பல பள்ளிகளில் இறுதித் தேர்வுகள் நிறைவடைந்து, கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்குமே சுற்றுலா உற்சாகம் தொற்றிக்கொண்டது.
நல்லது. அதேசமயம், நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று விகிதம் அதிகரித்துவருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஏப்ரல் 14 அன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 11 ஆயிரத்து 109 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் உயிரிழந்துவிட்டனர். 49 ஆயிரத்து 622 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் தினசரி விகிதம் 5.01 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதை எல்லாம் உங்களை பயமுறுத்தவோ பீதியடைய செய்யவோ சொல்லவில்லை.
தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் ‘எக்ஸ் – 1.16’ என்பது மிகவும் தீவிரமாக பரவும் தன்மை கொண்டது என்றாலும் இது அதிகளவு ஆபத்தை ஏற்படுத்தாது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டியது என்ன?
கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்லலாம்தான். ஆனால், வைரஸ் எளிதில் பரவ வாய்ப்புள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கலாம். அதாவது ஒகேனக்கல், குற்றாலம் போன்ற அருவிகளில் நெருக்கியடித்துக்கொண்டு கூட்டமாக குளிப்பது, நீர்ச்சறுக்கு விளையாட்டு மையங்களில், நீச்சல் குளங்களில் கூட்டமாக நீந்துவது, விளையாடுவது போன்றவற்றை தவிர்க்கலாம். அதேபோல ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை என பிரபல சுற்றுலா தளங்களில் மட்டுமே ஒட்டுமொத்தமாக குவியாமல் சொந்த கிராமங்களுக்கு செல்வது, கூட்டம் இல்லாத அமைதியான மலைக் கிராமங்களுக்குச் செல்வது (திண்டுக்கல் – சிறுமலை, கொல்லிமலை, காந்தளூர் போன்றவை), அதிகம் கூட்டமில்லாத கடற்கரைகளுக்கு செல்வது என சுற்றுலா திட்டங்களை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். அப்போதும்கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக் கவசம் அணிவது, சானிடைஸர் பயன்படுத்துவது, தேவையான மருந்துகளை கைவசம் எடுத்துச் செல்வது ஆகியவை மிகவும் அவசியம்.