-அமுதகுமார்1நடுநிசி. அமானுஷ்யமான நிசப்தம். அந்தப் படுக்கையறையில் விடிவிளக்கின் வெளிச்சம் மட்டும் பரவிக்கிடந்தது. சுவர் கடிகாரத்தின் நொடி முள்ளின் நகர்வுக்கான சப்தம் மட்டும் காதுக்குள் கடிகாரத்தை மாட்டிக் கொண்டதைப் போல் பலமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.கூடவே மின்விசிறியின் ஓட்டத்தில் காற்றின் சப்தம். ஏற்கெனவே கலைந்து போய் கலவரத்தில் இருக்கும் மனசுக்கு அந்த சூழ்நிலை சுகமாக இல்லை. மேலும் மனசின் கலவரத்தை அதிகப்படுத்தியது.வினிதா சுனாமியில் சிக்கிக் கொண்டது போல் தவித்தாள். துடித்தாள்.அந்தச் சுழலிலிருந்து மீண்டு எழ முடியுமா என்ற கேள்வி அடி மனதில் எழுந்தது. அந்தக் கேள்வி வினிதாவை வதைத்தது. வினிதாவின் மனசில் ஏகப்பட்ட கலவரம். வாழ்க்கை மீது ஒரு பிடிப்பு இல்லாமல் போயிற்று.விரக்தியின் விளிம்பில் போய் நின்றாள்.கண்களை மூடிப் படுத்தாலும் உறக்கம் வரவில்லை. படுக்கை முட்படுக்கையாக உறுத்திற்று.வேதனை. தாங்கிக்கொள்ள இயலாத அளவிற்கு வேதனை!தேவைதானா இந்த வாழ்க்கை? வாழ்ந்துதான் ஆக வேண்டுமா?பெற்றோருக்காக இந்தத் திருமணத்தை ஒப்புக் கொண்டது தவறோ என்று யோசித்தாள். காலம் கடந்த யோசனை.கல்யாணமே வேண்டாம் என்று முரண்டு பிடித்திருக்க வேண்டும்.இனி யோசித்து எந்தப் பிரயோஜனமும் இல்லை.வினிதாவுக்கு பக்கவாட்டில் கார்த்திகேயன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.எங்கிருந்துதான் இந்த மனுஷனுக்கு இப்படி ஒரு தூக்கம் வருகிறதோ? அதுவும் கரனகொடூரனமான குறட்டை சப்தம் வேறு.அந்த மூச்சுக் காற்றில் மது வாடை வேறு. அருகில் படுத்தால் குடலைப் புரட்டி போடும் அளவிற்கு துர்நாற்றம்.திருமணத்திற்கு முன்பாக இந்த வாடையெல்லாம் அவளுக்குப் பழக்கமில்லை.அவனைப் பிடிக்காமல் போனதிற்கு அந்தக் குடிப்பழக்கமும் ஒரு காரணம்.தூய்மையான குடும்பத்திலிருந்து தூசு படிந்த குடும்பத்திற்கு வாழ்க்கைப்பட்டு வந்துவிட்டேனோ?அப்பா எப்படி என்னோட கல்யாண விஷயத்தில் இப்படி ஏமாற்றம் அடைந்தார்?அப்படி ஒன்றும் எனக்குக் கல்யாண ஆசையும் வந்துவிடவில்லை. வேறு எந்த ஒரு ஆடவனையும் மனசில் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை. காதலிக்கவுமில்லை.குடும்பப் பெயரைக் கெடுக்கக்கூடிய பெண்ணும் இல்லை.படிக்க வேண்டிய படிப்பே இன்னும் பாதியில் நிற்கிறது. டிகிரி முடித்து வேலைக்குப் போகவேண்டும். என் சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்ற எண்ணமும் லட்சியமும் ஒரு கல்யாணம் என்ற சடங்கால் அத்தனையும் தொலைந்து வெகு தூரம் போய்விட்டதே!‘வாழ்க்கை’ எனும் வானத்தில் உயரமாக பறக்க நினைத்த பறவையின் இறகுகளை அடியோடு வெட்டிப் போடப்பட்டு விட்டனவே!குடும்ப வாழ்க்கையின் முதல் படியிலேயே முற்கள். உடைந்த கண்ணாடி சில்கள்.முதல் முறையாக மதுவாடை கணவனிடத்திலிருந்து வந்தபொழுதே மனம் தாளாமல் வினிதா கேட்டும் விட்டாள்.‘‘என்ன இது? தண்ணிப் போடுவீங்களா?’’‘‘நான் ஒண்ணும் தண்ணி வண்டி கிடையாது.’’‘‘பின்னே?’’‘‘அளவுக்கு அதிகமாக குடிச்சிட்டு, வேட்டி அவிழ்ந்து போகும் அளவிற்கு சலம்புறது இல்லை. புரிஞ்சுக்க!’’‘‘எப்படியும் இது குடிதானே?’’‘‘குடிக்கிறவன் எல்லாம் குடிகாரனா?’’‘‘ஒரு கொலை செய்தாலும் கொலைகாரன். ஒன்பது கொலை செய்தாலும் கொலைகாரன்.’’‘‘நல்லா இருக்கு நீ சொல்லும் உதாரணம். நான் குடிக்கிறது ஒரு கம்பெனிக்காக.’’‘‘எனக்குப் புரியலை.’’‘‘பிசினஸ் விஷயமா கஸ்டமரிடம் பேசும்போது பார்ட்டியில் நான் மட்டும் விலகிவர முடியாது.’’‘‘ஏன் முடியாது?’’‘‘அதெல்லாம் சொன்னால் உனக்குப் புரியாது. பேசாமல் இரு.’’கார்த்திகேயன் சொன்னது விளக்கம் இல்லை. குடிப்பதற்கான ஒரு நியாயம். அதைக் கற்பித்துவிட்டால் பிரச்னை முடிந்தது.அப்புறம் எவ்வளவு வேண்டுமானும் குடிக்கலாம்.ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரணம் கேட்டால், அதற்கு ஒரு பெரிய விளக்கம் வேறு!‘‘பிசினஸ் விஷயமா வெளியில் போகும்போது பார்ட்டியில் கலந்துக்க வேண்டியிருக்கும். அதையெல்லாம் மறுத்தால் மரியாதை இருக்காது.’’‘‘குடிச்சால்தானே மரியாதை இருக்காது? குடிச்சால் ஒரு மனிதனுக்கு மரியாதை போகத்தானே செய்யும்?’’‘‘அதெல்லாம் உனக்குப் புரியாது.’’'கார்த்திகேயன் சொன்ன விளக்கம் வினிதாவுக்கு சுத்தமாகப் புரியவில்லை.மாமியார் பாக்யத்திடம் ஒரு நாள் சொன்னாள்.‘‘அத்தை... வெளியில் போனால், அவர் தண்ணி போட்டுட்டு வர்றார்.’’‘‘பார்ட்டிக்குப் போனால் அதெல்லாம் சகஜம்.’’பாக்யத்தின் பதிலைக் கேட்டு வினிதா அதிர்ந்து போனாள்.‘‘எ... என்ன சொல்றீங்க?’’‘‘என்ன கொலையா பண்ணிட்டு வர்றான்? பிசினஸில் இதெல்லாம் சாதாரணமான விஷயம். அதையெல்லாம் பெரிசு பண்ணிக்காதே!’’வினிதாவுக்கு அன்று போன தூக்கம். அப்புறம் நிம்மதியான தூக்கமே இல்லை. ஒரே துக்கம்தான்!தூக்கம் வரவில்லை என்பதால் புரண்டு, புரண்டு படுத்ததில் உடம்பு வலித்தது. மனசு அதைவிட அதிகமாக வலித்தது.ஏ.சி. ஓடிக்கொண்டிருந்தது. மனம் புழுங்கிப் போய்க் கிடக்கும்போது ஏ.சி.யின் குளிர்ச்சியால் தூக்கம் வந்துவிடாது.அதுவரை எழுந்து மூன்று முறை தண்ணீர் குடித்தாயிற்று. மூன்று முறை டாய்லெட் போயாயிற்று.அந்த முறை எழுந்தவள் செல்போனை எடுத்துக் கொண்டாள். படுக்கையறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியில் போனாள்.பூனை போல் ஓசையில்லாமல் போனாள்.பக்கத்து படுக்கையறையில் பாக்யம் அயர்ந்து தூங்கிப்போனாள் என்பதை உணரமுடிந்தது.வினிதா ஹாலுக்குப் போனாள். மின்விளக்கைப் போட்டாள். டி.வி.யைப் போட்டாள். சேனலை மாற்றி மாற்றி பார்த்தாள். எதிலும் மனம் ஒன்றவில்லை.பதினைந்து நிமிடங்கள் போராடிவிட்டு டி.வி.யை அணைத்தாள்.செல்போனில் யூடியூபுக்குப் போனாள். Ôதூக்கம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என்ற தலைப்பில் மட்டும் ஆறேழு பேர் விதவிதமாகப் பேசியிருந்தனர்.அவற்றைப் பார்க்கவும் மேலும் தூக்கம் வராமல் போனதுதான் மிச்சம். ஒரு புண்ணியமும் இல்லை.செல்போனில் விரல்கள் செயல்பட்டாலும் மனசு எங்கோ கிடந்து தவித்தது.மீட்டு எடுக்க முடியவில்லை.கவுண்டமணி, செந்திலில் இருந்து இன்றைய யோகிபாபு காமெடி சீன் வரை யூடியூபில் பார்த்தாள். யாராலும் அவளை சிரிக்க வைக்க முடியவில்லை.சிரிப்பும் வரவில்லை. மனம் துவண்டு போய்க் கிடந்தது.சிலந்திப்பூச்சி வலையில் சிக்கிக் கொண்ட எறும்பை போல சிந்தனை கிடந்து தவித்தது.எப்பொழுது விடியுமோ அந்த இரவும் அவளுடைய வாழ்க்கையும்?பிறந்த வீட்டுக்கே வாழாவெட்டியாகப் போய்விடலாமா என்ற எண்ணம் ஒவ்வொரு முறையும் தோன்றியது. ஒரேயடியாக அந்த முடிவுக்கும் வரமுடியாமல் தவித்தாள். அந்த எண்ணத்தையும் ஒவ்வொரு முறையும் தவிர்த்தாள்.ஹாலில் எரியும் மின்விளக்கின் வெளிச்சத்தின் உணர்வு ஏற்பட்டு தூங்கிக்கொண்டிருந்த பாக்யம் எழுந்து வந்தாள்.எழுபது வயதிலும் கண்ணும் காதும் மிகத் துல்லியமாக செயல்படுகின்றன.‘‘என்ன வினிதா, தூக்கம் வரலையா?’’மாமியாரின் குரலைக் கேட்டு அதிர்ந்து போய் சோபாவை விட்டு எழுந்தாள் வினிதா.இந்த அம்மாள் அதற்குள் எப்படி எழுந்து வந்தாள்!‘‘இந்த நடுஜாமத்தில் யாருக்கு போன் பண்ணிட்டு இருக்கே?’’வினிதாவுக்கு வார்த்தைகள் வெளியில் வரவில்லை. தொண்டைக்குள் சிக்கிக் கொண்டு வார்த்தைகள் சிதைந்து போய் வெளிவந்தன.‘‘போ... போன் பண்ணலை அத்தை.’’‘‘பின்னே?’’‘‘யூடியூப் பார்த்துட்டு இருந்தேன்.’’‘‘இந்த நேரத்தில் என்ன யூடியூப் வேண்டிக்கிடக்கு?’’‘‘தூக்கம் வரலை.’’‘‘எப்படி வரும்? இனி மேலும் உனக்கு தூக்கம் வராது.’’சாபம் விடும் தொணியில் பேசினாள் பாக்யம்.வினிதா அதிர்ந்து போனாள்.‘‘அத்தை...’’‘‘நியாயத்தைக் கேட்டால் யாருக்கும் மனசு வலிக்கத்தான் செய்யும். குற்றம் செய்த மனசுக்குத் தூக்கம் வராது. வரக்கூடாது.’’பாக்யா எந்த விஷயத்தை மையப்படுத்திப் பேசுகிறாள் என்பதை வினிதா புரிந்து கொண்டாள்.‘‘எங்க அப்பா ரொம்பவும் பணக்கஷ்டத்தில் இருக்கார். சொன்ன நகையைப் போட்டுவிடுவார்.’’‘‘எப்போ? உன்னோட அறுபதாம் கல்யாணத்திற்கா?’’பாக்யத்தின் குரலில் ஒரு கிண்டல். அவளுடைய உதட்டில் ஒரு கேலியான சிரிப்பு.அந்தக் கிண்டலும் சிரிப்பும் வினிதாவின் மனதை ரம்பம் கொண்டு அறுத்தது.கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் பிரச்னை. மெகா சீரியல் போல் அந்த அர்த்த சாமத்தில் மறுபடி தொடர்ந்தது.வினிதா சமாளித்தாள்.‘‘அப்பாவுக்கு வியாபாரம் நின்று போச்சு. ஊரிலிருக்கும் வயலும் விற்க மாட்டேங்குது.’’‘‘அதுக்குத் தகுந்த மாதிரி ஒரு அன்றாடம் காய்ச்சிக் குடும்பமா பார்த்து சம்மதம் செய்திருக்க வேண்டியதுதானே? எங்களைபோல வசதியான குடும்பத்துக்கு ஏன் பெண்ணை கொடுக்கணும்? அப்புறம் ஏன் அல்லல் படணும்?’’‘‘சொன்ன பவுனை போட்டு விடுவாங்க அத்தை.’’‘‘கல்யாணமாகி ஆறு மாசமா இதே பதிலைத்தான் நீ சொல்லிட்டு இருக்கே. சீக்கிரம் உங்க அப்பாகிட்ட சொல்லிக் கொண்டு வந்து, மீதி நகையைப் போடச் சொல்லு. இல்லைனா, உங்க வீட்டுக்குப் போயிட்டு நகையோடு வர வேண்டியதா இருக்கும்.’’வினிதாவின் பதிலைக்கூட எதிர்ப்பார்க்காமல் பாக்யம் தன்னுடைய படுக்கையறையை நோக்கிப் போனாள்.Ôபிறந்த வீட்டுக்கு வாழாவெட்டியாகப் போக வேண்டிய நிலை வந்துவிடுமோ?’ நினைத்துப் பார்க்கவே அடி வயிற்றில் ஒரு Ôகிலி’ உண்டானது..2தூக்கமில்லாத இரவு. துக்கம் நிறைந்த இரவாக மாறிப்போயிற்று.விடிய விடிய தூக்கம் போயிற்று. ஒரு பொட்டுத் தூக்கமில்லை.என்ன கொடுமை இது?பேசாமல் செத்துவிடலாமா என்ற கேள்வி எழுந்தது. இந்தக் காலத்தில் நல்லவர்களுக்கு குழந்தையாகப் பிறப்பதைவிட வல்லவர்களுக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டும்.யாரிடமாவது பேசினால் நெஞ்சிலுள்ள பாரம் குறையும்.விடியட்டும் என்று காத்திருந்தாள்.இந்த வீட்டில் வாழ முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.ஒவ்வொன்றையும் யோசிக்க, யோசிக்க மன உளைச்சல் அதிகம் ஆயிற்று.விடிந்தது.வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வினிதா, பிறந்த வீட்டுக்கு போன் செய்தாள்.தேவிகா போனை எடுத்தாள்.‘‘ஹலோ... ஹலோ...’’அதற்கு மேல் வார்த்தைகள் வெளிவரவில்லை.‘‘சொல்லு வினி... என்னாச்சு?’’ எதிர்முனையில் தேவிகா கேட்டாள்.‘‘அ... அம்மா...’’'‘‘சொல்லும்மா வினி...’’‘‘என்னால இங்கே வாழமுடியுமான்னு ஒரு சந்தேகம்!’’‘‘என்னாச்சு?’’‘‘வார்த்தை சவுக்கால் அடிச்சுக் கொல்றாங்க.’’‘‘எதுக்கு?’’‘‘அம்மா, நீங்க போடுவதா சொன்ன நகையைப் போடாமல் விட்டதால் இங்கே பிரச்னை ஓடிட்டிருக்கு. சீக்கிரமா நகைக்கு ஏற்பாடு செய்யப் பாருங்க.’’‘‘அப்பாகிட்ட சொல்லியிருக்கேன். அவரும் முயற்சி செய்துட்டிருக்காரு.’’‘‘எப்போ பவுனை போடுவீங்க?’’‘‘என்ன செய்ய வினி? அப்பாவுக்கும் தொழில் கையை விட்டுப் போயிடுச்சு. வேலைக்காக அலைஞ்சிட்டு இருக்காரு. எப்படியும் காசை புரட்டிட்டு, நாங்க கொடுத்த வாக்கை காப்பாற்ற பார்க்கிறோம்.’’‘‘அங்குள்ள கஷ்டம் புரியுதும்மா. நம்ம நிலைமைக்குத் தகுந்த வரனா பார்த்து மெல்ல கல்யாணம் செய்திருக்கலாம்மா. எதுக்காக அவசரப்பட்டீங்க?’’.‘‘பொண்ணைப் பெத்தவங்களுக்கிருக்கிற பொதுவான ஆசைதானே! ஒரு நல்ல இடம் வந்தால், அவங்க கேட்ட பவுனை போடுவதாகச் சொல்லி கட்டிக் கொடுக்கிறதுதான். அப்படித்தான் உனக்கும் செய்தோம். அவங்க கேட்டதில் கொஞ்சம் நகை போதலை. அதனால் போடுவதாக தவணை கேட்டோம். சொன்ன தேதியில் போட முடியலை. அதுக்கு என்னவாம்?’’‘‘இங்கே ஒரே டார்ச்சர். மனசெல்லாம் வலிக்குது.’’‘‘கொஞ்சம் பொறுத்துக்க.’’‘‘நீங்க கூலா பொறுத்துக்கச் சொல்றீங்க... இங்கே வீடே தீப்பற்றி எரியும் அவசரத்தில் இருக்காங்க.’’‘‘என்னவாம்?’’‘‘சீக்கிரமா சீர்வரிசையை செய்யப் பாருங்க. அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்.’’‘‘கண்டிப்பா செய்யறோம்.’’‘‘என்னை படிக்க வச்சிருக்கலாம். ஒரு வேலைக்குப் போய் சொந்தக்காலில் நின்றிருப்பேன்.’’‘‘அதை இப்போ பேசி என்ன செய்ய? எல்லாம் தலையெழுத்துப்படிதான் நடக்கும். விதி வலிமையானது.’’‘‘நாம் செய்யும் எல்லாவற்றுக்கும் விதி மேல் பாரத்தைப் போட்டு என்னம்மா செய்ய?’’‘‘எப்படியும் கொஞ்சம் சமாளி. முடிந்தளவு சீக்கிரமா நகையைப் போட்டு விடுகிறோம்.’’‘‘இல்லேனா, நான் திரும்பி வருவதைத் தவிர வேறு வழியில்லை.’’ தேவிகா பதறிப்போனாள்.‘‘வினி... அப்படி எதுவும் செய்து வைக்காதே! வாழாவெட்டியா வீட்டுக்கு முதல் பொண்ணு வந்துட்டா, அப்புறம் அடுத்தப் பொண்ணை கட்டிக்க யாரும் முன்வர மாட்டாங்க.’’‘‘புரியுதும்மா. எல்லாம் புரியுது. அதான் பல்லை கடிச்சிட்டிருக்கேன். நான் திரும்பி வந்துட்டா, சங்கவியின் வாழ்க்கை பாதிச்சிரும்னு புரியுது. எனக்கு சங்கவின்னா உயிர். என் வாழ்க்கையே கெட்டாலும் சங்கவி நல்லா இருக்கணும்.’’‘‘இதை நினைச்சாத்தான் எங்களுக்கே பெருமையா இருக்கு!’’‘‘எதுக்கும்மா?’’‘‘உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு சங்கவி நினைக்கிறா. அவ வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நீ நினைக்கிறே பார். அந்தப் பாசத்தை, பரிவை பார்த்து நாங்க பெருமைப்படறோம்!’’‘‘ஆனா, இங்கே என்னடானா பிரச்னை தலைக்கு மேல போயிட்டிருக்கு.’’‘‘நான் ஒரு முறை உண்டானேன்.’’வினிதா சொல்லி முடிக்கும் முன்பாக தேவிகா துள்ளியெழுந்தாள்.‘‘ரொம்ப சந்தோஷம் வினி! அப்புறம் டாக்டரை போய்ப் பார்த்தீங்களா?’’‘‘அம்மா... அவசரப்படாதீங்க. சொல்லி முடிக்கும் வரை பொறுமையா இருங்க.’’‘‘சரி, சொல்லு.’’‘‘டாக்டரை போய்ப் பார்த்தோம். எதுக்குத் தெரியுமா?’’ வினிதாவின் குரல் தழுதழுத்தது.‘‘எதுக்கு வினி?’‘‘குழந்தைக்கு புஷ்டியா வளர மருந்து கேட்டுப் போய் நிற்கலே. கொடுமைம்மா. கொடுமை. எந்தப் பொண்ணுக்கும் நிகழக்கூடாதா கொடுமை அது! வயிற்றில் உண்டாகியிருந்த குழந்தையை வேண்டாம்’னு அபார்ஷன் செய்யப் போய் டாக்டரை பார்த்தோம்.’’துக்கம் தாளாமல் வெடித்து அழுதாள் வினிதா.தேவிகா அதிர்ந்து போனாள்.‘‘என்ன வினி சொல்றே?’’ அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு வினிதா தொடர்ந்தாள்.‘‘ஆமாம்மா! வலுக்கட்டாயாமா அபார்ஷன் செய்ய வச்சுட்டாங்க.’’‘‘என்ன ஆச்சு? குழந்தைக்கு எதுவும் கருவில் குறையா?’’‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லை.’’‘‘பின்னே?’’‘‘நீங்க மீதி நகையைப் போடாமல் விட்டதால் நான் குழந்தைப் பெத்துக்கக் கூடாதாம். அதனால கருவை வளரவிடாமல் அழிச்சுட்டாங்க. ஒரே அறையில் நானும் அவரும் தனித்தனியா படுத்திட்டிருக்கோம்.’’அந்த விஷயத்தைக் கேட்ட தேவிகா மேலும் அதிர்ந்து போனாள். சில விநாடிகளுக்கு பேச்சே எழவில்லை. தன்னுடைய மகளுக்கு நேர்ந்த கொடுமையைக் கேட்டு, பெற்ற தாயால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.துக்கத்தால் வந்த அழுகையை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்ட தேவிகா, சற்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.‘‘என்ன இது கொடுமை?’’‘‘நரக வேதனை.’’‘‘என்ன செய்ய? உங்க அப்பாவுக்கும் தொழில் முடங்கிப் போச்சு. சொன்ன சீர்வரிசையை செய்ய முடியலை.’’‘‘நான் படிக்கிறேன்னு சொன்னேன். நீங்க காதில் போட்டுக்கலை. வலுக்கட்டாயமா படிப்பை நிறுத்தி எனக்கு கல்யாணம் செய்து வச்சுட்டீங்க.’’‘‘நல்ல வரன் வீடு தேடி வரும்போது நழுவவிட வேண்டாம்னு நினைச்சோம்.’’‘‘இப்போ என் வாழ்க்கையே கை நழுவிப் போயிடும் போலிருக்கேம்மா.’’‘‘கொஞ்சம் பொறுத்துக்க. எப்படியும் சொன்ன நகையைப் போட்டுடறோம்.’’தேவிகா சமாதானம் சொன்னாலும் வினிதாவுக்கு அந்த வார்த்தைகள் காதில் விழவில்லை.கொஞ்ச நேரம் போனில் பேசிவிட்டு வேதனையோடு போனை வைத்துவிட்டாள்.வினிதாவின் மனசுக்குள் வக்கிரமான எண்ணம் எழுந்தது.Ôஎதற்காக பெற்றவர்களுக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் கொடுக்க வேண்டும்? என்னால்தானே எல்லோருக்கும் கஷ்டம்? பேசாமல் செத்துப் போய்விட்டால் என்ன? தற்கொலை ஒன்றுதான் இதற்கு ஒரே வழி!’சாக வழி தேடினாள். அடிக்கடி அந்த எண்ணம்தான் வினிதாவின் மனதில் வந்து போனது..3வினிதா போனை வைத்த பிறகும் தேவிகாவுக்கு மனத்தைப் புரட்டி எடுத்தது. ஏதாவது விபரீதம் நடந்துவிடுமோ என்ற கவலையும் கூடவே எழுந்தது.உள் மனசுக்குள் ஒரு பட்சி சகுனம் சொல்லிற்று. என்னவோ ஒரு விபரீதம் நடக்கப் போகிறது. எந்த விபரீதமும் நடக்காமல் தடுத்தாக வேண்டும்.அதற்கு ஒரே வழி, போடுவதாக வாக்குக் கொடுத்த நகையை வினிதாவுக்குப் போட்டு விடுவதுதான்!வேறு வழியில்லை. ஆனால், அந்த நகையை எப்படிப் போடுவது என்ற வழியும் புரியவில்லை.மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தாள் தேவிகா. ஒரு வழியும் புலப்படவில்லை.வெளியில் போயிருந்த ராஜாராம் வீடு திரும்பினார். அவருக்கும் வியாபாரம் நொடிந்து போய் மனதளவில் ஒடிந்து போய் உள்ளார்.அதுவரை மனசுக்குள் அழுத்திக்கொண்டிருந்த பிரச்னைக்கு வடிகால் தேடும் விதமாக தேவிகா எல்லாவற்றையும் போட்டு உடைத்தாள்.‘‘என்னங்க... வினி போன் செய்திருந்தாள்.’’‘‘என்னவாம்?’’‘‘நாம போடுவதாக சொல்லியிருந்த நகையைப் போடாமல் விட்டதுக்கு புகுந்த வீட்டில் அவளுக்கு ஒரே பிரச்னையாம்.’’‘‘என்ன பிரச்னையாம்?’’‘‘அவள் குழந்தைகூட பெத்துக்கக் கூடாதாம்.’’‘‘அதுக்கு?’’‘‘வினி ஒரு முறை கர்ப்பம் ஆகியிருக்காள். அதையும் அபார்ஷன் பண்ணிடாங்களாம்.’’ராஜாராம் அதிர்ந்து போனார்.‘‘என்ன சொல்றே? இதென்ன கொடுமையா இருக்கு? அபார்ஷன் பண்ணிட்டாங்களா? அது எப்போ?’’‘‘போன வாரம் போல!’’‘‘கொலைகார பாவிகளா?’’‘‘ஆமாங்க... அதற்கு நாமதான் முழுமுதற் காரணம்.’’‘‘என்ன சொல்றே?’’‘‘போடுவதாக சொன்ன நகையைப் போட்டிருக்கணும். இல்லைனா வேறு மாப்பிள்ளை இடம் வரும் வரை நாம காத்திருந்திருக்கணும். அவசரப்பட்டு முடிவு கொடுத்துட்டோம்.’’‘‘என்ன செய்யட்டும்? ஒரு நல்ல இடமா வரவும் கட்டிக்கொடுத்திடலாம்னு முடிவு செய்தேன். அது தவறா?’’‘‘அது தவறு இல்லைங்க. அவங்க ஆசைப்பட்ட நகையைப் போடுவதற்கு நாம ஒப்புக்கொண்டிருக்கக் கூடாது.’’‘‘சரி, ஒப்புக்கொண்டோம். போட முயற்சி செய்யறேன். நான் என்ன தவறு செய்துவிட்டேன்? ஒழுங்கா வியாபாரம் நடத்திட்டிருந்தேன். பக்கத்தில் டிப்பார்ட்மென்ட் ஸ்டோரெல்லாம் வந்து நம்ம வியாபாரத்தை கெடுத்துவிட்டது. அவங்களோடு போட்டி போட முடியலை. அந்தளவிற்கு நம்ம கடையை விரிவுப்படுத்த என்னிடம் வசதியும் இல்லை.’’‘‘ஜனங்க டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் பக்கம் போவதைத்தான் விரும்பறாங்க.’’‘‘என்ன செய்ய? ஒரே கூரையின் கீழ் எல்லாம் பொருளும் கிடைப்பத்தைத்தான் விரும்பறாங்க. கேட்டால், Ôடெக்னாலஜி டெவல்ப்மென்ட்’னு சொல்றாங்க. நாம எங்கே போய் டெவலப் செய்வது?’’ பெருமூச்செறிந்தார்.‘‘அதுக்காக சோர்ந்து போய் இருந்து என்ன செய்ய?’’‘‘என்னை என்ன செய்யச் சொல்றே?’’‘‘ஏதாவது ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோருக்கு கணக்கு எழுதப் போலாமே?’’‘‘அதையும் கேட்டுப் பார்த்துட்டேன்.’’‘‘என்ன சொன்னாங்க?’’‘‘முன்னே மாதிரி மளிகைக்கடையில் கணக்கு எழுதும் வேலையெல்லாம் இல்லை.’’‘‘பின்னே?’’‘‘எல்லாம் கம்ப்யூட்டர் பில்லிங் சிஸ்டம். அதுக்கு சின்ன வயசு பசங்க, பொண்ணுகளைத்தான் வேலைக்கு வச்சுக்கிறாங்க. நான் போய் கேட்டதுக்கு Ôஎடுபிடி வேலை வேணா போட்டுத்தர்றேன்’னு சொல்றாங்க.’’‘‘என்னங்க இது?’’‘‘ஆமாம்... என்னதான் Ôசில்வர் ஜூப்ளி’ ஹீரோவா ஒருத்தன் ஒரு காலத்தில் சினிமா துறையில் ஜெயித்திருந்தாலும் வயசாகிப் போயிட்டால் அப்பா வேஷம், தாத்தா வேஷம்தான் தருவாங்க. அதை நாம எதார்த்தமா எடுத்துக்கணும்.’’‘‘காலம் மாறிப் போச்சுங்க!’’‘‘காலம் மாறலை. சிஸ்டங்கள் மாறிப் போச்சு. நாம அதுக்குத் தகுந்த மாதிரி அப்டேட் ஆகியிருக்கணும். என்ன செய்ய? இனியெல்லாம் ஒரு வேலைக்குப் போனால் நாம வயிறு கழுவத்தான் சம்பளம் கிடைக்கும். பொண்ணுக்கு நகையெல்லாம் போட முடியாது.’’‘‘அப்போ என்ன செய்யலாம்?’’ராஜாராம் ஒரு நிமிஷம் மௌனமாக இருந்தார். தேவிகா விடவில்லை.‘‘என்னங்க பதிலையே காணோம்?’’‘‘நானும் சும்மா இல்லை. இந்தப் பிரச்னை குறித்து நானும் பல நாட்களா யோசனை பண்ணிட்டுத்தான் இருந்தேன். அதற்கும் ஒரு முடிவு எடுப்பதா இருக்கேன்.’’‘‘என்ன முடிவு?’’தேவிகா எப்படி எடுத்துக்கொள்வாளோ என்ற தயக்கத்துடனே சொன்னார்.‘‘ஊரிலிருக்கும் வயலும் விற்க மாட்டேங்குது. பேசாமல் வீட்டை விற்று விடலாம்.’’தேவிகா ஒரு நொடிப் பொழுது அதிர்ந்து போனாள். ஏறக்குறைய அலறிவிட்டாள்.‘‘எ... என்னங்க சொல்றீங்க? காலகாலமா குடியிருந்த வீட்டை விற்பதா?’’‘‘வேற வழி?’’‘‘அவசரப்பட்டு வீட்டை விலைக்குக் கொடுத்துட்டு நாம வீதிக்குக் குடி போவதா? இன்னும் சின்னவள் படிச்சிட்டு இருக்கா. வயசுப் பொண்ணை அழைச்சிட்டு எங்கே போவது?’’‘‘வாடகை வீடு பார்த்து போயிடலாம்.’’‘‘வயசுப் பொண்ணை அழைச்சிட்டு எப்படிங்க வாடகை வீட்டுக்குப் போறது?’’‘‘வயசுப் பொண்ணை வச்சிருக்கிறவங்க எல்லாம் சொந்த வீட்டில்தான் இருக்காங்களா?’’‘‘என்னங்க... விரக்தியா பேசறீங்க?’’‘‘வேற வழி? பொண்ணைப் பெற்ற ஒவ்வொரு தகப்பனும் நேர்மையான வழியில் வாழ்ந்தால் இப்படி விரக்தியில் பேசிட்டிருக்க வேண்டியதுதான். இன்றை தேதியில் பவுன் விற்கிற விலையில் எப்படிச் சம்பாதித்து நகை போட முடியும்?’’தேவிகா யோசித்தாள். கணவன் சொல்வதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்தது. ஒரு குடும்பத்தலைவன் சுமக்கக்கூடிய அளவு சுமைதான் சுமக்க முடியும். அளவுக்கு மீறினால் எந்த வண்டியாக இருந்தாலும் அச்சு ஒடிந்து போகும். அதற்கு ஒரே வழி சுமையை குறைக்கப் பார்ப்பதுதான். பாரம் குறைந்தால் வண்டி நல்லபடி நகரும். ஒரு முடிவுக்கு வந்தாள்.‘‘சரிங்க... ஒரு நல்ல விலை கிடைச்சால் வீட்டை விற்றுவிடலாம். வினிதாவுக்கு சொன்ன நகைப் போட்டுவிடலாம். வாடகைக்கு ஒரு வீடு பார்த்து போய்விடலாம்.’’முடிவு எடுத்தார்கள். வீட்டை விற்பதற்காக தரகரை அணுகினர் ராஜாராம். தினசரி செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தார்.அந்த வீட்டை வந்து பார்த்தவர்களெல்லாம் அடிமாட்டு விலைக்குக் கேட்டனர். அந்த ஏரியாவில் நிலவும் மார்க்கெட் நிலவரத்திற்கு யாரும் நெருங்கிக்கூட வரவில்லை.ஒவ்வொருத்தரும் ஒரு விளக்கம் கொடுத்தனர்.‘‘வீடு வாஸ்துப்படி இல்லை. இந்த வீட்டை வாங்கினாலும் இன்றைய வாஸ்து சாஸ்த்திரப்படி மாற்றி அமைக்கணும். அதுக்கே நிறைய செலவாகும்.’’‘‘வீடு ரொம்பவும் பழைய கட்டடம் சார். வீட்டை வாங்கியப் பிறகு மொத்தமும் இடிச்சுத் தள்ளிட்டு புதுசாகத்தான் கட்டணும். காலி மனைக்கான விலைதான் கொடுக்க முடியும். வீடு வேஸ்ட்.’’ஒவ்வொருத்தரும் ஒரு கருத்தைச் சொல்லி, அந்த வீட்டின் மதிப்பை தரை மட்டதிற்குக் கொண்டு வந்தனர்.ராஜாராம் குழம்பிப் போனார். நாம் குடியிருக்கும் இந்த வீடு அவ்வளவு மோசமாகவா இருக்கிறது?வாழ்க்கை சொல்லித் தரும் பாடம் மிகப் பெரியது. எந்த நூலும் அதற்கு ஈடு கிடையாது. நல்லவனாக இந்தச் சமுதாயத்தில் வாழ்ந்தால் மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும்.தன் வீட்டுக்கு ஏன் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் விலை கொடுக்க மறுக்கிறார்கள் என்ற விவரம் புரியாமல் அலைந்த ராஜாராமுக்கு வீட்டுத்தரகர் ஒருவர் மூலம்தான் உண்மை நிலவரம் புரிந்தது.‘‘என்ன சார்... உங்க வீட்டை என்ன காரணம் சொல்லி விற்கிறதா சொன்னீங்க?’’‘‘என்னோட பெரிய பொண்ணுக்கு நகை போட கையில் காசில்லை. கல்யாணத்துக்கு வெளியில் வாங்கிய கடனும் இருக்குன்னு சொன்னேன்.’’‘‘அங்கேதான் நீங்க தப்பு செய்துட்டீங்க.’’‘‘என்ன சொல்றீங்க?’’‘‘கடன்ல மூழ்கிப்போன குடும்பத்தோட சொத்து எப்படியும் அடி மாட்டு விலைக்குப் படியும்னு முடிவு கட்டிடுவாங்க. அதுக்கு அப்புறம் விலை ஏறவே விடமாட்டாங்க.’’‘‘உண்மையாவா?’’‘‘நீங்க ஆரம்பித்திலேயே தப்பு செய்துட்டீங்க.’’‘‘புரியலை...’’‘‘இந்த வீட்டை வித்துட்டு வேறு புது வீடு வாங்கப் போறேன். நல்ல விலை கிடைச்சால் மட்டும்தான் விற்பேன்னு ஆரம்பத்திலேயே நீங்க சொல்லியிருக்கணும். அங்கேயே நீங்க கோட்டை விட்டுட்டீங்க.’’‘‘இனி விற்கவே முடியாதா?’’‘‘விற்கலாம்... கொஞ்சம் பொறுமையா இருங்க.’’‘‘எவ்வளவு காலம்?’’‘‘சுமார் ரெண்டு மாசம் போகட்டும். இனி யாருக்கும் வீட்டை காண்பிக்க வேண்டாம்.’’‘‘அப்புறம்?’’‘‘உங்களைப் பார்த்தால் ரொம்பவும் நல்லவரா இருக்கீங்க. அதனால் என் மனசுக்குத் தோன்றியதை சொல்றேன். இதுதான் வியாபார அணுகுமுறை.’’‘‘சொல்லுங்க...’’‘‘ஊரிலுள்ள வயலை வித்துட்டேன். அதை வச்சு கடன் பிரச்னையெல்லாம் முடிச்சுட்டேன். இனி நல்ல விலை கிடைச்சால்தான் மட்டும்தான் வீட்டை விற்பேன்னு கொஞ்சம் காலம் கடத்திச் சொல்லுங்க. விலை கிடைக்க வழி உண்டு!’’அந்தத் தரகர் சொன்னதை வைத்துப் பார்த்தால், வீடு சுலபத்தில் விலை முடியாது என்பது மட்டும் புரிந்தது.ராஜாராம் மனதளவில் துவண்டுப் போனார்.சொன்னபடி வினிதாவுக்கு எப்படி நகையைப் போடுவது?.4ஒரு தொழில் முடங்கிப் போனால் அந்தக் குடும்பத்திற்கு வருமானம் நின்று போகும்.வருமானம் இல்லையென்றால், பொருளாதாரம் நசிந்துவிடும்.பொருளாதாரம் இல்லையென்றால் யாருடைய ஆதரவும் கிடைக்காது. ஊரும் உறவும் விலகிப்போகும்.அப்படித்தான் இங்கும் உறவுகள் விலகிப்போயின. எந்தவொரு பிரச்னையென்றாலும் ராஜாராமும் தேவிகாவும் தனித்தீவில் நின்று போராடும் நிலை உருவாயிற்று.ராஜாராம் சொன்னதைக் கேட்டு தேவிகா அதிர்ந்து போனாள்.‘‘என்னங்க... வீட்டை இப்போதைக்கு விற்க முடியாதா?’’‘‘சூழ்நிலை அப்படித்தான் இருக்கு தேவி. நாம நினைக்கிற விலைக்குப் போகாது போலிருக்கு. மீறி விற்றால் நஷ்டம் ஏற்படும் போலிருக்கே!’’தேவிகாவின் முகத்தில் கவலை மேகம் தவழ்ந்தது. அந்தக் கவலை வார்த்தைகளில் வெளிப்பட்டது.‘‘என்ன செய்யலாங்க? வினிதாவுக்கு எப்படி நகைப் போடுவது?’’‘‘அதுதான் ஒன்றும் புரியலை.’’‘‘அப்புறம் எப்படி நாம சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவது?’’தேவிகாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனமாகிப் போனார் ராஜாராம்.‘‘என்னங்க... மௌனமா இருக்கீங்க? நான் எதுவும் தப்பா கேட்டுவிட்டேனா?’’‘‘இல்லை தேவி. நீ எதுவும் தப்பா கேட்கலை. வினிதா வாழ்க்கையைப் பொருத்தவரை நான் தப்பான முடிவை எடுத்துட்டேன்.’’‘‘அதை இனி பேசி ஆக வேண்டியது எதுவுமில்லைங்க. நடக்கப் போற விஷயத்தைப் பற்றி பேசுவோம்.’’நீண்ட நேர யோசனைக்குப் பிறகு ராஜாராம் ஒரு முடிவுக்கு வந்தார்.‘‘தேவி... ஒரு யோசனை சொல்றேன்... சரியா வருமா?’’‘‘ம்ம்... சொல்லுங்க...’’‘‘கந்து வட்டிக்குப் பணம் வாங்கலாம். மாசா மாசம் வட்டியைக் கட்டிட்டு வரலாம். வீடு எப்போ விலைக்குப் போகுதோ அப்போ கடனை முழுசா கட்டிட்டு வெளியில வந்திடலாம்.’’‘‘கந்து வட்டிக்கும் மீட்டர் வட்டிக்கும் கடன் வாங்கினால் திருப்பிக் கட்ட முடியுமா? வட்டிக்கு மேல் வட்டியைப் போட்டு நம்ம மானம், மரியாதையெல்லாம் காற்றில் போகும்படி ஆகிடும். அவசரப்பட வேண்டாம்.’’தேவிகா சொல்லவும், ராஜாராமுக்கு ஒருவித அச்சம் ஏற்படத்தான் செய்தது. என்றாலும், அவருக்கும் வேறுவழி புலப்படவில்லை.மிகவும் வருத்தமான குரலில் சொன்னார்: ‘‘கந்து வட்டி என்பது மிகவும் தவறான போக்குத்தான். அப்புறம் என்ன செய்ய? நம்ம மானம் போயிடும்னு பயப்பட்டால் வினிதாவின் வாழ்க்கையே போயிடும் போலிருக்கே!’’‘‘எதற்கும் அவசரப்பட வேண்டாம். கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்.’’எந்த வழியும் தெரியவில்லை. ஒரு புறம் பணம் பற்றாக்குறை. மறுபக்கம் வினிதாவின் புகுந்த வீட்டில் நகை கேட்டு நிர்ப்பந்தம்.உரலுக்கு ஒரு பக்கம் இடி. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்ற கதையாக இருந்தது.மனம் பாரமாக கிடந்து தவித்தது. தீர்வுக்கான வழி தெரியவில்லை.பணத்துக்காக ராஜாராம் எடுக்காத முயற்சி இல்லை. பணம் புரளவில்லை.நாட்கள் நகர்ந்தன.வினிதாவிடமிருந்து போன் வந்தது.அந்த போனை பார்த்ததும் தேவிகாவுக்கு உடல் முழுக்க பயத்தால் வியர்த்து கொட்டியது. ஒரே படபடப்பாக இருந்தது.ராஜாராம் வேறு வீட்டில் இல்லை. சங்கவியும் கல்லூரிக்குப் போய்விட்டாள்.தேவிகா தனியாக இருந்தாள்.கடவுளே வினிதாவுக்கு எதுவும் விபரீதமாக நடந்திருக்கக் கூடாது.போன் தொடர்ந்து அலறவும் ஒருவித தயக்கத்துடன் போனை எடுத்தாள் தேவிகா.‘‘அம்மா... நான் வினி பேசறேன்...’’‘‘சொல்லும்மா... எப்படி இருக்கே?’’‘‘நான் நல்லா இருக்கேன். என்னம்மா... நகைக்கு எதுவும் முயற்சி செய்தீங்களா?’’‘‘அப்பாவும் பணத்துக்காக அலையறார். பணம் கிடைக்க மாட்டேங்குது வினி...’’‘‘அப்புறம்?’’‘‘நம்ம வீட்டைகூட விற்றுவிடலாம்னு முயற்சி செய்து பார்த்துட்டோம். விலை படியவில்லை.’’மறுமுனையில் வினிதா அதிர்ந்து போனாள்.‘‘எ... என்ன... வீட்டை விற்கப் போறீங்களா?’’‘‘எங்களுக்கு வேறு வழி தெரியலை.’’‘‘இது என்ன பைத்தியக்காரத்தனம்? வீட்டை வித்துட்டு நீங்க எங்கே போவீங்க?’’‘‘வாடகை வீடு பார்த்து போயிடலாம்னு இருக்கோம்.’’‘‘நல்லா இருக்கு நீங்க சொல்லும் நியாயம்! அம்மா... என் ஒருத்திக்காக நீங்க, அப்பா, சங்கவி எல்லோரும் நடுத்தெருவுக்கு வரப் போறீங்க... அப்படித்தானே?’’தேவிகாவால் பதில் சொல்ல முடியவில்லை.‘‘என்னம்மா... பதிலையே காணோம்?’’‘‘பதில் சொல்ல தெரியலை வினி...’’‘‘சரிம்மா. அவசரப்பட்டு வீட்டை விற்க வேண்டாம். கொஞ்சம் பொறுங்க. பிறகு பார்க்கலாம். சங்கவியும் நல்லா படிக்கிறாள். அவளாவது ஒரு நல்ல வேலைக்குப் போகட்டும். ஒழுக்கமான பொண்ணு... அவள் வாழ்க்கை நல்லா அமையணும். அதுக்கு வீடு இருக்கட்டும்.’’சங்கவி மேல் வினிதாவுக்கு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.தங்கை ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது வினிதாவின் ஆசை.திரும்பவும் தீர்மானமாகச் சொன்னாள் வினிதா: ‘‘அம்மா... வீட்டை விற்க வேண்டாம்.’’‘‘அப்புறம் எப்படி நாங்க பணம் பண்ண முடியும்?’’‘‘கொஞ்சம் யோசிக்கலாம்.’’‘‘அதுவரை உங்க மாமியார் பொறுத்துக்க மாட்டாங்களே?’’‘‘என் வீட்டுக்காரரிடம் பேசிப் பார்க்கிறேன்.’’‘‘ஒப்புக்கொள்வாரா?’’‘‘பேசிப் பார்க்கிறேன். என்ன பதில் சொல்லப் போறார்னு பார்க்கலாம்.’’சொல்லிவிட்டு பதிலைக்கூட எதிர்பார்க்காமல் போனை வைத்துவிட்டாள் வினிதா.குடும்பத்தில் அத்தனை விஷயங்களையும் புரிந்து கொண்ட சங்கவி விடவில்லை. தேவிகாவைப் பிடித்துக் கொண்டாள்.‘‘என்னம்மா பிரச்னை? வினிதா அக்காவுக்கு போட வேண்டிய நகையைப் போடாமல் விட்டதால் பிரச்னையா?’’‘‘நீ சின்னப் பொண்ணு. உனக்கு எதற்கு இந்தப் பிரச்னை எல்லாம்? நீ படிக்கிற வேலையைப் பார். படிப்பு கெட்டுப்போகும்.’’சங்கவி விரக்தியாகச் சிரித்தாள்.‘‘ஏன் சங்கவி சிரிக்கிறே?’’‘‘அக்காவையும் மேல படிக்க வைக்காமல் கட்டிக் கொடுத்துட்டீங்களே. அக்காவும் படிச்சிருந்தால் தன்னோட சொந்தக்காலில் நின்றிருப்பாள் இல்லையா?’’‘‘அதுதான் தப்புப் பண்ணிட்டோம். அந்தத் தப்பும் காலம் கடந்துதான் புரியுது!’’‘‘நீங்க செய்த தப்புக்கு அக்காவை நல்லா வாழ வழி செய்து கொடுக்கணும்.’’‘‘நீ சின்னப்பொண்ணு. இதிலெல்லாம் மனசை கெடுத்துக்காதே!’’‘‘நான் இந்த வீட்டுக்குச் சின்னப்பொண்ணுதான். அதுக்காக சின்னப் பாப்பா இல்லை. நம்ம குடும்பத்தில் நடக்கிற எல்லா விஷங்களிலும் எனக்கும் சம பங்கு இருக்கு!’’‘‘அதை நாங்க பார்த்துக்கிறோம்.’’‘‘இல்லேம்மா... அப்படிச் சொல்லாதீங்க. எனக்காக அக்கா எத்தனையோ விட்டுக் கொடுத்திருக்கா. விளையாட்டில்கூட நான் தோற்று விடக்கூடாதுன்னு விட்டுக்கொடுத்திருக்கா. தான் போட்டிருக்கிற துணியில் எது நல்லா அழகாக இருக்கோ அதை எனக்குப் போட்டு அழகு பார்த்திருக்கா. அக்காவுக்காக நீங்க என்ன வேணாலும் செய்யுங்க. இந்த வீட்டை விற்றுக்கூட சீர்வரிசையை செய்யுங்க!’’சங்கவியின் தோளை ஆதரவாகத் தொட்டாள் தேவிகா.‘‘உன்னோட விருப்பப்படியே செய்திடறோம். கவலைப்படாதே சங்கவி.’’எந்தவொரு வழியிலாவது, எப்பாடுபட்டாவது வினிதாவின் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொடுத்தாக வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் ஆழமாக பதியம் போட்டாள் சங்கவி.அக்கா என்றால் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும்.Ôயாரால் உதவி கிடைத்தாலும் வினிதா அக்காவின் வாழ்க்கையில் சந்தோஷத்தை அமைத்துக் கொடுத்தாக வேண்டும். அது எந்த விதத்தில் சாத்தியப்படும்?’ யோசித்தாள் சங்கவி. .5அந்த ரெஸ்டாரண்டில் அதிகக் கூட்டமில்லை. சங்கவியும் வஸந்தும் எதிரும் புதிருமாக உட்கார்ந்திருந்தனர். பேரர் வைத்து விட்டுப்போன ஐஸ்க்ரீம், ஏ.சி. அறை என்றும் பாராமல் உருகிக் கொண்டிருந்தது.வஸந்தின் மனமும் சங்கவியைப் பார்த்து உருகிக் கொண்டிருந்தது.சங்கவியின் கையை மெல்லப் பிடித்து வருடினான் வஸந்த். சங்கவியின் கரங்கள் நடுங்கின. உடல் முழுக்க குப்பென்று வியர்த்துக் கொட்டியது.கையை வஸந்திடமிருந்து மெல்ல விடுவித்துக் கொண்டாள் சங்கவி.சங்கவி அழகு பதுமை! எந்த ஆடவனையும் ஒரு நிமிஷம் தடுமாறச் செய்யும் வசீகர முகம்!‘‘என்ன சங்கவி... உடம்பெல்லாம் வியர்த்து ஊற்றுது? கையெல்லாம் வெடவெடனு நடுங்கிட்டிருக்கு?’’சங்கவியின் குரலிலும் அந்தப் பயம் வெளிப்பட்டது-.‘‘பயம். மனசெல்லாம் ஒரே படபடப்பா இருக்கு. ஒருவித குற்ற உணர்ச்சி ஆளை வந்து கொல்லுது.’’‘‘எதுக்கு?’’‘‘தப்பு செய்யறமோன்னு ஒரு எண்ணம். வீட்டில் என்னை நம்பி காலேஜுக்கு அனுப்பறாங்க. நான் என்னடானா இங்க வந்து உங்களோடு ஊர் சுத்திட்டிருக்கேன்.’’‘‘காதலில் இதுதான் இன்பம்.’’‘‘எது?’’‘‘வீட்டுக்குத் தெரியாமல் இப்படித் திருட்டுத்தனமா சந்திக்கிறது. இப்படி சின்னச் சின்ன சில்மிஷம் செய்வது.’’சொல்லிக்கொண்டே சங்கவியின் விரல்களைப் பிடித்து அழுத்தினான் வஸந்த்.பட்டென்று தன்னுடைய கரங்களை மீண்டும் விலக்கிக் கொண்டாள் சங்கவி.‘‘இப்படியெல்லாம் அத்துமீறினால் அசிங்கமா இருக்கு.’’‘‘என்ன... நீ எதுக்குமே ஒத்து வர மறுக்கிறே? ஸ்கூலில் நீ படிக்கும் காலத்திலிருந்து உன்னை மூன்று வருஷமா பின் தொடர்ந்து வந்தேன். விரட்டி விரட்டிப் பார்த்துட்டேன். என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கவே பெரும்பாடா போச்சு.’’‘‘எங்க குடும்பச் சூழ்நிலை அப்படி!’’‘‘அப்படியென்ன சூழ்நிலை?’’வஸந்த் கேட்கவும், சங்கவி யோசித்தாள்.இவனிடம் அவசரப்பட்டு எல்லா விஷயத்தையும் சொல்லலாமா? வேண்டாமா? வஸந்தை நேருக்கு நேர் பார்க்க இயலாமல் சங்கவி தலையைக் குனிந்து கொண்டாள்.வஸந்த் விடவில்லை. திரும்பவும் கேட்டான். அடுத்தவர்களின் ரகசியத்தைத் தெரிந்து கொள்வதில் யாருக்குமே ஒரு அலாதி ஆர்வம்!‘‘என்ன பிரச்னை?’’சங்கவி பேசவில்லை.அவளுடைய அந்த மௌனம் வஸந்துக்கு சங்கடமாய்ப்பட்டது.‘‘என்னிடம் சொல்ல விருப்பமில்லைனா பரவாயில்லை. சொல்ல வேண்டாம். நானொரு அந்நியனா உனக்குத் தோன்றினால் எதையும் சொல்ல வேண்டாம்.’’‘‘நீங்க அந்நியன் இல்லை.’’‘‘பின்னே?’’‘‘சிநேகிதன்.’’‘‘சிநேகிதன் மட்டும்தானா?’’‘‘ஆமாம்! அப்புறம்?’’‘‘காதலன் இல்லையா?’’‘‘அதை இன்னும் தீர்மானமா என்னால் முடிவு செய்ய முடியலை.’’வஸந்துக்கு பொசுக்கென்று போனது.புன்னகைத்தான்.‘‘உன்னை சிநேகிதியா மாற்ற மூன்று வருஷம். இனி என்னோட காதலியா மாற்ற ஆறு வருஷம் ஆகுமா?’’‘‘தெரியலை!’’‘‘அட, நீ இன்னும் குழந்தையாவே இருக்கியே?’’‘‘என்ன சொல்றீங்க?’’‘‘உன்னை எப்போ தேற்றி, என்னோட லைனுக்கு கொண்டு வருவது?’’‘‘புரியலை.’’‘‘நான் மனசார உன்னை காதலிக்கிறேன். நீ விலகிப்போகப் பார்க்கிறே?’’சங்கவி பதில் பேசவில்லை. ஒருவித பதற்றத்துடனே இருந்தாள்.‘‘உனக்கு என்னதான் பிரச்னை?’’‘‘எனக்கு நட்பா பழகப் பிடிக்குது. இந்தக் காதலெல்லாம் வேண்டாமே!’’‘‘நட்புக்கும் காதலுக்கும் ஒரு நூலிழை இடைவெளிதான். அந்த இடைவெளியைக் குறைச்சிக்கலாமே!’’‘‘வேண்டாம். எனக்கு என்னவோ ஒரு குற்ற உணர்ச்சி வந்து முள் மாதிரி தொண்டையில் குத்தி ரணப்படுத்துற மாதிரி இருக்கு.’’‘‘உனக்கு என்னதான் ஆச்சு? பிரச்னைதான் என்ன?’’‘‘எங்க அக்கா வீட்டில் ஒரே பிரச்னை.’’சங்கவியின் வாயைக் கிளறக் கிளற ஒரு அவசரத்தில் சொல்லிவிட்டு, பிறகு நாக்கைக் கடித்துக் கொண்டாள்.Ôசொல்லியிருக்கக் கூடாதோ?’வஸந்த் விடவில்லை. பிடித்துக் கொண்டான்.‘‘என்ன பிரச்னை? சொல்லு... எதுனாலும் சரி பண்ணிடலாம்!’’‘‘உண்மையாவா? எதுனாலும் சரி பண்ணிடலாமா? எப்படி உங்களால முடியும்?’’ வியப்பு மேலோங்க கேட்டாள்.‘‘உண்மையாவே சரி பண்ணிடலாம்.’’‘‘அதான்... எப்படினு சொல்லுங்க...’’‘‘முடியும்! சொன்னால் நம்பு...’’‘‘இதை மட்டும் நீங்க முடிச்சுக் கொடுத்துட்டால் நீங்க என்ன சொன்னாலும் செவேன்.’’‘‘உண்மையாவா?’’‘‘சத்தியமா? எனக்கு எங்க அக்கா நல்லா இருக்கணும். அது போதும்! எங்க அப்பா, அம்மா எவ்வளவோ முயற்சி செய்தும் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கலை.’’‘‘எதுக்கும் ஒரு தீர்வு இருக்கு. உனக்காக எதையும் செய்ய நான் தயார்!’’‘‘அதுதான் எப்படி?’’‘‘எங்க அப்பா அரசியலில் பெரும்புள்ளி. ஒருமுறை மந்திரியாவே இருந்திருக்கார். மேல் மட்டத்தில் எல்லாரையும் தெரியும். போலீஸில் நல்ல செல்வாக்கு இருக்கு. தாதா கோஷ்டி வேணாலும் கைவசமிருக்கு. ஒருத்தனை சாட்சி, சம்பிரதாயமில்லாமல் தூக்கிட்டு வர முடியும்! உங்க அக்கா வீட்டுக்காரனை தூக்கிடலாமா?’’சங்கவி மிரண்டு போய் வஸந்தைப் பார்த்தாள்.‘‘என்ன சொல்றீங்க?’’‘‘உங்க மச்சானை உயிருடன் தூக்கி வரலாமா? இல்லே... உயிரை பறிச்சிட்டு உடலை மட்டும் தூக்கிடலாமா?’’சங்கவி ஒருவித கலவரத்துடன் மறுத்தாள்.‘‘அதெல்லாம் வேண்டாம். எங்க அக்காவை வச்சு அவர் ஒழுங்கா குடும்பம் நடத்தினால் போதும்!’’‘‘அவ்வளவுதானே உன்னோட ஆசை?’’‘‘கண்டிப்பா.’’‘‘செய்துடலாம். உங்க அக்கா வீட்டுக்காரர் கேட்ட நகையும் போட்டுடலாம்!’’‘‘சாத்தியப்படுமா?’’‘‘சத்தியமா சாத்தியப்படும்!’’‘‘அதுக்கு நான் என்ன செய்யட்டும்? எதுனாலும் எங்க அக்கா நல்லா இருக்கணும்.’’‘‘உங்க அக்காவுக்காக எதையும் செய்வியா?’’‘‘நிச்சயமா!’’‘‘அப்போ என்னோட காதலை ஏற்றுக்கொள்.’’சங்கவி மௌனமாகிப் போனாள்.அதற்கு என்ன பதில் சொல்வது என்று தோன்றவில்லை. குழம்பிப் போனாள்.வினிதா அக்காவின் வாழ்க்கை நல்லா இருக்க வேண்டும்.நகை, நகை என்று நச்சரிக்கும் வினிதாவின் மாமியார் முகத்தில், கேட்ட நகையை கொண்டுப் போய் வீசிவிட்டு வர வேண்டும்.இன்றை நாளில் அப்பாவுக்கு தொழில் நசிந்து போயிருக்கும் சூழ்நிலை. அவ்வளவு நகை வாங்க பணமில்லை.வினிதா அக்காவை வாழவைக்க வேண்டும். நான் போகும் பாதை சரியானதா?சங்கவியால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.‘‘என்ன சங்கவி... பதிலையே காணோம்? இன்னுமே என்னை நம்பவில்லையா?’’‘‘நம்பறேன்... சத்தியமா நம்பறேன்!’’‘‘அப்புறம் என்ன?’’சங்கவி சற்று தயங்கினாள். அக்கா வினிதாவின் வாழ்க்கையில் ஒரு விடியல் பிறக்கப் போகிறது.அதனால் அப்பா, அம்மாவின் பிரச்னை ஒரு முடிவுக்கு வரப்போகிறது.எல்லாம் ஒரு சுமூக நிலைக்கு வந்தால் நல்லது.எப்படியும் வஸந்த் உதவி செய்வதாகச் சொல்கிறான். நம்பிக்கை ஏற்பட்டது.‘‘என்ன சங்கவி யோசனை?’’‘‘ஒண்ணுமில்லை.’’‘‘உங்க அக்காவுக்கு ஒரு நல்லது நடக்கணுமா? வேண்டாமா?’’‘‘நல்லது நடக்கணும். எங்க அக்கா நல்லவிதமா வாழணும்!’’‘‘அப்போ ஒரு நல்ல பதில் சொல்லு...’’வினிதாவின் பிரச்னையை மையப்படுத்தி சங்கவியை பணயமாக்கும் முயற்சி.கடைசியில் வஸந்த் வெற்றி பெற்றான்!சங்கவி தயக்கத்துடன் சொன்னாள்: ‘‘உங்களை விரும்பறேன்... மனசார விரும்பறேன்!’’சொல்லிவிட்டு தலையைக் குனிந்து கொண்டாள் சங்கவி.‘‘இதை... இதைத்தான் எதிர்பார்த்தேன் சங்கவி... கவலைப்படாதே! எதுனாலும் எதிர்கொள்வோம்.’’அவனுடைய வார்த்தைகள் சங்கவியின் மனதில் மேலும் நம்பிக்கையைக் கொடுத்தன.அவளைப் பொருத்தவரை வினிதாவுக்காக வளைந்து கொடுத்தாள்.அந்தவொரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சங்கவியை தன்னுடைய வலையில் விழவைத்தான் வஸந்த்.அதுதான் சாதுர்யம்! ஒரு பெண்ணின் வீக்னஸை, அவளுடைய இயலாமையைப் பயன்படுத்தித்தான் நிறைய ஆண்கள் தங்களுடைய தேவையை அவளிடம் பூர்த்தி செய்துகொள்கின்றனர்.பெண்களில் ஒரு இயலாமை சில ஏமாற்று பேர்வழிகளுக்கு தங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துகொள்ள சாதகமாகிவிடுகிறது.இந்த உறவால் சங்கவிக்குப் பாதகமா? சாதகமா? என்று விளங்கவில்லை..6எந்தவொரு பிரச்னையையும் தள்ளிப்போடுவதும் தவறு. அந்தப் பிரச்னையைக் கண்டு விலகிப்போவதும் தவறு. அந்தப் பிரச்னை நீண்டு கொண்டே போகும். அதற்கு ஒரே தீர்வு அந்தப் பிரச்னையை எதிர்கொள்வது மட்டுமே! அதனால் வரக்கூடிய விளைவுகளை எதிர்கொள்வது. அந்த விளைவுகளிலிருந்து விடுபட்டு வெளியில் வருவது. அல்லது அந்த விளைவுகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பது. ஒரு பிரச்னையைக் கண்டு முடங்கிப்போய் விடக்கூடாது.வினிதா அந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடிவு செய்தாள்.சுற்றி வளைத்து அந்தப் பிரச்னையைக் கொண்டு போக விரும்பவில்லை. நேரடியாக எதிர்கொள்ள தயாரானாள்.Ôசாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே நல்லது’ என ஒரு முடிவுக்கு வந்தாள்.கார்த்திகேயனை அணுகினாள்.‘‘என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்.’’‘‘சொல்லு...’’எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் கேட்டான்.அவனுடைய குரலில் ஒரு அலட்சியம் தொனித்தது.பெரும்பாலும் Ôகணவன்’ என்ற அங்கீகாரம் வந்துவிட்டால் மனைவியை அலட்சியப்படுத்த வேண்டும். அல்லது அசிங்கப்படுத்த வேண்டும். அப்பொழுதான் அந்தக் Ôகணவன்’ என்ற ஸ்தானத்திற்கு ஒரு மதிப்பு, மரியாதை!வினிதாவின் மனசுக்குள் ஒரு பயம். என்றாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள்.வார்த்தைகளை மிகவும் கவனமாக பிரயோகித்தாள்.‘‘நம்ம கல்யாணத்தின்போது எங்க அப்பா போடுவதாக சொன்ன நகையை அவரால் இப்போதைக்குப் போட முடியாது போலிருக்கு.’’வினிதாவை மிக நிதானமாகப் பார்த்தான் கார்த்திகேயன். பதில் பேசவில்லை.‘‘என்னங்க... மௌனமா இருக்கீங்க?’’‘‘அதுக்கு என்னைய என்ன செய்யச் சொல்றே?’’‘‘எங்க அப்பாவுக்கு கொஞ்சம் பணக்கஷ்டம்.’’‘‘அதுக்கு?’’‘‘அவங்க குடியிருக்கிற வீட்டை விற்றாவது நகையை வாங்கிக் கொடுத்திடலாம்னு நினைச்சிருக்காங்க.’’‘‘சரி!’’‘‘வீட்டைகூட விற்க முயற்சி செய்துட்டிருக்காங்க.’’‘‘விற்க வேண்டியதுதானே?’’‘‘ஆனால், அந்த வீட்டுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கலை போலிருக்கு.’’‘‘கிடைச்ச விலைக்கு விற்க வேண்டியதுதானே?’’அந்தக் கேள்வியைக் கேட்டு வினிதா அதிர்ந்து போனாள்.‘‘என்னங்க... ஒரு நல்ல வீட்டை எப்படிங்க அடிமாட்டு விலைக்குக் கொடுக்க முடியும்?’’வினிதா அதிர்ந்து போய்க் கேட்டாலும், அதற்கு சற்றும் அலட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னான் கார்த்திகேயன்.‘‘அவசரமான நிலைக்கு அடிமாட்டு விலைக்கே கொடுத்திடலாம். சொன்ன வாக்கைக் காப்பற்றிக்கொள்ள நினைச்சால் எதுனாலும் ஒரு வழியைத் தேடித்தான் ஆகணும்.’’‘‘அப்படியென்ன அந்த நகைக்கு இப்போ அவசரம்?’’‘‘உன்னோட கல்யாணத்துக்கு மட்டும் என்ன இப்போ அவசரம்?’’‘‘என்ன சொல்றீங்க?’’‘‘கல்யாணம் முடிஞ்சதும் மீதி நகையைப் போடுவதாகத்தானே பேச்சு?’’‘‘அதிலென்ன சந்தேகம்? போடுவதாக சொன்னாங்க!’’‘‘அப்போ போட வேண்டியதுதானே?’’‘‘எங்க அப்பா கையில் காசு வச்சிட்டா போடாமல் இருக்காரு? கொஞ்சம் அவகாசம் கொடுங்க. சொன்னது மாதிரி சீர் செய்துடுவாங்க.’’‘‘வக்கில்லாதவன் வீட்டில் பொண்ணு கட்டினால் வாழ்க்கை முழுக்கப் போராட்டம்தான்.’’சுறுக்கென்று வினிதாவின் மனதை அந்த வார்த்தைகள் தைத்தன.‘‘என்னங்க வார்த்தை ரொம்ப தடிக்குது?’’‘‘அப்படித்தான் தடிக்கும். தன்னுடைய மகளை வசதியான வீட்டில் கட்டிக்கொடுக்க உங்க அப்பா ஆசைப்பட்டது தவறு. உங்க தகுதிக்கு ஏற்ற இடமா பார்த்திருக்க வேண்டியதுதானே?’’‘‘முடிவா என்ன சொல்றீங்க?’’‘‘சீக்கிரமா நகையைப் போட சொல்லு.’’‘‘தவறினால்?’’‘‘நீ வாழாவெட்டியா உங்க வீட்டுக்குப் போக வேண்டிய சூழ்நிலை வரும்.’’அதற்கு மேல் அவனிடம் பேசி எந்தப் பிரயோஜனமுமில்லை என்ற முடிவுக்கு வந்தாள் வினிதா.தன்னை கட்டுப்படுத்திக்கொண்டாள்.வார்த்தைகளை இனியும் விடக்கூடாது.விளைவுகள் வேறு விதமாகப் போய்விடும்.பொறுமையைக் கடைப்பிடித்தாள்.சில நேரங்களில் அந்தப் பொறுமைக்கும் சோதனை வருவது உண்டு. அந்தப் பொறுமையே ஒரு ஆபத்தை விளைவிக்க வாய்ப்பும் உண்டு.ஆபத்து வந்தது!ஒரு சில சமயங்களில் வரும் செல்போனை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கும் மறைவான இடத்துக்கும் சென்று கார்த்திகேயன் பேசினான். அவன் பேசும்போது ஒரு பதற்றமும் பயமும் வெளிப்படுவதாக வினிதாவுக்குத் தோன்றியது.ஆரம்பத்தில் அதை வினிதா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், போகப்போக கார்த்திகேயனின் நடவடிக்கைகளில் ஒரு சந்தேகம் கிளர்ந்தது.நூலிழையாக மனதில் தோன்றிய அந்தச் சந்தேகம், நாளுக்கு நாள் விருட்சமாக துளிர்விட்டது.கார்த்திகேயனை பின் தொடர்ந்தாள்.வினிதாவின் சந்தேகம் வலுப்பெற்றது.அவளுடைய சந்தேகம் வீண் போகவில்லை.கார்த்திகேயன் ரகசியமாகப் பேசுவது ஒரு பெண்ணிடம் என்று புரிந்தது.வினிதா விடவில்லை.கார்த்திகேனை பிடித்துக் கொண்டாள்.‘‘யாருங்க போனில்?’’கார்த்திகேயன் சற்று அதிர்ந்து போனான். என்றாலும், தன்னுடைய அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.சமாளித்தான்.‘‘போனில் பேசுவது யாராக இருந்தால் உனக்கு என்ன?’’‘‘நான் உங்க கையால் தாலி வாங்கிக் கொண்ட பொண்டாட்டி. அதைத் தெரிஞ்சிக்க எனக்கு முழு உரிமை இருக்கு!’’‘‘ஓ... உரிமைக்காக குரல் கொடுக்கறியோ?’’‘‘ஆமாம்! அதுக்கென்ன இப்போ?’’‘‘சரி சொல்றேன். ஆஃபீஸ் ஸ்டாஃப் ரசிகா. கம்பெனி விஷயமா சில சந்தேகம் கேட்பாள். அதுக்கு என்ன இப்போ?’’‘‘ஆஃபீஸ் சந்தேகத்தை எதுக்கு இப்படிச் சந்துக்குள்ளும் பொந்துக்குள்ளும் ஒளிஞ்சு நின்று பேசணும்?’’‘‘வீட்டுக்குள் டவர் கிடைக்கலை. அதான்... அதுக்கு என்ன வேணும்?’’பிரச்னையை அதற்கு மேலும் பெரிதுபடுத்த விரும்பவில்லை.அப்போதைக்கு வினிதா விட்டுக்கொடுத்தாள்.என்றாலும், கார்த்திகேயன் மீது ஒரு சந்தேகக் கண்ணை வைத்தாள்.அந்தச் சந்தேகம் வீண் போகவில்லை.கார்த்திகேயனுக்குத் தெரியாமலே அவனுடைய செல்போனை எடுத்து பார்த்த பொழுதுதான் தெரிந்தது.அவன் சொன்னது அப்பட்டமான பொய் என்று.ரசிகா ஒன்றும் ஆஃபீஸ் ஸ்டாஃப் இல்லை. அவர்கள் இருவருக்குள்ளும் இருப்பது ஒரு நல்ல நட்புமில்லை. ரசிகாவும் கார்த்திகேனும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தன. சில புகைப்படங்களில் அவர்கள் எல்லை மீறி பழகியிருக்கும் ஆபாசமான புகைப்படங்கள்.அவற்றை பார்த்தவுடன் வினிதாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.நெஞ்சில் ஒரு படபடப்பு.இருதயம் தன்னுடைய துடிப்பை துரிதப்படுத்திற்று. உடல் முழுக்க வியர்த்துக் கொட்டியது.‘என் கணவனொரு குடிகாரன் மட்டுமில்லை... பொம்பளை பொறுக்கியும்கூட!’வினிதாவுக்கு நாக்கு வறண்டு போனது.தண்ணீரை குடித்தாள்.அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கார்த்திகேயன் மீது ஒரு ஆத்திரம் ஏற்பட்டது.இனியும் அவனை சும்மா விடக்கூடாது!நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகும்படி அவனை நாலு வார்த்தை கேட்டாக வேண்டும்!கேட்டாள்.‘‘என்னங்க... உங்களை ஒண்ணு கேட்கணும். மறைக்காமல் பொய்ப் பேசாமல் பதில் சொல்லுங்க...’’‘‘கேளு... என்ன கேட்கணும்?’’‘‘ரசிகா உங்க ஆஃபீஸ் ஸ்டாஃபா? ஆசை நாயகியா?’’கார்த்திகேயன் ஒரு நிமிஷம் ஆடிப்போனான்.‘‘உ... உனக்கு என்ன அப்படியொரு கற்பனை?’’‘‘கற்பனை இல்லை. உண்மை என்ன? அவளோடு அப்படியென்ன நெருக்கமான... அசிங்கமான போட்டோஸ்?’’கார்த்திகேயன் பதற்றமடைந்தான். அவனுடைய நெற்றியில் வியர்த்தது. கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான்.‘‘என்னோட செல்போனை எடுத்தியா?’’‘‘ஆமாம்... அதிலென்ன தப்பு?’’‘‘என்னோட செல்போனை எனக்குத் தெரியாமல் எதுக்கு எடுத்தே?’’‘‘அதுக்கு என்ன இவ்வளவு கோபம்? புருஷனோட போனை பொண்டாட்டி எடுக்கக் கூடாது. பொண்டாட்டியோட போனை புருஷன் எடுக்கக் கூடாதுன்னா அப்புறம் என்னங்க வாழ்க்கை?’’‘‘அடுத்தவங்க போனை எடுத்து ஆராய்ச்சி செய்வது அநாகரிகம்.’’‘‘எது நாகரிகம்? பொண்டாட்டிக்குத் தெரியாமல் ஒருத்தியை வைப்பாட்டியா வச்சுக்கிறதா?’’‘‘நான் ஆம்பளை. என்ன வேணாலும் செய்வேன்.’’வினிதா விரக்தியாகப் புன்னகைத்தாள்.‘‘அதேபோல் நானும் வேறு ஒருத்தனோடு படுக்கையை பகிர்ந்துட்டு வந்தால் நீங்க சும்மா இருப்பீங்களா?’’‘‘நாக்கை அடக்கிப் பேசு.’’‘‘இல்லேன்னா?’’‘‘நாக்கை இழுத்து வச்சி அறுத்திடுவேன்.’’‘‘ஓ! ஆம்பளைனா ஒரு நியாயம். பொம்பளைனா ஒரு நியாயமா? என்னால் தாங்கிக்க முடியலை.’’அழுது புலம்பினாள் வினிதா.நியாயம் கிடைக்கவில்லை.விஷயத்தை பாக்யத்தின் காதில் போட்டாள்.‘‘அத்தை... உங்க மகனுக்கு வேறு பெண்ணோடு தொடர்பிருக்கு. அதைக் குறித்து கேட்டால் சண்டைக்கு வருகிறார்.’’பாக்யம் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை.‘‘அதிலென்ன தப்பு? ஒரு ஆம்பளைக்கு எங்கே நிம்மதி கிடைக்குதோ அங்கே போறவங்கதான்.’’வினிதா அதிர்ந்து போனாள்.இந்த உலகத்தில் பெண்ணுக்கு பெண்தான் எதிரி.இந்த வீட்டில் இனி நிம்மதியாக வாழ முடியுமா? ஒரு நிம்மதியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் இருப்பதாகத் தோன்றவில்லை.ஒரு பெண் எத்தனை கஷ்டங்களை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்வாள். சகித்துக்கொள்வாள். ஆனால், தன்னுடைய கணவன் வேறொரு பெண்ணோடு வாழ்க்கையை பகிர்ந்து கொண்டால் சகித்துக்கொள்ள மாட்டாள்.வினிதா நிம்மதியை இழந்தாள்.இந்த வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வந்தாயிற்று. இனி வாழாவெட்டியாக பிறந்த வீட்டுக்குப் போவது சரியில்லை. பிறந்த வீட்டுக்குச் சுமையாக இருக்கக்கூடாது.வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று.நிராயுதபாணியாக நின்றாள்.ஒரு முடிவுக்கு வந்தாள்.இனி உயிருடன் இருப்பது தவறு.செத்துவிடலாம். யாருக்கும் இனி பாரமாக இருக்கக்கூடாது.Ôஎனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. என்னோட சாவுக்கு யாரும் காரணமில்லை. அடுத்த ஜென்மத்தில் எனக்கொரு நல்ல வாழ்க்கை அமைய இறைவனிடம் பிரார்த்தனை வையுங்கள்.’கடிதத்தை எழுதி முடித்தாள்.எந்த வகையில் உயிரை மாய்த்துக்கொள்வது?பேசாமல் தூக்கிட்டுக்கொள்ளலாம்.வீட்டில் யாருமில்லாத நேரத்திற்காக காத்திருந்தாள்.அதற்கான சந்தர்ப்பமும் அமைந்தது.தொழில் விஷயமாக கார்த்திகேயன் வெளியில் போய்விட்டான்.மாமியார் பாக்யம் கோயிலுக்குப் போய்விட்டாள்.யாருமில்லாத நேரம். ஆள் அரவமற்ற தருணம்!சேலையை எடுத்து மின்விசிறியில் தொங்கவிட்டு தூக்கிட்டுக்கொள்ளலாமா?முடிவுக்கு வந்தாள்.அந்தச் சமயத்தில் கைப்பேசி ஒலித்தது.பிருந்தா. அவளுடைய சிநேகிதி.போனை எடுத்தாள் வினிதா.‘‘ஹலோ வினி... எப்படி இருக்கே? எப்படிப் போயிட்டிருக்கு கல்யாண வாழ்க்கை?’’மன இறுக்கமான நேரம். மனசுக்குள் போட்டு பிரச்னையை குழப்பிக் கொண்டிருந்த அந்தத் தருணம். உயிரையே மாய்த்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு பிரச்னையின் உச்சக்கட்டம்.அந்த நேரத்தில் ஒருத்தி, Ôஎப்படியிருக்கே வினி?’ என்று போன் மூலம் கேட்ட கேள்வி ஆறுதலாக இருந்தது.பொசுக்கென்று அழுகை வெளிவர துடித்தது.கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.பேசினால் அழுகை வந்துவிடுமோ என்ற பயம்.பிருந்தா விடவில்லை.‘‘வினி... எப்படியிருக்கே?’’பிருந்தா பள்ளி சிநேகிதி! யூ.கே.ஜி. முதல் ஒரே பள்ளியில் படித்தவள். வினிதாவின் மனசுக்குப் பிடித்தவள். பிருந்தா மிகவும் எதார்த்தமானவள்.அந்தத் தருணத்தில் ஒருத்தி... அதுவும் தன்னுடைய மனதுக்குப் பிடித்தவள் பேசும்போது வினிதாவுக்கு அழுகையே வந்துவிட்டது.வாய்விட்டுக் கதறிவிட்டாள்.அப்படியொரு சூழ்நிலையை பிருந்தா எதிர்பார்க்கவில்லை.அதிர்ந்து போனாள்.சிநேகிதியை சமாதானம் செய்ய முயற்சித்தாள்.‘‘ஏய்... என்ன அழுதுட்டிருக்கே?’’‘‘வா... வாழ்க்கையே வெறுத்துப் போயிருக்கேன். இந்த வாழ்க்கையே எனக்குப் பிடிக்கலை.’’‘‘வினி... கொஞ்சம் அழுகையை நிறுத்திட்டு பேசு. ப்ளீஸ்!’’வினிதா சற்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.‘‘எங்க அப்பா, அம்மா அவசரப்பட்டு எனக்குக் கல்யாணம் செய்து வச்சுட்டாங்க பிருந்தா. புகுந்த வீட்டில் ஒரே டார்ச்சர்.’’என்று ஆரம்பித்து அதுவரை நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் வினிதா.பிருந்தா அதிர்ந்து போனாள்.‘‘அதுக்காக... தற்கொலை செய்துக்க முடிவு செய்துட்டியா? அடிப்பாவி! கொஞ்சம் நிதானமா இரு. பொறுமையா யோசி. ஒரு பிரச்னைக்கு தற்கொலையும் கொலையும் தீர்வு கிடையாது. அதையும் தாண்டி நிறைய இருக்கு.’’‘‘என்ன செய்யட்டும்?’’‘‘முதல்ல தற்கொலை எண்ணத்தை அறவே மறந்துடு. ஃபேனில் மாட்டப்போன சேலையைத் தூக்கி எறி... நீ வீட்டை விட்டு வெளியில் வா... இந்த உலகம் விசாலமானது.’’‘‘எங்கே வருவது?’’‘‘நான் சொல்லும் இடத்துக்குக் கிளம்பி வா...’’‘‘எப்போ வரட்டும்?’’‘‘உன்னோட சௌகரியத்தைப் பொருத்து வா. அதுக்காக காலம் கடத்தாதே!’’‘‘எங்கே?’’‘‘முகவரியை மெசேஜ் செய்யறேன். வரும்போது போன் பண்ணு.’’நீண்ட நேரம் போனில் பேசி, வினிதாவின் எண்ணத்தை மாற்றினாள் பிருந்தா.வினிதா சற்று தேறினாள்.வாட்ஸ்அப்பில் பிருந்தா அனுப்பியிருந்த அந்தக் குறுந்தகவலைப் பார்த்தாள் வினிதா.என்ன செய்யலாம்? பிருந்தா சொன்னபடி வீட்டை விட்டு வெளியில் போய் விடலாமா?யோசித்தாள்.அந்த நேரத்தில் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்க முடியவில்லை.யோசிக்கவும் இல்லை. மிகவும் நெருக்கடியான அந்தத் தருணத்தில், தன்னுடைய மனம் துவண்டு போயிருக்கும் அந்த நேரத்தில் தனக்கு சாதகமாகப் பேசும் யாரையும் மனம் நம்பிவிடும்.அவள் மனம் பிருந்தாவிடம் அடைக்கலம் தேட தயாரானது.தற்கொலை முடிவை தள்ளிப் போட்டாள்..7கார்த்திகேயன் எப்பொழுது தனிமையில் கிடைப்பான் என்று ஒரு சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருந்தாள் பாக்யம்.அன்று வெள்ளிக்கிழமை. அருகிலிருக்கும் துர்க்கை அம்மன் கோயிலுக்கு நெய் தீபம் போட போயிருந்தாள் வினிதா.எப்படியும் அவள் திரும்பி வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிடும்.உறுதிப்படுத்திக் கொண்டாள் பாக்யம்.மகனைப் பிடித்துக் கொண்டாள்.‘‘கார்த்திகேயன், என்னப்பா இன்னும் அந்த ரசிகாவின் உறவை நீ கைவிடலையா?’’அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் கார்த்திகேயன் தடுமாறினான்.‘‘இ... இல்லேம்மா. அவளை மறந்து வெகு காலம் ஆயிடுச்சு.’’‘‘அப்புறம் எதற்கு அவளோடு போனில் பேசிட்டு இருக்கே?’’‘‘அ... அது வந்து அவளாகத்தான் கூப்பிட்டாள்.’’‘‘என்னவாம்?’’‘‘அவசரமா ஒரு லட்ச ரூபாய் தேவைப்படுதாம்... கேட்டாள்.’’பாக்யத்திடம் கோபம் எரிமலைப் பிழம்பாக வெடித்தது.‘‘அதானே பார்த்தேன்... அவளை தலைமுழுகித்தான் பல காலம் ஆயிடுச்சே! அப்புறம் என்ன மறுபடியும்?’’‘‘ஏதோ பணச்சிக்கலாம்.’’‘‘அதுக்கு?’’‘‘கடனாத்தான் கேட்கிறாள். ஆறு மாச தவணையில் திருப்பித் தருவதா சொன்னாள்.’’‘‘கடனோ இனாமோ... அது இல்லை பிரச்னை. அவள் இனி மேல் எந்த விதத்திலும் உன்னிடம் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது. உன்னோட வாழ்க்கையில் தலையிடக் கூடாது.’’பாக்யத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு வரவும், கார்த்திகேயன் அமைதியாகிப் போனான்.‘‘என்ன கார்த்தி... பதிலையே காணோம்?’’‘‘ஏதோ ஆபத்துக்குப் பாவமில்லை. கடனாகத்தான் கேட்கிறாள்.’’‘‘கடனாவா கேட்கிறாளா கடன்காரி? அவள் முகத்தில் காறித் துப்பணும். அப்போதான் என்னோட ஆத்திரம் தீரும்.’’‘‘ஏதோ பழகிட்டாள். அந்தப் பாவத்துக்காக...’’‘‘அதான் பழகின பாவத்துக்கு பணத்தை லட்சலட்சமா வாங்கிட்டாளே! பணத்தை கை நீட்டி வாங்கிட்டு, Ôஇனி ஒட்டுமில்லை... உறவுமில்லை’னு விலகிப் போயிட்டாளே! அப்புறம் எதுக்கு உன்னோட பாதையில் குறுக்கே வருகிறாள்? மறுபடியும் ஒட்டி உறவாடி பணம் பறிக்கவா?’’‘‘அப்படித் தெரியலை. உண்மையில் கஷ்டத்தில் இருக்கிற மாதிரி பேசினாள்.’’‘‘தயவு செய்து அவளை மறந்திடு. பெண்களில் கோடானு கோடி பேர் உத்தமிகளாக இருக்காங்க! ஏதோ ஒரு கடைக்கோடியில் இவளை போல் சிலர் இருக்கத்தான் செய்றாங்க. என்ன செய்ய? கடவுள் படைப்பில் அமிர்தமும் இருக்கு, விஷமும் இருக்கு!’’‘‘இப்போ என்ன செய்யட்டும்?’’‘‘காசுக்காக பலரையும் காதிலிப்பதா நடிச்சு ஏமாற்றி இருக்காள். இனியும் ஏமாற வேண்டாம். சொன்னால் கொஞ்சம் புரிஞ்சுக்க. அவள் உன்னை ஏமாற்றிட்டு போனதால்தானே நீ மனநிலை பாதிக்கப்பட்டு குடிகாரனா மாறினே? அப்புறம் மனோதத்துவ டாக்டரிடம் போய் உனக்கு ட்ரீட்மென்ட் எடுத்தோம்! அதெல்லாம் மறந்திடுச்சா?’’‘‘அதெல்லாம் மறக்கலை.’’‘‘மறந்திடு. உன்னோட மனநிலை மாறத்தானே நம்மளைவிட வசதி குறைவாக இருந்தாலும் பரவாயில்லைனு வினிதாவைக் கட்டி வச்சேன். இப்போ அவளுக்கே தெரியும்படி அந்த ரசிகாகூட மறுபடி பேசிட்டிருக்கே? செல்போன் கேலரியில் அவளோட போட்டோஸை இன்னும் அழிக்காமல் வச்சிருக்கே! என்ன இதெல்லாம்?’’கார்த்திகேயன் பதில் பேசவில்லை.பாக்யமே தொடர்ந்தாள்.‘‘இந்த விஷயம் லேசா தெரிஞ்சதுக்கே வினிதா ஆகாயத்துக்கும் பூமிக்குமா குதிக்கிறாள். அவளை ஒரு வழியா சமாளிக்கிறக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. அப்புறம் அந்த ரசிகாகூட சேர்ந்து நீ கூத்தடிச்ச விஷயம் முழுக்கத் தெரிந்தால் வேறு வினையே வேண்டாம். அவங்க அப்பா போடுவதா சொன்ன மீதி நகையையும் போடாமல் செய்துவிடுவாள்.’’கார்த்திகேயனிடம் பேசிப் பேசியே அவனுடைய மனதைக் கரைய வைத்தாள் பாக்யம்.மணிக்கணக்கில் பேசவும் கார்த்திகேயனின் மனம் மாறிற்று.‘‘இல்லேம்மா... இனி ரசிகா இருக்கும் திசைப்பக்கம் திரும்பிக்கூட பார்க்கமாட்டேன்.’’‘‘சத்தியமா?’’‘‘சத்தியமா திரும்பிக்கூட பார்க்கமாட்டேன்.’’‘‘அப்படினா பெத்தவள் என்னோட தலைமீது அடிச்சு சத்தியம் பண்ணு.’’கார்த்திகேயன் சற்று தயங்கினான்.‘‘என்ன யோசனை?’’‘‘ஒரு யோசனையும் இல்லை.’’‘‘அப்புறம் என்ன சத்தியம் செய்ய?’’‘‘அம்மா... உங்கமீது சத்தியமா நான் ரசிகா பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன்.’’பாக்யத்தின் தலையில் அடித்து சத்தியம் செய்தான் கார்த்திகேயன்.‘‘கார்த்தி, இது விளையாட்டு காரியமில்லை. என்மீது சத்தியம் செய்துட்டு அப்புறம் போய் அந்த ரசிகாவிடம் தவறா பழகினால் என்னை உயிரோடு பார்க்க முடியாது. அதையும் மனசில் வச்சு நடந்துக்க.’’எச்சரித்தாள் பாக்யம்.கார்த்திகேயனின் நெஞ்சுக்குள் பயம் ஏற்பட்டது.ரசிகா நல்லவள் என்றுதான் ஆரம்பத்தில் பழகினான். நட்பாக ஆரம்பித்த பழக்கம் பிறகு காதலாக மாறிற்று.இருவரும் சுற்றாத ஊரில்லை. பார்க்காத இடமில்லை.எந்த நேரமும் நேரிலோ கைப்பேசி மூலமோ பேசிக் கொண்டேயிருந்தார்கள்.ஒரு எல்லைக்கு மேல் போகும்போது அவள் பணத்தை குறியாக வைத்துத்தான் பழகுகிறாள் என்பது புரிந்தது. அந்த விஷயம் தெரியவந்தபோது கார்த்திகேயன் விலகிப்போகப் பார்த்தான்.ரசிகா விடவில்லை.‘‘இதோ பாருங்க கார்த்தி... உங்களோடு பழகினது நம்ம கல்யாணத்தில் போய் முடியும்னு நினைக்காதீங்க. எனக்குத் தேவை பணம்... பணம்... பணம் மட்டும்தான். நான் கேட்கிற அளவு பணம் கொடுங்க... விலகிக்கிறேன்.’’‘‘என்ன இப்படிப் பேசறே?’’‘‘உங்கள கல்யாணம் செய்துக்க எனக்கு விருப்பமில்லை. நான் கேட்கிற பணத்தைக் கொடுத்திடுங்க. விலகிக்கிறேன்.’’‘‘பணம் கொடுக்கலைனா?’’‘‘அப்புறம் போலீஸ், கோர்ட்டுனு போக வேண்டி வரும்.’’‘‘எந்த ஆதாரத்தை வச்சு?’’‘‘நம்ம ரெண்டு பேரும் மிக நெருக்கமா சேர்ந்து எடுத்துட்ட போட்டோஸ் இருக்கு!’’‘‘போட்டோஸை மட்டுமே ஆதாரமா காட்டித் தப்பித்துக்கொள்ள முடியுமா?’’‘‘போட்டோஸ் ஆதாரத்திற்கு போதலைனா வேறு ஆதாரமும் வலுவாக இருக்கு!’’‘‘என்ன ஆதாரம்?’’‘‘என் வயித்தில் உங்க வாரிசு வளர்ந்துட்டிருக்கே?’’அதைக் கேட்டவுடன் கார்த்திகேயன் ஒரு நிமிஷம் ஆடிப்போய்விட்டான்.பயத்தில் நாக்கு வறண்டு போனது.பேச்சே எழவில்லை.‘‘உண்மையாவா?’’‘‘நான் எதற்குப் பொய் சொல்லணும்? நான் கேட்கிற அளவு பணம் கொடுங்க... கர்ப்பத்திலேயே கலைச்சிடறேன். இல்லேனா, குழந்தை பிறந்த பிறகு கோர்ட் மூலம் உங்க மீது கேஸ் போடுவேன்.’’‘‘என்ன... மிரட்டிப் பார்க்கிறியா?’’‘‘மிரட்டவில்லை. நடமுறையைத்தான் சொல்றேன். குழந்தை பிறந்த பிறகு டி.என்.ஏ. டெஸ்ட்டில் உங்க குழந்தைதான்னு நிரூபிக்க முடியுமில்லையா?’’வயிற்றிலில்லாத குழந்தையை இருப்பதாகச் சொல்லி, கார்த்திகேயனை மிரட்டி பணம் பறித்துவிட்டாள்.திரும்பவும் அவனுடைய வாழ்க்கையில் ரசிகா குறுக்கிடவும், பாக்யம் தன்னுடைய மகனை கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தினாள்.அவனும் ஜாக்கிரதையானான்.அப்படியொரு சம்பவம் நடந்ததையே வினிதாவிடம் மறைத்துவிட்டனர்!.8கல்லூரி முடிந்து தன்னுடைய சிநேகிதிகளுடன் வெளியில் வந்தாள் சங்கவி. அவளை ஒட்டிய மாதிரி அந்த கார் வந்து நின்றது. கார் கதவின் கண்ணாடி தானாக இறங்கிற்று.காருக்குள்ளிருந்து Ôசங்கவி..!’ என்ற குரல் மட்டும் வந்தது.திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் சங்கவி.காருக்குள்ளிருந்து வஸந்த் புன்னகைத்தான்.அந்த நேரத்தில் அந்த இடத்தில் அவன் வந்து நிற்கவும் சங்கவி சற்று அதிர்ந்து போனாள்.சக சிநேகிதிகளுக்கு நடுவில் இவன் எதற்கு வந்து என்னை அழைக்க வேண்டும்?அந்தத் தருணத்தில் வஸந்த் தனக்கு தெரிந்தவன் என்றோ, தன்னுடைய காதலன் என்றோ பிரகடனப்படுத்திக்கொள்ள சங்கவி சங்கப்பட்டாள்.இன்னும் யாருக்கும் அந்த விஷயம் தெரியாது.விஷயம் வெளியில் தெரிந்தால் சிநேகிதிகள் எல்லோருமாக வைத்து செய்துவிடுவார்களே என்ற பயம்தான் அதற்குக் காரணம்.என்ன செய்யலாம்?அவனை தவிர்க்க நினைத்தாள். அவனைக் கண்டு கொள்ளாதது போல் நடையை எட்டிப் போட்டாள்.வஸந்த் விடவில்லை.காரைவிட்டு இறங்கி வந்து சங்கவியை மறித்து நின்றான்.‘‘என்ன சங்கவி... கண்டுக்காமல் போறே? வா... வந்து காரில் ஏறு...’’சங்கவிக்குப் பதற்றத்தில் உடல் முழுக்க வியர்த்துக் கொட்டியது.இவன் எதற்கு இப்படி நடந்து கொள்கிறான்?‘‘நான் எதுக்கு காரில் வரணும்?’’‘‘உங்க அக்கா வினிதா விஷயமா பேசணும். அவங்களை பற்றி ஒரு தகவல். அந்தப் பிரச்னையை உடனே முடிச்சு கொடுக்க ஒரு ஆளைப் பார்த்திருக்கேன். அதான் போனில் பேச வேண்டாம்னு நேரில் வந்தேன்.’’வினிதாவின் விஷயம் என்றதும் சங்கவி திடுமென்று வஸந்த்தை ஏறிட்டுப் பார்த்தாள்.‘‘என்ன சொல்றீங்க வஸந்த்?’’‘‘வா... காரில் ஏறு. எல்லாத்தையும் விவரமா சொல்றேன்...’’தயங்கினாள்.‘‘என்ன தயக்கம்? இன்னும் என்னை முழுசா நம்பவில்லையா?’’அதற்கு மேலும் தவிர்க்க மனம் வரவில்லை.வினிதாவைப் பற்றிய விஷயம் என்றதும் ஒரு ஆர்வம் வந்து ஒட்டிக் கொண்டது.‘‘உண்மையாவா சொல்றீங்க? எங்க அக்கா பிரச்னையை பேசப்போறீங்களா?’’‘‘இங்கே வச்சு வேண்டாம்னு பார்க்கிறேன். வெளியில் போய் பேசலாமே...’’‘‘ஓகே... பேசலாமே!’’வினிதாவின் வாழ்க்கை நல்லபடி அமைந்தால் அதுவே மிகப்பெரிய நிம்மதி.தன்னுடைய சிநேகிதியரிடம் விடைபெற்றுக் கொண்டு, சாவி கொடுத்த பொம்மை போல் காரின் பின்னிருக்கையில் போய் அமரப்போனாள் சங்கவி.வஸந்த் வந்து தடுத்தான்.‘‘சங்கவி... முன் சீட்டில் வந்து உட்காரு.’’முன்னிருக்கையில் சங்கவி ஏறி அமர்ந்தாள். அவளருகில் டிரைவிங் சீட்டில் வந்தமர்ந்தான் வஸந்த்.சில விநாடிகளில் கார் கிளம்பிற்று.சங்கவிக்கு ஆர்வம் அடங்கவில்லை.கார் கிளம்பியதும் கேட்டேவிட்டாள்.‘‘எங்க அக்கா வீட்டுக்காரரை பற்றி என்னவோ சொல்ல வந்தீங்களே... என்ன அது?’’‘‘அவசரப்படாதே... போய் உட்கார்ந்து பேசலாம். உங்கிட்ட பேச வேண்டியது நிறைய இருக்கு!’’சாலையின் மீதிருந்த பார்வையை சங்கவி பக்கம் திருப்பாமலே வஸந்த் சொன்னான்.கார் பொள்ளாச்சியைக் கடந்து, ஆழியார் சாலையில் சமத்தூரையும் கடந்து சென்றது.சங்கவி குழம்பிப் போனாள்.ஒரு விஷயத்தைப் பேச எதற்கு இவ்வளவு தூரம் போக வேண்டும்?தவறான பாதையில் போகிறோமோ?மனதிற்குள் ஓர் கிலி உண்டானது.‘‘எங்கே போறோம்?’’‘‘ஆழியார்.’’‘‘ஆழியாரா?’’‘‘அதுக்கு ஏன் இப்படிப் பதட்டம் ஆகறே?’’‘‘காலேஜ் முடிஞ்சு ஒரு மணி நேரத்தில் நான் வீட்டுக்குப் போகலைனா என்னை வீட்டில் தேடுவாங்க.’’‘‘நீ இன்னும் குழந்தையா?’’‘‘பெத்தவங்களுக்கு எப்பவும் நான் குழந்தைதானே?’’‘‘ஓ! நல்லா பேசறியே?’’கார் ஆழியாரை நெருங்கிக் கொண்டிருந்தது.சங்கவி செல்போனில் மணியைப் பார்த்தாள்.கல்லூரி முடிந்து அரை மணி நேரம் ஆகிவிட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டில் இருந்தாக வேண்டும். சாத்தியப்படுமா?ஒரு விதப் படபடப்பு ஏற்பட்டது.‘‘என்னாச்சு சங்கவி?’’‘‘வீட்டுக்குப் போக நேரம் ஆகிட்டிருக்கு.’’‘‘ச்சே! அதையே திருப்பித் திருப்பி சொல்லிட்டிருக்கியே?’’‘‘எனக்கு என்னவோ பயமா இருக்குங்க.’’‘‘எதுக்கு பயப்படணும்? நம்பளைபோல லவ்வர்ஸுக்குத்தான் ஆழியார் டேமையே கட்டி வச்சிருக்காங்க.’’‘‘அப்போ எங்க அக்காவைப் பற்றி பேசப் போறதில்லையா?’’‘‘அதுவும்தான். ஏன் பதட்டப்படறே?’’‘‘அதென்னவோ மனசுக்குள் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.’’‘‘அங்கே மீன் ஸ்டாலில் ஃப்ரெஷ்ஷா மீன் ஃப்ரை செய்து தருவாங்க. பக்கத்திலே Ôமிளகாய் பஜ்ஜி’ கடையும் இருக்கும். மீனையும் மிளகாய் பஜ்ஜியும் வாங்கிக்கலாம். அதைச் சாப்பிட்டபடியே டேமை ஒரு சுற்று சுற்றிட்டு கீழே வந்தோம்னா ஒரு கப் மசாலா டீ குடிக்கலாம். அற்புதமா இருக்கும்!’’‘‘ஐயோ... நேரம் போயிடும். வீட்டில் விளக்குப் போடும் நேரம் வரையில் போகாமல் இருந்தால் பெரிய பிரளயமே ஏற்பட்டுவிடும். கொஞ்சம் என்னோட நிலமையைப் புரிஞ்சுக்கங்க.’’சங்கவி பதறினாலும் வஸந்த் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை.‘‘எதுக்கு இப்போ ஸீன் போட்டுட்டிருக்கே? பேசாமல் வீட்டுக்கு போன் போட்டு, Ôஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. வருவதற்கு நேரம் ஆகிடும்’னு சொல்லிடு. பிரச்சனை முடிஞ்சது.’’‘‘பொய் சொல்லச் சொல்றீங்களா?’’‘‘காதலிக்கத் துவங்கிட்டால் பொய் பேசணும். நிறைய விஷயங்களை வீட்டில் மறைச்சுப் பேசணும்.’’‘‘என்னால் முடியாது. காரை நிறுத்துங்க. நான் இறங்கி, பொள்ளாச்சிக்கு பஸ் பிடிச்சுப் போயிக்கிறேன்.’’விட்டால் அழுதுவிடும் நிலைக்குப் போய்விட்டாள்.‘‘ப்ளீஸ் சங்கவி... கொஞ்சம் பொறுத்துக்க. ஆழியார் போயிட்டு சீக்கிரமா உன்னை வீட்டுப்பக்கமா கொண்டு போய் டிராப் பண்ணிடறேன். என்னை நம்பு.’’‘‘அதுக்குள்ள எங்க வீட்டில் தேட ஆரம்பிச்சுடுவாங்க.’’‘‘உங்க வீட்டில் அவ்வளவு கெடுபிடியா?’’‘‘கெடுபிடியெல்லாம் இல்லை. பொண்ணுங்க தனியா வெளியில் போனால் எல்லா பேரண்ட்ஸுக்கும் இருக்கும் சராசரி பயம்தான்.’’‘‘ஸ்பெஷல் கிளாஸ் இருக்குனு போன் போட்டு சொல்லிடு.’’வேறுவழி இல்லை. இனி போன் செய்யாவிட்டால், வீட்டிலுள்ளவர்களுக்கு வீண் சந்தேகம் வந்துவிடும்.போன் செய்தாள்.‘‘ஹலோ, அம்மா... நான் சங்கவி பேசறேன்.’’‘‘சொல்லும்மா...’’‘‘எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும்மா. வீட்டுக்கு வர லேட்டாகும்.’’‘‘எப்போ வருவே?’’‘‘கிளம்பும்போது மறுபடி போன் பண்றேன்.’’‘‘கூட யாரு இருக்கா?’’‘‘சம்யுக்தா இருக்காள்.’’‘‘ஓகே. கிளாஸ் முடிஞ்ச பிறகு பார்த்து வாங்க.’’போனை வைத்த மறு நிமிடம் தன்னுடைய சிநேகிதி சம்யுக்தாவுக்கு போன் செய்தாள்.மறுமுனையில் சம்யுக்தா வந்தாள்.‘‘ஹலோ, சம்யுக்தா... நம்மளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறதா அம்மாவுக்கு போன் செய்து சொல்லிட்டேன். நீயும் என்னோடு இருப்பதா பொய் சொல்லியிருக்கேன். அம்மா உன்னை கூப்பிட்டு கேட்டால், அதே பொய்யை நீயும் சொல்லிடு. ப்ளீஸ்!’’‘‘ஏய்... என்னடி சொல்லாமல் கொள்ளாமல் யாரோட காரிலோ ஏறிப்போயிட்டே! யாருடி அந்தாளு? பார்த்தால் தெலுங்குப்பட வில்லனாட்டாம் இருக்கார்.’’‘‘நாளைக்கு காலேஜில் வந்து சொல்றேன்.’’போனில் பேசிக்கொண்டே, அருகில் கார் ஓட்டிக்கொண்டிருந்த வஸந்த்தை ஒரு முறை கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டாள் சங்கவி.மறுமுனையில் பேசுவது அவனுடைய காதில் விழவில்லை என்பதை யூகித்துக் கொண்டாள். எனவே சம்யுக்தாவிடம் தைரியமாகப் பேசினாள்.‘‘ஏய்... இப்போ எங்கே இருக்கே?’’‘‘ஆழியார் போயிட்டிருக்கோம்.’’‘‘ஆழியாரா? அங்க எதுக்கு?’’‘‘நாளைக்கு வந்து சொல்றேன்.’’போன் லைனை துண்டித்து கொண்டாள்.அதற்குள் கார் ஆழியார் சென்று சேர்ந்தது.காரை கொண்டுப் போய் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இறங்கினான் வஸந்த்.சங்கவியும் இறங்கிக் கொண்டாள்.‘‘என்ன சங்கவி, உனக்குப் பொய் சராளமா பேச வருதே!’’‘‘என்ன செய்ய? அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் வழிய வந்து மாட்டிக்கொண்டேனே!’’‘‘இனி நிறைய பொய்ப் பேச வேண்டி வரும். அதுவும் ஒரு த்ரில்தான்!’’‘‘அந்த த்ரில் எல்லாம் எனக்கு இந்த ஒரு நாளில் போதும். இப்பவே ஹார்ட் வந்து தொண்டைக்குள்ளே ஓடிட்டிருக்கு!’’சங்கவியின் பயத்தை, மான் போல் அவளிடமுள்ள மிரட்சியைப் பார்த்து வஸந்த் ரசித்தான்.அந்த மாலை நேரத்தில் ஆழியார் தென் மேற்கு மலைச் சாரலிலிருந்து காற்றை வாங்கி இலவசமாக விநியோகம் செய்து கொண்டிருந்தது.பொள்ளாச்சியிலிருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அந்த அணைக்கட்டுப் பகுதியும் அதைச் சார்ந்துள்ள பூங்காவும் நகரத்தின் இரைச்சலிலிருந்து வருவோருக்கு Ôபூலோக சொர்க்கம்’ என்றால் மிகையில்லை!இயற்கை அன்னையின் கொடை!மீன் ஃப்ரையும் மிளகாய் பஜ்ஜியும் வாங்கிக் கொண்டு அணைக்கட்டுப் பகுதியை சுற்றிப் பார்க்க சங்கவியை அழைத்துச் சென்றான் வஸந்த்.வீட்டில் பொய் சொல்லிவிட்டோமே என்ற மன உறுத்தல். வினிதாவின் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்னு நம்பி வந்தால், அதைப் பற்றியே பேச்சு எடுக்காமல் இழுத்தடிக்கிறானே!சங்கவிக்கு பொறுக்கவில்லை.கேட்டுவிட்டாள்.‘‘என்னங்க... எங்க அக்கா வினிதாவின் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டுவதா சொல்லி என்னை காரில் ஏற்றி கூட்டி வந்தீங்க... இப்போ அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லாமல் இருக்கீங்களே?’’‘‘முதல்ல இந்த மீன் ஃப்ரையை சாப்பிடு... பேசலாம்.’’அதை வாங்கிக்கொள்ள மறுத்தாள் சங்கவி.‘‘எனக்கு அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எங்க அக்கா மேட்டருக்கு வாங்க. அவளுக்காக என்ன செய்யப் போறீங்க?’’‘‘முதல்ல இந்த மீனை சாப்பிடு... சொல்றேன்!’’வலுக்கட்டாயமாக சங்கவி கையில் அந்த மீன் வறுவலை திணித்துவிட்டுச் சொன்னான்...‘‘உங்க அக்காவோட பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டத்தான் எங்க அப்பாவோட காதில் விஷயத்தைப் போட்டிருக்கிறேன்.’’‘‘உங்க அப்பாவிடமா?’’‘‘ஆமாம்! அதுக்கு எதற்கு இப்போ டென்ஷன் ஆகணும்?’’‘‘உங்க அப்பா என்னைப் பற்றி தவறா நினைக்க மாட்டாரா?’’‘‘எதுவும் நினைக்க மாட்டார். என் ஃப்ரெண்டோட அக்கா வீட்டுப் பிரச்னையா சொல்லியிருக்கேன். என்னோட ஃப்ரெண்ட் ஆணா, பெண்ணானு அவருக்குத் தெரியாது.’’சங்கவி ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.இருவரும் பேசிக் கொண்டே நடந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. வானம் இருண்டு விட்டது. பூங்காவிலும் வீதியிலும் எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகள் அந்த இருட்டை விரட்டிக் கொண்டிருந்தன.‘‘என்னங்க... நேரம் ஆகிடுச்சு. எங்க வீட்டில் சந்தேகப்படும் முன் போயிடலாம்.’’‘‘மசாலா டீ ஒன்று சாப்பிட்டுவிட்டு கிளம்பி விடலாம்.’’இருவரும் அந்தச் சாலையோர கடையில் டீ சாப்பிட்டனர்.அந்த மெல்லிய குளிர் காற்றுக்கு டீயின் சூடு தொண்டையில் இறங்கியபோது மிகவும் இதமாக இருந்தது.கார் ஏற வரும்போது அந்த இடத்தில் மின்விளக்கு வெளிச்சம் இல்லை.கும்மிருட்டாக இருந்தது.அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட வஸந்த், சற்றும் எதிர்பாராதவிதமாக சங்கவியை தன் பக்கமாக இழுத்து அணைத்து, அவளுடைய உதட்டில் தன்னுடைய உதட்டை பதித்தான்.சங்கவி பதறிப்போனாள். அவனுடைய பிடியிலிருந்து தன்னை வலுக்கட்டாயமாக விடுவித்துக் கொண்டாள்.உதட்டை தன்னுடைய கைக்குட்டையால் அழுத்தித் துடைத்து கொண்ட சங்கவி, ஒருவித ஆற்றாமையால் வாய்விட்டு அழுதுவிட்டாள்.அவளுடைய அழுகையைக் கண்ட வஸந்த் பதறிப்போனான்.‘‘சங்கவி... என்ன ஆச்சு?’’அழுகையின் நடுவே தேம்பித் தேம்பி பதில் சொன்னாள்.‘‘எ... என்னை தனியா கூட்டிட்டு வந்து இப்படி அசிங்கம் பண்ணறீங்களே!’’‘‘ஸாரி சங்கவி. தெரியாமல் செய்துட்டேன்.’’சங்கவியின் கையைப் பிடித்தான் வஸந்த்.தன்னுடைய கரங்களை அவனிடமிருந்து வெடுக்கென்று விலக்கிக் கொண்டாள்.‘‘எனக்கு உடமெல்லாம் கம்பளிப்பூச்சி ஊறுவதுபோல் அருவருப்பா இருக்கு.’’‘‘உன் காலில் வேணாலும் விழறேன். என்னை மன்னித்துவிடு சங்கவி. இனி மேல் நீ விரும்பாத எதையும் நான் செய்ய மாட்டேன்.’’கெஞ்சினான் வஸந்த்.‘‘சரி, என்னை கொண்டுப் போய் எங்க வீட்டில் விடுங்க. நேரம் ஆகிடுச்சு.’’இருவரும் காரில் ஏறினர்.கார் கிளம்பிற்று.பொள்ளாச்சி வந்து சேரும் வரை சங்கவி எதுவுமே பேசவில்லை. ஒரே இறுக்கமாகவே இருந்தாள்.நடந்ததை நினைத்து நினைத்து வேதனைப்பட்டாள்.‘‘வீடு எங்கே? உன்னை எங்கே இறக்கிவிடணும்?’’‘‘ஸ்ரீபுரம். மூன்றாவது வீதி. என்னை ஸ்ரீபுரம் ஆர்ச்சில் இறக்கி விடுங்க. இறங்கி நடந்து போய்க்கிறேன். வீடு வரைக்கும் வர வேண்டாம். யாரும் பார்த்துடுவாங்க.’’‘‘யாரும் பார்த்தால் என்ன?’’‘‘வீட்டில் போட்டுக் கொடுத்துட்டால், அப்புறம் நான் காலேஜுக்கே போக முடியாது.’’‘‘அவ்வளவு கெடுபிடியா?’’‘‘எங்க அக்கா விஷயத்தில் மனதளவில் துவண்டுப் போயிருக்காங்க. என்னோட வாழ்க்கையாவது நல்லா இருக்கணும்னு ஆசைப்படறாங்க.’’‘‘நியாயம்தான்.’’‘‘நான் இங்கேயே இறங்கிக்கிறேன்.’’வஸந்த் காரை நிறுத்தினான்.ஒரு இறுக்கமான சூழ்நிலையிலிருந்து விடுபட்டதுபோல் காரைவிட்டு இறங்கிக் கொண்டாள்.பாரம் குறைந்த உணர்வு மேலிட்டது.‘‘ஸாரி, சங்கவி. இனி மேல் தப்பா நடந்துக்க மாட்டேன்.’’பதில் சொல்லாமல் நடையை எட்டிப் போட்டாள் சங்கவி.கார் கிளம்பிற்று.யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உணர்ந்து திருப்திப்பட்டுக் கொண்டாள்.என்றாலும், அவளுடைய உதட்டில் ஒரு அசிங்கம் ஒட்டிக் கொண்டிருப்பது போலவே தோன்றியது.இரவெல்லாம் உறக்கம் போயிற்று.Ôவஸந்த் நல்லவனா? அவனை பின் தொடர்ந்து போவது சரிதானா?’கேள்விகள் வந்து மனத்தை துளைத்து எடுக்கவும், தூக்கம் துறந்தாள்.‘வீட்டில் பொய் சொல்லிவிட்டு வெளியில் போனது தவறோ?’மனதிற்குள் கேள்வி எழுப்பிக் கொண்டாள் சங்கவி..9மனம் குழம்பிப் போயிருந்தாள் வினிதா. Ôவீட்டை விட்டு வெளியில் போகலாமா? பிருந்தாவின் வார்த்தைகளை நம்பலாமா? அவளை எந்த அளவிற்கு நம்பலாம்?’பிருந்தாவின் நினைவு வரவும் அவளுக்கு போன் செய்தாள் வினிதா.‘‘ஹலோ... பிருந்தா நான் வினி பேசறேன்...’’‘‘சொல்லுடி.’’‘‘உன்னைப் பார்க்க வரட்டுமா?’’‘‘வெல்கம்! எப்போ வருவதா உத்தேசம்?’’‘‘நீ சொல்லும் நேரத்திற்கு. சொல்லும் இடத்துக்கு வரேன்.’’‘‘காலையில் பத்து மணிக்கு வா. ஆர்.எஸ்.புரம் ரத்தின விநாயகர் கோயிலில் வெயிட் பண்றேன்.’’‘‘ஓகே.’’‘‘உன்னோட டேட் ஆஃப் பர்த் தெரியுமில்லே?’’‘‘இது என்ன கேள்வி? என்னோட பர்த் டே தெரியும்!’’‘‘பிறந்த நேரம்?’’‘‘தெரியும்! அதெல்லாம் இப்போ எதுக்கு?’’‘‘எனக்குத் தெரிந்த ஜோசியர் ஒருத்தர் இருக்கார். அவரிடம் போய் உன்னோட எதிர்காலம் என்னதான் ஆகும்னு கேட்டுப் பார்க்கலாம்.’’ஜோசியர் என்றதும் வினிதா மிகுந்த ஆர்வமடைந்தாள்.தன்னுடைய எதிர்காலம் எந்தத் திக்கில் போய்க் கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாள்.‘‘கண்டிப்பா என்னோட டேட் ஆஃப் பர்த், டைம் ஆஃப் பர்த் எல்லாம் கொண்டு வருகிறேன்.’’‘‘சரி, உன்னோட ஹஸ்பெண்டோட டேட் ஆஃப் பர்த் தெரியுமா?’’‘‘தெரியும்!’’‘‘அவரோட டைம் ஆஃப் பர்த்?’’அந்தக் கேள்விக்கு வினிதா தடுமாறினாள்.‘‘அ... அ... அவரோட பிறந்த நேரம் தெரியாதே.’’‘‘அப்புறம்..? எப்படியும் அதுவும் வேணுமே!’’‘‘உங்க வீட்டுக்காரரை கேட்டுப்பார்.’’‘‘நிச்சயமா அவருக்கு அதுவெல்லாம் தெரிந்திருக்க சான்ஸ் இல்லை.’’‘‘அப்போ உங்க மாமியாரை கேள்.’’‘‘வேற வினையே வேண்டாம்!’’‘‘ஏன்?’’‘‘ராட்சசி... சொல்ல மாட்டாள்! அப்புறம் ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு மனுஷனை ஒரு வழி செய்துடுவாள்.’’‘‘அவரோட ஜாதகத்தை எடுத்துப் பார். அதில் டைம் இருக்கும்.’’‘‘எங்க மாமியார் அந்த ஜாதகத்தை எங்கே வச்சிருப்பாங்கன்னு தெரியாதே.’’‘‘அப்புறம் என்னடி செய்யலாம்?’’சில விநாடிகள் யோசித்தாள் வினிதா. அவளுடைய மூளைப் பகுதியில் நியூரான் செல்கள் துரிதமாகச் செயல்பட்டன.சந்தோஷம் பொங்க போனில் குரலை உயர்த்தினாள்.‘‘ஒரு ஐடியா...’’‘‘என்ன ஐடியா?’’‘‘எங்க கல்யாணத்திற்குப் பொருத்தம் பார்க்க அவரோட ஜாதக காப்பியை எங்களுக்கு அனுப்பியிருந்தாங்க. அந்த நகல் எங்க அப்பாகிட்ட இருக்கும். போன் பண்ணி, வாட்ஸ்அப்ல அனுப்பச் சொல்றேன்.’’‘‘வெரிகுட்! முதல்ல அதைச் செய்.’’உடனே கைப்பேசியில் ராஜாராம் எண்ணுக்கு அழைப்பு கொடுத்து காத்திருந்தாள் வினிதா.மறு நிமிஷம் ராஜாராம் லைனில் வந்தார்.‘‘சொல்லும்மா, எப்படி இருக்கே? மாப்பிள்ளை எப்படி இருக்கார்?’’‘‘நல்லா இருக்காருப்பா. எல்லாரும் நல்லா இருக்கோம்!’’பெண்ணைப் பெற்றவகளுக்கு மகளைவிட மருமகன் நல்லா இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை!Ôமருமகன் நல்லா இருந்தால், மகளும் நல்லா இருப்பாள்’ என்ற நம்பிக்கை!‘‘என்னம்மா விஷயம்?’’‘‘அப்பா... கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.’’‘‘கேளும்மா, எதுனாலும் கேள்.’’‘‘எங்க கல்யாணத்தின்போது பொருத்தம் பார்க்க அவரோட ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பியிருந்தாங்களே?’’‘‘ஆமாம், மாப்பிள்ளையோட ஜாதகம்!’’‘‘அது உங்ககிட்ட இருக்கா?’’‘‘இருக்குமே! அது எதுக்கு இப்போ?’’‘‘கொஞ்சம் வேணும்பா. அதை என்னோட வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்ப முடியுமா?’’‘‘தேடிப் பார்க்கிறேன். கிடைச்சதும் அனுப்பித் தரேன்.’’போனை வைத்துவிட்டார்.பத்து நிமிடங்களில் வாட்ஸ்அப்பில் கார்த்திகேயன் ஜாதகத்தின் நகல் வந்தது.அதைப் பார்த்ததும் வினிதா சந்தோஷப்பட்டாள்.ஜாதகம் கிடைத்துவிட்டது என்றும் குறித்த நேரத்திற்கு வந்து விடுவதாகவும் பிருந்தாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவைத்தாள் வினிதா.இனி அடுத்த பிரச்னை!என்ன நடந்தாலும் சரி. எதிர்கொண்டாக வேண்டும்!மனசுக்குள் தீர்மானித்துக் கொண்டாள்.Ôதிருமணத்திற்குப் பிறகு வீட்டை விட்டு தனியாக வெளியில் போகப் போறேன். மாமியாரிடம் என்ன பொய் சொல்லிவிட்டுப் போவது? அனுமதிப்பாளா?கார்த்திகேயன் ஒப்புக்கொள்வானா? மறுத்துவிட்டால் என்ன செய்வது?அப்புறம் ஒட்டு மொத்தமாக வீட்டை விட்டே கிளம்பிவிட வேண்டியதுதான்!வேறு வழி? எத்தனை காலத்திற்கு அடிமைபோல் இந்த வீட்டில் வாழமுடியும்? தீர்வு தெரியவில்லை. பயணிக்கப் போகும் திசையும் புரியவில்லை.வீட்டை விட்டு கிளம்பும்போது, புகுந்த வீட்டில் பிரச்னை வெடிக்காதா?பிரச்னை வெடித்தால் என்ன?சாகும் முடிவுக்கு வந்தவள் நான்! அதைவிடவா பெரிய பிரச்னை வந்துவிடப் போகிறது?ஒரு முடிவுக்கு வந்தாள்.வெளியில் போவதற்கான பொய்க் காரணத்தை மட்டும் தேடினாள்.முதலில் கார்த்திகேயனை அணுகினாள்.‘‘என்னங்க... என்னோட கிளாஸ்மேட்டுக்கு கல்யாணம் முடிவாகியிருக்கு. அவளைப் போய் பார்த்துட்டு வரணும்.’’‘‘அவளுக்கு வீடு எங்கே?’’‘‘ஆர்.எஸ்.புரம் ரத்தின விநாயகர் கோயில் பக்கம்.’’‘‘எப்போ போகணும்?’’‘‘நாளைக்கு காலையில்.’’‘‘போயிட்டு எப்போ வருவே?’’‘‘நாளைக்கு சாய்ந்திரமே வந்திடுவேன்.’’‘‘எதுனாலும் எங்க அம்மாவை கேட்டுக்க. அம்மா சம்மதிச்சால் போகலாம்.’’Ôஅருமையான புருஷன். அப்புறம் எதுக்கு உனக்குக் கல்யாணம்?’கேட்க நினைத்தாள் வினிதா.வாய் வரை வந்த வார்த்தைகளை தொண்டையுடன் விழுங்கிக் கொண்டாள்.பாக்யத்திடம் போனாள்.‘‘அத்தை...’’கேட்க ஆரம்பிக்கும் முன்னே பாக்யம் இடைமறித்தாள். மாமியார் பெரிய கில்லாடி என்பது தெரியும்!‘‘கேட்டேன். கார்த்திகேயனிடம் நீ பேசினதைக் கேட்டேன். யாருக்குக் கல்யாணம்?’’‘‘என்னோடு ஸ்கூல், காலேஜில் படிச்ச பொண்ணுக்கு!’’‘‘எப்போ கல்யாணம்?’’‘‘அடுத்த மாசம்.’’‘‘அதுக்கு என்ன இப்போ அவசரம்?’’‘‘கல்யாணத்துக்கு முன்னமே அவளைப் போய் வீட்டில் பார்த்து பேசிட்டு வரலாம்னு இருக்கேன்.’’‘‘என்ன பேசப் போறே?’’‘‘ஒ... ஒண்ணுமில்லை. சும்மா பார்த்துப் பேசிட்டு வரலாம்னு இருக்கேன்.’’‘‘உருப்படியா ஒரு விஷயத்தை தெளிவா பேசிட்டு வா.’’‘‘என்ன பேசட்டும்?’’‘‘மாப்பிள்ளை வீட்டுக்குப் போடறதா சொன்ன நகையை, கொடுக்கிறதா சொன்ன வரதட்சணையை ஒழுங்கா கொடுத்திட சொல்லு. அதான் மரியாதைனு சொல்லு. வார்த்தைத் தவறிட்டால் வாழ்க்கையே தவறிப் போயிடும்னு சொல்லு.’’அந்த வார்த்தைகள் வினிதாவின் நெஞ்சில் கத்தியாகப் பாய்ந்து, குத்திக் குதறியது போலிருந்தது.சகித்துக்கொண்டாள்.பணம் என்றால் பிணம் தின்னும் கழுகுகள்!பொறுத்துக் கொண்டாள்.‘‘என்ன வினிதா... பதிலையே காணோம்?’’‘‘சரிங்க அத்தை! நீங்க சொன்னது போலவே பேசிட்டு வரேன்.’’Ôஎப்படியோ வெளியில் போக விடுதலை கிடைத்ததே!’ என்ற சந்தோஷம் மனசுக்குள் ஆர்ப்பரித்தது.விடியலுக்காக காத்திருந்தாள்..10ஆழியாரில் வஸந்த் நடந்து கொண்ட விதம் சங்கவியின் மனதில் ஆறாத ரணமாக மாறிப்போயிற்று. அந்த இரவு முழுவதும் அவள் தூங்கவில்லை.இரவெல்லாம் தூங்காத தூக்கம் கண்களில் தெரிந்தது.வஸந்திடம் இனியும் பழக்கம் தேவைதானா?முறித்து கொள்ளலாமா?வினிதாவின் குடும்பப் பிரச்னையை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கானே!நம்பலாமா? வினிதாவின் குடும்பத்தால்தான் அப்பா, அம்மாவின் நிம்மதியும் தொலைந்து போயிருக்கிறது.சங்கவி மிகப்பெரிய குழப்பத்தில் இருந்தாள்.தேவிகா கேட்டும் விட்டாள்.‘‘சங்கவி, என்னம்மா ஆச்சு? நேற்று ஸ்பெஷல் கிளாஸ் போயிட்டு வந்ததிலிருந்து பேய் அடிச்ச மாதிரி இருக்கே?’’‘‘ஒண்ணுமில்லைம்மா.’’‘‘நீ ஒண்ணுமில்லைனு சொல்ற விதமே எதுவோ இருக்கிற மாதிரி தோணுது.’’‘‘இ... இல்லேம்மா. உண்மையாவே எதுவுமில்லை.’’தேவிகா விடவில்லை.‘‘எதுனாலும் சொல்லும்மா. பிரச்னை எதுனாலும் பேசித் தீர்த்துக்கலாம். மனசுக்குள்ளே போட்டு வச்சா மனசுதான் வலிக்கும். தூக்கம் போகும்.’’அம்மா விடமாட்டாள்.ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி, அவளிடமிருந்து தப்பித்தாக வேண்டும்.மறுபடி பொய் சொல்ல வேண்டிய சூழ்நிலை.யோசித்தாள்.அடுத்த நொடி சர்வசாதாரணமாக நாவில் பொய்ப் புரண்டது.‘‘எல்லோருக்கும் ஒரு அசைன்மென்ட் கொடுத்திருக்காங்க. அதை ஒரு வாரத்தில் தயார் செய்து, செமினார் கிளாஸில் விளக்கம் கொடுக்கணும். அதில் யார் வேணாலும் கேள்வி கேட்பாங்க. அதுக்கு சரியான விளக்கம் கொடுக்கணும். அதான் ஒரே பயமா இருக்கு.’’‘‘அதுக்கெல்லாம் பயப்பட்டால் எப்படி? உன்னை நீயே நல்லா தயார் செய்துக்கப் பாரு. எதுனாலும் வாழ்க்கையில் எதிர்கொள்ள பழகிக்கணும்.’’தேவிகா சமாதானமடைந்த விதம் சங்கவியின் மனசை அறுத்தது.Ôபெற்றவங்களை ஏமாற்றுகிறோமே!’ என்ற ஆதங்கம், மனசுக்குள் ஒரு பக்கம் அழுத்திற்று.ஒரு வழியாக கல்லூரிக்குக் கிளம்பினாள்.மதிய உணவு இடைவேளையில் சக சிநேகிதிகளும் பிடிபிடி என்று பிடித்துக் கொண்டார்கள்.‘‘ஏய்... என்னடி... நேற்று ஒரு பெரிய பார்ட்டி வந்ததும் எங்களையெல்லாம் கழற்றி விட்டுட்டு காரில் பறந்துட்டே?’’‘‘அ... அவர் எங்க அம்மாவோட தூரத்து சொந்தம்.’’‘‘மாமா பையனா?’’கிண்டலாகக் கேட்டார்கள். கேலியும் செய்தார்கள்.‘‘அப்படியெல்லாம் இல்லை.’’‘‘பின்னே?’’‘‘எங்க அக்கா வீட்டில் ஒரு பிரச்னை. அதைப் பற்றி பேச எங்க வீட்டுக்கு வந்தார். எங்க வீட்டுக்குப் போகும் வழியில் என்னையும் பிக்கப் பண்ணிட்டு போனார்.’’‘‘அப்படியா? நம்பலமா?’’‘‘நம்பித்தான் ஆகணும்.’’‘‘உன்னை நம்பலாம்... ஆனால்?’’‘‘அப்புறம் என்ன?’’‘‘உன்னை நம்பற அளவிற்கு உன் வயதை நம்ப முடியாதே!’’‘‘நிச்சயமா நம்பலாம்!’’‘‘ஓகே! அந்தளவில் உங்க உறவு இருந்தால் சந்தோஷம்!’’எல்லோருடைய பார்வையிலும் பேச்சிலும் சங்கவி சொன்ன பதிலில் திருப்பதி ஏற்படவில்லை என்பதும், ஒரு சந்தேகம் இழையோடிக் கொண்டிருப்பதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது.அப்போதைக்கு அந்தப் பிரச்னையிலிருந்து சங்கவி வெளியில் வந்தாள்.என்றாலும், சங்கவியின் மனசுக்குள் ஒரு ரணம் ஆறாமல் வலித்தது. வலுத்தது.யாரிடமாவது சொல்லி ஆறுதல் தேடிக்கொள்ள மனம் துடித்தது.எந்த விஷயமென்றாலும் சம்யுக்தாவிடம் சொல்லி ஆறுதல் தேடுவாள். சம்யுக்தா நம்பிக்கையானவள்.சம்யுக்தா அன்று மாலை தனிமையில் கிடைத்தாள்.சங்கவி மெல்ல விஷயத்திற்கு வந்தாள்.‘‘சம்யுக்தா, கொஞ்சம் உன்னிடம் பேசணும்...’’‘‘சொல்லுடி.’’‘‘சொன்னால் என்னை திட்டக்கூடாது.’’‘‘திட்ட மாட்டேன்.’’‘‘ப்ராமிஸ்?’’‘‘ப்ராமிஸ்! எதுனாலும் சொல்லு...’’‘‘நேற்று வந்தாரே... அந்த வஸந்த்தைப் பற்றி பேசணும்.’’‘‘அந்தாள் விரிச்ச வலையில் போய் விழுந்துட்டியா?’’சங்கவி வியப்புடன் சம்யுக்தாவைப் பார்த்தாள்.‘‘எப்படிக் கண்டுபிடிச்சே?’’‘‘அந்தாளுதான் உன்னை பலகாலமா வட்டமடிச்சிட்டு இருந்தாரே!’’சங்கவியின் ஒவ்வொரு அசைவும் சம்யுக்தாவுக்குத் தெரியும்!வஸந்த் வலிய வந்து சங்கவிடம் பழகிய நாள் முதல் கொண்டு, ஆழியாரில் நடந்து கொண்டது வரை அனைத்தையும் சொல்லி முடித்தாள்.எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட சம்யுக்தா, ஒரு முடிவுக்கு வந்தாள்.‘‘சங்கவி, அந்தாளு நல்லவரா கெட்டவரானு ஒரு முடிவுக்கு வர முடியலை. எதுக்கும் ஒரு எச்சரிக்கையாவே இருந்துக்க.’’‘‘விலகி வந்துவிடவா?’’‘‘ச்சே! அவ்வளவு சீக்கிரம் விலகி வரவேண்டாம். ஒரு உணர்ச்சி வேகத்தில் அவர் அந்த நேரத்தில் அப்படி நடந்திருக்கலாம். உங்க அக்காவின் பிரச்னையை எப்படிக் கொண்டு போகிறார்னு பார்க்கலாம்.’’‘‘எனக்கு என்னவோ பயமா இருக்கு.’’‘‘பயப்பட வேண்டாம்! ஒரு மனிதனை முழுமையா புரிந்து கொண்ட பிறகு ஒரு முடிவு எடுக்கலாம்.’’‘‘நீ கொடுக்கிற தைரியம்தான் என்னோட மனசுக்கு ஒரு வலிமையைக் கொடுக்குது சம்யுக்தா.’’‘‘ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழைய முடியும்? தைரியமா இரு.’’‘‘ஓகே!’’‘‘சரி, அந்த வஸந்த் யார்னு கேட்டியா?’’‘‘கேட்டேன். அவங்க அப்பா அரசியல்வாதியாம்!’’‘‘அவரோட பேரு என்ன?’’‘‘என்னவோ ரயில்ரங்காவாம்.’’‘‘அது என்ன ரயில்ரங்கா?’’சங்கவி உதட்டைப் பிதுக்கி, தோள்களை குலுக்கிக் கொண்டு கைகளை விரித்தாள்.‘‘தெரியலையே...’’‘‘இதுதான் நம்ம தலைமுறை செய்யும் தவறு. காதலிப்பவனைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவனுடைய வீடும் தெரியாது, விலாசமும் தெரியாது. விவகாரம் வந்தப் பிறகுதான் விலாசம் தேடுகிறோம். ஆனால், நம்மளை பெற்றவங்க விலாசத்தையும் குடும்பத்தையும் விலாவாரியா தெரியாமல் சம்பந்தம் பண்ண சம்மதிக்க மாட்டாங்க.’’‘‘அப்புறம் எப்படி எங்க அக்கா வினிதா கல்யாணத்தில் எங்க அப்பா, அம்மா கோட்டை விட்டார்கள்?’’அந்தக் கேள்விக்கு சம்யுக்தா பதில் சொல்ல திணறிப் போனாள்.‘‘அ... அது... சில நேரங்களில் யானைக்கும் அடி சறுக்கும் கதையா போயிடுது.’’‘‘ஏமாற்றங்கள் எல்லா விஷயங்களிலும் இருக்கு. இனி நான் ஏமாற்றம் அடையாமல் பார்த்துக்கிறேன்.’’‘‘சரி, எங்க அண்ணன் ரவியிடம் கேட்டுப் பார்க்கிறேன். அந்த வஸந்தோட குடும்பத்தைப் பற்றி தெரிஞ்சுக்கலாம்.’’‘‘அவருக்கு எப்படித் தெரியும்?’’‘‘எங்க அண்ணனோட முழு நேர தொழிலே அரசியல்தான். கேட்டால் தெரிந்துவிடும். எதுனாலும் நீ பயப்படாதே. அதையும் ஒரு கை பார்ப்போம்!’’சம்யுக்தாவின் வார்த்தைகளிலிருந்த அழுத்தம் சங்கவிக்கு மேலும் ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது!.11ஆ.எஸ்.புரம் ரத்தின விநாயகர் கோயில் வாசலில் ஆட்டோவை விட்டு இறங்கினாள் வினிதா. அந்தச் சூழ்நிலை மனசுக்கு மிகவும் ரம்மியாக இருந்தது. கோயில் வாசலின் இருபுறமும் பூக்கடைகள்.பூ வாங்கிக் கொண்டாள் வினிதா. காலணிகள் காப்பகத்தில் செருப்புகளை கழற்றிப் போட்டுவிட்டு கோயிலுக்குள் சென்றாள்.கோயிலில் கூட்டம் அதிகமில்லை.இன்னும் பிருந்தா வரவில்லை என்பதை அறிந்து கொண்டாள். கைப்பேசியின் ரிங்க் டோனை Ôசைலன்ட் மோடில்’ போட்டுவிட்டு கோயில் பிராகாரத்தை மிகவும் நிதானமாக வலம் வந்தாள்.அந்தச் சூழ்நிலை மனசுக்கு மிகவும் நெகிழ்வைக் கொடுத்தது.நீண்ட நாள்களுக்குப் பிறகு அப்படியொரு அமைதி மனதுக்குக் கிடைத்தது.சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு முன் மண்டபத்தில் வந்தமர்ந்தாள்.கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.Ôகோயில் வாசலில் நிற்கிறேன்’ என்ற குறுஞ்செய்தியை பிருந்தா பதிவு செய்திருந்தாள்.Ôநான் கோயில் முன்மண்டபத்தில் இருக்கிறேன்!’ பதில் செய்தியை அனுப்பினாள் வினிதா.பிருந்தா அடுத்த நிமிடம் கோயிலுக்குள் நுழைந்தாள்.வினிதா இருந்த இடத்தைக் கண்டுகொண்டாள் பிருந்தா.‘‘ஹாய்... வினி...’’வினிதாவின் அருகில் வந்தமர்ந்தாள் பிருந்தா. வினிதாவை விட அழகி! சும்மா தேக்கு மரத்தில் இளைத்து இளைத்து செதுக்கியது போல் உடல்வாகு!வெண்ணையைக் கொண்டு மெழுகியது போல் மேனி!சுண்டி விட்டால் ரத்தம் வரும் சிவப்பு!‘‘என்ன வினி... இப்படித் துரும்பா இளைச்சு போயிட்டே?’’வினிதா பெருமூச்செறிந்தாள்.‘‘ஹும்... எல்லாம் என் தலையெழுத்து. வேறு என்ன சொல்ல?’’‘‘அவ்வளவு கஷ்டமா?’’‘‘ஒவ்வொரு நாளும் நெருப்பின் நடுவில் நடந்து போவது போலொரு தீப்பி ழம்புபின் வீச்சு.’’வினிதாவின் கண்களில் அவளையும் அறியாமல் நீர் திரண்டது.விட்டால் அழுதுவிடுவாள் போல் தோன்றியது.சுற்றும் முற்றும் பார்த்தாள் பிருந்தா.கோயில். இங்கு வைத்து பிரச்னையைக் கேட்டால் வினிதா உடைந்து விடுவாள்.அவள் அழ ஆரம்பித்து விட்டால் காட்சிப் பொருளாகி விடுவாள்.ஒரு நிமிஷம் யோசித்தாள் பிருந்தா.‘‘வினி... இங்க பக்கத்துல இருக்கிற ஹோட்டலுக்குப் போகலாம்.’’கிளம்பினர்.கூட்டமில்லாத டேபிள் முன்பாக வினிதாவும் பிருந்தாவும் எதிர் எதிராக அமர்ந்தனர்.‘‘வினி... என்ன சாப்பிடலாம்?’’‘‘எனக்கு எதுனாலும் ஓகேதான்.’’‘‘ஏய்... உனக்குத்தான் ரவா ரோஸ்ட் ரொம்பப் பிடிக்குமே?’’‘‘உண்மைதான்!’’பேரர் வந்து நின்றார்.பிருந்தா பேச்சை நிறுத்திவிட்டு பேரரைப் பார்த்தாள்.‘‘ரவா ரோஸ்ட் ஒண்ணும் மசால் ரோஸ்ட் ஒண்ணும் கொண்டு வாங்க. சாப்பிட்டப் பிறகு மறுபடி சொல்றோம்.’’பேரர் நகர்ந்தார்.‘‘எப்படி வினி... தற்கொலை பண்ணும் அளவிற்கு உன்னால் போக முடிந்தது?’’‘‘அந்தளவிற்கு வேதனை. மனஉளைச்சல். மருந்துக்குக்கூட சிரிப்பில்லை. சந்தோஷமில்லை. ஒரே துயரம்.’’ஒவ்வொரு பிரச்னையையும், நடந்த துயரங்களையும் விலாவாரியாகச் சொல்லி முடித்தாள் வினிதா.‘‘எல்லாம் பணம் தின்னும் கழுகுகள். எதுக்காக அவ்வளவு தூரம் நீ விட்டுக் கொடுத்து போனே?’’பேரர் வந்தார்.ஆர்டர் கொடுத்த சிற்றுண்டியை பறிமாறிவிட்டுப் போனார்.இருவரும் சாப்பிட்டுக் கொண்டே பேசினர்.‘‘பிருந்தா... நான் எங்கே போக முடியும்?’’‘‘பிறந்த வீட்டுக்குப் போக வேண்டியதுதான். அவங்கதானே கல்யாணம் செய்து வச்சாங்க?’’‘‘போயிருக்கலாம். வாழாவெட்டியா போய் நான் உட்கார்ந்துட்டால் சங்கவியோட வாழ்க்கையை பாதிக்குமே?’’‘‘இப்படியே விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து வாழ்ந்தே ஒருத்தி காணாமல் போய்விட வேண்டியதுதானா? என்ன ஒரு கேவலமான சூழ்நிலை ஒருத்திக்கு?’’‘‘வேறு வழியில்லை. விட்டுக்கொடுத்துப் போகணும். வீட்டோடு அனுசரித்துப் போகணும்.’’‘‘இல்லைனா, Ôவீட்டோடு அனுசரித்து போகாதவள்’னு சமுதாயம் ஒரு முத்திரை குத்தும்.’’‘‘அதுதான் பயம்.’’‘‘நம்ம நாட்டில் நம்மளுக்காக வாழ்வதைவிட அடுத்தவங்களை அனுசரித்து வாழவேண்டிய நிர்ப்பந்தம். கழுத்தில் ஒரு நகை போட்டால், ஒரு டிரெஸ் போட்டால், நெற்றில் ஒரு பொட்டு வைத்துக் கொண்டால், காலில் ஒரு செருப்பு அணிந்து கொண்டால், Ôஅடுத்தவங்க நம்மளை பற்றி என்ன நினைப்பாங்களோ?’ன்னு எல்லாத்துக்கும் பயப்படறோம். அடங்கி, ஒடுங்கி போறோம்.’’பேரர் வந்தார்.‘‘அப்புறம்... என்ன சாப்பிடலாம் வினி?’’வினிதா யோசித்தாள்.பிருந்தாவே திரும்ப ஆர்டர் செய்தாள்.‘‘ஆளுக்கு ஒரு செட் பூரி, கிழங்கு. சாப்பிட்ட பிறகு சுகர் தூக்கலா ரெண்டு காபி.’’பேரர் நகர்ந்தார்.‘‘எது வந்தாலும் பரவாயில்லை. எது நடந்தாலும் பரவாயில்லை. நீ துணிச்சலா நில்லு. அப்புறம் பார்க்கலாம். தயவுசெய்து தற்கொலை எண்ணத்தை மட்டும் அறவே மனசிலிருந்து அடியோடு அறுத்து வீசு.’’‘‘ஓகே! தைரியமா இருக்கிறேன்.’’இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.கை அலம்பிவிட்டு, பேரர் கொடுத்த பில்லுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு சொன்னாள் பிருந்தா...‘‘வினி, இப்போ ஆட்டோ பிடிச்சு செல்வபுரம் போறோம்.’’‘‘எதுக்கு?’’‘‘உன்னோட டேட் ஆஃப் பர்த்தும் டைமும் கொண்டு வந்திருக்கேதானே?’’‘‘ஆமாம்!’’‘‘உங்க வீட்டுக்காரர் பற்றிய குறிப்பு?’’‘‘இருக்கு!’’‘‘அப்புறம் என்ன? செல்வபுரத்தில் இருக்கிற ஜோதிடரை போய்ப் பார்க்கலாம்’’இருவரும் ஹோட்டலை விட்டு வெளியில் வந்தனர்.கைப்பேசியை எடுத்து ஆட்டோவுக்கு புக் செய்தாள் பிருந்தா.Ôஜாதகத்தை பார்த்துவிட்டு ஜோதிடர் என்ன சொல்வாரோ?’ என்ற பயம் வினிதாவின் மனதில் தோன்றியது..12கோவை ஆர்.எஸ்.புரத்தில் கிளம்பிய ஆட்டோ, காந்தி பார்க் வழியாக செல்வபுரத்தை நோக்கிச் சென்றது.சந்துமில்லாத சாலையுமில்லாத குறுகலான வீதியில் போய் ஆட்டோ நின்றது.அந்த வீதி மிகவும் ஜன நெரிசலில் சிக்கித் திணறிக் கொண்டிருந்தது.வாகனங்களை ஒன்றின் மீது ஒன்றை இடித்தபடி நிறுத்தி வைத்திருந்தனர்.முழுவதும் குடியிருப்புப் பகுதி என்ற முத்திரையும் இல்லாமல், முழுவதும் வர்த்தகம் நடைபெறும் இடமும் இல்லாமல் அந்தப் பகுதி இரண்டும் கெட்டானாக இருந்தது.அங்கும் இங்குமாக குடியிருக்கும் வீடுகள். நடுநடுவே வியாபார கடைகள். காம்ப்ளெக்ஸ்கள்.மளிகைக்கடை, காய்கறிக்கடை, நிதி நிறுவன அலுவலகத்தை கீழ்த்தளத்தில் கொண்ட கட்டடத்தின் முதல் மாடியில் அந்த ஜோதிடர் அலுவலகத்தின் பெயர் பலகை தெரிந்தது.அந்த மளிகைக்கடையை ஒட்டிய சந்தில் முதல் மாடிக்குப் போகும் படிக்கட்டுகள் இருந்தன.வினிதாவும் பிருந்தாவும் முதல்மாடிக்குச் சென்றனர்.அந்த ஜோதிடரைப் பார்க்க ஏற்கெனவே இரண்டு, மூன்று பேர் காத்திருந்தனர்.ஒரு மணி நேரத்தில் வினிதா அழைக்கப்பட்டாள்.பிருந்தாவும் ஜோதிடரை பார்க்க உடன் சென்றாள்.பத்துக்கு பதினாறு அளவில் சற்று விசாலமான அறை. அந்த ஜோதிடருக்கு எழுபது வயதை நெருங்குகின்ற தோற்றம். அனுபவத்தின் முதிர்ச்சி முகத்தில் தெரிந்தது.வெள்ளை நிறத்தில் முழுக்கை கதர் சட்டை சலவையில் கண்ணைப் பறித்தது.சட்டைக்கு மேல் மஞ்சள் நிறத்துண்டு.கழுத்து நிறைய ருத்ராட்ச மாலை தெரிந்தது.நெற்றியில் விபூதிப்பட்டை, நெற்றி நடுவில் ஒரு பெரிய குங்குமப் பொட்டு.தாம்பூலம் தரித்ததின் சிவப்பு, வாயில் மிச்சமிருந்தது.அகன்ற மேஜை மீது கம்ப்யூட்டர் மானிட்டர். அருகில் பிரின்டர்.அவருக்குப் பின்புறமிருந்த விசாலமான ஷோகேஷ் முழுக்க சாமி படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பூஜைத் தட்டு, விபூதி, தீபம் என்று ஒரு கோயிலை நினைவூட்டின.ஊதுவத்தியின் வாசனை பக்தி மார்க்கத்தைக் காட்டிற்று.அவற்றை பிரமிப்புடன் பார்த்தாள் வினிதா. அந்த மாதிரியான இடத்துக்கு அதற்கு முன்பாக போன அனுபவம் அவளுக்கு இல்லை.‘‘உட்காருங்கம்மா.’’ஜோதிடர் தனக்கு எதிரிலிருந்த இருக்கைகளைக் காட்டினார்.வினிதாவும் பிருந்தாவும் உட்கார்ந்தனர்.‘‘சொல்லுங்கம்மா... யாருக்கு ஜாதகம் பார்க்கணும்?’’‘‘எனக்குத்தான் பார்க்கணும் ஐயா.’’வினிதா சொல்லவும், அவளைப் பார்த்தார் ஜோதிடர்.‘‘ஜாதகம் கொண்டு வந்தீங்களா?’’வினிதா குறுக்கும் நெடுக்குமாக தலையை ஆட்டினாள்.‘‘இல்லைங்க ஐயா.’’‘‘அப்புறம்?’’அந்தக் கேள்விக்கு பிருந்தா மிகத் தெளிவாக பதில் சொன்னாள்.‘‘இவள் பேரு வினிதா. இவளோட வீட்டுக்காரர் பேரு கார்த்திகேயன். கல்யாணமாகி ஒரு வருஷம்கூட பூர்த்தியாகலை. ரெண்டு பேருக்கும் ஒத்துப்போறதில்லை. அவங்க ரெண்டு பேரோட பிறந்த தேதி, பிறந்த நேரத்தைக் குறிச்சிக் கொண்டு வந்திருக்கோம்.’’‘‘அந்தத் தேதிகளைக் கொடுங்க.’’வினிதா ஒரு தாளில் குறித்து கொண்டு வந்திருந்தாள்.அந்தத் தாளை ஜோதிடரிடம் கொடுத்தாள்.கம்ப்யூட்டரில் அந்தத் தேதி, நேரங்களைக் கொடுத்து, ஜாதகக் கட்டம் கொண்ட விவரத்தை பிரின்ட்அவுட் எடுத்தார்.ஏதேதோ கணக்குப் போட்டார்.நீண்ட நேரத்திற்குப் பிறகு வினிதாவைப் பார்த்து, புருவத்தை உயர்த்தினார்.‘‘உங்க கல்யாண நாள் நினைவிருக்கா?’’‘‘நினைவில் இருக்கு சாமி!’’‘‘சொல்லுங்க...’’வினிதா திருமணத் தேதியை சொல்லவும், ஜோதிடர் குறித்துக் கொண்டார்.அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கணித்தார்.ஒரு முடிவுக்கு வந்தவராக பலன் சொல்ல ஆரம்பித்தார்.‘‘அம்மா, உங்க நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி. உங்க வீட்டுக்காரர் நட்சத்திரம் கிருத்திகை, ரிஷப ராசி. ரெண்டுக்கும் சமசப்த ராசி. பொருத்தமும் அமோகமா இருக்கு!’’‘‘பின்னே ஏன் எங்களுக்குள்ள சண்டையும் சச்சரவுமா இருக்கு?’’‘‘அதுக்குள்ளே அவசரப்பட்டு கேள்வி கேட்டால் எப்படி? இன்னும் ஆயிரம் விஷயங்கள் ஜாதகத்தில் இருக்கு! ஒவ்வொரு விஷயமா வரேன்...’’‘‘ஸாரிங்க ஐயா... ஏதோ ஒரு ஆர்வத்தில் கேட்டுட்டேன்.’’வினிதா வருத்தம் தெரிவிக்கவும், ஜோதிடர் தொடர்ந்தார்.‘‘உங்களுக்கு ஏழரை சனி காலம். உங்க வீட்டுக்காரருக்கு அஷ்டம சனி காலம். இந்த நேரத்தில் நீங்க கல்யாணம் செய்தது தவறு. தவிர, உங்க கல்யாண நாள் சரியில்லை. அன்னிக்கு புனர்பூசம் நட்சத்திரம். தாலி கட்டின நேரத்தில் உங்க ராசிக்கு சந்திராஷ்டமம்.’’‘‘புரியலை சாமி.’’‘‘அதாவது உங்க ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் நின்ற ராசியில் திருமணம் நடந்திருக்கு. எந்தவொரு சுபகாரியமும் சந்திராஷ்டம தினத்தில் செய்யக்கூடாது.’’‘‘இனி என்ன சாமி செய்றது?’’கவலையுடன் கேட்டாள் வினிதா.ஜோதிடர் மிகவும் தெளிவாக விளக்கம் சொன்னார்.‘‘பயப்பட வேண்டாம்மா. எந்தவொரு இமாலய பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்கு. சரி பண்ணிக்கலாம். இன்னும் ரெண்டு மாதத்தில் தனுசு ராசியிலிருந்து சனி பகவான் மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகப்போகிறார். உங்களுக்கு ஏழரை சனியும் உங்க வீட்டுக்காரருக்கு அஷ்டம சனியும் விலகுது. அப்புறம் ஒரு நல்ல நாளா பார்த்து மறுமாங்கல்ய பூஜை செய்துக்கலாம்.’’‘‘புரியல சாமி.’’‘‘உங்க ரெண்டு பேருக்கும் தாரா பலனுள்ள நாளில்... அதாவது, உங்க ரெண்டு பேர் ராசிக்கும் பொருந்தி வரும் நட்சத்திரமுள்ள நாளில் உங்க கழுத்திலுள்ள தாலியை கழற்றி, இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வம் கோயில் உண்டியலில் போட்டு விடணும். பிறகு ஒரு புதுத்தாலியை ஏற்கெனவே வாங்கி வச்சிருந்து உங்க கணவன் திரும்ப புதுசா உங்க கழுத்தில் கட்டணும்.’’‘‘இப்போ எங்கக் குடும்பத்தில் இருக்கிற சூழ்நிலையில் இதெல்லாம் நடக்கக்கூடிய விஷயமா தெரியலை சாமி.’’‘‘நடத்தி விடலாம். அதுக்கும் ஒரு சந்தர்ப்பம் கூடி வரும். கவலைப்படாதீங்க!’’வினிதாவும் பிருந்தாவும் அமைதியாக இருக்கவும், ஜோதிடர் தொடர்ந்தார்.‘‘உங்க வீட்டுக்காரர் ஜாதகப்படி பலன் சொல்றேன். உங்க வீட்டுக்காரர் சின்ன வயசா இருக்கும்போதே அவங்க அப்பா இறந்திருப்பார்.’’‘‘உண்மைதான் சாமி!’’‘‘உங்க வீட்டுக்காரருக்கு இருதார தோஷம் இருக்கு. அதன்படி ஏற்கெனவே ஒரு பொண்ணோடு உறவு இருந்திருக்கு. அது இப்போ விலகிப் போயிருச்சு. மறு மாங்கல்ய பூஜையும் செய்துட்டால் எல்லா பிரச்னையும் சுத்தமா விலகிடும்!’’‘‘நீங்க சொல்லும்படி செய்துக்கலாம்.’’‘‘உங்க மாமியார் ஒரு கறார் பேர்வழி. பையனை தன்னோட இறகுக்குள் போட்டு பொத்திப் பொத்தி ஒரு குருவிக் குஞ்சைப் போல் வளர்த்திருக்காங்க. அவர் செய்யும் தப்புகளையும் தட்டிக் கேட்க மாட்டாங்க. காரணம், தன் பையன் மீதிருக்கும் பாசம். தன் பையனோட பாசத்தை வேறு யாரும் பங்கு போட்டுக்க விடமாட்டாங்க. அப்படிப் பங்கு போட வந்த நீங்க அவங்களுக்கு எதிரி ஆகிட்டீங்க.’’வினிதா ஆமோதித்தாள்.‘‘நூறு சதவிகிதம் உண்மை!’’‘‘இதுவொரு வகையான குணம். நிறைய பெண்கள் இந்தக் குணத்தில் இருக்காங்க. ஒரே மகனைப் பெத்த தாய். அதுவும் இளம் விதவைனா இந்தக் குணம் சிலருக்கு இருக்கும். தன்னோட மகனுக்கு கல்யாணம் செய்துவைக்க பொண்ணுக்காக அலைவாங்க. கல்யாணத்தை ஜாம் ஜாம்னு செய்வாங்க. மருமகள் வீட்டுக்கு வந்துவிட்டால் போதும்... அப்புறம் அவள்தான் மாமியாருக்கு முதல் எதிரி. இந்தம்மா ஒரு பேராசைக்காரி. நகை, நட்டுனு சம்பந்தம் செய்த இடத்தில் கேட்டு நச்சரிப்பாங்களே?’’சங்கவி வாயடைத்துப் போய், அந்த ஜோதிடரை வியப்பாகப் பார்த்தாள்.‘‘நிஜம்! நீங்க சொல்றது அத்தனையும் நிஜம்!!’’‘‘உங்க மாமியாரை சரி செய்தால் போதும்... குடும்பப் பிரச்னை ஒரு நல்ல முடிவுக்கு வரும்!’’Ôஎப்படி? இது எப்படிச் சாத்தியம்? நடந்ததையெல்லாம் நேரில் நின்று பார்த்தது போல் சொல்கிறாரே! கடவுளின் மறு அவதாரமா?’வியப்பில் கேட்டும் விட்டாள்.‘‘எப்படிங்க சாமி... நீங்க என்ன கடவுளா?’’ஜோதிடர் வேகமாக மறுத்தார்.‘‘இல்லைம்மா. இதுக்கு நான் கடவுளாக இருக்க வேண்டாம். கடவுளோட அனுக்கிரகம் இருந்தால் போதும். எங்க குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலே ஜோசியம்தான். பாரம்பரியமான பயிற்சி. அதனால கிரஹங்களின் நிலையைக் கொண்டு ஜோசியத்தை கணிக்க முடியுது. அப்புறம், இடைவிடாத முயற்சி. தவிர, சைக்காலாஜியில் முதுகலைப்பட்டமும் படிச்சிருக்கேன். அதனால் அனுமானிக்க முடியுது. உங்க மாமியாரோட மனநிலையை மாற்றணும். அதுக்கு கொஞ்சம் பொறுமை அவசியம்.’’பிருந்தா கேட்டாள்.‘‘சாமி... இவளோட வாழ்க்கையில் பிரிவு வராதே?’’‘‘கண்டிப்பா அப்படி நடக்க வாய்ப்பில்லை. கொஞ்சம் பொறுத்திருப்போம். நான் சொல்ற மாதிரி சில பரிகாரங்களை நீங்கள் செய்தாலே போதும்.’’‘‘எங்க வீட்டுக்காரர் குடிக்கிறார் சாமி.’’‘‘அதுக்கு எதுவும் டாக்டரிடம் காண்பித்து சரி பண்ணிடலாம். உங்க கணவரோட வீட்டில் முன்னோர் சாபமிருக்கு. சில தோஷங்களும் இருக்கு. அதுக்குப் பரிகாரம் செய்யணும்.’’‘‘செய்யலேனா?’’‘‘உங்க மாமியார் அல்லது உங்க கணவரை பாதிக்கலாம்.’’வினிதா அதிர்ந்தாள்.‘‘எ... என்ன இப்படிச் சொல்றீங்க?’’‘‘நெருப்புன்னு சொன்னாலே வாயை சுட்டு விடாது. பித்ரு தோஷ நிவர்த்திப் பரிகாரம், தில ஹோமம் செய்துட்டால் போதும். எல்லாம் சரியாயிடும். உங்க வீட்டில் சொல்லுங்க.’’ஜோதிடரின் வார்த்தைகள் சற்று நம்பிக்கை கொடுத்தன.‘‘செய்றதுக்கு அவசியம் ஏற்பாடு பண்றேன். அதை எங்கே வச்சு செய்யணும்?’’‘‘ராமேஸ்வரத்தில் வச்சு செய்வது நல்லது.’’‘‘அவ்வளவு தூரம் அவங்க வந்து செய்வாங்களான்னு தெரியலை. இங்கே ஜோசியம் பார்க்க வந்ததே வீட்டில் தெரியாது.’’‘‘அம்மா, உங்க குடும்பம் நல்லா இருக்க பரிகாரம் செய்வது நல்லது.’’‘‘சந்தர்ப்பம் வரும்போது எங்க வீட்டில் பேசிப் பார்க்கிறேன்.’’‘‘நல்லதும்மா.’’‘‘சாமி, என்னோட ஜாதகத்தைக் கொண்டு என்னோட தங்கையைப் பற்றி சொல்ல முடியுமா?’’‘‘ஓ... சொல்லலாமே! ஜாதகத்தின் மூன்றாம் இடத்தைக் கொண்டு இளையவங்களைப் பற்றி கணிக்க முடியும்!’’திரும்பவும் ஜாதகத்தை ஆய்வு செய்த ஜோதிடர், வினிதாவைப் பார்த்து சொன்னார்.‘‘உன்னோட தங்கை ஒரு பிரச்னையில் சிக்கிட்டுத் தவிக்கிறாள். கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். இல்லைனா கொஞ்சம் பிரச்னை பெரிதாகிவிடும். சொல்லி வைங்க...’’வினிதா அதிர்ந்து போனாள்.‘‘சாமி... என்ன சொல்றீங்க? பயமா இருக்கு.’’‘‘பயப்பட வேண்டாம்.’’‘‘என்ன சாமி... பெரிய குண்டு ஒண்ணைத் தூக்கிப் போட்டுட்டு பயப்பட வேண்டாம்னு சொல்றீங்க?’’‘‘இதுதான் ஜோசியத்திலுள்ள சிக்கல். உண்மையான விஷயத்தை வெளிப்படையாகச் சொன்னால் பயப்படுவீங்க. உண்மையை மறைச்சு சொன்னால் அப்புறம் ஒரு சம்பவம் தவறாக நடந்துவிட்டால் ஜோசியருக்கு சொல்லத் தெரியலைனு சொல்லிடுவீங்க. நெருப்புனு சொன்னால் நாக்கை சுட்டுவிடாதுனு சொன்னேன் இல்லையா?’’‘‘ஆமாம்... சொன்னீங்க.’’‘‘அதனால் எச்சரிக்கையா யாரிடமும் பழகச் சொல்லுங்க.’’‘‘அவசியம் சொல்றேன் சாமி.’’ஜோதிடர் நிறைய விளக்கங்கள் கொடுக்கவும், மனம் தெளிவு பெற்றாள் வினிதா.ஜோதிடருக்கான சன்மானத்தைக் கொடுத்துவிட்டு வெளியில் வந்தனர்.ஆனால், வினிதா மிகவும் குழம்பிப் போனாள்.Ôசங்கவிக்கு என்ன நடக்குமோ?’ என்று பயந்தாள்..13சங்கவி ஸ்கூட்டியைக் கிளப்பிக் கொண்டு மகாலிங்கபுரம் ஆர்ச்சை கடந்து, காந்தி சிலையை அடைந்தாள். அங்கு காந்தி சிலையை ஒட்டி இடப்புறம் திரும்பினாள்.புதுதிட்ட சாலை.பொள்ளாச்சியில் மிக அகண்ட சாலை. கான்கிரீட் சாலை. மிக நேர்த்தியான சாலை.சாலையின் இருபுறமும் மிகவும் உயரமான கட்டடங்கள்.மிகப் பெரிய மருத்துவமனைகளும் வங்கிகளும் இரு புறமும் வியாபித்திருந்தன.காந்தி சிலையிலிருந்து சுமார் 600 மீட்டர் தூரத்திலிருந்தது கிளினிக்.அதன் வலப்புறம் திருப்பினாள் சங்கவி.பிரதான சாலையை ஒட்டி கரியகாளியம்மன் கோயில்.அந்தக் கோயில் வளாகத்தின் கேட் திறந்திருந்தது.கோயிலுக்கு முன்னால் நீண்ட அகன்ற ஒரு பெரிய மைதானம்.கோயிலுக்கு இரு புறமும் நறுமணம் தரும் பூச்செடிகள். ஒரு சிறு பூங்காவைப் போலிருந்தது!மனசுக்கு ஒரு ரம்மியமான சூழ்நிலை.அந்தப் பரபரப்பான நகரில் சற்று உள்ளே தள்ளி வாகன இரைச்சல் கேட்காத நிலையில் ஒரு அமைதியான கோயில்!ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு, காலணியை கழற்றிப் போட்டுவிட்டு கோயிலுக்குள் பிரவேசித்தாள்.அதிகக் கூட்டமில்லை.அங்கு வஸந்த்தைக் காணவில்லை.கைப்பேசியின் ரிங்க் டோனை சைலென்டில் போட்டாள்.கோயில் பிராகாரத்தை வலம் வந்த சங்கவி, சாமி கும்பிட்டாள்.அர்ச்சகர் தீபாராதனை காட்டினார். சங்கவி மிகவும் மனமுருக வேண்டிக் கொண்டாள்.வஸந்த் வந்தால் என்ன பேசுவான்? அவனை எப்படி எதிர்கொள்வது?எந்த நிலையிலும் அவனை மிக சாதாரணமாக எதிர்கொள்ள வேண்டும்.அவனைக் கண்டு பின் வாங்கக்கூடாது. பயப்படக்கூடாது. சில விளக்கங்களை நேரடியாகக் கேட்க வேண்டும்.மிகவும் தெளிவாக மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டாள்.எந்தவொரு பிரச்னைக்கும் அதைச் சந்திக்கும் முன்பாக மனசுக்குள் ஒரு ஒத்திகை பார்த்துவிட்டு, மனசை திடப்படுத்திக் கொண்டு அந்தப் பிரச்னையை எதிர்கொண்டால் ஒரு தீர்வு கிடைக்கும்!நம் பயமே பலவீனம். திருடனுக்கு, வழிப்பறிக்கொள்ளையனுக்கு, நம் எதிராளிக்கு என்று எல்லா இடத்திலும் நம் பயம் நமக்கு பலவீனம். எதிராளிக்கு அது பலம்!சுலபமாக நம்மை வீழ்த்த முடியும்.எந்தவொரு நிலையிலும் தைரியமும் பிரச்னையை எதிர்கொள்ளும் சாதுர்யமும் பொறுமையும் வெற்றிக்கு அடித்தளம்.சாமி தரிசனம் முடித்துக் கொண்டு கோயிலின் முன் மண்டபத்திற்கு வந்தாள் சங்கவி.வஸந்த் நின்று கொண்டிருந்தான்.நீலநிற ஜீன்ஸ். வெள்ளை நிறத்தில் கோடு போட்ட டி_ஷர்ட்.அவனுடைய முகத்தில் இரண்டு நாளாக சவரம் செய்யப்படாத தாடி. எப்பொழுதும் வழுவழுவென்று முழுக்க மழித்துக் கொண்டிருப்பான். என்ன ஆச்சு? சோகமாகத் தெரிந்தான்.இரண்டு நாள்களுக்கு சவரம் செய்யாமல் விட்டாலே முகத்தில் ஒரு சோகக்கோடு விழுந்துவிடும்.தான் சோகமாக இருப்பது போல் காட்டிக்கொள்கிறானோ?சங்கவியைப் பார்த்ததும் புன்னகைத்தான். அந்தப் புன்னகையில் ஒரு சோகம் இழையோடிற்று.‘‘நீ வரப் போவதில்லைனு நினைச்சேன்.’’‘‘என்ன அப்படியொரு நினைப்பு?’’‘‘இல்லே... நான் நடந்து கொண்ட விதம் அப்படி. அதான் உன்னைக் கோயிலுக்கு வரவழைச்சேன்.’’‘‘எதுக்கு சாமி கும்பிடவா? இல்லை, கடலைப் போடவா?’’‘‘ஓ! மௌன மொழி பேசும் பைங்கிளி வாய்விட்டுப் பேசுதே?’’‘‘கிண்டல் செய்றீங்களா?’’‘‘இல்லை, சீண்டிப் பார்த்தேன்.’’‘‘சொல்லுங்க... எதுக்கு என்னைய வரச் சொன்னீங்க?’’‘‘நடந்த தவறுக்கு உன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதற்கு.’’‘‘பெரிய வார்த்தை... காலில் விழுவேன் என்று சொல்வது.’’‘‘பின்னே?’’‘‘தூக்கமே போயிடுச்சு. துக்கம்தான் மனசெல்லாம் நிறைஞ்சிருக்கு. தற்கொலை பண்ணிட்டு செத்துப் போயிடலாம்னு தோணிச்சு. அவ்வளவு அருவருப்பா அன்னிக்கு என்கிட்ட நடந்துட்டீங்க. இன்னும் உடம்பெல்லாம் கம்பளிப்பூச்சி ஊர்வது போலிருக்கு.’’‘‘மன்னிச்சிடு. ஒரு அவசர புத்தியில் அப்படி நடந்துக்கிட்டேன். உண்மையில் நீ வராமல் போயிருந்தால் என்னோடு பேசாமல் விலகியிருந்தால் செத்திருப்பேன்.’’‘‘வேண்டாம்! அப்படியொரு விபரீத முடிவு அறவே வேண்டாம். எங்க அக்கா வீட்டில் நடக்கும் பிரச்னைக்கு நீங்க ஒரு தீர்வு சொல்வீங்கன்னுதான் அன்னிக்கு உங்களோடு ஆழியார் வரைக்கும் வந்தேன். ஆனா, நீங்க என்னடான்னா பஞ்சுமிட்டாயைக் காட்டி ஒரு குழந்தையை கடத்திட்டுப் போவது போல் நடந்துக்கிட்டீங்க.’’‘‘தப்புத்தான்... உன்மீது என்னோட லவ்வை எப்படி வெளிப்படுத்தறதுன்னு தெரியலை. என்னோட சேர்ந்த சில பசங்க இப்படித்தான் நடந்துக்கணும்னு தவறா சொல்லிக் கொடுத்துட்டாங்க. என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தன் சென்னையில் இருக்கான். பத்திரிகையில் சப் எடிட்டரா இருக்கான். அவனோட வாழ்க்கையின் லட்சியம் சினிமாவில் பாட்டு எழுதணும். பாடலாசிரியரா வரணும்கிறதுதான். அவன் சொன்னான்: Ôபூவைப் பறிக்க கோடரி எதுக்கு?’ன்னு வைரமுத்து சொல்லுவரே! அதுபோல் பெண்ணிடம் அணுகுமுறைங்கிறது மென்மையா இருக்கணும். கல்யாணத்துக்கு முன்பும் கல்யாணத்திற்குப் பின்பும்’னு சொன்னான். என்னோட குளோஸ் ஃப்ரெண்ட். நடந்த விஷயத்தை சொல்லவும் அவன் கண்ணை மூடிட்டு திட்டினான். உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொன்னான்.’’‘‘ஒரு பொண்ணுகிட்ட எப்படிப் பழகணும்னுகூட தெரியாதா?’’‘‘தெரியாது! சுற்றிலும் இருக்கிறவன் தவறான பாதையைக் காட்டும்போது அதுதான் சரியான வழின்னு தெரியுது.’’சங்கவியால் அவனை புரிந்துகொள்ள முடியவில்லை. Ôஇவன் நல்லவனா? கெட்டவனா? உண்மை பேசறானா? நடிக்கிறானா?’கேட்டும் விட்டாள்.‘‘உங்க அப்பா அரசியல்வாதியா?’’‘‘ஆமாம்.’’‘‘அவர் பேரை தெரிஞ்சிக்கலாமா?’’‘‘ரயில்ரங்கா.’’‘‘அது என்ன ரயில்?’’‘‘ஒரு காலத்தில் ரயில்வேயில் சில வேலைகளுக்கு சப் கான்டிராக்ட் எடுத்து செய்திட்டிருந்தார். அந்த அடை மொழி கூடவே ஒட்டிக்கிச்சு.’’‘‘அவர் மூலம் எங்க அக்கா வீட்டுப் பிரச்னையை எப்படித் தீர்ப்பீங்க?’’அவளுக்கு காதலைவிட தன்னுடைய அக்கா வீட்டுப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைத்தாக வேண்டும். அதையே நினைச்சு வீட்டில் மருகிக்கொண்டிருக்கும் தன்னுடைய பெற்றோர் அந்தப் பிரச்னையிலிருந்து வெளியில் வந்து இயல்பாக இருக்க வேண்டும்.சங்கவியை வியப்புடன் பார்த்தான் வஸந்த்.‘‘உங்க அக்கா மேல் உனக்கு அவ்வளவு பாசமா?’’‘‘ஏன் அப்படிக் கேட்கறீங்க?’’‘‘எப்போ பார்த்தாலும் உங்க அக்கா வீட்டுப் பிரச்னையை முன்நிறுத்திப் பேசறியே?’’‘‘ஆமாம்! எங்க அக்கான்னா எனக்குப் பிடிக்கும். அதைவிட அவள் பிரச்னையினால் எங்க அப்பா, அம்மா நிம்மதியை இழந்துட்டாங்க. அதான் ரொம்ப கவலையா இருக்கு.’’‘‘பிரச்னையை விடு. எங்க அப்பாவுக்கு நல்ல அரசியல் செல்வாக்கு இருக்கு. எப்படியாவது உங்க அக்கா வீட்டுப் பிரச்னையை சரி பண்ணிடலாம்.’’தைரியம் கொடுத்தான் வஸந்த்.அந்த வார்த்தைகள் சங்கவிக்கு ஆறுதலாக இருந்தன.சங்கவியின் அந்த எதிர்பார்ப்பை வஸந்த் பயன்படுத்திக்கொள்ளப் பார்த்தான்.‘‘என் உயிரைக் கொடுத்தாவது உங்க அக்காவோட பிரச்னையை நல்ல வழியா முடிச்சுத்தர பார்க்கிறேன்.’’குழந்தை ஐஸ்க்ரீமை கண்டு குதூகளிப்பது போல் சங்கவி மகிழ்ச்சியடைந்தாள்.‘‘உண்மையாவா சொல்றீங்க?’’‘‘சத்தியமா! உங்க அக்கா பிரச்னையில் தலையிடுவதற்கு முக்கியக் காரணம் உன் மீது நான் கொண்டிருக்கும் காதல்!’’அதைச் சொல்லவும் சங்கவியின் முகத்தில் ஒருவித வெட்கம் படர்ந்ததை வஸந்த் கவனிக்கத் தவறவில்லை.Ôஇனி இவளை எந்த நிலைக்கும் இழுக்கலாம். இழுத்த இழுப்புக்கெல்லாம் கட்டுப்படுவாள்!’தீர்மானித்துக் கொண்டான் வஸந்த்.நீண்ட நேரத்திற்குப் பிறகு இருவரும் கோயிலை விட்டு வெளியில் வந்தனர்.சங்கவியிடம் விடைபெற்றுக் கொண்டு வஸந்த் காரில் ஏறிப் பறந்தான்.கண்ணிலிருந்து வஸந்தின் கார் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த சங்கவி, கைப்பேசியை எடுத்து ரிங்க் டோனின் வால்யூமை அதிகப்படுத்தினாள்.திரையில், மூன்று முறை வினிதா அழைத்ததற்கான மிஸ்டு கால் காட்டிற்று.Ôஎதற்காக இத்தனை முறை அக்கா அழைத்திருக்கிறாள்?’வினிதாவின் எண்களுக்கு அழைப்புக் கொடுத்தாள் சங்கவி.மறுநொடி மறுபக்கம் வினிதா லைனில் வந்தாள்.‘‘ஹலோ... சங்கவி... எங்கே இருக்கே? ஏன் போனை எடுக்கல?’’‘‘கோயிலுக்கு வந்தேன் அக்கா. நல்ல இருக்கியா?’’‘‘நான் நல்லா இருக்கேன். உன்னைப் பற்றித்தான் எனக்குக் கவலை.’’‘‘எதுக்குக் கவலைப்படறே?’’‘‘நானொரு ஜோசியரைப் பார்த்தேன். என் ஜாதகப்படி உனக்குப் புதுசா வந்திருக்கும் ஒரு புதிய நட்பால் ஆபத்து ஏற்படும்னு சொன்னார். உன்னிடம் யாரும் புதுசா பழகிட்டு இருக்காங்களா?’’சங்கவிக்கு தூக்கி வாரிப்போட்டது. அதிர்ந்து போனாள்.Ôபுதுசா பழகிட்டிருக்கிறது வஸந்த்தான். அவனால் எனக்கு ஆபத்தா?’‘‘என்ன சங்கவி... பதிலையே காணோம்?’’அதிர்ச்சியிலிருந்து வெளியில் வர முடியாத சங்கவி, அப்போதைக்கு வினிதாவிடமிருந்து தப்பித்துக்கொள்ள உளறிக் கொட்டினாள்.‘‘அ... அ... அப்படி யாரிடமும் நான் புதுசா பழகலையே அக்கா.’’‘‘பழகாமல் இருந்தால் நல்லது. எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரைதையா இருக்கப் பாரு.’’வினிதா பாட்டுக்குப் பேசிக் கொண்டேயிருந்தாள். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத சங்கவி, என்னவோ ஒரு யோசனையில் வினிதாவிடம் உளறிக்கொட்டி முடித்துக் கொண்டாள்.ஸ்கூட்டியை கிளப்பும்போதும் அந்தக் குழப்பமும் அதிர்வும் சங்கவியின் மனத்தை விட்டு முழுவதுமாக விலகவில்லை..14ஆட்டோவை விட்டு இறங்கி, வீட்டுக்குள் போனாள் வினிதா. அவளுடயை மனசுக்குள் இனம் புரியாத ஒருவித பயம் இருக்கத்தான் செய்தது.சிநேகிதிக்கு கல்யாணம் முடிவாகியிருப்பதால், அவளைப் பார்த்துவிட்டு வருவதாகப் பொய் சொல்லிவிட்டு ஜோதிடரை பார்க்கப் போன விஷயத்தை எப்படி மாமியாரிடமோ கணவனிடமோ சொல்ல முடியும்?ஜோதிடரிடம் போன விஷயத்தை மறைத்தால், எப்படி அவர் சொன்ன பரிகாரத்தைப் பற்றி பேச முடியும்?பரிகாரம் செய்யாமல் விட்டால் எதுவும் விபரீதம் ஏற்பட்டு விடுமோ? அந்த அச்சம் மனதில் அழுந்திற்று.எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது? எங்கிருந்து ஆரம்பிப்பது என்று விளங்கவில்லை.வீட்டுக்குள் பிரவேசித்த அடுத்த நொடிப்பொழுது, ஹாலில் உட்கார்ந்திருந்த பாக்யம் கண்கொத்திப் பாம்பு போல் வினிதாவை வழி மேல் விழி வைத்து காத்திருந்தது போல் கேட்டாள்.‘‘என்ன வினிதா... கல்யாணம் ஆகப்போற உன் சிநேகிதியைப் பார்த்துட்டு வந்துட்டியா?’’அந்தக் குரலில் ஒரு கடினமான தொனி இருந்தது. அதிகாரத்தன்மை!வினிதா ஒரு நொடிப்பொழுது தடுமாறிப்போனாள்.பொய்யை பொய்யைக் கொண்டே மறைக்க வேண்டும்.‘‘ஆ... ஆமாம். பார்த்துட்டு வந்திட்டேன் அத்தை.’’‘‘உன்னோட சிநேகிதி பேரு என்ன?’’‘‘பிருந்தா.’’‘‘அவளோட வீடு எங்கே இருக்கு?’’‘‘ஆர்.எஸ்.புரத்தில் இருக்கு.’’‘‘அவள் வீட்டுக்கு மட்டும் போயிட்டு வந்துட்டியா? வேற எங்கும் போகலையா?’’பாக்யத்தின் கேள்வியிலிருந்த தொனியில் ஏதோ ஒரு உள் குத்து இருப்பது தெரிந்தது.தொடர்ந்து சமாளித்தாள் வினிதா.‘‘ஆமாம். அவள் வீட்டோடு வந்துட்டேன்.’’‘‘பொய் சொல்லக் கூடாது...’’‘‘நி... நிஜம்... நிஜம்தான் அத்தை! வேணா என்னோட ஃப்ரெண்ட் போன் நம்பர் கொடுக்கிறேன்.... கேட்டுப் பாருங்க.’’‘‘வேலிக்கு ஓணான் சாட்சியா?’’‘‘அத்தை... என்ன சொல்றீங்க?’’‘‘உன்னோட பொய்யைத்தானே அவளும் சொல்வா?’’வினிதா பதில் பேசவில்லை. பதில் பேச முடியவில்லை.பாக்யமே தொடர்ந்தாள்...‘‘சிநேகிதி வீட்டுக்குப் போயிட்டு வருவதா சொல்றே... அப்புறம் செல்வபுரம் ஜோசியர்கிட்ட என்ன வேலை?’’தன்னுடைய கால்களுக்கு கீழுள்ள பூமி அப்படியே கீழ் நோக்கிப் போவது போல் வினிதா அதிர்ந்து போனாள்.பதில் பேச முடியவில்லை. பயத்தில் நாக்கு வறண்டு போனது.திக்குமுக்காடிப் போனாள்.இவளுக்கு எப்படி அதற்குள் ஜோதிடரிடம் போன விஷயம் தெரிந்தது?பாக்யம் விடவில்லை. மறுபடி கேட்டாள்.‘‘என்ன... பதிலையே காணோம்? இதெல்லாம் எப்படி எனக்குத் தெரியும்னு நினைக்கிறியா?’’வினிதா பதில் பேச முடியாமல் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.‘‘ஒரு பொய் சொன்னால் அதை மறைக்க இன்னொரு பொய் சொல்ல வேண்டி வருது பாரேன். அதற்கு ஜோசியரிடம் போவதாக உண்மையை சொல்லிட்டுப் போயிருக்கலாம்.’’‘‘உண்மையான காரணத்தை சொன்னால் அனுமதிக்க மறுப்பீங்களோன்னு ஒரு தயக்கம்...’’‘‘அதுக்காக பொய் சொல்வதா? நகை போடுவதா உன்னோட பெத்தவங்க சொன்ன பொய்யைப் போலவே நீயும் பொய்ப் பேசறியா?’’வினிதாவின் மனதில் நெருஞ்சி முள் தைத்தது போல் வலித்தது.எதை எங்குக் கொண்டு கோர்க்கிறாள். மிகப்பெரிய சாமார்த்தியசாலி!பாக்யமே தொடர்ந்தாள்.‘‘என்னோட சிநேகிதி ஒருத்தி அதே ஜோசியரை பார்க்க போயிருக்காள். அங்கே உன்னைப் பார்த்திருக்காள். உடனே எனக்கு போன் பண்ணி சொல்லிட்டாள்.’’‘‘இப்பவாவது உண்மையை சொல்... யார் ஜாதகத்தைப் பார்க்கப் போனீங்க?’’‘‘அ... அது... பிருந்தாவோட ஜாதகத்தைப் பார்க்க என்னை அழைத்துப் போயிருந்தாள்.’’‘‘அந்தப் பதிலை நீ முன்னமே சொல்லியிருக்கலாமே? நான் கண்டுப்பிடிச்சு கேட்டதிற்குப் பிறகு சொல்றேன்னா அதில் பொய் இருக்குன்னு வெளிப்படையாவே தெரியறது! ம்ம்... அப்புறம்?’’தலைக்கு மேல் வெள்ளம் போயாச்சு. இனி ஜான் போனால் என்ன? முழம் போனால் என்ன?விஷயத்தை சொல்லிவிடலாம். அதற்கு மேல் எடுத்துக்கொள்வதும் விட்டு ஒதுக்குவதும் மாமியாரின் முடிவைப் பொறுத்தது.வினிதா தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள்.‘‘என்னோட ஜாதகத்தையும் அவரோட ஜாதகத்தையும் பார்த்தேன்.’’‘‘ஜோசியர் என்ன சொன்னார்? உங்க அப்பா போட வேண்டிய நகையைப் போட்டு விடுவார்னு சொன்னாரா?’’பாக்யத்தின் குரலில் ஒரு நையாண்டி இழையோடியது.கடவுளே! இன்னும் நகை போட வேண்டிய பிரச்னை முடியவில்லையா?‘‘ஒரு பரிகாரம் செய்யணுமாம். அதைச் செய்தால் எல்லாம் சரியாகப் போகுமாம்!’’‘‘என்ன பரிகாரம்?’’‘‘இந்தக் குடும்பத்திற்கு முன்னோர் சாபம் இருக்காம்.’’‘‘அதுக்கு?’’‘‘உங்களுக்கோ உங்க மகனுக்கோ உயிரைக்கூட பாதிக்குமாம்.’’பாக்யம் சற்றும் அலட்டிக்கொள்ளாமல் புன்னகைத்தாள். அந்தப் புன்னகையில் ஒரு கேலி வழிந்தது.‘‘அதுக்கு என்ன செய்யணுமாம்?’’‘‘ராமேஸ்வரம் போய் பித்ரு தோஷப் பரிகாரமும் தில ஹோமமும் செய்யணுமாம்.’’‘‘அப்படிச் செய்துட்டால் எல்லாம் சரியா போகுமா?’’‘‘சரியாகப் போயிடும்னு ஒரு நம்பிக்கைதான் அத்தை.’’‘‘எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.’’‘‘உயிருக்கே ஆபத்துனு அவர் சொன்னதுதான் எனக்கு ஒரு பயம்.’’‘‘இதோ பார் வினிதா... பரிகாரத்திலெல்லாம் போற உயிரை பிடிச்சு வைக்க முடியாது. அது எந்தவொரு ஜோசியாராலும் முடியாது. வைத்தியம் செய்யும் டாக்டராலும் முடியாது!’’‘‘அதான் எப்படி ஒரு நோய் வரும் முன் காப்போம்னு உடலை முழு பரிசோதனை செய்து, அதுக்குத் தகுந்த மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வது போல் இந்தப் பரிகாரமும். முறைப்படி செய்துட்டால் நமக்கு வரும் பிரச்னையிலிருந்து விலகிக்கலாமே?’’‘‘என்னோட பாலிசி என்ன தெரியுமா?’’‘‘தெரியலையே...’’‘‘சொல்றேன்... நல்லா கேட்டுக்க... ஒரு நோய் வந்தப் பிறகு அதுக்கு மருந்து, மாத்திரை சாப்பிட்டால் போதும்னு நினைக்கிறவள். அதுபோல் பிரச்னை வரட்டும்... அப்புறம் பரிகாரம் செய்துக்கலாம்.’’பாக்யம் அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.அவளுடைய அந்த அழுத்தம் வினிதாவை வாயடைத்துப் போகச் செய்தது.பாக்யமே மறுபடியும் கேட்டாள்.‘‘அப்புறம்... வேறென்ன சொன்னார்?’’‘‘எனக்கும் அவருக்கும் கல்யாணம் செய்த நாள் சரியில்லையாம். என்னவோ சந்திராஷ்டம நாளாம்.’’‘‘அதுக்கு என்ன செய்யணுமாம்?’’‘‘மறுமாங்கல்ய பூஜை செய்யணுமாம்.’’‘‘அது எப்படிச் செய்வதாம்?’’‘‘என்னோட நட்சத்திரத்திற்கும் அவரோட நட்சத்திரத்திற்கும் உகந்த நாளா பார்த்து, இஷ்ட தெய்வ கோயிலுக்குப் போய், எனக்குக் கட்டியிருக்கும் தாலியை கழற்றிட்டு, ஒரு புதுத்தாலியைக் கட்டிக்கணுமாம்.’’‘‘பேஷ்! நல்ல பரிகாரம். செய்திடலாம். அதற்கு ஒரு நல்ல நாளா பார்த்து அந்த ஜோசியரிடம் குறிச்சு கொடுக்க சொல்லு... செய்திடலாம்.’’அந்தப் பரிகாரத்துக்கு மட்டும் உடனே மாமியார் ஒப்புக்கொள்வாள் என்று வினிதா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.மனசுக்குள் வினிதா சந்தோஷமடைந்தாள்.‘‘சரிங்க அத்தை... அந்த ஜோசியரிடமே ஒரு நல்ல நாள் பார்த்து குறிச்சிக்கலாம்.’’வினிதாவின் சந்தோஷம் சில வினாடிகளில் பொடிப் பொடியாக நொறுங்கிற்று பாக்யத்தின் பதிலால்-!‘‘வினிதா... அதிலொரு சின்ன மாற்றம்...’’‘‘என்ன... சொல்லுங்க அத்தை...’’‘‘நல்ல வசதியான வேறொரு பொண்ணா பார்த்து அதே நாளில் கார்த்திகேயனுக்கு மறுமணம் செய்து வைத்திடலாம். உன்னோட கழுத்தில் இருக்கிற தாலியைக் கழற்றிடலாம்!’’வினிதா வேதனையில் துடித்துப் போனாள்.‘‘அத்தே...’’‘‘ஆமாம்! அதான் சரியான பரிகாரம். உங்க அப்பாவால் சொன்ன நகையைப் போட முடியாது இல்லையா? அதான்...’’‘‘இப்படி என்னோட தலையில் கல்லை தூக்கிப் போடறீங்களே... நியாயமா?’’‘‘உங்க அப்பா செய்தது மட்டும் நியாயமா? போட வேண்டிய நகையைப் போட சொல்லு. அப்புறம் நீ சொல்லும் பரிகாரம் எல்லாத்தையும் ஒட்டு மொத்தமா செய்திடலாம்.’’பாக்யத்தின் குரலிலிருந்த அழுத்தம், வினிதாவை மேலும் அதிர வைத்தது.நிலைகுலைந்து போனாள்.Ôஇந்த வீட்டில் வாழும் நிலை தொடருமா?’ என்ற கேள்வி மீண்டும் அவளுடைய மனதில் எழுந்தது.அந்தப் பிரச்னை அத்துடன் நிற்கவில்லை.வெளியில் போயிருந்த கார்த்திகேயன் வீடு திரும்பியதும், பாக்யம் மறுபடி ஆரம்பித்தாள்.‘‘கார்த்தி... சிநேகிதி வீட்டுக்குப் போறதா சொல்லிட்டு உன்னோட வீட்டுக்காரி எங்கே போயிட்டு வந்தாள் தெரியுமா?’’‘‘தெரியலையே அம்மா. எங்கே போனாள்?’’‘‘ஜோசியரை பார்க்கப் போயிருக்காள்.’’கார்த்திகேயன் அதிர்ச்சியுடன் கேட்டான்.‘‘ஜோசியரை பார்க்கவா? எதுக்கு?’’பாக்யம் எல்லா கதையையும் சொல்லி முடித்தாள்.கார்த்திகேயன் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தான்.பாக்யம் கேட்டாள்.‘‘என்ன கார்த்தி செய்யலாம்?’’‘‘நீங்களே சொல்லுங்க அம்மா.’’‘‘ஒரு மாசம் அவகாசம் கொடுக்கலாம். அதுக்குள்ள வினிதா வீட்டிலிருந்து சொன்னபடி நகை வரலைன்னா, அவளை அவங்க அப்பா வீட்டுக்கு நிரந்தரமா அனுப்பி வச்சிடலாம்... என்ன சொல்றே?’’‘‘நீங்க சொன்னால் சரிதான். நான் என்ன தனிப்பட்டு முடிவு எடுக்கப் போறேன்?’’Ôச்சே... நீயேயெல்லாம் ஒரு ஆம்பளையாடா... நாயே!’அவன் சட்டையை எட்டிப் பிடித்து உலுக்க வேண்டும் போல் வினிதாவுக்குத் தோன்றியது.ஆனால், இயலக்கூடிய காரியமா அது?ஒரு பெண் அப்படி நடந்து கொண்டால், அதுவும் ஒரு மனைவி ஸ்தானத்திலிருந்து தன்னுடைய கணவனிடம் அப்படி நடந்து கொள்ளத்தான் முடியுமா?அவளை இந்தச் சமூகம் கரித்துக் கொட்டிவிடுமே!அந்தப் பயம் ஒன்றே எல்லோருக்கும் ஒரு பெண்மீது துன்புறுத்தல் செய்ய வழிவகை செய்கிறது..15கைப்பேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தாள் சங்கவி.சம்யுக்தா.கைப்பேசியின் அழைப்பை ஏற்றாள் சங்கவி.‘‘ஹலோ... சொல்லு சம்யுக்தா...’’‘‘உன்னோட ஆளைப் பற்றிய எல்லா விவரத்தையும் எங்க அண்ணன் ரவி விசாரித்து தெரிஞ்சுட்டார்.’’‘‘அதுக்குள்ளேயா? உண்மையாவா?’’‘‘உன் தலைமீது அடித்து சத்தியம் பண்ணவா?’’‘‘ஹேய்... ரொம்ப தாங்க்ஸ்பா!’’‘‘இதுக்கு எதுக்குடி தாங்க்ஸ் எல்லாம்? அதைப் பற்றி போனில் பேசுவதை விட நேரில் பேசலாமே!’’‘‘எப்போ பேசலாம்?’’‘‘இன்னிக்கு காலேஜ் லீவ்தானே? இன்னிக்கே பேசிடலாம்.’’‘‘எங்கு வரட்டும்?’’‘‘எங்க வீட்டுக்கே வா. அப்பா, அம்மா ஒரு கல்யாணத்துக்காக வெளியூர் போயிருக்காங்க. அண்ணனும் வெளியில் போயிட்டார். நான் மட்டும்தான் வீட்டிலிருக்கேன்.’’சங்கவிக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.போனை வைத்து விட்டாள்.வஸந்த்தைப் பற்றி சம்யுக்தாவோட அண்ணன் தெரிந்து வைத்திருக்கிறார்.சம்யுக்தாவிடம் போனால் விஷயத்தைக் கறந்துவிடலாம்.அம்மாவிடம் அனுமதி வாங்கியாக வேண்டும்.என்ன காரணம் சொல்வது?ஏதாவதொரு பொய்யைச் சொல்லிவிட்டு போகத்தான் வேண்டும்.என்ன சொல்லலாம்?யோசித்தாள். ஒரு முடிவுக்கு வந்தாள்.தேவிகாவை அணுகினாள்.‘‘அம்மா... சம்யுக்தா வீடு வரைக்கும் போயிட்டு வரட்டுமா?’’‘‘என்ன திடீர்னு?’’‘‘அவங்க அப்பா, அம்மா வெளியூர் போயிருக்காங்களாம். போர் அடிக்குதுன்னு என்னைய வரச் சொன்னா.’’‘‘சரி... பார்த்துப் போயிட்டு வா.’’தேவிகா அனுமதி கொடுக்கவும், மின்னல் வேகத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு கிளம்பினாள் சங்கவி.ஸ்கூட்டியைக் கிளப்பினாள்.பொள்ளாச்சி பேருந்து நிலையம் வழியாக பாலக்காடு சாலையில் பிரபல கலைக் கல்லூரியைக் கடந்து சக்தி கார்டன் நகரை அடைந்தாள்.அங்கு மூன்றாவது வீதியில் வலப்பக்கம் திரும்பினாள்.ஆறாம் எண் வீடு.கேட்டைத் திறந்து கொண்டு போய், வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள்.சம்யுக்தா வந்து கதவைத் திறந்தாள்.சங்கவியைப் பார்த்ததும், சம்யுக்தா முகத்தில் சந்தோஷம் மின்னல் வெளிச்சம் பளிச்சென்று பரவிற்று.‘‘ஹாய்... வா சங்கவி...’’சங்கவியும் சம்யுக்தாவும் கதவை அடைத்துவிட்டு, ஹாலில் போய் அமர்ந்தனர்.‘‘என்ன சாப்பிடறே சங்கவி?’’‘‘ஒண்ணும் வேண்டாம்.’’எவ்வளவு தடுத்தும் சம்யுக்தா காதில் போட்டுக்கொள்ளவில்லை.செய்து வைத்திருந்த நூடுல்ஸை ஓவனில் வைத்து சூடு செய்து, சாஸையும் எடுத்து தட்டில் பரிமாறினாள். டிக்காஷன் ஊற்றி, காபியை கலந்து எடுத்துக் கொண்டாள். அவற்றைக் கொண்டு வந்து டீபாயின் மீது வைத்தாள்.இருவரும் அவற்றை சாப்பிட்டுக் கொண்டே பேசினர்.‘‘நூடுல்ஸ் யார் செய்தது?’’‘‘அம்மா செய்தாங்க. கல்யாண வீட்டுக்குப் போற பிஸியிலும் செய்து வச்சிட்டுப் போனாங்க.’’‘‘அதானே பார்த்தேன்... என்னடா இவ்வளவு மாஸா இருக்குன்னு!’’‘‘ஏய்... ஓட்டற பார்த்தியா? நானும் நல்லா செய்வேன் தெரியுமா?’’‘‘ஓகே. நான் நம்பறேன். விடு...’’இருவரும் பேசிக்கொண்டே பிரதான பிரச்னைக்கு வந்தனர்.‘‘வஸந்தோட அப்பா ரயில்ரங்கா ஒரு பக்கா அரசியல்வாதிதான். நல்ல பவர்ஃபுல் ஆள்தானாம்!’’‘‘அப்படியா?’’‘‘ஆமாம்! அரசியல்வாதியாக இருந்தாலும், அவங்க அப்பா ரொம்பவும் நல்லவர் போல. வஸந்த்துக்கு ஒரு அக்கா இருந்திருக்காங்க. அவங்களை கல்யாணம் செய்து கொடுத்த இடத்தில் மாப்பிள்ளை சரியில்லையாம்.’’‘‘சரியில்லைன்னா?’’‘‘ஒரு சைக்கோ போல. பொண்டாட்டி மீது எப்பவும் ஒரு சந்தேகப் பார்வை இருக்குமாம். ரொம்ப டார்ச்சர் போல. அவங்க அக்காவும் எவ்வளவோ அனுசரித்து போயிருக்காங்க. ஒரு கட்டத்துக்கு மேல் தாங்கிக்க முடியலை. அதனால அவங்க அக்கா தற்கொலை பண்ணிட்டாங்களாம்.’’‘‘அட பாவமே!’’‘‘அவங்க அக்கா மேல் வஸந்துக்கு ரொம்ப பாசமாம். அவங்க இறந்தப் பிறகு இந்தக் குடும்பமே ரொம்பவும் அப்செட் ஆயிட்டாங்க போலிருக்கு!’’‘‘அப்புறம்?’’‘‘கொஞ்ச நாள் அவங்க குடும்பமே எந்தவொரு பொது நிகழ்ச்சிக்கும் போகாமல் இருந்திருக்காங்க போல. ரொம்ப நாட்களுக்குப் பிறகுதான் பழைய நிலைக்கு திரும்பியிருக்காங்க.’’‘‘கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.’’‘‘வஸந்துக்காவது ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும்னு ஒரு பொண்ணு பார்த்திருக்காங்களாம். கல்யாணமெல்லாம் உறுதிப் பண்ணிட்டாங்களாம். கல்யாணத்துக்கு மண்டபம் புக் பண்ணிட்டாங்களாம். கேட்டரிங் புக் பண்ணியாச்சாம். மணவறை புக் பண்ணியாச்சாம். பத்திரிகை அடிச்சு, ஊரெல்லாம் கொடுத்தாச்சாம். கல்யாணத்திற்கு ஒரு வாரம் இருக்கும்போது கல்யாணத்தை வேண்டாம்னு பொண்ணு மறுத்திடுச்சாம்.’’‘‘என்னாச்சு?’’‘‘அந்தப் பொண்ணு வேறொரு பையனை லவ் பண்ணிட்டு இருந்திருக்கா. அவனைத்தான் கட்டிப்பேன்னு ஒத்தைக்காலில் நின்னுட்டுட்டாளாம்.’’‘‘அப்புறம்?’’‘‘கல்யாணம் நின்னுப் போச்சு.’’‘‘அட பாவமே!’’‘‘அந்தச் சம்பவத்திற்குப் பிறகு வஸந்த்தோட அப்பா, அம்மா ரொம்ப அப்செட். வஸந்த் உன்னைத் துரத்த ஆரம்பிச்சுட்டான்.’’‘‘ஏய்... இதானே வேண்டாம்கிறது.’’‘‘உண்மைதானே? அப்புறம் என்ன பிகு வேண்டிக் கிடக்கு?’’‘‘இந்தாளை நம்பலாமா? முதல்ல அதைச் சொல்லு...’’‘‘பாயின்ட்டுக்கு வந்துட்டியே! நடவடிக்கைகளை வச்சு பார்க்கும்போது நம்பலாம் போலிருக்கு. என்ன இருந்தாலும் பெரிய இடத்து பசங்க. நம்மளையெல்லாம் பயன்படுத்திட்டு டிஷ்யூ பேப்பர் மாதிரி வீசிட்டுப் போகாமல் பார்த்துக்கணும்.’’‘‘முடிவா என்ன சொல்றே? அந்தாளை லவ் பண்ணவா?’’‘‘மனசை பகிர்ந்துக்க. ஒரு நல்ல முடிவு தெரியட்டும். கல்யாணத்துக்குப் பிறகு உடலை பகிர்ந்துக்கலாம்.’’‘‘ச்சீய்! அவ்வளவு கேவலமா போகமாட்டேன். நானொரு டெஸ்ட் வைக்கப்போறேன். அதில் அந்த ஆள் பாஸ் பண்ணிட்டால் அப்புறம் அந்தாளோட லவ்வை முடிவுப் பண்ணலாம்.’’‘‘என்ன... நீட் எக்ஸாம் வைக்கப் போறியா?’’‘‘இல்லை. எங்க அக்கா வீட்டில் நடக்கிற பிரச்னையை அவர்கிட்ட சொன்னேன். அவங்க அப்பாவோட செல்வாக்கைப் பயன்படுத்தி எங்க அக்கா வீட்டுப் பிரச்னையை நல்லபடியா முடிச்சு தருவதா எங்கிட்ட பிராமிஸ் பண்ணியிருக்காரு.’’‘‘நல்லது! அந்த விஷயத்தில் நீ கெட்டியா இரு. பார்ப்போம்... என்ன செய்து கிழிக்கப்போறான்னு. ஒருவேளை, வினிதா அக்கா வீட்டுப் பிரச்னையை முடிச்சு கொடுத்தால் நம்பலாம்.’’‘‘அதிலும் ஒரு சிக்கல் இருக்கு...’’‘‘என்ன சிக்கல்?’’‘‘குடும்பப் பிரச்னையை மூன்றாம் மனிதரிடம் சொல்லி, அரசியல் ஆக்கிட்டோம்னு எங்க அக்கா வீட்டில் மேலும் பிரச்னை வந்து, வினிதா அக்காவை மேலும் அவங்க டார்ச்சர் செய்யக்கூடாது இல்லையா?’’‘‘அதை அப்புறம் பார்ப்போம். எந்த விஷயத்திலும் துணிச்சலோடு இறங்கினால்தான் ஒரு தீர்வு கிடைக்கும்.’’ஒருவித குழப்பத்திலேயே இருந்தாள் சங்கவி.இருவரும் சாப்பிட்டு முடித்த தட்டுகளையும் காபி குடித்து முடித்த தம்ளரைகளையும் ஸிங்கில் போட்டு கழுவிக் கவிழ்த்தனர்.மறுபடியும் ஹாலில் போய் அமர்ந்தனர்.சம்யுக்தா திரும்பவும் ஆரம்பித்தாள்.‘‘சரி சங்கவி... என்ன செய்யப் போறே?’’‘‘துணிச்சலா ஒரு முடிவு எடுக்கிறேன்.’’‘‘வெல்டன்!’’சம்யுக்தா பாராட்டினாள்.என்றாலும், சங்கவி மனதிற்குள் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது..16நாளுக்கு நாள் வினிதாவுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது.பணமும் நகையுமே ஒரு பெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது.அவளுடைய குணாதிசயங்கள் அடுத்த நிலைக்குத் தள்ளப்படுகிறது.வினிதாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. பிருந்தா சொன்னது போல் நகை ஆசை பேயாகப் பிடித்து ஆட்டும் இந்தக் குடும்பத்தைக் கண்டு வீணாக தற்கொலை செய்து கொள்ளக்கூடாது.தற்கொலை என்பது கோழைத்தனம்.நான் என்ன தவறு செய்தேன்? என் பெற்றோர் செய்ததும் ஒரு மாபெரும் தவறு! வரதட்ணையாக நகை கேட்டு சம்பந்தம் பேச வந்தபொழுதே கார்த்திகேனுக்கு பெண் தருவதில்லை என்று தீர்மானமாக நின்றிருக்க வேண்டும்.ஒரு நல்ல வசதியான இடம் தங்கள் பெண்ணுக்கு வந்தால் போதும்... மாப்பிள்ளை வீட்டார் போடும் நிபந்தனைக்கெல்லாம் தலையாட்டி வைக்க வேண்டியது. அவர்கள் கேட்கும் நகையைப் போடுவதாக ஒப்புக்கொள்வது.பிறகு விழி பிதுங்கி நிற்க வேண்டியது. தேவைதானா? நகை போடுவதாக சொன்னதால் இப்பொழுது விடாமல் நச்சரிக்கிறார்கள். தம்முடைய நிலையறியாமல் வாக்குறுதி கொடுத்துவிட்டு பெற்றவர்கள் தவிக்கிறார்கள்.இரண்டு குடும்பங்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டு நான் விழிக்கிறேன்.எல்லாவற்றையும் வினிதா மனசுக்குள் போட்டு குழம்பிப் போனாள்.மனசை அழுத்திற்று. யாரிடமாவது சொன்னால் பாரம் குறையும் போலிருந்தது.யாரிடம் சொல்வது?ஏற்கெனவே பிருந்தாவிடம் சொல்லி புலம்பியாயிற்று. திரும்பத் திரும்ப அவளிடமே சொல்லி, அவளை மேலும் குழப்ப வேண்டாம்.அம்மாவிடமும் சொல்லிச் சொல்லிப் புலம்பியாயிற்று.இனியும் அம்மாவிடம் சொன்னால், அவளால் மட்டும் என்ன செய்ய முடியும்?பணத்திற்காக தன்மானத்தை விட்டு எதையாவது விற்று கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது போலாகிவிடும்.என்ன செய்யலாம்?சங்கவியின் நினைவு வந்தது.அவளிடம் பேசிப் பார்க்கலாம். கொஞ்சம் மன பாரம் குறையும்.சங்கவிக்கு போன் செய்தாள்.மறுமுனையில் சங்கவி வந்தாள்.‘‘சொல்லுக்கா... எப்படி இருக்கே?’’‘‘நல்லா இருக்கேன். உங்கிட்ட கொஞ்சம் பேசணும். எங்கே இருக்கே?’’‘‘காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டிருக்கேன். ஒண்ணும் பிரச்னை இல்லை. சொல்லுக்கா...’’‘‘நீ தப்பா எடுத்துக்க வேண்டாம்.’’‘‘என்னக்கா பேசறே? எதுனாலும் சொல்லு... நான் எதுக்கு தப்பா எடுத்துக்கப் போறேன்?’’‘‘இங்கே ஒரே டார்ச்சர் சங்கவி. நகை கேட்டு நச்சரிக்கிறாங்க...’’என்று ஆரம்பித்து அதுவரை நடந்த அத்தனை பிரச்னைகள் பற்றியும் பொறுமையாகச் சொல்லி முடித்தாள்.சங்கவி ஆடிப்போனாள்.இத்தனை துன்பங்களை தாங்கிக்கொண்டா அக்கா வாழ்ந்து கொண்டிருக்கிறாள்?இப்படி ஒரு வாழ்க்கை தேவதானா?‘‘அக்கா... பேசாமல் கிளம்பி வந்திடு. மற்ற பிரச்னைகளை அப்புறம் பார்த்துக்கலாம்.’’‘‘அது சரிப்பட்டு வராது.’’‘‘ஏன் சரிப்பட்டு வராது?’’‘‘பேச்சுகளையெல்லாம், வைராக்கியத்தையெல்லாம், லட்சியத்தையெல்லாம் செயல்முறைப்படுத்த முடியாது.’’‘‘ஏன் முடியாது?’’‘‘இது ஹெமிஸ்ட்ரி லேப் இல்லை. ஒரு ஃபார்முலாவை வைத்துக் கொண்டு பரிசோதனை செய்து பார்ப்பதற்கு...’’‘‘போலீஸில் கேஸ் கொடுக்கலாம்.’’‘‘எதை வச்சு?’’‘‘வரதட்சணைக் கொடுமைனு புகார் கொடுக்கலாம்.’’‘‘சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதுக்கு ஒரு நாள், ஒரு வாரத்திலெல்லாம் தீர்வு கிடைத்து விடாது. காலங்கள் கடந்து போயிட்டே இருக்கும்.’’‘‘காலங்கள் போனால் என்ன... ஒரு நல்ல தீர்ப்புக் கிடைக்கும் இல்லே?’’‘‘சட்டம்கிறது ஒரு அரண். ஒரு குற்றத்திற்குக் கொடுக்கப்படும் தண்டனை. அந்தச் சட்டத்தை நம்ம பாதுகாப்பு அரணாக வச்சிக்கலாம். ஆனால், வாழ்க்கைக்கு அதை நாம உடனே பயன்படுத்தக் கூடாது. ஒரு பிரச்னைக்கு இருபுறமும் தப்பு இருக்கு.’’‘‘என்ன அக்கா சொல்றே?’’‘‘அவங்க வரதட்சணை கேட்டது தப்பு. ஒப்புக்கிறேன். ஆனால், பெண்ணை பெற்றவங்களிடமும் தப்பிருக்கு இல்லையா?’’‘‘என்னக்கா சொல்றே?’’‘‘ஆமாம் சங்கவி. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரதட்சணை கேட்டதும் நாம் கொடுக்கிறதா ஒப்புக்கொண்டதும் தப்பு. ஒரு காரியம் நடக்க லஞ்சம் கேட்கிறது சட்டப்படி தவறு. அப்படின்னா லஞ்சம் கொடுக்கிறதும் தவறு. எந்தக் குடும்பமும் வரதட்சணை கேட்கும்போதே முடியாதுன்னு பொண்ணு வீட்டுக்காரங்க மறுக்கணும். அதுக்குப் பிறகு வரதட்சணை கேட்டு துன்புறுத்தறாங்கன்னு சட்டத்திடம் போறது சரியில்லை. இது தும்பை விட்டுட்டு வாலை எட்டிப்பிடிக்கிற கதை.’’‘‘என்ன செய்யலாம்னு சொல்றே?’’‘‘நடைமுறையைப் பார்க்கணும். சேற்றில் காலை வைக்கும் முன்பாக யோசனை செய்திருக்கணும். சரி, காலை விட்டாச்சு. இனி காயம்படாமல் காலை சேற்றிலிருந்து எடுத்து, தண்ணீரில் கழுவிக்கணும். அதுதான் நடைமுறை.’’‘‘புரியலை...’’‘‘ஒண்ணு, நம்ம அப்பா சொன்னபடி நகையைப் போடணும். அல்லது நான் வாழாவெட்டியா நம்ம வீட்டுக்கு வந்துவிடணும். நான் வந்துட்டால் அப்பா, அம்மாவுக்கு இன்னும் சுமை அதிகம்.’’‘‘எதுக்கு சுமை?’’‘‘திரும்ப என்னோட வாழ்க்கை கேள்விக்குறியா தொங்கிட்டிருக்கும். உனக்கு கல்யாண காலகட்டம் வரும்போது நான் ஒரு தடைக்கல்லாக நிற்பேன்.’’‘‘நீ தடைக்கல்லா இருக்கிறதா நினைக்கிற மாப்பிள்ளை எனக்கு வேண்டாம்!’’‘‘சங்கவி... பேசுவதற்கும் நடைமுறைக்கும் நிறைய வித்தியாசமிருக்கு. நடைமுறைதான் நிலைக்கும். பேச்சும் நம்ம கற்பனையும் கானல்நீராகப் போயிடும்.’’‘‘முடிவா என்ன சொல்றே அக்கா?’’‘‘யோசிப்போம். கடைசிவரை போராடிப் பார்க்கிறேன். கடைசியில் விவாகரத்து பண்ணிட்டு வெளியில் வரப் பார்க்கிறேன்.’’‘‘நெருப்பில் நின்னுட்டு இருக்கியா?’’‘‘நெருப்பில் நிற்கலை. நெருப்புக்குப் பக்கமா நின்னுட்டிருக்கேன். தேவையில்லைன்னா விலகி வரும் தூரத்தில்தான் இருக்கேன். கவலையை விடு. உங்கிட்ட பேசணும்னு நினைச்சேன். பேசினேன். விடு... காலம் பதில் சொல்லும்!’’‘‘அக்கா... உன்னை நினைச்சால் மனசுக்கு வேதனையா இருக்கு. உன்னோட விஷயத்தில் பெரிய தப்பு செய்துவிட்டதா அப்பாவும் அம்மாவும் வருத்தப்படறாங்க.’’‘‘எல்லாம் விதி! அதன்படி நடப்பது நடந்தே தீரும்!’’‘‘நாமாக ஒரு தவறை செய்துட்டு விதி மேல் பழியைப் போடறோமோ?’’‘‘அது ஒரு வகையான ஆறுதல். விதி ஒரு நம்பிக்கை. கடவுள் ஒரு நம்பிக்கை. அதையெல்லாம் காற்றை போல் உணர முடியும். கண்ணில் பார்க்க முடியாது.’’‘‘அக்கா... நீ நல்லா தத்துவம் பேசிப் பழகிட்டே!’’வினிதா விரக்தியாக சிரித்தாள்.‘‘கஷ்டங்கள் மனுஷனை பக்குப்பட வைக்கும். வாழ்க்கை பக்குவத்தைக் கற்று கொடுக்குது. சந்தோஷத்தைவிட துயரமும் கஷ்டமும்தான் வாழ்க்கையில் அனுபவத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கும்... பக்குவத்தையும் கொடுக்கும்!’’‘‘எப்படியோ உனக்கு ஒரு நல்லது நடக்கணும். அதுக்கு நானும் முடிந்தளவு முயற்சி செய்யறேன்.’’‘‘நல்லது சங்கவி. உன்னிடம் பேசவும் மனசுக்கு ஒரு ஆறுதல் கிடைச்சிருக்கு!’’‘‘என்ன நடந்தாலும் வேறெந்த தவறான முடிவும் எடுத்துவிடாதே அக்கா.’’‘‘நீ பயப்படும் மாதிரி நான் எந்தத் தவறான முடிவுக்கும் போக மாட்டேன். அந்த இடத்தைக் கடந்து வந்துட்டேன்.’’‘‘நல்லது. உனக்கு எப்போ மனசு கேட்டாலும் போன் பண்ணு.’’‘‘ஓகே சங்கவி.’’போனை வைத்தாள் வினிதா.அவளுடைய வருத்தம் வந்து சங்கவின் மனசை வாட்டி எடுத்தது.Ôவினிதாவுக்காக எதையாவது செய்தாக வேண்டும்’ என்ற எண்ணம் எழுந்தது..17அன்றைய இரவு முழுக்க சங்கவிக்கு நல்ல தூக்கமில்லை. புரண்டுப் புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.எந்த வகையிலாவது வினிதா அக்காவுக்கு உதவியாக வேண்டும். பாவம்! நெருப்புக்குள் சிக்கிக்கொண்டு துடிக்கும் புழுவைப்போல் துடித்துக் கொண்டிருக்கிறாள்.பிறந்த வீட்டின் நலனைக் கருத்தில் கொண்டு புகுந்த வீட்டில் ஒரு பெண் படும் துயரம் சாதாரண விஷயமில்லை.அருகில் படுத்திருந்த தேவிகா கேட்டாள்.‘‘என்ன சங்கவி... தூக்கம் வரலையா?’’‘‘இல்லைம்மா.’’‘‘என்னாச்சு?’’வினிதா அக்கா போனில் பேசிய விஷயத்தைச் சொல்லலாமா?சொன்னால், அப்பா, அம்மாவின் உறக்கமும் காணாமல் போய்விடுமே!இந்த அர்த்தராத்திரியில் தேவைதானா? மறந்திருக்கும் பிரச்னையை இவர்கள் மனதில் ஏன் கிளறிவிட வேண்டும்? இவர்கள் தூக்கத்தையும் ஏன் துரத்தியடிக்க வேண்டும்?சங்கவி சமாளித்தாள்.‘‘ஒண்ணுமில்லைம்மா. ஏனோ தூக்கம் வரலை. பிரச்னை ஒண்ணுமில்லை.’’‘‘எழுந்து போய் தண்ணீர் குடிச்சிட்டு வந்து படு. படுத்துட்டு நூறிலிருந்து தொண்ணூற்று ஒன்பது, தொண்ணூற்று எட்டுன்னு தலைகீழா மனசுக்குள் எண்ணிட்டு வா... தூக்கம் தானாவே வரும்!’’‘‘சரிம்மா.’’சங்கவி எழுந்து போய் தண்ணீர் குடித்துவிட்டு வந்து படுத்தாள்.தேவிகா சொன்னது போல் நூறிலிருந்து தலைகீழா எண்ணவில்லை.வினிதாவின் வாழ்க்கையில் விழுந்த சிக்கலை எப்படி விடுவிப்பது என்றே எண்ணிப் பார்த்தாள்.எப்பொழுது விடியுமோ என்று கொட்டக் கொட்ட விழித்திருந்தாள்.உறங்கும் இரவைவிட, விழித்திருக்கும் இரவு நீண்டு கிடந்தது.படுக்கை முள்ளாக குத்திற்று.விடிந்ததும் கல்லூரிக்கு செல்லும் முன்னமே சம்யுக்தாவுக்கு போன் செய்தாள்.‘‘சம்யுக்தா... எங்க அக்கா வீட்டில் பிரச்னை பெரிசா போயிட்டிருக்கு. அக்கா நேற்று போனில் பேசினாங்க. ரொம்பவும் குரல் உடைஞ்சு போயிருந்தது. மனசளவில் ரொம்பவும் துன்பத்துக்கு ஆளாகியிருக்காங்க. என்ன செய்யட்டும்?’’‘‘உன்னோட ஆள் வஸந்திடம் சொல்லிப் பாரு... ஏதாவது ஒரு வகையில் தீர்வு கிடைக்குதான்னு பார்க்கலாம்.’’‘‘அதிலும் ஒரு பயம் மனசுக்குள் உறுத்திட்டிருக்கு.’’‘‘என்ன பயம்?’’‘‘வினிதா அக்கா ஜோசியரைப் போய்ப் பார்த்திருக்காங்க. அவங்க ஜாதகப்படி என்னோட பலனைக் கேட்டிருக்காங்க...’’‘‘சரி...’’‘‘என்னிடம் பழகும் புது நட்பால் எனக்கொரு ஆபத்து காத்திருக்காம். அதனால, Ôஉங்க தங்கச்சியை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுங்க’ன்னு ஜோசியர் சொன்னாராம்.’’‘‘அதுக்கு என்ன இப்போ?’’‘‘அப்படிப் பார்த்தால் என்னிடம் பழகும் புது நட்பு வஸந்த் மட்டும்தான். அப்போ வஸந்த்தால் எனக்கு எதுவும் ஆபத்து வந்திடுமோ?’’சம்யுக்தா மிகவும் ஆறுதலாகப் பேசினாள்.‘‘சங்கவி... Ôஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’னு சொல்வாங்க. நீ வீணா மனசைப் போட்டுக் குழப்பிக்காதே. அந்த வஸந்த் என்ன செய்திடப் போறாரு? ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழைய முடியும்?’’‘‘உண்மைதான்.’’‘‘அந்த நம்பிக்கை உனக்கிருந்தால் போதும். முதல்ல நம்மை நாமே நம்பணும். அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை. வினிதா அக்காவோட பிரச்னையை ஒரு வழியா முடிச்சு வைக்கணும். ஆபத்துக்கு பாவமில்லை. வஸந்திடம் பிரச்னையை சொல்லிப் பாரு.’’சம்யுக்தா கொடுத்த தைரியம் சங்கவிக்கு ஒரு புத்துணர்சியை ஏற்படுத்திற்று.வஸந்த்தை அணுக முடிவு செய்தாள்.மனதில் தைரியத்தை வளர்த்துக் கொண்டாள்.துணிச்சலாக வஸந்துக்கு போன் செய்து விஷயத்தை முழுவதும் பொறுமையாகச் சொல்லி முடித்தாள்.எல்லா விஷயங்களையும் கேட்டுக் கொண்ட வஸந்த், முடிவாகச் சொன்னான்:‘‘எதுக்கும் கவலைப்படாதே! காலேஜ் முடிந்ததும், நியூ ஸ்கீம் ரோடுல இருக்கிற பேக்கரிக்கு வந்துடு.’’தீர்மானமாகச் சொல்லிவிட்டு போனை வைத்தான் வஸந்த்.சங்கவிக்கு கல்லூரி முடிந்ததும் வஸந்த் வந்தான்.இருவரும் பொள்ளாச்சி காந்தி சிலை அருகிலிருக்கும் பேக்கரிக்குச் சென்றனர்.சென்ட்ரலைஸ்டு ஏ.சி.யால் அந்த நீண்ட டைனிங் ஹால் குளிர்ச்சியில் மூழ்கிக் கிடந்தது.மிகவும் நிசப்தமாக இருந்தது.டைனிங் டேபிளில் இருவரும் எதிரெதிராக அமர்ந்தனர்.மெனு கார்டை ஒரு முறை பார்வையால் இருவரும் மேய்ந்தனர்.‘‘என்ன சாப்பிடலாம் சங்கவி?’’வஸந்த் கேட்டான்.‘‘பர்க்கர், பானிபூரி.’’பேரர் வந்தார்.‘‘ரெண்டு செட் பர்க்கர், ரெண்டு பிளேட் பானிபூரி.’’ஆர்டரை பெற்றுக் கொண்ட பேரர் நகர்ந்தார்.‘‘சொல்லு சங்கவி... என்ன பிரச்னை?’’சங்கவி சற்று யோசித்தாள். சொல்லலாமா?ஒரு முடிவுக்கு வந்தவளாகச் சொன்னாள்.‘‘எங்க வினிதா அக்கா வீட்டுப் பிரச்னைதான்.’’‘‘என்னாச்சு?’’‘‘மீதி போட வேண்டிய நகையைக் கேட்டு ரொம்பவும் டார்ச்சர் செய்யறாங்க. எங்க அப்பா, அம்மாவால் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றிக்க முடியலை...’’என்று ஆரம்பித்து, வினிதாவின் புகுந்த வீட்டில் நடந்து கொண்டிருக்கும் பிரச்னை முழுவதையும் சொல்லி முடித்தாள்.வஸந்த் ஒரு நிமிஷம் யோசித்தான். பிறகு தீர்மானமாகக் கேட்டான்.‘‘இப்போ என்ன செய்யணும்? உங்க அக்கா வீட்டுக்காரரை ஆள் வச்சு தூக்கிட்டு வந்து, கை காலை உடைச்சிடலாமா? இல்லே, ஆளையே குளோஸ் பண்ணிடலாமா?’’சங்கவி பதறிப் போனாள்.‘‘ஐயோ... அதெல்லாம் வேண்டாம். நீங்க என்ன பயிரில் இருக்கும் களையை எடுக்கச் சொன்னால், பயிரையேப் பிடுங்கி வீசட்டுமான்னு கேட்கறீங்க.’’‘‘பின்னே... என்ன செய்யட்டும்?’’‘‘கொஞ்சம் எங்க வீட்டுக்கு டார்ச்சர் கொடுக்காமல் இருந்தால் போதும்.’’‘‘அப்போ ஒண்ணு செய்... அவங்க வீட்டு அட்ரஸ், உங்க அக்காவோட மொபைல் நம்பரை கொடு.’’சங்கவி தயங்கினாள்.வீண் வம்பை விலை கொடுத்து வாங்கும் கதையாகிவிடுமோ? குடும்பப் பிரச்னையை ஒரு அரசியல்வாதியின் கையில் கொடுத்து, Ôகுரங்கு கையில் கிடைத்த பூமாலை’ போலாகிவிடுமோ?எச்சரிக்கை கொடுக்காமல் வினிதா அக்கா வீட்டுக்காரரை அடித்து, உதைத்து துன்புறுத்தி விடுவார்களோ?‘‘என்ன சங்கவி யோசிக்கிறே? உங்க அக்கா வீட்டு அட்ரஸை கொடு. அவங்களுக்கு ஒரு ஆபத்தும் வராது. நீ பயப்பட வேண்டாம்.’’‘‘நீ அடிச்சு உதைக்கவெல்லாம் வேண்டாம்.’’‘‘நிச்சயமா இல்லை. நியாயத்தை சாத்வீக முறையில் பேசிப் பார்ப்போம்.’’வஸந்த் கொடுத்த உத்திரவாத்தையடுத்து வினிதாவின் வீட்டு முகவரியையும் செல்போன் எண்ணையும் கொடுத்தாள் சங்கவி.‘‘சரி... எதுக்கும் உங்க வீட்டு அட்ரஸையும் கொடு.’’கொடுத்தாள்.கொடுக்கும்போது கொடுத்து விட்டு பிறகு மனசைப் போட்டு அலட்டிக் கொண்டாள்.பாலுக்கு பூனையைக் காவல் வைத்த கதையாகிவிடுமோ?அரசியல் நிலையில் போய் எதுவும் விபரீதம் ஆகிவிடுமோ?வினிதா அக்கா வேறு புது நட்பால் பிரச்னை வரும் என்று ஜோதிடர் சொன்னதாக சொன்னாளே!ஒன்றோடொன்று பயத்தை அதிகப்படுத்தியது..18வினிதாவுக்கு மனஉளைச்சல் அதிகமாயிற்று. விதியின் விளையாட்டா? இல்லை, வாழ்க்கையில் நாமாக எடுத்து வைக்கும் தவறான முடிவால் ஏற்படும் விளைவிற்கு Ôவிதி’ என்று ஒன்றை வரியில் பழியைப் போட்டுவிட்டு தப்பித்துக்கொள்வதா?எது விதி?நன்றாகப் படித்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு நல்ல கல்வியைக் கொடுத்து தன்னுடைய சொந்தக் காலில் நிற்பதற்கு வழி வகை செய்து கொடுக்கவில்லை. வசதியான குடும்பத்திலிருந்து வரன் வந்ததற்காக அவர்களுடைய குணாதியங்களைப் பற்றி கொஞ்சமும் விசாரிக்காமல், வசதி ஒன்றையே தகுதியாகக் கருதி, படித்துக் கொண்டிருந்தவளின் கல்வியைப் பாதியில் நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள்.மாப்பிள்ளை வீட்டார் நகை கேட்டபொழுது அவர்கள் கேட்ட அளவிற்கு தன்னுடைய பெற்றோர் நகை போடுவதாகச் சொல்லிவிட்டு அந்த நகையைப் போடாமல் விட்டதால் புகுந்த வீட்டில் நித்தமும் பிரச்னை.Ôபொருள் இல்லாருக்கு இவ்வுலகு இல்லை’ என்பது எத்தனை உண்மை?பெண்ணுக்கு கல்வி ஒன்றே ஆயுதமாக கருதாமல், கல்விக்குத் தடைப் போட்டு விட்டார்கள்.கல்வி ஒரு பெண்ணுக்கு கேடயம். ஒரு ஆயுதம். ஒரு ஊன்றுகோல். எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் அந்தக் கல்வி அவளுக்குப் பயன்படும்.புகுந்த வீட்டில் வரதட்சணை மட்டுமே ஒரு பிரச்னையாக இல்லாமல் இப்பொழுது வேறொரு பிரச்னையும் தலை தூக்கியுள்ளது.ரசிகாவிடமிருந்து அந்த போன் வந்ததிலிருந்து வினிதாவுக்கு நிம்மதி சுத்தமாகப் போயிற்று. உறக்கம் போயிற்று.நெஞ்செல்லாம் பதறிப் போயிற்று.அதை மனதில் போட்டு பூட்டிவைக்க முடியவில்லை.கார்த்திகேயனிடம் நேரடியாக விஷயத்தைக் கொண்டு போனாள்.‘‘யாருங்க அந்த ரசிகா? அவளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?’’கார்த்திகேயன் ஒரு நொடிப்பொழுது ஆடிப்போனான்.தொண்டை வறண்டு போனது.வார்த்தைகள் வெளிவரவில்லை.‘‘கேட்கிறேனில்ல... சொல்லுங்க... யார் அந்த ரசிகா?’’‘‘உனக்கு எப்படி அவளைத் தெரியும்?’’‘‘ஏன் எனக்குத் தெரிந்தது தவறா? நீங்கள் அவளிடம் பழகியது தவறா?’’‘‘அதுதான் எப்படித் தெரிந்தது?’’‘‘அவளே என்னை போனில் கான்டாக்ட் பண்ணினாள். உங்க வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றிவிட்டாள். இப்படியொரு கேவலமான உறவு இருப்பதை என்னிடம் ஏன் மறைச்சீங்க?’’‘‘அதுவொரு ரயில் சிநேகிதம் மாதிரி. அதை ஏன் இப்போ பெரிசு பண்ணப் பார்க்கிறே?’’‘‘நான் பெரிசு பண்ணவில்லை. அவள்தான் பணம் கேட்கிறாள். ஒரு பெரிய தொகை வேணுமாம். இல்லேன்னா, அவள்கூட நீங்க அசிங்கமா இருக்கிற போட்டோஸை நெட்டில் போட்டு மானத்தை வாங்கிடுவாளாம்.’’‘‘அந்தத் தப்புக்கு பிராயச்சித்தமா ஒரு பெரிய தொகையை வாங்கிட்டு ஒதுங்கிட்டாளே? மறுபடி எதுக்கு இந்தப் பிரச்னையை கையில் எடுக்கிறாள்? இந்தப் பிரச்னையில் எதுக்கு மறுபடி மூக்கை நுழைக்கிறாள்?’’‘‘மறுபடி மூக்கை நுழைப்பது என்ன? விட்டால், வாழ்க்கை முழுக்க வருவாள். உங்க நிம்மதி மட்டுமில்லை... என் நிம்மதி நம்ம குடும்பத்தோட மொத்த நிம்மதியும் காற்றில் கரைஞ்சிடும்.’’‘‘நீ என்ன சொல்றே?’’‘‘நீங்க சிக்கியிருப்பது சிலந்தி வலை இல்லை. உடனே வலையை அறுத்துட்டு வெளியில் வருவதற்கு. இது புதைகுழி. ஆழமும் தெரியாது. அந்தமும் தெரியாது. கடலில் இறங்கினால் முத்தெடுக்க வாய்ப்பிருக்கு. இது புதைகுழி. முத்தெடுக்க முடியாது. மூச்சு பிடிச்சு சாகத்தான் வேண்டும்.’’ ‘‘எதுக்கு சாகணும்?’’‘‘ரசிகா உங்க மீது களங்கத்தை கற்பித்தால், உங்க மீது கரியைப் பூசினால் அதுக்கு அப்புறம் எப்படி உயிரோடு வாழமுடியும்?’’‘‘ஒருத்திக்காக உயிரையெல்லாம் விட முடியாது.’’‘‘உங்களுக்கு வேணா மானம் மரியாதை சிறிதா இருக்கலாம். உயிர் பெரிசா இருக்கலாம். ஆனால், எனக்கு மானம்தான் பெரிசு. நகை கேட்டு நீங்க செய்த டார்ச்சரில் நான் அவமானம் பொறுக்காமல் தூக்குப் போட்டுக்க போயிட்டேன்.’’கார்த்திகேயன் அதிர்ந்து போனான்.‘‘எ... என்ன சொல்றே?’’‘‘பின்னே? தொடர்ந்து வற்புறுத்தலுக்கும் மனரீதியான துன்புறுத்தலுக்கும் தீர்வு தெரியலை. சேலையை சீலிங் ஃபேனில் மாட்டிட்டேன். அந்த நேரம் பார்த்து என்னோட ஃப்ரெண்ட் பிருந்தா கூப்பிட்டு, நாலு வார்த்தை ஆறுதலாகப் பேசவும் என்னோட முடிவு மாறிப் போச்சு.’’அதுவரைக்கும் நடந்த அத்தனை விஷயத்தையும் பக்கத்து அறையிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த பாக்யம் குறுக்கே பாய்ந்தாள்.‘‘நல்லா இருக்கு வினிதா... நீ பாட்டுக்கு தற்கொலை பண்ணிட்டுப் போயிடுவே. நாங்க போய் ஜெயில்ல கம்பி எண்ணுவதா?’’‘‘அதுக்கு என்ன செய்ய? கொஞ்சமா என்னைய டார்ச்சர் செய்யறீங்க?’’‘‘அதுக்காக நீ தற்கொலை முடிவு எடுக்கலாமா? யாரோட மானம், மரியாதை போறது?’’‘‘இப்போ மட்டும் என்ன? உங்க மானம், மரியாதையை அந்த ரசிகா காற்றில் பறக்க விடப்போறாள். அதுக்கு என்ன செய்யப் போறீங்க?’’‘‘என்ன அந்த ரசிகா அமைதியாக இருந்தால்கூட நீ சும்மா இருக்கமாட்டே போலிருக்கு.’’‘‘நான் என்ன செய்தேன்?’’‘‘அவளைத் தூண்டிவிடுவே போலிருக்கு.’’‘‘நான் ஏன் தூண்டிவிட வேண்டும்? எனக்கு முன்னே பின்னே ரசிகா யாருன்னே தெரியாது. பழக்கமில்லை. அறிமுகமும் கிடையாது.’’‘‘அப்புறம் எப்படி உன்னிடம் பேசினாள்? பேச முடியும்?’’‘‘அந்தப் பொண்ணுதான் என்னோட போன் நம்பரை எங்கிருந்தோ பிடிச்சு பேசினாள். மறுபடியும் பேசுவதா சொல்லியிருக்கா.’’‘‘எப்போ பேசுவாளாம்?’’‘‘அது தெரியலை.’’அடுத்த நிமிடம், வினிதாவின் செல்போன் ஒலித்தது.வினிதா பார்த்தாள். திரையில் ஏற்கெனவே வந்த எண்கள்.யார்?அழைப்பை ஏற்று, செல்போனை காதுக்குக் கொடுத்தாள்.‘‘ஹலோ... நான் ரசிகா பேசறேன்...’’வினிதா அதிர்ந்து போனாள். என்ன இது? ஏற்கெனவே ரசிகாவை சம்பந்தப்படுத்தி என்னை சந்தேகப்படுகிறார்கள்.இந்த நேரம் பார்த்து அவளே அழைக்கிறாளே?‘‘ஹலோ... நான் ரசிகா பேசறேன். நீங்க யாரு?’’‘‘நா... நான்... வினிதா. சொல்லுங்க...’’‘‘எங்கே இருக்கீங்க?’’‘‘வீட்டில்தான் இருக்கேன்.’’‘‘உங்க வீட்டுக்காரரும் உங்க மாமியாரும் இருக்காங்களா?’’‘‘பக்கத்தில்தான் இருக்காங்க.’’‘‘போனை ஸ்பீக்கரில் போடுங்க.’’வினிதா தயங்கினாள்.‘‘எதுக்கு ஸ்பீக்கரில் போடணும்?’’‘‘தயவு செய்து ஸ்பீக்கரை ஆன் பண்ணுங்க.’’வினிதா செல்போனில் ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டாள்.‘‘ஹலோ... நான் ரசிகா பேசறேன். என்னோட ஆசாபாசங்களையெல்லாம் சிதைச்சது கார்த்திகேயனை போல பலரும்தான். ஏமாற்றம் அடைந்தேன்னு சொல்றதைவிட ஏமாற்றப்பட்டேன். எங்கே அந்த கார்த்திகேயன் நெஞ்சில் கை வச்சு சொல்லச் சொல்லுங்க... அந்தாள் என்னை ஏமாற்றலையான்னு சொல்லச் சொல்லுங்க. முடியாது! காரணம், மனசாட்சி அறுக்கும்.’’பாக்யம் ஆத்திரமடைந்தாள். கோபத்தில் குறுக்கிட்டாள்.‘‘இத்தனை பேசறியே... அன்னிக்கே பணத்தை வாங்கிட்டு, Ôஇனிமேல் எந்த விஷயத்திலும் தலையிடப் போறதில்லை’னு சொன்னியே?’’‘‘ஆமாம்... சொன்னேன்.’’‘‘அப்புறம் எதுக்கு இப்போ மறுபடியும் குறுக்கே வரே?’’‘‘பணம் வேணும். கொஞ்சம் பணத் தேவைகள் இருக்கு. அதைச் சமாளிக்க நான் எங்கே போக முடியும்?’’‘‘பணம் கொடுக்கலைன்னா?’’ரசிகா வாய்விட்டுச் சிரித்தாள்.‘‘என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? உங்க மகன் போட்டோஸ் எல்லாம் என்னிடமிருக்கு. ஃபேஸ்புக், வாட்ஸ்அப்ல அரங்கேற்றம் செய்தால் போயிற்று!’’‘‘என்ன... மிரட்டி மீன் பிடிக்கப் பார்க்கறியா?’’‘‘நான் மீன் பிடிக்க வலை விரிக்கலை. பெரிய திமிங்கல வேட்டைக்குக் கிளம்பியிருக்கேன். கிடைக்கிறது திமிங்கலமா இருந்தாலும் சந்தோஷம். சுறாவா இருந்தாலும் சந்தோஷம்.’’‘‘போலிஸுக்குப் போயிடுவோம்... ஜாக்கிரதை!’’‘‘நல்லா இருக்கு... உங்களுக்கு நீங்களே குழி தோண்டிக்கப் போறீங்க!’’‘‘என்ன... உளறிட்டிருக்கே?’’‘‘பின்னே? போலீஸுக்குப் போனால் உங்க மகனோடு நான் நெருக்கமா இருக்கிற போடோஸ், வீடியோஸ் எல்லாம் யாருக்குச் சாதகமா இருக்கும், யாருக்கு பாதகமா இருக்கும்னு முடிவு செய்துக்கங்க.’’‘‘இந்த மாதிரி அசிங்கமான படங்களை பொதுவெளியில் வெளியிட்டால் உனக்குக் கேவலமில்லையா?’’‘‘அதென்ன கேவலம்னா பொண்ணுங்களுக்கு மட்டும்தானா? தப்பு செய்யும் ஆண்களுக்கு இல்லையா? இப்படியொரு கருத்தை பெண்களே பேசிட்டு இருக்கிறதுனாலதான் ஆண்கள் தப்பு மேல் தப்புப் பண்ணிட்டே இருக்காங்க.’’‘‘சரி... முடிவா என்ன சொல்ல வரே?’’‘‘இப்போதைக்கு பத்து லட்சம் பணமா கொடுத்திடுங்க. பிறகு பார்க்கலாம்.’’‘‘என்ன... பத்து லட்சமா?’’‘‘உங்க குடும்பத்தின் மானம் பெரிசா? பத்து லட்சம் பெரிசான்னு நீங்களே முடிவு செய்துக்கங்க.’’‘‘முன்னமும் அதே மாதிரி சொல்லித்தான் பணம் வாங்கினே?’’‘‘ஆமாம்... வாங்கினேன். இப்பவும் பணம்தான் கேட்கிறேன். மறுபடி தோன்றினால் மீண்டும் கேட்பேன்.’’‘‘மறுபடி கேட்பியா?’’‘‘எனக்கு பணம் ஒன்றே குறி!’’தீர்மானமாகச் சொன்னாள்.ரசிகாவின் வார்த்தைகளிலிருந்த ஒரு அழுத்தம், கார்த்திகேயன் குடும்பத்தாரை பயமுறுத்தும் செயலாகவே இருந்தது.பாக்யம் தீர்மானக் கேட்டாள்.‘‘பணம் மட்டுமே போதுமா?’’‘‘போதும்! எனக்கு அது ஒன்றே போதும். சீக்கிரம் ஏற்பாடு செய்யும் வழியைப் பாருங்க. இதுதான் என்னோட தீர்மானமான முடிவு. பணத்தை ரெடி பண்ணிட்டு சொல்லுங்க... பை.’’ரசிகா போனை வைத்துவிட்டாள்.வீடே உறைந்து போய்விட்டது.ரசிகாவிடமுள்ள புகைப்படங்களை வெளியிட்டால், சமூகத்தில் குடும்பத்தோட மானம் கெட்டுவிடுமே. போலீஸுக்குப் போனாலும் சுலபத்தில் முடியக்கூடிய காரியமாகத் தெரியவில்லை.வேறு என்னதான் செய்வது?கார்த்திகேயன் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டான்..19வினிதாவைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் சங்கவி மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.எந்த வகையிலாவது வினிதாவுக்கு உதவியாக வேண்டும். உடன் பிறந்தவள் மிகவும் கஷ்டப்படுகிறாள்.அக்காவுக்காக எத்தகைய தியாகமும் செய்யத் தயாராக இருந்தாள்.அதற்காக தன்னை தயார்படுத்திக்கொள்ள முனைப்பாக இருந்தாள் சங்கவி. அந்த நேரம் பார்த்து வஸந்திடமிருந்து போன் வந்தது.சங்கவி எடுத்தாள்.‘‘ஹலோ சங்கவி... எங்கே இருக்கே?’’‘‘வீட்டில்தான் இருக்கேன்.’’‘‘இன்னிக்கு காலேஜ் இல்லையா?’’‘‘காலேஜ் லீவ். எதுக்குக் கேட்கறீங்க?’’‘‘உன்னைப் பார்க்கணும்.’’‘‘என்ன திடீர்னு சொல்றீங்க... நான் எங்கே வரட்டும்?’’‘‘நீ வர வேண்டாம்.’’‘‘பின்னே?’’‘‘உங்க வீட்டுக்கு நானே வரேன். அங்கேயே சந்திப்போம்.’’சங்கவிக்குத் தூக்கிவாரிப் போட்டது.சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்.பக்கத்தில் யாருமில்லை.தேவிகா சமையலறையில் இருந்தாள். ராஜாராம் போர்டிகோவில் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார்.சங்கவி குரலைத் தாழ்த்திக் கொண்டாள்.‘‘என்ன விளையாடறீங்களா?’’‘‘விளையாட்டுக்குச் சொல்லவில்லை. உண்மையாத்தான் சொல்றேன். எத்தனை நாளைக்கு ரெண்டு பேரும் வீட்டுக்குத் தெரியாமல் வெளியில் திருட்டுத்தனமாக சந்தித்துக் கொண்டிருப்பது?’’‘‘அதுக்கு?’’‘‘அதான்... உங்க வீட்டுக்கே நான் நேரில் வரேன். உங்க வீட்டிலும் நான் அறிமுகமானது போலிருக்கும். நம்ம காதலையும் பெற்றவங்ககிட்ட சொன்னது போலிருக்குமே!’’சங்கவி பதறிப் போனாள்.போனை தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்கு பூனை போல் பதுங்கிப் பதுங்கிப் போனாள்.மொட்டை மாடியில் யாருமே இல்லை.சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள்.‘‘என்ன வஸந்த்... விளையாடறீங்களா?’’‘‘இதில் விளையாட என்ன இருக்கு? கிளம்பி வந்துட்டிருக்கேன். அதைச் சொல்லத்தான் போனில் கூப்பிட்டேன். எனக்குதான் உங்க வீடு தெரியுமே!’’‘‘ஐயோ... அப்பா, அம்மா எல்லாம் வீட்டில் இருக்காங்க.’’‘‘அவங்களும் இருக்கட்டும்... அதான் நல்லது.’’சங்கவி மேலும் பதறிப்போனாள்.‘‘இ... இப்போ எங்கே இருக்கீங்க?’’‘‘அம்மணீஸ்வரர் கோயிலைத் தாண்டி வந்துட்டிருக்கேன். பத்து நிமிஷத்தில் அங்கு இருப்பேன்.’’சங்கவி அவசரத்துடன் மொட்டை மாடியை விட்டு கீழே இறங்கி, வீதிக்கு ஓடினாள்.வஸந்த் சொன்னது விளையாட்டுக்கு இல்லை என்பது புரிந்தது.சொன்னது போலவே அடுத்த பத்தாவது நிமிஷம் வஸந்த்தின் கார் தெருமுனையில் வந்து, சங்கவி வீட்டை நோக்கித் திரும்பிற்று.சங்கவி பதற்றத்துடன் வீட்டுக்குள் ஓடினாள்.‘‘அம்மா... அம்மா... என்னோட ஃப்ரெண்ட் வஸந்த் வந்திட்டிருக்காரு.’’கிச்சனில் வேலையாக இருந்த தேவிகா, அடுப்பை நிறுத்திவிட்டுத் திரும்பினாள்.‘‘அது யாருடி வஸந்த்? இத்தனை நாள் சொல்லவே இல்லை?’’‘‘இப்போ சொல்லிட்டேனே!’’‘‘வர வர உன் போக்கு எனக்குச் சரியாவே படலை.’’செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த ராஜாராம், அந்தச் செய்தித்தாளை மடித்து வைத்துவிட்டு மூக்குக் கண்ணாடியைக் கழற்றினார்.சங்கவியை வியப்புடன் பார்த்தார்.தெருவில் வந்து கார் நின்றது.வஸந்த், ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கினான்.கூடவே நடுத்தர வயதில் ஒரு ஆணும் பெண்ணும் இறங்கினர்.பலகாரம், பழங்கள், பூக்கள் அடங்கிய தட்டுகளுடன் மேலும் இரண்டு, மூன்று பேர், காரை விட்டு இறங்கி வீட்டை நோக்கி வந்தனர்.வீடு தேடி வந்துள்ள விருந்தினர்.ராஜாராமும் தேவிகாவும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றனர்.‘‘வாங்க... எல்லோரும் உள்ளே வாங்க...’’வஸந்த்தின் தந்தை ரயில்ரங்கா. ஆறடி உயரம். கண்ணைப் பறிக்கும் வகையில் வெள்ளை காட்டன் சட்டை அணிந்திருந்தார். அந்த நிறத்திற்கு இணையாக வெள்ளை வேட்டி. வலக்கையில் ஆறு சவரனுக்கு பிரேஸ்லெட். இடக்கையில் வெளிநாட்டு கைக்கடிகாரம். கழுத்தில் பத்து சவரனுக்கும் குறைவில்லாத செயின்.பார்த்தவர்கள் கையெடுத்து வணங்கும் கம்பீரமான தோற்றம்.தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.‘‘ஐயா... என் பேர் ரயில்ரங்கா. இவங்க என் மனைவி ராதிகா. இவர் எங்க பையன் வஸந்த். ஒரு முறை எம்.எல்.ஏ.வா இருந்திருக்கேன். ஒரு முறை எம்.பி.யா இருந்திருக்கேன். ஒரு முறை அமைச்சாராகவும் இருந்திருக்கேன். மாநில அரசாங்கத்திலிருந்து மத்திய அரசாங்கம் வரை எல்லாம் எனக்கு அத்துபடி!’’அவரை ஒரு மிரட்சியுடன் வரவேற்றார் ராஜாராம்.‘‘ரொம்ப நல்லது. உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கேன். எல்லோரும் உட்காருங்கள்.’’அந்தப் பதினாறுக்குப் பதினாறு அடி ஹாலில் அனைவரும் அமர்ந்தனர்.பெண்கள் தாங்கள் கொண்டு வந்த பலகாரத் தட்டுகளை டைனிங் ஹால் மேஜை மீது பரப்பிவிட்டு வந்து உட்கார்ந்தனர்.தேவிகா அனைவருக்கும் பலகாரமும் ஃபில்டர் காபியும் கொண்டு வந்து பறிமாறினாள்.சில நிமிடங்கள் எந்தவொரு தெளிவுமில்லாமல் நகர்ந்தது.Ôஎதற்காக இவர்கள் வந்திருக்கிறார்கள்?’ என்ற கேள்வி, சங்கவியின் மனசிலும் ஓடிற்று. சங்கவியின் பெற்றோர் மனதிலும் அதே கேள்வி ஓடிற்று.ரயில்ரங்காவே ஆரம்பித்தார்.‘‘நாங்க வந்த விஷயத்தைச் சொல்றதுக்கு முன்னே என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லிக்கிறேன். எனக்கு சொத்து பத்துகள் நிறைய இருக்குகங்க. ஆனா, நிம்மதி மட்டும் இல்லை.’’‘‘என்ன சொல்றீங்க?’’‘‘என்ன அப்படிக் கேட்டுட்டீங்க? உண்மைதான். எங்களுக்கு வஸந்த் ஒரே பையன். அதுக்கு முன்னாடி எங்களுக்கு Ôசிநேகா’ன்னு ஒரு பொண்ணு இருந்தா. நல்ல இடமா பார்த்துக் கட்டிக்கொடுத்தோம். நாங்க விசாரித்த அளவில் பையன் ரொம்ப ஒழுக்கமானவன்னு எல்லாரும் சொன்னாங்க. நம்பிட்டோம். அந்த ஒழுக்கத்தைப் பற்றி நல்லா விசாரிக்காமல் தவறிட்டோம். அவனொரு சைக்கோன்னு கல்யாணத்திற்குப் பிறகுதான் தெரிஞ்சது. எங்க பொண்ணுக்கு நாங்க செய்யாத சீர்வரிசை இல்லை. செய்து என்ன புண்ணியம்? அவளோட புருஷனிடம் சித்ரவதையை அனுபவிச்சிட்டா. ஒரு நிலைக்கு மேல் அவளால் முடியலை. தற்கொலை பண்ணிக்கிட்டா.’’சொல்லி நிறுத்திய ரயில்ரங்கானின் கண்களில் நீர் திரையிட்டது. துக்கம் தாளாமல் அழுதார். அடுத்த நிமிஷம், கைக்குட்டையால் கண்ணீரை துடைத்துக் கொண்டவர், சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டார்.மீண்டும் ரயில்ரங்காவே தொடர்ந்தார்.‘‘அப்புறம் கொஞ்ச காலம் பொறுத்து வஸந்துக்கு கல்யாண ஏற்பாடு செய்தோம். கல்யாணம் உறுதிப்படுத்தி பத்திரிகை அடிச்சு ஊரெல்லாம் விநியோகம் செய்தப் பிறகு பொண்ணு வேறு ஒருத்தனோடு ஓடிப்போயிட்டா. தவிர, எங்க குடும்பத்துக்கு ஒரு அவமானம். கொஞ்ச நாள் வெளியில் தலைகாட்ட முடியலை. அந்தத் துக்கத்தையெல்லாம் துடைத்து எறிஞ்சிட்டு வெளியில் வந்தோம். உங்க பொண்ணு சங்கவியை மனசார காதலிக்கிறதா வஸந்த் சொன்னான். நம்ம ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சு தருவதைவிட நம்ம குழந்தைகள் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சு கொடுப்போம்னு முடிவு செய்துட்டோம். அதான் பொண்ணு கேட்டு உங்க வீட்டு வாசலில் வந்து நிற்கிறோம். இனி உங்க முடிவு.’’சில நிமிடங்கள் ராஜாராம் பதில் எதுவும் சொல்ல முடியாமல் திகைத்துப் போயிருந்தார்.இவ்வளவு பெரிய குடும்பத்திலிருந்து பொண்ணு கேட்டு வந்து நிற்கிறார்கள்.என்ன பதில் சொல்வது?ரயில்ரங்காவே கேட்டார்.‘‘என்ன மௌனமாயிட்டீங்க?’’ராஜாராம் ஒருவித தயக்கத்துடன் ஆரம்பித்தார்.‘‘இல்லே... இவ்வளவு வசதியானவங்க வந்து எங்க பொண்ணை கேட்கறீங்க. உங்க அளவிற்கு என்னால் சீர்வரிசை செய்ய முடியாது. ஏற்கெனவே எங்க பெரிய பொண்ணுக்கு சொன்ன சீர்வரிசை செய்யாமல் பிரச்னையில் மாட்டிட்டிருக்கோம். பெரிய பொண்ணுக்கு புகுந்த வீட்டில் பிரச்னை. இந்த நிலைமையில் ரெண்டாவது பொண்ணுக்கு கல்யாணமா? நினைச்சு பார்க்கவே முடியலை.’’‘‘அந்தக் கவலை எதற்கு? எங்க பையன் உங்க பொண்ணை விரும்பறான். உங்க பொண்ணைக் கொடுத்தால் போதும். எங்களுக்கு எந்தச் சீர்வரிசையும் வேண்டாம்.’’‘‘அப்படியே பார்த்தாலும் எங்க பெரிய பொண்ணுக்குச் செய்ய வேண்டிய சீர்வரிசையை செய்து முடிக்காமல் எங்க சின்னப் பொண்ணுக்குக் கல்யாணம் செய்தால் பிரச்னை ஆகிடும்.’’‘‘உங்களுக்கு என்ன கவலை? உங்க பெரிய பொண்ணு வினிதாவுக்கு நீங்க வாக்குறுதி கொடுத்த மீதி நகையைப் போடணும்... அவ்வளவுதானே? அதை நாங்க போடுவதாக வினிதாவோட மாமியாரைப் பார்த்து பேசிட்டோம்.’’ராஜாராம் அதிர்ந்து போய் ரயில்ரங்காவைப் பார்த்தார்.‘‘என்ன சொல்றீங்க?’’‘‘உங்க பெரிய மகள் வீட்டுக் கதையெல்லாம் எங்களுக்குத் தெரியும். சங்கவி எல்லா விஷயத்தையும் வஸந்திடம் சொல்லியிருக்கா. அதை எல்லாம்விட தன்னோட அக்கா குடும்பம் நல்லா இருக்கணும்னு சங்கவி அனுதினமும் நினைக்கிறா பாருங்க. அங்கேதான் அவ உயர்ந்து நிற்கிறா! இப்படியொரு பாசமான சகோதிரிகளை இதுவரை நான் பார்த்ததில்லை.’’‘‘என்ன சொல்றீங்க?’’‘‘ஆமாங்க... பாசத்துக்கு முன்னால் பணம் பேசாதுங்க. பணமிருந்தால் அசையும் சொத்து, அசையா சொத்தும் வாங்கலாம். ஆனால், நல்ல மனங்களை விலைக்கு வாங்க முடியாது. அன்பை அன்பால்தான் வாங்க முடியும். நல்லா புரிஞ்சுக்கிட்டேன். எத்தனையோ பிரச்னைகளில் சிக்கிட்டு அல்லல்பட்டுட்டோம். எங்க குடும்பத்துக்கு குத்துவிளக்கு மாதிரி சங்கவி மருமகளா வந்தால் போதும்!’’‘‘எங்க வாழ்க்கையில் இப்படியொரு மாற்றம் வரும்னு நாங்க நினைச்சே பார்க்கலை!’’‘‘அது மட்டுமில்லை... உங்க பெரிய மருமகன் கார்த்திகேயனைப் பற்றி உங்களுக்குத் தெரியாத ஒரு மறுபக்கமும் எங்களுக்குத் தெரியும்!’’‘‘புரியலை.’.‘‘கல்யாணத்துக்கு முன்னாடி வினிதாவோட வீட்டுக்காரருக்கு Ôரசிகா’னு வேறொரு தகாத பொண்ணோடு உறவு இருந்திருக்கு. அவளும் மிரட்டி மிரட்டி நிறைய காசை கறந்துட்டா. இதுவரைக்கும் மிரட்டிட்டிருக்கா. அவளையும் எங்க அரசியல் செல்வாக்கை வச்சு மிரட்டி விட்டாச்சு. இனி அந்த ரசிகாவும் கார்த்திகேயன் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டா!’’‘‘உங்களுக்கு எதுக்கு இத்தனை சுமை? எங்க குடும்ப பாரத்தை நாங்க சுமந்துக்கிறோம்.’’‘‘இதோ பாருங்க... பணத்தை பல வழியிலும் சம்பாதிச்சாச்சு. எங்க பொண்ணு சிநேகாவோட மரணத்திற்குப் பிறகு அந்தக் காசு பணம் மட்டும் இந்த உலகத்தில் பெரிசு இல்லைனு ஆகிடுச்சு. பாச பந்தமும் அவசியம். நிம்மதி வேணும். பிடிச்ச வாழ்க்கை வாழணும். எங்க பையனாவது அவனுக்குப் பிடிச்ச வாழ்க்கையை அர்த்தத்தோடு வாழட்டும்னு ஒரு முடிவுக்கு வந்துட்டோம். எனக்கு மூணு பொண்ணுங்க. ஒண்ணு இறந்து போச்சு. இன்னொன்னு வினிதா. மற்றொரு பொண்ணு சங்கவி.’’ரயில்ரங்காவை ஆச்சரியத்துடன் பார்த்தார் ராஜாராம்.‘‘என்ன சொல்றீங்க?’’‘‘ஆமாங்க! என்னதான் ஒரு மனுஷன் காசு பணம்னு பேயா அலைஞ்சாலும் ஒரு நிலைக்கு மேல் மாறியாகணும். நான் மாறிட்டேன். உங்க பொண்ணு சங்கவியும் நீங்களும் சம்மதித்தால் போதும். சம்பந்தம் செய்துக்கலாம்!’’ரயில்ரங்கா சொல்லி நிறுத்தவும், ராஜாராம் சங்கவியை அழைத்தார்..‘‘சங்கவி... இங்கே வாம்மா.’’சங்கவி வந்தாள்.‘‘இவங்க பேசினதையெல்லாம் கேட்டியா?’’‘‘கேட்டேன்பா.’’‘‘இவங்க பையனை கல்யாணம் செய்துக்க உனக்கு சம்மதமா?’’என்னதான் தைரியமான பெண்ணாக இருந்தாலும், அந்தக் கேள்விக்கு அவள் வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள்.‘‘உங்களுக்கு இந்தச் சம்பந்தத்தில் சம்மதன்னா எனக்கும் முழு சம்மதம்!’’வீடே சந்தோஷத்தில் மிதந்தது!வெட்கத்தில் தலை குனிந்து நின்றாலும், Ôவினிதா அக்கா இனி வாழ்க்கையில் தலை நிமிர்ந்து நிற்பாள்’ என்ற நிம்மதி சங்கவியின் மனதிற்குள் உதயமானது!(முற்றும்)