்கன்னா எனக்கு ஒரு போன் பண்ணு. பிரின்ஸ்பல் என் ஃப்ரெண்டுதான் தெரியுமில்லே? வாலாட்டினா சீட்டை கிழிச்சிடலாம்!’’பதில் கூறாமல் சிரித்தாள் மானசா.‘‘சரிம்மா... நீ போ! ஈவினிங் வந்து பிக்அப் பண்ணிக்கிறேன்.’’‘‘எதுக்கு மாமா? நானே ஆட்டோ பிடிச்சு வந்துடறேன்.’’‘‘எதுக்கும்மா ஆட்டோவுல? வீட்ல இத்தனை காரை வச்சிக்கிட்டு... கார்லதான் போய் வரணும்.’’‘‘அதெல்லாம் போர் மாமா. நான் அங்கே டூ வீலர்லதான் போவேன். நம்ம வீட்ல ஒரு டூ வீலர் பார்த்தேனே!’’‘‘அது பிரகதியோடது!’’‘‘அதை நான் யூஸ் பண்ணிக்கலாமா?’’‘‘ஓ... தாராளமா..! ஆனா, இந்த ஊர் டிராஃபிக்ல எப்படி?’’ கவலையாய்க் கேட்டார்.‘‘ரெண்டு நாள்ல பழகிடும்.’’‘‘ரொம்ப ஸ்பீடா இருக்கியே! சரி ஈவினிங் நானே வர்றேன். நாளையிலேருந்து பாத்துக்கலாம்.’’‘‘ம்... ஓகே மாமா.’’அவள் நினைத்தது போல் இல்லாமல் கல்லூரியில் அனைவரும் ஃப்ரெண்ட்லியாக பழகினார்கள். யாரும் ராகிங் செய்யவில்லை. ஒரு சின்ன எதிர்பார்ப்பும் பயமும் இருந்தது. அது நடக்கவில்லை என்பதில் ஓரளவு ஏமாற்றம்தான்.வகுப்பில் அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தவள்தான் தேஜஸ்வினி. அடுத்த ஐந்தாவது நிமிடமே அவளிடம் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டாள்!‘‘உன் நேட்டிவ் எது மானு?’’‘‘முதுமலைக் காடு!’’‘‘என்னது?’’‘‘மான் எல்லாம் காட்டுலதானே இருக்கும்?’’ பளிச்சென சிரித்த மானசாவை விழியகலாமல் பார்த்தாள் தேஜா.‘‘ஹேய்... மானு, நீ இப்படிச் சிரிக்கும்போது அழகு அள்ளுதுப்பா!’’‘‘அது சரி...’’‘‘மான் குட்டி மாதிரிதான் இருக்கு, உன் கண்களும்!’’‘‘இரு... இரு... நான் சொல்லிடறேன். என் நேட்டிவ் மூணாறு!’’‘‘வாவ்! அழகான ஊரு. ரெண்டு மூணு முறை போயிருக்கேன். லீவுல உங்க ஊருக்கு வரட்டா?’’‘‘ஷ்யூர்..!’’ என்றாள், சந்தோஷத்துடன்.‘‘எனக்கு இதே சென்னைதான். சும்மாவே ஹில் ஸ்டேஷன்னாலே ஒரு லவ். என்ன ஒண்ணு உங்க ஊர்ல அட்டைப்பூச்சிகள் நிறைய இருக்குமாமே?’’‘‘பாம்பும்தான்!’’‘‘எ... என்னது? பா... பாம்பா?’’ பயத்தில் வெளிறிப் போன தேஜஸ்வினியும் அழகாகவே இருந்தாள்.‘‘நாம பயப்படற மாதிரிதான் அதுங்களுக்கும் நம்மளை பார்த்தால் பயம். நாம அதுங்ககிட்ட பயத்தையும் காட்டிக்கக் கூடாது, வீரத்தையும் காட்டிக்கக் கூடாது. வந்தா... வாங்கன்னு வரவேற்கலேன்னாலும் போங்கன்னு விரட்டாம இருந்தா... தானாவே போயிடுவாங்க!’’‘‘ஹேய்.... எப்படிக் கொஞ்சம்கூட பயப்படாம சொல்றே?’’‘‘வாரத்துக்கு ரெண்டு மூணு முறை வருவாங்க. பழகிப்போச்சு. அதுங்களுக்கு பேர் வைக்கவும் ஆரம்பிச்சுட்டேன்!’’‘‘போதும்... போதும்... ஒரு மாதிரி உடம்பெல்லாம் சிலிர்க்குது!’’தேஜாவின் கண்கள் பெஞ்சின் அடியில் அலைபாய்ந்தன. கால்களை தூக்கி சேரில் வைத்து சம்மணமிட்டுக் கொண்டாள்.‘‘இங்கெல்லாம்... பா... பாம்பு வராதில்லே?’’‘‘ஐயோ... இவ்ளோ பயப்படுவேன்னு தெரிஞ்சிருந்தா உண்மையை சொல்லி இருக்க மாட்டேனே! இங்கெல்லாம் வராது... காலை கீழே போடுப்பா!’’ மானசாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.அலையடித்த வெண்மேகங்களுக்கிடையில் படகாய் மேலெழும்பி வந்தான் சூரியன். பார்க்க் பார்க்க சலிக்காத காட்சி!மானசா குளிக்க ஓடினாள். பத்து நிமிடங்களில் ரெடியாகி சாப்பிட வந்தாள்.அவளுக்கு பரிமாறிக் கொண்டே, ‘‘இந்த ட்ராஃபிக்ல டூ வீலர் ஓட்டாதேன்னு சொன்னா கேக்கறியா? நீ வீடு திரும்பி வர்றதுக்குள்ள பயத்துல அவ்ளோ தண்ணிக் குடிக்க வேண்டியதா இருக்கு!’’ என்றாள், தேன்மொழி.‘‘எனக்குதான் ஓட்ட தெரியுமே அத்தை. பிரச்னை எதுவும் ஆகாது... பயப்படாதீங்க!’’‘‘கார்ல போய் வந்தாதான் என்ன?’’‘‘ம்ஹூம்... அது போர்!’’‘‘இந்தக் காலத்துப் பொண்ணுங்க எங்க பேச்சை கேட்டுடுவீங்களா என்ன?’’ என்றாள், விசனமாக.‘‘அச்சோ... அதெல்லாம் இல்லை அத்தை. ஜென்ட்ஸை விட லேடீஸ்தான் இப்ப அதிகமா பைக் ஓட்றாங்க தெரியுமா? டைமாச்சு... வர்றேன் அத்தை!’’‘‘பத்திரமா போயிட்டு வா!’’இங்கு வந்தப் பிறகு, தான் கொஞ்சம் உற்சாகமாகவே இருப்பதை உணர்ந்தாள். அங்கே... எந்த இடம் பார்த்தாலும் அவன் ஞாபகம். Ôநீ வேண்டாம்!’ என்று ஒதுக்கிவிட்டு காணாமல் போனவனை மறக்க முடியாமல்... இப்போதும் மறக்கவில்லைதான். ஆனால், சூழல் மாற்றம் காயத்திற்கு மருந்து போடுவதை உணர்ந்தாள்!மாலை!காலேஜ் முடிந்து... அத்தனை மாணவர்களும் ஆரவாரத்துடன் வகுப்புகளை விட்டு வெளியேற... அதுவே, ஒரு விழா போல் களைகட்டியிருந்தது.பார்க்கிங் பகுதியில் தன்னுடைய வண்டியை நோக்கிச் சென்றவள், ஒரு செகன்ட் திடுக்கிட்டு நின்றாள்.அவளுடைய வண்டியை ஒரு இளைஞன் சாவி போட்டு ஸ்டார்ட் பண்ணிக் கொண்டிருந்தான். Ôஎவ்வளவு தைரியம்?’‘‘ஹேய்... ஹேய்... என்ன பண்றே? என் வண்டியை நீ எப்படி எடுப்பே?’’ ஓடிச் சென்று வண்டி முன் நின்று மறைத்தாள் மானசா.அவள் முகமெங்கும் பதற்றம்.அந்த இளைஞன் ஹெல்மெட் போட்டிருந்தான். அவளை ஊடுருவிப் பார்த்தான்.‘‘வாட்? உன் வண்டியா? எத்தனை பேர் இப்படி ஊர்லேர்ந்து கிளம்பி வந்தீங்க? தள்ளு...’’‘‘என் வண்டின்னு சொல்றேன்... இறங்கு மொதல்ல.’’‘‘ஏய்... லூசா நீ? உன் வண்டினா என்கிட்ட எப்படிச் சாவி இருக்கும்?’’‘‘அதானே எப்படி வந்தது? திருட்டு சாவியா? வாட்ச்மேன்... வாட்ச்மேன்...’’‘‘நான் வேணும்னா போலீசை கூப்பிடவா?’’ கம்பீரமாய் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்தான்.‘‘மொதல்ல கூப்பிடு. கால் தி போலீஸ். நான் என் மாமாவை கூப்பிடறேன் இரு. அவர் வந்தா இருக்கு உனக்கு. மொதல்ல ஹெல்மெட்டை கழட்டு...’’ சொல்லிக்கொண்டே, சக்கரவர்த்தியின் நம்பரைத் தேடினாள்.‘‘தாராளமா கூப்பிடு. இது என் வண்டி. அதுக்கான ஆர்.சி. புக், லைசன்ஸ்... எல்லாத்தோட ஒரிஜினலும் என்கிட்ட இருக்கு. உன் மாமன் உனக்கு ஜெராக்ஸை குடுத்தனுப்பி இருப்பார்!’’ அலட்சியமாய் சொன்னான்..4‘‘என்னது மாமனா?’’ மரியாதையின்றி பேசிய அவனைக் கோபமாய் வெறித்தாள்.‘‘கூப்பிடு அந்தச் சக்கரவர்த்தியை...’’‘‘ஏய்... என் மாமா பேர் எப்படி உனக்கு..?!’’ மானசா வியர்த்தாள்.‘‘அந்த ஆள் ஜாதகமே தெரியும். நீ போலீசை கூப்பிடறியா? நான் கூப்பிடவா? இல்லேன்னா, ஸ்டேஷனுக்குப் போயிடலாமா? ஏறி உக்காரு போலாம்!’’அவனுடைய அலட்சியமான உடல் மொழியும் பேச்சும் ஆத்திரத்தைத் தூண்டியது.‘‘எவ்வளவு திமிர் உனக்கு? இறங்குடா மொதல்ல...’’ வண்டியைப் பிடித்து அவனைத் தள்ளினாள்.‘‘ஏய்.. .லூஸு... இரு... இரு...’’ என்றபடி ஹெல்மட்டை கழற்றினான்.அவனை... அந்த முகத்தை எங்கோ பார்த்தது போல் நினைவு வர... நெற்றிச் சுருங்க பார்த்தாள்.அவளைப் பார்த்து, வாய் விட்டுச் சிரித்தான்.‘‘இன்னும் என்னை தெரியலையா மானசா?’’சட்டென நினைவுக்கு வந்தான்.அத்தை வீட்டில் சுவர் முழுக்க ஆக்கிரமித்திருந்த அதே முகம்!‘‘பிர...வீன்?’’‘‘அவனேதான்!’’‘‘அட..!’’ குப்பென மலர்ந்தாள் மானசா.‘‘நான் எதிர்பார்க்கவே இல்லை. கொஞ்ச நேரத்துல பயந்துட்டேன்.’’‘‘ஆனாலும், நீ சரியான டியூப் லைட். இந்த மாதிரி குறும்புத் தனமெல்லாம் எவன் செய்வான்? முறை மாமன்தானே? இன்னொரு ஸ்பேர் கீ என்கிட்ட இருக்கும்போது சட்டுனு கண்டுபிடிச்சிருக்க வேணாமா? என்ன இருந்தாலும் எங்க சென்னைப் பொண்ணுங்க மாதிரி வருமா?’’‘‘அது சரி..!’’ சிநேகமாய்ச் சிரித்தாள்.‘‘சின்ன வயசுல பார்த்தது. இப்ப எப்படி அடையாளம் தெரியுமாம்?’’‘‘ஏன்... நான் கண்டுபிடிகலே? Ôமானு ரொம்ப அழகா இருக்காடா!’ன்னு அம்மா சொன்னதும், நான் இவ்ளோ பொண்ணுங்க மத்தியில் கரெக்டா உன்னை கண்டுபிடிச்சேனா இல்லையா?’’ பளிச்சென்று பற்கள் தெரிய சிரித்த பிரவீன், ரொம்பவே அழகாயிருந்தான்!‘‘இது போங்காட்டம். இந்த வண்டியைத் தேடி நான் வந்ததாலதானே கண்டுபிடிச்சீங்க?’’‘‘ஓகே... ஓகே... மிஸ். மூணாறு! ஏதோ கொஞ்சம் மூளையும் வளர்ந்திருக்கு. ஒத்துக்கிறேன். இப்ப ஏறி உக்காருங்க மேடம். அவனவன் பொறாமையா பார்க்கிறான். முதல்ல வெளியேப் போய்டுவோம்.’’புன்னகையுடன் பின்னால் அமர்ந்தாள்.‘‘வரும்போது எப்படி வந்தீங்க?’’‘‘கார்லதான்.’’கேட்டிற்கு வெளியே கார் நின்றிருந்தது.‘‘ரெஸ்டாரன்ட் போகலாமா?’’‘‘ஷ்யூர்!’’‘‘இந்த டூ வீலர்லேயே!’’‘‘டபுள் ஓகே!’’‘‘ரொம்ப நாளாச்சு, இப்படி டூ வீலர்ல போய்! அதுவும் அழகானப் பொண்ணோட!!’’ரசிக்கும்படி பேசினான். மானசாவின் இதழ்கள் மூடாமல் விரிந்தபடியே இருந்தன.காரை டிரைவரிடம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல சொல்லி விட்டு பைக்கை வேகமாய் ஓட்டினான்.‘‘உங்களுக்கு கார் ஓட்டத் தெரியும்தானே?’’‘‘ரேஸ்ல கலந்துக்குற அளவுக்கு ஏன் கேக்கறே?’’‘‘இல்ல... டிரைவரோட வந்திருக்கீங்களே... அதான்!’’‘‘எல்லாம் ப்ளான் போட்டுதான்!’’‘‘ப்ளானா?’’‘‘ஆமாம்... உன்னோட இப்படி ரெஸ்டாரன்ட் போகணும்னு!’’அவன் பேசப் பேச மானசாவுக்கு சிறு உறுத்தல் ஏற்பட்டது.‘இவன் என்னை நேசிக்கிறானோ? ஐயோ... அப்படி மட்டும் இருந்துவிடக் கூடாது.’ஆனால், அவன் பேசினால் மனம் லேசாவதை உணர்ந்தாள்.‘‘பிரகதி இங்கே இருந்திருந்தா உனக்கு நல்லா பொழுது போகும் மானு!’’‘‘ஓ..!’’‘‘ஹேய்... நான் உன்னை Ôமானு’ன்னு கூப்பிடறதுல ஒண்ணும் ஆட்சேபனை இல்லையே?’’‘‘எல்லாரும் என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க... நோ ப்ராப்ளம்!’’‘‘சூப்பர்! பாடத்துல எந்த டவுட்னாலும் என்னை கேட்கலாம்.’’‘‘அட! அவ்ளோ பிரில்லியன்ட்டா நீங்க!’’ ஆச்சரியமாகக் கேட்டாள்.‘‘விழுந்து விழுந்துப் படிக்காம... அரியர்ஸ் வைப்பதுதான் பெருமைன்னு ஐடியா தருவேன்!’’‘‘வாவ்... செம ஐடியாவா இருக்கே?’’ வாய்விட்டு சிரித்தாள் வெகு நாட்களுக்குப் பிறகு!குத்துவிளக்கின் பிரகாசம் வீடெங்கும் ஒளிர்வதுப் போல் உணர்ந்தாள் தேன்மொழி.பிரவீனுக்கு அவளைப் பிடிக்குமோ பிடிக்காதோ என்று இயல்பாய் எழும் பயமும் சந்தேகமும் அவன் சென்னை வரும் வரை பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தது.ஆனால், சொப்பு வைத்து விளையாட ஒரு பார்ட்னர் கிடைத்தால் குழந்தை எவ்வளவு சந்தோஷப்படுமோ அப்படிக் குதூகலமாய் வளைய வந்த மகனைப் பார்த்து சந்தோஷப்பட்டாள்.அவன் வீட்டில் இருக்கும் சமயங்களில் எல்லாம் மானசா இல்லாமல் சாப்பிடுவதில்லை. அவளிடம் பேசாமல் இருப்பதில்லை. பெரியவர்கள் எதிர்பார்ப்பும் அதுதானே?மாடியில் எந்த ஜன்னலில் இருந்து பார்த்தாலும் கடல் அழகுத் தெரியும்.நடு ஹாலில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே மொபைலை பார்த்துக் கொண்டிருந்தவன், பிரத்யேக காபியின் மணம் நாசியை உரசவும் நிமிர்ந்தான்.காபி ட்ரேயுடன் அம்மா வந்துக் கொண்டிருந்தாள்.அவளுக்கு தன் மகனுக்கு எல்லாமே தன் கையால்தான் செய்யணும்.‘‘குட் மார்னிங்... ஸ்வீட் லேடி!’’‘‘போடா..!’’ வெட்கப்பட்டபடி எடுத்துக் கொடுத்தாள்.ஒரு வாய் ரசித்துப் பருகியவன்... அந்த ட்ரேயில் இன்னொரு கப்பும் இருப்பதைப் பார்த்துக் கேட்டான்.‘‘இது யாருக்கு டியர்?’’‘‘டேய்... அம்மாக்கிட்ட ஒழுங்காப் பேசு.’’‘‘நீ என் செல்லம்லே? சொல்லுடா அம்மு...’’‘‘இவன்கிட்ட தொல்லையாப் போச்சு... இது மானசாவுக்கு!’’ வெட்கத்துடன் சொன்னாள்.‘‘அதை இப்படி வச்சிட்டு போம்மா.’’‘‘ஏன்... இதையும் குடிக்கப் போறியா?’’ வியப்பாய் பார்த்தாள், தேன்மொழி.‘‘ஏன் செல்லம் இவ்ளோ மொக்கையா யோசிக்கிறே? நான் போய் மானசாவுக்கு குடுத்துக்கிறேன். நீ போய் சக்கரவர்த்தியை கவனி.’’‘‘ஏய்... அப்பாவோட பேரையா சொல்றே?’’‘‘பேர் சொல்லும் பிள்ளைம்மா நான்!’’ சிரித்தபடி, குடித்து முடித்த கப்பை அம்மாவிடம் கொடுத்து விட்டு மானசா அறை நோக்கி காபியுடன் சென்றான்.தேன்மொழி மகிழ்ச்சிப் பொங்க கீழிறங்கினாள்.பிரவீன், அறைக் கதவை தட்டினான்.‘‘மேடம்... மேடம்... மானு மேடம்...’’‘‘...........’’‘‘கதவைத் திறங்க மேடம்.’’மேலும் ஒரு நிமிடம் கரைந்தப் பிறகே கதவைத் திறந்த மானசாவின் உறக்கம் கலையாத விழிகள் அவனைப் பார்த்து பளிச்சென விரிந்தன.‘‘நீங்க... நீங்களா... இதையெல்லாம்?’’‘‘ரொம்ப ஆச்சரியப்படாதே... தூங்கு மூஞ்சியோட கூட அழகாவே இருக்கே மானு... ஆறிடப் போகுது குடி!’’‘‘நீங்க எதுக்கு இதை எடுத்து வர்றீங்க? தேங்க்ஸ் பிரவீன்!’’‘‘நைட்டு ரொம்ப நேரமா உன் ரூம்ல லைட் எரிஞ்சுது. லேட்டாதான் எந்திரிக்க முடியும். இதுக்கு மேல தூங்க விட்டா லஞ்ச் டயத்துக்குதான் காலேஜ் போவேங்கிறதால காபியோட வந்துட்டேன் மானு!’’‘‘ஸ... ஸாரி!’’ என்றாள், கூச்சத்துடன்.‘‘சொல்ல மறந்துட்டேன்!’’‘‘என்ன?’’‘‘குட்மார்னிங்!’’ என்றான், கண் சிமிட்டியபடி.அந்தக் குசும்புக்கு பதில் சொல்லாமல் கலகலவென சிரித்தாள் மானசா.‘‘நீ யாரையாவது லவ் பண்ணியிருக்கியா மானு?’’ சட்டென்று தேஜஸ்வினி அப்படி ஒரு கேள்வி கேட்பாள் என்று மானசாகொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.‘‘எ... என்ன?’’‘‘லவ் பண்ணியிருக்கியான்னு கேட்டேன்.’’‘‘மொட்டு பூக்காமல் இருப்பதில்லையே!’’‘‘புரியலே.’’‘‘அந்தக் காதலை ருசிக்காத இதயம் ஏது?’’‘‘அழகாப் பேசறே! ஸோ... நீ லவ் பண்ணியிருக்கே?’’‘‘பண்ணியிருந்தேன். அதையெல்லாம் மறக்கத்தான் இந்த ஊருக்கு வந்தேன். அதைப் பற்றி கேட்காதே.’’‘‘ஓ... ஸாரிடா..!’’‘‘அதைவிடு. நீ யாரையோ லவ் பண்றேன்னு புரியுது. யாரது?’’‘‘அவர் பேர் திலகன்.’’ .5அந்தப் பெயரைக் கேட்டதும், மானசாவின் உடல் கரைந்து, சின்னப் பூப்பந்தாய் வானத்தை நோக்கி வீசி எறிந்ததுப் போல் உணர்வற்றுப் போனாள்.தன்னுடலிலிருந்து உயிர் தனித்து வந்து துடித்தது போலவும் இருந்தது.‘‘தி...ல...க...னா?’’‘‘ஆமாம். என் ரிலேட்டிவ்தான். ஐ லவ் ஹிம்! பட், அவர்கிட்டேருந்து பாசிட்டிவா எந்த சிக்னலும் இல்லை. இப்பதான் கொஞ்சம்கொஞ்சமா பேச ஆரம்பிச்சிருக்கார்.’’‘இல்லை... அவனாய் இருக்காது. அந்தப் பெயரில் எத்தனையோ பேர் இருப்பாங்க. அவன் சவுத் டிஸ்ட்ரிக்ட் பக்கமா போய்விட்டதாக அல்லவா கேள்விப்பட்டேன்?’‘‘அ... அவர் வெளியூரா?’’‘‘நோ... சென்னையில்! எங்க வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளி.’’‘‘ஓ..!’’ ஏனோ, கொஞ்சம் நிம்மதியாய் உணர்ந்தாள்.அதன்பின் தேஜா பேசிய எதுவும் அவளுள் இறங்கவில்லை.நினைவுகள் குழப்பமாய் மாறி மாறி விளையாடிக் கொண்டிருந்தன.அழுது விடுவோமோ என்பது போல் தவித்தாள்.லாஸ்ட் பீரியடில் வெளியேறி கடற்கரை நோக்கிச் சென்றாள்.அவள் மனதைப் போலவே அலைகளும் உருண்டு பிரண்டு அழுதது.‘வலியைத் தருவது, விட்டுச் சென்ற ஞாபகங்களும், பேசிச் சென்ற வார்த்தைகளும்தானே?’மறக்க வேண்டும் என்று பிரயத்தனம் படும்போதுதான் இந்த பாழாய்ப் போன மனசு அத்தனையும் ரீவைண்ட் பண்ணி படம் காட்டும்.‘என்னதான் செய்வேன்? இதில் புதிதாய் பிரவீனை திணிக்கிறார்கள். அவனை அழித்து, இவனை நினைக்க எங்கே கிடைக்கிறது எரேஸர்?’கண்களுக்குள் அடைகாத்துக் கொண்டிருந்த அவனின் உருவம்... இப்போதும் அவன் மீதான காதலை... உடலும் மனசும் நிரூபிக்கிறதே!‘இந்த ஜென்மத்தில் என்னை போல் வேறெந்த உறவும் உங்களை நேசித்திருக்க முடியாது திலகன். அப்படிப்பட்ட என்னை எவ்வளவு கொச்சையாய் பேசினீர்கள்... சந்தேகப்பட்டீர்கள்?’நினைத்த கணத்தில் இதயம் பாரமாகி, கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது.சிறு தூறலாய் இருக்கும் வரைதான் அன்புக்கு மதிப்பு. பெரு மழையாய் மாறும்போதுதான் அவமதிக்கப்படுகிறோம்.கடற்கரையில் இவளைத் தவிர மற்ற அனைவரும் சந்தோஷமாக இருப்பது போல் தோன்றியது.மறைவான இடம் தேடாமல், இவளுக்கு சற்றுத் தள்ளி ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தனர் இளம் காதலர்கள். ஆஃபீஸில் இருக்கும் கணவன், வீட்டில் இருக்கும் தன் மனைவி பற்றி கவலைப்படாமல் Ôகள்ள’த்தனமாய் விளையாடிக்கொண்டிருந்த நடுத்தர வயது ஜோடி.பெட்ஷீட் விரித்து நான்கு பக்கமும் அமர்ந்து பேப்பர் பிளேட்டில், கொண்டு வந்த உணவுகளை சாப்பிட்டுக் கொண்டிருந்த கவலையில்லா குடும்பம்.கிட்டத்தட்ட எல்லோர் கையிலும் மொபைல் இருந்தது. காற்றில் பறந்த முடிகளைப் பற்றி கவலைப்படாமல் செல்ஃபி எடுத்தனர்.சற்று தொலைவில் நான்கு இந்த இளைஞர்கள்... மணலை உதைத்தபடி நடந்துச் சென்றுக் கொண்டிருக்க, அதில் ஒருவன்கிளிஞ்சல்களை பொறுக்கி, கடலில் வீசி எறிந்தபடி நடந்தான்.மானசாவின் கண்கள் திகைப்பைக் காட்டியது.‘அ.. அது... திலகன் போலவே இருக்கிறதே!’‘யாரைப் பார்த்தாலும் இப்போது உனக்கு அவன் போலவேதான் தெரியும். அவன் ஏன் சென்னைக்கு வரப்போகிறான்?’‘ஆனாலும், அவனைப் போலவே இருக்கிறதே! ஓடிப்போய் பார்க்கலாமா?’‘இல்லை எனும்போது அவமானமில்லையா? அமைதியாய் இரு..!’ மனம் எச்சரிக்க... முழங்காலில் முகம் புதைத்து விசும்பினாள்.அதே சமயம்... கிளிஞ்சலை தூக்கி எறிந்த திலகன், எதைச்சையாக வலப்பக்கம் திரும்ப... அப்போதுதான் முழங்காலில் முகம் புதைக்க தலை கவிழ்ந்த அந்த நொடி... அந்த முகம் அவன் கண்களில் பட்டது.‘மானுவா அது? ச்சே... அவள் எப்படி இங்கே? அதுவும் பீச்சில் தனியாக? வாய்ப்பே இல்லை!’ மறுபடி அவளை திரும்பிப் பார்த்தபடி நடந்த திலகன், பெருமூச்செறிந்தான். அவன் உள்ளம் வருத்தங்களை வாரி அணைத்துக் கொண்டது.சலிப்பையே தராத கடல் இப்போது மானசாவுக்கு சலிப்பைத் தந்தது. திலகனின் முகம்... கடல்மேல் தெரிந்த நிலவைப் போல அவள் முன் பிரமாண்டமாய் நின்றது.மூணாறு...இரு கைகளையும் தேய்த்து கன்னத்தில் வைத்து சூட்டை தணித்துக்கொள்ள சொல்லும் குளிர் பிரதேசம்!தென்கிழக்கு பருவ மழையின் தீவிரம் குறைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டு வந்துக் கொண்டிருந்த நேரம். ஆனாலும், அவ்வப்போது சாரல் மழை மனசு கேட்காமல், வந்து வந்து பார்த்துவிட்டுதான் சென்றது.காட்ராக்ட் வந்த கண்களுக்கு தெரிவது போல் தெளிவற்ற பிம்பமாய்... ஊரெங்கும் புகை மூட்டமாய் மேகம் போர்த்தியிருந்தது.காற்றில் பச்சையும் மகரந்த துகள்களும் கலந்த ஒருவித பழ வாசனை.அம்மா தட்டில் வைத்து கொடுத்த காரப் பணியாரத்தை பால்கனியில் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தபடி சாப்பிட்டாள் மானசா.‘‘டைனிங் டேபிளை விட்டு இங்கே வந்து சாப்பிடணுமா?’’ வனஜா, தண்ணீர் டம்ளரை முக்காலி மீது வைத்தாள்.‘‘சும்மா தோணுச்சு!’’‘‘மழை வர்ற மாதிரி இருட்டுது. இன்னைக்கு க்ளாஸ் போகணுமா?’’‘‘கண்டிப்பா!’’‘‘மழையால ரோடெல்லாம் சகதியா இருக்கு. உன்னால ஸ்கூட்டி ஓட்ட முடியுமா?’’‘‘எல்லாத்துக்கும் பயந்தா டாக்டரா ஆக முடியாதும்மா.’’‘‘முதல்ல நீட் எக்ஸாம் எழுது. அப்புறம் மீதியப் பேசலாம்.’’‘‘கிண்டலா? நீட்ல பாஸ் பண்ணி... டாக்டருக்குப் படிச்சு... உன்னோட பிரச்னைக்கு பெருசா இன்ஜெக்ஷன் போடலை? உன் பேரையே மாத்திக் காட்டறேன் இரு!’’‘‘ஒழுங்கா சாப்பிட்டு முடி!’’ கிண்டலாய் சொல்லிவிட்டு அகன்றாள் வனஜா.தோட்டம் முழுக்க, அடர் பச்சையின் மேல் இளம் பச்சை நிற துளிர்களும் ஆங்காங்கே எட்டிப் பார்த்த வண்ண வண்ண மலர்களும்... இறைவனின் தூரிகை வரைந்த ஒப்பில்லாத ஓவியம்!தன் வீட்டுத் தோட்டம் மீது எப்போதுமே ஒரு பெருமை உண்டு.திடீரென மாரிமுத்து, கொம்பால் ஓங்கி அடித்து... சாக்குப் பையில் தூக்கிப்போட்டு கட்டுவது தெரிந்தது.பாம்பு போலும்!‘பாவம்... அது பாட்டுக்கு வந்துட்டு போகப் போகுது. எதுக்கு சாகடிக்கணும்?’நேரமாகவே சாப்பிட்டு முடித்து கீழே வந்தாள்.அப்போதுதான் பிளஸ் டூ முடித்திருந்தாள். அவளுக்கும் அப்பாவுக்கும் அவள் டாக்டராக வேண்டும் என்ற கனவு.ஒரு டாக்டரைத்தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவளின் தனிக்கனவு.அதனாலேயே ஒரு கல்வி நிறுவனம் நடத்தும் நீட் கிளாசில் சேர்ந்திருந்தாள். ஒரு வருட வகுப்பு. அதற்காகத்தான் புறப்பட்டாள்.‘‘பார்த்துப்போடி..!’’‘‘ம்...’’‘‘ஏம்மா... கார்ல போயேன்!’’ வாசுதேவன் எதிரில் வந்தார்.‘‘இல்லே டாடி... இந்த க்ளைமேட்ல ஸ்கூட்டில போறது... எதுக்கும் ஈடாகாது... ப்ளீஸ்!’’‘‘சரி... கவனமா போ!’’‘‘ஓகே டாடி!’’ஸ்கூட்டியில் பயணிக்கும்போது, காற்றில் உறவாடிக் கொண்டிருந்த பனித்துளிகள் அவள் முகத்தில் முத்தமிட்டு சில்லிட வைத்தது. உற்சாகம் உட்புகவும் வேகத்தைக் கூட்டினாள்.‘‘கமான் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்!’’ வாய் முணுமுணுக்க... உடம்பும் அதற்கு ஏற்ப ஆட முற்பட்டது. எதிரில் இருந்த பெரிய கல்லின் மீது மோதி... வண்டியோடு கீழே விழுந்தாள் மானசா. கூரான எதிலோ பட்டு, காலில் பயங்கர வலி!‘ஹா...’வென அலறினாள்.எதிரில் வந்த ஸ்ப்ளெண்டரில் இருந்து ஒரு இளைஞன் ஓடி வந்தான்.. 6‘‘ம்மா...’’ வலி தாளாமல் அலறினாள்.‘‘கொஞ்சம் பொறுத்துக்குங்க...’’ என்றவன், பைக்கில் வைத்திருந்த ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை வேகமாய் சென்று எடுத்து வந்தான்.அப்போதுதான் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.இளைஞன், அழகானவன், கண்களில் பதட்டம், கைகள் துரிதமாக இயங்கிக் கொண்டிருக்க... அவள் முகத்தையே அவன் பார்க்கவில்லை.‘‘அடடா... கல்லு நல்லாக் குத்தியிருக்கு... ப்ளட் வந்துட்டே இருக்கே!’’துடைத்து கட்டு, போட்டுவிட்டு, ‘‘ஒரு டிடி இன்ஜெக்ஷன் போட்டுருங்க!’’ என்றவன், அப்போதுதான் அவள் முகத்தை ஏறிட்டான்.அவ்வளவு நேரம் ஊடுருவாத குளிர் இப்போது ஜெர்கினை மீறி துளைத்து உடம்பை சிலிர்க்க வைத்தது.‘அட... என்ன அழகு!’‘‘தேங்க்ஸ்... ஒரு டாக்டர் மாதிரியே இருந்தது உங்க ட்ரீட்மென்ட்!’’‘‘ஏன்... நான் டாக்டரா இருக்கக் கூடாதா?’’ என்றான், உதடு பிரியாத மென்னகையுடன்.‘‘ஓ... ஸாரி, நீங்க டாக்டரா?’’ என்றாள், வியப்பாய்!‘‘ஆமாம்... நீங்க?’’‘‘நீட் க்ளாஸில் படிச்சிட்டு இருக்கேன்.’’‘‘ஓ... நீங்க பைக் ரேஸ்ல கலந்துக்குறீங்களோன்னு நினைச்சேன்!’’‘‘ஏன்?’’ புரியவில்லை அவளுக்கு.‘‘இந்த செம்மண் சாலையிலே ஜென்ட்ஸ் நாங்களே ஓட்ட பயப்படுவோம். அதுவும் மழை பெய்ஞ்சு ரோடு சகதியா இருக்கு. நீங்க எப்படி இவ்வளவு ஸ்பீடா?’’வலியை மீறிய வெட்கத்தில் தலை கவிழ்ந்தாள்.‘‘ஆமாங்க... கொஞ்சம் ஸ்பீடாதான் ஓட்டிட்டேன்!’’‘‘வண்டியை பார்த்தீங்களா? ஓடற கண்டிஷன்ல இல்லை?’’‘‘ஆமாம்... எப்படிப் போறது?’’ கவலையாய்க் கேட்டாள்.‘‘வாங்க... வீட்ல விட்டுடறேன். பைக்ல உட்கார முடியுமில்லே?’’‘‘இல்லே... நான் க்ளாஸுக்குப் போகணும்!’’‘‘சரி... வாங்க... ஹாஸ்பிடல்ல இன்ஜெக்ஷன் போட்டுட்டு நானே விட்டுடறேன்.’’‘‘ம்...!’’‘‘என் பெயர் திலகன். உங்க பேரு..?’’‘‘மானசா!’’ அவன் பேசி முடிக்கும் முன்பாகச் சொன்னாள்.‘நைஸ் நேம்!’ உள்ளுக்குள் ரசித்தபடி, பைக்கில் அமர அவளுக்கு உதவி செய்தான்.‘‘என் வண்டி?’’‘‘லாக் பண்ணி, சாவியை எடுத்துட்டேன். எனக்குத் தெரிந்த மெக்கானிக் பையன் அதைச் சரி பண்ணிடுவான் டோன்ட் வொர்ரி.’’முதன்முதலாய் ஒரு ஆணுடன் பைக்கில்!பரவசமா, பயமா என்று புரிந்துகொள்ள முடியாத உணர்வு!அவன் மெதுவாகத்தான் பைக்கை செலுத்தினான்.காலின் வலி, அவளை அவன் முதுகில் முகத்தைச் சாய்த்துக்கொள்ள வைத்தது.அவன் அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று ஒரு டிடி இன்ஜெக்ஷன் போட்டு, நீட் வகுப்பிற்கு கொண்டு விட்டான். அதுவரை சின்னச் சின்ன வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொண்டதிலேயே பரஸ்பரம் உலகளாவிய விஷயங்கள் அறிந்து கொண்டது போன்ற பிரமை.அவள் வகுப்பு முடியும் நேரம், கேட் வாசலில் காத்திருந்தாள். திலகனை பார்த்து ஆச்சரியப்பட்டதை விட ஆனந்தக் கூத்தாட முயன்றது உடல். சின்ன அசைவிற்கே காலில் சுருக்கென முள்ளாய் வலி தைத்தது.தனக்காகத்தான் வந்திருக்கிறான் என்று புரிந்தும், முகத்தை வியப்பாக்கி அருகில் வந்தாள் மானசா.‘‘ஹாய் டாக்டர்!’’‘‘ஹாய் வருங்கால டாக்டர்!’’‘‘ஆஹ்... இது நல்லாயிருக்கே! இங்கே யாரையாவது பார்க்க வந்தீங்களா?’’‘‘ஆமாம்.’’‘‘ஓ... எனி ஹெல்ப்? நான் அழைச்சிட்டு வரவா?’’‘‘ஆமாங்க... ஒரு டான்ஸர், டாக்டராகிற கனவோட படிக்க வந்தவங்க, கால்ல அடிபட்டு இருக்கு. அவங்க டூ வீலர் இன்னும் ரெடி ஆகலையாம். அதனால பிக்அப் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன். கூப்பிட முடியுமா?’’ சிரிக்க முயன்ற உதடை கட்டுப்படுத்தி சொன்ன திலகன், அந்த நேரத்தில் வசீகரம் கூடித் தெரிந்தான்.‘‘ஓஹோ... ரொம்ப நல்லவரா இருக்கீங்க டாக்டர். அந்தப் பொண்ணோட பேரைச் சொன்னீங்கன்னா போய் அழைச்சிட்டு வர்றேன்!’’‘‘வலிய வந்து ஹெல்ப் பண்றதுக்கு தேங்க்ஸ். அந்தப் பொண்ணு பேரு ஹம்ஸாவோ சம்சாவோ என்னவோ சொன்னாளே!’’ தீவிரமாய் யோசிப்பது போல் எங்கேயோ பார்த்தான் திலகன்.அவன் குறும்புத்தனத்தை ரசித்தவள், ‘‘அவ்வளவு சீக்கிரம் பேரை கூட மறந்தாச்சா?’’‘‘மறக்க முடியுமா... அவளை மாதிரி ரொம்ப அழகான பேர் அல்லவா?’’அவன் அப்படிச் சொன்னதும் அவள் இதயத்தில் முளைத்திருந்த மொட்டுகள் அனைத்தும் குப்பென மலர்ந்தன! நல்ல நிலத்தில் விழுந்த தரமான விதை முளைக்காமல் இருக்குமா என்ன? இருவருக்கும் காதல் கிளை விட்டு வளர்ந்தது.திலகன் அப்போதுதான் படிப்பை முடித்து ஹாஸ்பிடலில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து கொண்டிருந்தான்.உடன் பிறந்தவர் ஒரு அண்ணன் மட்டுமே! பெற்றோர் உயிரோடு இல்லை. அண்ணன் கதிரவன் மதுரையில் மனைவி, குழந்தைகளோடு இருக்கிறார். தம்பியை படிக்க வைத்து ஒரு மகனைப் போல் பாதுகாத்தவர். திலகன் மூணாறில் சின்னதாய் வீடெடுத்து தனியே வசித்து வருகிறான்.கலகல பேர்வழி. எப்படிப்பட்ட இறுக்கமான சூழ்நிலையையும் இலகுவாக மாற்றக்கூடிய பேச்சுத்திறமை. அவனைச் சுற்றி இருப்பவர்களின் முகம் புன்னகையை மட்டுமே அணிந்திருக்கும்.அவன் சாதாரணமாக பேசினால்கூட அவனுடைய புன்னகை முகம் மாறாது.மானசாவுக்கு அவனிடம் பிடித்ததே இந்த கேரக்டர்தான். ஆனால், அதுதான் அவளிடம் பொறாமையை விதைத்தது.ஹாஸ்பிடலில் நர்சுகளுக்கு வேறு வேலைகள் இருந்தாலும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி இவனிடம் வந்து பேச்சு கொடுப்பதும், கலகலவென சிரிப்பதும், ஓரக்கண்ணால் நோட்டமிடுவதும்... மானசாவுக்கு புகையை வர வைத்தது.ஒருமுறை அவனுடைய மொபைலை எதேச்சையாக எடுத்துப் பார்த்தவள்... அதில் ஏகப்பட்ட பெண் தோழிகள் அவன் நட்பு லிஸ்டில் இருப்பதை பார்த்து திகைத்தாள்.அந்த நேரம் பார்த்து ஒரு பெண் தோழி, Ôஹாய் திலக் டியர்... சாப்பிட்டாச்சா?’ என்று வாட்ஸ்ஆப் மெசேஜ் நோட்டிபிகேஷனில் காட்ட...மானசாவிற்கு நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது.‘‘திலக்... என்ன இது?’’‘‘எதுடா?’’‘‘யாரோ ஒருத்தி உன்னை Ôடியர்’னு சொல்லி மெசேஜ் அனுப்புறா!’’‘‘ஸோ வாட்?’’‘‘ஸோ வாட்டா? என்ன இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க?’’‘‘வேற எப்படிச் சொல்லணும்?’’ ஒரு மஞ்சள் பூவை பறித்து, அதன் இதழ்களை எண்ணிக் கொண்டிருந்த திலகன், அவள் பக்கம் திரும்பி கண்களில் வியப்பைக் காட்டினான்.‘‘க்ளோஸா பழகுறவங்களை மட்டும்தானே டியர், டார்லிங்னு சொல்வாங்க?’’ அவள் குரல் அமுங்கி வந்தது.‘‘எந்தக் காலத்தில இருக்கே மானு? உலகம் சுருங்கி எப்பவோ மொபைலுக்குள்ளே அடங்கியாச்சு. ஃப்ரெண்ட்ஸுக்குள்ள இப்படி அழைச்சுக்கிறதுல என்ன தப்பிருக்கு?’’‘‘அப்போ உங்களுக்கு எல்லா கேர்ள் ஃப்ரெண்ட்ஸையும் பிடிக்குமா?’’‘‘அஃப்கோர்ஸ்!’’‘‘எல்லோரும் என்னை போல் ஒரே கேட்டகரியா?’’‘‘இந்த மானு சம்திங் ஸ்பெஷல் இல்லையா? நீ என் மனசுக்குள்ள இருக்கே. அவங்க எல்லாம் இந்த மொபைலுக்குள்ள இருக்காங்க!’’‘‘புரியலே..?’’‘‘அதுக்கு நான் என்னடா பண்றது? முதல்ல என் மொபைலை ஆராயுறதை விட்ரு. ஃப்ரீயா இரு!’’அவள் கன்னத்தைச் செல்லமாய்த் தட்டினான்.மானசாவுக்கு சிலிர்க்கவில்லை!.7ஆழ்ந்த சிந்தனையில் இருந்த கருத்த மேகங்கள்... சிகரெட்டை ஊதி தள்ளியது போல் தன்னுடைய புகையை ஜன்னல் வழியே வீட்டுக்குள் அனுப்பியது.உடல் சிலிர்த்த வனஜா, வேகமாய் சென்று ஜன்னலை சாத்தினாள். அதேபோல் யோசனையாய் முகம் கருத்திருந்த கணவனை கவனிக்க தவறவில்லை.தட்டில் அவருக்குப் பிடித்த பெசரட்டை ஹாட் பாக்ஸிலிருந்து எடுத்து வைத்து புதினா சட்னி ஊற்றினாள்.இரண்டு விள்ளல் சாப்பிட்டவர், அதிலேயே கையைக் கழுவினார்.‘‘என்னங்க... என்ன பண்றீங்க? சாப்பிடவே இல்ல... கையை கழுவிட்டீங்க?’’‘‘போதும்...’’‘‘உங்களுக்குப் பிடிச்சதுன்னு செஞ்சேன்!’’‘‘இதுவா முக்கியம்?’’‘‘நீங்க ஒரு மாதிரியா இருக்கீங்க?’’‘‘ப்ச்..!’’‘‘நீங்க இவ்வளவு டென்ஷனா இருந்து நான் பார்த்ததே இல்லை. என்னாச்சுங்க?’’ கவலை மேலிடக் கேட்டாள்.‘‘நம்ம மானசாவை ஹாஸ்பிடல்ல வச்சு நம்ம சிவஞானம் ரெண்டு மூணு முறை பார்த்தானாம்.’’‘‘ஹாஸ்பிடல்லயா? அவ ஏன் அங்க போனா? கால்ல அடி பட்டுச்சுன்னு அங்க போய் இன்ஜெக்ஷன் போட்டுட்டு வந்ததா சொன்னா. அதுக்குப் பிறகு நம்ம டாக்டர்தானே அவளுக்கு ட்ரீட்மென்ட் பாத்தாரு. இப்ப எதுக்கு அங்க போயிட்டு வர்றா? வரட்டும் கேட்கிறேன்!’’ அவள் முகத்தில் திகைப்பு.‘‘அவசரப்படாதே... எனக்கு என்னவோ உறுத்தலா இருக்கு. நம்ம எதைக் கேட்டாலும் பொய்தான் சொல்லுவா. அவளை வாட்ச் பண்ணணும்!’’‘‘நீங்க என்னென்னவோ சொல்றீங்க. பயமா இருக்குங்க!’’‘‘அவக்கிட்ட எதையும் கேட்டுடாதே... உஷாராயிடுவா!’’‘‘அப்படி என்னங்க அவ தப்பு பண்ணி இருக்கா?’’‘‘தெரியலே... ஆனா, அவக்கிட்ட ஏதோ தப்பா இருக்குன்னு தோணுது!’’‘‘...........!?’’‘‘இந்தக் காலத்து பொண்ணுங்கள நம்பவே முடியாது வனஜா..!’’‘‘மானசா யாரையாவது காதலிக்கிறாளா என்ன?’’‘‘இருக்கலாம்... பெத்தவங்களுக்கு தெரியாம செய்யுற எந்தக் காரியமும் அதை நோக்கித்தானே போகும்... இந்த மாதிரி வயசு பிள்ளைகளுக்கு!’’‘‘கடவுளே... அவளை பிரவீனுக்குத்தானே...’’‘‘ப்ச்.... ரொம்ப பதறாதே... நாம நெனச்சதுதான் நடக்கும். பிரவீன்தான் அவளோட கழுத்தில் தாலி கட்டுவான்!’’ வாசுதேவன், கண்களை சுருக்கி ஆத்திரத்தோடு சொன்னார்.ஆனாலும், வனஜாவின் முகம் பயத்தில் வெளிறி இருந்தது.மூணாறில் அந்தப் பகுதியில் இருந்த ஒரே அரசு மருத்துவமனை அது மட்டுமே. அதனால் எப்போதுமே கூட்டம் முண்டியடிக்கும்.மானசா தன்னுடைய ஸ்கூட்டியை பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு, மாடிப்படிகளில் ஏறினாள்.திலகன் பணிபுரிந்துக் கொண்டிருந்தது இரண்டாவது மாடியில். ராதைகளின் கூட்டம் போல் திலகனைச் சுற்றி நர்ஸ்கள். திலகன் குனிந்தபடி ஏதோ ஒரு கேஸ் ஹிஸ்டரியை படித்துக் கொண்டிருக்க... அவன் என்ன சொன்னானோ... கலகலவென்ற அந்தப் பெண்களின் சிரிப்பொலி அந்த அறையை நிறைத்தது.உள்ளே நுழைந்த மானசா, அந்தக் காட்சியை பார்த்துவிட்டு மனம் குமைந்தாள்.‘‘உஷ்... பக்கத்துலதான் வார்டு... பேஷன்ட்டுங்க டிஸ்டர்ப் ஆக மாட்டாங்களா... இப்படிச் சிரிக்கிறீங்க?’’‘‘நாங்க சிரிக்கணும்னுதானே நீங்க இப்படிப் பேசறீங்க?’’ அவர்களில் ஒருத்தி, திலகனின் முதுகில் மெதுவாகத் தட்டினாள்.எதேச்சையாக நிமிர்ந்து பார்த்த மற்றொரு நர்ஸ், மானசாவை பார்த்துவிட்டு, ‘‘டாக்டர்... உங்க ஃப்ரெண்ட் வந்திருக்காங்க.’’அவளைப் பார்த்த திலகன், சட்டென எழுந்து, ‘‘வா மானு...’’ என்றான்.நாகரிகம் கருதி மற்றவர்கள் நகர, ‘‘வெய்ட்... எங்கே போறீங்க? மானு கொஞ்சம் ரிசப்ஷன்ல வெயிட் பண்ணு... இன்னும் டென் மினிட்ஸ்ல வந்துடறேன்!’’ அவன் சொன்னதைக் கேட்டு முகம் மாறிப்போனது மானசாவுக்கு. சட்டென திரும்பி நடந்தாள். அதைப் பார்த்து திலகன் சிரித்துக் கொண்டான்.‘‘அவங்க போற வேகத்தை பார்த்தா... நீங்க குட்டி கர்ணம் அடிச்சா கூட கோபம் போகாது போல!’’ என்று கிண்டல் செய்தாள், அவர்களில் ஒருத்தி!குளிர் காற்று... அவள் அனுமதியின்றியே அவளைத் தொட்டு அள்ளி, அணைத்துச் சென்றதை ஓர் சிலிர்ப்புடன் ஏற்றுக் கொண்டு இரு கைகளையும் கட்டிக்கொண்டாள் மானசா.‘‘ரொம்பக் குளிருதா... போட்டுக்கிறியா?’’ வந்து பத்து நிமிடம் ஆகி எதுவும் பேசாமல் வேறு பக்கம் முகம் திருப்பிக் கொண்டு இருந்தவளை ஒரு குழந்தையின் விளையாட்டை போல் ரசித்துக்கொண்டிருந்தான் திலகன்.‘‘தேவையில்லை..!’’‘‘என்னை போர்த்திக்கிறியா?’’ குறும்புடன் குறுகுறுவென பார்த்தான்.அவளுள்ளும் ஒரு இளக்கம். ஆனாலும், தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டாள்.‘‘அத்தனை பேர் முன்னாடி என்னை இன்சல்ட் பண்ணுவது போல் பேசிவிட்டு இங்கென்ன லவ் டயலாக் எல்லாம்?’’‘‘பாருடா... என் செல்லத்துக்கு எவ்வளவு கோவம் வருது?’’‘‘பேச்சை மாத்த வேண்டாம்.’’‘‘சிலர் கோபப்பட்டா நல்லாவே இருக்க மாட்டாங்க. ஆனா, நீ எந்த சிச்சுவேஷனிலும் ரொம்ப அழகா இருக்கேடா!’’‘‘எப்படிப் பேசினாலும் நான் டைவர்ட் ஆக மாட்டேன்.’’‘‘ஏற்கெனவே உன்னிடம் சில முறை சொல்லி இருக்கேன். நீ என்னை ஹாஸ்பிடலில் வந்து பார்க்காதே என்று!’’‘‘ஏன் அவளுங்களோட நீங்க ஜாலியா கொட்டம் அடிக்கிறதை நான் பார்த்திட கூடாதுன்னுதானே?’’‘‘உன்னிடம் எனக்குப் பிடிக்காத ஒரே குணம் இந்தச் சந்தேக புத்திதான். இந்த மாடர்ன் சொசைட்டில ஆணும் பெண்ணும் பேசி பழகாமல் இருந்துட முடியுமா? எல்லாத்துக்குமே அவங்க அவங்க மனசுதான் காரணம். என் மனசு சுத்தம். நான் என்ன சொல்ல வர்றேன்னா... அது ஹாஸ்பிடல். நிறைய பேர் வந்து போகிற இடம். உன் வீட்டிற்கு தெரிந்தவர்கள் யாராவது உன்னை அங்கே பார்த்து விட்டால்? தேவையில்லாத பிரச்னை உருவாகும் அல்லவா? நீ இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலே? நம்ம விஷயம் தெரிய வந்து, உன் படிப்பிற்கு ஆபத்து வந்தால்... எவ்வளவு கஷ்டம்? படிப்பு முடியும் வரை நம் விஷயம் தெரிய வேண்டாம் என்பதுதானே நம்மளோட எண்ணமும்? அதற்குத்தான் சொல்கிறேன்!’’‘‘இவ்வளவு பேரில் நான் மட்டும் அவர்கள் கண்களுக்கு பட்டு விடுவேனா? உங்க பேச்சை நம்ப முடியலை. ஃபேஸ்புக்ல... வாட்ஸ்ஆப்ல, நீங்க எல்லோருக்கும் ஹார்ட்டின் போடுவதும், கமென்ட் போடுவதும்... அதுங்க உங்களை டியர், டார்லிங்னு சொல்றதும் நல்லாவா இருக்கு?’’திலகன் அவளை நெற்றிச் சுருங்கப் பார்த்தான்.‘‘ஸோ... நீ என் மொபைலை ஆராயறே... கரெக்ட்?’’‘‘ஆமாம்... அதுல என்ன தப்பு? இப்பகூட என் மொபைலை நீங்களே வச்சுக்குங்க. நான் வெளிப்படையாக, உண்மையாக இருக்கிறேன். அதுவும் உங்களுக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்தான் அதிகம். இதெல்லாம் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.’’‘‘நாகரிகம் பற்றி இப்ப நான் உனக்கு கிளாஸ் எடுக்க விரும்பவில்லை. உன்னை காயப்படுத்தவும் விரும்பவில்லை. அவர்கள் எல்லாம் இந்த மொபைல் வரைதான் நட்பு. நீ என் நெஞ்சுக்குள்ளே... அதைப் புரிஞ்சுக்க! சாட் பண்ணினா தப்பானவனா?’’‘‘நான் இதே போல் ஆண்களிடம் சாட் பண்ணினால்... உங்களுக்கு கோபம் வராதா?’’‘‘எல்லை மீறிப் போனால் யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும். என் மானசா மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. நீ ஆண்களிடம் பழகினாலும் பேசினாலும் நான் சந்தேகப்பட மாட்டேன். அதே சமயம் நீயும் என்னை நம்ப வேண்டும். ஐ நோ மை லிமிட்!’’மானசா சற்றே சமாதானமானாள்.அன்றைய நாளிதழில் முகம் பதித்திருந்தாலும், வாசுதேவனின் கண்கள் எதிர் சோபாவில் அமர்ந்திருந்த மகளையே நோட்டமிட்டது.இயல்பாய் தன் மொபைலை பார்த்துக் கொண்டிருந்த மானசாவை காணும்பொழுது... Ôகடவுளே இவள் எந்தத் தப்பும் செய்திருக்கக் கூடாது.’ஏதோ ஒன்று தன்னை நோட்டமிடுவது போல் உடல் குறுகுறுக்க... நிமிர்ந்து அப்பாவை பார்த்தாள்.சட்டென மானசா பார்த்ததும் பார்வையை அங்குமிங்கும் அலைய விட்டார்.வித்தியாசம் உணர்ந்தாள் மானசா.மகளைப் பார்த்து மெல்ல புன்னகைத்தார்.‘‘படிப்பெல்லாம் எப்படிம்மா போகுது?’’‘‘நல்லா போகுதுப்பா!’’‘‘நீட்ல நல்ல பர்சன்டேஜ் எடுப்பேயில்லே!?’’‘‘நிச்சயம்ப்பா!’’‘‘உன்கூட படிக்கிற பொண்ணு யாருக்காவது உடம்பு கிடம்பு சரியில்லையோ?’’‘‘ஏ... ஏன்... கேக்கறீங்கப்பா?’’ இதயம் படபடவென துடிக்க ஆரம்பித்தது.‘‘நம்ம சொந்தக்காரர் ஒருத்தர் உன்னை ஹாஸ்பிடலில் பார்த்ததா சொன்னாங்க!’’‘‘அ... அது... அதுவாப்பா... ஆமாம் என் ஃப்ரெண்டோட அக்காவுக்கு உடம்புக்கு முடியலையாம்... அதான் போய் பாத்துட்டு வந்தேன்.’’‘‘கவனமாக இரும்மா... ஹாஸ்பிடல்ல ஏகப்பட்ட நோயாளிகள் வந்துக்கிட்டும் போய்க்கிட்டும் இருப்பாங்க. ஊரெல்லாம் டெங்கு காய்ச்சல் அதிகமா இருக்கு. உனக்கு ஏதும் வந்துட போகுது. இனி அங்கெல்லாம் போகாதேம்மா!’’ என்றார், அழுத்தமான குரலில்.‘‘ச... சரிப்பா...’’ மானசாவின் குரல் அமுங்கிப் போனது பயத்தில்!.8மானசா சொல்வதை யோசனையுடன் கேட்டுக் கொண்டிருந்தான் திலகன்.‘‘இப்பவாவது நான் சொன்னதில் தப்பில்லை என்பதை புரிந்து கொண்டாயா?’’‘‘...........’’‘‘இது சின்ன ஊர். இங்கே உங்க அப்பா ஒரு நல்ல அந்தஸ்தில் இருப்பவர். நிறைய நண்பர்கள் உள்ளவர். அதனால்தான் அடக்கி வாசிக்கச் சொன்னேன். இனி நாம் வெளியிடங்களில் கூட அதிகமாக சந்தித்துக்கொள்ள வேண்டாம்.’’‘‘அப்புறம் எப்படித்தான் மீட் பண்ணுவதாம்?’’ அப்போது மானசாவின் முகம் சோகத்தில் ஆழ்ந்தது.‘‘தினமும் சந்திப்பதை விட வாரத்தில் ஒரு நாள் பார்த்துக்கொள்ளலாமே?’’‘‘உங்களால் என்னை பார்க்காமல் இருக்க முடியுமா?’’‘‘நிரந்தரமாய் நீ எனக்கு வேண்டும் எனும்போது இப்படி அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளத்தான் வேண்டும்.’’‘‘என்னால் உங்களைப் பார்க்காமல் இருக்க முடியாது.’’‘‘எங்கே போய் விடப் போகிறேன்? தினமும் வீடியோ காலில் பேசிக்கொள்ளலாம்!’’‘‘அதுவும் பேசிக்கலாம்... டெய்லி மீட் பண்ணிக்கலாம்.’’‘‘என்ன... இப்படிக் குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறே?’’ செல்லமாய் அலுத்துக் கொண்டான் திலகன்.ஹாஸ்பிடலில் பிஸியாய் இருந்தான் திலகன். அவன் கவனமெல்லாம் நோயாளிகளின் மீதே இருந்தது. சலைன் ஏற்றுவதும்... காயங்களை ட்ரெஸ்ஸிங் பண்ணுவதுமாக இருந்தவனின் தோள்மீது கைவைத்தாள் சீனியர் நர்ஸ் அகிலா. அவனை விட வயதில் மூத்தவள்.‘‘சொல்லுங்க சிஸ்டர்...’’ என்றான், திரும்பிப் பார்த்து.‘‘டைம் என்ன ஆச்சு? லஞ்சுக்கு போகல?’’‘‘இன்னும் நாலு பெட்தான். முடிச்சுட்டுப் போயிடுவேன் சிஸ்டர்.’’‘‘அதுக்குத்தான் இத்தனை நர்ஸ் இருக்காங்களே? அவங்களையும் கொஞ்சம் வேலை செய்ய விடுப்பா. போய் சாப்பிடு... போ!’’ என்றார் அக்கறையுடன்.‘‘இவங்களுக்கு இன்னும் ட்ரெயினிங் போதலை சிஸ்டர். சரியா துடைத்து ட்ரெஸ்ஸிங் பண்ண மாட்டேங்கிறாங்க.’’‘‘அதுக்குத்தான் சொல்றேன்... சரியா கத்துக்கட்டும். சும்மா உக்காந்து கதை பேசிக்கிட்டு இருக்காங்க. ஸ்ட்ரிக்டா சொல்லுங்க... அவங்கள செய்ய சொல்லிட்டு நீங்க பார்த்துக்கிட்டு இருங்க.’’‘‘ஓகே சிஸ்டர்!’’ மெல்லியப் புன்னகையுடன் தலையசைத்தான்.அகிலா அகன்றதும் திலகனின் மொபைல் அலறியது. பிரத்தியேகமான அந்த ரிங்டோன் மானசா என்றது.பேசினால் இரண்டு நிமிடத்தில் வைக்க முடியாது. திலகன், மிச்சமிருந்த நோயாளிகளை கவனித்து முடிக்கும் வரை மொபைலை சைலன்டில் போட்டான்.முடித்துவிட்டு கீழே கேன்டீனை நோக்கிச் சென்றான்.அதற்குள் பத்து மிஸ்டு கால் இருந்தது மொபைலில். அதற்கு மேல் பேசாமல் இருந்தால் மானசா போன் வழியாகவே குதித்து விடுவாள் போல் தோன்றியது.சிரித்தபடி அவள் எண்ணைத் தொடர்பு கொண்டான்.ஒரே ரிங்கில் எடுத்தவள், கோபமாய்க் கத்தினாள்.‘‘அப்படி என்ன அலட்சியம்... என் போனை கூட அட்டென்ட் பண்ண முடியாமல்? உங்களைச் சுத்தி தேவதை கூட்டம் இருந்ததா?’’‘‘தேவதையா... யாரது?’’‘‘அதான் உங்களச் சுத்தி எப்பவுமே ஏழெட்டு பேர் இருப்பாங்களே?’’‘‘அது சரி... அவங்களெல்லாம் தேவதைகள் என்றால் அப்ப மானசாவை என்னவென்று சொல்வது?’’‘‘இப்படிப் பேசியே என்னை...’’‘‘நான் இதுவரை ஒண்ணும் பண்ணவில்லையே!’’ மந்தகாசமாய் சிரித்தான்.‘‘ஓஹோ... அப்படியெல்லாம் வேற ஆசை இருக்கோ?’’‘‘நோ கமென்ட்ஸ்!’’அவன் அதைச் சொல்லும்போது அவன் முகத்தை கற்பனை செய்து பார்த்து மானசா சிலிர்த்துக் கொண்டாள்.‘‘உங்கள பார்த்து மூணு நாளாயிடுச்சு. பாக்கணும் போல இருக்கு.’’‘‘மூணு நாள்தானே ஆச்சு?’’‘‘மூணு நாள்... ஆச்சு!’’ அந்த வார்த்தையில் காதல் பொங்கியது.திலகனுக்கும் அவளை உடனே பார்க்க வேண்டும் போலிருந்தது.‘‘நாளை பார்க்கலாம்.’’‘‘இப்ப முடியாதா?’’‘‘வேலை இருக்கு மானசா. நாளைக்கு லஞ்ச் என் வீட்டில்தான்.’’‘‘வாவ்..! உங்களுக்கு சமைக்கத் தெரியுமா?’’‘‘ஏன்... நான் என்ன வெறும் இலை தழையை மட்டும்தான் சாப்பிடுகிறேனா என்ன? ஓரளவு நல்லாவே சமைப்பேன்! ஏன்... உனக்கு சமைக்கத் தெரியாதா?’’‘‘வீட்டில் குக் இருப்பதால் கிச்சன் பக்கம் போனதே இல்லை. ஆனால், உங்களுக்காக நல்லா சமைக்கக் கத்துக்கப் போகிறேன்!’’‘‘பின்னே... யார் விட்டாங்க? கல்யாணத்துக்குப் பிறகு உனக்கும் சேர்த்து என்னால சமைச்சுக்கிட்டு எல்லாம் இருக்க முடியாதும்மா!’’‘‘என் திலகனை உள்ளங்கையில் அல்ல... உள்ளத்தில் வைத்து பார்த்துக்கொள்வேன்!’’ என்றாள் ஆசையுடன்.வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தான் திலகன்.ஊரே பாதரச நிறத்தில் மினுமினுத்துக் கொண்டிருக்க... வெள்ளை நிறத்தில் ஊதாப்பூக்கள் சிதறிய புடவையில் மானசா, மயில் போல் இறங்கினாள்.அவளை புடவையில் பார்ப்பது இதுதான் முதல் முறை என்பதால் இமை மூடாத கண்கள் விரிந்து அகன்றது ஆச்சரியத்தில்!‘வாவ்..!’ உள்ளம் விசிலடித்தாலும்... உடம்பெங்கும் ஒரு படபடப்பு!அதுவரை அமைதியாக இருந்த மேகங்கள் சிணுங்கத் தொடங்கின.ஷார்ட்ஸும் டி_-ஷர்ட்டும் திலகனை இன்னும் வசீகரமாய்க் காட்டியது! அவனை ஓர கண்ணால் ரசித்தபடி, ‘‘சமையல் வேலை எல்லாம் முடிஞ்சுதா?’’ என்று குறும்பாய்க் கேட்டாள் மானசா.‘‘அதெல்லாம் ஆச்சு. என்ன திடீர்னு புடவை எல்லாம்?’’‘‘ஏன்... எனக்கு நல்லா இல்லையா?’’‘‘ஹார்ட் பீட் அதிகமாகி விட்டது.’’‘‘ஏன்... என்னாச்சு?’’ பதறினாள்.Ôஅது சரி... இவள் எல்லாம் டாக்டருக்குப் படிச்சு...’‘‘ஒண்ணுமில்லை!’’‘‘ஹார்ட் பீட் அதிகமா இருக்குன்னு சொன்னீங்க?’’‘‘நீ வரும்போது மழையையும் கூட்டிட்டு வந்துட்டேயில்லே... அதைச் சொன்னேன்!’’‘‘ஓ..!’’‘புரியாம இருக்கிறதே நல்லது!’‘‘கேட்டேனே... பதிலே சொல்லலே!’’ சின்ன வெட்கம், முகத்தை தழுவிக் கொண்டது.‘‘என்ன கேட்டே?’’‘‘புடவை எனக்கு நல்லாயிருக்கா?’’‘‘ரொம்பவே..!’’ பெருமூச்சுடன் சொன்னான்.‘‘வந்ததும் சொல்லி இருக்கணும் இல்லையா? கேட்ட பிறகுதான் சொல்லணுமா? எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த சாரியைக் கட்டிட்டு வந்தேன் தெரியுமா?’’ செல்லமாய்க் கோபித்தாள்.‘‘நான் சொல்றதுக்குள்ள நீ கேள்வியைக் கேட்டுட்டே. அதைவிடு... முதல்ல காபி சாப்பிடுறியா?’’‘‘ஷ்யூர்... ஷ்யூர்!’’‘‘க்ளாசை கட் அடிச்சிட்டு வந்துட்டியா?’‘‘ம்...’’‘‘உங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா?’’‘‘அவரை ஏன் இப்ப ஞாபகப்படுத்திக்கிட்டு?’’‘‘பயந்து பயந்து சந்திக்கிறதே அவராலதானே?’’‘‘தெரியாமத்தான் சந்திக்கிறோம். அதையும் மீறி தெரிஞ்சா வேற என்ன பண்றது? உடனே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்!’’ என்றாள், கேஷுவலாக.‘‘எ... என்னது?’’ அதிர்ந்து விட்டான் திலகன்.‘‘ஏய்... என்ன பேசறே?’’‘‘ஐயோ விடுங்களேன்... இப்பவும் அவரைப் பத்திதான் பேசணுமா?’’‘‘உக்காரு...’’‘‘நான் என்ன கெஸ்ட்டா? நீங்க எப்படி காபி போடுறீங்கன்னு நானும் வந்து பார்க்கறேன்!’’‘‘எனக்கு வெட்கம் வெட்கமா வராதா?’’ என்றான், மெல்ல சிரித்து.‘‘அட... உங்களுக்கும் வெட்கம் வருமா?’’‘‘என்ன கேள்வி இது? வா..!’’ கிச்சனுக்கு அழைத்துச் சென்றான்.ஏற்கெனவே மூன்று நான்கு முறை அவன் வீட்டிற்கு அவள் வந்திருக்கிறாள். எப்போதும் போலவே இப்போதும் சுத்தமாய் இருந்தது. பொருள்கள் நேர்த்தியாய் அதனதன் இடத்தில் அமர்ந்திருந்தது. ஒரு வீட்டை இந்தளவு சுத்தமாய் வைத்திருக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது!ஊசியாய் துளைத்துக் கொண்டிருந்த மழை இப்போது வேகம் எடுத்து சுழன்றடித்தது.‘‘அடடா... செமயா மழை பெய்யுதே! எப்படி வீட்டுக்குப் போவே?’’‘‘வந்ததே இப்பதான்... அதுக்குள்ள போறதப் பத்தி பேசுவீங்களா?’’ சட்டென்று முகம் வாடியது.‘‘சேச்சே... அதுக்காக சொல்லலே லூசு.’’‘‘இன்னைக்கு நீங்களும் லீவுதானே. நானும் கிளாஸுக்கு கட் அடிச்சாச்சு. அஞ்சு மணி நேரம் உங்களோடதான் இருக்கப் போறேன்.’’‘‘திடீர்னு உங்க அப்பா உன்னை தேடி கிளாஸுக்குப் போய் இருந்தாருன்னா?’’‘‘எப்படியாவது கண்டுபிடிச்சு இங்கே வந்துடுவாரு!’’ என்றாள், கண்களை சிமிட்டி.‘‘ஹேய்... என்ன சொல்ற நீ?’’ பதறிவிட்டான்.‘‘எல்லோரும் இப்படித்தான் நடக்கணும். இப்படி எல்லாம் இருக்கக் கூடாது அப்படின்னு நாம நினைக்கிறதெல்லாம் நடந்திடுமா என்ன? நம்ம காதல் பத்தி தெரிஞ்சு போச்சுன்னா அடுத்து என்ன செய்யணும்னு யோசிக்கலாம்.’’‘‘ஆனாலும், உனக்கு நெஞ்சழுத்தம் அதிகம். தைரியமா பேசறே?’’‘‘எதுக்கு காதலிக்கிறோம்... சேர்ந்து வாழத்தானே? அதுக்கு இந்த அளவு தைரியம் கூட இல்லேனா எப்படி? எந்த பிரச்னை வந்தாலும் நாம சேர்ந்தே ஃபேஸ் பண்ணுவோம். நான் உறுதியா இருப்பேன். நீங்களும் அப்படி இருந்தால் நாம எந்த ஜென்மத்திலேயும் பிரிய முடியாது.’’சொன்னவளை ஆச்சரியமாகவும் காதலாகவும் பார்த்தான்.‘‘காபி வேண்டாம்... கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம். ஒரேடியா லஞ்ச் சாப்பிடுவோம். என்ன சமையல் பண்ணியிருக்கீங்க?’’‘‘மட்டன் பிரியாணி. உனக்குப் பிடிக்கும்னு செஞ்சேன். வொயிட் ரைஸ், ரசம், சிக்கன் கிரேவி.’’‘‘வாவ்..! எல்லாமே எனக்குப் பிடித்தமான ஐட்டங்கள். தேங்க்ஸ் மை டியர்!’’ சட்டென அவன் கன்னத்தில் இதழ்களை வைத்து அழுத்தினாள்.திகைத்தவனின் உடலெங்கும் மின்னல் வெட்டியது.‘‘ஹேய்... என்ன இது?’’ சற்றே வெட்கத்துடன் அவளைக் குறுகுறுவென பார்த்தான்.‘‘ஸாரி... ஸாரி ஒரு எக்ஸைட்மென்ட்ல...’’ அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் விழிகளை அறையைச் சுற்றி வட்டமிட்டாள்.‘சே... நான் ஏன் இப்படிக் கொஞ்சமும் யோசிக்காமல் நடந்து கொள்கிறேன்? என்னைப் பற்றி என்ன நினைப்பான்?’ சற்றே பதட்டமானாள்.‘‘நிஜமாகவே உனக்கு இப்ப காபி வேண்டாமா?’’ சூழ்நிலையை இலகுவாக்க பேச்சை மாற்றினான் திலகன்.‘‘ம்ஹூம்... வேண்டாம். எனக்காக எனக்குப் பிடித்தமான ஐட்டம் எல்லாம் சமைச்சி இருக்கீங்க. காபி சாப்பிட்டால் சாப்பாடு முழுமையாக சாப்பிட முடியாது. நான் ரசிச்சு ருசிச்சு சாப்பிட நினைக்கிறேன்.’’‘‘இட்ஸ் ஓகே... இப்படி வா... உக்காந்து பேசுவோம்.’’இருவரும் பொதுவான விஷயங்கள்... படிப்பு, வேலை, குடும்பம் என்று பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.திலகனை அமரவைத்து மானசா பரிமாறினாள். அவன், அவளுக்குப் பரிமாறினான்.சும்மா சொல்லக்கூடாது... அவ்வளவு அருமையாக சமைத்து இருந்தான் திலகன்! சாப்பிட்டவளுக்கு கொஞ்சம் வெட்கமும் வந்தது. Ôஇந்தளவுக்கு என்னால் சமைக்க முடியுமா? எப்படியாவது இவனுக்காக குக்கரி கிளாஸுக்காவது போய் சமைக்க கற்றுக்கொள்ள வேண்டும்.’‘‘சமையல் ஓகேவா?’’‘‘ஓகேவா..? அட்டகாசம் திலக்! எங்க வீட்லகூட இப்படி நான் சாப்பிட்டதில்லை. வித் யுவர் பர்மிஷன்..!’’ என்றவள், அவன் கையை உயர்த்தி முத்தமிட்டாள்.‘‘இன்னிக்கு என்னை ஒரு வழி பண்ணிடுவே போலிருக்கே?’’‘‘அப்படின்னா?’’ இமைகள் படபடக்க அவனைப் பார்த்தாள்.‘‘என் சோதனை காலம் போல!’’‘‘இப்பவும் புரியலே!’’‘‘வெளியே மழை. இங்கே முத்தமழை!’’‘‘அதனால் என்ன?’’‘‘ஓரளவுதான் என்னை சோதிக்கலாம். நானும் எவ்வளவுதான் கன்ட்ரோலாக இருப்பது?’’ என்றவன், அவள் இடுப்பில் கரங்களைக் கோர்த்து தன்னருகே இழுத்தான்.மானசாவின் உடல் முழுக்க இதமான சூடு பரவியது.அவனிடமிருந்து விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் தவித்தாள்.பதட்டமான அவளுடைய முகம், திலகனை உசுப்பியது.இன்னும் அவளை நெருக்கினான்.இதுவரை அனுபவித்தே இராத ஒரு விதமான உணர்வு மானசாவை கண்களை மூட வைத்தது!மழை வெளியே இன்னமும் வலுக்க... காதலர்களை நெருக்கமாக்குவதற்காகவே சத்தமான இடியொன்று வெடிக்க... திடுக்கிட்டு பயந்த மானசா, அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.அவ்வளவுதான்... திலகன் கட்டுப்படுத்தி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் இறுக்கத்தில் இருந்து விடுபட்டன. அவன் வயது... இளமை... மனதில் புதைந்து இருக்கும் அவள், அவனுடைய நெஞ்சில் புதைந்து உணர்ச்சிகளை கட்டவிழ்த்துக் கொண்டிருக்க... தன்னிலை மறந்து முத்தங்களால் அவள் உடலெங்கும் கோலம் போட்டுக் கொண்டிருந்தான்.அரை மயக்கத்தில் அவர்களின் சூட்சும உடல்கள் மேகங்களினூடே... அலைபாய்ந்து கொண்டிருக்க... திலகன் அவள் காதை கடித்து, கிசுகிசுத்தான்.‘‘தப்பு செய்யலாமா?’’‘‘ம்..!’’ என்றவள், அவன் நெஞ்சினுள் முகத்தைப் பதுக்கிக்கொண்டாள்.‘ஐயோ... வேண்டாம்!’ என்று எச்சரிக்கையாய் தன்னை தள்ளிவிட்டு விலகுவாள் என்று எதிர்பார்த்தவன், அந்த ‘ம்’ என்ற ஒற்றை வார்த்தையில் அவளிடமிருந்து நகர்ந்தான்.மானசாவோ மறுபடி அவனிடம் நெருங்கினாள்.அவள் கைப்பற்றி தடுத்தவன் சோபாவில் அமர வைத்தான்.‘‘என்ன?’’ ஒருவித ஏமாற்றத்துடன் அதனை ஏறிட்டாள்.‘‘வேண்டாம்...’’‘‘என்ன வேண்டாம்?’’‘‘என்னிடம் ஒரு ரெயின் கோட் இருக்கிறது... நீ வீட்டிற்குக் கிளம்பு!’’‘‘என்ன திலக்?’’ முழுக்க இயல்புக்கு வந்தாள்.‘‘இதற்கு மேல் நீ இங்கே இருப்பது சரியல்ல... கிளம்பு!’’‘‘நீங்கதானே? அதனால் என்ன?’’ சின்ன ஏமாற்றமாய் அவள் குரலில் தேய்ந்து வந்தது.இந்தப் பதில் அவனுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. Ôஎன்ன பெண்ணிவள்? கொஞ்சமும் எச்சரிக்கை உணர்வு இல்லாமல்?’‘‘தப்பு... நீ முதல்ல கிளம்பு!’’வலுக்கட்டாயமாய் அவளை அனுப்பி வைத்தான். மழைகொஞ்சமும் நிற்கவும் இல்லை.மலைப்பாங்கான பகுதிகளில் அவளின் டூ வீலர் பயணிக்க... ஏனோ திலகனின் மனதில் ஒரு படி கீழே இறங்கி இருந்தாள்..9ஹாஸ்பிடலில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஊரெங்கும் வைரஸ் காய்ச்சல் மிகுந்திருந்ததால் திருவிழாவிற்கு வருவது போல் நோயாளிகள் வந்து கொண்டே இருந்தனர்.திலகன் நான்கு நாட்களாக வீட்டிற்குக்கூடச் செல்லவில்லை. சாப்பிடகூட நேரமின்றி ஒரு தாயைப் போல நோயாளிகளை கவனித்தான். இடையிடையே மானசா அவனை போனில் அழைத்துக் கொண்டே இருந்தாள். ஏனோ இப்போது அவளிடம் பேசும் எண்ணமே எழவில்லை.கைனகாலஜிஸ்ட் பத்மாதேவியை பார்க்கும் இடத்தில் போடப்பட்டிருந்த அத்தனை வினைல் நாற்காலிகளும் நிரம்பியிருந்தன. அதில் ஒரு இளம் ஜோடி, முகத்தில் ஆர்வம் கொப்பளிக்க சிறு டென்ஷனுடன் அமர்ந்திருந்தனர். ஒருவேளை, கர்ப்பமாகி இருக்கலாம். அதை உறுதி செய்து கொள்ள வந்திருக்கலாம். அந்த டென்ஷன் போலும். அந்தப் பெண்ணின் கணவன் அவள் கையை தன்னுடைய கைக்குள் பொத்தி வைத்துக்கொள்ள முயல... அதற்கே முகம் சிவந்து நாணத்துடன் ‘யாராவது பார்த்து விடப் போகிறார்கள்!’ என்று கண்களால் சமிக்ஞை செய்து, தன்னுடைய கைகளை உருவிக் கொண்டாள். ஆதங்கத்துடன் பெருமூச்சை வெளியிட்டான் திலகன்.‘பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இத்தனைக்கும் மணமானவர்கள். உரிமை உள்ளவர்கள். ஆனாலும், எவ்வளவு கட்டுப்பாடு? இது ஏன் மானசாவிடம் இல்லை?’ அவன் தொண்டைக்குள் முள்ளாய் குத்தியது.‘ஏன் என் போனை அட்டென்ட் பண்ண மாட்டேன்கிறீர்கள்?’ வாட்ஸ்ஆப்_ல் மானசா அனுப்பிய மெசேஜ், நோட்டிஃபிகேஷனில் காட்ட... இன்று முழுக்க வாட்ஸ்ஆப் பக்கமே போகக்கூடாது என்று முடிவு செய்தான் திலகன்.‘அன்று நானும் கொஞ்சம் கட்டுப்பாடை இழந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?’ நினைப்பே பதட்டத்தைக் கூட்டியது.ஹாஸ்பிடல் வாசலிலேயே காத்திருந்து ஒரு வழியாய் திலகனை பார்த்து விட்டாள் மானசா.ஆனால், அவன் முன்பு போல் முகம் கொடுத்து பேசாதது உள்ளத்தை உறுத்தியது. ஏதோ வேலை இருப்பதாய் சொல்லிவிட்டு அவள் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் உடனே பைக்கை உசுப்பி சென்று விட்டது, இன்னும் மனதை கூறு போட்டது. அதையே நினைத்து நினைத்து இதயம் கசிந்தாள்.‘‘ஏய் மானசா... சாப்பிட சொன்னா வேண்டாம்னு கிளம்புறே? இப்பல்லாம் நீ சரியா கூட சாப்பிடறதில்லை. என்ன ஆச்சு உனக்கு?’’ வனஜா கண்களில் பல கேள்விகளை உள்ளடக்கி மகளை ஆராய்ந்தாள்.‘‘பிடிக்கலைன்னா விடேன்!’’ எரிந்து விழுந்தாள் மானசா.கோபத்துடன் திரும்பி வாசலை நோக்கி நடக்க முற்பட்டவளின் கன்னத்தில் ‘பளார்’ என்று விழுந்தது அறை.ரௌத்திரமாய் நின்றிருந்தார் வாசுதேவன்.மானசா மட்டுமல்ல வனஜாவும் விக்கித்துப் போய் நின்றிருந்தாள்.‘‘எ... என்ன ஆச்சுங்க..?’’ பதறியபடி அருகில் ஓடி வந்தாள்.‘‘இவ இனிமே நீட் கிளாஸுக்குப் போகக் கூடாது!’’‘‘எ... என்ன?’’ உச்ச அதிர்ச்சியில் அப்பாவைப் பார்த்தாள் மானசா.‘‘நீ படிச்சு ஹாஸ்பிடல்ல செக்யூரிட்டி வேலை பார்த்தது போதும்.’’‘‘என்னது... செக்யூரிட்டி வேலையா?’’ புரியாமல் கணவனை பார்த்தாள் வனஜா.‘‘இந்த மேடம் நீட் கிளாஸில் பாஸ் பண்ண போறதில்லை. ஏன்னா... புத்தி ஆம்பளைய தேடுது.’’‘‘.............!?’’‘‘அங்கே எவனோ திலகனாம். லவ் பண்றாளாம். அவனைத் தேடி வீட்டுக்கெல்லாம் கூட போயிருக்கா.’’வனஜாவிற்கு மயக்கம் வருவது போலிருந்தது. மானசாவிற்கோ பூமி காலில் இருந்து நழுவுவது போல் பிடிமானம் தேடியது.ஆனாலும், இதுதான் தருணம் இதற்கு மேல் ஒரு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை... தைரியத்தை வரவழைத்து, ‘‘அ... அப்பா... நான் அவரை ரொம்ப விரும்புறேன். படிப்பு முடிந்த பிறகு இதை உங்களிடம் சொல்ல நினைத்தேன்.’’‘‘ச்சீய்... வாய மூடு. கண்ட பரதேசியை எல்லாம் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கவா இவ்வளவு சொத்து பத்து எல்லாம் சேர்த்து வச்சிருக்கேன்? இதோடு நீ வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது.ஏய் வனஜா... எங்க அக்காவுக்கு போனை போடு!’’கதவை திறந்த திலகன், வாசலில் நின்றிருந்த மானசாவைப் பார்த்து திகைத்தான்.சடாரென்று உள்ளே நுழைந்த மானசா, கணமும் யோசிக்காமல் அவனை அணைத்துக் கொண்டாள். எதிர்பாராத இந்தச் செயலால் விக்கித்துப் போனவனுக்கு கோபம்தான் வந்தது.‘என்ன பெண்ணிவள்?’‘‘உன்னை யார் இங்கே வரச் சொன்னது?’’ சற்றே வெறுப்புடன் அவள் முகம் பார்க்கப் பிடிக்காமல் எங்கோ பார்த்தபடி சொன்னான். பார்த்திருந்தால், மானசாவின் கண்கள் கலங்கி இருப்பதைக் கண்டிருக்கலாம்.‘‘மனசு சரியில்லை திலக். வீட்டில் என்னென்னவோ நடக்குது. பயமா இருக்கு. இப்பவும் வீட்டுக்குத் தெரியாமதான் வந்திருக்கேன். போன் பண்ணாலும் நீங்கள் எடுப்பதில்லை. நான் உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன்... இங்கேதான் இருப்பேன்!’’ என்று மறுபடியும் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.‘‘ஏய்... அறிவில்லை உனக்கு?’’ மறுபடி அவளை இழுத்து தள்ளிவிட்டதில் அருகில் இருந்த சோபாவில் விழுந்தாள்.இதை எதிர்பார்க்காத மானசா, விக்கித்துப் போனாள்.‘‘தி...ல...க்!’’‘‘ஒரு கட்டுப்பாடு இல்லையே உன்கிட்ட!’’‘‘...........!?’’‘‘பொதுவா ஜென்ட்ஸ்தான் கன்ட்ரோல் இல்லாம நடந்துப்பாங்க. அதுவும் பிரைவசி கிடைச்சா போதும்... மேட்டர் ஓவர்! ஆனா, இங்கே எல்லாமே தலைகீழ். வந்து வந்து கட்டிப்பிடிச்சுக்கறே? அன்னைக்கும் அப்படித்தான்... எல்லாத்துக்கும் ரெடியா இருந்தே நீ!’’‘‘த... தப்புதான் திலக். உங்க மேல உள்ள அதிகப்படியான லவ். நீங்கதானே என்கிற ஒரு நம்பிக்கை. ஆனா... ஆனா... அது தப்புதான்!’’ என்றவளுக்கு, அவன் முகம் பார்த்து பேசுவதற்கு தைரியமின்றி... உடம்பு கூச தலை கவிழ்ந்தாள்.அவள் ஏன் வந்தாள்? எதற்கு வந்தாள்? என்று கேட்கக்கூட விருப்பமின்றி கசப்புடன் அவளைப் பார்த்தான்... அவசர புத்திக்காரனான திலகன்.‘‘நான் இதைப் பற்றி சொன்ன பிறகுதானே தப்பு என்கிறாய்? எனக்கு பெண்கள் இந்த மாதிரி கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் பிடிக்காது. நீ செக்ஸில் வீக்கானவளோ?’’‘‘..........!!’’ அந்த வார்த்தையால் காயப்பட்ட மானசா எழுந்து நின்றாள்.‘‘தி...ல...க்... என்னையா சொல்றீங்க?’’‘‘உன்னைத்தான் சொல்கிறேன். எந்தச் சூழ்நிலையிலேயும் பெண்கள் அலர்ட் ஆக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவளால்தான் ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்க முடியும். நல்ல ஜெனரேஷனை உருவாக்க முடியும். சப்போஸ்... அன்னைக்கு எல்லாமே நடந்து முடிஞ்சிருந்தா..?’’‘‘...........!?’’‘‘எதிர்பார்க்காமல் நாம் பிரிய வேண்டிய கட்டாயம்னு வச்சுக்கோ. காலம் ஒன்றோடு முடிவதில்லை... அது தொடர்ந்து கொண்டே இருக்கும். உனக்குன்னு வேறு வாழ்க்கை அமையும். அப்ப உன் ஹஸ்பண்டுக்கு நீ உண்மையானவளா இருக்க முடியாதுல்ல?’’அவன் பேச பேச உடலில் உள்ள பாகங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் கழன்று விழுவதுப் போல் உடல் சிறுத்துப் போனாள்.‘‘ஒரு ஆறுதல் தேடி இங்கே வந்தேன். ஆனால், நீங்கள் என் கேரக்டரையே அசிங்கப்படுத்திப் பேசுகிறீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில்தான் நான் அந்தளவு நெருக்கமாக பழகினேன். ஆனால், என் அன்பையே கொச்சைப்படுத்தி விட்டீர்கள். இனி உங்கள் முகத்திலேயே முழிக்க மாட்டேன்!’’ கண்ணீர் வழிய வழிய பேசியவள் வேகமாய் வெளியேறினாள்.திலகன் அவளைத் தடுத்து நிறுத்த விரும்பவில்லை. அவள் மீதான அபிப்ராயத்தையும் மாற்றிக்கொள்ளவுமில்லை.பசுமை அத்தனையும் கடும் வெப்பத்தில் ஒரே நாளில் இலைகள் கருகி, குச்சிக் குச்சியாய் நின்றிருக்கும் மரங்களாய் சூழ்நிலையே மாறிப்போனது. திலகனை நினைக்கும்போதெல்லாம் ‘அவனா... இப்படி எல்லாம் பேசியது? அவனேதானா?’ என்று நடந்ததை நம்ப முடியாமல் பைத்தியம் பிடித்தது போலிருந்தது மானசாவிற்கு.போனை தொட்டாலே அவன் நம்பருக்குத்தான் போன் செய்வாள். ஆனால், அதை தொடப் பிடிக்காமல்... அதே சமயம் அவனிடமிருந்து அழைப்பு வராதா என்று காதல் மனம் ஏங்கவும் செய்தது.வீட்டில் அவளை கண்காணித்துக் கொண்டே இருந்தனர். வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை. அன்று கண்ணில் மண்ணைத் தூவி விட்டு திலகனை பார்க்கச் சென்று இதயம் புண்ணாகி வந்தவளை வாசுதேவன் வெளுத்து வாங்கி விட்டார். அந்த அடியெல்லாம்கூட அவளுக்கு வலிக்கவில்லை... திலகன் பேசியதை விடவா இந்த வலி பெரியது?‘எனக்குன்னு அவன் இருக்கான் என்ற நம்பிக்கையை உடைச்சுட்டானே. எத்தனை இரவுகளை தனதாக்கியவன்... ஒரே நாளில் அத்தனையும் கலைத்துப் போட்டு விட்டானே!’பத்து நாள் வரைக்கும்தான் அவளால் தாக்குப்பிடிக்க முடிந்தது. ‘ஏதோ கோபத்தில் பேசி விட்டான். என் திலகன்தானே அவன்? இப்படிப் பேசி விட்டதற்காக அவனும் வருந்தி கொண்டுதான் இருப்பான். இவளிடம் எப்படிப் பேசுவது என்று ஈகோ தடுத்துக் கொண்டிருக்கும். அவனைப் பிரிந்து நான் மட்டும் என்ன செய்து விட முடியும்? திலகன்தானே எனக்கு எல்லாமே!’ யாரும் அறியாமல் குளியலறை சென்று அவனுக்கு போனை போட்டாள்.ரிங் போகவே இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்தாள். வாட்ஸ் ஆப்பிலும் முயன்றபோதுதான்... வெறுமையாய் இருந்த டி.பி., எதையோ உணர்த்த... ஆராய்ந்தபோது அவன் தன்னை ‘பிளாக்’ பண்ணி வைத்திருப்பது தெரிந்தது. நொறுங்கிப் போனாள்.‘ஏதாவது மன வருத்தம் இருந்தா நாலு வார்த்தை நல்லா திட்டி பேசிடு. பேசாம இருந்து கொல்லாதே திலகன்.’அதற்கு மேல் அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. வீட்டிற்கு தெரியாமல் தப்பித்து திலகனின் வீட்டிற்குச் சென்றாள்.வீட்டிலோ பூட்டு தொங்கியது. ‘ஹாஸ்பிடலில் இருப்பான்’ என்ற நம்பிக்கையில் அங்கே ஓடினாள். அங்கேதான் அவளுக்கு நிலைகுலைய வைத்த செய்தி கிடைத்தது.திலகன் அந்த ஹாஸ்பிடலில் இல்லை. வேலையில் இருந்து விடுபட்டு... அந்த ஊரை விட்டு சென்று ஒரு வாரம் ஆகிவிட்டதாம்.எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு எப்படி அவள் அந்த வீட்டிற்கு வந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. வீடு வந்து சேர தாமதமானதால்... அவள், அவனைத்தான் சந்தித்து விட்டு வருவதாக அடி விழுந்தது. பெற்றவர்களின் தாறுமாறான பேச்சு வேறு அவளை மூர்க்கமாக்கியது.என்ன செய்கிறோம் என்று யோசிக்கவும் புத்தியின்றி... அம்மா பயன்படுத்தும் தூக்க மாத்திரைகள் அத்தனையையும் அவள் விழுங்கி விட்டாள்..10‘‘நவ் ஷி இஸ் ஓகே!’’ என்று டாக்டர் சொன்ன பிறகே... பெற்றவர்களுக்கு உயிர் வந்தது.சாவின் விளிம்பு வரை சென்று வந்த மகளைப் பார்த்து வனஜாவிற்கு கோபம்தான் வந்தது.டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டுக்கு வரும் வரை கோபத்தை அடக்கிக் கொண்ட வனஜா, வீட்டிற்குள் நுழைந்ததும் வெடித்தாள்.‘‘வயசுக்கு வந்த பொண்ணு தற்கொலை வரைக்கும் போய் இருக்கான்னா... காதல் கத்திரிக்காய் தவிர வேறு என்னவாய் இருக்க முடியும்னு யாருமே சொல்லிடுவாங்களே! கௌரவமா வாழ்ந்துட்டு இருக்கிற எங்களை இப்படி அசிங்கப்படுத்தறியே. இதோ பார்... அதே மாத்திரையை போட்டு எங்க உயிரையும் போக்கிக்க எங்களுக்கும் தெரியும். இந்த விஷயத்தை வச்சு எங்களை மிரட்டி உன் வழிக்குக் கொண்டு வரலாம்னு மட்டும் கனவுல கூட நினைக்காதே! இல்லை, Ôஅவனை மறக்க முடியலைன்னா உயிரோடு இருக்க முடியாது’ அப்படின்னு நீ உறுதியா நினைச்சேன்னா தாராளமா செத்துப்போ!’’ தெளிவாக ஆணித்தரமாய் சொன்னாள் வனஜா.நிஜமாகவே அம்மாவிடமிருந்து இப்படியொரு மிரட்டலை மானசா எதிர்பார்க்கவே இல்லை.‘‘இதோ பார்... பிரவீனுக்கும் உனக்கும்தான் கல்யாணம். நீ தலைகீழா நின்னாக்கூட... அவ்வளவு ஏன்... மறுபடியும் தற்கொலை வரைக்கும் நீ போனீன்னா... Ôச்சீய்... போய் தொலைடி’ன்னு விட்டுடுவோம். காப்பாத்த கூட முயற்சி பண்ண மாட்டோம். ஒழுங்கா நாங்க சொல்றத கேட்டா உனக்கு நல்லது. எங்களை அசிங்கப்படுத்த நினைச்சீன்னா... ஒரேடியா உன்னை தலை முழுகிடுவோம். அவன் இந்த ஊரை விட்டேப் போயிட்டானாமே. அப்படிப்பட்டவனுக்காகவா நீ சாகத் துணிஞ்சே? வெக்கமா இல்லே? டாக்டரா ஆகணும்னு கனவு கண்டியே... அதெல்லாம் என்னாச்சு? கேவலம் நேத்து அறிமுகம் ஆன ஒருத்தனுக்காக உன் சின்ன வயசிலேருந்தே நீ கனவு கண்ட லட்சியத்தை எல்லாம் மண்ணுல போட்டு புதைச்சிடுவியா? ஒரு பொண்ணுக்கு அதுவும் இந்தக் காலத்துல கல்யாணம் மட்டும்தானா வாழ்க்கை? ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் கடவுள் எதிர்பார்க்காத வகையில் மோசமான ட்விஸ்ட் எல்லாம் வைக்கிறான். அதுல எத்தனையோ பேரு வாழ்க்கை எல்லாம் காணாமல் போயிடுது. வாழ்க்கைக்குப் பணம் மட்டுமே போதாதுடி. சொந்தக்கால்ல நிக்கிற அளவுக்கு ஒரு தொழிலும் அவசியம்.’’‘அம்மா... ஒன்று போனால் இன்னொன்று என்பதா காதல்?’ அவளால் வெளிப்படையாகக் கூற முடியவில்லை.‘‘உன் மூஞ்சை பார்த்து கூட பேச பிடிக்காமல் அப்பா அவ்வளவு கோபமாக இருக்கிறார். அவர் உனக்கு குடுத்து இருக்கிறது ரெண்டே ஆப்ஷன்தான். ஒண்ணு... சென்னையில அத்தை வீட்டில் தங்கிப் படிச்சு, ஒரு டிகிரி வாங்கணும். அந்த வீடுதான் உனக்கு நிரந்தரமான வீடு... அதையும் சொல்லிடறேன். ரெண்டாவது ஆப்ஷன்... உனக்கு இதில் சம்மதம் இல்லைன்னா செத்துரு... அவ்வளவுதான். நீயே முடிவு பண்ணிக்க. ஆனா, இதுக்கு மேல இந்த ஊர்ல இனி நீ இருக்க முடியாது!’’ என்றாள், உறுதியாக.உடல் மட்டுமல்ல மனசும் கசங்கிய துணி போல் தொய்ந்து போனது.அம்மா போய்விட்டாள்.பாலை வனத்தில் தனித்திருப்பது போல் உணர்ந்தாள் மானசா.‘ஏன் திலக்... அப்படி நான் என்ன சொல்லிவிட்டேன் என்று பெண்ணாய் இருக்க தகுதியே இல்லாதது போல் பேசிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டு போனது எந்த வகையில் சரி? தப்பு செய்யலாமா என்று கேட்டது நீங்கள். நான் சரி என்று சொன்னது தப்பு என்றால் நீங்கள் கேட்டதும் தவறுதானே? இவ்வளவு நடந்தும் எனக்கு உங்கள் மீது ஏன் கோபமே வரவில்லை? உங்களைப் போல் வெறுக்க முடியவில்லை? புரியவில்லை திலக். என்னையே நான் வெறுக்கும் அளவிற்கு நீங்கள் கொண்டு வந்து விட்டீர்கள்!’ சுவற்றோடு சரிந்து அமர்ந்த மானசாவிற்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.‘காதலில் யாசகம் கூடாது. ஆனாலும், சில விதிவிலக்குகள் உண்டல்லவா? இப்போதைக்கு எனக்கு ஒரு இடம் மாற்றம் வேண்டும்தான். படிப்பில் கவனம் செலுத்தலாம். அடுத்து நடக்கப்போவதை எல்லாம் நினைத்து இப்போதே ஏன் கலங்க வேண்டும்?’‘இதோ படிக்க வந்தாயிற்று. யாரோடு என்னை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இவர்கள் முடிவு செய்து வைத்திருக்கிறார்களோ... அதே பிரவீன் வீட்டில் இன்று நான்!ஆனால், ஒரு நாளும், ஒரு நொடியும், திலக்கை நினைக்காமல் இருந்ததில்லையே! ஆனால், அவனோ என்னை ஒரேடியாக தலைமுழுகி விட்டான். சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டான். இதுவே வேறு ஒரு பெண்ணாக இருந்தால் எப்போதோ அவனை உள்ளத்திலிருந்து வழித்துப் போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விட்டிருப்பாள். ஆனால், என்னால் ஏன் அப்படி இருக்க முடியவில்லை? ஒரு பெண் என்றால் கொஞ்சமாவது சுயமரியாதை இருக்க வேண்டும். எனக்கு இல்லையா?ஏன் இல்லை? எல்லாமே இருக்கத்தான் செய்கிறது. கூடுதலாக அவன் மீதான காதல் மிக அதிகமாக இருக்கிறது. அவனைப் பிடித்த அளவுக்கு அவன் நிழலும் கூட பிடித்து தொலைத்து விட்டதே! அவன் நினைப்பு உடலெங்கும் பரவிக் கிடக்கிறதே! அடித்தாலும் வலித்தாலும்... ஒரு குழந்தையைப் போல் அவனை நோக்கியே மனசு ஓடுகிறதே! மறக்க முடியாதவளை, ஒரேடியாய் மறந்து விட்டு போய் விட்டாயே திலக்!ஒருவேளை என் வலியை நேரில் பார்த்தால் துடித்துப் போவாயோ?’அவன் நினைவும் நடந்தவையும் நினைவில் எழும்போதெல்லாம் வலி மிகுந்து... காசியில் கரைப்பதைப் போல் பாத்ரூமில் அழுது கரைத்து விட்டு வருவாள்.சிக்னல் விழ காத்திருந்தான் திலக். அமைதியான சூழலில் வாழ்ந்து பழக்கப்பட்டவன் சென்னையின் டீசல் புகையை சுவாசிக்க சிரமமாய் இருந்தாலும், பரபரப்பான வேகமான இந்த ஊரின் சுறுசுறுப்பு அவனுக்கு ரொம்பவேப் பிடித்திருந்தது.ஆனாலும், எதை மறக்க மூணாரை விட்டு வந்தானோ... அந்த நினைவுகள் அவனை விட்டு கொஞ்சமும் நகரவில்லை. தனித்திருக்கும் போதெல்லாம் வேதாளம் போல் அவளை சுமக்க வைத்து விடுகிறது. எங்கே பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் அவளாகவேத் தோன்றுகிறது. Ôஎப்படித்தான் மறந்து தொலைக்கப் போகிறேனோ?’ சலித்துக் கொண்ட மனசு கொஞ்சம் வலித்தது.‘முடியுமா?’சாலையின் அடுத்த பக்கத்தில் சிக்னல் கிடைத்த அடுத்த நொடி சர்சர்ரென வண்டிகள் பறக்க... இளம் பெண்ணொருத்தி ஆசுவாசத்திற்காக கழற்றி வைத்திருந்த ஹெல்மெட்டை மறுபடியும் மாட்டிக்கொண்ட அந்த நொடி... அவள் முகம் அவனுள் மின்னல் வெட்டியது.‘மா...ன...சா!'சடுதியில் வண்டி காணாமல் போனது.திலக்கிற்கு குழப்பமாக இருந்தது. இதொன்றும் பிரம்மையாக நினைக்கத் தோன்றவில்லை. ஆனாலும், அவள் இங்கே வருவதற்கு வாய்ப்பே இல்லை. இந்நேரம் அவள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் கூட நடந்து கொண்டிருக்கலாம்.அதை நினைக்கும்போது உடம்பெங்கும் வலிப்பது போலிருந்தது.ஒரு வழியாய் தன்னுடைய ஃப்ளாட்டிற்குச் சென்றபோது, தேஜா வாசலிலேயே காத்திருந்தாள்.இவனைப் பார்த்ததும் கண்களில் ரசாயனம் மின்ன முகம் மலர்ந்தது.‘‘ஹேய்... என்ன இங்கே இந்த நேரத்தில்?’’‘‘ஏன்... வரக்கூடாதா?’’‘‘அப்படி சொல்லவில்லை. என்ன விஷயமாய்?’ அவள் கண்களை தவிர்க்க முயன்றான்.‘‘ஏதாவது விஷயம் இருந்தால்தான் வரணுமா திலக்? முதல்ல கதவைத திறங்க. அரை மணி நேரமாக நின்று கொண்டிருக்கிறேன்.’’‘‘ஓ... ஸாரி... கம்!’’ சாவியை எடுத்து பூட்டைத் திறந்தான்.‘‘ப்ச்... ஏன் அவ்வளவு நேரம் நிற்கணும்? அப்படி என்ன முக்கியமான விஷயம் பேசணும்?’’‘‘சரியான போர் திலக் நீங்க. காரணமே இல்லாம நம்ம மீட் பண்ணக்கூடாதா? எனக்கு உங்கள பாக்கணும் போல இருந்தது. ரெண்டு தெரு தள்ளிதான் எங்க வீடு இருக்கு. நீங்களாவது அங்க வந்து பார்க்குறீங்களா? இந்த வீட்டுக்குள்ள அப்படி என்ன இருக்குன்னு ஹாஸ்பிடல் விட்டா வீடு... வீட்டை விட்டா ஹாஸ்பிடல்னு இருக்கீங்க? இந்த ஊர்ல உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸும் ரொம்ப கம்மி. போர் அடிக்கலையா? அதான் கம்பெனி கொடுக்க நான் வந்தேன்.’’சுர்ரென்று எழுந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான். அவன் வளர்ந்த விதமோ, பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற உருவகமோ... இது மாதிரியான சுதந்திர மனப்பான்மை கொண்ட பெண்களை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.அவள் ஏதேதோ பேசினாள். அது அவனுள் இறங்கவில்லை. ஃப்ரிட்ஜில் இருந்து குடிக்க எதையோ எடுத்து வந்து கொடுத்தான். அவன் எண்ணமெல்லாம் சாலையில் பார்த்த மானசாவை போன்ற இளம் பெண்ணின் மீதே இருந்தது.தேஜஸ்வினியின் அப்பா சுந்தரமூர்த்தி, தொழிலதிபர். அரசியல்வாதிகளிடம் நெருங்கிப் பழகுபவர். திலகனுக்கு தூரத்து சொந்தம். அவர்தான் சென்னையில் அவனுக்கு கவர்மென்ட் ஹாஸ்பிடலில் வேலைக்கு ஏற்பாடு செய்தவர்.தேஜாவுக்கு திலக்கை பார்த்த முதல் நொடியிலேயே ரொம்பவே பிடித்து விட்டது. தேஜாவுக்கும் ஒரு காதல் தோல்வி உண்டு. வெறுமையான மனதுடன் நடமாடிக் கொண்டிருந்தவளுக்கு திலக்கை பார்த்ததும் காதல் ஊற்றெடுத்துக் கொண்டது. பிறகான சந்தர்ப்பங்களில் சுந்தரமூர்த்திக்கு மகளின் மனது புரிய... பையன் நல்லவன்... பணம் பெரிய விஷயமில்லை... டாக்டர் என்கிற கௌரவம் போதும்... என்ற அளவில் அவருக்கும் சம்மதமே!தேஜா அங்கிருந்து சென்ற பிறகுதான் அந்த ஹாலில் அமைதி மீண்டும் வந்தது போலிருந்தது திலக்கிற்கு!தட்டிவிட்டு கதவில் கை வைக்க... அது திறந்துக் கொண்டது.‘‘குட் மார்னிங்!’’ என்றபடி காபியுடன் உள்ளே நுழைந்த மானசா, சட்டெனத் திரும்பிக் கொண்டாள்.‘‘ஏய் லூஸூ... இப்படியா சொல்லாம கொள்ளாம உள்ளே வருவே?’’ உள்ளாடையுடன் இருந்த பிரவீன் அங்கே கட்டிலில் கிடந்த போர்வையை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டான்.‘‘கதவைத் தாழிட்டிருக்கலாமே!’’ என்றாள், சங்கடத்துடன்.‘‘சரி, விடு... எனக்கும் அச்சம், மடம், நாணம், பருப்பு இருக்கும்ல? அதான் பயந்துட்டேன்.’’‘‘அது பயிர்ப்பு!’’‘‘ஏதோ ஒண்ணு... சரி... நீயேன் காபி எடுத்துட்டு வர்றே? தேன்மொழி என்ன பண்ணுது?’’‘‘அத்தைதான் குடுத்து விட்டாங்க!’’‘‘ம்... குண்டச்சி ஏதோ கணக்குப் போடுது.’’‘‘புரியல...’’‘‘புரிய வேண்டாம். நீ காப்பி சாப்டியா?’’‘‘ம்...’’பிரவீன் யோசனையுடன் காப்பியை அருந்தினான். அவனும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். அம்மா அவனுக்கான வேலைகளை வேலைக்காரர்களிடம் கூட செய்யவிட மாட்டாள். அவள்தான் செய்தாக வேண்டும்... அப்போதுதான் அவளுக்கு தூக்கமே வரும்.இப்போதெல்லாம் அந்த வேலையை மானசா பொறுப்பில் விடுகிறாள். அவன் அறைக்குள் இருக்கும் ஃப்ளவர் வாஸில் கூட பூக்களை செருகி வைப்பது மனசாதான். சில சமயங்களில் உணவு பரிமாறுவது கூட அவள்தான்.பிரவீன் கலகலப் பேர்வழி. அவன் இருக்கும் இடத்தில் சிரிப்பலை ஓயாது. அவன் சொல்லும் மொக்கை ஜோக்கிற்கு நான்கு கால்கள் இனமும் சிரிக்கும். மானசா எம்மாத்திரம்?அவள் அறியாமல் மானசாவை கூர்ந்து பார்க்கிறான் பிரவீன்.கல்லூரிக்கு வந்திருந்த பிரவீனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் மானசா.‘‘என்ன இங்கே? அஃபிஷியலா செங்கல்பட்டு வரைக்கும் போறதா காலையில கூட சொல்லிட்டு இருந்தீங்க. இப்ப இங்கே?’’‘‘ப்ரோக்ராம் கேன்சல். தேன்மொழியோட காப்பி குடிச்சு போரடிச்சு போச்சு. வாயேன் காப்பி ஷாப் போயிட்டு வரலாம்.’’‘‘போலாமே... நம்ம ரெண்டு பேரும் வெளிய போய் ரொம்ப நாள் ஆகுது இல்ல?’’‘‘ஆமாம்.’’சற்று நேரத்தில் ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்திருந்தனர்.என்றும் இல்லாத ஒரு பதட்டம் பிரவீனின் முகத்தில் இருப்பதை கவனித்தாள் மானசா.‘ஏதோ பேச தயங்குகிறான். அது நான் விரும்பாததாய் இருக்கக் கூடாது... கடவுளே!’ மனசு படபடத்தது.காப்பியை உறிஞ்சியவன், ‘‘மானசா... நான் ஒரு விஷயம் கேட்பேன். உண்மையைச் சொல்லணும்!’’‘‘.............!?’’இப்போது இன்னும் அதிகமாய் மனசு படபடத்தது.‘‘வீட்ல நமக்குக் கல்யாணம் பண்ண நினைக்கிறாங்க போல! உன் மனசுல அப்படி ஒரு எண்ணம் இருக்கா?’’‘‘.........!?’’அந்த சங்கடமான கேள்வியைக் கேட்டதால் காப்பி தொண்டைக்குள் இறங்க மறுத்தது மானசாவிற்கு..11அவனை நிமிர்ந்து பார்க்கவே அச்சமாக இருந்தது.இப்படிப் பட்டென்று கேள்வியைக் கேட்பான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவனிடமிருந்து வரக்கூடாது என்று நினைத்த கேள்வி அது.‘என்ன பதில் சொல்வது? இவன் மனதில் என்ன இருக்கிறது? இவன் என்னிடம் பழகும் விதத்தைப் பார்த்தால் என்னை நேசிக்கிறானோ? ஆனால், எனக்கு ஒரு ஃப்ரெண்ட் என்கிற அளவில்தானே மனதில் இடம் பெற்றிருக்கிறான். வேறெந்த மாதிரியான எண்ணமும் எழவில்லையே. இதைத்தானே சொல்ல முடியும்? இல்லாததை சொல்ல முடியாதே!’அவள் முகத்தில் தெரிந்த உணர்வுகள் பிரவீனை அச்சப்படுத்தியது.‘ஆமாம் என்று சொல்லி விடுவாளோ?’‘‘மானசா... சொல்லு. என்னிடம் எந்தத் தயக்கமும் வேண்டாம். முதலில் நான் உனக்கு நண்பன். பிறகுதான் அத்தை மகன் என்ற உறவெல்லாம். எதுவாயிருந்தாலும் சொல்லு.’’‘‘அ... அது... வந்து...’’‘‘..........!?’’‘‘அ...து.... அப்படியெல்லாம் எந்த எண்ணமும் இல்லை..!’’சொல்லி முடித்தவள்... அவன் முகத்தில் பேரதிர்ச்சியை எதிர்பார்த்து...‘‘மை காட்.... தேங்க்யூ... தேங்க்யூ... மானசா. நீ எங்கே ஆமாம் என்று சொல்லி விடுவாயோ என்று பயந்து போனேன். நல்லவேளை..!’’ முகம் எங்கும் பூத்த புன்னகையோடு எழுந்து நின்று அவள் கைகளைப் பற்றி குலுக்கினான்.‘‘தேங்க்யூ சோ மச் மானசா..!’’‘‘..........!?’’ மானசாவிற்கு எதுவும் புரியவில்லை.‘‘உன்னிடம் ஒரு உண்மையை சொல்கிறேன். ஐ’ம் ஆல்ரெடி எங்கேஜ்ட்!’’‘‘வாட்?’’‘‘யெஸ்..! என் மனசுக்குள் பூராவும் குத்தகை எடுத்து ஒருத்தி உக்கார்ந்துட்டு இருக்கா. அவ பேரு சித்ராங்கி.’’‘‘ஓ... இது அத்தை, மாமாவுக்குத் தெரியுமா?’’‘‘லூஸு... வீட்டுக்குத் தெரிஞ்சா லவ் பண்ணுவாங்க? போதாததுக்கு உன்னை வேற எதுக்கு இங்கே வரவச்சு படிக்க சொல்றாங்க... புரியுதா?’’‘‘ம்ம்... நல்லாவே..!’’ என்று மனம் விட்டுச் சிரித்தாள்.இதுவரை நிரடிக் கொண்டிருந்த பிரச்னை ஒன்று கரைந்து காணாமல் போனதில் மனம் லேசாகிப் போனது.‘‘சித்ராங்கி... அழகான பெயர்!’’‘‘பொறாமைப்படாதே... உன்னை விட அழகாக இருப்பா!’’‘‘பாரேன்..!’’‘‘ஜஸ்ட் ஃபார் ஃபன். அவளும் அழகி... நீயும் அழகி..!’’‘‘போதும்... அவங்களப் பத்தி சொல்லுங்க...’’‘‘சித்ராங்கிய என் ஃப்ரெண்டோட ஆஃபீஸ்ல பார்த்தேன். அவ எனக்கு ரெண்டு மாசம் சிநேகிதியா இருந்தா. அதுக்கு மேல அவளை சிநேகிதியா நினைக்க முடியல. பட்டுனு லவ்வ சொல்லிட்டேன். நான் எப்ப சொல்லுவேன்னு அவளும் காத்துட்டு இருந்ததா சொன்னா. பிறகென்ன... ஜொள்ளு ஊத்தி, காதலை பக்காவா வளர்த்துட்டோம். எந்தக் காரணத்துக்காகவும் யாருக்காகவும் இந்தக் காதலை விட்டுத் தரக்கூடாது என்கிற முடிவோடுதான் காதலிக்கவே ஆரம்பித்தோம்!’’ குரலில் அழுத்தமும் நம்பிக்கையும் மிகுந்திருந்தது.‘‘வீட்ல..?’’‘‘எந்த அப்பா, அம்மாதான் எல்லா தகுதியும் இருந்தாலும் காதலை ஏத்துப்பாங்க? அதுவும் எங்க வீட்ல வாய்ப்பே இல்லை. உன்னை கட்டி வைக்கணும்னு வீட்டிலேயே கொண்டு வந்து குடி வச்சுட்டாங்க. அதுக்காக உன்னை கட்டிக்க முடியுமா?’’மானசா, சங்கடத்துடன் அவனைப் பார்த்தாள்.‘‘ஹேய்... சும்மா ஜோக். உனக்கென்ன அழகி! சித்ராங்கியை ஒருவேளை நான் பார்க்காமல் இருந்திருந்தால்... உன்னை லவ் பண்ணி இருப்பேனோ என்னவோ?’’‘‘போதும்... போதும்... மேட்டருக்கு வாங்க. வீட்ல சம்மதிக்க மாட்டாங்கன்னு தெரியுது. பிறகு..?’’‘‘வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.’’‘‘ஐயோ..!’’‘‘என்ன ஐயோ..? பத்து நாள்ல ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கப் போறோம். என் சார்பா நீதான் சைன் பண்ணப் போறே!’’‘‘நா...னா!?’’ வாய்ப் பிளந்தாள்.‘‘ஆமாம்.’’‘‘..........!?’’‘‘லவ்வுல ஜெயிக்கணும்னா மனசுக்குப் பிடிக்காத சில விஷயங்கள் நடக்கத்தான் செய்யும். எனக்கு மட்டும் பெத்தவங்களை கஷ்டப்படுத்தணும்னு ஆசையா என்ன? அவங்களால நம்ம ஃபீலிங்க்ஸை புரிஞ்சிக்க முடியாது. எல்லாம் கொஞ்ச காலம்தான். காலப்போக்கில் பெத்தவங்களுக்கும் நம்மளுக்கும் உள்ள அன்பு மாத்திடும்!’’மானசா, யோசனையுடன் தலையாட்டினாள்.பிறை நிலவுக்கு கீழே பொட்டு வைத்தது போல் பளிச்சென்று நட்சத்திரம் பிரகாசித்தது!அதைப் பிரம்மிப்புடன் ரசித்துக் கொண்டிருந்தாள் மானசா.‘‘ரொம்ப அழகாயிருக்குல்ல?’’பழகிய குரல் கேட்டுப் புன்னகையுடன் திரும்பினாள்.சொன்னது பிரவீன்தான்.‘‘ரொம்ப ரொம்ப அழகாயிருக்கு!’’‘‘என் சித்ராங்கி போல!’’‘‘ஆரம்பிச்சாச்சா?’’ பொய்யாய்ச் சலித்துக் கொண்டாள்.வசீகரமாய் சிரித்தவன், ‘‘உன்னிடம் ஒரு விஷயம் கேட்கணும்!’’‘‘என்ன?’’‘‘நீ யாரையாவது லவ் பண்றியா?’’அந்தக் கேள்விக்கு திகைத்துப் போனாள்.‘‘எ... என்ன?’’‘‘இவ்ளோ அதிர்ச்சி எதுக்கு? அப்ப நீ யாரையோ லவ் பண்றே!’’‘‘அ... அப்படியில்லே!’’‘‘அதான் முகமே காட்டிக் குடுக்குதே!’’ குறும்புடன் அவளையே குறுகுறுவென பார்த்தான்.‘‘அ... து... வந்து...’’‘‘மாட்டிக்கிட்டியா..? சொல்லு... யாரது?’’‘‘இப்ப இல்ல.’’‘‘அப்படின்னா?’’ நெற்றிச் சுருங்கக் கேட்டான்.‘‘பிரிஞ்சிட்டோம்!’’‘‘ஓ..!’’‘‘அதனாலதான் இங்கே வந்து காலேஜ்ல சேர்த்து விட்டிருக்காங்க.’’‘‘இங்க வந்து காலேஜ்ல படிச்சா காதல் எல்லாம் மறந்துவிடுமா என்ன?’’‘‘...........’’‘‘சரி, அந்தக் காதலைப் பத்திதான் சொல்லேன்...’’‘‘சொல்ற அளவுக்கு இப்போ எதுவும் இல்லை.’’‘‘ஏன்... டைம் பாஸுக்காக லவ் பண்ணீங்களா?’’‘‘சேச்சே...’’‘‘பின்னே..?’’‘‘பழகும் வரை உண்மையாய் இருந்தேன். பழகிய பின் உயிராய் இருந்தேன்.’’‘‘அப்புறமென்ன?’’‘‘வேண்டாமே... சிறு தூறலாய் இருக்கும் வரைதான் அன்புக்கு மரியாதை. பெரு மழையாய் மாறும்போதுதான் அவமதிக்கப்படுகிறோம். இதுக்கு மேல என்னை எதுவும் கேட்க வேண்டாமே. ப்ளீஸ்..!’’‘‘ஓகே... ஓகே... கூல்..!’’‘‘சரி, எப்படி இதைக் கண்டுபிடிச்சீங்க?’’‘‘அதுவா? திடீர்னு உங்க அப்பா உன்னை இந்த ஊர் காலேஜ்ல சேர்த்ததும் ஒரு டவுட் வந்துச்சு. ரெண்டாவது, நான் வேற ரொம்ப அழகா இருக்கேனா? யாரா இருந்தாலும் பார்த்ததும் லவ் பண்ணிடுவாங்க இல்லையா? உனக்கு அப்படி ஒரு எண்ணம் வராதது... எவனோ ஒருத்தன் முந்திக்கிட்டான்னு புரிஞ்சது.’’‘‘ஓ... சாருக்கு, தன்னோட அழகு மேலே இவ்வளவு நம்பிக்கையா?’’‘‘இல்லையா பின்னே?’’ கலகலவென சிரித்தான்.மானசாவும் மனம் விட்டுச் சிரித்தாள்.அந்த ரெஸ்டாரன்ட்டில் நாசூக்காய் கொறித்தபடி மூவரும் அமர்ந்திருந்தனர்.‘‘இதுதான் என் முறைப் பொண்ணு... மானசா..!’’ வேண்டுமென்றே அழுத்தமாய்ச் சொன்னான் பிரவீன்.சித்ராங்கியின் உதடு செயற்கையாய்ச் சிரித்தது. அவளுடைய கண்கள் மானசாவைப் பார்த்து, Ôபிரவீன் சொன்னதை விட ரொம்பவே அழகாகத்தான் இருக்கிறாள். சின்ன வயசு... அரைகுறையாய் மலர்ந்த ரோஜா மொட்டு போல் இருக்கிறாள். பிரவீன் எப்படி இவளைப் பார்த்த பின்பும் மனசு தடுமாறாமல் இருப்பான்?’ புதிதாய் ஒரு பயம் முளைத்தது சித்ராங்கிக்கு.‘‘ஹாய்..!’’‘‘ஹாய்..!’’‘‘இதுதான் என் ஃபியான்ஸி..!’’‘‘பேருக்கேத்த மாதிரி சித்திரம் போல இருக்காங்க!’’ மானசா, மனசுலிருந்து சொன்னாள்.‘‘நான்தான் அப்பவே சொன்னேனே... நீதான் பொறாமைப்பட்டே!’’‘‘ப்ச்... இதெல்லாமா பேசுவீங்க?’’ சங்கடத்துடன் அவனைப் பார்த்தாள்.‘‘சரி... சரி... இதெல்லாம் வீட்ல போய் பேசிக்கலாம். ஹனி... நீ சொன்ன மாதிரியே நம்ம கல்யாணத்தை ரொம்ப சீக்கிரம் வச்சுக்கலாம்.’’‘‘குட் பிரவீன்.’’‘‘ஏங்க... உங்க வீட்டுக்கும் இந்த லவ் தெரியாதா?’’‘‘தெரிஞ்சா... கனடாவில் இருக்கிற இவளோட அத்தை பையன் தாலியைக் கட்டித் தூக்கிட்டுப் போயிடுவான்.’’‘‘ஓ..!’’‘‘நீங்களாவது உங்க வீட்ல சொல்லி புரிய வைக்கலாம் இல்லையா? உங்களுக்காக இறங்கி வருவாங்க இல்லையா?’’‘‘வாய்ப்பே இல்லை ஹனி..! எல்லாம் முன்னாடியே திட்டம் போட்டுத்தான் இதோ இந்த மானசாவை வீட்டோட கொண்டு வந்து வச்சுட்டாங்க. அது மட்டும் இல்லே... நேத்து வனஜா அத்தையும் எங்க அம்மாவும் போன்ல பேசிக்கிட்டு இருந்தாங்க. மானசா படிப்பு முடியும்போது முடியட்டும். நிச்சயதார்த்தத்தை மட்டும் இப்பவே முடிச்சிடலாம்... அப்படின்னு. இந்தப் பெரியவங்களை நம்பவே முடியாது. நம்ம மேல ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் உடனே இந்த மாதிரி பிளான் பண்ணிடுவாங்க.’’‘‘நம்ம லவ்தான் உங்க வீட்டுக்கு தெரியாதில்லையா?’’‘‘காரணம், நம்ம லவ் இல்லை. இதோ இந்த மேடம் ஒரு லவ் ஃபெயிலியர். இந்தம்மாவுக்காகத்தான் இப்படி ஒரு பிளான்.’’பிரவீன் இயல்பாகத்தான் சொன்னான். ஆனால், மானசாவிற்கோ தர்மசங்கடமாய் இருந்தது. தன்னுடைய காதல் விஷயம் சித்ராங்கிக்கும் தெரிந்து விட்டதே என்று!சித்ராங்கி அவளைப் பார்த்து சிரித்து, ‘‘ஓ...’’ என்றாள்.‘‘கூடிய சீக்கிரம் நம்மளோட ரிஜிஸ்டர் மேரேஜ். அதுக்கு என்னோட சார்பாக சைன் பண்ண போவதே மானசாதான்!’’‘‘ஐயோ... நா...னா..?’’ அலறினாள்.‘‘என்னதான் நீ சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாலும்... அடிக்கடி சோகமாக மாறிடறே!’’ என்றாள், தேஜா.‘‘ப்ச்... அப்படியெல்லாம் இல்லை!’’‘‘இதெல்லாம் நேச்சர்தான். அடுத்து ஒரு காதலோ கல்யாணமோ நடந்தால்... எல்லாம் மாறிவிடும். ஃப்யூச்சர்ல நம்ம எக்ஸ் லவ்வரை எதேச்சையா பார்த்தால்கூட, Ôஎக்ஸ்க்யூஸ் மீ... கொஞ்சம் வழி விடுங்க...’ அப்படின்னு கண்டும் காணாமல் போய்விடுவோம்.’’‘‘என்னால் அப்படியெல்லாம் மறந்துவிட முடியாது... கடந்து விடவும் முடியாது!’’ என்றாள், சற்றே சினத்துடன்.‘‘இதோ... வழிக்கு வந்துட்டியா? அப்படியெல்லாம் இல்லைன்னு சொன்னே?’’‘‘............!’’‘‘எனக்குத் தெரிஞ்சு உன்னோட காதலைப் பற்றி யார்க்கிட்டயும் பேசியிருக்க மாட்டேன்னு தோணுது. மனசுக்குள்ள போட்டு ரொம்ப அழுத்திக்காதே. என்கிட்ட சொல்லு. உன் லவ்வரை பத்திச் சொல்லு...’’‘‘என்ன சொல்ல? எனக்குக் கணவனாக வரப்போகிறவர் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று கனவு கண்டேனோ அப்படி எல்லாம் அவர் இருந்தார். ரொம்ப ரொம்ப நல்லவர். ஆனால், கொஞ்சம் அவசர புத்தி. சட்டென்று முடிவெடுத்து விடுவார்.’’‘‘அவசர புத்தி என்றால்? அந்த விஷயத்தில் அவசரப்படுபவரோ?’’‘‘ச்சீய்... நான்தான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். அதனால் வந்த பிரிவு இது!’’‘‘என்னது?’’ அதிர்ந்து விட்டாள் தேஜா.‘‘ஹோய்... என்ன நீ எல்லாத்துக்கும் ஷாக் ஆயிட்டு இருக்கே?’’‘‘அப்ப... Ôஅந்த’ அவசரம் இல்லையா?’’‘‘அவர் ரொம்ப ஆர்த்தோடெக்ஸ்ட். அதனால...’’ மிகவும் சுருக்கமாய் தன்னுடைய கதையைச் சொன்னாள்.தேஜா வியந்தாள்!‘‘இந்தக் காலத்துல இப்படிக்கூட ஒரு ஆம்பிளை இருப்பானா? ஆனா, சில ஆண்கள் இருக்கிறார்கள். தான் ரொம்ப பர்ஃபெக்ட் அப்படின்னு காட்டிக்கிறதுக்காக இந்த மாதிரி நடந்துப்பாங்க.’’‘‘அவர் அப்படிப்பட்டவர் இல்லை. ஏன்னா, என்னை ரொம்ப நேசித்தவர். பிறகு ஏன் இந்தக் காரணத்துக்காக என்னை விட்டுப் பிரியணும்?’’‘‘இதுவும் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.’’சோஃபாவில் திலகனின் பக்கத்தில் காற்றுகூட புக முடியாத நெருக்கத்தில் அமர்ந்திருந்தாள் தேஜா.அவன் நகர்ந்து சென்றாலும் இவளும் ஒட்டிக்கொண்டு நகர்ந்தாள்.‘‘ஏன் திலக்... இப்படி இருக்கீங்க? நான் உங்களை எந்த அளவு நேசிக்கிறேன் என்று தெரியும் அல்லவா? ஆயிரம் முறையாவது ஐ லவ் யூ என்று சொல்லி இருப்பேன். ஆனால், ஒரு முறைகூட நீங்கள் அப்படிச் சொன்னதே இல்லை. என் அப்பாவும் உங்க அண்ணனும் நம்மைப் பற்றி பேசி ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். என் எக்ஸாம் முடிந்ததும் நமக்கு நிச்சயதார்த்தம். ஆனால், உங்களிடம் மாப்பிள்ளை களையே இல்லையே!’’‘என்னிடம் ஒரு வார்த்தை விருப்பமா என்றுகூட கேட்கவில்லை. அண்ணனும் ஏன் இப்படி இருக்கிறார்? பணக்காரர்... இந்த இடத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்தவர் என்ற காரணத்திற்காக நான் சம்மதித்து விடுவேனா? இவரும் அவர் மகள் விரும்பி விட்டால் நான் சம்மதித்தே ஆக வேண்டும் என்று கட்டளை இடுகிறாரா? மனதில் ரணமே ஆறவில்லை. அதற்குள்..!’ கோபம் பொங்கி வந்தது. சிரமப்பட்டு அடக்கி கொண்டான்.இதெல்லாம் ஏதும் அறியாத தேஜா, அவனிடம் இழைந்துக் கொண்டிருந்தாள்.‘‘நீங்க ஏன் இவ்வளவு கூச்சப்படுகிறீர்கள்? நம்ம ரெண்டு பேரும் தனியாக இருக்கிறோம். ஆனால்... ஒரு சின்ன கிஸ்கூட இங்கில்லை. உங்களை பார்க்கும்போது என் ஃப்ரெண்டோட லவ்வர் ஞாபகம்தான் வருது.’’‘‘...........!?’’‘‘அவனுக்கும் இப்படி வலிய வந்து காதல் செய்தால் கோபம் வருமாம். அதனாலேயே அவளை விட்டுப் பிரிந்து விட்டானாம்.’’தேஜா அப்படிச் சொன்னதும், மானசா கண் முன்னே வந்து நின்றாள்..12வாசலில் நின்றபடி, நீட் கிளாஸ் நடக்கும் கட்டடத்தை வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தான் திலகன்.ஏனோ, வெறுமை அவன் உள்ளமெங்கும் அமிழ்ந்திருந்தது.லீவை போட்டுவிட்டு மூணாறு வந்தவன், மானசா செல்லும் இடமெல்லாம் தேடினான். வீட்டருகேயும் ரெயின் கோட், மஃப்ளர் அணிந்து தன்னுடைய உருவத்தை மறைத்து ஏழெட்டு முறை இப்படியும் அப்படியும் நடந்து... கண்ணில் அவள் தென்படுகிறாளா? என்று தேடினான். அவள் அங்கே இருப்பது போலவே ஆளரவம் காணோம்.‘ஊரில் இருக்கிறாளா? இல்லையா? அவசரப்பட்டு அவளை பிளாக் பண்ணி விட்டோமோ? தும்மல் மாதிரிதான் உணர்ச்சிகளும் என்று தேஜா சொன்னது சரிதானோ? அது வருவதற்கு காலம், நேரமெல்லாம் கிடையாதே! நமக்கான பார்ட்னர் இவர்தான் என்று மனசும் உடலும் சொல்லும்போது அந்தத் தும்மல் வரத்தானே செய்யும்? நான்தான் பெரிய இவன் மாதிரி அட்வைஸ் பண்ணி, அவள் மனதை ஊசியால் குத்தி ரணப்படுத்தி விட்டேன்.’அவன் மனசு தவிக்க ஆரம்பித்து விட்டது. மானசாவைப் பார்த்தால் போதும் என்றிருந்தது. அவளுடன் சென்ற இடங்களை எல்லாம் பார்த்து நினைவுகளில் ஆழ்ந்து குமுறினான்.அவள் நீட் கிளாஸில் படிக்கிறாளா... இல்லையா? என்று தெரிந்து கொள்ள அங்கு வந்து காத்திருந்தான்.ஒரு வழியாக வகுப்பு முடிந்து அனைவரும் வெளியே வர ஆரம்பித்தனர். பரபரப்பாய் கண்கள் எங்குமிங்கும் தேடியது. அவனை அறிந்த மார்ட்டினா... மானசாவின் சிநேகிதி அவனருகே வந்தாள்.ஏற்கெனவே ஓரிரு முறை அவனிடம் பேசி இருந்ததால், ‘‘ஹாய்...’’ என்றாள்.அவளைப் பார்த்ததும் ஒரு பிடி கிடைத்தது போல் சின்ன நிம்மதி.‘‘ஹாய்...’’‘‘இங்கே எங்கே?’’‘‘மானசா..!?’’‘‘மானசாவா... அவள் கிளாஸிற்கு வருவதில்லையே!’’‘‘வாட்?’’‘‘உங்க விஷயம் தெரிஞ்சு, அவங்க வீட்டில் அனுப்புவதில்லை!’’‘‘ஓ... இப்ப அவ எங்கே இருக்கிறா?’’‘‘தெரியலைங்க... அந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் அவளை பார்க்கவே இல்லை. யாரோ சொன்னாங்க... அவளை வெளியூருக்கு அனுப்பி விட்டதாக...’’‘‘எ... எந்த ஊர்?’’‘‘ம்ஹூம்... தெரியாது...’’‘‘ஓகே... தேங்க்ஸ்.’’அதன் பிறகு கவலை மேகங்கள் அவன் மனதைப் போர்த்தி இறுக்கிப் பிடித்தன.‘டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டாளே. நீட் கோச்சிங்கை கூட முடிக்காமல்... ச்சே... எல்லாம் என்னால்தானே?’ நெஞ்சில் ஓங்கி அறைந்து கொள்ள வேண்டும் போலிருந்தது.ஒருவேளை... அவளுக்கு அவசரம் அவசரமாக கல்யாணம் செய்து வைத்திருப்பார்களோ? சேச்சே... இருக்காது. அவ்வளவு எளிதில் அவள் யாரையும் கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்க மாட்டாள். இன்னமும் என்னை நினைத்துதான் வாழ்ந்துக் கொண்டிருப்பாள். ஏன்னா... என்னை விட அவள்தான் அதிகமாய் காதலித்தாள்!’ மனதிற்குள் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான்.இதுதான் ஆண் மனது. எவ்வளவு அடாவடியாக நடந்திருந்தாலும்... கொத்து பரோட்டா போல் மனதை பிச்சிப் போட்டிருந்தாலும்... அவள் மட்டும் மனசை அங்கே இங்கே நகர விடாமல் தன்னையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பதும் மேல்சாவனிஸ்ட்தானே?சோஃபாவில் அமர்ந்திருந்த கணவரை ஆச்சரியத்துடன் பார்த்தாள் தேன்மொழி.‘‘இவ்வளவு சீக்கிரம் வாக்கிங் போயிட்டு வந்துட்டீங்களா?’’‘‘இல்லை...’’‘‘இல்லைன்னா... புரியலை.’’‘‘நான் இன்னைக்கு வாக்கிங் போகவில்லை!’’ என்றவரின் முகம் இயல்பாய் இல்லை. கோபமா... வருத்தமா... என்று யூகிக்க முடியாத அளவுக்கு கலவரம் சூழ்ந்திருந்தது.சக்கரவர்த்தி கலகலப்பான மனிதர்தான். எப்போதாவது பிசினஸில் பிரச்னை எனும்போதுதான் இப்படி டென்ஷனாக இருப்பார். நேற்று மாலையிலிருந்து அவரை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள். ஆழ்ந்த யோசனையுடன் கண்கள் என்றும் அலைப்பாய... அறைக்குள்ளேயே நடந்துக் கொண்டிருந்தார். தேன்மொழி கணவரிடம் என்னவென்று கேட்கதான் நினைத்தாள். ஆனால், அவர் எப்போதுமே பிசினஸ் பற்றிய நல்லது கெட்டதுகளை மனைவியிடம் பேசுவதில்லை. அதனால் அவளும் கேட்கவில்லை.‘‘காப்பிக் கொண்டு வரவா?’’‘‘டீ எடுத்துட்டு வா!’’அவருக்கு டீ அதிகமாய்ப் பிடிக்காது. டென்ஷனா இருக்கும் நேரங்களில் அவருக்குப் பிடித்த வாய்க்கு ருசியான எதையும் சாப்பிடுவதில்லை. கவலையுடன் அங்கிருந்து நகர்ந்தாள் தேன்மொழி.ஐந்து நிமிடங்களில் டீயை அருந்திக் கொண்டிருந்த சக்கரவர்த்தி, ‘‘பிரவீன் எந்திரிச்சிட்டானா?’’ என்று கேட்டார்.‘‘இல்லைங்க... அவனுக்குத்தான் காப்பி போட்டுக் கொண்டிருக்கிறேன்.’’‘‘அவனை இங்கே வரச்சொல்!’’‘‘வழக்கமாய் மானசாதான்...’’‘‘எல்லாம் சரியா நடக்கிறதா நினைப்பா உனக்கு? அவனைக் கீழே வரச்சொல்!’’‘பிரச்னை பிரவீனாலயா?’ அவளுக்குள் ஒரு பதைப்பு ஏற்பட்டது.‘‘ச... சரிங்க..!’’அடுத்த மூன்று நிமிடங்களில்...‘‘குட் மார்னிங் டாடி!’’‘‘..........’’‘‘சீக்கிரமே வாக்கிங் முடிச்சிட்டு வந்துட்டீங்களா? அம்மா காபி!’’ஆழ்ந்த யோசனையுடன் அமர்ந்திருந்த அப்பாவை வியப்புடன் பார்த்தான்.‘‘டாடி... உங்களைத்தான்... குட் மார்னிங்!’’‘‘ம்...’’‘‘என்னப்பா காலையிலேயே மூட் அவுட்டா? தேன்மொழி உங்கள டிஸ்டர்ப் பண்ணிடுச்சா?’’காப்பியை நீட்டிய அம்மாவை பார்த்து,‘‘என்னம்மா அப்பாவை காலையிலேயே டிஸ்டர்ப் பண்ணிட்டியா?’’ கிண்டலாய்க் கேட்டபடி காப்பியை ஒரு சிப் அருந்தினான்.தேன்மொழியோ சின்ன கலவரத்துடன் கணவரைப் பார்த்தாள்.அவரின் கன்னத் தசைகள் லேசாக துடித்துக் கொண்டிருந்தன.‘‘அப்பா... என்னையக் கூப்பிட்டீங்களாமே?’’‘‘யாருப்பா அந்தப் பொண்ணு?’’அப்போதுதான் படியிறங்கி வந்து நின்ற மானசாவைப் பார்த்து ‘‘மானசாப்பா!’’‘‘நான் இவளைப் பத்தி கேட்கிறேன்!’’ என்றவர், தன்னுடைய மொபைலில் இருந்த சித்ராங்கியின் போட்டோவை காண்பித்தார். அதில் அவள் தோளில் கை போட்டபடி பிரவீன்.நெருப்பை விழுங்கியவன் போல் திணறிப்போனான். பிரவீன் இதை எதிர்பார்க்கவில்லை. அதுவும் நேரடியாக அம்பு வந்து தாக்கியதில் நிலைகுலைந்து போனான்.‘என்ன பதில் சொல்ல முடியும்?’‘‘உன்னைதான் கேட்கிறேன் பிரவீன். யார் இந்தப் பொண்ணு?’’மானசாவுக்கும் பதைபதைப்பாக இருந்தது. Ôபிரவீன் இப்படி வகையாய் வந்து மாட்டிக்கொண்டானே?’‘‘அ... அப்பா... நான் இவளை நேசிக்கிறேன். இவளை கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.’’மகனை முறைத்தார் சக்கரவர்த்தி.தேன்மொழி திக்கு தெரியாத காட்டில் இருப்பது போல் திகைத்திருந்தாள்.‘என்ன நடக்கிறது இங்கே?’‘‘இங்கே ஒருத்தி உனக்காக காத்திருப்பது தெரியாதா பிரவீன்?’’‘‘அப்பா... அவ பெயர் சித்ராங்கி. நல்ல குடும்பம். கை நிறைய சம்பாதிக்கிறா. மூணு நாலு வருஷமா லவ் பண்றோம். அவளை வேண்டாம்னு சொல்வதற்கு ஒரு காரணமும் இல்லைப்பா. என் விருப்பத்தை காரணம் இல்லாமல் தட்டிக் கழிக்க மாட்டீங்கங்கிற நம்பிக்கை எனக்கு இருக்குப்பா. நானே இதைப் பத்தி பேசணும்னு நினைச்சுட்டு இருந்தேன்.’’‘‘உனக்கு மானசாதான்னு அவ பிறந்தப்பவே முடிவு பண்ணிட்டோம். அப்புறம் எப்படி நீயா ஒரு விருப்பத்தை சொல்லுவே... அதை நான் நிறைவேற்றுவேன்னு எப்படி நம்புவே? அந்தப் பொண்ணு எல்லா தகுதியும் உடையவளாகவே இருந்தாலும்கூட என் மருமகள் மானசா மட்டும்தான்.’’‘‘பிறந்ததும் இவளுக்கு இவன்தான்னு முடிவு பண்றது எல்லாம் ரெண்டு ஜெனரேஷனுக்கு முன்னாடியே முடிஞ்சு போச்சுப்பா. குழந்தைங்க எப்படி வளர்றாங்க... எந்த மாதிரி உருமாறுறாங்க... அவங்களோட லைஃப் ஸ்டைல் எல்லாமே பெத்தவங்க நினைச்சபடி அமையறதில்லைப்பா. அவங்க அவங்க வாழ்க்கை துணையை அவங்களே தீர்மானிக்கிறதுதான் நியாயமான விஷயம். அதைப் பெத்தவங்க, சரியா இருந்தா ஏத்துக்கிறதுதான் குடும்பத்துக்கும் நல்லது.’’‘‘என்ன பிரவீன்... அப்ப எங்களுக்கு உன்னோட வாழ்க்கையில எந்த உரிமையும் இல்லையா? உன்னை ஒரு தொழிலதிபரா உருவாக்குறது வரைக்கும்தான் எங்கள் கடமையா? வேற எதையும் நாங்க டிஸைட் பண்ணக் கூடாதா?’’‘‘அச்சோ... அப்பா நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. இதுவரைக்கும் உங்களுக்கு நான் எந்த விஷயத்திலாவது ஒரு சின்ன கெட்ட பெயராவது வாங்கித் தந்திருப்பேனா? நான் ஆசைப்பட்டு கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து இருக்கீங்க. இதுலயும் முட்டுக்கட்டை போட மாட்டீங்கன்னு ரொம்ப நம்பறேன்பா!’’‘‘பிரவீன்... என்னடா பேசிட்டிருக்கே? அப்பா என்னவோ சொல்றார்... நீ அதுக்கு எதையோ சொல்றே?’’ தேன்மொழி டென்ஷன் மிகுதியில் மூச்சு வாங்கினாள்.‘‘அம்மா... ப்ளீஸ் நீங்களாவது புரிஞ்சுக்கோங்க!’’‘‘என்னடா புரிஞ்சிக்கணும்? நீ இந்த மாதிரி பண்ணுவேன்னு ஒரு நொடிகூட நினைச்சதில்லடா. எங்க தலையில மண்ணள்ளி போட்றாதே!’’‘‘இதோ பார்... உன் காதல் கதை எல்லாம் கேட்பதற்கு நான் தயாராக இல்லை. உனக்கு மானசாதான் மனைவி. இது எங்களோட இறுதியான முடிவு. இதுக்கு மேல பேசுவதற்கு எதுவும் இல்லை. அந்தப் பொண்ணை நீ மறந்தே ஆகணும்!’’ தெள்ளத் தெளிவாக, உறுதியாக, அழுத்தமாக சொன்னார் சக்கரவர்த்தி.மானசாவின் முகம் வெளிறிப் போனது. பிரவீனின் முகம் இருண்டுப் போனது.ஃபேர்வெல் பார்ட்டி என்று அத்தையிடம் சொல்லி, பட்டுப் புடவை கட்டிக்கொண்டு புறப்பட்டவளை ஓரிடத்தில் பிரவீன் காரில் பிக்அப் பண்ணிக் கொண்டான்.பட்டு வேட்டி _ சட்டையில் கம்பீரமாய் அழகாய் இருந்தவனை பார்த்து உதட்டை மடக்கிச் சிரித்தாள் மானசா.‘‘என்ன சிரிப்பு?’’‘‘இந்த டிரெஸ் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு..!’’‘‘தேங்க்யூ..! தேங்க்யூ..!’’‘‘ஆனா, கொஞ்சம்கூட உங்ககிட்ட டென்ஷனே இல்லையே! உங்க வீட்டுக்குத் தெரியாம என்னைய கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க. ஆனா, இதுக்கு அப்புறம் என்ன நடக்குமோ என்று பயமாக இருக்கிறது.’’‘‘ஃபர்ஸ்ட் நைட்தான்!’’‘‘கடவுளே... நான் சொல்றது மாமா, அத்தையைப் பத்தி.’’‘‘லவ் பண்றதே சேர்ந்து வாழத்தானே? இதெல்லாம் எதிர்பார்த்ததுதான். அப்பா கொஞ்சம் பிடிவாதம்தான். ஆனால், அம்மா நான் இல்லாம இருக்க மாட்டாங்க. கொஞ்சம் அழுதுட்டு அப்புறம் அப்பாவை அவங்களே சமாதானப்படுத்திடுவாங்க. இல்லேனா ஒரு வருஷம் கழிச்சு அவங்களுக்கு பிடிச்ச ஒரு நபரோடு போய் நின்னா வாரி அணைச்சு உள்ளே கூட்டிட்டுப் போயிடுவாங்க.’’‘‘அப்படி யாரோட போய் நிக்கப் போறீங்க?’’‘‘என் குழந்தையோடதான்!’’‘‘இப்படிப் பேசியேதான் சித்ராங்கியை கவுத்துட்டீங்க போல!’’‘‘அஃப்கோர்ஸ்!’’ தோள்பட்டையைக் குலுக்கினான்.‘‘உங்க கல்யாணத்துக்கு நான் துணையா இருப்பது தெரிஞ்சா அத்தையும் மாமாவும் கோபப்பட மாட்டாங்களா?’’‘‘தெரியாம பாத்துக்கலாம். உனக்கு இந்தப் பட்டுப் புடவை ரொம்ப அழகா இருக்கு மானசா. ஓடிப்போன உன்னோட ஆளு இப்போ உன்ன பார்த்தான்னா சொக்கிப் போய் தாலிக் கட்டிடுவான்.’’‘‘உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்துடுவாங்களா?’’‘‘ ’ஆன் த வே’ன்னு இப்பதான் கால் பண்ணினாங்க. கோயில்ல எல்லா ஏற்பாடும் ரெடியா இருக்கு!’’அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கோயிலுக்கு வந்திறங்கினர்.சற்று தூரத்தில் பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் நின்றிருந்தனர். அவர்களில் ஒருவன் இவர்களை நோக்கி வந்தான்.‘‘ஹாய் மாப்பிள்ளை!’’‘‘என்ன ராகுல்... எல்லா ஏற்பாடும் ரெடியா இருக்கா?’’‘‘ஐயர்கூட ரெடியா இருக்காரு!’’‘‘சித்ராங்கி எங்கே?’’‘‘ரெடி ஆகிட்டு இருக்காங்க.’’‘‘ஓ... மானசா நீ போய் சித்ராங்கியை அழைச்சிட்டு வர்றியா?’’‘‘ஷ்யூர்..!’’ புன்னகையுடன் அவன் கை காட்டிய இடத்தை நோக்கி நடந்தவளை நண்பர்கள் கூட்டத்தில் இருந்த திலகன் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.‘மா...ன...சா!’‘இவளா... இவள் எங்கே இங்கே? அதுவும் பிரவீனோட ஜோடியா வர்றா!’‘‘ஹாய்... ஹாய் டா... எல்லோரும் வந்திருக்கீங்க. ரொம்ப தேங்க்ஸ் டா பசங்களா?’’‘‘ஆமாமாம்... நாங்க கல்யாணம் ஆகாதவங்க இல்லையா... அதனால நாங்க இன்னும் பசங்கதான்!’’ஆளாளுக்கு கலாய்த்துக் கொண்டு அந்த இடம் கலகலவென்று இருந்தது.‘‘டேய் திலக் மச்சான்... என்ன ஒரு மாதிரி டல்லா இருக்கே?’’‘‘நத்திங் டா!’’ சிரிக்க முயன்றான்.‘‘உனக்கு ஆஸ்பிட்டல்ல எவ்வளவோ வேலை இருக்கும். இருந்தாலும் நான் கூப்பிட்டதும் வந்திருக்கே!’’ அவனை அன்புடன் அழைத்துக் கொண்டான்.‘‘உன் வருங்கால வொய்ஃபை இன்னும் கண்ணிலேயே காட்டலையே!’’ என்றான் கவின்.‘‘உள்ளேதான் போய் இருக்கா... வந்துடுவா. இன்ட்ரடியூஸ் பண்றேன்!’’அதைக் கேட்ட திலகனுக்கு காலடியில் யாரோ பின்னுக்குத் தள்ளுவது போலிருந்தது.அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்கவில்லை. மானசாவை மாலையும் கழுத்துமாக... பிரவீனோடு பார்ப்பதில் தைரியமும் இல்லை.அங்கிருந்து நழுவி, போனை காதில் வைத்து பேசுவது போல் பாவ்லா செய்து... பிரவீனை நெருங்கி... ‘‘ஸாரி பிரவீன்... ஹாஸ்பிடல்லேருந்துபோன். ரொம்ப அர்ஜென்ட்... ஸாரிடா... நான் அர்ஜென்டா போகணும். உன்னை சீக்கிரம் வந்து பார்க்கிறேன்.’’‘‘அடடா... ஒரு அரை மணி நேரம் இருக்க முடியாதா?’’‘‘டீன் அழைக்கிறார். டிலே பண்ண முடியாது. அகெய்ன் ஸாரி.’’ வேகமாய் அங்கிருந்து புறப்பட்டான்.அடுத்த நிமிடம் மானசா, மணமகள் கோலத்தில் இருந்த சித்ராங்கியை அழைத்துக் கொண்டு வந்தாள்..13‘‘இதெல்லாம் எந்த வகையில் நியாயம்? எந்த நம்பிக்கையில் மானசாவை இங்கே தங்க வச்சேன்?’’ வாசுதேவன் ஆற்றாமையுடன் கேட்டார்.சக்கரவர்த்தி பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்தார்.தேன்மொழி அழுதழுது வீங்கிய கண்களுடன் தம்பியின் அருகே அமர்ந்து அவர் கையைப் பற்றிக் கொண்டாள்.‘‘பிரவீன் இப்படிப் பண்ணுவான்னு நாங்க யாருமே எதிர்பார்க்கலை. எங்களுக்கு மட்டும் இதில் ஆசையா என்ன? உனக்குத் தெரியாதா... மானசாதான் என் வீட்டு மருமகளாக வேண்டும் என்று நான் ஆசைப்பட்டதெல்லாம்? நாங்களே இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டு இருக்கோம் வாசு. புரிஞ்சுக்க...’’‘‘நீ ஈசியா சொல்லிட்டேக்கா. சொந்தக்காரங்க எல்லோருக்கும் தெரியும்... என் பொண்ணை இங்கே தங்கிப் படிக்க வைக்கிறதெல்லாம். பிரவீன்தான் என் மருமகன் அப்படின்னும் தெரியும். ஆனா இப்ப...’’‘‘மச்சான்... நாங்களே நொந்து போய்தான் இருக்கோம். எல்லாம் நடந்து முடிந்து விட்டது. எவ்வளவோ சொல்லி பார்த்தேன். என் பேச்சை மீறி கல்யாணமும் பண்ணிக்கிட்டான்.’’ சக்கரவர்த்தி நொந்த குரலில் சொன்னார்.‘‘இப்ப என்ன... கொஞ்ச நாள்ல பிரவீனை மன்னிச்சு ஏத்துக்க போறீங்க. நாங்கதான் மனசுல ஏதேதோ நினைச்சு..!’’‘‘என்னடா வாசு... என்னமோ நாங்கதான் விருப்பப்பட்டு போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாடான்னு அனுப்பி வச்ச மாதிரி பேசுற. எங்களுக்கும் ரொம்ப மனக்கஷ்டம்தான்.’’அதுவரை அமைதியாக இருந்த வனஜா, மகளிடம் ரகசிய குரலில், ‘‘எதுக்கும் லாயக்கு இல்லை நீ. ஒரு நல்ல வாழ்க்கையை கெடுத்துக்கிட்டு நிக்கிற!’’ என்றாள்.‘‘என்ன என்னம்மா பண்ண சொல்றே? மாமா பல வருஷமா அந்தப் பொண்ணை லவ் பண்ணிட்டு இருந்திருக்கார். அதனால வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டார்.’’‘‘அதைத்தான் சொல்றேன்... நீ எதுக்கும் லாயக்கு இல்லன்னு!’’‘‘சரி மாமா... உங்களை கோச்சுக்கிட்டு என்ன ஆகப்போகுது? நான் இங்கே ஹாஸ்டல்ல இடம் பார்த்துட்டேன். இனிமே மானசா இங்க தங்கறது சரியா இருக்காது. நாளைக்கு அவளை கூட்டிக்கிட்டுப் போறேன்!’’‘‘லூஸாடா நீ? இதுக்காக மானசாவை இங்கே இருந்து கூட்டிட்டுப் போயிடுவியா?’’‘‘அவளோட வாழ்க்கை அக்கா. யாராவது தப்பா நினைக்க மாட்டாங்களா? ஹாஸ்டல்ல பணம் கட்டியாச்சு. புரிஞ்சுக்க அக்கா. வெங்கட்டை மறுபடியும் மன்னிச்சு ஏத்துக்க சொல்லி மாமா எனக்கு அட்வைஸ் பண்ணினார். நாளைக்கு கண்டிப்பா பிரவீனையும் மன்னிச்சு ஏத்துக்குவார். அப்ப மானசா இங்கே இருக்கறது சரியா வராது இல்லையா?’’வாசுதேவனுக்கு பதில் சொல்ல இருவருக்கும் வார்த்தைகள் இல்லை.திலகன் எதிலும் பிடிப்பின்றி வளைய வந்தான். தனக்கு முன்பாக அமர்ந்திருந்த விஸ்கி பாட்டிலை விரலால் தடவிக் கொடுத்தான். பத்து நாட்களுக்கு முன்பிருந்துதான் இந்தப் பாட்டிலும் அவனுக்கு அறிமுகம்.கசப்பு எண்ணங்களை விழுங்கவே இந்தக் கசப்பு திரவமும் அவனுக்கு கைகொடுத்தது.‘எப்படி நடிச்சு இருக்கா? பிரவீன் சொன்னானே... ரொம்ப வருஷமா லவ் பண்றோம் அப்படின்னு. ஸ்கூல்ல படிக்கும்போதிருந்தே லவ் பண்றா போல. அப்போ என்னை எதுக்கு லவ் பண்ற மாதிரி நடிக்கணும்? பிரவீன் சென்னையில் இருக்கிறதால... போர் அடிக்குதுன்னு அந்த ஊர்ல என்னை டைம் பாஸுக்காக லவ் பண்ற மாதிரி நடிச்சிருக்கா. அந்த எல்லை வரைக்கும் போகணும்னு ஆசைப்பட்டாளே! ச்சே... என்ன மாதிரி பொண்ணு இவ? எல்லாத்தையும் முடிச்சிட்டு பிரவீனோட வாழ்றதுக்கும் ரெடியா இருந்திருக்கா. பிரவீன் பணக்காரன்... அதான் பொழுதுபோக்குக்காக நான்!’ புலம்பித் தள்ளினான்.ஒன்று மட்டும் நிதர்சனமாக புரிந்தது திலகனுக்கு. அவள் மீது இவ்வளவு கோபம் வருகிறது என்றால் அந்த அளவிற்கு, தான் அவளை நேசித்திருப்பதும் புரிகிறது.பச்சாதாபத்தில் அவனுடைய கண்கள் கலங்கின.தேஜா அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.‘‘நிஜமாவா திலக்? நீங்க இந்த வேலையை ரிஸைன் பண்றதா கேள்விப்பட்டேனே. ஏன் திலக்? கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல ஜாப் கிடைக்கிறது எல்லாம் அவ்வளவு ஈஸி இல்லை. உங்களுக்கே தெரியும்தானே?’’ ஆதங்கத்துடன் கேட்டாள்.‘‘ஆமாம்... பெங்களூருவுல என்னோட ஃப்ரெண்ட் சொந்தமா ஹாஸ்பிடல் வெச்சிருக்கான். அவன் இப்ப ஆஸ்திரேலியாவுல செட்டில் ஆக போறதால என்னை அந்த ஹாஸ்பிடலை பார்த்துக்க சொல்லிட்டான்.’’‘‘அவர் சொன்னா நீங்க போயிடணுமா?’’‘‘என்ன பேசுற நீ? இதெல்லாம் பெரிய ஆஃபர். கைநீட்டி சம்பளம் வாங்கறது எப்படி இருக்கு? சம்பளம் கொடுக்கிறது எப்படி இருக்கு?’’‘‘அப்ப நான்?’’‘‘என்ன?’’‘‘உங்களை நான் ரொம்ப லவ் பண்ணுறேன் திலக். அப்பாவே உங்களுக்கு இங்கே பெரிய ஹாஸ்பிடல் கட்டித் தருவாரு.’’‘‘புரிஞ்சிக்க தேஜா. என் மனசுல நீ வெறும் சிநேகிதி மட்டும்தான். அதுக்கு மேல உன்னை நான் எப்பவும் நினைச்சதே இல்லை. எதையும் திணிக்க நினைக்காதே. உன்னைய நேசிக்கிறவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு!’’‘‘என்னால..!’’‘‘வேணாம்... இதுக்கு மேலே நாம இதைப் பத்தி பேச வேண்டாம்!’’ எங்கோ வெறித்த திலகனின் கண்களில் துளிகூட காதல் இல்லை.‘‘எப்படி இருக்காங்க உங்க சித்ராங்கி?’’ ஜூஸை உறிஞ்சியபடி பிரவீனை கேட்டாள் மானசா.‘‘அவளுக்கென்ன ஜம்மென்று இருக்கிறாள். என்னையில்லே கல்யாணம் பண்ணி இருக்கிறா? சந்தோஷமா இருக்க மாட்டாளா என்ன?’’ காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.சத்தமின்றி சிரித்தாள்.‘‘எப்பவும் இப்படியே இருக்கணும்!’’‘‘சரி பாட்டி!’’‘‘ம்..!’’ செல்லமாய் முறைத்தாள். அவன் தோளில் தட்டினாள்.அந்த ஹோட்டலில் உள்ளே நுழைந்த திலகன் கண்களில் இருவரும் விழுந்தனர்.ஸ்தம்பித்து போனான்.‘‘என்ன திடீர்னு ஹாஸ்டலுக்கு போயிட்டே?’’‘‘அப்பாதான்..!’’‘‘ஓகே... புரியுது... புரியுது. முறைப் பையனும் முறைப் பொண்ணும் ஃப்ரெண்ட்ஸாவே பழகக் கூடாது இந்தப் பெருசுங்களுக்கு!’’‘‘அத்தை பேசினாங்களா?’’‘‘அப்பாக்கிட்டயும் பேசிட்டேன். அடுத்த வாரம் நல்ல நாள் பார்த்து நம்ம வீட்டுக்குப் போகிறோம் மானசா!’’‘‘வாவ்... பரவாயில்லையே... மாமாவும் அத்தையும் உங்களை இவ்வளவு சீக்கிரம் ஏத்துக்குவாங்கன்னு நினைக்கவே இல்லை!’’‘‘பெத்தவங்க அப்படிதான் மிரட்டுவாங்க. அவங்க கையில இருக்கிற ஒரே ஆயுதம் தற்கொலை பண்ணிப்போம்கிறதுதான். அப்படிப் பண்ணிக்கிட்டா மட்டும் கௌரவம் பாழா போகாதா? சரி... கதைக்கு வருவோம். அதுக்குப் பிறகு உன் ஆளை சந்திச்சியா?’’‘‘அவர் எங்கே இருக்கிறார்னே தெரியாது!’’ இயல்பாய்ச் சொல்ல நினைத்தாலும் வார்த்தையில் விரக்தி மிகுந்திருந்தது.‘‘அவரோட டீடைல்ஸ் கொடு. நான் கொண்டு வந்து உன் முன்னே நிறுத்தறேன். சப்போஸ் அவர் வந்தா... ஏத்துப்பியா?’’‘‘என்னோட காதல் அப்படியேதான் இருக்கு!’’ என்றாள், கண்கள் பனிக்க.‘‘ஸ்வீட் மானசா!’’ அவள் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தான்.அதற்கு மேல் அந்தக் காட்சியை பார்க்க திலகனுக்கு உயிர் இல்லை. வந்த வழியே திரும்பிப் போனான்..14இந்த உலகத்தில், தான் மட்டுமே தனித்து நிற்பது போல் தோன்றியது மானசாவிற்கு.‘அதோ அந்த நிலவைப் போல..! இருண்ட வானில் சிறிதும் அச்சமின்றி, அதுவாகவே சிரித்து, புழுங்கி, இளைத்து, மறைந்து வாழ்ந்து பிறகு தானாகவே தன்னை சரி செய்து மறுபடியும் பௌர்ணமியாய் பிரகாசிக்கிறது. அதுபோல்தான் நானும்... திலகன் என்கிற ஒற்றை சூரியனால் மனம் எரிந்து வெந்து தணிகிறேன்.ஒரு நிமிடமேனும் நினைக்காமல் ஒரு நாளையும் நான் கடத்தியதே இல்லை திலக். என்னைப்போல் நீங்களும் என்னை நினைக்கிறீர்களா? எங்கே இருக்கிறீர்கள்? எப்படி இருக்கிறீர்கள்? என்னை விட்டு தூரமாய் சென்று விட்டீர்கள். ஆனாலும், ஒரு உள்ளுணர்வு என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது. நீங்கள் பக்கத்திலேயே இருப்பது போல் ஒரு உணர்வு!என்னை கடந்து செல்லும் பைக்குகளில் பலமுறை உங்கள் உருவமாய்ப் பார்த்திருக்கிறேன். அது நீங்களாக இருக்கக் கூடாதா என்று ஏங்கியும் இருக்கிறேன். என்னதான் நீங்கள் என்னுடைய இதயத்தை வெட்டிக் கூறு போட்டாலும், அழும் குழந்தையாய் நான் உங்களை நோக்கித்தான் கையை நீட்டுகிறேன். வைராக்கியம், சுய கௌரவம் என்று உங்களை விட்டு விலகிப் போக என்னால் முடியவில்லை. அவ்வளவு காதல் உங்கள் மீது!நிச்சயம் நீங்கள்தான் ஒரு நல்ல ஆத்மாவை இழந்து விட்டீர்கள். ஏனென்றால், என்னை போல் ஒரு காதல் ராட்சசி இனியொரு முறை இந்த ஜென்மத்தில் உங்களுக்கு கிடைக்க மாட்டாள்.ஏனோ, அப்படியே மடங்கி சரிந்து அழவேண்டும் போல்... நெஞ்சுக்குள் ஒரு கேவல்!அது லேடிஸ் ஹாஸ்டல். எந்நேரமும் யாரேனும் இந்த மொட்டை மாடிக்கு வர வாய்ப்புண்டு. பார்த்துவிட்டால் பலதையும் அவர்களை யோசிக்க வைக்கும். இந்தத் தனித்த உலகில் எனக்கு அழக்கூட உரிமை கிடையாது.வானில் இறைந்து கிடந்த நட்சத்திரங்கள் இவளையே பரிதாபமாய் கண் சிமிட்டி பார்த்துக் கொண்டிருந்தன.‘‘நாலஞ்சு நாளா நீ ரொம்ப டல்லா இருக்கியே. உடம்புக்கு முடியலையா தேஜா?’’‘‘ப்ச்... இல்லை!’’ என விரக்தியாய் தலையாட்டினாள்.‘‘வேறென்ன?’’‘‘இரண்டாவது முறையும் என்னோட லவ் உடைஞ்சு போச்சு!’’‘‘என்னாச்சு?’’‘‘அவர் இந்த வேலையை விட்டுட்டு பெங்களூருவுக்குப் போறார்.’’‘‘அதனாலென்ன? அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீயும் பெங்களூருவுக்குப் போயிடு.’’‘‘எவ்வளவு ஈஸியா சொல்லிட்டே?’’‘‘ஏன்... உங்க அப்பாவுக்கும் இதுல சம்மதம்தானே?’’‘‘எனக்காக அப்பா என்ன வேணும்னாலும் செய்ய ரெடி. அவரால பணத்தைக் கொட்டி மாப்பிள்ளையை வாங்கி விட முடியும். ஆனால்... என்னோட திலகனின் இதயத்தில் ஒரு இடத்தை வாங்கித் தர முடியாது அல்லவா? அவர் மனதில் நான் இல்லை என்பதை சொல்லிவிட்டார்!’’‘‘ஓ..!’’‘‘ஆனால், அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும் மானசா. மறப்பது கஷ்டம்.’’‘‘நீ அவர் மனதில் இல்லாதபோது அவரை நினைப்பதே தவறு. காலம் உன்னை மாற்றும். ஏன்னா, இது ஒரு தலை காதல்... பரஸ்பரம் காதலித்திருந்தால்தான் பிரிவு கொல்லும்!’’‘‘பார்க்கலாம்..!’’ நெடிய பெருமூச்சு அவளிடம்.அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அழகான பெண்தான். செல்வாக்குமிக்க அப்பா. கொட்டிக் கிடக்கும் பணம். இவ்வளவு இருந்தும் இவளை ஏற்றுக்கொள்ளாத ஒரு ஆண் மனம். அவன் மனதிலும் சாகாத ஒரு காதல் வாழ்ந்துக் கொண்டிருக்கலாம். வேறு யாரும் புகாத அளவிற்கு இண்டு இடுக்கெல்லாம் நிரம்பி இருக்கிறாள் போல அவனுள் இருப்பவள். அதிர்ஷ்டம் செய்த பெண்!சிலாகித்தாள் மானசா.‘‘விஸ்வம் சொன்னான். ஏன் திலக்? கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல வேலை கிடைக்கிறதே கஷ்டம். கிடைச்சதை விட்டுட்டு போறேங்கிறே?’’ ஒரு காப்பி ஷாப்பில் இருவரும் அமர்ந்திருந்தனர்.‘‘இந்த மாதிரி ஒரு பிரைவேட் ஹாஸ்பிடலை சொந்தமா கட்டணும்கிறது என்னோட கனவு. இப்போதைக்கு அதுக்கு வாய்ப்பு இல்லைன்னாலும்... ஒரு பிரைவேட் ஹாஸ்பிட்டல் என்னோட கைக்கு ஃப்ரெண்ட் மூலமா வருது. இது என்னோட அடுத்த படின்னு நினைக்கிறேன்.’’‘‘இதே சென்னையில நாம ஒண்ணா காலேஜ்ல படிச்சோம். அப்புறம் நீ டாக்டருக்கு படிச்சாலும் நம்ம ஃப்ரெண்ட்ஷிப் தொடர்ந்துக்கிட்டிருந்தது. படிப்பை முடிச்சுட்டு கேரளா சைடு வேலைக்கு போயிட்டே. மறுபடியும் நீ சென்னையிலே வந்து ஜாயின் பண்ணினதும் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? இப்ப என்னடான்னா...’’‘‘இதோ ஒரு அஞ்சு ஆறு மணி நேரத்துல நெனச்சா பெங்களூருவுக்கு வந்துடலாம். இதுக்கேன் இவ்வளவு ஃபீல் பண்றே?’’‘‘ஓகே விடு! நான் உன்னை வீட்டுக்குச் சாப்பிட கூப்பிட்டேன். ஏன் வரலை? மேரேஜ் போதும் நீ அட்டென்ட் பண்ணாம அர்ஜென்ட்னு ஓடி போயிட்டே? என் வொய்ஃப்கிட்ட உன்னை மட்டும்தான் இன்ட்ரோ பண்ணவில்லை.’’‘‘ப... பரவாயில்லை. இன்னொரு நாள் வருகிறேன்!’’‘அவளை இவனுக்குச் சொந்தமான ஒருத்தியாய் நினைத்தே பார்க்க முடியாதபோது நேரில் பார்த்து சாகவா?’‘‘பரவாயில்லை... உன் பேரண்ட்ஸ் உங்களை ஏத்துக்கிட்டது சந்தோஷமாக இருக்கிறது.’’‘‘என் அம்முகூட ஒரு அஞ்சு நிமிஷம் பேசினாகூட அவ பக்கம் சாய்ஞ்சிடுவாங்க. அம்மா ஒரு நாள் எங்களை கோயிலில் வைத்து பார்த்தபோது அவளை அவங்களுக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது.’’‘‘அம்முவா?’’ புரியாமல் கேட்டான் திலகன்.‘‘என் வொய்ஃப்தான்டா!’’ வெட்கத்துடன் சிரித்தான்.‘‘அம்முங்கிறது எல்லா புருஷன்ங்களும் பொண்டாட்டியை செல்லமாக அழைக்கும் நிக் நேம். இல்லேன்னா கோவிச்சுக்குவாளுங்க. உனக்குக் கல்யாணம் ஆகும்போது தன்னாலே தெரியும்!’’‘‘ஓ... இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா?’’‘‘ஆமாமா... அதுவும் என் அம்மு ஸ்பெஷல்! மை ஸ்வீட்டி!! வார்த்தைக்கு வார்த்தை அம்முன்னு நான் கொஞ்சினால்தான் எனக்கு வேலையே ஆகும்!’’திலகனுக்கு நெஞ்சை பிசைவது போல் வலித்தது.‘எப்படி அவளால் முடிகிறது? என்னையும் அப்படி விழுந்து விழுந்து காதலித்து விட்டு இவனிடமும்... ச்சே... நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது.’‘‘சரி... நீ எப்போ பெங்களூருவுல செட்டில் ஆகப்போறே?’’‘‘அனேகமா பத்து நாள்ல இருக்கலாம்.’’‘‘எனக்கும்கூட பெங்களூருவுல ஒரு வாரம் பத்து நாள்ல ஒரு பங்ஷன் இருக்கு. என் தங்கையோட நாத்தனாருக்கு மேரேஜ். ஃபேமிலியோட போவோம். முடிஞ்சா உன்னை ஆஸ்பிட்டல்ல வந்து பார்க்கிறேன்!’’‘‘ஷ்யூர்டா... வெல்கம்!’’ புன்னகையுடன் கைகுலுக்கி அவனை அணைத்துக்கொண்டான் திலகன்.‘‘என்னம்மா சொல்றே? நீ சொல்றது நிஜமா?’’ நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் கேட்டாள் மானசா.‘‘இவ ஒருத்தி. நான் என்ன பொய்யா சொல்லுவேன்?’’‘‘அப்பா எப்படிம்மா மனசு மாறினாரு?’’‘‘எல்லாம் பிரவீனோட கல்யாணம்தான். அவன் பண்ண காரியத்தை அவன் அப்பா மன்னிச்சு ஏத்துக்கிட்டாருல்ல? அதுதான் அவரை யோசிக்க வச்சது. நானும் கொஞ்சம் பேசிப் புரிய வெச்சேன். உங்க அண்ணன் அவன் பொண்டாட்டி குழந்தைகளோட ரெண்டு நாள் முன்னாடி வீட்டுக்கு வந்திருந்தான். உங்க அப்பா அழுதுட்டாருடி. பிள்ளைகளைத் தூக்கி அப்படிக் கொஞ்சினாரு. எல்லாத்தையும் மனசுல வச்சு இறுக்கமான ஆள் மாதிரி இவ்வளவு நாளா நடிச்சிட்டு இருந்திருக்கார். எப்படியோ என் பிள்ளை எங்களோட வந்து சேர்ந்துட்டான். அது போதும்!’’‘‘அண்ணி எப்படிம்மா இருக்காங்க?’’‘‘பேசிப் பழக எனக்குக் கொஞ்சம் தயக்கமாதான் இருக்கு. போகப் போக சரியாயிடும்.’’மானசாவின் மனசு எங்கும் நிம்மதி ஆட்கொண்டது. நிஜமான அன்பும் காதலும் தோல்வியுறுவதில்லை.‘‘அவங்களை எனக்கும் பாக்ஷீக்கணும் போல இருக்கும்மா. லீவு போட்டுட்டு ஊருக்கு வரட்டா?’’‘‘அட... முக்கியமா இன்னொரு விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன். இப்ப நீ இங்கே வராதே. நாலு நாள்ல நம்ம பிரகதியோட நாத்தனார் கல்யாணம் பெங்களூருவுல நடக்குது. சக்கரவர்த்தி அண்ணன் நம்ம எல்லோருக்கும் ஃபிளைட் டிக்கெட் ஏற்பாடு பண்ணி இருக்காரு. நாங்க நேரா மதுரையிலேருந்து வந்துருவோம். நீ அத்தை குடும்பத்தோட சேர்ந்து அங்கே வந்துடு.’’‘‘வாவ்! குடும்பம் மொத்தமும் சங்கமம் ஆகப்போகிறதா? ஜாலிதான்!’’ குதூகலமானாள் மானசா.நள்ளிரவை கிழித்துக் கொண்டு சூரியன் உதித்தது போல்... வியப்பும் மகிழ்ச்சியுமாய்... மனசுக்குள் ஒரு சந்தோஷ அலைப் பொங்கிப் புரண்டு வந்தது!விமானத்தினுள்... குடும்பம் மொத்தமும் அமர்ந்திருந்தது. பிரவீனும் சித்ராங்கியும் சீண்டிக் கொண்டும் சிலிர்த்துக் கொண்டும் சிட்டுக்குருவிகளை போல் கொஞ்சிக் கொண்டிருக்க... தன் கையில் வைத்திருந்த ஆப்பிள் ஜூஸை பிரவீன் கைப்பட்டு அவள் உடையில் சிந்திவிட... சிணுங்கினாள் சித்ராங்கி.‘‘ஓ... ஸாரிடா அம்மு... வெரி ஸாரி.’’‘‘போடா...’’ செல்லமாய் கோபித்து, ரெஸ்ட் ரூம் நோக்கிச் சென்றாள்.மானசா தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.‘‘என்ன மாம்ஸ்... மரியாதை எல்லாம் பலமா இருக்கு!’’ என்றாள், கிண்டலாய்.அதே நேரம் விமானத்தினுள் வந்த திலகன் தன்னுடைய சீட்டை தேடினான். அப்போது பிரவீனையும் பக்கத்தில் அமர்ந்திருந்த மானசாவையும் பார்த்து விட்டான்.உள்ளம் குறுகிப் போனது. அதுவும் அவர்கள் சிரித்துக் கொண்டும் சீண்டிக் கொண்டும் இருப்பதை வெறுப்புடன் பார்த்து அப்படியே கீழே இறங்கி ஓடி விடலாமா என்றுகூட தோன்றியது.இவன் வந்ததையே கவனிக்காமல் அவர்கள் இருவரும் கலகலப்பாய் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னே இரண்டு சீட் தள்ளித்தான் அவனுடைய இருப்பிடம் இருந்தது. அமர்ந்து ஆயாசத்துடன் கண்களை மூடிக்கொண்டான்.‘‘ஏய்... லூஸு... எங்களையேதான் கவனிச்சிட்டு இருந்தியா? ஒழுங்கா படிப்புல கவனமா இரு. கெட்டுப்போகாதே!’’‘‘தோ பார்டா... அரியர்ஸ் வச்சாதான் படிப்புக்கே மரியாதைன்னு சொல்லிக் கொடுத்த என் குருவா இது?’’‘‘ஷ்ஷ்... அப்பா அம்மா காதுல விழுந்துடப் போகுது. மெதுவா பேசு. அம்மு செல்லமா என்னை திட்டிட்டுப் போறா. நீயும் கல்யாணம் ஆனா உன் புருஷனை இப்படித்தான் திட்டுவே!’’‘‘கோவிச்சுக்க மாட்டாரா?’’‘‘சேச்சே... இப்படித் திட்டினா ஹஸ்பண்டுக்கு ரொம்பப் பிடிக்கும். மூடு வரும்.’’‘‘ஐயே... ஒரு சின்ன குழந்தைக்கிட்ட பேசுற பேச்சா இது?’’‘‘யாரு... நீ? சின்ன கொழந்தையா?’’‘‘எங்கே என்னோட அம்முவை இன்னும் காணோம்?’’ எழுந்து திரும்பிப் பார்த்தான்.திலகன் அமர்ந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியத்துடன் எழுந்து அவனை நோக்கிச் சென்றான்.அதே நேரம் சித்ராங்கியும் வந்துக் கொண்டிருந்தாள்.‘‘ஹேய் மச்சான்!’’கண்களைத் திறந்தவன் நண்பனைப் பார்த்து புன்னகைத்தான். அப்போதுதான் பார்ப்பது போல, ‘‘அட நீயும் இதே ஃபளைட்லயா?’’ என்று கேட்டான்.‘‘அன்னிக்குச் சொன்னேனே... மேரேஜ் பங்ஷன். ஃபேமிலியோட அங்கதான்... வாயேன் என் ஃபேமிலியை இன்ட்ரடியூஸ் பண்ணுறேன்.’’‘‘இருக்கட்டும் டா... பரவாயில்லை!’’ மானசாவின் முகத்தை மறுபடியும் பார்க்க பிடிக்காமல் நகர முயன்றான்.சித்ராங்கி அவன் அருகில் வந்து நிற்க... ‘‘அம்மு... நான் சொன்னேனே... திலகன்... அன்னைக்குகூட நம்ம கல்யாணத்துல கலந்துக்க முடியாம ஓடிப் போனானே... அந்த ஓடுகாலி இவன்தான்!’’ அவனைக் காட்டி அறிமுகப்படுத்த... சித்ராங்கி வணக்கம் சொன்னாள்.‘‘வ... வணக்கம்!’’ என்றவன், நம்ப முடியாமல் கண்களை மூடி மூடித் திறந்தான்.‘இவள் யார்?’‘‘என்னடா? உடம்புக்கு முடியலையா என்ன? முகம் எல்லாம் வேர்த்திருக்கு!’’‘‘ஒ... ஒண்ணுமில்லை... ஹாய்... மேம்!’’‘‘மேம் என்னடா மேம்? சும்மா சித்ராங்கின்னே கூப்பிடு!’’‘‘சித்...ராங்கி?’’‘‘ஆமாடா... அதே பேர்தான். அழகா இருக்குல்ல? பேர்லதான் ராங்கி எல்லாம். மத்தபடி ஸ்வீட்!’’‘‘என்ன நீங்க?’’ வெட்கத்துடனும் சங்கடத்துடனும் அவன் தோளில் தட்டினாள்.சித்ராங்கி வந்ததைப் பார்த்து விட்டு மானசா அங்கிருந்து எழுந்து தன்னுடைய இருக்கையை நோக்கி வந்தாள்.‘‘வாங்க மேடம்... உக்காருங்க... உங்களுக்கு போர் அடிக்காம இருக்க ஒரு கம்பெனி தரவா? மீட் மிஸ்டர் திலகன்... டாக்டர் திலகன். மை பெஸ்ட் ஃப்ரெண்ட்!’’ என்று அவனைக் காட்டிச் சொல்ல...மானசாவின் தலை சுற்றியது. விமானத்தை ஹைஜாக் பண்ணியது போல் அப்படியோர் அதிர்ச்சி.‘தி...ல...க்?’‘‘டேய்... இது என் மாமா பொண்ணு. மானசா..!’’திலகனுக்கும் அதே நிலைமைதான். ஃப்ளைட் குலுங்கியது போல்... அவன் குலுங்கினான்.‘‘மா...ன...சா!’’‘‘என்ன திலக்... இவளைப் போய் வச்ச கண்ணு வாங்காம பாக்கறே? அப்படி ஒண்ணும் பெரிய அழகி இல்லையே... என் மாமா பொண்ணு!’’ஆனால், அவனுடைய குறும்புத்தனத்தை ரசிக்கும் நிலையில் இருவரும் இல்லை.ஏதோ நினைவுகள்... ஏதோ சலனங்கள்... நடந்தவற்றின் அனர்த்தங்கள் லேசாய்ப் புரிய ஆரம்பித்தது.தீர்க்கமான கண்கள்... சோகங்களைத் தின்ற பின்னும் அந்த நான்கு கண்களும் அப்படிப் பிரகாசித்தன!.அள்ளித் திங்கிற மாதிரி... அவள் கரைஞ்சு அவன் கண்ணு வழியா இறங்கிறது அவளுக்கு நல்லாத் தெரிந்தது.‘‘ஏய்... என்ன நடக்குது இங்கே? ஒண்ணு ஹாய் சொல்லுங்க... இல்ல வணக்கம் சொல்லுங்க... எதுவும் பேசாம இப்படிப் பார்த்துக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்?’’ பிரவீன், இருவரையும் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.‘‘கொஞ்சம் உங்க சீட்டுக்குப் போறீங்களா? அப்புறமா டீடைலா சொல்றேன். ப்ளீஸ்... பிரவீன்!’’ அப்போதும் மானசாவின் மீதிருந்த பார்வையை விலக்காமல் சொன்னான் திலகன்.‘‘ஹா..!’’ வாயைப் பிளந்தபடி இருவரையும் பார்த்தான்.சித்ராங்கியும்கூட கேள்வி தொக்கிய கண்களுடன் பார்த்தாள்.ஆனால், அவர்கள் எதையும் மதித்ததாய்த் தெரியவில்லை.அறியாமல் நடந்த தவறுகளுக்கு அவர்கள் விழிகள் கலங்கின. கன்னங்கள் நனைந்தன.காதல் இதயங்கள் களிப்புற்றன.உதடுகள் விரிந்தன.ஒரு நீண்ட அழுகைக்குப் பிறகு வரும் சிறு முறுவல்தான் வாழ்வின் முடிச்சே!(முற்றும்)