சென்ற இதழ் தொடர்ச்சி... பார்த்தசாரதி: மொழிப்பற்று எனக்கு உடன்பாடு. மொழிவெறி உடன்பாடு இல்லை. தாய்மொழியின் மீது பற்று இருப்பதைவிட, வேறு மொழி மீது வெறுப்பு இருப்பது தாய்மொழிப் பற்றாகாது..அரங்கண்ணல்: அதற்குக்கூட அரசியல்தான் காரணம். அரசியல் சுமை வந்துவிடுமோ என்ற பயத்தினால் ஆங்கிலத்தின்மீது வெறுப்பு ஏற்பட்டது. அது உள்ளபடியே ஆங்கிலத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பு அல்ல. நாங்கள் 25 ஆண்டுகளாக இந்தி கூடாது என்று சொல்லிவருகிறோம். இந்தி நம் தலையில் சுமத்தப்படக்கூடாது என்பதற்காகச் சொல்லிவருகிறோம். அதேநேரத்தில் ரேடியோவில் லதா மங்கேஷ்கர் பாடினால் ரசிக்கிறோம். இந்தி கூடாது என்பதால் இந்தி இசையை ரசிக்காமல் இருக்க முடியாது. ‘லைலா மஜ்னு’ படம் வந்தபோது அந்த மொழி தெரிந்த ஒருவரை அழைத்துச் சென்று மொழிபெயர்த்துச் சொல்லும்படி கேட்டு ரசித்திருக்கிறேன். ‘மிருச்ச கடிகம்’ என்று ஒரு நூலிருக்கிறதே..?பா: ஆமாம், பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அதனைத் தமிழில் செய்திருக்கிறார்.அ: இசைக்கு அந்த மொழியை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், ஒரு பையன் தானாகப் படித்து தெரிந்து கொள்வதற்கும், படிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அரசியல்ரீதியாகச் சுமத்தப்படுவதை எதிர்த்து வந்திருக்கிறோம்.. பா: நான் சொல்வது இந்திதமிழ் பிரச்னை அல்ல. எதையும் திணிக்கக்கூடாது என்பது என் கருத்து. அதிலிருந்து வேறுபடவில்லை. நான் சொல்லுவது வடசொல். ஆங்கிலச் சொல் கலந்து எழுதக்கூடியவர்கள் பற்றித்தான். அந்த மாதிரித் தன்மை எங்களிடம் இல்லை என்று கழக முனையைச் சேர்ந்த பலர் மேடையில் கூறுகிறார்கள். கழக எழுத்தாளர்களோ மக்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காகக் கொச்சைச் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் அதிகம் கலந்து எழுதுகிறார்கள். ஆனால், நானோ ஜெயகாந்தனோ அவ்வளவு வேற்றுமொழிச் சொற்களைக் கையாள்வதில்லை..அ: உங்கள் எழுத்தில் உள்ள ஆழ்ந்த அமைதியை அவருடைய எழுத்துகளில் நான் காண முடியவில்லை. அவரது எழுத்தைவிட, அவரது கதாபாத்திரங்கள்தான் எனக்குப் பிடிக்கும். ஆனால், கதாபாத்திரங்களைக் கொண்டு செல்கிற முறையை ஒப்புக்கொள்ள முடியாது. இது ஒரு பிரச்னையாகிவிடக்கூடாது. இது என் விமர்சனம் அவ்வளவுதான். அருவிக்கும் காட்டாற் றுக்கும் வித்தியாசம் உண்டு.பா: ஜெயகாந்தனிடம் எனக்கு ஈடுபாடு உண்டு. எனக்குக் காட்டாறு பிடிக்கும். உங்களுக்கு அருவி பிடிக்கலாம். சரி, இன்றைய தனித் தமிழ் உணர்வு நாளைக்கு வருகிற தலைமுறைக்குப் பயன்படுமென்று நினைக்கிறீர்களா?அ: நான் மாணவனாக இருந்தபொழுது பரபரப்புடன் படித்த எழுத்துகள், உணர்வுகள் இவற்றை இப்போது தேடித்தான் பெறவேண்டியிருக்கிறது. அதற்குக் காரணம் தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்குப் போதிய ஆதரவைத் தேடிக் கொடுக்க முடியவில்லையோ என்னவோ? கேரளத்தில் சராசரி ஆண்டுக்கு 1,000 புத்தகங்கள் வெளியாகின்றன. தமிழ்நாட்டில் சுமார் 500தான் வெளியாகின்றன. தகழியின் நாவல் அங்கே 2 லட்சம் பிரதிகள் வெளியிடப்பட்டிருக்கும்பொழுது இங்கே தமிழ் நூல்கள் மட்டும் ஏன் அப்படிச் செய்யப்படுவதில்லை?.பா: இங்கே ஒவ்வொரு குடும்பமும் பத்திரிகைகளை வாங்க ரூ.20, 25 என்று மாதா மாதம் ஒதுக்குகிறது. ஆனால் புத்தகம் வாங்குவதற்கென்று எதுவும் ஒதுக்குவ தில்லை.அ: நான் மாணவனாக இருந்தபோது கையில் 2 ரூபாய் இருந்தால் புத்தகம்தான் வாங்குவேன். ஆனால், இன்றுள்ள மாணவனுக்குக் கையில் 2 ரூபாய் இருந்தால் சினிமா பார்த்துவிடலாம் என்ற ஆசை வந்துவிடுகிறது. நான் படித்த காலத்தில் கல்கியின் நாவல் தியாகபூமி வரும்பொழுது, எப்பொழுது வரும் என்று காத்துக் கொண்டிருப்போம். தி.ஜ.ர., கு.ப.ரா, வ.ரா, கல்கியின் நூல்கள், புதுமைப் பித்தனின் சிறுகதைகள் ஆகியவற்றைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அப்போது அந்த அளவுக்கு ரீடர்ஸ் இருந்தார்கள்.பா: இப்பொழுதும் ரீடர்ஸ் இருக்கிறார்கள். ‘பையர்ஸ்’தான் இல்லை. தமிழ் நாட்டில் ஒரு பதிப்பு என்பது வெறும் 1,200 பிரதிகள்தான். புதுமைப்பித்தன் போன்றவர்கள் பெயர்களை எல்லாம் நீங்கள் கூறக் கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெரும்பாலான அரசியல் ஆட்களுக்கு இப்பெயர்கள் எல்லாம் தெரியாது.அ: நான் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு நண்பர்களோடு பேசிக்கொண் டிருந்தேன். எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் தொடர்பாகப் பெரிதாகச் செய்யவேண்டும் என்று விரும்பினால் என்னுடைய ஆதரவைத் தருகிறேன். பத்து நாட்களுக்கு முன் மலிவு விலையில் ஆங்கில பாக்கெட் புத்தகம் பார்த்தேன். இரண்டரை ரூபாய் மூன்று ரூபாய் விலைக்கு நன்கு விற்கின்றன. அவர்களுக்குக் கடிதம் எழுதி அந்த நூல்களை வாங்கி எழுத்தாளர்களிடம் கொடுத்து தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலாம். மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை கா.ஸ்ரீ.ஸ்ரீக்குத் தமிழ்நாட்டில் நல்ல மரியாதை இருக்கிறது..பா:. தமிழ்நாட்டிலும் தமிழ் வழங்கும் பிற நாடுகளிலும் காண்டேகரைப் பெரிய எழுத்தாளராகக் கருதக் காரணம் கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் அருமையான தமிழ்மொழி பெயர்ப்புத்தான். இங்கு 60க்கு மேற்பட்ட புத்தகங்களைக் கூட்டுறவு மூலம் போட்டிருக்கிறோம். 200க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கூட்டுறவு சொஸைட்டியில் இருக்கிறார்கள். அகிலன், கி.வா.ஜ. நான், போன்றோர் அதன் டைரக்டர்கள். பல எழுத்தாளர்கள் பங்கு மூலதனம் போட்டிருக்கிறார்கள். ஆனால், இங்கு தனிப்பட்ட சில பதிப்பாளர்கள் விற்பனைக்கு அதிகமான கமிஷன் தருகிறார்கள். கூட்டுறவு சொஸைட்டி ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கமிஷன் கொடுக்கமுடியாது. ஆகவே, அந்தக் குறைந்த கமிஷனில் வியாபாரம் போட்டி போட முடிவதில்லை. கூட்டுறவு சொஸைடி நூல்களை வாங்கவேண்டும் என்று சர்க்காரும் பரிந்துரை செய்வதில்லை.அ: அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். உங்களுக்கு அதில் உள்ள குறைகள் என்ன? அவற்றை நீக்க என்ன செய்யலாம் என்பது பற்றி சொல்லுங்கள். என்ன செய்யலாம் என்று யோசிப்போம்.பா: நூல் நிலையங்களில் பெரும்பாலும் ஊழியர் சம்பளத்திற்கும், நாற்காலி மேஜைகளுக்குமே பணம் செலவிடப்படுகிறது. அதிகம் புத்தகம் வாங்கப்படுவதே இல்லை..அ: அப்படியிருக்கிறது என்றால் அது விசாரிக்கப்பட்டுக் களையப்படவேண்டிய பெரிய குறை. நூலகங்களைப் பொறுத்தமட்டில் எனக்கு அதிகத் தொடர்பு இல்லை. நொச்சி நகரில் கட்டப்பட்ட வீடுகள் திறக்கப்பட்டபோது ஒவ்வொரு குடிசைப் பகுதியிலும் நூலகம் திறக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்திருக் கிறேன். சென்னை நூலகத் தலைவர் சார்பில் ம.பொ.சி. அங்கு நூலகத்தைத் திறந்து வைத்திருக்கிறார். இரண்டாயிரம் புத்தகங்களைக் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள். குடிசையில் இருப்பவர்கள் சாயங்காலம் 6 மணிக்கு மேல் எப்படி இருப்பார்கள் என்பது தெரியும். ஆனால், அவர்களுக்கு நல்ல வீடுகள் கொடுத்தபின் அங்குள்ள நூலகர் மாலை 4 மணியிலிருந்து இரவு 11 மணி வரை இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இரவு பத்தரை மணிக்கும் அந்த நூலகத்தில் மக்கள் உட்கார்ந்து படிப்பதைக் கண்டால் ஆனந்தமாக இருக்கிறது. கூட்டுறவுச் சங்கம் என்ன என்ன செய்கிறது என்பதை அறியலாமா?.பா: எழுத்தாளர்கள் புத்தகங்கள் வெளியிட சங்கம் மூலம் கடன் கொடுக்கிறோம். வெளியிட்ட புத்தகம் விற்பனையாக ஆகக் கொடுத்த கடனை எடுத்துக்கொள்கிறோம். சில புத்தகங்கள் வேகமாக விற்றுப் பணம் கொடுக்கப்பட்டு விட்டது. சில அவ்வளவு வேகமாக விற்கவில்லை.அ: கோவி. மணிசேகரன் இங்கு என்னிடம் வந்திருந்தபோது வீடற்ற எழுத்தாளர்களுக்கு வீடுகள் கொடுக்கவேண்டும் என்று சொன்னார். இப்பொழுது ஜர்னலிஸ்டுகளுக்குத்தான் கொடுக்கப்படுகிறது. படைப்பிலக்கிய ஆசிரியர்களுக்கும் தரப்பட வேண்டும் என்று கூறினார். அதுபற்றி யோசித்து வருகிறேன்.பா: வீடுகளை எப்படிக் கொடுக்கிறீர்கள்? கட்சி சார்பாகவா?அ: எழுத்தாளர்கள் என்றால் முதலில் எழுத்தாளர்கள் எல்லோரையும் ஒன்றாகப் பாவிக்கவேண்டும். அப்படித்தான் பார்க்கிறேன். எந்தக் கட்சியாக இருந்தாலும் எழுத்தாளர்களுக்கு வீடு இல்லை என்று சொல்ல மாட்டார்கள். தி.ஜ.ர.வுக்கு இவ்வளவு நாள் வீடு இல்லை. அவருக்கு பீட்டர்ஸ் ரோடில் ஒரு வீடு கொடுக்கப்பட்டிருப்பதாக எனக்கு நினைவு.பா: என் மனத்தில் உள்ளதைச் சொல்கிறேன். உங்கள் கழகத்தைச் சேர்ந்த பெரியவர்கள், அமைச்சர்கள் சிலர் பிறந்தநாள் மலர் என்று போடுகிறார்கள். இந்த மலரில் ஒவ்வொரு நூல் நிலையமும் பல பிரதிகள் வாங்கவேண்டும் என்று தாக்கீது வருகிறதாம்.அ: உத்தரவே போடுகிறார்களா?பா: உத்தரவோ, சிபாரிசோ? பிறந்தநாள் மலர்களை வாங்கச் சொல்கிறார்களாம்.அ: நான் சட்டமன்ற உறுப்பினர். எந்த எந்த நூலகங்களில் அந்த மாதிரி வாங்கப்பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள்.பா: பட்டியலே தரலாம்.- தொடரும்படங்கள்: ஞானம்