1கேர் யூனிட்டின் கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள் நர்ஸ்.உணர்வு வந்திருந்தாலும் கண்களைத் திறக்காமலே படுக்கையிலே புரண்டுக் கொண்டிருந்த விக்ரம், காலடி சத்தம் கேட்டதும் விசுக்கென எழுந்து அமர்ந்தான். ஆனால், இடுப்பிற்குக் கீழே அசைக்க முடியவில்லை. இரண்டு கால்களிலும் பேண்டேஜ் போடப்பட்டிருந்தது. தலைப்பகுதியில் இருந்த வலி காணாமல் போயிருந்தது. இரண்டு பக்க தோள் பகுதியும் பஞ்சு பொதி போல லேசாகியிருந்தது. இமைகளைப் பிரிப்பதற்கு சிரமமே படவில்லை.இமைகளை மெல்லத் திறந்து... நர்ஸை ஏறிட்டான்.“சிஸ்டர்...’‘“இப்போ பெயின் எப்படி இருக்கு சார்?’‘“பரவாயில்லை...’‘ தலையை மட்டும் ஆட்டினான்.மனசுக்குள் ஓராயிரம் யோசனைகள்!Ôநான் இங்கே எப்படி வந்து சேர்ந்தேன்?தெரியவில்லை!யார் கொண்டு வந்து சேர்த்திருப்பார்கள்?தெரியவில்லை!சுகனைத் தேடிப் போய் அவமானப்பட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது மினி லாரியோ வேனோ தன் மீது மோதியது வரை ஞாபகம் வந்தது. பிறகு என்ன நடந்ததென்று தெரியவில்லை. யோசனையும் குழப்பமுமாகவே இருந்தது.சுகன்தான் விக்ரமின் ஒரே நண்பன்.ரொம்ப நெருக்கமான நண்பன்.விக்ரமினால் உயர்ந்த நிலைக்கு வந்திருக்கும் நண்பன்.சுகன் பார்க்கும் வேலை... கைநிறைய வாங்குகிற சம்பளம்... தங்கியிருக்கும் விசாலமான பிளாட்... பயணிக்கும் சொகுசு கார் எல்லாமே விக்ரமினால் கிடைத்ததுதான்.விக்ரம் போட்ட பிச்சை.விக்ரம் தந்த வாழ்க்கை.சுகனுக்காக பணத்தை அள்ளி அள்ளி இறைத்திருக்கிறான் விக்ரம்.எல்லாவற்றையும் மறந்துவிட்டான் சுகன்.விக்ரமிடம் இப்போது எதுவுமில்லை.உயிரும் உடம்பும் மட்டும்தான் மிச்சம்.அடுத்தவேளை சாப்பாட்டிற்கு மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை. அதனால்தான் சுகன் விலகிவிட்டான்.அடிக்காதக் குறையாய்ப் பேசி விரட்டி விட்டான்.Ôதபாரு... நான் ஒண்ணும் ஏ.டி.எம். மிசின் கிடையாது... நீ கேட்கறப்பல்லாம் பணத்தைக் கொடுக்கறதுக்கு? புரிஞ்சு நடந்துக்க. இனிமேல் என்னைத் தேடி வராதே! ஐந்நூறு கொடு ஆயிரம் கொடு’ன்னு தொல்லைப் பண்ணாதே. ஏதோ ஒரு நேரத்தில் என் தலையெழுத்து உன்கூட குளோசா பழகிட்டேன். அந்த நினைப்புலதான் இந்தளவுக்கு பொறுமையா மரியாதையோட பேசிக்கிட்டிருக்கேன்.சுகனின் குரல் காதினுள் ரீங்காரமிட்டது. முகத்தில் குத்து வாங்கியதைப் போல வலித்தது.“சார்... ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாதீங்க. உடம்பை அசைக்கக் கூடாது. நீங்க முன்புபோல படுத்தே இருக்கலாம். இன்ஜெக்ஷன் போடணும்... ட்ரிப்ஸ் ஏத்தணும்.’‘அருகில் நெருங்கி வந்து கனிவாய், பரிவாய்ச் சொன்னாள் நர்ஸ்.Ôச்சே... சுகனைப் பற்றி நினைக்கவே கூடாது.Õதன்னை ஒரு சிலுப்பு சிலுப்பி, சுகனைப் பற்றிய நினைப்புக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தான்.“ஓகே சிஸ்டர்... நீங்க சொல்றபடியே நான் ஃபாலோ பண்றேன். எனக்கு இப்ப இன்ஜெக்ஷன் போடலாம்.’‘புஜத்தை நர்ஸ் பக்கம் காட்டினான்.மருந்து ஏற்றப்பட்ட இன்ஜெக்ஷனை விக்ரமின் புஜத்தில் செருகினாள் நர்ஸ்.மெலிதாய் எறும்புக் கடிப்பது போல சின்ன வலி.“அந்தக் கையிலயும் போடணும் சார்.’‘“தாராளமா போடுங்க! நான் சீக்கிரமா குணமாகணும்.’‘ இன்னொரு கையின் புஜத்தையும் காட்டினான்.“தூக்கம் வர்றாப்ல இருக்கும்... படுத்து, கண்ணை மூடிக்கங்க. நான் ட்ரிப்ஸை மாட்டிடுறேன்.’‘கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டான் விக்ரம்.உயரமான தாங்கியில் ட்ரிப்ஸ் பாட்டிலை பொருத்தி, ஊசியை அவனுடைய விரல்களில் பிணைக்கப்பட்டிருந்த ‘நீடில்ஸ் ட்யூபில்’ செருகினாள். ட்ரிப்ஸ் துளித்துளியாய் அவனுடைய உடம்பினுள் ஏறத் தொடங்கியது.“சார்... நான் ஒரு ஆஃபனவர் கழிச்சு வர்றேன்...’‘ நர்ஸ் அங்கிருந்து நகர முயன்றாள்.“சிஸ்டர்...’‘“சொல்லுங்க சார்...’‘“இது பிரைவேட் ஹாஸ்பிடல்தானே? ஒரு நாள் வாடகையே எக்கச்சக்கமா இருக்குமே?’‘“ஆமா... இது பிரைவேட் ஆஸ்பிடல்தான்! ஒரு நாள் ரென்ட் டென் தௌசன் ஃபீஸ். இதுவரைக்கும் உங்களுக்கு லட்சக்கணக்குல செலவாகியிருக்கு. பணத்தை தண்ணியா இறைச்சதாலதான் உங்களைக் காப்பாத்தவே முடிஞ்சது!’‘“அப்படியா?’‘“இதைப் பத்தியெல்லாம் எதுக்கு சார் கேட்கறீங்க? பணத்தைப் பத்தியெல்லாம் யோசிக்கவே யோசிக்காதீங்க! மொதல்ல நீங்க எழணும்... பழையபடி நடக்கணும்.’‘நர்ஸ் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனான்.“சிஸ்டர்... என்னால இப்ப நடக்க முடியாதா?’‘“எப்படி சார் முடியும்? ரெண்டு கால்லயுமே முழங்காலுக்குக் கீழே எலும்புகள் நொறுங்கி, பிளேட் வெச்சு, ஆபரேஷன் பண்ணியிருக்காங்க சார்.’‘அவனால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.“என்னோட ரெண்டு கால்கள்லயும் எலும்புகள் நொறுங்கிடிச்சா? பிளேட் வெச்சு ஆபரேஷன் செஞ்சிருக்காங்களா?’‘பலத்த அதிர்ச்சி இதயத்தைத் தாக்கியது.முகத்தில் இறுக்கம் படர்ந்தது.“சார்... நான் வேற பேஷண்டுகளையும் ஹேண்டில் பண்ணணும்... அடுத்தடுத்த வார்டுகளுக்கும் போகணும்... கிளம்பறேன்.’‘விக்ரமிடம் மேற்கொண்டு பேச விரும்பாதவளாய். கேர் யூனிட்டின் வெளிக் கதவை நோக்கி நடந்தாள் நர்ஸ்.“சிஸ்டர்... கோச்சுக்காதீங்க... தப்பா நெனைக்காதீங்க... இன்னும் ஒரே ஒரு கேள்வி... அதுக்கு மட்டும் பதில் வேணும்.’‘கெஞ்சினான்.அவன் முகத்தைப் பார்க்கவே பரிதாமாக இருந்தது.“கேளுங்க...’‘நின்று திரும்பிப் பார்த்தாள்.“என் சட்டைப்பையில சல்லிக்காசு இல்லை. நான் நூறு ரூபாய்க்குக்கூட வொர்த்தானவன் கிடையாது. எனக்காக கலங்க கண்ணீர் விட இந்த உலகத்தில யாருமே இல்லை. இவ்வளவு பெரிய தனியார் ஹாஸ்பிடல்ல என்னை சேர்த்துவிட்டு, லட்சக்கணக்குல பணத்தை செலவு பண்ணி, என்னையக் காப்பாத்தினது யாரு?’‘படபடவென கேட்டான்.பரிதவிப்பாய் கேட்டான்.தன் உடம்பின் வலியைவிட அந்த வினாவிற்கு எப்படியாவது விடை தெரிந்து கொண்டு விட வேண்டும் என்கிற தவிப்பே அதிகமாக இருந்தது.நர்ஸ் அவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தாள்.“சொல்லலாமா? வேண்டாமா?அவளுடைய புருவங்கள் உயர்ந்தன.“சொல்லுங்க சிஸ்டர்... எனக்காக இவ்வளவு செலவழிச்சது யாரு?’‘மீண்டும் மீண்டும் போனான்.“ஸாரி சார்... தெரியலை! அதெல்லாம் ஹாஸ்பிடல் நிர்வாகம் சம்பந்தப்பட்டது. நான் இங்கே டியூட்டி பார்க்கற ஸ்டாஃப். தட்ஸ் ஆல்!’‘புன்னகை இழையோட பதில் சொன்னாள். அங்கிருந்து அதிவேகமாய் நகர்ந்தாள்.இந்தப் பூமியில வாழவே தகுதியில்லாதவன் நான்! போயும்போயும் என்னைக் காப்பாத்தியிருக்காங்களே! அந்த நபர் யாராய் இருக்கும்?’‘ கடவுளே நேரில் வந்து மன்றாடினாலும், சுகனெல்லாம் எனக்காக ஒரு ரூபாய் செலவு செய்ய மாட்டான்!அப்படியானால், அந்த நபர் யாராய் இருக்கும்?யாராய் இருக்கும்?விக்ரமின் இதயம் வேகமாய்த் துடிக்கத் தொடங்கியது..2எல்லா வண்ணங்களிலும் ரோஜாக்கள் பூத்துக் குலுங்கின. ஓஸ் பைப்பினால், பார்த்து பார்த்து ஒவ்வொரு செடிக்கும் தண்ணீர்ப் பாய்ச்சிக் கொண்டிருந்தாள் மிதிலா.ஒரு வாரம் முன்பு வாங்கி வந்து நட்டிருந்த பன்னீர் ரோஜா செடியில் இருந்த மொட்டுகள் அனைத்துமே பெரிதாகி, இதழ்கள் விரிந்திருந்தன!குட்டிக் குட்டி ரோஜாக்கள்!அத்தனையும் அழகோ அழகு!!மலர்ந்திருந்த பூக்களிலிருந்து கிளம்பிய நறுமணம் காற்றில் சங்கமமாகி, தோட்டத்தையே கமகமக்கச் செய்தது!தினமும் அதிகாலையிலேயே எழுந்து, உடற்பயிற்சியை முடித்து, குளித்து உடைமாற்றி, பூஜை பண்ணிய கையோடு தோட்டத்துப் பக்கம் வந்து விடுவாள் மிதிலா.செடிகளும் பூக்களும்தான் அவளுக்கு ரொம்ப இஷ்டம்.அரை மணி நேரம் செடிகளுக்கு தன்னுடைய கைகளினாலேயே தண்ணீர் விட்டால்தான் அன்றைய பொழுது சுகமாய் கழியும்.ஒரு நாள் தோட்டத்துப் பக்கம் வராவிட்டாலும் எதையோ தொலைத்தது போல உணர்வாள் மிதிலா.ரோஜா செடிகளிலும் மல்லிகைக் கொடிகளிலும் குலுங்கும் பூக்களிலும்தான் மிதிலாவின் சந்தோஷம் ஒளிந்திருந்தது.“டி... மிதிலா... உனக்கு போன்...’‘வீட்டின் பின் வாசல் வழியாக தோட்டத்திற்கு வந்தாள் கோகிலம்.“திரும்பத் திரும்ப விடாம அடிச்சுக்கிட்டே இருந்தது. அதான் எடுத்துக்கிட்டு வர்றேன்.’‘செல்போனை மிதிலாவிடம் கொடுத்தாள்.ஓஸ் பைப்பை புல்வெளியில் போட்டு விட்டு, செல்போனை கையில் வாங்கினாள் மிதிலா.செல்போன் திரையில், ‘ஹாஸ்பிடல் ஜெயம்’ என்ற வாசகங்கள் ஒளிர்ந்தது.“ஹாஸ்பிடல்லேருந்துதான் பேசறாங்க. நீ உள்ளே போம்மா. பேசிட்டு வந்துடறேன்.’‘கோகிலம் அங்கிருந்து நகர, செல்போனின் பச்சைப் பொத்தானை அழுத்தி காதில் வைத்தாள் மிதிலா.“வணக்கம்... நான் டாக்டர் மிதிலா பேசறேன்.’‘“வணக்கம் மேடம். நான் நர்ஸ் கல்பனா பேசறேன்.’‘மறுமுனையிலிருந்து அங்கே ஸ்டாப் நர்ஸாக வேலைப் பார்க்கும் கல்பனா பேசினாள்.“சொல்லு கல்பனா... எப்பவும் போன் எல்லாம் பண்ணவே மாட்டியே. ஏதாவது முக்கியமான விஷயமா?’‘“ஆமாம்மா.’‘“என்ன விஷயம் கல்பனா?’‘“அது வந்து...’‘கல்பனா தயங்கினாள்.“லீவ் வேணுமா கல்பனா?’‘“ம்ஹூம்...’‘“சம்பள பணத்துல ஏதாவது அட்வான்ஸ் கேட்கறியா?’‘“அய்யோ... அதெல்லாம் இல்லீங்கம்மா! இது வேற...’‘“எதா இருந்தாலும் சொல்லு கல்பனா.’‘“அந்த பேஷன்ட்டுக்கு நினைவு வந்துடுச்சுங்க அம்மா!’‘“யாரைச் சொல்றே?’‘“ஆக்சிடெண்ட் கேஸ்மா. நடுரோட்ல அடிபட்டு கெடந்தவரை யாரோ ஒரு ஆட்டோ டிரைவர் நம்ம ஹாஸ்பிடல்ல கொண்டு வந்து எறக்கி விட்டுட்டான். சீஃப் டாக்டர் அட்மிஷன் போட யோசிச்சார். தயங்கினார். ஆனா, நீங்கதான் அந்த பேஷண்ட்டுக்கு ரெக்கமண்ட் பண்ணி அட்மிஷன் போட வெச்சீங்க. நீங்களே பூரா பணத்தையும் கட்டி ஆபரேஷனும் பண்ண சொல்லிட்டீங்க. ஆபரேஷனும் முடிஞ்சது. பேஷண்ட்டும் கண் விழிச்சுட்டார்.’‘“சந்தோஷம் கல்பனா! இதைச் சொல்லத்தான் இவ்வளவு தயங்குனியா?’‘“இல்லைம்மா. அந்த பேஷண்ட் கண் விழிச்சதுலேருந்து கேள்வி மேல கேள்வி கேட்டு, ஒரேடியா தொல்லைப் பண்றாரும்மா.’‘“என்ன கேட்கறார்?’‘“ என்னை இங்கே கொண்டு வந்து அட்மிஷன் போட்டது யாரு? சல்லிக்காசு இல்லாத தனக்காக இவ்வளவு பணம் செலவழிச்சு, ஆபரேஷன் பண்ணினது யாரு?’ன்னு திரும்பத் திரும்ப கேட்டுக்கிட்டே இருக்காரும்மா.’‘நடந்ததை விவரித்தாள் நர்ஸ் கல்பனா.“நீ என்ன பதில் சொன்னே?’‘“தெரியாதுன்னு சொல்லிட்டேன்.’‘“அப்பறமென்ன... அதையே மெயின்டெயின் பண்ணிட வேண்டியதுதானே?’‘“முடியாதும்மா! ஒரு தடவை பொய்ச் சொல்லி சமாளிச்சுட்டேன். எப்ப கேர் யூனிட்டுக்குள்ள நுழைஞ்சாலும் அதையேதான் கேட்கறாரு. பாவமா இருக்கும்மா. அவருக்கு வயசு எப்படியும் 32 இருக்கும்போல. ஆனா, பச்சைக் கொழந்தை முகம்! அவரோட கண்ணைப் பார்த்து, பொய்ப் பேசறதுக்கு சங்கடமா தோணுது. அவரோட பேருகூட யாருக்கும் தெரியாது. ஆனா, நீங்கதான் விக்ரம்’னு பேரைச் சொல்லி, அவருக்கு அட்மிஷன் போட்டீங்க. அவரோட உயிரைக் காப்பாத்த செலவு செஞ்சதும் நீங்கதான். என்னையும் அறியாம, டாக்டர் மிதிலாம்மாதான் உங்களுக்காக எல்லாத்தையும் பண்ணினாங்க’ன்னு உண்மையைச் சொல்லிடுவேனோன்னு பயமா இருக்கும்மா.’‘மறுமுனையிலிருந்து நர்ஸ் கல்பனா அழாதக் குறையாய்ப் பேசினாள்.“ஏய்... கல்பனா... எதையாவது உளறிடாதே!’‘“நா என்னம்மா பண்ணட்டும்? பொய் பேசவே எனக்குத் தெரியாது. அப்படியேப் பழகிட்டேன். அதனாலதான் போன் பண்ணி உங்கள டிஸ்டர்ப் பண்றாப்ல ஆகிடுச்சு. எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணணும் மேடம்... சீஃப் டாக்டர்கிட்ட சொல்லி என்னோட ட்யூட்டியை வேற வார்டுக்கு மாத்திடுங்க. நான் அந்த பேஷன்ட்டோட கண்ணுலயே அகப்பட வேணாம்னு நெனைக்கிறேன்.’‘தன்னுடைய கோரிக்கையை முன் வைத்தாள்.ஒரு கணம் அமைதியாக செல்போனை பிடித்திருந்தாள் மிதிலா.‘விக்ரம் கண் விழித்து விட்டான்.’‘தனக்காக இவ்வளவு உதவியையும் செய்வது யார் என கேள்வி கேட்கிறான்!’‘விக்ரம் உயிர் பிழைத்து விட்டாலும், எழுந்து பழையபடி நடமாட எப்படியும் மூன்று மாதங்கள் ஆகும்!’‘அதுவரைக்கும் ஹாஸ்பிடல்லதான் இருந்தாகணும். விக்ரமை ஹாஸ்பிடல்லேருந்து வெளியே அனுப்பற வரைக்கும் நானே அவன் கண்ணுல பட்டுடக்கூடாது. இதுல நர்ஸ் கல்பனா வேற புது சிக்கலை கௌப்பறாளே... என்ன பண்றது?’“மேடம்... என்னாச்சு... ஏதாவது பேசுங்க மேடம். எனக்குப் பதிலா ஜாஸ்மினை அந்த பேஷன்ட்டை கவனிச்சுக்க அனுப்புங்க மேடம். நான் இளகின மனசுக்காரி. ஜாஸ்மினோ ராங்கிக்காரி. பேஷன்ட்கிட்டயெல்லாம் மொகம் கொடுத்தே பேசமாட்டா.’‘மாற்று வேலைக்குரிய நபரையும் காட்டி விட்டாள் நர்ஸ் கல்பனா!“சரி கல்பனா... நீ இன்னைக்கு ஒரு நாள் மட்டும் ட்யூட்டி பாரு. நாளையிலேருந்து ஜாஸ்மினை பார்த்துக்கொள்ளச் சொல்லிடறேன்.’‘விக்ரமின் குணம்...விக்ரமின் சுயரூபம்...தனக்குத்தானே தெரியும்!தனக்கு மட்டும்தானே புரியும்!!யோசனையாய்த் தோட்டத்தைச் சுற்றிக் கொண்டு வீட்டின் முன் பக்கம் வந்து, உள்ளே நுழைந்தாள்.“மிதிலா... டிபன் ரெடி!’‘அடுக்களையில் இருந்தவாறே குரல் கொடுத்தாள் கோகிலம்.“பசிக்கலைம்மா...’‘“வெளையாடுறியா? நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். என்னாச்சு உனக்கு? ரெண்டு, மூணு நாளாவே நீ சரியில்லை. ஹாஸ்பிடல்ல ஏதாச்சும் பிரச்னையா? அதனாலதான் சரியா சாப்பிட மாட்டேங்கறியா?’‘மல்லிகைப்பூ போன்ற இட்லிகளை பிளேட்டில் வைத்து, ஒரு சிறு கிண்ணத்தில் பூண்டு சட்னியோடு வெளிப்பட்டாள் கோகிலம்.“ஹாஸ்பிடல்ல எந்தப் பிரச்னையும் கிடையாது. நீயா எதையாச்சும் கற்பனை செஞ்சுக்காதேம்மா!’‘“அப்படின்னா ஒழுங்கா சாப்பிடு. நானே ஊட்டி விடறேன்.’‘வாஞ்சையோடு அருகில் நெருங்கினாள் கோகிலம்.மிதிலாவிற்கு அப்பா கிடையாது.வளர்த்தது, ஆளாக்கியது, படிக்க வைத்தது எல்லாமே கோகிலம்தான்.ஓடாய் உழைத்து...மெழுகுவர்த்தியாய் உருகி...உளியாய் மாறி தன்னைத்தானே செதுக்கிக் கொண்டுதான் Ôமிதிலா’ என்ற அழகான சிற்பத்தை உருவாக்கியிருந்தாள் கோகிலம்.இந்த இடத்தை தொட, பட்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல.படிப்பு... வேலை... பணம்... அந்தஸ்து என சகலமும் வந்துவிட்டது!ஆனால், நிம்மதி இல்லை.இதயம் வெறுமையாய்க் கிடக்கிறது.தாய்க்கு நேரே மகளும்... மகளுக்கு எதிரில் தாயும் பொய்யாய்ப் போலியாய் புன்னகைத்தபடிதான் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.“எனக்கு வயிறு சரியில்லைம்மா.’‘“இப்படி ஒரு டாக்டர் சொல்லலாமா? வயிறு சரியில்லைன்னா, ஒரு வேளை சாப்பாட்டை ஒதுக்கலாம். தொடர்ந்து மூணு நாளா பட்டினிக் கெடந்தா, உடம்பு தாங்குமா?’‘“அம்மா... நான் அப்பப்போ ஹாஸ்பிடல்ல ஜூஸ் குடிக்கறேன்மா.’‘“அதை நான் நம்பமாட்டேன். நீ இப்ப சாப்பிடலைன்னா விடமாட்டேன்!’‘ உரிமையாய் மிதிலாவை தன் பக்கம் இழுத்து, பிளேட்டிலிருந்த இட்லியைப் பிட்டு, பூண்டு சட்னியில் நனைத்து, அவள் வாயினுள் ஊட்டினாள் கோகிலம்.“ம்ம்... போதும்மா.’‘“இன்னும் ஒரே ஒரு இட்லிதான்...’‘எப்படியோ பிளேட்டில் கொண்டு வந்த நான்கு இட்லிகளையும் மிதிலாவிற்கு ஊட்டி முடித்துவிட்டாள் கோகிலம்.“வயிறு நெறைஞ்சிடுச்சி! நான் ஹாஸ்பிடல் கௌம்பறேன்மா.’‘ஸ்டெதஸ்கோப்பும் சீருடையும் இருந்த ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள்.சின்னஞ்சிறிய மாடி வீடு...சுற்றிலும் தோட்டம்... இரண்டு வருடங்களுக்கு முன்புதான் விலைக்கு வாங்கியிருந்தாள்.தாயும் மகளும் வசிக்க போதுமானதாக இருந்தது அந்த வீடு!சமீபத்தில் லோனில் வாங்கியிருந்த கார் வாசலில் நிறுத்தப்பட்டிருக்க, உள்ளே ஏறி அமர்ந்தாள்.வாசற்படியில் நின்றபடியே, கள்ளம் கபடமில்லாமல் கையை அசைத்துக் கொண்டிருந்தாள் கோகிலம்.‘பாவம் அம்மா... அவளுக்கு எதுவும் தெரியாது!’‘நான் மீண்டும் விக்ரமைப் பார்த்ததோ, அவனுடைய உயிரைக் காப்பாற்ற போராடியதோ, லட்சக்கணக்கில் பணம் செலவழித்து ஆபரேஷன் பண்ணியதோ அம்மாவிற்கு தெரிந்தால் அவ்வளவுதான்.பத்ரகாளி ஆகி விடுவாள்.ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பித்து விடுவாள்.வேண்டாம்... அம்மாவிற்கு எதுவும் தெரிய வேண்டாம்! அம்மாவிற்குத் தெரியாமலேயே விக்ரமை குணப்படுத்தி, ஹாஸ்பிடலிலிருந்து வெளியேற்றி விட வேண்டும்.’காரைக் கிளப்பினாள்.ஏழு வருடங்களுக்கு முந்தைய விக்ரம் கண்களுக்குள் வந்து போனான்.“ஐ லவ் யூ மிதிலா... ஐ லவ் யூ... டூ மச்... உனக்காக... நீ எனக்குக் கிடைக்கணும்கிறதுக்காக மலை உச்சியிலேருந்து குதிக்கச் சொன்னாலும் குதிச்சிடுவேன். அந்தளவுக்கு உன்மேல எனக்குக் காதல்!’‘இதயம் உருகிக் கரைந்து விடுவது போல உச்சரித்தான்!காரின் ஸ்டியரிங்கைப் பற்றியிருந்த மிதிலாவின் கரங்கள் நடுங்கின.‘எல்லாம் பொய்யாகிவிட்டதே...எல்லாம் வீணாகிவிட்டதே...எல்லாம் விஷமாகிவிட்டதே!’‘ச்சே... அதெல்லாம் முடிந்த கதை... பழசெல்லாம் இனி எனக்கெதுக்கு?’ தன்னைத் திடப்படுத்தியபடி, பாதையில் கவனத்தைச் செலுத்த முயன்றாள் மிதிலா..3 மருத்துவமனை வளாகத்திற்குள் மிதிலாவின் கார் நுழைந்ததுமே ஓடி வந்து சல்யூட் வைத்தான் வாட்ச்மேன். பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினாள்.இதயம் தடக் தடக்கென அடித்துக் கொண்டது.சீஃப் டாக்டரிடம் பேசி, கல்பனா சிஸ்டரை வேறு வார்டுக்கு மாற்ற வேண்டும்.‘சீஃப் டாக்டர் காரணம் கேட்பாரே...’யோசனையும் குழப்பமுமாகவே இருந்தது.‘’எதையாவது சொல்லி சமாளித்துக்கொள்ள வேண்டியதுதான்.’’கைப்பையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் நடந்தாள்.மிகப்பெரிய மருத்துவமனை அது!‘ராஜகணபதி மருத்துவமனை’ என்று சொன்னால் அந்த நகரத்தில் தெரியாதவர்களே இருக்க முடியாது. பெரும்பாலும் பணக்கார வர்க்கத்தினர்தான் விரும்பி அங்கே வருவார்கள்.மருத்துவமனை என்று சொல்ல முடியாத அளவிற்கு கட்டமைப்பு, காற்றோட்டமான அறைகள், சுகாதாரமான தரைப்பகுதி, காத்திருக்கும் நோயாளிகளுக்காக விசாலமான ஹால், பிரார்த்தனைக் கூடம், குழந்தைகளோடு வருபவர்களுக்கு தனித்தனி ஹாலில் விளையாட்டு பொருள்கள், சிறிய நூலகம், எல்லா மதத்தினரும் மகிழும்படி அவரவர் மத கடவுளின் படங்கள், மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிலும் ஏராளமான பழமரங்கள், காய்கறித் தோட்டம், பூச்செடிகள், குரோட்டன்ஸ் வகைகள். பரந்து விரிந்த பல ஏக்கர் பரப்பளவு என்பதால் மிகப்பெரிய வனத்தையே உருவாக்கியிருந்தார்கள்!ஏ.சி.யே தேவையில்லை. குளுகுளுவென காற்று வீசிக் கொண்டேயிருக்கும். ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டால், எத்தகைய கொடிய நோயாளியும் கண்ணயர்ந்து விடுவார்! தென்றலின் தாலாட்டு சுகமான தூக்கத்தை வரவழைத்து விடும். அங்கே பணிபுரிபவர்களிலேயே மிதிலாதான் வயதில் குறைவான மருத்துவர். நோயாளிகளிடம் மிதிலாவின் திறமையான அணுகுமுறையைப் பார்த்து மற்ற மருத்துவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.சீஃப் டாக்டர் ஜெயகோபிநாத்தின் நம்பிக்கைக்குரியவள் மிதிலா.இவ்வளவு பெரிய மருத்துவமனையின் சொந்தக்காரர் ஜெயகோபிநாத் அவர்கள்தான்.எளிமையான மனிதர். இருந்தாலும் திறமைசாலிகள் யாராக இருந்தாலும் உரிய மரியாதைக் கொடுப்பார். வேறெங்கும் வேலைக்குச் செல்ல முடியாதவர்களுக்கு, கைநிறைய சம்பளம் கொடுத்து இங்கேயே தக்க வைத்துக்கொள்வார்.மிதிலாவை அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.மருத்துவமனை தொடர்பாய் மிதிலா சொல்லும் யோசனைகளை உடனடியாக செயல்படுத்தி விடுவார். வேலையில் வந்து சேர்ந்த குறுகிய காலத்திலேயே மிதிலாவிற்கு நல்லபெயர்!“மிதிலாம்மா... மிதிலாம்மா...’‘ என அங்கே வேலை செய்கிற கடைநிலை ஊழியர் முதல் சீஃப் டாக்டர் வரை உருகித் தவிக்கிற அளவிற்கு தன்னுடைய அன்பினால் அனைவரையும் கட்டிப்போட்டிருந்தாள் மிதிலா.மிதலாவை அங்கிருந்தவர்கள் Ôகருணை தேவதை’யாகத்தான் பார்த்தார்கள்.“மிதிலாம்மா... அந்த ஆக்சிடெண்ட் கேஸ் இப்ப நல்லாருக்காரும்மா. சுயநினைவு வந்திடுச்சு!’‘ஹாஸ்பிடல் அறைகளை தூய்மை செய்யும் பெண்மணி, மிதிலாவைப் பார்த்ததுமே வேகமாய் ஓடி வந்து சொன்னாள்.“அப்படியா... சந்தோஷம் சுகுணா!’‘“அந்த பேஷன்ட்டுக்கு எல்லா செலவையும் நீங்கதான் பண்றீங்களாமே... வேணி சொன்னா.’‘சுகுணாவிற்கு புன்முறுவலை பதிலாக சிந்திவிட்டு ரிசப்ஷனைக் கடந்து லிஃப்ட்டுக்கு வந்தாள்.லிஃப்ட் இயக்கத்தில் இருக்க, காத்திருப்பதை விட படிகளின் வழியாக ஏறிவிடலாம் என எண்ணி, படிகளில் ஏறத் தொடங்கினாள்.“மிதிலாம்மா... அந்த பேஷன்ட் உங்களுக்கு உறவுக்காரரா? என்ன உறவும்மா?’‘கூடவே ஏறிக் கொண்டிருந்த நர்ஸ் லலிதா, ஆர்வமாய்க் கேட்டாள்.“யாருன்னு தெரியாது லலி... பணம் இல்லேங்கிறதுக்காக கண் முன்னாடி ஒரு உயிரு துடிக்கறதைப் பார்த்துக்கிட்டிருக்க முடியுமா? ஏதோ என்னால முடிஞ்சதை செய்தேன். ஒருத்தருக்கு உதவி செய்யணும்னா, அவங்க உறவினராகவோ நண்பராகவோதான் இருக்கணுமா?’இரண்டாவது தளம் முடிந்து மூன்றாவது தளத்திற்குரிய படிகளுக்கு வந்திருந்தது. லலிதாவோடு பேசியபடியே நடந்ததால் களைப்பு தெரியவில்லை.“அப்போ... அவர் யாருன்னே உங்களுக்குத் தெரியாதாம்மா?’‘“தெரியாது லலி.’‘உதட்டைச் சுழித்தாள்.இரண்டு நாட்களுக்கு எல்லோரும் இதையேதான் கேட்கப் போகிறார்கள். இதே பதிலைத்தான் சொல்ல வேண்டும். பொய்ப் பேசுவது, உண்மையை மறைப்பதெல்லாம் மிதிலாவிற்கு சுத்தமாய்ப் பிடிக்காது. ஆனால், விக்ரம் விஷயத்தில் பொய்யைத் தவிர வேறு எதையும் சொல்ல முடியாது.“கடவுளும் நீங்களும் ஒண்ணுதான்! ஏன்னா, முன்ன பின்ன தெரியாதவங்களுக்குக்கூட உதவி செய்ற தன்மை கடவுளுக்கு மட்டும்தான் உண்டு!’‘“பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே லலி.’‘மூன்றாவது தளத்தின் கோடியில் இருந்த சீஃப் டாக்டர் ஜெயகோபிநாத்தின் அறைக்கு முன்னால் போய் நின்றாள்.எதிரே கேர் யூனிட். உள்ளேதான் விக்ரம் படுத்திருக்கிறான்.விக்ரமின் கண்களில் பலவே கூடாது. விக்ரம் குணமாகும் வரை இந்த மருத்துவமனையை விட்டு வெளியேறும் வரை அவன் கண்களில் படக்கூடாது. படாமல் இருக்க, விழிகள் கிடையாது. அது சாத்தியமில்லை. மூணுமாதம் விடுப்பு கேட்கலாம். அது மகாபாவம். தன் ஒருத்தி சுயநலத்திற்காக தேவையில்லாமல் விடுப்பில் போவதற்கு மனசு ஒத்துக்கொள்ளவில்லை. ஒரேவழி... ராஜகணபதி மருத்துவமனையின் கிளை மருத்துவமனை நகரத்தின் வேறொரு இடத்தில் இருக்கிறது. இந்தளவிற்கு விசாலமான கட்டடம் கிடையாது. குழந்தைகள், கர்ப்பிணிகளுக்காக இயங்கி வருகிறது. சப் டாக்டரிடம் சொல்லிவிட்டு மூன்றுமாதக் காலம் அங்கே போய் பணியாற்றலாம்.ஜெயகோபிநாத்தை சம்மதிக்க வைப்பது பெரிய விஷயம் கிடையாது. சரியானக் காரணம் வேண்டும். அதுவும் அவர் நம்பும்படியானக் காரணம் வேண்டும். இங்கே காரணம்தான் பிரச்னையே!“மே ஐ கம்மின் சார்...’‘கண்ணாடிக் கதவின் மீது கையை வைத்துத் தட்டினாள்.“எஸ்... கம்மின்...’‘கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் மிதிலா.“உன்கிட்டே எத்தனை தடவை சொல்றது? என் ரூமுக்குள்ளே வர்றதுக்கு நீ பர்மிஷன் கேட்கக் கூடாதுன்னு. திரும்பத் திரும்ப அதேத் தப்பை செய்யறியே?’‘உரிமையாய்க் கடிந்து கொண்டவரின் முன்னால், பணிவாய்ப் போய் நின்றாள்.“சார்... இந்த ஹாஸ்பிடல் ஒரு கோயில். அதில இருக்கற தெய்வம் நீங்க! இன்னும் ஆயிரம் தடவை வந்தாலும், நான் பர்மிஷன் கேட்காம உள்ளே நுழைய மாட்டேன்.’‘“நீ மாறவே மாட்டே! பரவால்ல... சிட்டவுன் மிதிலா.’‘எதிரேயிருந்த இருக்கையைக் காட்டினார்.தயக்கமாய் உட்கார்ந்தாள்.“உன்னோட கோரிக்கையை ஏற்று அந்த ஆக்ஸிடெண்ட் கேஸை அட்மிஷன் போட்டேன். இப்பக் காப்பாத்தியாச்சு! சந்தோஷம்தானே?’‘“சந்தோஷம்தான் சார்!’‘ என்றவள், தயங்குவது புரிந்தது.“சொல்லும்மா...’‘“சின்னதா ஒரு ரிக்வெஸ்ட்... ஏன் எதுக்குன்னு காரணம் கேட்காம... நீங்க அதை ஏத்துக்கணும்.’‘“ஐ வில் ட்ரை...’‘“ஒரு மூணு மாசத்துக்கு, நம்ம ராஜகணபதி ஹாஸ்பிடலோட பிரான்ச் ஹாஸ்பிடல்ல எனக்கு டூட்டி மாத்தி விடணும் சார்... ப்ளீஸ்!’‘முதலில் தன்னுடைய கோரிக்கைய நிறைவேற்றிக் கொண்டு அடுத்ததாய் விக்ரம் இருக்கும் வார்டிலிருந்த கல்பனா சிஸ்டரை வேறு வார்டுக்கு மாற்றுவது குறித்து வேண்டுகோள் வைக்கலாம் என எண்ணினாள்.“நெவர்... ஐ டோண்ட் அக்சப்ட் யுவர் ரிக்வஸ்ட்.’‘“சார்...’‘“மிதிலா... நான் இன்னும் டூ டேஸ்ல அமெரிக்கா கிளம்பறேன். என்னோட ஸன் அங்கேதான் பிராக்டிஸ் பண்ணிக்கிட்டிருக்கான். அவனோட அம்மாவைப் பார்க்கணும். கூடவே தங்கணும்னு ஆசைப்படறான். அவன் இந்தியாவுக்கு வந்துட்டா பிராக்டிஸ் வீணாயிடும். ஸோ, நானும் என் மனைவியும் அமெரிக்காவுக்குப் போகறதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிட்டேன். திரும்பி வர ஆறு மாதங்கள்கூட ஆகலாம். அதுவரைக்கும் நம்ம ஹாஸ்பிடலோட அத்தனை பொறுப்புகளையும் நான் உங்கிட்டேதான் ஒப்படைச்சுட்டுப் போகறதா முடிவுப் பண்ணியிருக்கேன்.’‘அதைக் கேட்டதும் பதறினாள் மிதிலா.“சார்... எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் ரொம்ப குறைவு! அதுமட்டுமில்லாம... என்னைவிட வயசுல மூத்த சீனியர் டாக்டர்ஸ் நெறைய பேரு நம்ம ஹாஸ்பிடல்ல வொர்க் பண்றாங்க! என்கிட்டே பொறுப்புகளை ஒப்படைக்கிறது அவ்வளவு நல்லா இருக்காது. இந்த முடிவை நீங்க ரீ கன்சல்டேஷன் பண்ணுங்க சார்.’‘கைகளைக் குவித்தாள்.“நோ சான்ஸ்... எக்ஸ்பீரியன்ஸைவிட... சீனியர்ஸை விட... பொறுப்பும் அர்ப்பணிப்பும்தான் முக்கியம். அந்தத் தகுதி உன்னைத் தவிர வேற யார்கிட்டேயும் கிடையாது. சீனியர் டாக்டர்ஸ் நம்ம ஹாஸ்பிடல்ல வொர்க் பண்ணினாலும் தனித்தனியே கிளினிக் நடத்தறாங்க. வீக்லி வர்ற ஸ்பெஷலிஸ்ட்டுங்க கிட்டயும் பொறுப்புகளையும் விட முடியாது. எல்லார்கிட்டயும் கலந்து பேசிதான் நான் இந்த முடிவை எடுத்திருக்கேன். ஐ ரிக்கொஸ்ட் மிதிலா... Ôமுடியாது’ன்னு சொல்லிடாதே...’‘கெஞ்சுவது மாதிரி பார்த்தார்.டாக்டர் ஜெயகோபிநாத் போல ஒரு உன்னதமான மனிதரைப் பார்ப்பது அரிது! அவருடையை மனதில் நம்பிக்கையான இடத்தைப் பிடிப்பதெல்லாம் எளிதான காரியம் கிடையாது. சக மருத்துவர்களோடு கூட அவர் அதிகமாய்ப் பேசியது இல்லை.இந்தளவிற்கு தனக்கு முக்கியத்துவம், தன் மீது நம்பிக்கையும் வைத்திருக்கும் அவரை ஏமாற்றவோ மறுப்புத் தெரிவிக்கவே விரும்பவில்லை மிதிலா.யாருக்கும் கிடைக்காத பாக்கியம் தனக்குக் கிடைத்திருப்பதாய் தோன்றியது. ஒரு கணம் விக்ரம் பற்றிய விஷயங்களையெல்லாம் மறந்தே போனாள்.“ஓகே சார்... நீங்க எது சொன்னாலும் அதைச் செய்ய நான் தயாரா இருக்கேன். என்கிட்டே ரிக்வஸ்ட் எல்லாம் சொல்லலாமா? உங்க நம்பிக்கையை நான் காப்பாத்துவேன், உங்களோட விருப்பப்படி! நீங்க அமெரிக்காவிலேருந்து திரும்பி வர்ற வரைக்கும், ஹாஸ்பிடலோட அத்தனைப் பொறுப்புகளையும் நான் பார்ததுக்கறேன்... போதுமா சார்?’‘எழுந்து நின்று கண்ணீர் மல்க பேசினாள்.“தேங்க் யூ மிதிலா. இன்னியிலேருந்து எல்லாத்துக்கும் நீதான்மா இன்சார்ஜ்! எந்த டவுட்டா இருந்தாலும் என்கிட்டே போன்ல கேட்டுக்கம்மா. சீனியர் டாக்டர்ஸ், வீக்லி வர்ற ஸ்பெஷலிஸ்ட்னு எப்பவும் போல அவங்கவங்க டூட்டியைப் பார்த்துட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. அவங்களால உனக்கு எந்த டிஸ்டர்ப்பும் இருக்காது!’‘ சொல்லிவிட்டு, தேவையான கோப்புகளில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். ஒரு பெரிய வெண்கல வளையத்தில் கோர்க்கப்பட்டிருந்த மருத்துவமனையின் அத்தனை அறைக்குரிய சாவிகளையும் ஒப்படைத்தார்.இந்தப் பொறுப்பு தன்னிடம் வந்திருப்பதுகூட நல்லதற்குத்தான்! விக்ரம் இருக்கும் திசைப்பக்கமே போக வேண்டியதில்லை. யாரிடமும் பதில் சொல்ல வேண்டியதில்லை. யாரும் காரணம் கேட்க முடியாது. வேண்டுமானால் விக்ரமையே வேறு ப்ளேசுக்குக்கூட இடம் மாற்றி விடலாம். விக்ரம் குணமாகி வெளியேறும் வரை அவனுடைய கண்களில் அகப்படாமல் இருக்க நல்ல வழி கிடைத்து விட்டது!இது அந்தக் கடவுள் காட்டிய வழி!விதிக்கு இப்போதேனும் தன் மீது கொஞ்சம் இரக்கம் வந்திருக்கிறதே?“சார்... பேஷன்ட்டுங்களை பார்க்கறதுக்கு நான் போறேன்...’‘விடைபெற்று வெளியே வந்தாள்.அங்கே வேலைபார்க்கும் அத்தனை ஊழியர்களும் வெளியே காத்திருந்தார்கள்.“வாழ்த்துகள் மிதிலாம்மா!’‘ஏற்கெனவே எல்லோருக்கும் அரசல்புரசலாய் விஷயம் தெரிந்திருக்கும் போல... ஆளுக்கொரு பொக்கேவை நீட்டினார்கள்.ஆனந்தத் தூறலில் நனைந்தாள் மிதிலா.“இதுக்காக எங்களுக்கெல்லாம் ஹாஸ்பிடல் கேன்டீன்ல ட்ரீட் தரணும் மிதிலாம்மா.’‘“தர்றேன்...’‘சந்தோஷத்தைப் பகிர்ந்துவிட்டு எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்க நகர... நர்ஸ் கல்பனா மட்டும் அருகில் வந்தாள்.“மேடம்... என்னைவேற வார்டுக்கு மாத்திடுவீங்கதானே? அந்த பேஷன்ட்டோட கேள்விகளுக்கெல்லாம் என்னால பதிலே சொல்ல முடியல! இன்னிக்கே நடக்கணுமாம். இப்பவே பறக்கணுமாம். ரொம்பவே அவசரப்படறாரும்மா!’‘ என்றாள்.“மாத்திடறேன் கல்பனா. உனக்குப் பதிலா நான் அந்த வார்டுக்கு சிஸ்டர் ஜாஸ்மினை அனுப்பிடறேன்.’‘தலையை ஆட்டினாள்.“ரொம்ப அவசரப்படுறாரும்மா...’‘விக்ரம் பற்றி நர்ஸ் கல்பனா சொன்ன அந்த வார்த்தை நெஞ்சை அறுத்தது.அவசரம்... அவசரம்... எல்லாவற்றிலும் அவசரம்... எல்லாவற்றிற்கும் ஆத்திரம்... சுயநலம்... குரூர மனம்... குறுக்குப் புத்தி... இதெல்லாம் ஆபத்தில்தான் முடியும்.இப்படிப்பட்டவர்கள் ஜெயித்ததே கிடையாது. விக்ரமும் இதே ரகம்தான்! இவனுடைய இந்த நிலைக்குக் காரணம் வேறு யாரும் கிடையாது. இவனேதான்!’பதறும் இதயத்துடன் கலங்கும் தன்னுடைய கண்களை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டாள் மிதிலா.நான் மட்டும் அன்றைக்கு சரியான முடிவை எடுக்காமல் போயிருந்தால், என்னாகியிருக்கும்?’மிதிலாவின் மனதிற்குள் நினைவுக் குதிரை பின்னோக்கி ஓடியது!.4பளபளவென தேய்த்து, சந்தனக் குங்குமப்பொட்டு வைக்கப்பட்டிருந்த சிறிய காமாட்சி விளக்கின் தலைப்பகுதியில் கொஞ்சம் பூச்சரத்தை சூடிவிட்டு, தீபத்தை ஏற்றினாள் மிதிலா.கொல்லையில் பறித்து வந்திருந்த அறுகம்புல்லை பிள்ளையார்பட்டி விநாயகர் படத்துக்கு அணிவித்து, கண்மூடி மனமுருக வேண்டினாள்.“பிள்ளையாரப்பா... என்னோட படிப்பு நல்லவிதமா முடியணும். படிப்பு முடிஞ்சதுமே ஏதாவதொரு ஹாஸ்பிடல்ல வேலைக் கிடைச்சிடணும். வேலைக்குப் போய் நெறைய சம்பாதிச்சு, எங்கம்மாவை மகாராணியாட்டம் வெச்சிக்கணும். அவங்க எந்த வேலையும் செய்யாத மாதிரி பார்த்துக்கணும். அம்மாவுக்குப் புடிச்சதையெல்லாம் செஞ்சுத் தரணும். கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கணும். அந்த நாள் சீக்கிரமாவே வரணும். இடையில எந்த தடங்கலும் வந்திடக் கூடாது!’‘கண்களிலிருந்து கண்ணீர் தாரைத்தாரையாக வழிந்தது. மிதிலாவிற்கு இருபத்தியொரு வயது முடிந்து இருபத்திரண்டாம் வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறாள்.மிதிலாவின் அப்பா சிவலிங்கம், மிதிலா ஏழாம் வகுப்பு படிக்கும்போதே நுரையீரல் நோயினால் தாக்கப்பட்டு உயிரை விட்டிருந்தார். ஜவுளிக்கடையொன்றில் கணக்குப்பிள்ளை. வாடகை வீட்டில் வசித்தாலும் மனைவி கோகிலத்தையும் மகள் மிதிலாவையும் கண்ணுக்குள் வைத்துதான் தாங்கினார். எந்தக் கவலையும் இல்லாமல்தான் பார்த்துக் கொண்டார். கோரமான விதி அவருடைய உயிரைப் பறித்து விட்டது. விதி பொல்லாதது. அதற்கு ஏழை, பணக்காரனெல்லாம் தெரியாது. எந்தப் பாகுபாடும் பார்க்காது. யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பாழாக்கிவிடும். சிவலிங்கத்திற்கு நுரையீரல் பகுதியில் ஆபரேஷன் பண்ணினால் காப்பாற்றி விடலாம் என்றுதான் மருத்துவர்கள் சொன்னார்கள். ஆபரேஷனுக்கு கட்டணமாய் பல லட்ச ரூபாய் செலவாகும் என்றார்கள்.கோகிலம் ஆயிரம் ரூபாயைக் கண்ணால் பார்ப்பதே அபூர்வம். லட்சங்களுக்கு எங்கே போவாள்? உறவுகளால் பலனில்லை. உதவிசெய்ய ஆளில்லை. ஜவுளிக்கடை முதலாளி ஐயாயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார். லட்சங்கள் இல்லாதக் காரணத்தினால்தான் சிவலிங்கத்தைக் காப்பாற்ற முடியவில்லை. அப்பாவின் இழப்பு மிதிலாவை ரொம்பவே பாதித்திருந்தது. கோகிலத்திற்கோ அழ கண்ணீர்கூட மிச்சமில்லை. எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாய் தன்னைத் தேற்றிக் கொண்டுதான் நடமாடத் தொடங்கினாள். கற்று வத்திருந்த தையல் கைக்கொடுத்தது. நான்கு வீடுகளில் மாதச் சம்பளத்திற்கு பாத்திரங்கள் தேய்த்தாள். இழந்ததை மீட்க முடியாது. விழுந்து புரண்டாலும் கதறி தீர்த்தாலும் சிவலிங்கம் உயிரோடு வரப்போவதில்லை. இப்போது தேவை தைரியமும் தன்னம்பிக்கையும்தான்.தெளிவானக் குறிக்கோளோடு நாட்களை நகர்த்தினாள்.என்னோட ஒரே ஆசை, உன்னைய டாக்டருக்குப் படிக்க வைக்கணும். நீ டாக்டராகி, நம்மள மாதிரி ஏழைகளுக்கும் எதுவுமே இல்லாதவர்களுக்கும் ஒத்த ரூபாகூட வாங்காம வைத்தியம் பார்க்கணும். பணம் இல்லைங்கிறதுக்காக உன்னோட அப்பா மாதிரி எந்த உயிரும் போயிடக் கூடாது.Õஒருநாள் நள்ளிரவில் விசுக்கென எழுந்து அமர்ந்து, மிதிலாவின் கைகளைப் பற்றியபடி விம்மினாள் கோகிலம். தூக்கம் கலைந்தது. திருதிருவென விழித்தாள் மிதிலா.“அம்மா...’‘ பேச்சே வரவில்லை.“சொல்லு மிதிலா... நீ டாக்டரா ஆவேதானே?’‘“அதுக்கெல்லாம் நெறைய செலவாகுமேம்மா!’‘“என்னுசிரைக் கொடுத்தாச்சும் உன்னைப் படிக்க வைக்கிறேன். நீ மட்டும் நல்லா படிச்சுட்டேன்னா போதும்... பணமே தேவையில்லைடி!’‘“அம்மா...’‘“சொல்லுடி... நல்லா படிப்பேதானே? டாக்டரா ஆவேதானே? என்னோட விருப்பத்தை நிறைவேத்துவதானே?’‘மூச்சு வாங்கினாள்.வெறிப் பிடித்தவள் போலக் கேட்டாள்.குரலில் ஒருவித அழுத்தம் தெறித்தது.“நல்லா படிக்கறேன்மா. டாக்டரா ஆகறேன்மா. உன்னோட விருப்பத்தை நிறைவேத்தறேன்மா.’‘தாயின் தோள்மீது முகம் புதைத்தாள் மிதிலா.“மிதிலா... எனக்கு இந்த வார்த்தை போதும்! உம்மேல நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கை கண்டிப்பா ஜெயிக்கும்!’‘மதிலாவை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.மிதிலா படிப்பில் அமர்ந்தாள்.ஆனால், அந்த இரவிற்குப் பிறகு தாயிடம் கொடுத்த வாக்குறுதிக்குப் பிறகு முற்றிலும் மாறிப் போனாள்.தன்னுடைய முழுக்கவனத்தையும் படிப்பில் செலுத்தினாள். எந்த நேரமும் படிப்புதான். படிப்பைப் பற்றிய தேடல்தான். தவிப்புதான்!இந்த உலகத்தில் முடியாதது எதுவும் கிடையாது. மனிதசக்தி நினைத்தால் முயன்றால் எதையும் சாதிக்க முடியும். மிதிலாவின் உழைப்பும் முயற்சியும் வைராக்கியமான தேடலும் வீண் போகவில்லை!ஒவ்வொரு வகுப்பிலும் அவள்தான் முதல் மாணவியாகத் திகழ்ந்தாள். பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியிலேயே முதலிடம் அவளுக்குத்தான். இரவு _ பகல் பாராமல் படித்து, தேர்வில் வெற்றி பெற்றாள்.அதனால்தான் யாருடைய சிபாரிசுமில்லாமல் அதிக பணம் செலவில்லாமல் அரசு மருத்துவக் கல்லூரியிலேயே எளிதில் இடம் கிடைத்தது.ஒருசில தொண்டு நிறுவனங்கள் மிதிலாவின் படிப்பிற்காக செலவை ஏற்றுக்கொள்ள முன்வந்தன.ஆனால், அதை கோகிலம் நிராகரித்து விட்டாள்.“வேணாம்... எம்பொண்ணோட படிப்பு செலவை நானே பார்த்துக்கறேன். ஹாஸ்டல் ஃபீஸ், மாசாமாசம் சாப்பாட்டு பணம், வருஷத்துக்கொருமுறை காலேஜ் ஃபீஸ் எல்லாத்தையும் நானே கட்டிக்கறேன். நான் உழைக்கிறதே அவளுக்காகத்தானே!’‘கைகளைக் குவித்து கும்பிட்டாள்.கோகிலத்தின் இத்தனை வருஷத்து சேமிப்பு பணம் போஸ்ட் ஆஃபீஸில் இருந்தது... காதில்... மூக்கில் கிடந்ததையெல்லாம் விற்றுதான் தேவையானப் பணத்தைப் புரட்டினாள்.“ஒரு ரூபாயா இருந்தாலும் உன்னோட உழைப்புல கெடைச்ச பணமா இருக்கணும்மா... அப்பத்தான் எனக்கு பெருமை, கௌரவம்!’‘மிதிலாவும் தாயின் எண்ணங்களை வரவேற்றாள். சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாள்.எப்படியோ நாட்கள் நகர்ந்து விட்டன!வருடங்கள் ஓடி விட்டன!இது கடைசி வருடம். யாரிடமும் கையேந்தாமல் கரையேறிவிட வேண்டும். படிப்பை முடித்துவிட வேண்டும் என கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாள் மிதிலா.“மிதிலா... சாப்பிட வாம்மா.’‘அடுக்களையிலிருந்து வெளிப்பட்ட கோகிலம், ஒரு பிளேட்டில் அரிசி உப்புமாவையும் தொட்டுக்கொள்ள சர்க்கரையையும் அள்ளிப் போட்டு, கூடத்து அறையில் வைத்தாள்.கீழே அமர்ந்து சாப்பிடத் தொடங்கினாள் மிதிலா.“மிதிலா... நீ நாளைக்குத்தானே கொடைக்கானலுக்குப் போறே?’‘“ஆமாம்மா.’‘“திரும்பி வர எத்தனை நாட்கள் ஆகும்?’‘“இருபது நாட்கள்னு சொன்னாங்கம்மா.’‘குனிந்த தலையை நிமிரவேயில்லை.தாயைப் பார்க்க சங்கடமாக இருந்தது. தனக்காக உழைத்துக் கொண்டேயிருக்கும் தாய், வேலை வேலை என ஓடிக்கொண்டேயிருக்கும் தாய். அவளைப் பார்க்கவே வேதனையாக இருந்தது.“மிதிலா... வீடு, பள்ளிக்கூடம், காலேஜ்... இதைத் தவிர வேற எங்கேயுமே நீ போனதில்லை. கொடைக்கானல் உனக்குப் புதுசு. இப்பத்தான் மொதமொதலா போறே. பத்திரமா கவனமா இரு.’‘“அம்மா... பயப்படாதே... நான் மட்டும் தனியா போகலை. என்கூட அத்தனை ஸ்டூடண்ட்ஸும் வர்றாங்க. புராபஸருங்க வர்றாங்க. ஒரு பஸ் நெறையப் போறோம்.’‘சாப்பிட்டு முடித்து கையைக் கழுவினாள்.அதற்காகவே காத்திருந்தவள் போல, முந்தானையில் முடித்து வைத்திருந்த நான்கு ஐந்நூறு ரூபாய்த் தாள்களையும் நீட்டினாள்.“மிதிலா இதை வெச்சுக்க...’‘“எதுக்கும்மா?’‘“கொடைக்கானல் போறேல்ல... உன்னோட கைச்செலவுக்கு வேணாமா?’‘“ம்ஹூம்... வேணாம்மா. காலேஜ் பஸ்ல போகப் போறேன். எல்லாரோடயும் ஒண்ணா தங்கப் போறேன். சாப்பாட்டுக்குத்தான் ஏற்கெனவே பணம் கட்டியிருக்கோமே? இருபது நாட்களும் கேம்ப்லதான் இருக்கப் போறேன். செலவுக்கெல்லாம் தேவையே கிடையாதும்மா!’‘பணத்தை வாங்க மறுத்தாள் மிதிலா.“தேவை இருக்குதோ... இல்லையோ... ஆனா, உன்கையில பணம் வெச்சிருந்தே ஆகணும். செலவு பண்ணலைன்னாலும் அதைத் திருப்பிக் கொண்டு வந்துதானே தரப்போறே? இப்ப இதை வாங்கிக்க...’‘கட்டாயப்படுத்தித் திணித்தாள்.“அம்மா... முடியலைம்மா... உன்னோட முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியலைம்மா. இளைச்சு, கறுத்து, பொலிவிழந்து ஆளே அடையாளம் தெரியாம போயிட்டியேம்மா. எல்லாமே என்னாலதானே?’‘மிதிலா அழத் தொடங்கினாள்.“அடப் பைத்தியமே... அதை இதை நெனைச்சுதான் பணத்தை வாங்க மறுத்தியா? இதோ பாரு... எனக்கு எந்தச் சிரமமும் இல்லை. நீதானே என்னோட உலகம்! உனக்கு செய்யாமே நான் வேற யாருக்கு செய்யப் போறேன்? இளைச்சுப் போறது, கறுத்துப் போறதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. படிப்பு முடிஞ்சு நீ வேலைக்குப் போயிட்டா, மூணு வேளையும் வயிறு முட்ட சாப்பிட்டுட்டு, அப்பப்ப ஜூஸை குடிச்சுட்டு இந்தா அம்மா சும்மாதானே உட்கார்ந்திருக்கப் போறேன்? இத்தனை வருஷங்கள் ஓடிப்போச்சு. இன்னும் ஒரு வருஷம்தானே? என்னைப் பத்தி வருத்தப்படாதே மிதிலா. மனசை எப்பவும் சந்தோஷமா வெச்சக்க. உன்னோட முகம் வாடினா, என்னால தாங்க முடியாது!’‘ கோகிலம் கரைந்துருகினாள். கலங்கி பரிதவித்தாள்.தாயின் கலக்கத்தையும் கலங்கிய கண்களையும் மிதிலாவால் பார்க்க முடியவில்லை.“அம்மா... நான் வருத்தப்படலே. மனசை எப்பவும் சந்தோஷமா வெச்சுக்கறேன்! போதுமா?’‘பளீரென சிரித்தாள்.“போதும்டி ராசாத்தி!’‘மகளின் கன்னத்தை வருடி, திருஷ்டி சுழித்தாள் கோகிலம்.படிப்பைத் தவிர வேறெந்த சிந்தனையும் இல்லாமல், எந்த ஆசை பாசங்களுக்கும் இடம் தராமலிருக்கும் மிதிலா, கொடைக்கானலில் தன்னுடைய இதயத்தை தொலைக்கப்போகிறாள் என்பதை அக்கணம் கோகிலம் அறியவில்லை!.5 கொடைக்கானல்....திரும்பிய திசையெங்கும் பசுமையாய்க் காட்சியளித்தது!மலைத் தொடர்கள், ஊசி ஊசியாய் புகைப் புகையாய் பனிச்சாரல் படர்ந்திருக்க, குளிர்ந்த காற்றில் தைல மரங்களின் நறுமணம் சங்கமமாகியிருந்தது!சூரியனின் சுடுங்கதிர்களே படாத அளவிற்கு சாலையோரத்தில் நின்றிருந்த பருமனான, உயரமான மரங்களின் அடர்த்தியானக் கிளைகள், இதமான நிழலை இலவசமாய் விநியோகம் செய்தன!சீரான வேகத்துடன் நகர்கிற சுற்றுலா வாகனங்கள், கொடைக்கானல் அழகை கண்களால் பருகியபடி நடைப்பயிற்சி செய்கிற வெளியூர் வாசிகள், வாடகை சைக்கிளில் பறக்கிற இளைஞர்கள், குதிரை சவாரி பண்ணுகிற பணக்காரர்கள், உலகின் ஒட்டுமொத்த அழகும் அங்கே பூக்களாகவும் ஏரிகளாகவும் கொட்டிக் கிடந்தது! இயற்கையின் பேரழகை ரசிக்க இரு கண்கள் போதாது’ என்றுதான் சொல்ல வேண்டும்!மிதிலாவோடு சேர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தார்கள். மருத்துவக் கல்லூரி முதல்வரும் விரிவுரையாளர்களும் பயணியர் விடுதியில் தங்கியிருந்தனர். மாணவ _ - மாணவிகளுக்கு தனித்தனியே தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பத்து மாணவியர்களுக்கு ஒரு வழிகாட்டி விரிவுரையாளர் என ஒதுக்கியிருந்தனர்.“டியர் ஸ்டூடண்ட்ஸ்... இது உங்களுக்கு ஃபைனல் இயர். இந்த டுவென்டி டேஸ் கேம்ப்ல நீங்க நெறைய விஷயங்களைக் கத்துக்கப் போறீங்க! பொறுமை, கனிவு, சாந்தம், காத்திருப்பு, பிற உயிர்கள் மீதான அக்கறை என எல்லாமே இந்த பிராக்டிஸ்ல உங்களுக்குப் பழகிடும்! உயிர்களைக் காப்பாத்தறது மட்டும் ஒரு மருத்துவரோட கடமை கிடையாது. நோய்களைக் குணப்படுத்தினால் மட்டும் போதாது. அந்த நோய் பரவாமல் தடுக்கணும். நோய் வருவதற்காக காரண காரியங்களை அறிந்து, விழிப்பு உணர்வை ஏற்படுத்தணும். உயிர்களைக் காப்பாத்தும் முயற்சியில எந்த சூழ்நிலையிலயும் சோர்ந்துவிடக் கூடாது. கடைசி வரை போராடணும். போராடி ஜெயிக்கணும்! ஓகே?’‘மருத்துவக் கல்லூரியின் முதல்வர், மாணவ _ மாணவியர்களை தங்யிருந்த விடுதியின் புல்வெளியில் நிற்க வைத்து- அறிவுரைகள் வழங்கினார். முதல்நாள் முகாம் திறந்தவெளியில் எளிமையாய்த் தொடங்கியிருந்தது. முகாமில், கொடைக்கானலில் வசிக்கும் வி.ஐ.பி.கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர். பிரபல மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களும் அந்த முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, வருங்கால மருத்துவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்!ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் முகாம் நடந்தது. சரிவில் இறங்கி, அடர்ந்த வனப்பகுதிக்கெல்லாம் போனார்கள். பள்ளத்தாக்குப் பகுதியில் தங்கியிருக்கும் மலைவாழ் மக்களையெல்லாம் சந்தித்தார்கள். விரிவுரையாளர்களின் கண்காணிப்போடு, இயற்கையைப் பாதுகாத்தல், சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக பேணிக் காத்தல், அதன்மூலம் நோய் வராமல் தங்களைப் பாதுகாக்கும் முறைகள், நோய்களின் அறிகுறிகள், முதலுதவிகள் பற்றியெல்லாம் மருத்துவக் கல்லூரி மாணவியர்களும் மாணவர்களும் விளக்கினார்கள். எல்லா நிகழ்வுகளிலும் மிதிலா ஆர்வமாகப் பங்கேற்றாள்.தினமும் முகாம் மாலை நான்கு மணிக்கே முடிந்துவிடும். விருப்பம் உள்ளவர்கள் ஆறு மணி வரை வெளியே சென்றுவரலாம்.“யாரும் தனியா போகக் கூடாது. துணையோடுதான் போகணும். இருட்டறதுக்குள்ளே விடுதிக்குத் திரும்பிடணும்.’‘ நிபந்தனையோடுதான் கொடைக்கானலை சுற்றிப் பார்க்க அனுமதித்திருந்தார் மருத்துவக் கல்லூரி முதல்வர்.மிதிலா மட்டும் வெளியே போனதில்லை. முகாம் முடிந்ததும் விடுதிக்கு வந்துவிடுவாள். சக மாணவியர்கள் கொடைக்கானலில் தாங்கள் பார்த்த காட்சிகளை விவரிப்பதை வெறுமனே காதில் வாங்கிக்கொள்வாள்.“ஏண்டி மிதிலா... என்ன ஜென்மம்டி நீ?’‘தோளில் இடித்தாள் அஜந்தா.“மனுஷ ஜென்மம்தான்!’‘ மெல்ல தலையசைத்தாள் மிதிலா.“ரசனையே இல்லியாடி உனக்கு?’‘ பூமா கேட்டாள்.“இருக்கே!’‘ சின்னதாய்ப் புன்னகைத்தாள்.“பின்ன எதுக்குடி வெளியில கௌம்ப மாட்டேங்கிறே? Ôஅங்கே இங்கே நகரமாட்டேன். எதையும் கண்ணால ரசிக்க மாட்டேன்’னு உங்கம்மாகிட்ட சத்தியம் ஏதாச்சும் பண்ணிக் கொடுத்துட்டு வந்திருக்கியாடி?’‘ படபடத்தாள் ரோஸி.“இல்லையே...’‘ உதட்டைச் சுழித்தாள் மிதிலா.“பின்ன எதுக்கு கெணத்து தவளை மாதிரியே கெடக்கே? நத்தையாட்டம் ஓட்டுக்குள்ளே உன்னை சுருக்கிக்கறே? இந்த நாட்கள் திரும்ப வரவே வராது! நெனைச்சப்பல்லாம் கொடைக்கானலுக்கு வரவும் முடியாது. புரிஞ்சுக்கடி. கொடைக்கானல் எவ்ளோ அழகுத் தெரியுமா? தூண்பாறை பக்கம் ஒரு தடவை வந்துப் பாருடி... அங்கேருந்து கௌம்பிவர மனசே வராது! ஏரியில போட்டிங் போனப்ப எவ்வளவு சிலிர்ப்பா இருந்துச்சு தெரியுமா? ப்ளீஸ் மிதிலா... நாளைக்கு முகாம் முடிஞ்சதும் நீயும் எங்ககூட வர்றே...’‘“எனக்குப் பிடிக்கலை.’‘“அதெல்லாம் பிடிக்கும்.’‘“தொல்லை பண்ணாதீங்க...’‘“ம்ஹூம்... நீ வந்தே ஆகணும். எதையும் பார்க்க வேணாம், ரசிக்க வேணாம், ஜஸ்ட் வாக்கிங் மாதிரி எங்களோட துணையா வா.’‘கெஞ்சினாள் அஜந்தா.“நீ மட்டும் வரலைன்னு வெய்... அப்புறம் உன்கூட பேசவே மாட்டோம்.’‘கறாராய்ச் சொன்னாள் பூமா.“மிதிலா... உன்னோட ஃப்ரெண்ட்ஸுங்கள்லாம் இவ்ளோ கெஞ்சறாங்கள்ல... போய்ட்டுதான் வாயேன்! இயற்கையோட அழகு கொட்டிக் கிடக்கிற இந்தப் பூமியில நாம தங்கியிருக்கிற ஒவ்வொரு நிமிடமும் விலை மதிக்க முடியாதது! மிதிலா... நீ எதையும் மிஸ் பண்ணிடாதே! காலேஜ், ஹாஸ்பிடல், லேப், ஆபரேஷன் தியேட்டர்னு இயந்திரத்தனமாவே பழகிட்ட எங்களுக்கு இந்த கொடைக்கானல் முகாம்தான் புத்துணர்ச்சியா இருக்கு!’‘வழிகாட்டி விரிவுரையாளரும் சிலாகித்து பேசினாள்.“மேடமும் சொல்லிட்டாங்க... இனியாச்சும் சரின்னு சொல்லேன்டி...’‘சிநேகிதிகள் மிதிலாவை விடுவதாயில்லை.அவர்களின் விருப்பத்திற்கு இணங்க, கொடைக்கானலைச் சுற்றிப் பார்க்க கிளம்பியிருந்தாள் மிதிலா.மலைகளின் அழகையும் மரங்களின் பசுமையையும் பூக்களின் புன்னகையையும் ரசிப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும் போலத் தோன்றியது!அமைதியாய் படுத்திருக்கும் மலையை தாலாட்டும் வெண்மேகங்கள், முத்தமிட்டு முத்தமிட்டு விலகும் பனிப்புகை, வளையம் வளையமாய் மிதக்கும் பனிப்புகை, உயிர்வரை ஊடுருவும் குளிர், மூலிகையின் நறுமணம், கழுத்தில் தொங்கும் கேமராக்களோடு தோள்மீது கையைப் போட்டபடி சிரித்து சிரித்து பேசியபடி நடக்கும் ஹனிமூன் தம்பதியர், ஸ்வெட்டர் அணிந்த சுற்றுலா பயணிகள், வெவ்வேறு ஊர்களிலிருந்தும் கொடைக்கானலைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கும் சீருடையணிந்த பள்ளி மாணவ _- மாணவியர்.சுட்ட சோளக் கதிர்களையும் அப்போதுதான் பறித்த பச்சைக் கேரட்டையும் கொத்துக் கொத்தாய் கைகளில் ஏந்தியபடி கூவி விற்கும் வியாபாரிகள்.“மனுஷங்களைப் பரபரன்னு இயக்க வெச்சுட்டு மலை மட்டும் அமைதியா படுத்திருக்கிறதைப் பார்த்தியா?’‘மிதிலாவின் கையை தன் கையோடு சேர்த்துக் கொண்டு நடந்தாள் அஜந்தா.தற்கொலைப் பகுதியை நெருங்கியிருந்தார்கள்.கம்பி வேலியைத் தாண்டி, அந்தப் பக்கம் அதலப் பள்ளத்தாக்கு.கம்பி வேலியோரமாய் நின்று பள்ளத்தாக்கைப் பார்த்தபோது உள்ளுக்குள் பீதி படர்ந்தது.தடுப்புச் சுவரை தாண்டிக் குதிப்பதற்காக இரண்டு இளைஞர்கள் முயற்சி செய்துக் கொண்டிருந்தார்கள்.“ஆபத்துன்னு தெரிஞ்சும், அந்தப் பக்கம் தாண்டிக் குதிச்சுப் போறது, செல்ஃபி எடுக்குறதுக்குன்னு பள்ளத்துல எறங்கறது, பாறை நுனியில நிக்கறது, தடுமாறி கீழ விழுந்து உயிரை விடறது... இவனுங்க திருந்தவே மாட்டானுங்க!’‘பாதுகாவலர் ஒருவர் அந்த இளைஞர்களை விரட்டினார்.“மிதிலா வரவே மாட்டேன்னு சொன்னா... கட்டாயப்படுத்திக் கூட்டி வந்தாச்சு. மொதமொதலா மிதலாவை பார்க்குக்கோ லேக்குக்கோ கூட்டிப்போயிருக்கலாம். இங்கே வந்திருக்கக் கூடாது’‘ என்றாள் பூமி.“அதனாலென்ன? நாளைக்கு பார்க்குக்குப் போவோம். அடுத்த நாள் லேக்குக்குப் போகலாம்.’‘தலையை ஆட்டிச் சிரித்தாள் ரோஸி.“வரவர கூட்டம் அதிகரிச்சிட்டே இருக்கு. மொதல்ல இங்கேருந்து கௌம்பிடலாம்.’‘சுட்ட சோளக் கதிரை ஆளுக்கொன்று வாங்கிக் கொடுத்தாள் அஜந்தா.நான்கு பேரும் வந்த வழியே சரிவிலிருந்து மேலே ஏறத் தொடங்கினார்கள்.மிதிலாவைத் தவிர மற்ற மூவரும் ஸ்வெட்டர் அணிந்திருந்தார்கள். மிதிலாவிடம் ஸ்வெட்டர் கிடையாது. முகாமில் இருந்தபடி டாக்டர் கோட்டோடு வந்துவிட்டாள். தோளில் ஹேண்ட் பேக். அதில் ஸ்டெதஸ்கோப், முதலுதவிப் பெட்டி என எல்லாமே வைத்திருந்தாள்.நால்வரில் அவள் மட்டும் தனித்து தெரிந்தாள். சரிவிலிருந்து மேலே ஏறி, விடுதிக்குச் செல்கிற பாதையில் நடந்தபோது, நேரெதிரே மூச்சிரைக்க ஓடிவந்தான் அந்த இளைஞன்!“மேடம்... ப்ளீஸ்... நீங்க டாக்டர்தானே? எனக்கொரு ஹெல்ப் பண்ண முடியுமா?’‘ என்றான், மிதிலாவைப் பார்த்து.மிதிலா மினுக்கென நிமிர்ந்தாள். கழட்டி வைக்காமல், தான் மட்டும்தான் டாக்டர் கோட்டை அணிந்திருக்கிறோம் என்பதை அந்தக் கணம்தான் உணர்ந்தாள்.“நீங்கள்லாம் ஸ்வெட்டரோட இருக்கீங்க. ஆனா, நானோ கோட்டைக் கழட்டாமலே முகாம்லேருந்து வந்துட்டேன். அதான் என்னை டாக்டருன்னு நெனைச்சுட்டாரு போல! இப்ப என்னடி சொல்ல?’‘அஜந்தாவிடம் கிசுகிசுப்பாய்க் கேட்டாள்.“உண்மையைச் சொல்லு...’‘“இஃப் யூ டோன்ட் மைண்ட்... எங்கூட வர முடியுமா? அதோ அங்கே என்னோட ஃப்ரெண்ட் காய்ச்சல்ல நடுங்கிகிட்டு கெடக்கான். ஒரு இன்ஜெக்ஷன் போட்டு... மெதுவா எழுப்பிவிட்டுட்டீங்கன்னா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போயிடுவேன்.’‘மிதிலாவைப் பரிதாபமாய்ப் பார்த்தான்.மிதிலாவும் அவனை ஏறிட்டாள்.நல்ல அழகான முகம், துறுதுறுப்பான கண்கள், எடுப்பான நாசி, நறுக்கிவிடப்பட்ட மீசை, குழிவிழுந்த முகவாய், போதுமான உயரம், கம்பீரமான கட்டழகு இளைஞன்!ஜீன்ஸ் பேன்ட் அணிந்து, கோடுபோட்ட முழுக்கைச் சட்டையை இன் பண்ணியிருந்தான்.“ஸாரி... நான் டாக்டர் கிடையாது.’‘“டாக்டர் போல கோட்டெல்லாம் மாட்டியிருக்கீங்களே?’‘“ஊடுருவிப் பார்த்தான்.நெற்றியில் வந்து விழுந்த சுருள் கேசத்தை விரல்களால் கோதிக் கொண்டாள்.“மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட். ஃபைனல் இயர் படிக்கறேன். முகாம் அரேன்ஜ் பண்ணப்பட்டு, எங்களுக்கு பிராக்ட்டிகல் கிளாஸ் நடக்குது’‘ என்றாள்.சிநேகிதிகள் மூவரும் மௌனமாய் வேடிக்கைப் பார்த்தார்கள்.“எப்படியும் நாளைக்கு டாக்டராகப் போறீங்கதானே? ஃபர்ஸ்ட் எய்ட் கூட பண்ணத் தெரியாதா என்ன? ப்ளீஸ்... என் பின்னால வாங்களேன்... நானும் கொடைக்கானலுக்கு புதுசுதான். ஃப்ரெண்டோட கல்யாணத்துக்காக வந்திருக்கேன். எங்கூட வந்த Ôசுகன்’கிற ஃப்ரெண்ட் சொல்லச் சொல்ல கேட்காம, வழியில இருந்த ஒரு அருவியில குளிச்சு நல்லா ஆட்டம் போட்டுட்டான். இப்ப திடீர்னு அவனுக்கு குளிர் காய்ச்சல் வந்துடுச்சு. சரிவுல இறங்கி பாறையில நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தோம். கைகளும் கால்களும் வெடவெடன்னு நடுங்கி, அப்படியே சரிஞ்சுட்டான். ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியலை. தெரியாத ஊருல யாரை நான் ஹெல்ப்புக்கு கூப்பிடறது?’‘ விவரத்தை மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்.“ஏன்... ஃப்ரெண்டோடக் கல்யாணத்துக்காகத்தானே வந்திருக்கீங்க? அவருக்கே போன் போடறது...’‘ கழுத்தை ஒரு வெட்டு வெட்டினாள்.“போன் பண்ணேன். சுவிட்ச் ஆஃப்’னு வருதுங்க. ப்ளீஸ்... டேப்ளட் கொடுத்தோ இன்ஜெக்ஷன் போட்டோ சுகனை எப்படியாவது எழ வெச்சிடுங்க. மத்ததை நான் பார்த்துக்கறேன். காருல ஏத்திக் கூட்டிப் போயிடறேன்.’‘சற்றுத் தள்ளி மலைப் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த தன்னுடைய காரைக் காட்டினான்.இவன் சொல்வது பொய்யா? நிஜமா?இவனை நம்பலாமா? வேண்டாமா?’மிதிலா யோசனையாய் சிநேகிதிகளைப் பார்த்தாள்.வேணாம்... ரிஸ்க் எடுக்காதே மிதிலா! என்பது மாதிரி கண்களால் ஜாடைக் காட்டினார்கள்.“பயப்படாதீங்க... யோசிக்காதீங்க... நான் உங்களை எதுவும் செய்திட மாட்டேன். ப்ளீஸ்ங்க...’‘‘போகலாமா? வேண்டாமா?’மிதிலாவின் இதயம் எகிறிக் குதித்தது. .6 ‘காலம் முன்புபோல இல்லை. கலி காலமாகி விட்டது. யாரையும் நம்பக் கூடாது. அதுவும் முன்பின் அறிமுகமில்லாதவர்கள் என்றால் கிட்டயே போகக் கூடாது!’ மிதிலாவின் உள்மனசு எச்சரித்தது.‘ஃப்ரெண்டுக்கு காய்ச்சலாம்... நடுநடுங்கி கீழேக் கிடக்கிறானாம்... எழ முடியவில்லையாம்... ஊசி போட்டு, மாத்திரைக் கொடுத்து எழுப்பிவிட வேண்டுமாம். இதெல்லாம் நம்புவது போலவா இருக்கிறது? இந்தத் தொல்லைக்குத்தான் விடுதியிலேயே இருந்தேன். அஜந்தாவும் பூமாவும் ரோஸியும்தான் பாடாய் படுத்திக் கூட்டிவந்தார்கள். சொல்லி வைத்தது போல எனக்குத்தான் பிரச்னை. அவன் என்னிடம்தான் உதவி கேட்கிறான்... கெஞ்சுகிறான்!’முகவாயில் விரலை வைத்தபடி திகைப்பாய் நின்றிருந்தாள் மிதிலா.“வேணுமின்னா சத்தியம் பண்ணவா? நான் பொய் சொல்லலைன்னு சத்தியம் பண்ணவா? அப்பவாச்சும் நம்புவீங்களா? என் பின்னால வருவீங்களா?’‘ புருவங்களை உயர்த்தினான்.சத்தியம் பண்ணுவதைத் தவிர வேறுவழியில்லை என்பதைப் போல பார்த்தான்.“மிதிலா... வேணாம்... வா... போயிடலாம்.’‘மிதிலாவின் கையை இறுகப் பற்றினாள் பூமா.“சார்... நீங்க ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுங்க...’‘ அவனைக் கடந்து நடந்தாள் அஜந்தா.“மிதிலா... அப்பாவி! அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா எங்களால பதில் சொல்ல முடியாது. தாங்கவும் முடியாது.’‘ ரோஸி உதட்டைச் சுழித்தாள்.“வாடி போயிடலாம்...’‘விக்ரம் பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருக்க, மிதிலாவைக் கூட்டிக் கொண்டு அங்கிருந்து நகர முயன்றார்கள்.இரண்டடி கூட நடக்கவில்லை.“இருங்கடி... இதோ வந்திடறேன்...’‘ சிநேகிதிகளின் பிடியை உதறிக் கொண்டே மிதிலா அவனிடம் வந்தாள்.“வாங்க... போகலாம்... உங்களோட ஃப்ரெண்ட் இருக்கற எடத்துக்குக் கூட்டிப் போங்க! என்னால முடிஞ்சதை செய்யறேன்...’‘மிதிலா இப்படிச் செய்வாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.“ஏண்டி மிதிலா... உனக்கென்ன பைத்தியமா? நாங்க இவ்ளோ சொல்றோம்... காதுலயே வாங்க மாட்டேங்கிறே?’‘ எரிச்சலானாள் அஜந்தா.“நீ தெனமும் டி.வி.யே பார்க்கறதில்லையா? நியூஸ் பேப்பர வாசிக்கிறதில்லையா? ஊரும் உலகமும் படு மோசமா போய்க்கிட்டிருக்கு! எங்காச்சும் போய் விபரீதத்துல மாட்டிக்காதே!’‘ பின்னாலேயே போய் கெஞ்சினாள் பூமா.எதையும் பொருட்படுத்தாமல் யாருடைய பேச்சையும் காதிலேயே வாங்காமல் விக்ரமோடு சரிவில் இறங்கிப் போய்க் கொண்டிருந்தாள் மிதிலா.“சொல்லச் சொல்லக் கேட்காம மிதிலா அவன்கூட போறாடி...’‘ ரோஸி கைகளைப் பிசைந்தாள்.“போகட்டும் விடு...’‘“அவளுக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா, நாமதான் பதில் சொல்லணும். வெளில வரலைன்னு சொன்னவளை கட்டாயப்படுத்திக் கூட்டி வந்தது நாமதானே?’‘ ரோஸி பயம் காட்டினாள்.“இப்ப என்ன பண்ணணும்கிறே?’‘“நாமளும் மிதிலா பின்னாலேயே போகலாம். அவன் சொன்னது பொய்யா, நெசமான்னு தெரிஞ்சிக்கலாம். அவன் தப்பான ஆளா இருந்தா போலீஸை வரவழைச்சுடலாம்.’‘ரோஸியின் யோசனையை ஏற்றுக் கொண்டு அஜந்தாவும் பூமாவும் சரிவில் இறங்கினார்கள்.சரிவான பாதை நீண்டு கொண்டே போனது. ஒரு ஆள் நடக்கிற அளவுக்கு ஒற்றையடிப் பாதை. ஆங்காங்கே சிதறிக் கிடக்கிற சரளைக் கற்கள், பாதையின் இருபுறமும் பெயர் தெரியாத பூக்கள் குலுங்கின!“இன்னும் ரொம்ப தூரம் போகணுமா?’‘ விக்ரமை பின்தொடர்ந்தபடியே கேட்டாள் மிதிலா.“இதோ... இப்ப வந்திடும்...’‘“சரிவான பாதையில், இவ்ளோ தூரம் எதுக்காகப் போனீங்க?’‘“அங்கே ஒரு பாறை இருந்துச்சு. ஹேர்பின் வளைவுல காருல வந்தப்பவே அதை நாங்க பார்த்துட்டோம். அந்தப் பாறையில போய் நின்னு கொடைக்கானல் மலையையும் பள்ளத்தாக்கையும் வேறொரு ஆங்கிள்ல ரசிக்கலாம்னு அவன்தான் பிடிவாதம் பிடிச்சான்! போறதுவரைக்கும் நல்லாதான் பேசினான். திடமாத்தான் நடந்தான். திடீர்னுதான் நடுக்கலும் காய்ச்சலும் வந்துடுச்சு!’‘இருவரும் அந்த மொட்டைப் பாறையை நெருங்கியிருந்தார்கள்.மரங்களோ செடி கொடிகளோ இல்லாத மொட்டைப்பாறை. மிகவும் ஆபத்தான இடம் போல தெரிந்தது.பாறைமீது கிடந்தான் சுகன். ஏறக்குறைய விக்ரமின் வயதில்தான் இருந்தான்.“இவன்தான் என்னோட ஃப்ரெண்ட் சுகன்.’‘சுகனைப் பார்த்தப் பிறகுதான் மிதிலாவிற்குள் ஊடுருவியிருந்த பயம் மறைந்தது. சகஜமான நிலைக்கு வந்திருந்தாள். சுகனுக்குக் கீழே மண்டியிட்டு, கையைப் பிடித்துப் பார்த்தாள். ஹேண்ட் பேக்கினுள்ளிருந்து ஸ்டெதஸ்கோப்பையும் தெர்மா மீட்டரையும் எடுத்து சோதித்தாள்.விக்ரமோ மிதிலாவையே தவிப்பாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். கீழே கிடந்த சுகனால் கண்களை திறக்கக்கூட முடியவில்லை. குளிர்காற்றை தாங்காமல் தேகம் வெடவெடவென்று நடுங்கியது.“காய்ச்சல் 100 டிகிரிக்கு அதிகமா இருக்கு. அதனாலதான் நடுக்கல் அதிகமாகி, நடக்க முடியாம கீழே விழுந்துட்டார். மாத்திரை தர்றேன்... அதை விழுங்கினாருன்னா, காய்ச்சலோட வீரியம் கொறைஞ்சிடும்’‘ என்றவள், தன்னிடமிருந்த மாத்திரையையும் தண்ணீர் பாட்டிலையும் கொடுத்தாள்.“டேய்... மாத்திரையை விழுங்குடா...’‘ சுகனின் வாயில் மாத்திரையைப் போட்டு தண்ணீரை ஊற்றினான்.அதற்குள் மிதிலாவின் சிநேகிதிகளும் அங்கே வந்து விட்டார்கள். அவர்கள் நினைத்தபடியோ பயந்தபடியோ எதுவுமே நடக்கவில்லை. ஆறுதலாய் பெருமூச்சு விட்டார்கள்.“மிதிலா... ட்ரீட்மென்ட் முடிஞ்சிடுச்சா? மொதல்ல எழுந்திரி. எடத்தைக் காலி பண்ணு. அஞ்சு நிமிஷம் லேட்டா போனாலும், நாளைக்கெல்லாம் நம்மள வெளியில விடமாட்டாங்க.’‘மிதிலாவை நெருங்கி, தோளில் கைப்பதித்தாள் அஜந்தா.“நா பத்திரமா இருக்கேன்... எனக்கு எதுவும் ஆகலை. இப்ப உங்களுக்கு சந்தோஷம்தானே?’‘ மிதிலா கிசுகிசுக்க...“உனக்கு தைரியம் ஜாஸ்திதான் மிதிலா!’‘“வெரி ஸாரிடி... உங்களோட பேச்சை காதுலயே வாங்காம வந்துட்டேன். அவர் கெஞ்சினப்போ பரிதாபமா இருந்துச்சு. அதான் மறுக்க முடியலை’‘ மெல்லியக் குரலில் தழுதழுத்தாள்.“ஸாரியும் வேணாம்... பூரியும் வேணாம்... ஆளை விடு... இனி உன்னை நாங்க வெளியில எல்லாம் கூப்பிட்டு வர மாட்டோம்.’‘சிநேகிதிகள் மிதிலாவை வறுத்தெடுத்தார்கள். மிதிலா அதற்கு மேல் அங்கு இருக்கவில்லை. விக்ரம் பக்கம் திரும்பி,“பத்து நிமிஷம் போல உங்க ஃப்ரெண்ட் தானா எழுந்திடுவார்! கையோட காருக்கு கூட்டிப் போயிடுங்க’‘ என்றாள் கனிவும் அக்கறையுமாய்.பிறகு...“வாங்கடி போகலாம்...’‘சிநேகிதிகளோடு இறங்கி வந்த வழியே ஏறத் தொடங்க... மிதிலாவையே பார்த்தபடி நின்றான் விக்ரம்.அய்யோ... ஒரு தேங்க்ஸ்கூட சொல்லலையே... அவ பேரைக்கூட கேட்கலையே?’ தன்னைத்தானே நொந்து கொண்டான் விக்ரம்.மிதிலா சொன்னது போலவே பத்தே நிமிடங்களில் அவன் சுகன் எழுந்தமர்ந்தான். இரு உள்ளங்கைகளையும் பரபரவென்று தேய்த்து முகத்தில் வைத்துக் கொண்டான்.“எனக்கு என்னடா ஆச்சு?’’“நடுக்கல் ஜுரம்... வாய்க்குளறி பொத்துன்னு கீழே விழுந்துட்டே.’‘“எப்படிச் சரி ஆச்சு?’‘“ஒரு தேவதை வந்து உன்னை டெஸ்ட் பண்ணி, மாத்திரை கொடுத்து எழ வெச்சா!’‘“என்ன... தேவதையா?’‘சுகன் சுற்றும் முற்றும் பார்த்தான்...யாரையும் காணவில்லை. மேற்கில் சூரியன் மறைந்து வெகு நேரமாகியிருந்தபடியால் இருள் சூழ ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.“எங்கேடா... தேவதையைக் காணலையே?’‘“தேவதைப் பறந்து போயிடுச்சு?’‘சுகனுக்கு ஒன்றும் புரியவில்லை.“என்னோட கையைப் புடிச்சிக்கிட்டு நடந்து வா. காருக்குப் போயிடலாம். ஏதாவதொரு ஹாஸ்பிடல்ல அட்மிஷன் போட்டுடறேன்.’‘“அதான் நான் நல்லா ஆயிட்டேனே?’‘ கைகளைத் தோள்களுக்கு மேலே உயர்த்தி உதறிக் காட்டினான் சுகன்.“அப்ப... என்னோட கையைப் பிடிக்காம நீயே நடந்து வா...’‘ விக்ரம் சிரித்தபடியே சொன்னான்.கோயம்புத்தூரில் தொழிலதிபர் கைலாசத்தை தெரியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். கைலாசம் _- தரணி தம்பதியர் ஒரே செல்ல மகன்தான் விக்ரம்.இருபத்தியேழு வயது... இன்னும் கல்யாணமாகவில்லை. படித்துக் கொண்டிருந்த கல்லூரி படிப்பையும் பாதியிலேயே நிறுத்தி, சுகனோடு ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தான்.டாடி செல்லம் விக்ரம்.பங்களா, சொத்துகள் ஏராளமாய் இருக்கிற திமிரிலும் கர்வத்திலும் படிப்பையெல்லாம் பெரிதாக நினைக்கவேயில்லை.விக்ரம் யாருடனும் அதிகமாகய்ப் பேசமாட்டான். ஆனால், நினைத்ததை சாதித்துவிடுவான். விரும்பியதை அடைந்துவிடுவான்.விக்ரமிற்கு வீட்டில் தீவிரமாய் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனுக்கோ எந்தப் பெண்ணையும் பிடிக்கவில்லை. ஆனால், மிதிலாவைத்தான் பிடித்திருந்தது!பார்த்ததுமே மிதிலாவின் முகம்தான் அவனுக்குள் அழுத்தமாய்ப் பதிந்து போயிருந்தது.விக்ரமோடு கல்லூரியில் படித்தவன் நீதி. அவனுக்குத்தான் கொடைக்கானலில் கல்யாணம்.கல்யாணத்தில் கலந்து கொள்ளத்தான் சுகனோடு வந்திருந்தான் விக்ரம். சுகன் ஏழ்மையானக் குடும்பத்தில் பிறந்தவன். எப்படியோ விக்ரமின் நட்பு கிடைத்துவிட்டது. அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டு விட்டான். விக்ரம் தாராளமாய் செலவு செய்வான். தனியே செலவிற்கும் பணம் கொடுப்பான். மாத சம்பள வேலைக்குப் போயிருந்தால்கூட சுகனால் இவ்வளவு சொகுசான வாழ்க்கையை வாழ முடியாது.சுகனைப் பொருத்தவரை விக்ரம் ஒரு அட்சயப்பாத்திரம்! விக்ரமும் சுகனும் மெதுவாய் சரிவில் ஏறி, மலைப்பாதையோரம் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு வந்திருந்தார்கள்.விக்ரமின் இதயம் நிலைக்கொள்ளாமல் தவித்தது.இவள் யார்?எந்தத் தேசத்து இளவரசி?திரும்பவும் நான் அவளைப் பார்ப்பேனா?திரும்பவும் பார்த்தால் அவளுடைய பெயரையும் ஊரையும் கேட்டு விடவேண்டும்!அவனுடையகண்களுக்குள்குறுக்கும்நெடுக்குமாய்ஓடினாள்மிதிலா..7மிதிலா புரண்டு புரண்டு படுத்தாள்.‘வேணுமின்னா சத்தியம் பண்ணவா? நான் பொய் சொல்லலைன்னு சத்தியம் பண்ணவா?’ஏனோ தெரியவில்லை. விக்ரமின் குரல் காதினுள் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருந்தது.தினமும் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம். பேசுகிறோம்... மறந்து விடுகிறோம்... ஆனால், விக்ரமை மட்டும் நினைத்துக் கொண்டே இருந்தாள்.‘அவன் யாரோ? எந்த ஊரோ?ஊரும் தெரியாது பேரும் தெரியாது. வேறு எந்த விவரமும் தெரியாது.ஜென்மம் ஜென்மமாய் பழகியதைப் போல உணர்வு பீறிடுகிறது. ஏன்?எனக்கு என்னாயிற்று?’விடுதியின் சுவர்க்கடிகாரம் பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது.‘ச்சே... இன்னுமா எனக்கு உறக்கம் வரவில்லை. கொடைக்கானலுக்கு நான் வந்தது முகாமில் கலந்து கொள்ளவும் பிராக்டீஸை திறமையாய் பண்ணவும்தன. ஆனால், தேவையில்லாததையெல்லாம் நினைக்கறேனே... இதெல்லாம் தவறில்லையா?’கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டாள். உறக்கம் வருவேனா என்றது.கொடைக்கானல் ஏரி...தண்ணீர் ததும்பி வழிந்தது.அணிவகுத்து நிற்கும் பாதுகாப்பு படைவீரர்களைப் போல கரையின் ஒரு பக்கம் உயரமான தைல மரங்கள்.உயர தாலாட்டும் பூங்காற்று, கும்மாளமிடும் புகைமேகங்கள், ஏரியின் தண்ணீர்ப் பரப்பிற்கும் மேலே கிழித்து வீசிய காகிதங்களைப் போல பறக்கும் பறவையினங்கள்.விக்ரமும் சுகனும் படகு சவாரி செய்து கொண்டிருந்தார்கள்.சுகன் சுகமாய் கண்கள் மூடி அமர்ந்திருக்க, விக்ரம்தான் துடுப்பு போட்டுக் கொண்டிருந்தான்.‘தேவதை வருவாளா? இன்றைக்கும் என் கண்களில் அகப்படுவாளா?’மிதிலாவின் நினைப்பு வந்து வந்து போனது.‘திரும்பவும் பார்த்தால் அவளுடைய பேரையும் ஊரையும் கேட்டுத் தெரிந்து கொண்டுவிட வேண்டும்?’சட்டெனக் கண்களைத் திறந்தான் சுகன்.“விக்ரம்... கரைக்குப் போயிடலாம்டா.’‘“போட் ஹவுஸ்ல ட்டூ அவர்ஸுக்கு பணம் கட்டியிருக்கேன். இன்னும் அரை மணி நேரம்கூட முடியலை. கை வலிக்க துடுப்புப் போடறது நானு. நீ கண்ணை மூடிக்கிட்டுதானே உட்கார்ந்திருக்கே? அதுக்குள்ள என்னடா உனக்கு அவசரம்?’‘ விக்ரம் படபடத்தான்.“தலையை வலிக்குதுடா. காய்ச்சல் உள்ளுக்குள்ளேயே அடிக்குதுன்னு ஃபீல் பண்றேன்... என்னைக் கரையில விட்ரு... நான் நடந்தே ரூமுக்குப் போயிடுறேன். நீ எப்ப வேணும்னாலும் வா.’‘சுகன் கெஞ்சலாய் பேசினான். முகத்தில் களைப்புத் தெரிந்தது. மேற்கொண்டு அவனை பேசவிடாமல் மௌனமாய் துடுப்புப் போட்டு, படகை கரையை நோக்கிச் செலுத்தினான்.மிதிலாவின் சிநேகிதிகள் ஏரிக்கரையில்தான் இருந்தார்கள். முதல்நாள் சொன்ன வாக்கை நிறைவேற்றியிருந்தார்கள். முகாம் முடிந்ததுமே மிதிலாவிடம் சொல்லி, ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி ஷாப்பிங்கை முடித்து விட்டு, படகுத்துறையில் காத்திருந்தார்கள்.விக்ரமின் படகு, துறையை நெருங்கியது.“ஹய்யா... போட் வந்துடுச்சு!’‘ பூமாவும் ரோஸியும் குதித்தார்கள். ஒரு மணி நேர சவாரிக்காக பணம் கட்டி, டிக்கெட் வாங்கி வைத்திருந்தார்கள்.துறையைத் தொட்டது படகு.“பத்திரமா எறங்கிப் போ...’‘சுகனைப் பார்த்து கையசைத்த விக்ரம், அப்போதுதான் மிதிலாவின் சிநேகிதிகளைப் பார்த்தான்.“அட... தேவதையோட சிநேகிதிகள் நிக்கிறாங்களே! தேவதை எங்கே? நம்ம தேவதை எங்கே?’‘கண்கள் பரபரவென அலைய... ஒரு கணமும் தாமதிக்காமல் சுகனோடு சேர்ந்து கரைக்கு வந்துவிட்டான். படகுத்துறை ஊழியனிடம் படகை ஒப்படைத்துவிட்டு, வேகமாய் மிதிலாவின் சிநேகிதிகளிடம் வந்தான்.விக்ரமை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.திகைப்பாய் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். விக்ரமிடம் எதுவும் பேசாமல் படகுத்துறையை ஒட்டி நின்ற படகை நோக்கிப் போனார்கள்.“ஏங்க... நில்லுங்க...’‘ தவிப்பாய் கூவினான்.“ஏன்? யாருக்காச்சும் உடம்பு முடியலையா?’‘கிண்டலாய்ப் பார்த்தாள் பூமா.“அதில்லீங்க... அவங்களை மட்டும் காணோமே?’‘“எவங்களை?’‘ அவனை சீண்டினாள் ரோஸி.“நேத்திக்கு எனக்கு ஹெல்ப் பண்ணினாங்களே?’‘ என்றான் திணறலாய்.“ஓ... அவளா? அவ எங்ககூட வரலை. நாங்க கூட்டிட்டு வரலை. நேத்திக்கு எங்க பேச்சை அவ கேட்கலை, எங்கள மதிக்கலை. முன்ன பின்ன தெரியாத உங்கப் பின்னால வந்தாள்ல... அதான் சொல்லாம கொள்ளாம வந்துட்டோம். அவளை இனி நீங்க பார்க்கவே முடியாது. வரட்டுமா? பை!’‘ சிரித்தபடியே மூவரும் படகுத்துறை ஊழியரிடம் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு, காலியாய் மிதந்துக்கொண்டிருந்த படகில் ஏறினார்கள்.விக்ரமிற்கு கண்களில் ஏமாற்றம் படிந்தது.தன்னைப் பார்த்ததும் எங்காவது மறைந்து கொண்டிருப்பாளோ? சுற்றும் முற்றும் தேடினான். கூட்டம் நிரம்பி வழிந்த கடைகளிலெல்லாம் ஓடி ஓடிப் பார்த்தான். மிதிலாவைக் காணவில்லை.“யாரைத் தேடறே விக்ரம்?’‘“நேத்திக்கு குளிர்க்காய்ச்சலால் கீழ விழுந்து கிடந்த உன்னை எழ வெச்ச தேவதையை!’‘“தேவதைதான் அப்பவே றெக்கை முளைச்சு பறந்துடுச்சுன்னு சொன்னியே...’‘ அப்பாவியாக கேட்டான் அவன்.“போடா முட்டாள். தேவதைன்னா பறந்து போற மாயாஜால தேவதை கிடையாது. அவ அழகுல தேவதை! உயிருள்ள தேவதை! நடமாடற தேவதை!’‘“தலையைச் சுத்துது. உனக்கு என்னடா ஆச்சு?’‘“அவ என்னென்னமோ பண்ணிட்டா டா. நான் ரொம்பவே இம்ப்ரஸ் ஆயிட்டேன். மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட். கேம்ப்க்காக கொடைக்கானலுக்கு வந்திருக்காங்களாம். ஃப்ரெண்ட்ஸோட நடந்து போய்கிட்டிருந்தவளை நான்தான் ‘டாக்டர்’னு கூப்பிட்டு ஹெல்ப் கேட்டேன். அவளோட ஃப்ரெண்ட்ஸெல்லாம் பயந்தாங்க. யோசிச்சாங்க. ஆனா, அவதான் என்னோட பேச்சை நம்பி, என்கூட சரிவுல எறங்கி, மொட்டைப்பாறையில கிடந்த உன்னை டெஸ்ட் பண்ணி, மாத்திரை கொடுத்து எழ வெச்சா’‘ நடந்ததை விவரித்தான் விக்ரம்.“என்னோட காய்ச்சல் குணமாயிடுச்சு. உனக்கு இப்ப காதல் காய்ச்சல் வந்துடுச்சு! அப்படித்தானே?’‘ தோள்களைக் குலுக்கினான் சுகன்.“அவ பேருகூட எனக்குத் தெரியாதுடா.’‘“காதலுக்கு பேரும் ஊரும் முக்கியமில்லை. கண்கள்தான் முக்கியம்!’‘“எனக்கு ஹெல்ப் பண்ண போய், இப்ப அவ ஃப்ரெண்ட்ஸுங்க அவளை ஓரங்கட்டிட்டாங்களே!’’ விக்ரம் வருத்தப்பட்டான். கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு இருவரும் வந்தார்கள்.மிதிலாவிற்கு கோபம்கோபமாக வந்தது. கொதிப்பாக இருந்தது.“ச்சே... சொன்னது மாதிரியே என்கிட்டே சொல்லாம கொள்ளாம வெளிய போயிட்டாங்களே?’‘முகாம் முடிந்து விடுதியறைக்கு வந்திருந்தாள் மிதிலா.“இவளுங்க கூட்டிப் போகலைன்னா என்னால வெளியில போக முடியாதா? கொடைக்கானலை சுத்திப் பார்க்கத் தெரியாதா? நான் என்ன கொழந்தையா? இவளுங்களுக்காகவாச்சும் இன்னைக்கு வெளியே போயே தீரணும்... கொடைக்கானலை வலம் வரணும்!’‘ தேகத்திற்குள் உத்வேகம் புகுந்தது.டாக்டர் கோட்டைக் கழற்றினாள். சீருடையிலிருந்து வேறு உடைக்கு மாறினாள்.விரிவுரையாளரிடம் சொல்லிக் கொண்டு விடுதியை விட்டு வெளியே வந்தாள். இயற்கையை ரசித்தபடி கால்போன போக்கில் நடந்தாள்.மலைப்பாதையில் ஓரிடத்தில் இலைகளே தெரியாத அளவிற்கு பூக்கள் குலுங்கிக் கொண்டிருந்தன.ஊதா வண்ண பூக்கள், கொத்துக் கொத்தாய்ப் பூக்கள். மரமும் பூக்களும் அவ்வளவு அழகு! மிதிலா அந்த மரத்தை நோக்கி ஓடினாள்.அன்னாந்து பார்த்தாள்... மரக்கிளை எதுவும் கைக்கு எட்டவில்லை. பாதையின் ஓரமாய்த் தடுப்புச் சுவர்... அதன் மீது ஏறினால், கிளையைப் பற்றி இழுத்து பூக்களைப் பறித்து விடலாம் போல தோன்றியது.தடுப்புச் சுவர் மீது ஏறினாள்.மரத்தின் அடிப்பகுதி தடுப்புச் சுவருக்கு அந்தப் பக்கம் பள்ளத்திற்குள் இருக்க, கிளைகள் மட்டும் சுவற்றின் வெளிப்பக்கம் படர்ந்திருந்தது.மிதிலா கையை உயர்த்தினாள். ம்ஹூம்.... எட்டவில்லை. திரும்பத் திரும்ப முயன்றாள். முடியவில்லை. எம்பினாள்... கிளையைப் பிடித்து ஒரு கொத்து பூக்களையாவது பறித்து விடலாமென எம்புவதற்காக கால்களை உயர்த்தினாள். அப்போது அந்த வழியேதான் வந்து கொண்டிருந்தது விக்ரமின் கார்.“அந்தப் பெண்ணுக்கு எவ்ளோ துணிச்சல் பாரு... தடுப்புச் சுவர்மேல ஏறி நிக்கறாளே?’‘சுகன்தான் காட்டிவிட்டான். யதார்த்தமாக நிமிர்ந்தான். மிதிலாவைக் கவனித்து விட்டான். மனசுக்குள் இன்பச் சாரல் அடித்தது. கோடிக் கோடி மின்னல்கள் மின்னின.காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடினான்.“ஏங்க... மொதல்ல கீழ எறங்குங்க. கால் ஸ்லிப் ஆகி, அந்தப் பக்கம் விழுந்தீங்கன்னா, எலும்புகூட மிஞ்சாது.’‘விக்ரமின் அலறலில் ஈர்க்கப்பட்ட மிதிலா நிமிர்ந்தாள்.‘மறந்திருந்தாகூட திடீர்னு எதிர்ல வந்து நிக்கிறானே!’ மிதிலா தடுப்புச் சுவரிலிருந்து கீழே இந்தப் பக்கமாய் குதித்தாள்.“உங்களுக்கு அந்தப் பூதானே வேணும்? இருங்க, நான் பறிச்சுத் தர்றேன்.’என்றவன், மிதிலாவின் பதிலுக்குக் காத்திருக்காமல் விறுவிறுவென்று ஓடிப்போய், தடுப்புச் சுவர் மீது ஏறினான்.“வேணாங்க... நா பூப்பறிக்கறதுக்காக ஏறலை...’‘“பின்னே, பள்ளத்தாக்கை வேடிக்கைப் பார்க்கவா ஏறுனீங்க? எனக்குத் தெரியுங்க... நீங்க பூப்பறிக்கத்தான் ஏறுனீங்க.’‘ சிரித்தபடியே கையை உயர்த்தி, கிளையைத் தனித்து தன்பக்கமாய் இழுத்து, பூக்களைக் கொத்தாய் பறித்தான். மென்மையானக் கிளை போலும்... அவன் இழுத்த இழுப்பில் முறிந்துவிட, தடுப்புச் சுவர் மீதிருந்து மிதிலா நின்ற இடத்திற்கு அருகாமையில் பொத்தென விழுந்தான்.“அய்யோ...’‘ கண்ணிமைக்கும் வினாடியில், பதறிப்போய் விக்ரமைத் தாங்கிப் பிடித்தாள் மிதிலா.விக்ரமோடு சேர்ந்து அவளும் சில அடிகள் தூரம் தரையில் உருண்டு பிறகு இருவருமே சுதாரித்து எழுந்தார்கள்.விக்ரமின் இரு கைகளிலும் சிராய்ப்பு ஏற்பட்டிருந்தது.“இதுக்குத்தான்... வேணாங்கன்னு சொன்னேன்...’‘ மிதிலா அவனைப் பரிதாபமாய்ப் பார்த்தாள்.“எனக்கொண்ணும் பெரிசா அடிபடலைங்க... ஏற்கெனவே முறிஞ்சிருந்த கிளை... கைப்பட்டு இழுக்கவும், நல்லா முறிஞ்சுப் போயிடுச்சு... தட்ஸ் ஆல்!’‘ தோள்களைக் குலுக்கினான்.முறிந்துக் கிடந்த கிளைகளில் பூத்திருந்த பூக்கள் முழுவதையும் கொத்தாய்ப் பறித்து அவளிடம் நீட்டினான்.“இந்தாங்க...’‘மிதிலா மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். விக்ரம் குறுகுறுவெனப் பார்த்தான். கண்களில் ஏக்கம் படரப் பார்த்தான்.ஏனோ மிதிலாவால் அவனை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. தோளோடு தோளுரசி தரையில் உருண்டதை நினைத்து வெட்கப்பட்டாள்.“உங்கப் பேரென்னன்னு தெரிஞ்சுக்கலாமா?’‘“மிதிலா!’‘“எந்த ஊரிலேருந்து வந்திருக்கீங்க?’‘“கோயம்புத்தூர்.’‘“அட! கோயம்புத்தூரா? நானும் அந்த ஊருதாங்க.’‘ ரொம்பவே உற்சாகமானான் விக்ரம்.“நான் வர்றேன்...’‘ அதற்குமேல் ஒரு வினாடிகூட அங்கே நிற்கவில்லை. விறுவிறுவென ஓடிப்போனாள்.‘தன்னைப் பற்றி கேட்பாள். தன் பெயரைக் கேட்பாள்’ என எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மிதிலா எதுவுமே கேட்கவில்லை.வானவில்லைப் போல முந்தானைக் காற்றில் பறக்க, கையில் பூங்கொத்தை ஏந்தியவாறு மலைப்பாதையில் நடந்துபோகிற மிதிலாவையே பார்த்துக் கொண்டு நின்றான் விக்ரம்.சுகனும் காரிலிருந்து இறங்கி வந்து விட்டான்.“நீ சொன்ன தேவதை அவங்கதானா?’‘கேலியாய்க் கேட்டான் சுகன். தன்னை மறந்து ஆகாயத்தில் மிதப்பவனைப் போல தானாக சிரித்தபடியே காரை நோக்கி நடந்தான் விக்ரம்.8கொடிய நோய்களுக்குக்கூட மருந்து கண்டுபிடித்துவிட்டார்கள்! ஆனால், இந்தப் பொல்லாதக் காதல் நோய்க்கு மட்டும் இன்னும் யாரும் மருந்து கண்டுபிடித்தபாடில்லை.புயலும் பூகம்பமும் வருவதை யாராலும் கணிக்க முடியாது. தடுக்கவும் முடியாது. பாதிப்புகளைத்தான் உணர முடியும். காதலும் அப்படித்தான்!இரும்பால் செய்யப்பட்ட இதயமாக இருந்தாலும்கூட அதை அசைய வைக்கிற சக்தி காதலுக்கு மட்டுமே உண்டு!காதல் முதலில் கண்களைத் தாக்கும். அப்புறம் இதயத்தைத் தாக்கும். கடைசியில் ஒட்டுமொத்த நினைவுகளையும் ஆக்ரமித்துவிடும். புத்திசாலிகளும் விழிப்பு உணர்வு உடையவர்கள் மட்டுமே மீண்டு வருவார்கள். அன்புக்காகவும் பாசத்திற்காகவும் ஏங்குகிறவர்கள் எளிதில் சிக்கிக் கொண்டு விடுவார்கள். மீள்வது கடினம்.மிதிலாவின் இதயமும் அப்படித்தான் ஆகியிருந்தது!அப்பா இறந்தப் பிறகு அம்மாவைத் தவிர வேறு எவரோடும் பேசியதில்லை. பழகியதில்லை. எந்த ஆண்மகனையும் ஏறிட்டுப் பார்த்ததில்லை. வெகு அருகாமையில் நின்று பேசிய முதல் ஆண்மகன் விக்ரம்தான்.இரண்டு தடவைதான் பார்த்திருக்கிறான். ஜென்ம ஜென்மமாய் பழகியதைப் போன்ற உணர்வு பீறிட்டது.‘அட! கோயம்புத்தூரா? நானும் அந்த ஊருதாங்க!Õ விக்ரமின் உற்சாகக் குரல் உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது.‘அவனோட பேரைக்கூட நான் கேட்கலையே?Õ தன்னையே நொந்து கொண்டாள்.‘பேரை தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன பண்ணப் போறே? கொடைக்கானல் வந்தோமா... முகாம்ல கலந்துக்கிட்டோமா... பிராக்டிக்கலை நல்லவிதமாக முடிச்சோமான்னு போய்க்கிட்டே இரு... மனசை அலைபாய விட்டா, ஆபத்துலதான் போய் முடியும்!உள்ளுணர்வு ஒரு பக்கம் எச்சரித்தது.‘இது ஃபைனல் இயர். ஒழுங்கா படிச்சாத்தான் டாக்டராக முடியும்!தன்னைத் திடப்படுத்திக்கொள்ள முயன்றாள். ஆனால், முடியவில்லை.விக்ரம்தான் கண்களுக்குள் வந்து வந்துப் போனான்.‘சரியான திருடனா இருப்பான் போல! ஒரேயடியா என் மனசைத் திருடிட்டானே!!‘திரும்பவும் அவனைப் பார்க்க மாட்டோமா?’ என ஏங்கினாள். ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. முகாம் முடிந்தும் வெளியே செல்லவே முடியவில்லை. காரணம், கொடைக்கானலின் வனாந்திரப் பகுதியில் ரொம்பவே பள்ளமானப் பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் இருப்பிடத்தில்தான் முகாம் நடந்தது. தினமும் காலையிலேயே கிளம்பி நடந்து செல்ல வேண்டும். மாலை முகாம் முடிந்து மேலே வருவதற்குள் இருட்டிப் போய்விடும். கால்கள் வலி எடுத்து, விடுதியில் போய் சாப்பிட்டுப் படுத்தால் தேவலாம்போல தோன்றும்.சிநேகிதிகள் அனைவருமே களைத்துத்தான் போயிருப்பார்கள். வந்ததும் டிபனை சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவார்கள். மிதிலா மட்டும் வெளியே போக முடியுமா? பழக்கமில்லாத இந்த ஊரில் பெயர் தெரியாதவனை தேட முடியுமா?ஒவ்வொரு நாளும் இப்படியே கழிந்து. கடைசி நாளும் வந்தது. முற்பகல் பன்னிரண்டு மணிக்கே முகாம் முடிந்துவிட, முதல்நாள் உரையாற்றியதைப் போலவே கடைசி நாளும் விடுதியின் புல்வெளிப் பகுதியில் மாணவ _ மாணவிகளை வரிசையாக நிற்கவைத்து நன்றித் தெரிவித்தார் மருத்துவக் கல்லூரி முதல்வர்.“டியர் ஸ்டூடண்ட்ஸ்... நினைச்சதை விட வெகு சிறப்பா, எந்தத் தடங்கலும் பிரச்னையும் இல்லாம நம்ம கொடைக்கானல் முகாமும் பிராக்டிக்கலும் முடிந்து விட்டது. ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் நமது கல்லூரியின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு, வருங்காலத்தில் நீங்கள் எல்லோரும் மிகப்பெரிய மருத்துவரா வரணும். மக்களுக்கு சேவைகள் செய்யணும்னு வாழ்த்தறேன்! நாம இன்னைக்கே காலேஜுக்குக் கௌம்பறோம். அவங்கவங்க உடைமைகளைப் பத்திரமா சேகரம் பண்ணி எடுத்துக்கங்க. ரெடி ஆகிடுங்க!’‘சுருக்கமாக முடிந்தது அவருடைய உரை.தயங்கித் தயங்கி முன்னால் வந்தாள் மிதிலா.“சார் ஒரு ரிக்வெஸ்ட்...’‘“என்னம்மா?’‘“இனி கொடைக்கானல் எப்ப வருவோம்னு தெரியாது. அதனால இங்கேயிருந்து கௌம்பறதுக்கு முன்னாடி எங்களையெல்லாம் தூண் பாறைப் பகுதிக்கோ லேக் இருக்கிற எடத்துக்கோ கூட்டிட்டுப் போங்க சார்.’‘ மிகவும் பணிவாய் தன்னுடைய கோரிக்கையை முன்வைத்தாள்.“கூட்டிட்டுப் போனா போச்சு!’‘இன்முகத்தோடு தலையசைத்தார் கல்லூரியின் முதல்வர்.தூண்பாறைப் பகுதி...கல்லூரி பேருந்து தூரமாய் நிறுத்தப்பட்டிருக்க, மாணவ _ மாணவியர் அனைவரும் கீழே இறங்கி, சிறகுகள் முளைத்த பட்டாம்பூச்சியாக மாறிப் போயிருந்தார்கள்!தூண்பாறைப் பகுதி எப்பவுமே கூட்டமாகத்தான் இருக்கும். அதுவும் திருவிழாக் கூட்டம்!தூண்பாறைகளை மேகங்கள் தழுவித் தழுவி நகர்ந்தது கண்கொள்ளாக் காட்சியாய்த் தெரிந்தது!திரும்பிய திசையெங்கும் கடைகள். பொம்மைக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.தொப்பிகளையும் ஸ்வெட்டரையும் தன்னுடைய தோள்மீது தொங்கவிட்டபடி இளைஞன் ஒருவன் கூடிக் கூவி விற்றுக் கொண்டிருந்தான்.“ஏய்... அதோ பாருங்கடி... வெள்ளைக் காக்கா பறக்கிறதை...’‘ சிரித்தபடியே வானத்தைக் காட்டினாள் அஜந்தா.“உனக்கு ஒரே ஒரு வெள்ளைக் காக்காதான் தெரியுதா? எனக்கு ஏராளமான வெள்ளைக் காகங்கள் பறக்கிறது தெரியுதுடி!’Õ கிண்டலடித்தாள் ரோஸி.“அதெப்படி... உன் கண்ணுக்கு மட்டும் நெறைய தெரியுது?’‘ சீண்டினாள் பூமா.“உம்மனாம் மூஞ்சி மிதிலாவே ஊரைச் சுத்திப் பார்க்கிறதுக்கு ஆசைப்படறான்னா... இந்த உலகமே மாறிப் போயிடுச்சுன்னுதானே அர்த்தம்? அதனாலதான் என்னோட கண்ணுக்கு காகங்களெல்லாம் வெள்ளையா தெரியுது!’‘ரோஸி ரொம்பவே கலாய்த்தாள்.“மிதிலா மாறிட்டாளே! யாருடி மந்திரம் போட்டா?’‘“எல்லாம் அந்த ராஜகுமாரனோட வேலையாத்தான் இருக்கும்!’‘“ஒரே சந்திப்புல மந்திரம் போட முடியுமா?’‘“யாரு சொன்னது? மறுநாளும் மிதிலா வெளியே போயிருக்கா... அவனைப் பார்த்திருக்கா... ஓசையே இல்லாம இதயம் ரெண்டும் எடம் மாறிடுச்சு!’‘ஒரே கேலி... கிண்டல்... சிரிப்பொலி... எல்லாவற்றையும் மௌனமாய் ரசித்தபடியே நின்றிருந்தாள் மிதிலா.“நீங்கள்லாம் என்னை விட்டுட்டுப் போயிட்டீங்க. அதனாலதான் ரோசப்பட்டு வெளியே வந்தேன். அப்பத்தான் அவனைப் பார்த்தேன். தடுப்புச் சுவர் மேல ஏறி பூப்பறிச்சுக் கொடுத்தான். இதை உங்கிட்டே தெரியாத்தனமா சொல்லித் தொலைச்சிட்டேன். ரொம்ப வறுத்தெடுக்காம தூண்பாறையை வேடிக்கைப் பாருங்கடி.’‘ பொய்க்கோபத்தோடு அவர்களைவிட்டு விலகி, கூட்டத்திற்குள் கலந்தாள் மிதிலா.மிதிலாவின் கண்கள் விக்ரமைத் தேடியது.‘கொடைக்கானலை விட்டுக் கிளம்புவதற்குள் மீண்டும் ஒரு தடவை அவனைப் பார்த்துவிட மாட்டோமா?’ என தவிப்பாய் ஏக்கமாய் இருந்தது.சுற்றுலாப் பயணிகள் கும்பல் கும்பலாய் நின்றிருந்தர்கள். வேடிக்கைப் பார்க்கிற மும்முரத்தில் ஒருவர் மீது ஒருவர் முட்டி மோதிக் கொண்டு நடந்தார்கள்.‘அவன் இங்கே இருக்கலாம்...‘இல்லாமலும் இருக்கலாம்...ஏதோ ஒரு நப்பாசை... மிதிலாவின் மனசு அலைப்பாய்ந்தது. ஆனால், எங்கேயும் அவனைக் காணவில்லை.‘ஒருவேளை, ஊருக்குப் போய்விட்டானோ என்னவோ?பாதையை விட்டு விலகி... உயர உயரமான தைலமரங்களுக்கு மத்தியில் நடக்க ஆரம்பித்தாள் மிதிலா.காலடியில் மிதிபட்ட சருகுகள் சிணுங்கின. காலடி சப்தம் கேட்டு புதருக்குள் பதுங்கியிருந்த காட்டு முயல்கள் வெளியே தலையை நீட்டிவிட்டு மீண்டும் புதருக்குள் பதுங்கின.நினைத்த கனமே மனசுக்குப் பிடித்தவன் கண் முன்பு வந்து நிற்பதெல்லாம் கனவில்தான் நடக்கும். திரைப்படங்களில்தான் காட்டுவார்கள். நிஜத்தில் நடப்பதெல்லாம் கஷ்டம்.அந்த இடத்திலிருந்து வந்தவழியே திரும்பினாள் மிதிலா.சட்டென நின்றாள்.காரணம், ஒரு மரத்தில் செதுக்கப்பட்டிருந்த அவளுடைய பெயர்.நேற்றைக்கே முதல் நாளோதான் செதுக்கியிருக்க வேண்டும். இதய வடிவத்தின் நடுவே மிதிலா என்ற எழுத்துகள்.மிதிலாவிற்குள் குபுகுபுவென புதுரத்தம் பாய்ந்தது. நூறாயிரம் மயிலிறகினால் வருடுவது போல உணர்ந்தாள். தேகம் சிலிர்க்க அந்த மரத்தை நோக்கி ஓடினாள்.‘இதை அவன்தான் செதுக்கி வைத்திருப்பான்!Õ கண்கள் மினுக்க மினுக்கப் பார்த்தாள்.“ஏண்டி மிதிலா... உன்னை எங்கெல்லாம் தேடுறோம் தெரியுமா? பஸ் கௌம்பப் போகுது. சீக்கிரமா வாடி....’‘“இங்கே என்னடி பண்ணிக்கிட்டிருக்கே?’‘ கேள்வி கேட்டபடியே சிநேகிதிகளும் அந்தப் பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.அவர்கள் பார்த்து விட்டால், இன்னும் அதிகமாய் வறுத்தெடுப்பார்களே என்ற பயத்தில், விருட்டென அந்த மரத்தை விட்டு விலகினாள். சிநேகிதிகளோடு வந்து சேர்ந்து கொண்டாள் மிதிலா.“வாங்கடி... பஸ் நிறுத்தியிருக்கிற எடத்துக்குப் போயிடலாம்.’‘விக்ரம் கொடைக்கானலுக்கு வந்தது நண்பனின் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காகத்தான். நண்பனின் கல்யாண வைபோகம் வெகு விமரிசையாய் நடந்திருந்தது.சுகனோடு போய் ஒப்புக்கு தலையைக் காட்டினான். பரிசுப் பொருளை மணமக்களிடம் கொடுத்துவிட்டு, தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து விட்டான்.மிதிலாவைப் பார்த்தது முதலே விக்ரம் அவனாக இல்லை. எதையோ பறிகொடுத்தவனைப் போலவே காணப்பட்டான். எப்பவும் மிதிலாவின் நினைப்புதான்.‘மிதிலா... மிதிலா...’ என அவனுடைய உதடுகள் முணுமுணுத்துக் கொண்டேயிருந்தன. மிதிலாவை திரும்பவும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் கொடைக்கானலில் ஒவ்வொரு விடுதியாய்த் தேடி அலைந்தான். ஆனால், கண்டுபிடிக்கவே முடியவில்லை.மருத்துவ முகாம் நடக்கும் இடத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே ஓடினான். அந்த முகாம் மிதிலா படிக்கும் மருத்துவக் கல்லூரி முகாம் கிடையாது என்பது அங்கே போன பிறகுதான் தெரிந்தது. அது கண் பரிசோதனை முகாம் என்று ஏமாற்றமாக இருந்தது.வேறொரு இடத்தில் முகாம் நடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கே ஓடினான்.அங்கேயும் மிதிலா இல்லை. காரணம், அது ரத்ததான முகாம்.பைத்தியமே பிடித்து விடும்போலத் தோன்றியது.கண்போன திசையில் கால் போன போக்கில் நடந்தான். தூண்பாறைப் பகுதியில், சரிவில் ஒரு தைல மரத்தில் இதய வடிவத்தையும், அதில் ‘மிதிலா’ என்ற பெயரையும் கூர்மையான கத்திக் கொண்டு செதுக்கி வைத்துகூட அவன்தான்!‘எனக்கு என்னாயிற்று?’‘நான் நானாக இல்லையே... ஏன்?’‘ஏய்... மனங்கொத்திப் பறவையே... நீ எங்கே போனாயடி?’மிதிலா தூண்பாறைப் பகுதியில் இருந்தபோது விக்ரமும் சுகனும் தாவரவியல் பூங்காவில் இருந்தார்கள்.“கையெல்லாம் வலிக்குதுடா.’‘“வலிக்காம இனிக்குமா? உன்னை யாருடா மரத்து மேல ஹாட்டின் சிம்பிளை செதுக்கச் சொன்னது? போதாக்குறைக்கு அவ நேமையும் அதுல வெட்டி வெச்சிருக்கே... கையை வலிக்கப் போகுதுடான்னு சொன்னேன்... காதுல வாங்குனியா நீ? காசைக் கொடுத்து ஒரு ஆளை விட்டாவது செதுக்கச் சொல்லியிருக்கலாம். இப்ப நல்லா அனுபவி!’‘சுகன் சற்றே கோபமாய்ப் பேசினான்.“மனசுக்குப் பிடிச்ச பொண்ணோட பேரை காசு கொடுத்து கண்டவங்களையும் விட்டு மரத்துமேல செதுக்க சொல்ல முடியுமா? என் கையாலேயே செதுக்குறதுதான் நிஜமான சந்தோஷம். தெரியுமா?’‘“அப்படின்னா... கையை வலிக்குதுன்னு என்கிட்டே புலம்பாதே. ஊருக்கு கௌம்பற வழியைப் பாரு.’‘“மிதிலாவைப் பார்க்காம என்னால இங்கேயிருந்து கிளம்ப முடியாது.’‘“அந்தப் பொண்ணு அன்னிக்கே கொடைக்கானலை விட்டுப் போயிருக்கலாம். அதான் ஊரு பேரு தெரிஞ்சிருச்சே... அங்கே போய் மெடிக்கல் காலேஜ்ல விசாரிச்சா அந்தப் பொண்ணை திரும்பவும் பார்க்கலாம். பேசலாம். இங்கே இருக்கிறது வேஸ்ட்டுடா.’‘சுகன் கரைத்தான்.“ஓகே... நாம இன்னைக்கே கோயம்புத்தூர் கிளம்பிடுவோம்.’‘ சம்மதமாய் தலையாட்டினான்.“மிதிலாவை நான் திரும்பப் பார்ப்பேனா சுகன்?’‘“பார்க்கிறதுக்கு வாய்ப்புகள் இருக்கு. ஆனா...’‘“ஆனா என்ன? ம்... சொல்லுடா...’‘“அவ உன்னையப் புரிஞ்சிக்குவாளா? உன்னோட மனசுல இருக்கிறது போலவே அவளோட மனசுலயும் உன்னோட நினைப்பு இருக்குமான்னு சரியா சொல்லத் தெரியலைடா.’‘பேசியபடியே நடந்து காருக்கு வந்தார்கள். 9 ‘சிலீர்...’கீழே விழுந்த வேகத்தில் தூள்த் தூளாய் நொறுங்கிப் போனது பளிங்காலான அந்த டால்பின் பொம்மை. சற்றே பெரிய சைஸ் பொம்மை. அலமாரியின் ஒரு அடுக்கிலிருந்தது. எல்லா பொம்மைகளையும் போலத்தான் பக்குவமாய் பயமாய் கையிலெடுத்து துடைக்க முயன்றாள் கோகிலம்.இப்படி நடக்குமென்று எதிர்பார்க்கவில்லை. வேண்டுமென்றே செய்யவில்லை. கைத்தவறித்தான் கீழே விழுந்தது. தன்னுடைய செய்கையை உணர்ந்து நடுநடுங்கிப் போனாள் கோகிலம். வியர்த்தது. பயம் குப்பென்று இதயத்தை அடைத்தது.இப்ப என்ன செய்யறது?மொதலாளி அம்மாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்களே!ஒண்ணும் தெரியாதது போல எல்லாத்தையும் பொறுக்கி, துடைத்து, குப்பைத்தொட்டியில் வீசிடலாம். விஷயம் தெரிந்து கேட்கறப்ப பக்குவமா சொல்லிக்கலாமா?யோசனைகள் வரிவரியாய் ஓட... உடைந்து கிடந்த பொம்மை சில்லுகளைப் பொறுக்க எத்தனித்தாள்.“வாட் நான்சென்ஸ்... என்ன காரியம் பண்ணி வெச்சிருக்கே?’‘ மாடியறையிலிருந்து கீழே இங்கி வந்து கொண்டிருந்தாள் தாரணி. அறையிலிருந்து யதார்த்தமாக வெளியே வந்தவள், பொம்மை கீழே விழுந்து உடைந்த சப்தம் கேட்டுதான் எட்டிப் பார்த்தாள்.கொதித்துப் போயிருந்தாள்.கண்கள் ரத்த சிவப்பாய் மாறியிருந்தது.ஆத்திரம் அடைக்க அருகில் வந்தாள். ஓங்கி ஒரு அறை விட்டாள். பொறி கலங்கியது.“மூதேவி... உன்னை யாரு அதை எடுக்கச் சொன்னது?’‘“அம்மா... அது வந்து... தெரியாம கைதவறி விழுந்துட்டும்மா. அதை வேணுமின்னு நான் போட்டு உடைக்கலைம்மா.’‘அழுகையே வந்து விட்டது கோகிலத்திற்கு.“இந்த டால்பின் டாய்ஸ்.நானும் அவரும் கல்யாணமான புதுசுல ஜெய்ப்பூர் போனப்ப மொதமொதலா வாங்கினது. ராசியான டாய். ஷோ கேஸ்ல வெச்சதுல இருந்தே ஏறுமுகம்தான்... இப்படி நாசம் பண்ணிட்டியே...’’தாரணி உருமினாள்.“கோச்சுக்காதீங்கம்மா... திட்டாதீங்கம்மா... நான் ஒண்ணும் தெரிஞ்சே செய்யலைம்மா. தூசி படிந்து கிடந்துச்சுன்னு தொடைச்சி வெய்க்கத்தான் கையில எடுத்தேன். அது இப்படி கை நழுவி கீழே விழுந்து உடையும்னு எதிர்பார்க்கலை.’‘“வாயை மூடு. செய்யறதையும் செஞ்சுட்டு, அதை நியாயப்படுத்தறியா? வேலைக்கு வந்தோம்மா கூட்டினோமா பெருக்கினோம்மா சமையலை பண்ணினோம்மான்னு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதானேடி? உன்னை யாருடி ஷோ கேஸ்கிட்ட போகச் சொன்னா?’‘சாட்டையால் விளாசுவதுபோல வார்த்தையை வீசினாள் தாரணி.கோகிலம் இங்கே வேலைக்கு சேர்ந்து நான்கு நாட்கள்தான் ஆகிறது. ஏற்கெனவே ஐந்தாறு வீடுகளில் வேலை செய்கிறாள். காலையில் மூன்று வீடுகள், சாயங்காலம் மூன்று வீடுகள். விடுப்பெல்லாம் கிடையாது. புயலே வீசினாலும் பூகம்பமே வந்தாலும் வேலைக்கு வந்துவிட வேண்டும்.வீட்டை சுத்தம் பண்ணுவது, சமையல் வேலை, பாத்திரங்களைக் கழுவுவது, தோட்டத்திற்கு நீர் பாய்ச்சி பராமரிப்பது, வாஷிங் மெஷினில் துணியை துவைத்து உலர்த்துவது.ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான வேலை. வருமானம் போதவில்லை.இந்த வேலைகளைத் தவிர வேறு எதுவும் அவளுக்குத் தெரியாது.மிதிலாவிற்கு படிப்பு முடியும் வரை ஓடிக் கொண்டுதான் இருக்க வேண்டும். வேறு வழியில்லை.“எனக்குத் தெரிஞ்சவங்களோட வீட்ல வேலைக்கு ஆள் வேணுமாம். தெனமும் ஒரு மணிநேர வேலைதான். பெரும்பாலும் வீட்ல யாருமே இருக்க மாட்டாங்க. சாவியை நம்மள நம்பிக் கொடுத்துடுவாங்க. தெனமும் போய் வேலையை முடிச்சுட்டு வந்துகிட்டே இருக்கலாம். சுளையா மூவாயிரம் ரூவா தந்துடுவாங்க. போறியாக்கா?’‘ எனக் கேட்டு, வேணிதான் இங்கே வேலைக்கு சேர்த்து விட்டாள்.கூடுதலாய் மூவாயிரம் கிடைத்தால் நல்லதுதானே!’ என எண்ணித்தான் வேலைக்கு வர ஒப்புக் கொண்டாள் கோகிலம்.கொத்தும் பாம்பை விட கொடியவளாக முதலாளியம்மா இருப்பாள் என கோகிலம் நினைத்தே பார்க்கவில்லை.“அம்மா... மன்னிச்சிடுங்கம்மா. நான் இந்தப் பொம்மைக்குரிய பணத்தைக் கொடுத்துடுறேன்.’‘தாரணியின் கோபத்தைக் குறைக்க முயன்றாள் கோகிலம். ஆனால், தாரணிக்கு கோகிலத்தின் வார்த்தைகள் பலமடங்கு கோபத்தைத் தூண்டியது.“ஏண்டி... அவ்ளோ பணம் இருக்கா உன்கிட்டே? ஜெய்ப்பூருக்கு ஃபிளைட்ல போய் இதே மாதிரி பொம்மையை வாங்கி வர்ற அளவுக்கு வசதி இருக்காடி உன்கிட்டே? பின்ன எதுக்குடி வீடு துடைக்கற வேலைக்கெல்லாம் வந்திருக்கே?’‘“வேற என்னம்மா என்னை பண்ணச் சொல்றீங்க?’‘ கோகிலம் விம்மினாள்.“என்னோட கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டிருந்தின்னா அப்பவே விட்டிருப்பேன். பேசறதை நிறுத்தியிருப்பேன். அதிர்ந்து பேசறே... பணம் தர்றேன்னு சொல்றே... பதிலுக்கு பொம்மையை வாங்கித் தர்ரேன்னு வீராப்பு பேசறே... இதெல்லாம் எனக்குப் பிடிக்காது.’‘“அம்மா...’‘“மொதல்ல எல்லாத்தையும் கிளீன் பண்ணிட்டு இந்த டால்பின் டாய்க்கான விலையைக் கொடுத்துட்டு போய்க்கிட்டே இரு... இந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்காதே... நான் வேற ஆளை நியமிச்சுக்கறேன்.’‘ஆணையிடுவது போல கத்திவிட்டு, சோபாவில் போய் அமர்ந்தாள் தாரணி.இந்தப் பணக்காரர்களே இப்படித்தானா?இவர்களுக்கு இதயமே இருக்காதா?நெஞ்சில் இரக்கமே ஊறாதா?மனிதாபிமானமே வராதா?மனசாட்சியே உறுத்தாதா?நானென்ன வேண்டுமென்றா உடைத்தேன்? கைத்தவறி விழுந்து உடைந்ததற்கே இத்தனைக் கூச்சலா? வசவுகளா? இந்தப் பெண்ணின் வாயில் இருப்பது நிஜமாகவே நாக்குதானா இல்லை கூர்மையான கத்தியா?இவள் என்ன சொல்வது, வேலைக்கு வர வேண்டாம என்று? நானே வரமாட்டேன். லட்ச ரூபாய் சம்பளம் தருவதாகச் சொன்னாலும் வரமாட்டேன்!’இதயத்திற்குள் உறுமுலுடன் வேதனையை வெளியே காட்டாமல், மௌனமாய் கீழே அமர்ந்து, உடைந்து சிதறிக் கிடந்த டால்பின் பொம்மை சில்லுகளை சேகரம் பண்ணி, குப்பைத்தொட்டியில் கொண்டுபோய் போட்டாள்.தரையையும் டெட்டால் தெளித்து சுத்தமாய் துடைத்தாள். எல்லாவற்றையும் வெறிக்கப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் தாரணி.“அம்மா... நீங்க சொன்னபடி செஞ்சிட்டேன்மா. நா கௌம்பறேன்மா. பொம்மைக்கு எவ்வளவு ரூபா தரணும்? சொல்லுங்கம்மா... நாளைக்கு வேணி அக்காகிட்டே கொடுத்தனுப்பிடறேன்.’‘தன்னுடைய ஈரமான கையை முந்தானையில் துடைத்தபடியே எதிரே வந்து நின்றாள்.“வாட்... நாளைக்குக் கொடுத்தனுப்பறியா? யாரை ஏமாத்தப் பார்க்கறே? உன்னையெல்லாம் நம்ப முடியுமா? அப்படியே ஓடிட்டின்னா... அப்பவே இந்த டால்பின் டாய் டூ தௌசன் ரூபீஸ்... பணத்தை வெச்சுட்டு நடையைக் கட்டு’‘ என்றாள் தாரணி.கோகிலத்திற்குத் தூக்கி வாரிப் போட்டது.“ரெண்டாயிரம் ரூபாயா? அவ்ளோ ரூபாய்க்கு நான் எங்கேம்மா போவேன்? இப்ப என்னோட கையில ஒத்த ரூவா கூட கெடையாதும்மா.’‘கைகளை விரித்தாள் கோகிலம்.“ஒத்த ரூவா இல்லன்னா என்ன? காதுல போட்டிருக்கிற கம்மல் தங்கம்தானே? அதைக் கழட்டிக் கொடு... நாளைக்கு வேணிகிட்டே டூ தௌசன் ரூபீஸை கொடுத்து அனுப்பினீன்னா... கம்மலைத் திருப்பி வாங்கிக்கலாம்’‘ என்றாள் திமிராய்.இவளிடம் பேசுவதும் மன்றாடுவதும் தெரிந்தே முரட்டுப்பாறையின் மீது தலையை மோதிக்கொள்வதற்குச் சமம்! என்று நினைத்த கோகிலம்,தன்னுடைய காதுகளில் அணிந்திருந்த கம்மல்களை பரபரவென கழட்டினாள். 10 “இந்தாம்மா...’‘கொடைக்கானலிலிருந்து வாங்கி வந்திருந்த தைலப்பாட்டிலை நீட்டினாள் மிதிலா.“எதுக்குடி இதெல்லாம்?’‘ புருவங்களை உயர்த்தினாள் கோகிலம்.“உனக்குத்தான் அடிக்கடி தலைவலி வருமே! அப்பல்லாம் இந்தத் தைலத்தைத் தேய்ச்சுக்கம்மா.’‘கனிவாய்ச் சொன்னாள்.“நீதான் இன்னும் ஆறேழு மாசத்துல முழு டாக்டரா மாறிடப் போறியே! தலைவலின்னா ஒரு ஊசியைப் போட்டு சரி பண்ணிடப்போறே... தைலமெல்லாம் தேவையே படாது!’‘பூவாய் மலர்ந்தபடி, மிதிலா நீட்டிய தைலப்பாட்டிலை மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் கோகிலம்.அப்போதுதான் மிதிலா தன் அம்மாவினுடைய முகத்தையே கவனித்தாள். காதுகளில் கம்மல்கள் இல்லை. ஈர்க்குச்சியை செருகியிருந்தாள்.அப்பா உயிரோடு இருந்தபோது வாங்கிய கம்மல்கள்... எந்தச் சூழலிலும் கழட்டாதக் கம்மல்கள்... அப்பாவின் ஞாபகார்த்தமாக அம்மாவிடம் இருந்தது அந்தக் கம்மல்கள் மட்டும்தான்.“அம்மா... எங்கேம்மா... காதுல கெடந்த கம்மல்களைக் காணோமே?’‘ பதறினாள் மிதிலா.“இல்லடி... அதுவந்து... திருகாணி கழண்டு விழுந்துடுச்சுடி... அதான் கழட்டிட்டேன்...’‘நடந்த விவரங்களைச் சொன்னாள் மிதிலாவால் தாங்க முடியாது என்பதால் பொய்ச் சொன்னாள்.“கம்மல்களைக் கழட்டினதும் உன் முகத்தோட களையே போயிடுச்சும்மா. திருகாணி தொலைஞ்சுப் போச்சுன்னா வேற திருகாணி வாங்கிடலாம்மா.’‘“இப்ப தங்கம் விக்கற வெலைக்கு... அவ்ளோ ரூபாய்க்கு எங்கேடி போறது?’‘பேச்சைத் திசைத் திருப்பினாள் கோகிலம்.“நீ கவலைப்படாதேம்மா... நான் கொடைக்கானலுக்குப் போகறப்போ... கட்டாயப்படுத்தி நீ தந்த ரெண்டாயிரம் ரூபாயையும் அப்படியே திருப்பிக் கொண்டு வந்துட்டேன். அதை வெச்சு நகைக்கடைக்குப் போய் புது திருகாணி வாங்கிடலாம்.நீ கழட்டி வச்சிருக்கற கம்மல்களை மொதல்ல எடுத்தாந்து என்கிட்டே கொடு. உனக்குத் திருகாணியை மாத்தித் தந்துட்டுதான் நான் காலேஜுக்குப் போகப் போறேன்.’‘மிதிலா விடுவதாய் இல்லை. கோகிலா இருண்டு போனாள்.“இப்ப வேணாம் மிதிலா. நா வேலைக்குக் கௌம்பறேன். இன்னொரு நாள் நகைக்கடைக்குப் போகலாம். இப்ப அந்த ரூபாயை என்கிட்டே கொடு. நான் வெச்சுக்கறேன்.’‘ சமாளிக்கப் பார்த்தாள்.“ஹூம்... நீ அதை வேற செலவு செஞ்சிடுவே! ப்ளீஸ்மா... கம்மல்களை எடுத்து வாம்மா... நேரமாகுது...’‘மிதிலா பாடாய்ப் படுத்த வேறு வழியின்றி நடந்ததை அப்படியேச் சொல்லிவிட்டாள் கோகிலம்.மிதிலாவிற்கு குப்பென வியர்த்தது.கண்கள் நன்றாக சிவந்து போனது.முட்டிக் கொண்டு அழுகை வந்தது.அடக்க முடியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது.“ச்சே... என்னால நம்பவே முடியலை. இப்படிக் கூடவா மனுஷங்க இருப்பாங்க?’’நாடி, நரம்புகளில் ரத்தம் சூடாய்ப் பாய்ந்தது.“இருக்காங்களே!’‘“நீ புதுசா அவங்க வீட்டுல வேலைக்குச் சேர்ந்திருக்கவே கூடாது. இப்படி வீணா அவமானப்பட்டு வந்து நிக்கறியேம்மா.’’தங்களுடைய நிலைமையை நினைத்து கூனிக் குறுகிப் போனாள் மிதிலா.“எல்லாம் அந்த வேணியால வந்தது. நீ பணத்தைக் கொடு... நான் போய் அவங்ககிட்டே கொடுத்துட்டு, என்னோட கம்மல்களை வாங்கியாந்துடறேன்.’‘மிதிலாவை சாந்தப்படுத்த முயன்றாள் கோகிலம்.“இல்லேம்மா... திரும்பவும் இன்னொருவாட்டி உன்னோட கால் அந்த வீட்டை மிதிக்கவேக் கூடாது. அட்ரஸை சொல்லு... நான் போறேன்... ரெண்டாயிரம் ரூபாயையும் மூஞ்சியில வீசிட்டு நறுக்குன்னு நாலு கேள்விக் கேட்டுட்டு உன்னோட கம்மல்களை வாங்கிட்டு வர்றேன்.’‘கொதிப்பாய்ச் சொன்னாள் மிதிலா.“வேணாம் மிதிலா... நீ அங்கெல்லாம் போக வேணாம்...’‘“அம்மா... அட்ரஸை சொல்லப் போறியா இல்லையா? நீ சொல்லலைன்னா வேணி அக்காகிட்டே நானே கேட்டுத் தெரிஞ்சுக்கவா?’‘மிதிலாவைத் தடுக்க முடியாது போலத் தோன்றியது.தர்ம சங்கடமாக நெளிந்தாள் கோகிலம்.“ப்ளீஸ்மா... அட்ரஸை சொல்லு...’‘கோகிலத்தின் இரு கைகளையும் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள் மிதிலா.“சொல்றேன்... ஆனா, அவங்க வீட்ல போய் பிரச்னை ஏதும் பண்ணிடாதே... பெரிய எடத்துப் பொல்லாப்பு நமக்கெதுக்கு?’‘என்றபடியே முகவரியை தெள்ளத் தெளிவாக சொன்னாள் கோகிலம்.காம்பவுண்ட் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் மிதிலா.பங்களாவின் பிரமாண்டம் அவளுடைய விழிகளை அகலமாக்கினாலும் உள்ளுக்குள் ஒருவித அருவருப்பே மண்டியது.வீடு மட்டும் பெரிசா இருந்தா போதுமா? மனசுல விசாலம் இருக்கணும்! என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் மிதிலா.நடைப்பாதையின் இருபுறமும் தொட்டிகளில் ரோஜாக்கள் குலுங்கின.காம்பவுண்ட் கேட்டிலிருந்து போர்டிகோ முகப்பு வரை சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டதைப் போல சிவப்பு வண்ணக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.கொடைக்கானலில் தன்னுடைய மனசைக் கவர்ந்த ராஜகுமாரன் இந்த பங்களாவில்தான் இருக்கிறான்’ என்பதை அறியாமல் வேகமாய் நடந்து போர்டிகோ படியேறினாள் மிதிலா.முகப்புக் கதவு தாழிடப்பட்டிருக்கவே, அழைப்பு மணியில் கைவைத்து அழுத்தினாள். விடியற்காலை நான்கு மணி சுமாருக்கு கொடைக்கானலிலிருந்து வீடு திரும்பியிருந்த விக்ரம், மேல் மாடியறையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.கைலாசம் வெளியே போய்விட்டார்.மாதர் சங்க விழா ஒன்றில் கலந்துகொள்ள கிளம்பிக் கொண்டிருந்த தாரணிதான், அழைப்பு மணி விடாது ஒலிக்கவே, கோபமாய் வந்து கதவைத் திறந்தாள்.“ஸ்டுப்பிட்... இந்த வாட்ச்மேனுக்கு லீவு கொடுத்து அனுப்பினது தப்பா போச்சு. கண்டவங்களும் உள்ளே வந்துடறாங்க. யாரும்மா நீ? என்ன வேணும்? சோப்பு, வடகம், ஊதுவத்தி இதெல்லாம் நான் வாங்கறதா இல்லை. வேற வீடு பாரு.’‘தானே முணுமுணுத்தபடி படபடப்பாய் விரட்டினாள் மிதிலாவை.வீடு வீடாய் சென்று சிறுசிறு பொருள்கள் விற்கிறவள் என நினைத்து விட்டாள் போலும்.“சோப்பும் ஊதுவத்தியும் விக்கறவங்களைத் தவிர வேற யாரும் உங்க வீட்டுக்கு வரவே மாட்டாங்களா?’‘கணீரென்று ஒலித்தது மிதிலாவின் குரல்.“வேற எதை விக்க வந்திருக்கே?’‘“நா விக்க வரலை. வாங்கிட்டுப் போக வந்திருக்கேன்!’‘நான்கு ஐந்நூறு ரூபாய் தாள்களை எண்ணி, தாரணியிடம் நீட்டினாள்.“இதுல டூ தௌசன் ரூபீஸ் இருக்கு... எங்கம்மாவோட கம்மல்களை கொண்டு வாங்க...’‘அதைக் கேட்டதும் தாரணியின் முகம் மாறியது.“ஓ... நீ அந்த வேலைக்காரியோட பொண்ணா?’‘ என்றாள்.அசைந்து அசைந்து நடந்து போய் டீபாய் மீதிருந்த காகிதப் பொட்டலத்தை எடுத்து வந்து நீட்டினாள்.“இந்தா... உங்கம்மாவோட கம்மல்’‘ என்றாள் அலட்சியமாய்.தாரணியின் ஒப்பனையும் பார்வையும் மிதலாவிற்கு எரிச்சலைத் தூண்டியது. கம்மல்கள் மடிக்கப்பட்டிருந்த காகிதப் பொட்டலத்தை அவளிடமிருந்து வெடுக்கென பிடுங்கினாள் மிதிலா.“வேலைக்காரின்னா கேவலமா? அவங்களும் மனுஷிதான்! ரத்தத்தாலும் சதையாலும் ஆன உணர்ச்சிகள் உள்ள மனுஷிதான்!ஏதோ கைத்தவறிக் கீழே போட்டுட்டாங்க. பொம்மை உடைஞ்சிடுச்சி. அதுக்காக கைநீட்டி அடிச்சிருக்கீங்க... இதோ பொம்மைக்கான ரூபாயைக் கொடுத்துட்டேன். கன்னத்துல அறைஞ்ச அறையை என்ன பண்றது? திருப்பி வாங்கிக்கறீங்களா?’‘“ஏய்...’‘முகம் சிவந்துபோய் பற்களை நறநறத்தாள் தாரணி.“தெரியும்... நான் திருப்பி அறைஞ்சா, நீங்க தாங்கமாட்டிங்க. அவமானத்துல உயிரையே விட்டுடுவீங்கன்னு தெரியும். அந்த ஈனமான காரியத்தை நான் செய்யவும் மாட்டேன்.உங்ககிட்டே இருக்கிற பணத்தை நீங்க யாருக்கும் தானமா தரவேணாம். தர்மமா அள்ளி இறைக்க வேணாம். ஆனா, மனிதாபிமானத்தோட மத்தவங்களைப் பாருங்க. அது தெரியலைன்னா கத்துக்கங்க. குட்பை!’‘எல்லாவற்றையும் தானே பேசிவிட்டு, ஐந்நூறு ரூபாய் தாள்களை தாரணியிடம் தந்துவிட்டு விருட்டென வெளியேறி விட்டாள் மிதிலா.செய்வதறியாது திகைத்து, விக்கித்துப் போய் நின்றாள் தாரணி.முகத்தில் அறைந்தது தானாக இருந்தாலும், முகத்தில் குத்தியதற்காக இருந்தாலும் சரி அதை திருப்பிக் கொடுக்கவே கூடாது.கொடுத்தால் வலிக்கவே வலிக்காது.மன்னிக்க வேண்டும்.மன்னிப்புதான் வலிக்க வைக்கும். குற்றவுணர்வில் துடிக்க வைக்கும்.அதையெல்லாம் தாரணி பொருட்படுத்தவேயில்லை.Ôஇருடி... உன்னைக் கவனிச்சுக்கறேன். மறுபடியும் என் கண்ணுல படுவே இல்லே...Õ உள்ளுக்குள் கறுவினாள்.அதே நேரம் படுக்கையை விட்டு எழுந்திருந்த விக்ரம், மெதுவாய் கீழே வந்தான்.“மம்மி... யாரோ நீங்க கோபமா திட்டின மாதிரி இருந்துச்சே?’‘“ஒண்ணுமில்லை விக்ரம்! நீ போய் குளிச்சிட்டு வா. டிபன் சாப்பிடலாம்.’‘எதையும் வெளிப்படுத்தவில்லை தாரணி. அதற்குள் மிதிலா, பங்களாவின் காம்பவுண்ட் கேட்டைத் தாண்டி வெளியே போய்விட்டாள்.விதி வேடிக்கை பார்க்க காத்திருந்தது.இந்தக் காதல் இருக்கிறதே... அடேயப்பா!அது வந்துவிட்டால் பாடாய்ப் படுத்திவிடும்.இரவும் பகலும் ஒன்றாகிவிடும்!கண்களுக்கு சூரியன் நிலவாகும்!நிலவு சூரியனாய்த் தெரியும்!எந்த வேலையும் ஓடாது!எந்தத் திசையும் புரியாது!எந்த ருசியும் பிடிக்காது!எப்பவும் மனதைக் கவர்ந்த நபரின் நினைப்பாகவே இருக்கும். உலகம் முழுக்கவே உண்மையான காதல் வயப்பட்டவரின் நிலை இதுவாகத்தான் இருக்கும்.விக்ரமும் அப்படித்தான் இருந்தான்.மிதிலாவின் நினைப்பிலேயே இருந்தான்.“எனக்கு மிதிலாவைப் பார்க்கணும் போல தோணுதுடா.’‘தன்னுடைய பரிதவிப்பை சுகனிடம் தெரிவித்தான்.“போய் பாரேன்...’‘“எங்கே போய் பார்க்கறது?’‘“மெடிக்கல் காலேஜுக்குப் போ. போரைச் சொல்லி விசாரிச்சா, மிதிலாவைப் பார்த்து பேசிடலாம்!’‘“பேசினால் மட்டும் போதாது... என்னோட மனசுல இருக்கிறதை அவகிட்ட தெரிவிச்சிடணும்.’‘“புதைச்சு வெய்க்கற புதையலால பிரயோஜனம் கிடையாது. பூட்டி வெய்க்கற காதலும் அப்படித்தான்... ஒண்ணுக்கும் உதவாம போயிடும்! நீ ஆர்வமா இருக்கே... பெஸ்ட் ஆஃப் லக் விக்ரம்! ஆனா, உன்னோட டாடியும் மம்மியும் இதை ஏத்துக்குவாங்களா?’‘ சுகன் பீதியைக் கிளப்பினான்.“மிதிலா என்னோடக் காதலை ஏத்துக்கிட்டா, டாடியையும் மம்மியையும் எப்படியாவது சம்மதிக்க வெச்சிடுவேன்!’‘தோள்களைக் குலுக்கினான் விக்ரம்.“உன்னை மாதிரி ஒருத்தனை... எந்தப் பொண்ணும் வேணாம்னு நிராகரிக்க மாட்டா! நீ மனசு விட்டுப் பேசினா மிதிலா ஓடி வந்து உன்னோட தோள்ல சாஞ்சிடுவா!’‘“அதையும்தான் பார்ப்போமே...’‘சுகன் சொன்னபடி மருத்துவக் கல்லூரியில் போய் மிதிலாவின் பெயரைச் சொல்லி விசாரித்தான்.இன்னும் சில நிமிடங்களில் மிதிலாவைப் பார்க்கப் போகிறோம்... பேசப் போகிறோம்... மனதிலுள்ளதைச் சொல்லப் போகிறோம்!’அதை நினைக்க நினைக்கவே உள்ளுக்குள் புதுவெள்ளம் பாய்ந்தது!மின்சாரம் உற்பத்தியானது!மேகமாய் மாறி, வான வீதியில் மிதப்பதைப் போல உணர்ந்தான் விக்ரம்!ஆனால், மிதிலாவை அவனால் பார்க்கவே முடியவில்லை. மிதிலாவின் சிநேகிதி ரோஸிதான் வெளியே வந்தாள்.“நீங்களா? கொடைக்கானல்லேருந்து விடாம எங்களைத் தொரத்திக்கிட்டே வர்றீங்களா? ஸாரி... மிதிலாவைப் பார்க்க முடியாது. அவ இன்னைக்கு லீவு போட்டிருக்கா. எப்பவும் கார்த்திகை அன்னைக்கு மருதமலைக்குப் போயிடுவா. நீங்க உடனே பார்த்தாகணும்னா அங்கே போங்களேன்...’‘ என்றாள்.உடனே தன்னுடைய காரை மருதமலையை நோக்கிச் செலுத்தினான் விக்ரம். 11மருதமலை...மிதிலாவின் இஷ்டதெய்வம் முருகன். மிதிலாவின் அப்பா முருக பக்தர். சிறு வயசிலிருந்தே மிதிலா தன் அப்பாவோடு மருதமலைக்கு நிறைய தடவை வந்திருக்கிறாள்.கந்த சஷ்டி கவசமும் கந்த குரு கவசமும் அவளுக்கு மனப்பாடமாய்த் தெரியும்! அந்தப் பாடல்களை பக்திப் பரவசத்தோடு பாடியபடியேதான் அப்பாவுடன் மலை மீது ஏறுவாள்.அப்பா இறந்தப் பிறகு அவளை அழைத்துவர ஆளில்லை. பிற்பாடு வளர்ந்து பெரியவளான பின்னால் தானாகவே வரத்தொடங்கிவிட்டாள். ஒவ்வொரு கார்த்திகை அன்றும் வருவாள். தவறாமல் வருவாள். அதிகாலையிலேயே வந்து விடுவாள். அல்லது சாயங்காலம் வருவாள்.அன்று கோகிலத்திற்கு உடம்பு முடியவில்லை. அவளைக் கவனித்துக் கொண்டு வீட்டிலேயே இருந்து விட்டாள். காலேஜுக்கும் விடுப்பு கொடுத்திருந்தாள். மதியத்திற்கு மேல் கிளம்பித்தான் மருதமலைக்கு வந்தாள்.மேலே ஏறிப்போய் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்தபோது, மலையடிவாரத்தில் விக்ரமின் கார் நின்றிருந்தது. அவன் காத்திருந்தது வீண் போகவில்லை. மிதிலாவைப் பார்த்து விட்டான்!“மிதிலா...’‘ஓடிப்போய் எதிரில் நின்றான்.மிதிலா திக்கென அதிர்ந்தாள். ஏற்றிவைத்த அகல் தீபங்களாக கண்கள் மினுக்கியது. இதயமே குடை ராட்டினமாய் மாறிப் போயிருந்தது.“நீ... நீங்களா...?’‘ என்றாள் பரவசமாய்.“நானேதான்!’‘“திரும்பவும் உங்களைப் பார்ப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கலைங்க!’‘“ஆனா, நான் நினைச்சேன்! உங்களைத் தேடித்தான் காலேஜுக்குப் போனேன். லீவுன்னு சொன்னாங்க. ஒருவேளை மருதமலைக்குப் போனாலும் போயிருக்கலாம்னு சொன்னாங்க. அதாங்க வந்தேன்’‘ என்றான்.கொடைக்கானலிலிருந்து கிளம்பும்போது தூண்பாறைப் பகுதிக்குப் போனது, அங்கே விக்ரமைத் தேடியது, ஏமாற்றமடைந்தது, ஒரு மரத்தில் தன்னுடைய பெயர் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு நெகிழ்ந்தது என எல்லாமே மிதிலாவின் மனத்திரையில் காட்சிகளாய் ஓடியது!அவனுடைய குறுகுறுப்பானக் கண்களை மிதிலாவால் ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை.“யாருக்காச்சும் காய்ச்சலா? நான் வந்து ட்ரீட்மெண்ட் பண்ணணுமா?’‘ என்றாள் கேலியாய்.“ஆமா... காய்ச்சல்தான்!’‘“யாருக்குங்க?’‘“எனக்குத்தான். இதயம் படக்படக்குன்னு துடிக்குது. கண்கள் தூங்கவே மாட்டேங்குது!’‘ விக்ரம் பேசிக்கொண்டே போனான்.“ஏதோ... உளறுறீங்க போல!’‘“நான் உண்மையைத்தாங்க சொல்றேன்...’‘“நீங்க எதுவும் சொல்ல வேணாம். நான் போறேன்... யாராச்சும் நம்மை சேர்த்து வெச்சுப் பார்த்தா... தப்பா பேசுவாங்க. நீங்க பணக்கார வர்க்கம். நானோ மிடில் கிளாஸ்கூட கிடையாது. ரொம்ப லோ. வேணாங்க... போயிடுங்க...’‘டவுன் பஸ் நிறுத்தப்பட்டிருந்த பகுதியை நோக்கி நடந்தாள். ‘அவனோடு பேசிக் கொண்டேயிருக்க வேண்டும்... அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும்... எப்போதும் எந்தக் கனமும் அவனுடனே இருக்க வேண்டும்!’இதயத்தின் ஆசை அலைகள் கூச்சலிட்டாலும், தன்னுடைய குடும்பச் சூழலை நினைத்து, இரும்புச் சங்கிலியால் தன்னையே கட்டிப் போட்டுக் கொண்டாள் மிதிலா.“இதெல்லாம் சரியா வராது...’‘ அவனை விட்டு விலகத்தான் நினைத்தாள். முடியவில்லை. விக்ரம் அவள் போகும் இடமெல்லாம் வந்தான். தினம் தினம் கல்லூரி வளாகத்திற்கே வந்து காத்திருந்தான். மிதிலா முகம் கொடுத்துப் பேசாமல் விலகி விலகிப்போனாலும் விக்ரம் விடவில்லை. பைத்தியக்காரனைப் போல துரத்தினான்.“ஐ லவ் யூ மிதிலா... ஐ லவ் யூ டூ மச். உனக்காக... நீ எனக்குக் கிடைக்கணும்கிறதுக்காக மலை உச்சியிலேருந்து குதிக்கச் சொன்னாலும் குதிச்சிடுவேன். அந்தளவுக்கு உம்மேல காதல்!’‘ உருகி வழிந்தான். உயிர் வரை கரைந்தான். அவளுக்குத் தெரியாமலே அவள் இதயத்திற்குள் ஒளிந்து கொண்டிருந்தான். மிதிலா அதை உணராமலில்லை. ஆனால், பயம் தடுத்தது.அம்மாவை நினைத்து பயம்... விக்ரமின் அந்தஸ்தை நினைத்து பயம்... படிப்பில் முழுமையாய் கவனம் செலுத்த முடியவில்லையே என பயம்... இத்தனை வருட கனவும் கஷ்டமும் வீணாகிவிடுமோ என பயம்...கொடைக்கானலில் தைல மரத்தின் மீது தன்னுடைய பெயர் செதுக்கப்பட்டிருந்ததைப் பார்த்தபோதே... மிதிலாவிற்கு விக்ரமின் காதல் புரிந்து விட்டது. தெரிந்து விட்டது.நினைத்து நினைத்து பூரிப்படைந்தான் முடியவில்லை. உலகத்தை ரசிப்பதற்குத்தான் கண்களைக் கொடுத்திருக்கிறான் கடவுள். அந்தக் கண்களால் விக்ரமை நான் பார்த்திருக்கவே கூடாது. உயிரைத் துடிக்கச் செய்யத்தான் இதயம் படைக்கப்பட்டிருக்கிறது. அந்த இதயத்தில் நான் விக்ரமை நினைத்திருக்கவே கூடாது.“ஏதாவது பேசுங்க மிதிலா...’‘“என்ன பேச?’‘“பிடிச்சிருக்கா? இல்லையா? நிஜத்தைச் சொல்லுங்க! என் மொகத்தைப் பார்த்து, என் கண்களைப் பார்த்து சொல்லுங்க!’‘ என்றான், நெஞ்சை நிமிர்த்தியபடி.“இதோ பாருங்க... வானத்துக்கும் பூமிக்கும் யாராலயும் பாலம் கட்ட முடியாது. நீங்க மலை உச்சி... நான் அதலபாதாளம்... ஏணி வெச்சு ஏற முடியாது. போயிடுங்க... ப்ளீஸ்... என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.’‘ஒரு கட்டத்திற்கு மேல் வேறு வழியின்றி கைகளைக் குவித்தாள்.“இப்ப போறேன். ஆனா, வருவேன். எங்க டாடி, மம்மியோட சம்மதத்தோட வர்றேன். உங்களோட தயக்கமும் பயமும் தீரணும்னா அதுமட்டும்தான் ஒரே வழி!’‘போய்விட்டான்.காதல் காரணமாக மிதிலாவால் சரியாய் சாப்பிட முடியவில்லை. ஒழுங்காய் உறங்க முடியவில்லை. எப்பவும் போல படிக்க முடியவில்லை. எந்த வேலையிலும் முழுமையாய் கவனத்தைச் செலுத்த முடியவில்லை.மகளிடம் தெரிந்த மாற்றத்தைக் கண்டுபிடித்து விட்டாள் கோகிலம்.“மிதிலா... என்னாச்சுடி உனக்கு?’‘“ஒண்ணுமில்லைம்மா.’‘“கொஞ்ச நாளாவே நீ சரியா இல்லை.’‘“எப்பவும் போலத்தான் இருக்கேன்.’‘“உன்னோட உதடுகள்தான் இதைச் சொல்லுது. ஆனா, உன்னோட கண்கள்ல பொய் தெரியுது மிதிலா. ஏதாவது பிரச்னையா? படிக்கற எடத்துல யார் கூடவாச்சும் வம்பா? நீ மத்தவங்க விஷயத்துல தலையிடவே மாட்டியேடி...’‘ பதறித் தவித்தாள் கோகிலம்.அப்பாவித் தாய்... சூதுவாது தெரியாதவள்... மிதிலாவிற்காக மட்டுமே வாழ்கிற தாய்... உழைத்து உழைத்து ஓடாகிப் போன தாய்...தாயின் முகத்தைப் பார்த்தாள் மிதிலா.கள்ளமில்லாத கண்களையும் பார்த்தாள்.பொய்ப் பேச முடியவில்லை... எல்லாவற்றையும் ஒப்பித்துவிட்டாள். பாறையாய் இறுகிப் போயிறுந்தது கோகிலாவின் முகம். பேச்சே எழவில்லை.“எம்மேல எந்தத் தப்புமில்லைம்மா. விக்ரம்தான் விடாம என்னையே சுத்திச் சுத்தி வர்றார். நான் ஏத்துக்கலைன்னா செத்துடுவேன்னு கூட சொல்றாரும்மா. வெளியே சொல்லவும் முடியாம மெள்ளவும் முடியாமத்தான் நான் உள்ளுக்குள்ளேயே இருண்டு போய் கெடக்கேன்.’‘கோகிலாவின் தோளில் சாய்ந்து அழத் தொடங்கினாள்.“நீ தப்புப் பண்ண மாட்டேன்னு எனக்குத் தெரியும். பணக்காரப் பசங்ககிட்டே இருக்கிறது வயசுக்கோளாறு மட்டுமில்லை... பணத்திமிரு! விரும்பினதை அடைய எதையும் பண்ணுவானுங்க. எத்தனைப் பொய் வேணும்னாலும் சொல்லுவாங்க...’‘ கோகிலம் பேசிக் கொண்டிருக்கும்போதே இடைமறித்தாள் மிதிலா.“ஆனா, விக்ரம் ரொம்ப நல்லவரும்மா!’‘“அப்படியா?’‘“ஆமா! எனக்காக உயிரையும் விடுவேன்னு சொல்றாரே?’‘“உயிரையெல்லாம் விட வேணாம். தன்னோட அப்பா, அம்மாவைக் கூட்டி வந்து, நம்ம வீட்டுல மொறைப்படி பேசச் சொல்லு. அதைச் செஞ்சா, நீ சொல்றபடி அவன் நல்லவன்தான். உன் மேல அவன் வச்சிருக்கிறது உண்மையான நேசம்தான்’‘ என்றாள்.அழாமல், ஆர்ப்பாட்டம் பண்ணாமல், புலம்பித் தவிக்காமல், எளிதில் அம்மாவே சம்மதித்துவிட்டாள். பெரிய கவலை பனித்துளியாய் மறைந்து விட்டது. ஓயாத பயம் ஓடியே போனது. உற்சாக தீபங்கள் மிதிலாவின் கண்களில் சுடர்விட்டு எரிந்தது.“நிஜமாவாம்மா சொல்றே? விக்ரமை அவங்க அப்பா, அம்மாவோட வந்து நம்ம வீட்ல பேசச் சொல்லவாம்மா?’‘ இன்னொரு தடவை தன்னுடைய சந்தேகதைத் தீர்த்துக் கொண்டாள்.“வந்து பேசச் சொல்லுடி.’‘அதை ஆமோதிப்பதுபோல தலையசைத்தாள் கோகிலம்.காதல்தான் இந்தச் சமுதாயத்தையே சீரழித்துக் கொண்டிருக்கிறது. இத்தனை வருஷங்கள் வரை வளர்த்து ஆளாக்குகிற பெற்றோரால் தம்முடைய பிள்ளைகளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துத்தர முடியாதா என்ன?காதலுக்காக வீட்டை விட்டு ஓடுவது, உயிரை மாய்த்துக் கொள்வதெல்லாம் இந்த வயதினருக்கே உரியது!இதைத் தடுக்க முடியாது. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். பணக்கார வர்க்கம் அவ்வளவு எளிதில் கீழே இறங்கி வந்துவிடாது.பணக்கார இளைஞர்கள் அழகான பெண்களின் பின்னால் சுற்றுவதும் ஆசை வார்த்தைக் கூறி சினிமா, பார்க், பீச் என கூட்டிச் செல்வதும் கடைசியில் கழற்றி விடுவதெல்லாம் கோகிலம் அறிந்ததுதான்.அதனால்தான் மிதிலாவிடம் அப்படியொரு கோரிக்கையை வைத்திருந்தாள்.“விக்ரம் நீங்க எனக்காக மலை உச்சியிலேருந்தெல்லாம் குதிக்க வேணாம். மொறைப்படி உங்க அம்மா, அப்பாவைக் கூட்டி வந்து என் வீட்ல பேசுங்க...’‘“ப்பூ... இவ்வளவுதானா? நாளைக்கே என்னோட டாடியையும் மம்மியையும் உங்க வீட்டுக்குக் கூட்டி வர்றேன்... போதுமா?’‘கண்கள் வழிய வழிய புன்னகைத்தான் விக்ரம்.“பத்தாது...’‘“வேறென்ன வேணும்? பறந்துப் போய் வானத்துல மிதக்கிற வின்மீன்களைப் பறிச்சு வரணுமா? அதை உன்னோட தலையில சூட்டி விடணுமா?’‘ குரலில் காதல் பொங்கி வழிந்தது.“ம்ஹூம்... அதையெல்லாம் நல்லபடியா முடிச்சப் பிறகு கேட்கறேன்...’‘வெட்கப்பட்டாள் மிதிலா. 12தலையில் இடி இறங்கியது போலிருந்தது கைலாசத்திற்கு. தாரணியோ பூகம்பம் வந்த பூமி மாதிரி ஆகியிருந்தாள்.விக்ரம் இப்படிச் செய்வான் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை. விக்ரமின் கல்யாண விஷயத்தில் நிறைய கனவுகளையும் திட்டங்களையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டிருந்த கைலாசத்திற்கு ஏமாற்றம் ஏவுகணையாய்த் தாக்கி, நிலைகுலைய வைத்துவிட்டது.கைலாசத்தின் தொழில் பார்ட்னர் சிவபூபதியும் கைலாசமும் சின்ன வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். எந்தச் சொத்து வாங்கினாலும் எந்த தொழில் தொடங்கினாலும் சேர்ந்தேதான் வாங்குவார்கள். சேர்ந்தேதான் தொடங்குவார்கள். சிவபூபதி சொன்னால் மீறமாட்டார் கைலாசம்.கைலாசத்திற்கு சிவபூபதி மீது அவ்வளவு நம்பிக்கை. அவ்வளவு பிரியம்.“நீட்டின பேப்பர்ஸ்ல எல்லாம் படிச்சுப் பார்க்காமலே சைன் பண்றியே கைலாஷ்...’‘“உன்னை நம்பாம நான் யாரை நம்பப் போறேன்? அப்படியே என்னோட சொத்துகளையெல்லாம் நீ எழுதி வாங்கிகிட்டாலும், கடைசியில் ஹேமா மூலமா என்கிட்டேதானே வந்து சேரப் போகுது!’‘ பொய்யாய்ச் சிணுங்குவார்... சிரிப்பை உதிர்ப்பார் கைலாசம்.காரணம், சிவபூபதியின் ஒரே மகள் ஹேமாவை தனக்கு மருமகளாக்கிவிட வேண்டும் என்ற நினைப்பில் மிதந்திருந்தார். தாரணிக்கும் இதில் பூரண சம்மதம்தான்!கோடியோடு கோடி... அந்தஸ்தோடு அந்தஸ்து... ஒன்று சேரும்போது கசக்குமா என்ன?ஹேமாவும் அழகான பெண்தான்! “ஆன்ட்டி... ஆன்ட்டி...’‘ என்று தாரணி மீது உயிரையே வைத்திருந்தாள்.விக்ரம் மீது ஹேமாவிற்கும் விருப்பம்தான். பார்க்கும்போதெல்லாம் ‘விக்கி’ என்றழைத்து உருகி வழிவாள்.நேரம் காலம் வரும்போது கல்யாணப் பேச்சை எடுக்கலாம் என இரண்டு தரப்பிலும் காத்திருந்த வேளையில்தான் விக்ரம் தன்னுடைய காதலை பெற்றோரிடம் தெரியப்படுத்தியிருந்தான்.“டாடி... மம்மி... ‘மிதிலா’ன்னு ஒரு பொண்ணை நான் காதலிக்கிறேன். ஆனா, அவ என்னோட காதலை ஏத்துக்கலை. ‘உங்க அப்பா, அம்மாவோடு வந்து வீட்ல பெண்ணு கேளுங்க. மொறப்படி பேசுங்க’ன்னு சொல்லிட்டா. மிதிலாவைத் தவிர வேறெந்தப் பொண்ணையும் என்னால நெனைச்சுக்கூடப் பார்க்க முடியாது. மிதிலா வீட்டுக்கு எப்பப் போகலாம்னு முடிவுப் பண்ணிடுங்க டாடி.’‘“டேய் விக்ரம்... நீ புரிஞ்சுதான் பேசறியா? உன் டாடியோட அந்தஸ்தையும் கௌரவத்தையும் கொஞ்சமாச்சும் யோசிச்சுப் பார்த்தியாடா?’‘தாரணிக்கு கடுமையான ஆத்திரம் மூண்டது. விக்ரம் மீது அதிக பாசம் வைத்திருந்ததன் காரணமாக ஆத்திரத்தை வெளிக்காட்ட முடியவில்லை.“மம்மி... மிதிலாவைப் பார்த்ததும் நான் எல்லாத்தையுமே மறந்துட்டேன்! நீங்ககூட மிதிலாவை நேர்ல பார்க்கறப்ப ரொம்ப இம்ப்ரஸ் ஆகிடுவீங்க!’‘“வேணாம் விக்ரம்... இது நல்லாயில்லை. எங்க மூஞ்சியில கரியைப் பூசி, எங்களை தலைக்குனிய வெச்சிடாதே.’‘“காதல் தப்பா டாடி?’‘“தப்புதான்! நம்ம அந்தஸ்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணை நீ காதலிக்கறதா சொல்றது தப்புதான்! இதே... கோடீஸ்வரன் வீட்ல பெண்ணை பார்த்து காதலிச்சிருந்தீன்னா... யாருடா எதிர்க்கப் போறா? சிவபூபதியைக்கூட நான் எப்படியாச்சும் சமாளிச்சிடுவேன். இப்ப ஹேமாவுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?’‘ குமுறினார்.“ஹேமாவுக்கு ஆயிரம் வரன்கள் வரிசைக்கட்டி நிக்கும். ஆனா, மிதிலாவுக்கு என்னைத் தவிர வேற யாரும் பொருத்தமா வர முடியாது டாடி. மிதிலா ஏழைதான். ஆனா, புத்திசாலி! மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் டாடி. ஃபைனல் இயர் படிக்கறா. படிப்பு முடிஞ்சு டாக்டராயிட்டா, உங்களுக்கு கௌரவம் தானாவே வந்துடப் போகுது!’‘கைலாசத்தின் மனதை கரைக்க முயன்றான்.“ஹூம்... நான் இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன்.’‘கோபமாய் கூச்சலிட்டுவிட்டு அறைக்குள்ளே போய் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள் தாரணி.“வேடிக்கைப் பார்க்காம... மம்மியை சமாதானப்படுத்தற வழியைப் பாருங்க டாடி.’‘தாரணி இருந்த அறைப் பக்கமாய் கையைக் காட்டினான் விக்ரம்.கைலாசம் பொறுமையாய் நகர்ந்தார்.அவரின் நரி மூளையோ தீவிர யோசனையில் ஆழ்ந்தது!காரை சீரான வேகத்தில் செலுத்தினான் விக்ரம்.கைலாசமும் தாரணியும் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தார்கள். முகத்தில் இறுக்கம் படர்ந்திருந்தது. காரில் ஏறி அமர்ந்ததுதான். ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.கடைசி வரைக்கும் சம்மதிக்காமல் அடம்பிடித்த தாரணியை கைலாசம்தான் இதமாய்ப் பதமாய் பேசி தலையசைக்க வைத்தார்.“இதோ பாரு... நீயும் நானும் பிடிவாதம் பிடிக்கிறதால விக்ரம் மனசு மாறப் போறதில்லை. நாம சம்மதிக்கலைன்னாலும் அவன் கேட்கப் போறதில்லை. அந்தப் பொண்ணைக் கூட்டிக்கிட்டு ஓடினாலும் ஓடிடுவான். அப்புறம் யாருக்கு அசிங்கம்? எல்லாரும் மொகத்துக்குப் பின்னால காரி துப்புவாங்க. அதனால, விட்டுப் பிடிப்போம். அந்தப் பொண்ணு யாரு? பின்னணி என்ன? எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்ட பிறகு காயை நகர்த்துவோம். முடிஞ்ச வரைக்கும் சம்மதிக்கிறதா தலையை ஆட்டிட்டு, எப்படியாச்சும் கல்யாணத்தை நிறுத்திடணும். அதுவும் நிறைவேறாமப் போனா, கொஞ்ச நாள்லயே அந்தப் பொண்ணை தொரத்தி விட்ருவோம்.’‘“முடியுமா?’‘“முடியும்! அவ டாக்டருக்குப் படிக்கறாளாம். ஆனா, நம்ம வீட்ல உனக்கும் எனக்கும் நர்ஸாதான் சேவகம் பண்ணப்போறா. ஒரு கட்டத்துல அவளுக்கே இந்த வாழ்க்கை கசந்து போய், தானாகவே போயிடுவா.’‘“நீங்க ஆயிரம் சொன்னாலும் என்னோட மனசு ஆறலைங்க. பாவிப் பயல்... நம்மை கீழே எறங்க வெச்சுட்டானே?’‘“பொலம்பாதே... பொறுமையா இரு... எல்லாம் எனக்குத் தெரியும்!’‘கைலாசம் தந்த நம்பிக்கையில்தான் தாரணி கிளம்பி வந்திருந்தாள்.அந்த மிதிலா பேரழியோ? அதனாலதான் விக்ரம் வீழ்ந்துட்டானோ? ஹேமாவைவிட அழகான ஒருத்தி இருக்காளா?’மனசுக்குள் ஒரே புகைச்சல்...“டாடி... மிதிலாவோட வீடு வந்துடுச்சு. கீழே எறங்குங்க...’‘காரை நிறுத்தினான்.கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு எதிரே ஒரு சிறிய சந்து.கைலாசமும் தாரணியும் கீழே இறங்கினார்கள்.தாரணி முகத்தைச் சுழித்தாள்.பக்கத்தில் ஓடிய சாக்கடையைப் பார்த்ததும் வயிற்றைக் குமட்டியது.அங்கிருந்த அத்தனையுமே புறாக் கூண்டு மாதிரி சின்னஞ்சிறிய வீடுகள்தான். கருங்கற்களால் கட்டப்பட்டு ஓடு வேயப்பட்ட வீடுகள்.“புள்ளைக்குச் செல்லம் கொடுத்து வளர்த்ததுக்கு எங்கே கொண்டாந்து நிறுத்திட்டான் பார்த்தீங்களா?’‘“சும்மா இரு தாரணி...’‘விம்மி வெடித்தவளை அடக்கினார்.“ரெண்டு பேரும் வாங்க எம்பின்னால!’‘ஏற்கெனவே மிதிலாவிடம் வழியைக் கேட்டிருந்தான் விக்ரம். அதனால்தான் தங்கு தடையின்றி வந்து சேர்ந்திருந்தான்.வாசலிலேயே காத்திருந்தாள் மிதிலா.தவிப்பாய் இதயம் துடித்தது.அடுக்களையில் கேசரி கிளறிக் கொண்டிருந்தாள் கோகிலம்.“நான் அந்த வீட்ல பச்சைத்தண்ணிக்கூட குடிக்க மாட்டேன்!’‘ தாரணி முணுமுணுத்தபடியேதான் விக்ரமின் பின்னால் நடந்தாள்.“ஓகே மம்மி... எதுவும் குடிக்க வேணாம். Ôஉங்கப் பொண்ணை எங்க வீட்டு மருமகளா மனப்பூர்வமா ஏத்துக்கறேன்’னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லிடுங்க. அது போதும்!’‘மூவரும் மிதிலாவின் வீட்டை நெருங்கியிருந்தார்கள்.ஏமாத்திடுவாரோ? வராம இருந்திடுவாங்களோ? நம்பிக்கையே இல்லை அவளுக்கு. இப்போது விக்ரமைப் பார்த்ததும் முகம் மலர்ந்தாள்!“வாங்க விக்ரம்...’‘ஓடிப்போய் விக்ரமின் கையைப் பற்றியவள், தாரணியைப் பார்த்து திக்கென விலகினாள். தேள் கொட்டியது போல துடித்துப்போனாள்.ஐயோ இவங்களா? விக்ரம் இவங்க வீட்டுப் பையனா?முகத்தில் வியர்வை மழை!அம்மாவால இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாதே!கைலாசத்தைப் பார்த்து கைகளைக் குவித்தாள். தாரணி பக்கம் திரும்பவேயில்லை. 13 முடிந்திருந்தது.பெண் பார்க்கும் படலம்! எந்தப் பிரச்னையுமில்லாமல் முடிந்திருந்தது. மிதிலா பயந்தது போல எதுவுமே நடக்கவில்லை. தாரணி எதையுமே காட்டிக்கொள்ளவில்லை. மிதிலாவையும் கோகிலத்தையும் பார்த்த கணம் இதயம் சுக்குநூறாய் வெடித்துவிடும் போலிருந்தது. ஆவேசம் பீறிட்டது.இவ பொண்ணையா விக்ரம் காதலிச்சிருக்கான்? போயும்போயும் என் வீட்டுல வேலை செஞ்ச வேலைக்காரியோட பெண்ணையா உருகி உருகி நேசிச்சிருக்கான்?’எதையும் காட்டிக்கொள்ளவில்லை. ரொம்பவே சிரமப்பட்டுத்தான் கோபத்தை அடக்கினாள்.ஏற்கெனவே எனக்குள்ளே இருக்கிற பிரச்னை விக்ரமுக்கு தெரியக் கூடாது.’‘தாரணி தன்னைத் திடப்படுத்திக் கொண்டாள்.மிதிலாவை ஒரே ஒரு தடவைதான் பார்த்தாள். பரவிய அதிர்ச்சியோடு, பிறகு அவள் பக்கம் ஏறிட்டுப் பார்க்கவேயில்லை.நான் திருப்பி அறைஞ்சா நீங்க தாங்க மாட்டிங்க. அந்த அவமானத்துலயே உயிரை விட்டுடுவீங்கன்னு தெரியும். அப்படி ஒரு ஈனமானக் காரியத்தை நான் செய்யவே மாட்டேன்!Õ மிதிலாவின் குரல் உள்ளுக்குள் ஒலித்து ஒலித்து எரிச்சலைக் கிளப்பியது.வீட்டுப் படியேறி, கையை நீட்டிப்பேசினாளே... இவளா என் மருமகள்? நடக்கவே கூடாது!’‘பற்களை நறநறத்தாள்.“மம்மி... பொண்ணைப் பிடிச்சிருக்கா?’‘ என்றான், தாரணியின் முகம் பார்த்து...“மகாலட்சுமி மாதிரி இருக்கா!’‘ கசப்பாய்ச் சிரித்தாள் தாரிணி.“டாடி... உங்களுக்கு?’‘கைலாசத்தையும் கேட்டான்.“மம்மியோட விருப்பம்தான் என் விருப்பம்.’‘“தேங்க் யூ டாடி!’‘ உற்சாகமாய் குதித்தான்.மிதிலா கொண்டு வந்த காபிக் குவளைகளை வாங்கி உறிஞ்சவேயில்லை. கைலாசமும் தாரணியும் அப்படியே கீழே வைத்து விட்டார்கள்.“மம்மி... உங்க முடிவை சொல்லிடுங்க... ப்ளீஸ்...’‘ என்றான் பவ்யமாய்.“உங்க பொண்ணை... எங்க வீட்டு மருமகளாக்கிக்க பரிபூரண சம்மதம்!’‘கோகிலத்தைப் பார்த்துச் சொன்னாள் தாரணி.கோகிலத்திற்கு இதெல்லாம் கனவோ எனத் தோன்றியது! தாரணியைப் பார்த்ததுமே மிரண்டுதான் போயிருந்தாள். கூச்சலிடப் போகிறாளோ?’ என நடுநடுங்கிதான் போயிருந்தாள். ஆனால், எதுவுமே நடக்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை, மறந்துவிட்டாளோ? தன்னை அடையாளம் தெரியவில்லையா?’ ஒன்றும் புரியவில்லை. கோகிலம் அங்கே வேலைக்குப் போனது ஒரு வாரம்கூட முழுதாய் இல்லை. தாரணியைத் தவிரவேறு யாரையும் அவள் பார்த்ததுமில்லை. மற்றவருக்கு நம்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், தாரணிக்கு நன்றாகத் தெரியுமே... ஏன் காட்டிக்கொள்ளவில்லை. குழப்பமாகவே இருக்கிறதே. எது நடக்கக் கூடாதோ... அதெல்லாம் நடக்கிறதே!“அப்ப... நாங்க கிளம்பறோம்... இனியாச்சும் மிதிலாவை என்கூட தைரியமா பழகச் சொல்லுங்க...’‘ கோகிலத்திற்கு அருகாமையில் வந்து சொன்னான் விக்ரம்.“எல்லாமே மிதிலாவோட படிப்பு முடிஞ்சப் பிறகுதான் தம்பி...’‘இரு கைகளையும் குவித்தாள் கோகிலம்.வாசல் வரைக்கும் வந்து கையை அசைத்தாள் மிதிலா.ருத்ரதாண்டவம் ஆடினாள் தாரணி.கையில் அகப்பட்ட பொருள்களையெல்லாம் போட்டு உடைத்தாள்.விக்ரம் வீட்டில் இல்லை. எங்கோ வெளியில் போயிருந்தான். பத்ரகாளிகையாகவே மாறிவிட்டாள்!“நம்ம வீட்ல வேலை செஞ்ச வேலைக்காரிங்க அவ. டால்பின் பொம்மையை போட்டு உடைச்சு, எங்கிட்டே அறை வாங்கினவ. அவ எனக்கு சம்பந்தியா? ச்சே!’‘நடந்த அத்தனையையும் சொன்னாள்.“டாக்டருக்குப் படிக்கறாளா? ரொம்பவே திமிருங்க அந்தப் பொண்ணுக்கு! வீட்டுப் படியேறி பணத்தை வீசி எறிஞ்சுட்டு, என்னமா பேசினா தெரியுமா? என்னையே திருப்பி அடிச்சிடுவேன்னு சொன்னா!’‘நாடி நரம்பெல்லாம் துடித்தது.“தாரணி... கூல் டவுன்! நீ எதையும் காட்டிக்காம இருந்ததுகூட நல்லதுக்குத்தான்! வெயிட் அன் ஸீ...’‘கைலாசம் அவளை சமாதானப்படுத்துவதற்குள் திண்டாடிப் போனார்.“விக்ரம் மட்டும் அவ கழுத்துல தாலியைக் கட்டினான்னா நான் செத்துடுவேன்.’‘“கட்டினாத்தானே? விக்ரமே அவளை வேணாம்னு சொல்றாப்லசெஞ்சிடலாம்!’‘இருவரும் தீவிரமாய் யோசித்தார்கள்.மூளையைக் கசக்கிப் பிழிந்ததில், தந்திரமான அந்த யோசனை உதயமாகியிருந்தது!விக்ரமின் வருகைக்காகக் காத்திருந்தார்கள்...“விக்ரம்... உனக்காக... உம்மேல நாங்க வச்சிருக்கற கண் மூடித்தனமானப் பாசத்துக்காகத்தான் எங்க அந்தஸ்து, கௌரவம் எல்லாத்தையும் விட்டு எறங்கி வந்திருக்கோம். இப்பவாச்சும் எங்களோட அன்பு உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நம்பறோம். அதே போல நீயும் எங்களுக்காக ஒரு காரியம் பண்ணணும். முடியுமா விக்ரம்?’‘சிலந்தி வலையைப் பின்னுவது போல பின்னினார் கைலாசம்!“முடியும் டாடி... உங்களுக்காகவும் மம்மிக்காகவும் நான் எதையும் செய்வேன்!’‘ உறுதியோடு படபடத்தான்.“நீ செய்திடுவேன்னு தெரியும் விக்ரம்! ஆனா, மிதிலா செய்வாளா?’‘ என்றபடியே புருவங்களை உயர்த்தினாள் தாரணி.“மிதிலா செய்யணுமா?’‘“அவமேல இருக்கற காதலுக்காக நம்ம தகுதிக்கு சம்பந்தமே இல்லாதவளை நீ கல்யாணம் பண்ணிக்கப்போறே... உம்மேல இருக்கற காதலுக்காக மிதிலா இதைக்கூட செய்யமாட்டாளா விக்ரம்?’‘“மிதிலா என்ன செய்யணும்?’‘ஆர்வமாய்ப் பார்த்தான்.கைலாசமும் தாரணியும் அந்த விஷயத்தைச் சொன்னார்கள்.மிதிலா மட்டுமல்ல எந்தப் பொண்ணும் அதைச் செய்யமாட்டாள்.அதற்காகத்தான் அப்படி ஒரு நிபந்தனையை விதித்தார்கள்.“மிதிலா தன்னுடைய தாயை தலை முழுகிடணும்... படிப்பையும் நிறுத்திடணும். உனக்காக இதை அவ செய்வாளா? மிதிலா தரப்பிலேருந்து கல்யாணத்துக்கு யாருமே வரக்கூடாது. சொந்தக்கார அனாதைப் பொண்ணு. விக்ரமுக்குப் பிடிச்சிருக்கறதால மருமகளா ஏத்துக்கிட்டு வாழ்க்கைக் கொடுக்கறோம்’னு சொல்லி, கல்யாணத்தை விமரிசையா நடத்தி முடிச்சிடுவோம்! சரியா விக்ரம்?’‘விக்ரம், மௌனமாய் அதை ஆமோதித்தான்.பிளேட்டில் வைக்கப்பட்டிருந்த அரிசி உப்புமாவும் இஞ்சித் துவையலும் அப்படியே இருந்தது. மிதிலா அதை விரலால்கூடத் தொடவில்லை. எங்கோ வெறிக்கப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அழுது அழுது கண்ணீரே வற்றிப் போயிருந்தது. விக்ரம் சொன்ன வார்த்தையும் நிபந்தனையும் காதில், காய்ச்சிய ஈயத்தை ஊற்றியதுபோலத் துடிக்க வைத்திருந்தது.“பெரிய மனசு பண்ணி எங்க டாடியும் மம்மியும் நம்ம காதலை ஏத்துக்கிட்டதே பெரிய விஷயம். அவங்களோட இந்தக் கோரிக்கையை நீ ஏத்துக்கத்தான் வேணும்.’‘துகள்த் துகளாய் நொறுங்கிப் போயிருந்தது அவளின் இதயம்.இதற்காகத்தானா? வீடு தேடி பெண் பார்க்க வந்தது? இதற்காகத்தானா அம்மாவையும் என்னையும் தெரிந்தது போலக் காட்டிக்கொள்ளாதது? இனிக்க இனிக்கப் பேசியதும்... மனப்பூர்வமாக ஏத்துக் கொண்டதாக சொன்னதும்... இப்படியொரு நயவஞ்சக நாடகமாடத்தானா?“அவங்க சொன்னதாகவே இருக்கட்டும்... நீங்க அதை எப்படி ஏத்துக்கிட்டிங்க? என்கிட்ட வந்து எப்படித் தைரியமா சொல்ல முடியுது?’‘“காதல்... உம்மேல இருக்கற காதல்! என்னை புரிஞ்சிப்பேன்னு நம்பிக்கை. எனக்காக நீ இதை செய்வே... மிதிலா! மனசுக்குப் புடிச்சவனோட கோடீஸ்வர வாழ்க்கை கிடைக்கப் போகுது! அரண்மனை மாதிரி வீட்ல ராணியாட்டம் வாழப்போறே! மத்ததெல்லாம் உனக்கெதுக்கு?’‘முதல் தடவையாய்ப் பார்த்த விக்ரமிற்கும் இப்போது பார்க்கிற விக்ரமிற்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது. கங்கை சொம்பில் அடைத்தால் மட்டும் கடலின் உப்புத்தன்மை போய்விடுமா என்ன?பணக்கார வர்க்கம். திமிரான ரத்தம். அந்தக் குணம் மாறிப் போகுமா என்ன?நானா இவனைக் காதலித்தேன்? நானா இவனைச் சுற்றி சுற்றி வந்தேன்? நானா இவனிடம் காதலுக்காக மன்றாடினேன்?அமைதியாகக் கிடந்த குளத்தினுள் கல்லை வீசியெறிந்து, வளையங்களை ஏற்படுத்துவதைப் போல... இதயத்திற்குள் காதலை வீசி சலனப்படுத்தியவன் இவன்தானே?காதலைச் சொன்னபோதே என்னுடைய அந்தஸ்தை ஆராய்ந்திருக்க வேண்டியதுதானே? என்னுடைய வசதி வாய்ப்பைப் பற்றி விசாரித்திருக்க வேண்டியதுதானே?“படிப்புகூட இரண்டாம் பட்சம்தான். ஆனா, என்னை பெத்து வளர்த்து ஆளாக்கி, இன்னைக்கு மெடிக்கல் காலேஜ் வரைக்கும் கொண்டு வந்து சேர்த்திருக்கிற அம்மாவை தலை முழுக முடியுமா? அந்த உறவை அறுத்தெறிய முடியுமா? இது நியாயமா? இது அடுக்குமா? இது சரின்னு உங்களுக்கே படுதா?’‘ படபடத்தாள்.“சரின்னு பட்டதாலதானே உன்கிட்டே இதைப்பத்தி பேச வந்திருக்கேன். தெரிஞ்சோ தெரியாமலோ உன்மேல ஆசைப்பட்டுட்டேன்... காதலிச்சுட்டேன். நீ வைரம் மிதிலா! உன்னை ஆசையா அள்ளிக்க வர்றப்பதான் தெரியுது நீ குப்பையில கிடக்கற வைரம்னு! வைரத்துக்காக குப்பையிலயே நானும் புரள முடியாதே! அதான் உன்னை அங்கேருந்து அப்புறப்படுத்தி கோபுரத்துல வச்சு அழகு பார்க்க ஆசைப்படுறேன்! இது தப்பா மிதிலா?’‘தலையை சாய்த்துப் பார்த்தான்.இதுதான் விக்ரம்... இதுதான் விக்ரமின் இதயம்... இதுதான் விக்ரமின் குணம்... உண்மையான சுயரூபம்!“எங்க வீட்டில அச்சடிக்கப் போற இன்விடேஷன் கார்டு... எம்பேருக்குப் பக்கத்துல Ôமிதிலா’ன்னு இருக்கணுமா? இல்லே... எங்க டாடியோட பார்ட்னரோட பொண்ணு பேரு வரணுமான்னு நீ சொல்ற பதில்லதான் இருக்கு. நல்லா யோசிச்சு முடிவெடு மிதிலா.’‘கறாராய்ச் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.கத்தியைக் குறிபார்த்து உயிருக்குள் வீசி விட்டுப் போய்விட்டான். வீட்டிற்கு வந்தப் பிறகு எந்த வேலையும் ஓடவில்லை. எதுவும் பிடிக்கவில்லை. மரத்துப் போயிருந்தாள்.“மிதிலா சாப்பிடுடி...’‘“முடியலைம்மா...’‘மிதிலா அழத் தொடங்கினாள். வெடித்துக் கதறி... கோகிலத்தின் மடியில் படுத்து தேம்பியபடியே விக்ரமின் நிபந்தனையைத் தெரிவித்தாள்.கோகிலம் உறைந்து போனாள்.“நெனைச்சேன்... அப்பவே நெனைச்சேன். அந்த அம்மா அமைதியா இருந்தப்பவே எனக்கு சந்தேகம்தான். எதிர்ப்பை நேரிடையா காட்டாம... வேற விதமா சூழ்ச்சிப் பண்றாங்க. இப்படி நடக்கலைன்னாதான் நாம ஆச்சரியப்படணும்.’‘ மிதிலாவின் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.“அம்மா...’‘“நீ விக்ரமுக்கு என்ன பதில் சொன்னே?’‘“எதுவும் சொல்லலைம்மா...’‘“நாளைக்கே விக்ரமைப் பார்த்து ‘சரி’ன்னு சொல்லிடுடி...’‘தீர்க்கமாய் ஒலித்தது கோகிலத்தின் குரல்.“அம்மா...’‘அலறினாள் மிதிலா.“நான் வயசானவ... வாழ்ந்து முடிச்சவ... இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கப்போறேன்? உனக்கும் அந்த பையனைப் பிடிச்சிருக்குதானே? அவன் மேல உனக்கு இஷ்டம்தானே? அவனை உன்னால மறக்க முடியாதுதானே? அதனாலதான் சொல்றேன்... என் உலகமே நீதான்... உனக்கு கெடைக்கப் போற சந்தோஷமான வாழ்க்கைக்கு நான் தடையா இருக்க விரும்பலை... எங்காச்சும் கண்கணாத ஊருக்குப் போயிடறேன்டி.’‘மனதைக் கல்லாக்கியபடி பேசினாள் கோகிலம்.“அம்மா... என்ன வார்த்தை பேசறே? நான் ஒரு கணம்கூட உன்னைப் பிரிஞ்சி இருந்தது கிடையாது. ஒரேயடியா உன்னை தலைமுழுகச் சொல்றியா? அதுக்கு நான் செத்துப் போயிடலாம்!’‘“நீ வாழணும் மிதிலா.’‘“வாழத்தான் போறேன்... நேர்க்கோட்டுல சின்ன வளைவு வந்தது போல காதலால லேசா தடுமாறிட்டேன். காதல் என் கண்ணை மறைச்சுட்டு... நல்லவேளை தப்பிச்சுட்டேன். குருடியாகாம தப்பிச்சுட்டேன்! இன்னொரு தடவை என்னை தலைமுழுகிடுடின்னு சொல்லாதேம்மா... என்னால தாங்க முடியலை.’‘கோகிலத்தின் வாயை தன்னுடைய இரு கரங்களாலும் பொத்தினாள்.“உன்னோட அழுகையை என்னால சகிக்க முடியலையே மிதிலா.’‘“நான் அழமாட்டேன்மா!’‘ கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.காதல் இடையில் வருவது... இதயத்தில் எழும் சூறாவளி... கண்களில் படரும் பூஞ்சை... நினைவுகளைக் கொத்தும் மரங்கொத்தி... நிம்மதியைக் குலைக்கும் வைரஸ் வியாதி... யோசிக்காமல் விழுந்தால் வீழ வேண்டியதுதான்! மிதிலாவும் விழுந்தாள்... ஆனால், அதே வேகத்திலேயே வீறிட்டு எழுந்திருந்தாள்!!“விக்ரம்... நாம பிரிஞ்சிடலாம்...’‘“மிதிலா... இதுதான் உன் பதிலா?’‘“இறுதியான முடிவு!’‘“என்னோட கண்களைப் பார்த்துச் சொல்ல முடியுமா உன்னால?’‘தூண்டிலாய்ச் சுழன்றது விக்ரமின் கண்கள்.குறுகுறுப்பான கண்கள்... காதலை தெரிவித்த கண்கள்... மயங்க வைத்த கண்கள்... இதயத்தைத் தொலைக்கவைத்த கண்கள்... உறங்கவிடாமல் பண்ணிய கண்கள்... புலம்ப வைத்த கண்கள்... மதியை மறக்கவைத்த கண்கள்!“சொல்றேன்... நாம பிரிஞ்சிடலாம் விக்ரம்!’‘ நன்றாக நிமிர்ந்து பார்த்து சொன்னாள் மிதிலா.“என்னை மறந்துட முடியுமா உன்னால?’‘தோள்களைக் குலுக்கினான்.“முடியும்!’‘“மிதிலா... இப்பவும் ஒண்ணும் மோசமில்லை... நாம ஓடிப் போயிடலாம்... எல்லாத்தையும் உதறிட்டு எங்காச்சும் ஓடிப்போயிடலாம்... இந்த ஊர், உங்கம்மா, படிப்புன்னு எதுவுமே வேணாம்... வந்துடு என் கூட!’‘மிதிலாவின் கையைப் பிடித்தபடி சிறுபிள்ளையாக பிதற்றினான்.“எங்கம்மாவுக்கு அடுத்ததா... நான் நேசிக்கிறது என்னோட் படிப்பைத்தான்! யாருக்காகவும் அதை நான் பாழாக்கிக்க விரும்பலை. இன்னும் மூணு மாசத்துல ஃபைனல் இயர் முடிஞ்சிடும். இந்தச் சூழ்நிலையில உங்களுக்காக அதை உதறி எறிஞ்சிட்டு உங்ககூட ஓடி வர எனக்கென்ன பைத்தியமா? ஓடிப்போனாலும் உங்க வீட்ல விட்டுடுவாங்களா? ஓடிப்போன எடத்துலயும் நீங்க வேற வேற நிபந்தனைகளைப் போட மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்?’‘விக்ரம் முகம் சிறுத்துப் போனான். மிதிலா இந்தளவிற்கு பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை!“மிதிலா...’‘“எனக்கொரு ஆசை விக்ரம்... இனி சாகற வரைக்கும் நீங்க என்னோட கண்ணுல படவே கூடாது. போயிடுங்க... ப்ளீஸ்... இங்கேருந்து போயிடுங்க... உங்க பேருக்குப் பக்கத்துல இன்விடேஷன்ல இருக்க வேண்டியது உங்க அப்பாவோட பார்ட்னர் பொண்ணு பேருதான்! பெஸ்ட் ஆஃப் லக்! குட் பை!’‘சவுக்கால் அடித்தது போல விளாசிவிட்டு விறுவிறுவென்று கல்லூரிக்குள் ஓடிப்போனாள் மிதிலா.விக்ரமின் முகம் பாறையாய் இறுகிப்போயிருந்தது.“ச்சே... ஒண்ணுமில்லாதவளுக்கு இவளோ திமிரா?’‘ திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.இருவரும் கடைசியாக சந்தித்தது அன்றுதான்! 14நினைவுகளிலிருந்து கலைந்திருந்தாள் மிதிலா.‘சாகற வரைக்கும் கண்ணிலயே விக்ரம் படக்கூடாது’ என நினைத்திருந்தவளுக்கு, அவனை இப்படியொரு சூழலில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு பார்ப்போம் என அவள் கனவிலும் நினைக்கவில்லை.‘என்ன ஆயிற்று? என்ன நடந்திருக்கும்?’ அவளையும் மீறி வினாக்கள் எழுந்தன. ஆனால், அதற்கான பதிலை கண்டுபிடிக்கவோ, ஆராய்ந்து தெரிந்துகொள்ளவோ அவள் விரும்பவில்லை.உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்கிறான்!வினையை விதைத்தவன் வினையை அறுக்கிறான்!நமக்கென்ன வந்தது?விக்ரமைப் பற்றி யோசித்து ஒரு வினாடிகூட விரயமாக்கக் கூடாது என உறுதியாக இருந்தாள் மிதிலா.ஆணி வைத்து அடிக்கப்பட்டிருந்தாலும் தினசரி காலண்டரின் காகிதங்கள் கிழிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். நாட்கள் நகர்வதையும் காலம் கரைவதையும் யாராலும் தடுக்க முடியாது!இந்த 45 நாட்களில் விக்ரம் முழமையாய் குணமாகியிருந்தான். ஸ்டிக் இல்லாமல் அவனால் நன்றாக நடக்க முடிந்தது. யாருடைய உதவியுமின்றி தானாகவே தன்னுடைய வேலயைச் செய்து கொண்டான். தாயின் கருவறைக்குள் இருக்கும் குழந்தையைவிட பாதுகாப்பாக விக்ரமை அந்த மருத்துவமனை ஊழியர்கள் பார்ததுக் கொண்டார்கள்.வேளா வேலைக்கு சாப்பாடு, மருந்து, மாத்திரை, தாகமெடுக்கும் போதெல்லாம் பழச்சாறு எனக் கொடுத்து... புத்துணர்ச்சியூட்டிக் கொண்டிருந்தார்கள். உடம்பில் புதுரத்தம் ஊறியிருந்தது. முகத்தில் சதைப்பிடித்திருந்தது. பழையபடி களையும் பொலிவும் வந்திருந்தது.மிதிலாவின் அன்புக் கட்டளைக்கு இணங்கி, விக்ரமை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டவள் சிஸ்டர் ஜாஸ்மின்தான்.“சிஸ்டர்... என்கிட்டே ஒத்த ரூபாகூட கிடையாது! ஒன்றரை மாசமா இங்கே ஓசி மருந்து, மாத்திரை, சாப்பாடுன்னு சுகமா வாழ்ந்துக்கிட்டிருக்கேன். என்னைய எப்ப டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்க?’‘“இன்னும் டென் டேஸ்ல சார்.’‘“சிஸ்டர் எனக்கொரு டவுட்.... எனக்காக இவ்வளவு செலவையும் பண்ணது யாரு?’‘சிஸ்டர் ஜாஸ்மின் பதிலே சொல்ல மாட்டாள். மௌனமாய் சிரித்துக்கொள்வாள்.காசில்லாம ஹோட்டல்ல சாப்பிட்டா, வெளியே போக முடியாது. கைவலிக்க மாவு ஆட்டியாகணும். உங்க ஹாஸ்பிடல்ல எனக்கு என்ன வேலைத் தரப் போறீங்கன்னு தெரியலையே?Õதானாகவே பேசிக்கொள்வான்.எதையுமே கண்டுகொள்ள மாட்டாள் சிஸ்டர் ஜாஸ்மின். தினமும் காலை, மாலையில் மருத்துவமனைக்கு முன்பிருக்கும் புல் வெளியில்தான் நடைப் பழகுவான் விக்ரம். சிஸ்டர் ஜாஸ்மினும் கூடவே இருப்பாள். அந்தத் தருணங்களில் மட்டும் மிதிலா மருத்துவமனையிலிருந்து வெளியே வரவேமாட்டாள். விக்ரம் நடைப்பயிற்சி முடித்து மீண்டும் தன்னுடைய அறைக்குள் போய்விட்டான் என்பதை உறுதி செய்தப் பிறகுதான் வெளியே தலையைக் காட்டுவாள் மிதிலா. ஓரிரு நாட்கள் என்றால் சமாளித்து விடலாம்... ஒன்றரை மாதங்கள் வரை... ஒவ்வொரு நாளும்... விக்ரம் கண்களில் படக்கூடாது என்பதற்காக... தான் மறைந்து மறைந்து நடமாடுவதை எண்ணி வேதனைப்பட்டாள் மிதிலா.நான் என்னமோ தப்புப் பண்ணியதைப் போல எதுக்காக ஒளிந்து ஒளிந்து செல்ல வேண்டும்? முதலில் விக்ரமை டிஸ்ஜார்ஜ் பண்ணி வெளியேற்றிவிட வேண்டும்!’ என்று நினைத்தாள்.விக்ரமிற்கு யாருமில்லை...விக்ரமைத் தேடி யாரும் வரவில்லை. நடக்க முடியாமல் கிடப்பவனை யாரோடு அனுப்ப முடியும்?தலைவலி, காய்ச்சல் என்றால் உடனே குணப்படுத்தி அனுப்பிவிடலாம்.இது அப்படியில்லை.விபத்தில் முறிந்த காலில் ஆபரேஷன் பண்ணப்பட்டிருக்கிறது.திரும்பவும் பழையபடி கால்களை ஊன்றி நடக்கும் வரை இங்கேதான் இருந்தாக வேண்டும்.வேறு வழியில்லை. விக்ரமிற்காகத்தான் இப்படியொறு சலுகை! மருத்துவமனையின் முழுப்பொறுப்பும் அவளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால் யாரும் கேள்வி கேட்கவும் இல்லை.அதுவரையில் சந்தோஷம்!இப்போது விக்ரம் குணமாகி விட்டான். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கரமாய் வெளியே அனுப்பிவிட வேண்டும்.ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியேறி, தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள் மிதிலா. ஏ.சி.யின் குளிரை அதிகப்படுத்தி, இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினாள்.செல்போன் சிணுங்கியது.அமெரிக்காவிலிருந்து ஜெயகோபிநாத்துதான் அழைத்தார்.திடுக்கிட்டு கண்களைத் திறந்து, செல்போனை கையில் எடுத்து, பச்சைப் பொத்தானை அழுத்தி, காதில் வைத்தாள்.“குட் மார்னிங் சார்!’‘ கனிவாய் உச்சரித்தாள்.“ஹவ் ஆர் யூ மிதிலா?’‘ அன்பொழுக கேட்டார்.“ஃபைன் சார்! நீங்க எப்படி இருக்கீங்க?’‘“நலமா இருக்கேன்! ஹாஸ்பிடல் வேலை எப்படிம்மா போகுது? பெரிய சுமையையே உன் தலையில எறக்கிட்டு வந்திட்டேன். பிரஷர் அதிகமாயிடுச்சாம்மா?’‘ ஜெயகோபிநாத்தின் குரலில் அக்கறை வழிந்தது.“ஹூம்... வேலை நார்மலாத்தான் சார் போகுது. எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை! ஹாஸ்பிடல்ல நீங்க இல்லையேங்கறதுதான் குறை. எப்படா சிக்ஸ் மன்த் ஓடும்னு தோணுது சார்.’‘மிதிலா சகஜமாய்ப் பேசினாள்.“டோண்ட் ஒர்ரி மிதிலா! நான் விரைவில் இந்தியாவுக்குத் திரும்பிடப் போறேன்!!’‘“தேங்க் யூ வெரி மச் சார். அந்த நாளைத்தான் நான் எதிர்பார்த்து காத்திருக்கேன்.’இதழ்கள் விரியப் புன்னகைத்தாள்.“அப்புறம் மிதிலா... உன்கிட்டே வேறொரு முக்கியமான விஷயம் பேசணுமே?’‘ சற்றே தயங்கினார்.“பேசுங்க சார்...’‘ ஆர்வமாய்க் கேட்டாள்.“அதை மொறைப்படி மொதல்ல உன்னோட அம்மாகிட்டேதான் பேசணும். இருந்தாலும், உன்னோட விருப்பத்தைத் தெரிஞ்சிக்கிறது முக்கியமில்லையா? அதான்மா...’‘“சார்... எனக்கு ஒண்ணுமே புரியலை... என் அம்மாகிட்டே பேசறதுக்கு என்ன விஷயம் சார் இருக்கு?’‘ குழம்பிப் போனாள்.ஜெயகோபிநாத் என்ன சொல்ல வருகிறார் என அவளுக்கு விளங்கவில்லை.“உன்னோட கல்யாண விஷயம்தான் மிதிலா.’‘“சார்...’‘வெடுக்கென நிமிர்ந்தாள்.“யூ ஆர் வெரி லக்கி பர்சன் மிதிலா. முப்பது ப்ளஸ் வரை... கல்யாணமே வேணாம்னு அடம் பிடிச்சிட்டிருந்த என் ஸன் கிரிதரன், உன்னைப் பத்தி நான் சொன்னதையெல்லாம் கேட்டு பிரமிச்சுப் போயிட்டான்! இந்த சின்ன வயசுல இவ்வளவு திறமையா, பொறுமையா, பக்குவமா நடந்துக்கிற உன்னோட குணத்தைப் பத்தி வியந்து பேசினான்மா! உன்னோட போட்டோவைக் காட்டினேன்... திடுதிப்புன்னு அந்த வார்த்தையை சொல்லிட்டான்மா, ஐ லைக் மிதிலா... ஐ லவ் மிதிலா... ஐ வான்ட் பி... மேரி ஹெர்ன்னு கிரிதரன் சொன்னதை என்னால நம்பவே முடியலை! என் மனைவிக்கோ தலைகால் புரியலை. ஏன்னா, அவளுக்குத்தான் உன்னை நல்லா தெரியுமேம்மா!’‘ஜெயகோபிநாத் சிலாகித்துப் பேசினார். மிதிலாவால் பதிலே பேச முடியவில்லை.இதயம் படபடவெனத் துடித்தது.“சார்...’‘“நீ என்னம்மா சொல்றே?’‘“சார்... அது வந்து...’‘ மிதிலாவால் பேச முடியவில்லை.மிதிலாவிற்கு நிறைய வரன்கள் வந்துகொண்டிருப்பதும் மிதிலா அவற்றையெல்லாம் நிராகரித்துக் கொண்டேயிருப்பதும் ஜெயகோபிநாத் அறிந்ததுதான். காரணத்தை அவர் கேட்டதில்லை. அவரே கூட இரண்டு வரன்களை அவளுக்காகக் கொண்டு வந்திருக்கிறார்.கல்யாணத்துல எனக்கு விருப்பமில்லை சார். ஹாஸ்பிடலையும் பேஷண்டுகளையும் தவிர என்னோட மனசுல வேறெந்த சிந்தனையும் கிடையாது!Õ முகத்திற்கு நேரே பளிச்சென்று மிதிலா சொன்னதை அவர் இன்னும் மறக்கவில்லைதான்.மகன் விருப்பப்படுகிறான்.கேட்காமல் இருக்க முடியுமா? சொல்லாமல் மறைக்க முடியுமா?“மிதிலா ஒன்னும் அர்ஜெண்ட் இல்லை. நீ பொறுமையா உன்னோட பதிலைச் சொல்லலாம். உன்னை நான் கட்டாயப்படுத்த மாட்டேன். நீ சம்மதிச்சா ரொம்பவே சந்தோஷப்படுவேன். சம்மதிக்கலைன்னாலும் வருத்தப்பட மாட்டேன். நீ தொடர்ந்து எங்க ஹாஸ்பிடல்லேயே வொர்க் பண்ணலாம். நான் கிரிதரனுக்கு வேறொரு பொண்ணைப் பார்த்துக்குவேன். ஓகே?’‘“ஓகே சார்...’‘நாகரிகமாய் பேசி, தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்திவிட்டு, மறுமுனையில் தொடர்பைத் துண்டித்திருந்தார் ஜெயகோபிநாத்.“கல்யாணமா? எனக்கா?’‘மிதிலாவின் இதயம் இன்னும் வேகவேகமாய்த் துடித்தது.கெட்டி மேளச் சத்தம் காதினுள் ஒலிப்பதைப் போல பிரமை தட்டியது.நான் கண்ணை மூடறதுக்குள்ளே உன்னை மணக்கோலத்துல பார்த்துடணும்டி! என்று சொன்ன அம்மா கோகிலம், கண்களுக்குள் வந்து போனாள். 15பூக்களையெல்லாம் பறித்தான்...மருத்துவமனை வளாகத்திலிருந்த பூச்செடிகளிலிருந்து பல வண்ணப் பூக்களையும் பார்த்துப் பார்த்துப் பறித்தான் விக்ரம்!பூக்களைக் கொத்தாக சேர்த்து, ஒரு செடியின் நீளமானக் கொடியினால் சுற்றி, இடையிடையே பச்சை இலைகளையும் செருகி, அழகான பொக்கே ஒன்றை தயார் பண்ணியிருந்தான்!“சார்... உங்களுக்கு இன்னைக்கு டிஸ்சார்ஜ்! நீங்க எந்த பணமும் கட்ட வேண்டியதில்லை. எல்லாமே ஃப்ரீதான். ஹாஸ்பிடலோட சேர்ந்து, தொண்டு நிறுவனம் ஒண்ணு உங்களோட ட்ரீட்மெண்ட் செலவை ஏத்துக்கிட்டதாலதான் நீங்க உயிர் பொழைச்சு எழுந்து நடமாடறீங்க! உங்களுக்குன்னு யாருமில்லைங்கறதால இந்தச் சலுகை! பெஸ்ட் ஆஃப் லக் சார்... நீங்க போகலாம்!’‘அவன் சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகளையும் மருந்து, மாத்திரை கவரையும் எடுத்து வந்துக் கொண்டிருந்தாள் சிஸ்டர் ஜாஸ்மின்.அவன் தன்னிடம் எந்தக் கேள்வியும் கேட்காத அளவிற்கு மிதிலா சொன்னபடியே சொல்லியிருந்தாள்.விக்ரம் போகவில்லை.சந்தோஷமும் படவில்லை.ஏறக்குறைய ஒன்றரை மாதத்திற்கு மேல் இங்கேயே இருந்து விட்டோம்.இனி எங்கே போவது?யார் இருக்கிறார்கள் எனக்கு?யாரைத் தேடிப் போவது நான்? உயிர் பிழைத்ததும் எழுந்து நடமாடுவதும் எதற்காக?எந்தச் சாதனையை நிகழ்த்தப் போகிறேன்?சுயநலமாக வாழ்ந்து, திமிராக வளர்ந்து, பிடிவாதமாக நடந்து, கடைசியில் அனாதையாகத்தானே நிற்கிறேன்?ஹாஸ்பிடலை விட்டு வெவளியேறும் முன்பு... இந்த ஹாஸ்பிடலின் சீஃப் டாக்டருக்கு ஒரு நன்றியை மட்டுமாவது சொல்லிவிடலாம்!அதைச் சொல்லாமல் போனால் நான் மனுஷனே கிடையாது!ஒரு ரூபாய்கூட இல்லாத எனக்கு எந்தப் பிரதிபலனும் பார்க்காமல் இவ்வளவு பெரிய உதவியை செய்திருக்கும் சீஃப் டாக்டருக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்!அந்த நன்றியை வித்தியாசமாய்ச் சொல்ல வேண்டும்.அதற்குத்தான் இந்தப் பூங்கொத்து!“சார்... நீங்க போகலையா?’‘புல்வெளிக்கே அவனைத் தேடிக் கொண்டு வந்திருந்தாள் சிஸ்டர் ஜாஸ்மின்.“போறதுக்கு முன்னாடி நான் உங்க ஹாஸ்பிடலோட சீஃப் டாக்டரை பார்க்கணும். தேங்க்ஸ் சொல்லணும்...’‘அவன் தன்னுடைய கைகளால் பண்ணியிருந்த பூங்கொத்தை உயர்த்திக் காட்டினான்.“ஸாரி... சீஃப் டாக்டர் இப்ப அமெரிக்காவுல இருக்காரு.’‘“அதனாலென்ன? அவருக்குப் பதிலா பொறுப்புல இருக்கறவங்ககிட்ட நான் என்னோட தேங்க்ஸை சொல்லிடறேன்...’‘விறுவிறுவென மருத்துவமனைக்குள் நடந்தான்.“வேணாம் சார்... அவங்க இதையெல்லாம் விரும்ப மாட்டாங்க...’‘பின்னாடியே ஓடி வந்தாள் ஜாஸ்மின்.“சிஸ்டர்... எதுக்காக என்னை தடுக்கறீங்க? உங்களுக்கு இதுல என்ன கஷ்டம்?’‘“இல்ல சார்... அது வந்து...’‘“ப்ளீஸ்... என்னைத் தடுக்காதீங்க...’‘ பழையபடி நடக்க முடியவில்லை... தள்ளாடித் தள்ளாடிதான் நடந்தான்.மிதிலா இருக்கும் ‘சீஃப் டாக்டர் அறை’ முதல் தளத்தின் கோடியில் இருந்தது.அறையை நெருங்கினான்.உள்ளே இருப்பது மிதிலாதான் என அறியாமல்!“மே ஐ கம் இன் சார்...’‘கேட்டபடியே கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான்.சுழல் நாற்காலியில் டாக்டர் கோட்டுடன் அமர்ந்திருந்த மிதிலா, திக்கென நிமிர்ந்தாள். மிதிலாவை விக்ரம் பார்த்ததம்... ஒரு கணம் திகைத்துத் தடுமாறி, அதிர்ந்து நம்ப முடியாமல் விழிகளை அகலமாய் விரித்து, “மிதிலா... நீயா?’‘உற்சாகமாய்க் கூவினான்.மிதிலா பதிலே பேசவில்லை.“நீயும் இந்த ஹாஸ்பிடல்லதான் இருக்கியா மிதிலா? சீஃப் டாக்டர் அமெரிக்காவுல இருக்கறதா சொன்னாங்களே... அப்போ அவருக்கு அடுத்த எடத்துல பொறுப்பு வகிக்கிறது நீதானா? எனக்காக இவ்ளோ செலவையும் செய்யறது யாரு? யாரு?’ன்னு சிஸ்டர்கிட்ட கேட்டப்பல்லாம் பதிலே சொல்லலை... எல்லாம் உன்னாலதானா? அப்போ தெரிஞ்சேதான் என்னைக் காப்பாத்தினியா? நடமாட வெச்சியா?’‘கலங்கிய கண்களுடன், தழுதழுத்தான்.மிதிலாவோ சலனமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.“விதி விளையாடினா... ஒரே நாள்ல பிச்சைக்காரன் கோடீஸ்வரனாவும் கோடீஸ்வரன் குப்பை மேட்டுக்கும் போயிடுவான்னு சொல்லுவாங்க. உண்மைதான் மிதிலா. என்னோட வாழ்க்கையிலயும் அப்படித்தான் நடந்துடுச்சு. என் டாடி, மம்மியோட சூழ்ச்சியைப் புரிஞ்சுக்காம, உன்னோட மனசைக் காயப்படுத்தி, எடுத்தெறிஞ்சுப் பேசி விலகிப் போனேன். ஆனா, எல்லாமே தலைகீழா முடிஞ்சிடுச்சு. எங்க டாடியோட பிஸினஸ் பார்ட்னர் சிவபூபதியோட டாட்டர் ஹேமாவுக்கும் எனக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணி, ஊர் முழுக்க இன்விடேஷனும் கொடுத்தாச்சு. பெங்களூருவுக்கு ரிலேட்டிவ் வீட்டுக்கு இன்விடேஷன் வெய்க்கப் போன டாடியும் மம்மியும் எதிர்பாராத விதமா கார் ஆக்ஸிடெண்ட்ல சிக்கி, உயிரை விட்டுட்டாங்க. கோடி கோடியா சம்பாதிக்கத் தெரிஞ்ச டாடி, உயிரோட இல்லைன்னதுமே... சிவபூபதி அங்கிள் மனசு மாறிட்டார். மேரேஜை நிறுத்தி, எல்லா சொத்துகளையும் தன்னோட பேருக்கு மாத்திட்டு, என்னைய நடு ரோட்ல நிறுத்திட்டார். ஹேமாவுக்கு என்னைவிட பலமடங்கு கோடீஸ்வரனோட மேரேஜ் ஆகிடுச்சு. சிவபூபதி அங்கிள் மேல வெச்சிருந்த நம்பிக்கையில நீட்டின செக்ல பத்திரத்துல எங்க டாடி போட்டுக் கொடுத்திருந்த கையெழுத்து என்னைய தெருத் தெருவா அலைய வெச்சிடுச்சு மிதிலா.’‘ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்.மிதிலா உச்’ கொட்டுவாள், கலங்கிய தன்னுடைய கண்களை ஓடி வந்து துடைத்து விடுவாள். Ôஎல்லாம் போனா என்ன... அதான் நானிருக்கேனே?’ என்று காதலோடு விம்முவாள் என எதிர்பார்த்தான் விக்ரம்.ஆனால், எதுவுமே நிகழவில்லை!சுயநலவாதிகள், பேராசைக்காரர்கள், அந்தஸ்து, கௌரவம் என அலைபவர்கள், வறட்டுப் பிடிவாதம் கொண்டவர்கள் எல்லாம் ரொம்ப காலத்திற்கு நிம்மதியாய் வாழ்ந்துவிட முடியாது.இது உலக நியதி!காலம் காலமாய் கண்ணால் பார்க்கும் நீதி!!“மிதிலா... ஏதாவது பேசு மிதிலா... எம்மேல கோவமா மிதிலா? எப்பவும் உன்னை நான் மறக்கல மிதிலா. எனக்காக உன்னைத் தவிர வேற யாராலயும் உருக முடியாது மிதிலா! உன்னை நான் தேடிகிட்டுதான் இருந்தேன். படிப்பு முடிஞ்சு நீ வேலை கெடைச்சு வேற ஊருக்குப் போயிட்டதா சொன்னாங்க. ஆனா, நான் எவ்ளோ கெஞ்சியும் உன்னோட சிநேகிதிகள், நீ இருக்கற இடத்தைப் பத்தி எனக்குத் தெரியப்படுத்த மறுத்திட்டாங்க. ஆனாலும், கடைசியில, நான் இருக்கற ஊருக்கே நீ வந்துட்டே பார்த்தியா?’‘தோள்களைக் குலுக்கியபடியே கையிலிருந்த பூங்கொத்தை நீட்டினான்.கொடைக்கானலில் சந்தித்தபோது ஊதா வண்ணப் பூக்களைக் கொத்தாய்ப் பறித்து நீட்டிய கணங்கள், ஒரு சில வினாடிகள் மிதிலாவின் கண்களுக்குள் வந்துபோனது!“ஸாரி... இதெல்லாம் எனக்கெதுக்கு? அந்த டஸ்ட் பின்ல போடுங்க...’‘அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த பெங்குவின் வடிவ குப்பைத்தொட்டியைக் காட்டினாள்.“மிதிலா... என்னை மன்னிக்க மாட்டியா மிதிலா? திரும்ப ஏத்துக்க மாட்டியா மிதிலா?’‘கெஞ்சலாய்க் கேட்டான்.மிதிலா, மேஜை மீதிருந்த செல்போனை எடுத்தாள்.அமெரிக்காவிலிருக்கும் ஜெயகோபிநாத்தின் எண்களை அழுத்தி, அவர் மறுமுனையில் தொடர்பில் கிடைத்ததும், உரத்தக் குரலில் விக்ரமுக்கும் கேட்கும் விதமாய் சொன்னாள்...“சார்... நான் மிதிலா பேசறேன்...’‘“சொல்லும்மா... எனி சர்ப்ரைஸ் நியூஸ்?’‘மறுமுனையில் ஆர்வமாய்க் கேட்டார் ஜெயகோபிநாத்.“ரெண்டு நாளைக்கு முன்னாடி என்னோட கல்யாணத்தைப் பத்தி ஒரு விஷயம் சொன்னீங்க... இல்லையா?’‘என்றபடியே விக்ரமைப் பார்த்தாள்.விக்ரமும் தவிப்பாய் மிதிலாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.“ஆமா... சொன்னேன்! என்னோட ஸன் கிரிதரனைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு சம்மதமான்னு கேட்டேன்...’‘“எனக்கு உங்க மகன் கிரிதரனைக் கல்யாணம் பண்ணிக்க பரிபூரண சம்மதம் சார். நான் அவசரமா கால் பண்ணினதே அதைச் சொல்லத்தான் சார்...’‘“மிதிலா... ரியலி? ஐ ஆம் வெரி ஹேப்பி!’‘ குப்பென மலர்ந்தார்.“நானும் அதே நிலையில்தான் சார் இருக்கேன்.’‘“உங்கம்மாகிட்டே சம்மதம் வாங்கிட்டியாம்மா?’‘“அவங்க எப்பவுமே என்னோட விருப்பத்துக்கு குறுக்கே வர மாட்டாங்க சார். நீங்க இந்தியாவுக்கு வந்ததும் நேர்ல வந்து அம்மாகிட்டே பேசுங்க சார்.’‘“ஷ்யூரா?’‘ என்றவர், சற்றே தயங்கி, “மிதிலா... மே ஐ கால் யூ... ஒன் கொஸ்டின்?’‘“கேளுங்க சார்...’‘“என் ஸன் கிரிதரனை நீ பார்த்ததில்லை. சிவப்பா? கறுப்பா? உயரமா? குள்ளமான்னுகூட தெரியாது. அவனோட குரலைக் கேட்டதில்லை. அப்புறம் எப்படிம்மா உன்னால சம்மதிக்க முடிஞ்சது?’‘அதைக் கேட்டு மிதிலா ஓசைப்படாமல் சிரித்தாள்.“உங்களோட மகன்கிறதை விட வேறென்ன தகுதி சார் வேணும்? நீங்க ஒரு ஜென்டில் மேன். பணம், அந்தஸ்தைப் பார்க்காத கண்ணியமான மனுஷன். பேராசைகள் இல்லாத உத்தமர். திறமைசாலி! உங்க மகனும் உங்களை மாதிரியே இருப்பார்னு நம்பறேன் சார். அழகோ நிறமோ உயரமோ அந்தஸ்தோ முக்கியமில்லை... குணம்தான் சார் முக்கியம்! உங்க குணத்துல ஐம்பது சதவிகிதம் இருந்தாக்கூட நான் லக்கிதான் சார்.’‘சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தாள். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த விக்ரமின் முகத்தில் இறுக்கம் படர்ந்திருந்தது.கண்களில் இருள்... தளர்வாய் எழுந்தான்.“மிதிலா... என்னை எதுக்குக் காப்பாத்தின?’‘ என்றான், குரலில் அழுகையும் ஏமாற்றமுமாய்.“தெருவுல ஒரு நாய்க்குட்டி அடிபட்டு அனாதையா கிடந்தாக்கூட என்னால முடிஞ்ச ட்ரீட்மெண்ட்டை கொடுத்து காப்பாத்துவேன். ஏன்னா, அது என்னோட கடமை!ஏற்கெனவே ரெண்டு மூணு அனாதை ஆட்களை இப்படிக் காப்பாத்தி, எழுந்து நடமாட வெச்சிருக்கேன். எல்லாமே என்னோட செலவுதான். அதை மாசா மாசம் என்னோட சம்பளத்திலேருந்து பிடித்தம் செஞ்சுக்குவாங்க. இந்த மாசத்துலேருந்து கொஞ்சம் கூடுதலா பிடித்தம் செய்வாங்க. தட்ஸ் ஆல்! நீங்களா ஏதாவது கற்பனை பண்ணிகிட்டா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? என்னைப் பொருத்தவரை நீங்க எப்பவோ செத்தாச்சு!’‘“மிதிலா...’‘“ப்ளீஸ்... என்னை டிஸ்டர்ப் பண்ணாம வெளில போறீங்களா... இன்னும் அரை மணி நேரத்துல நானொரு சர்ஜரியை அட்டெண்ட் பண்ணற வேலை இருக்கு. நான் இப்ப ரிலாக்ஸா இருக்கணும்... அப்பதான் நல்லவிதமா சர்ஜரியை செய்து முடிக்க முடியும்!’‘ என்றாள்.அதற்கு மேல் விக்ரம் எதுவும் பேசவில்லை. கையிலிருந்த பூங்கொத்தை அவள் காட்டிய குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, தலையைத் தொங்கப் போட்டபடி வெளியே நடந்தான்.ஏமாற்றியவர்களை மன்னிக்கலாம்... அது மனித இயல்பு.ஆனால், அவர்களை ஒரு போதும் திரும்ப ஏற்றுக்கொள்ளவே கூடாது.அப்பாதுதான் விக்ரம் போன்றவர்கள் திருந்துவார்கள்!(முற்றும்)- இந்திரா நந்தன்