அதிமுக அரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பட்ஜெட்:
2016-ம் ஆண்டு ஆட்சிப்பொறுப்புக்கு வந்த அதிமுக அரசின்  பதவிகாலம் 2021ம் ஆண்டு மே மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.  நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, உள்ளாட்சித் தேர்தலில் சிறிய பின்னடைவு ஆகியவற்றால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவாய்ப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக கூறி வருகின்றன. எனவே எதிர்க்கட்சியினரின் பிரசாரத்தை முறியடிக்கவும், வாக்காளர்களை இலவசம் என்ற பெயரால் திணறடிக்கவும் அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.  

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக முழுமையான பட்ஜெட்டை துணைமுதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 14-ம் தேதி காலை சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் புதிய இலவசத் திட்டங்கள் மட்டும் இன்றி, ஏற்கனவே செயல்படுத்தப்படும் இலவசத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு தலா 2000ரூபாய் சிறப்பு நிதி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் சிறப்பு நிதி உதவி தொகை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. இப்போது வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. 

அதே போல அதிமுக-வின் வாக்கு வங்கியில் பெண்களின் சதவிகிதம் அதிகம். எனவே, அவர்களை ஈர்க்கும் வகையில் இலவச ஸ்கூட்டர் திட்டம்போன்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.  டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெண்களுக்கு அரசுப் பேருந்தில் இலவசப் பயணம் என்ற திட்டத்தை அமல்படுத்தினார். இதே போன்ற ஒரு திட்டத்தை தமிழக அரசு நாளையை பட்ஜெட்டில் அறிவிக்கும் என்று தெரிகிறது.

பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் செயல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இளம் வாக்காளர்களைக் கவரும் வகையில் புதிய வேலை வாய்ப்புத்திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது. வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவியை அதிகரிக்கும் அறிவிப்பும் இருக்கக்கூடும். தொழில்துறையில் புதிய முதலீடுகளையும், வேலைவாய்ப்பையும் அளிக்கும் வகையில் தொழில்தொடங்குவோருக்கு புதிய சலுகைகள் அளிக்கும் திட்டங்களும் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. சிறுதொழில்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்களும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா டிக்கெட்களை இணையதளம் மூலம் அரசே விற்பனை செய்யும் புதிய திட்டம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று தெரிகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, டெல்டா பாசனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்தார். எனவே, பட்ஜெட்டில்  இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. 

நிலத்தடி நீரை பாதுகாத்தல், மழைநீர் சேமிப்பு ஆகியவற்றுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. தேர்தல் தோல்விகள், எதிர்கட்சிகளின் விமர்சனம், பாஜக ஆதரவு அரசு போன்ற குற்றச்சாட்டுகளை மீறி மக்களிடம் நல்லபெயர் எடுக்கும் வகையில் திகட்ட, திகட்ட இனிப்பான பட்ஜெட்டை  தமிழக அரசு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்