நிலவு இல்லாத இரவு எனினும் SCAPA FLOW படைத்தள கண்காணிப்பு விளக்குகளின் ஒளி ஓர் இரவுச் சூரியனாய் கடலில் மேய்ந்துகொண்டிருந்தது. அவ்விளக்குகள் சுற்றிவரும் நேரத்தை கணக்கிட்டு, எஞ்சின் உட்பட தனது எல்லா இயக்கத்தையும் நிறுத்தி, அங்குலமாய் அங்குலமாய் அடியாழத்தில் முன்னேறியது U47. இப்படியொரு தாக்குதலை திட்டமிடுவதற்கு அசாத்திய மூளை வேண்டும் என்றால், அதை நிகழ்த்தி முடிக்க எவ்வளவு தீரம் வேண்டும். அப்படி தீரமும் விவேகமும் நிறைந்தவன் தான் U 47 நீர்மூழ்கியின் தளபதி கந்தர் ப்ரெயின். (Gunther Prien). 32 வயதே என்றாலும் அவனது திட்டமிடலையும், தீரத்தையும் கணக்கிட்டே ‘ஸ்பெஷல் ஆபரேஷன் P’ என்றழைக்கப்பட்ட இத்தாக்குதல் இவனுக்கு வழங்கப்பட்டது. இதற்காக நிறைய மெனக்கெட்டிருந்தான் கமாண்டர் ப்ரெயின்..தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்பு உளவு விமானம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம், எந்தெந்த கப்பல்கள் எங்கு நிலை கொண்டிருக்கின்றன, இருக்கும் ஏழு வழிகளில் எதில் தடுப்புக் கப்பல்கள் குறைவு, எப்படி நுழைய வேண்டும், தாக்கியபின் எப்படி வெளியெற வேண்டும் என எல்லாமும் ப்ரெயினுக்கு அத்துப்படி. இருந்தும் அவனுக்கு நடுக்கத்தை தருவது SCAPAFLOWவின் முந்தைய வரலாறு. முதலாம் உலகப் போரின்போது இதே படைத்தளத்தில் ஜெர்மனியின் இரு நீர்மூழ்கிக் கப்பல்கள் நுழைய முயன்றன. ஆனால், பாதிவழியில் பிடிபட்டு உடைபட்டன. திட்டம் படுதோல்வி. உடைந்து நொறுங்கிய கப்பல்களின் மிச்சங்கள் இப்போது U47 நுழைய இருக்கும் KIRK SOUND கடல்பாதையின் அடியாழத்தில்தான் கிடக்கின்றன. .இருந்தும் விடாப்பிடியாய் ஜெர்மனி இத்தாக்குதலை மீண்டும் திட்டமிடக் காரணம், அப்போது அவர்களிடம் எனிக்மா இருந்திருக்கவில்லை. முதலாம் உலகப் போரில் ரேடியோ தகவல்கள் இடைமறிக்கப்பட்டு, கப்பல்களை உள்ளே வரவிட்டு உடைத்து நொறுக்கியிருந்தது ராயல் நேவி. ஆனால், இப்போது ஸ்பெஷல் ஆபரேசன் P திட்டமிடப்பட்டதோ, இப்போது u47 உள்ளே நுழைந்திருப்பதோ எதுவும் அறியாதிருந்தது ராயல் நேவி. காரணம், நான்கு ரோடர் சக்கரங்களுடன் கூடிய வலிமையான எனிக்மா. இதை உடைக்கும் வரை எத்தனை ஆயுதங்கள் இருந்தும் அவை வீண்தான்..ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல்கள் 48 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரம் நீரில் மூழ்கிய நிலையிலேயே இருக்கும் சக்தி வாய்ந்தவை. ஆனால், ஆழத்தில் கிடக்கும் Blockships எனப்படும் உடைந்த கப்பல்களை தவிர்க்க வேண்டுமெனில் நீர் மட்டத்திற்கு வந்து தான் ஆக வேண்டும். ஆதலால், நீரில் பாதி மறைந்தும் மறையாமலும் கடற்படைத் தளத்தில் நுழைந்து போர்க் கப்பல்கள் நின்று கொண்டிருக்கும் இடத்தை நோக்கி விரைந்தது U47. கமாண்டர் ப்ரெயினின் கணக்குப்படி இன்று நிலவே இல்லாத இரவு, வெளிச்சக் கீற்று என்பதே இருக்கக் கூடாது. ஆனால், ‘நார்தர்ன் லைட்ஸ்’எனப்படும் துருவ ஒளியில் வானம் வண்ணங்களில் பிரகாசித்தது. ப்ரெயின் தனது நேரத்தை எண்ணி மனதிற்குள் சபித்துக்கொண்டான். திட்டத்தைக் கைவிடலாம் என்றுகூட நினைத்தான். ஆனால், ஒரு வாரம் இரவில் விழித்திருந்து, பகலில் உறங்கி இத்தாக்குதலுக்கென கடும் பயிற்சி எடுத்திருந்த தன் குழு வீரர்கள் முகத்தைப் பார்த்தான். அதிலிருந்த நம்பிக்கையை அவன் உடைக்க விரும்பவில்லை. தாக்குதல் தொடரட்டும் என்றான். அவன் சொன்ன அந்த வினாடி, இருளைக் கிழித்துக் கொண்டு ஒரு விளக்கொளி கப்பலின் மீது படர்ந்தது. ப்ரெயின் உட்பட குழு அனைவருக்கும் இதயம் ஒரு நொடி நின்று விட்டது. மூச்சுவிட மறந்து உறைந்து போயிருந்தனர். நிமிடங்கள் கரைந்தது. அபாய சைரன் ஒலிக்கவில்லை. வெளியே எந்தவித பரபரப்பும் இல்லை. ப்ரெயின் கப்பலின் பெரிஸ்கோப் வழி மேற்பரப்பை நோட்டமிட்டான். தொலைவில் ஒரு கார் விளக்குகள் ஒளிர்ந்தபடி நின்று கொண்டிருந்தது. கப்பல் மீது படர்ந்த ஒளி காரில் இருந்து வந்ததுதான் எனத் தெரிந்து கொண்டான். U47 மீண்டும் இலக்கை நோக்கி நகரத் துவங்கியது. .கப்பல்கள் நிலைகொள்ளும் இடத்திற்கு வந்த U47 க்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது. ராயல் நேவியின் முக்கியப் போர்க் கப்பல்கள் அனைத்தும் ஏற்கெனவே போருக்குக் கிளம்பிப் போயிருந்தன. எரிபொருள் நிரப்பும் டாங்கர் கப்பல்கள் சில மட்டும் படைத் தளத்தில் நின்றிருந்தன. அவைகளைத் தாக்குவதில் எந்தப் பயனும் இல்லை. ப்ரெயின் பெரும் ஏமாற்றம் அடைந்தான். என்ன செய்வது, திரும்பிவிடலாமா என யோசித்தான். அப்போது துருவ ஒளி பிரகாசமாக ஒளிர்ந்தது. அதன் பச்சை வண்ணத்தில் ஒரு பிரமாண்ட கப்பலின் நிழல் பெரிஸ்கோப்பில் அடர்த்தியாய்த் தெரிந்தது. .பீரங்கி வடிவிலான அதன் துப்பாக்கிகளைப் பார்த்ததும் அவனது குழுவின் முதன்மை வீரன் வான் கூறியது. “கமாண்டர், இது போர்க்கப்பல் ராயல் ஓக் வகையைச் சார்ந்தது. “ மீண்டும் பெரிஸ்கோப் வழி பார்த்த ப்ரெயினுக்கு அதன் துப்பாக்கிகளின் கனத்தையும் 27,000 டன் எடை கொண்ட அதன் பிரமாண்டத்தையும் பார்த்த பிறகுதான் புரிந்தது. இது ராயல் ஓக் வகை கப்பல் மட்டும் இல்லை, கண்ணெதிரே நிற்பது சாட்சாத் HMS ராயல் ஓக் கப்பலேதான் என்பது. குழுவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. காரணம், முதலாம் உலகப்போரில் ஜெர்மனியின் கப்பல்களைப் பிளந்தெடுத்த HMS ராயல் ஓக் போர்க் கப்பல் பிரிட்டனின் பெருமையாகப் பார்க்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுடன் நின்றுகொண்டிருக்கும் அதை வீழ்த்துவது என்பது பிரிட்டனையே வீழ்த்தியதற்கு சமம் என முடிவெடுத்தான் ப்ரெயின். பொறுமையாக U47 யைத் திருப்பி ராயல் ஓக் கப்பலைத் தாக்குவதற்க்கு ஏதுவாக நிறுத்தினான். கப்பலுக்கும் நீர்மூழ்கிக்கும் இடையில் 3000 அடித் தொலைவு. அலைகள் அடங்கிய ஒரு சரியான தருணத்தில் மூன்று டோர்பீடோ குண்டுகளை 20 அடி ஆழத்தில் ஒன்றன்பின் ஒன்றாக ஏவினான். .சுமார் மூன்றரை நிமிடங்கள் கடலில் பயணித்த மூன்று குண்டுகளில் இரண்டு கப்பலைத் தாக்காமல் விலகிச் சென்றன. ஒன்று மட்டும் கப்பலின் ஆங்கர் பகுதியைத் தாக்கியது. இதில் ராயல் ஓக் கப்பலுக்கு பெரிய பாதிப்பு இல்லை. சிறிய அதிர்வு மட்டும் கப்பலில் உணரப்பட்டது. இதை எதிர்பார்க்கவில்லை ப்ரெயின். கடற்படை இனி சுதாரித்துவிடும், எந்த வினாடியும் அபாயச் சங்கை ஒலிப்பார்கள். வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும் அடைக்கப்படும். முதலில் மூழ்கிய ஜெர்மன் கப்பல்களைப்போல தானும் தன் குழுவினருடன் ஜலசமாதி அடையப் போகிறோம் என்று எண்ணிப் பதைபதைத்தான். ஆனால், சில மணி நேரங்கள் கடந்தும் எதுவுமே நிகழவில்லை. கப்பலின் கீழ்த்தளத்தில் நிகழ்ந்த ஒரு சிறிய வெடி விபத்து என இத்தாக்குதலை நிராகரித்திருந்தது ராயல் ஓக் படைக் குழு. அதன் வீரர்கள் அனைவரும் மீண்டும் உறங்கச் சென்றுவிட்டனர். கப்பல் தாக்கப்பட்டும் அதை விபத்து என நிராகரித்த ஒரு வரலாற்றுத் தவறை ராயல் ஓக் செய்யக் காரணம், பிரிட்டன் கடற்படை தளத்தில் எவனாவது நுழைந்திட முடியுமா என்ற முட்டாள் தனமான அதீத நம்பிக்கைதான். U47 குழு முன்பைவிட உற்சாகமாக நீர்மூழ்கியை சரியான திசைக்கு நகர்த்தி நிறுத்தியது. இம்முறை பொறுமையாக குறி பார்த்து, மூன்று டோர்பீடோ குண்டுகளை மீண்டும் ஏவியது. இலக்கு தவறவில்லை. மூன்று குண்டுகளும் ராயல் ஓக் கப்பலின் அடிப்பகுதியை பிளந்தெடுத்தன. மளமளவென கடல் நீர் கப்பலில் புகுந்தது. மேல் தளத்தில் பரவிய நெருப்பில் வெடிப் பொருட்கள் வெடித்துச் சிதறின. ராயல் ஓக் கப்பல் இரண்டாகப் பிளந்து மூழ்கத் துவங்கியது. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். .U 47 நீர்மூழ்கி உள்ளே நுழைந்த அதே வழியில் நழுவி வெளியேறியது. அதைத் தேடிப்பிடித்து அழிப்பதற்காக ராயல் நேவியின் இரு டெஸ்ட்ராயர் கப்பல்கள் விரைந்தன. இரவெல்லாம் வடக்கு கடலில் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. ஆனால் U47 சிக்கவில்லை. தாக்குதல் வெற்றி எனத் தலைமைக்கு எனிக்மாவில் செய்தி அனுப்பினான் ப்ரெயின். ஜெர்மனியில் கொண்டாட்டம் தொடங்கியது.அடுத்த நாள் ஜெர்மனியின் துறைமுகத்தில் U47 நுழைந்த போது ராணுவ வீரர்கள், உயரதிகாரிகள் அனைவரும் கூடி நின்று வரவேற்றார்கள். மிகப்பெரும் உற்சாக ஆரவாரத்துடன் U 47 குழுவினர் ஜெர்மனி வீதிகளில் அழைத்து செல்லப்பட்டார்கள். முதலாம் உலகப்போரின் தோல்விக்கு பிறகு மீண்டும் பிரிட்டனை எதிர்ப்பதா என அச்சம் கொண்டிருந்த மக்களுக்கு, சிங்கத்தின் பிடரியை பிடித்து மிரட்டி விட்டு வந்த இத்தாக்குதல் பெரும் நம்பிக்கை கொடுத்திருந்தது. பிரிட்டன் மற்றும் அவர்களுடன் இணைந்திருக்கும் நேச நாடுகளை அடித்து வீழ்த்த நமது ராணுவத்தால் முடியும் என நம்பினார்கள். தனது தனி விமானத்தில் கமாண்டர் ப்ரெயினை தலைநகர் பெர்லினுக்கு அழைத்து வந்து விருந்து கொடுத்தார் ஹிட்லர். அப்போது ஜெர்மனியின் உயரிய ராணுவ விருதான Knight's Cross விருது கமாண்டர் ப்ரெயினுக்கு அளிக்கப்பட்டது..தனது அடுத்த அதிரடியை செயல்படுத்தினார் ஹிட்லர். முதலாம் உலகப்போரில் ஜெர்மனிக்கு வரும் வணிகக் கப்பல்களை தடுத்து செயற்கை வறுமையை உண்டாக்கி, மக்களை உணவுப் பஞ்சத்திற்கு எப்படி பிரிட்டன் ஆளாக்கியதோ, அதே Blockade தடுப்பை பிரிட்டனுக்கு திருப்பித் தரத் தயாரானார். ஜெர்மனியின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓநாய் நீர்மூழ்கிகள் அட்லாண்டிக் கடலில் பதுங்கிக் காத்திருந்தன. ரத்த வெறிகொண்ட அவற்றின் ஒன்றிணைந்த ரேடியோ ஊளை சத்தம் கடலையே நடுநடுங்க வைத்தது. சக்தி வாய்ந்த எங்களை வெல்ல இனி யார் என்ற தீரம் வெறியாக மாறி நாஜிகளின் கண்களில் மின்னியது .எனிக்மா எவ்வளவு கடினமான இயந்திரம் என்றாலும் அதை இயக்கும் மனிதர்கள் தவறிழைப்பார்கள் என ஆலன் கணித்தது சரிதான் ! தன்னை துரத்தி வந்த டெஸ்டராயர் கப்பல்களிடம் இருந்து தப்பித்ததும், ப்ரெயின் வெற்றிச் செய்தியை தலைமைக்கு அனுப்பியிருந்தான் அல்லவா… இந்த ரகசிய மறைநுட்ப செய்தியை எவன் கண்டிபிடிக்கப்போகிறான் என்ற அலட்சியத்திலும், வெற்றிக் களிப்பிலும் ப்ரெயின் அச் செய்தியில் இரு வார்த்தைகளை அதிகப்படியாக சேர்த்திருந்தான். அந்த இரு வார்த்தைகள் தான் எனிக்மாவின் ரகசியத்தை உடைக்கும்! ஆயிரம் நீர்மூழ்கிகள் ஒன்றிணைந்து நடத்த இருக்கும் Battle of the Atlantic என்ற வரலாற்று தாக்குதலில் இருந்து பிரிட்டனைக் காக்கும்! பின்னாளில் கணினிகளில் exclude என்ற கட்டளையாக இது மாறும் என்றெல்லாம் ப்ரெயின் மட்டுமல்ல, ஆலன் உட்பட மனித சமூகம் மொத்தமும் அப்போது அறிந்திருக்கவில்லை. ஆனால் காலம் அனைத்தும் அறிந்திருந்தது. அதன் பொருட்டே சிறிய தவறுகளில் பெரும் கண்டுபிடிப்புகளையும் தீர்வுகளையும் அது மனிதனுக்கு தொடர்ந்து வழங்கி வந்தது.(உலகம் விரியும்)