- இந்திரா சௌந்தர்ராஜன்அன்று சித்ரா பௌர்ணமி!உலகின் பிரபஞ்ச சக்தி மிக இலகுவாகக் கிடைக்கிற ஒருநாள். பூமிக்கும் நிலவுக்குமான இடைவெளி மிகக் குறைவாக இருப்பதோடு 27 நட்சத்திரங்களும் தங்கள் ஒளிக்கற்றைகளை முழுமையாக பூமிமேல் பரவவிடுவது இந்த நாளில்தான்....இந்த நாளில்தான் மதுரை நகரமே தோன்றியது! இந்திரலோகத்தில் குருவாகிய பிரகஸ்பதியை இந்திரன் அலட்சியப்படுத்தியதால் சாபத்திற்குள்ளாகிறான். அதனால் இந்திரப்பதவியை இழந்து, மேனி கருத்து ரோகியாய் மாறிப்போகிறான். பின் தன் தவறுக்கு வருந்தி குருவின் காலில் விழுந்து மன்னிப்பும் கோருகிறான்.குருவோ உனக்கான சாபநிவர்த்தியை பூலோகத்தில் கோயில்கொண்டிருக்கும் அந்த ஈசனின் ஓர் ஆலயத்தாலேயே தர இயலும் என்கிறார். அதன் நிமித்தம் விண்ணில் இருந்து மண்ணுக்கு வரும் இந்திரன் கடம்பமரங்கள் மிகுந்த வனப்பகுதி ஒன்றில் ஒரு கடம்பமரத்தின் கீழ் சுயம்புலிங்கம் ஒன்றைக் காண்கிறான். அருகிலேயே ஒரு குளம்- அதில் பொன் தாமரைகள் மலர்ந்திருந்தன. அதைப் பறித்து அந்த சுயம்புலிங்கத்துக்கு அர்ப்பணம் செய்து வழிபட்டான். அந்த நொடியே அவன் ரோகம் நீங்கி பழைய எழில் நிறைந்த உருவத்தைப் பெற்றான். குருவால் உண்டான சாபமும் நிவர்த்தியானது.தனக்கு சாபவிமோசனமளித்த அந்த சுயம்புலிங்கத்துக்குக் கோயில் எழுப்பினான். கோயிலின் நாற்திசை தூண்களாய் தனது ஐராவத யானைகளையே நிறுத்தினான். பின்னர் விமர்சையாக கும்பாபிஷேகம் நிகழ்த்திட பிரகஸ்பதியாகிய குருவிடமே நாள்குறிக்கச் சொன்னான். அவர் அப்படிக் குறித்துக் கொடுத்த நாள்தான் சித்ரா பௌர்ணமி! அன்று சிவபெருமானும் விண்ணில் தோன்றி தன் சடையிலிருக்கும் மதுரமாகிய அமுதத்தைக் கையில் எடுத்து, கோயில்மீதும் கோயில்கொண்ட நிலத்தின்மீதும் தெளித்தார். அந்த நொடியே மதுரமாகிய அமுதம் பட்டதால் மதுரை என்கிற பெயருக்கு அது உரியதானது. மதுரம்பட்ட பூமி என்பதால் ஆய கலைகள் 64ம் செழித்து வளர்ந்தது. இயல் இசை நாடகம் என எல்லாமே உச்சம் தொட்டன. தமிழ்ச் சங்கமும் அமைந்தது. அந்த இறைவனும் பல திருவிளையாடல்களை இம்மண்ணில் நிகழ்த்தி இதை அருள் நகரம் என்றாக்கினான்..அதன்பின் ஒவ்வொரு சித்ரா பௌர்ணமியின்போதும் இந்திரன் இந்த ஆலயத்திற்கு வந்து பூஜிப்பதாய் ஒரு நம்பிக்கை... பௌர்ணமிக்கு மறுநாள் சந்நதிக் கதவைத் திறந்துபார்க்கையில் இந்திரன் பூஜித்த மலர்களும் திரவியங்களும் இரைந்து கிடைக்கும்.இந்த நாளில் வேண்டுவோர்க்கு வேண்டுவன யாவும் கிடைக்கும்.அங்காயியும் காளிமாதாவின் திருஉருவம் முன்னால் 108 அகல் தீபங்களின் ஒளியில் அன்றைய பூஜைகள் குறைவின்றி நடந்திடவேண்டி பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். ஆயிரக்கணக்கில் ஜனங்கள் நடமாடி ஒரே திமிலோகமாய் இருக்கவேண்டிய ஆலயம் அன்று ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடந்தது.புறத்தில் கிழக்கு கோபுர வாயிலில் காவல்வீரர்கள் குறுக்கு நெடுக்காய் நடந்துகொண்டு கோயிலில் தரிசிக்க முனைந்த பக்தர்களைத் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தனர்.ஆடிவீதியிலும் வெறிச்சோட்டம்!திருச்சந்நதிக்குள் இருந்த பரமேஸ்வரபட்டர் தன் உதவியாளன் சுப்புண்ணியை சந்நதியில் நிறுத்திவிட்டு அர்த்தமண்டபம் கடந்து வெள்ளியம்பல நடராஜமூர்த்தியை தரிசித்தபடியே வெளியில் வந்து, கம்பத்தடி மண்டபத்தையும் சுற்றிவந்து காளிமாதா முன் விளக்கேற்றிவிட்டு அமர்ந்திருக்கும் அங்காயிமுன் வந்து நின்றார். அவளும் ஏறிட்டாள்.“அங்கா... உன் கணவனிடம் விபரமாய் எல்லாவற்றையும் கூறிவிட்டாய்தானே?’’“சொல்லிட்டேன் சாமி...’’“முதல்கால பூஜை முடிந்துவிட்டது... உச்சிக்காலத்துக்கு இன்னமும் மூன்று மணி நேரமாகலாம். அதோ பிரசவப்பேச்சி சந்நதி தூண்மீது சூரிய வெளிச்சம் பட்டபடி இருக்கிறது பார். அந்த வெளிச்சம் முன்னால் உள்ள அநுமனின் கம்பத்தூண் மீது படும் நேரம்தான் உச்சிக்காலம்! அதற்குள் கவசங்கள் வந்துவிட வேண்டும். வந்துவிடும்தானே?’’.“வந்துடும் சாமி... கோயில் மடப்பள்ளிக்கு அரிசிமூட்டை இறக்க வரும் வண்டியில அந்த அரிசி மூட்டைக்குள்ள கவசபாகங்களை மறைச்சுவெச்சு கொண்டுவந்து சேர்க்கப்போறதா என் புருஷன் சொல்லியிருக்கார்...’’“அந்த வண்டியை ஓட்டிக்கொண்டு வரப்போவது யார்... உன் கணவன்தானே?’’“அவரேதான் சாமி... மாறுவேஷத்துல வரப்போறாரு...’’“நல்லது... எல்லாம் நல்லபடி நடந்தேற வேண்டும். நடுவில் இளையவரின் எடுபிடிகளோ இல்லை ராயசத்தின் ஆட்களோ உள்ளே வந்து வேவு பார்த்துவிடக் கூடாது...’’“அதுக்குதான் சாமி இங்க இந்தக் காளித்தாய்கிட்ட விளக்கு போட்டு வேண்டிக்கிட்டிருக்கேன்...’’“உன் பிரார்த்தனை பலிக்கட்டும்... தங்கக்கவசங்கள் சாற்றப்பட்டு சித்ரா பௌர்ணமி பூஜையும் குறைவின்றி நடக்கட்டும். முன்னதாக நீ இப்போது ஒரு காரியம் செய்யவேண்டும்.’’“என்ன சாமி?’’“உன்னால் இன்று நம் ராணியாரை சிறைக்கொட்டாரத்துக்குச் சென்று சந்திக்கமுடியுமா?’’“முடியும்... காலை உணவைக் கொண்டு செல்லவேண்டி உள்ளதே?’’“அப்படி செல்லும்போது ராணிக்கென்று ஒரு புடவையை எடுத்துச்சென்று அதை ராணியிடம் கொடுத்து கண்களில் ஒத்திக்கொள்ளச்செய்து அதை நீ திரும்ப எடுத்து வரவேண்டும்...’’“ஏன் சாமி அப்படி செய்யணும்?’’“ராணியால் பூஜையில் நேரடியாக பங்குகொள்ள முடியாததால் அவர் சார்பில் அந்தப் புடவை இடம்பெறப்போகிறது. அந்தப் புடவையை அம்பாளின் காலடியில் வைத்தே நான் நவசக்தி பூஜையைத் தொடங்கப் போகிறேன். பூஜை முடியவும் திரும்ப அந்தப் புடவையை எடுத்துச் சென்று ராணியிடம் கொடுத்து அதை அவர்கள் அணிந்துகொள்ள வேண்டும்...’’“அதை எல்லாம் நான் பாத்துக்கறேன் சாமி... புடவை இப்ப எங்க இருக்கு?’’“புடவை இங்கே இல்லை... பத்துத்தூண் அருகில் திருமலை வெங்கடாஜலபதிங்கற ஒரு சௌராஷ்ட்ரர் வீட்டுக்குப் போ. அவர்கள் தங்கள் தறியில் நெய்த பட்டுப்புடவை ஒன்றை உன்னிடம் தருவார்கள். அது பச்சையும் சிவப்பும் கலந்த புடவை. அதைத்தான் நீ சாமர்த்தியமாக ராணியிடம் கொடுக்க எடுத்துச் செல்லவேண்டும்...’’“பத்துத் தூண் அருகில் அவர்கள் வீட்டை எப்படி அடையாளம் காண்பது?’’“உனக்காகவே அவர்கள் தங்கள் வீட்டு முன்னால் உள்ள மல்லிகைக்கொடியின் மேல் ஒரு வெள்ளை வஸ்திரத்தைக் காயப்போட்டது போல் விரித்துப் போட்டிருப்பார்கள்...’’“இது போதும் சாமி... நான் இப்பவே புறப்பட்றேன். நீங்க மாட்டுவண்டியில் அரிசிமூட்டையோடு வரப்போகிற என் வீட்டுக்காரரைப் பார்த்துக் கொள்ளுங்கள்...’’“நான் பார்த்துக்கொள்கிறேன். வேத கோஷ்டி என்கிற பெயரில் ஒன்பது பேர் கொண்ட பிராமணர்கள் இப்போது வைகை ஆற்றில் குளிக்கப் போயிருக்கிறார்கள். அவர்கள் ஆளுக்கொரு வெள்ளிக்குடத்தில் வைகை நீரை எடுத்துக்கொண்டு மந்திர முழக்கமிட்டபடியே வருவார்கள். அவர்களை கிழக்கு கோபுர அம்மன் சந்நதி வாசல் வழியாக வரச்சொல்லி அவர்கள் அனுமதிக்காக ராயசத்திடம் அனுமதியும் பெற்றுவிட்டேன். அவர்கள்தான் அம்பாள் முன்னால் அமர்ந்து லலிதா சஹஸ்ரநாமம் முதல் த்ரிசதி வரை சகலத்தையும் சொல்லி நவசக்தி பூஜை செய்யப் போகிறவர்கள்.இந்த பூஜையின்போது மதுரையின் எட்டுத் திசைகளில் எடுக்கப்பட்ட மண்ணும் முக்கியம். அந்த மண்ணை கலயம் ஒன்றில் போட்டு அதையும் அம்பாள் முன் வைத்து பூஜை நடக்கப் போகிறது. பூஜை முடியவும் அந்த மண் கலயத்தை எடுத்துச்சென்று வைகையில் கரைத்துவிடவேண்டும். இதனால், இந்த மண்ணைப் பற்றிய திருஷ்டி, தோஷம், ஓம்பல் என்கிற எதிர்வினைகள் நீரில் கரைந்து ஓடிவிடும். அதன்பின் நடக்கப்போகும் எல்லாம் நல்லதாகவே இருக்கும்...’’“நீங்க சொன்ன எல்லாத்தையும் நான் ராணிகிட்ட சொல்லிட்றேன். எல்லாம் நல்லவிதமா நடந்துமுடிய இந்தக் காளி துணை நிக்கட்டும்...’’“நிற்பாள்... நிச்சயம் நிற்பாள்... நீ தைரியமாக செல். வேகமாகச் செயல்படு... அதுதான் இப்போது முக்கியம்...’’“சாமி, நானும் என் புருஷனும் இந்த நாட்டுக்காகவும், ராணிக்காகவும் உயிரைப் பணயம்வெச்சு செயல்பட்டுக்கிட்டிருக்கோம். எங்க முயற்சியும் சரி, உங்க அக்கறையும் சரி வீண்போயிடக்கூடாது சாமி... அப்படி எல்லாம் எதுவும் நடந்துடாதுதானே?’’“நம்பிக்கைதானம்மா வாழ்க்கை... நீயும் நம்பு... நானும் நம்புகிறேன். இது அமுதம் பட்ட பூமி. எப்போதுமே இதற்கு திருஷ்டி அதிகம். அதனால் அசுர சக்திகள் இப்படித்தான் அவ்வப்போது தலை எடுக்கும். பின் சரியாகிவிடும்...’’“அமுதம் பட்ட பூமில எப்படி சாமி இப்படி நடக்கலாம்? அதுலயும் விரோதி வெளிய இருந்து வந்தாகூட பரவாயில்ல. பாலும் சோறும் ஊட்டி வளர்த்த பேரப்பிள்ளையேவா எதிரியாக மாறுவான்?’’“இது என்ன கேள்வி... மாறிவிட்டதைதான் பார்க்கிறோமே? ஒன்றை நன்றாகத் தெரிந்துகொள்... மக்கள் பாவம் செய்தால் அது அரசன் கணக்கில்தான் சேரும். தர்மசாஸ்திரம் அப்படித்தான் சொல்கிறது. அதனால் அரசன் மக்களைக் கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கவேண்டும். அவர்களை பசிக்கவிடக்கூடாது. திருடவிடக்கூடாது... மக்களும் தங்களின் தவறுகள் நாட்டையே பாதித்துவிடும் என்பதை உணர்ந்து தர்மப்படி நடக்கவேண்டும். அப்படி நடக்கத் தவறும்போதுதான் அதர்மம் தலை எடுத்துவிடுகிறது...’’“அப்படின்னா இப்ப நம்ப மதுரை இப்படி இருக்க மக்களும் ஒரு காரணமா?’’“இப்படி நீ கேள்வி கேட்கவோ பொறுமையாக நான் பதில் கூறவோ இப்போது அவகாசமில்லை. நீ புறப்பட்டுச் சென்று எதிரிகள் பிடியில் சிக்கிவிடாதபடி எல்லாவற்றையும் செய்துவிட்டுவா. நவசக்தி பூஜை நன்கு முடிந்து மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு என்று ராணி காணிக்கையாகத் தந்திருக்கும் தங்கக்கவசங்கள் கோயில் பண்டார கஜானாவுக்குச் சென்று சேரட்டும். பிறகு நாம் விரிவாகப் பேசுவோம்...’’- பரமேஸ்வரபட்டர் அங்காயியை அழகாய் கத்தரித்து அனுப்பிவைத்திட, அவளும் புறப்பட்டாள்.அம்மன் சந்நதி வாயிலை அவள் கடந்தபோது, கொத்தவால் ஒருவன் புரவிமேல் வந்து நின்ற நிலையில்,“ஏய்... யார் நீ? கோயிலுக்குள் சென்றுவர உன்னை அனுமதித்தது யார்... ஊழியக்காரர்கள் தவிர யாரும் உள்ளே செல்லக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா?’’ என்று கடுமையான குரலில் கேட்க, அதற்கு அங்காயி பதில் கூறுமுன்பு, காவல் ஊழியக்காரர் ஒருவர் வேகமாய் முன்வந்து, “கொத்தவால், இவள் ராணியின் சேடிப்பெண். ராணி சார்பில் நெய்யும், மலரும் கொண்டுவந்து தர இவளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது...’’ என்றான்.கொத்தவாலும் அங்காயியை மேலும் கீழும் பார்த்து, “சரி சரி, ஓடிப்போ...’’ என்றான். மனதுக்குள் அவனை சபித்தபடியே இடப்பக்கமாக பத்து தூண்கள் நிற்கும் நாயக்கர் மகாலின் விஸ்தீரணமான பகுதி நோக்கி நடக்கத் தொடங்கினாள் அங்காயி.ராணி மங்கம்மாளின் அதிகாரம் இருந்தவரையில் கோயிலைச் சுற்றிய மாசி வீதியிலும், ஆவணி வீதியிலும், வெளிவீதியிலும், சாலையோர வர்த்தகம் என்பது மிகவே மும்முரத்தில் இருக்கும்.தேங்காய், பலா, முந்திரி, வாழை என்கிற தாவர வகையறாக்களுடன், பிரம்புக் கூடைகள், கம்பளிப் போர்வைகள், மண் பாண்டங்கள், உழவுக் கருவிகள் என்று சகலமும் வீதிகளில் கிடைக்கும்.கைவண்டிகளும், சாரட்டுகளும், எருது பூட்டிய சாரட்டு வண்டிகளும் போவதும் வருவதுமாயிருக்கும். விஜயரங்கன் தன் பாட்டியைக் கொட்டடிக்குள் அடைத்துவிட்டு, இனி தானே அரசன் என்று அறிவித்துக் கொண்டு விட்ட பிறகு, மொத்த மதுரையே தலைகீழாக மறிவிட்டது போல்தான் இருந்தது. குறுந்தாடியோடு, வித்தியாசமான சாய்வுக்குல்லாயுடனும் நிறைய மராத்தியர்கள் இப்போது கண்ணில் பட்டனர். தஞ்சை ஷாஜி விஜயரங்கனுக்கு உதவி செய்யும் சாக்கில் தன் படைவீரர்களை மதுரைக்குள் ஊடுருவச் செய்ததன் விளைவு அது!அங்காயி அவர்களில் பலரைப் பார்த்தபடியேதான் நடந்தாள். பத்து தூண்களை நெருங்கி, மகாலின் மதில்சுவரை ஒட்டி நடக்கையில் நெசவுத்தறிச் சத்தம் காதில் கேட்கும். ‘டடக்டக்... டடக்டக்...’ என்கிற அந்த சத்தம் நின்றும் கவனிக்க வைக்கும்.பட்டர் குறிப்பிட்ட திருமலை வெங்கடாஜலபதி என்பவர் வீட்டு மல்லிகைக் கொடியும் அதன்மேல் கிடந்த வெள்ளை வஸ்திரமும் அந்த சத்தமுடன் அங்காயிக்குத் தெளிவாயிற்று. வீட்டினுள் நுழைந்தபோது ஒரு மடிசார் கட்டிய ஸ்ரீசூரணம் தரித்த பெண்மணி அங்காயியை ஏறிட்டாள்.“என் பேர் அங்காயி... பட்டர் அனுப்பி வந்துருக்கேன்...’’“ஓ... நீதானா அது... வா தாய்... வா...’’“புடவை தருவீங்கன்னு சொன்னார் பட்டர்...’’“தயாரா இருக்கு...’’ எனும்போதே அந்தத் திருமலை வெங்கடாஜலபதி என்பவர் ஒரு பூக்குடலையுடன் அது நிறைய பூக்களுடன் அவள் முன் வந்து அந்தக குடலையை நீட்டினார்.“புடவை தருவீங்கன்னாரே?’’“குடலைக்குள்ள இருக்கு. பூக்களால மறைச்சிருக்கேன். அப்படியே கொண்டுபோ. ஏன் எதுக்குங்கற கேள்விகளுக்கு இடமிருக்காது...’’“ஓ... இதை நான் யோசிக்கத் தவறிட்டேன். புத்திசாலித்தனமான விஷயம் இது...’’“என்ன பிரயோஜனம்... எங்க ராணி இப்ப ஜெயில்ல கண்ணீர் சிந்திக் கிட்டு இருக்காங்களே?’’“உங்க ராஜபக்தியை என்னால புரிஞ்சிக்க முடியுது. கவலைப்படாதீங்க... இன்னிக்கு சித்ரா பௌர்ணமி பூஜை நல்லபடி முடிஞ்சிட்டா எல்லாம் சரியாயிரும். அந்த மீனாட்சி தாய் நம்ப ராணியைக் கைவிடமாட்டா...’’“நாங்களும் நம்பறோம். வருஷம் தவறாம இந்த பௌர்ணமி நாள் அவளை கண்குளிர தரிசிப்போம். இந்த வருஷம் அது இல்லாம போச்சு...’’“வருந்தாதீக... நான் ஆத்தா குங்குமப்பிரசாதத்தை உங்களுக்குக் கொண்டுவந்து தரேன். இப்ப நான் வாரேன்...’’- அங்காயி அந்தப் புடவையோடு கூடிய பூக்குடலையோடு அரண்மனை ராஜவிலாச மண்டபம் நோக்கி நடந்தாள். அங்கே உள்ள திருக்கையி ல்தான் ராணிக்கான உணவு தயாராக இருக்கும். அதை ஒரு வஸ்திரத்தால் மூடி எடுத்துக்கொண்டு சிறைக்கொட்டாரத்திற்குச் செல்லவேண்டும்.கொட்டார முகப்பில் பரிசோதனைகள் உண்டு. மூப்பர் ஒருவர் சாப்பிட்டுப் பார்த்து, பிறகே அனுமதிப்பார். இதெல்லாம் விதிப்பாடுகள். அப்போது பூக்குடலைக்குள் இருக்கும் புடவையை அவரை பார்த்து விடாதபடி சமாளிக்கவேண்டும்.மனதுக்குள் கணக்குப் போட்டுக்கொண்டே நடந்தாள், அங்காயி. அவளை அவளுக்கே தெரியாதபடி பின்தொடர்ந்து கொண்டிருந்தாள் ஒருத்தி.. அவள் தலையில் எலுமிச்சம்பழங்களும், நார்த்தங்காய்களும் நிரம்பிய கூடை!- ரகசியம் தொடரும்...