Dotcom Spl >> tourism
 

சுவாரசியம் மிக்க டோங்க்

 
ஜெய்ப்பூரிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் பனஸ் ஆற்றங்கரையில் அமைந்துள்ள டோங்க் நகரமானது இந்தியா சுதந்திரம் அடையும் வரை பல ராஜ வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்தது. வரலாற்றின் பல நிகழ்வுகளை எடுத்துக்கூறும் வரலாற்றுச் சின்னங்கள் பலவற்றைக் தன்னகத்தே கொண்டுள்ள டோங்க் நகரில் சுனேரி கொதி என்றும் தங்கமாளிகை என்றும் அழைக்கப்படுகின்ற மேன்ஷன் ஆஃப் கோல்ட் பிரபல சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. நவாப் முஹம்மது இப்ராஹில் அலி கான் என்பவரால் கட்டப்பட்ட இந்த மாளிகையில் உள்ள பல அற்புதமான கண்ணாடி ஓவிய அலங்காரங்கள் பலரது மனதையும் ஈர்க்கின்றன.
 
பிஸால்பூர் அணை:
 
பிஸால்பூர் என்ற கிராமத்தில் பனஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருக்கும்  பிஸால்பூர் அணை 574 மீட்டர் நீளத்துடனும், 39.5 மீட்டர் உயரத்துடனும் இரண்டு கட்டங்களாக கட்டிமுடிக்கப்பட்டது. முதல் கட்டம் உள்ளூர் மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றும் நோக்கத்துடனும், இரண்டாம் கட்டம் சுற்றியுள்ள பகுதிகளின் நீர்ப்பாசன தேவைக்காகவும் கட்டப்பட்டதாகும். பிஸால்பூரில் அமைந்துள்ள ஒஅழமையான கோகர்ணேஷ்வரர் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றுள்ளதாகும்.
 
சுனேரி கொதி:
 
ஜார் பாக் சாலையிலுள்ள படா குவா ஸ்தலத்திற்கு அருகில் அமைந்துள்ள சுனேரி கொதி என்றும் ஷீஷ் மஹால் என்றும் அழைக்கப்படுகின்ற இந்த தங்க மாளிகையானது இசை, நடன,ம் கவிதை வாசித்தல் போன்ற கலைகளில் ஆர்வம் கொண்ட நவாப் முஹம்மது இன்ராஹில் அலி கான் என்பவரால் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதற்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்டதாகும்.  கனவு மாளிகை போன்று காட்சியளிக்கின்ற இந்த மாளிகையின் உட்புறம் முழுவது எனாமல் ஆபரண வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது.
 
ஜம்மா மஸ்ஜித்:
 
முகலாய கட்டிடக் கலைக்கு உதாரணமாக திகழும் இந்த ஜம்மா மஸ்ஜித் இந்தியாவில் உள்ள பெரிய மசூதிகளில் ஒன்றாக அறியப்படுகிறது.  நாங்கு குமிழ் கோபுரங்களுடன் காட்சியளிக்கும் இந்த மஸ்ஜித் டோங்க் நகரத்தின் முதல் நவாப் ஆக இருந்த நவாப் அமீர் கான் என்பவரால் 1246 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1298 ஆண்டு நவாப் வைசிர் உத் தௌலாவின் ஆட்சிக்காலத்தில் கட்டி முடிக்கப்பட்டதாகும். இந்த மசூதியின் உட்புறத்திலுள்ள தங்கப்பூச்சு ஓவியங்களும், மீனாகரி பாணி அலங்கரிப்புகளுமே இதன் முக்கிய சிறப்பம் ஆகும்.
 
ஹாத்தி பாட்டா:
 
கி.பி. 1200 ஆம் ஆண்டு ராம்நாத் ஸ்லாட்  என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட ஹாத்தி பாட்டாவானது டோங்க் நகரில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள யானை சிலையானது ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இச்சிலையில் காதுகளில் ஹாத்தி பட்டாவின் வரலாற்றை கல்வெட்டுகளாகவும் பொறிக்கப்பட்டுள்ளது.
 
கண்டா கர்:
 
டோங்க் நகரின் முக்கிய சுற்றுல அம்சமாக இருக்கும் இந்த கண்டாகர் மணிக்கூண்டானது 1937 ஆம் ஆண்டில் இந்நகர நவாப் ஆக இருந்த நவாம் முஹம்மத் சத்த் அலிகான் என்பவரால் கட்டப்பட்டதாகும். இந்த நவாப்பின் ஆட்சிகாலத்தில் டோங்க் நகர மக்கள் கொடுமையான தொற்று நோயால் பாதிக்கப்பட்ட போது, பாதிப்படைந்தவர்களுக்காக நிதி வசூலித்து மருந்துகளை வழங்கிய அவர் அதில் எஞ்சிய பணத்தில் இந்த மணிக்கூண்டைக் கட்டியதாக சொல்லப்படுகிறது.
 
கல்பவிருக்ஷா:
 
டோங்க் நகருக்கு அருகில் உள்ள பலுண்டா கிராமத்தில் உள்ள கல்பவிருக்ஷா மரமானது இப்பகுதி மக்களால் பழமையான தெய்வீகமான புனித மரமாக கருதப்படுகிறது. பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் அற்புத சக்தி நிறைந்த மரமாக கருதப்படும் இம்மரத்திற்கு அப்பகுதி மக்கள் கார்த்திகை மாதத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்கின்றனர்.
 
ராஜ்மஹால்:
 
கோர் என்னும் இடத்தில் அமைந்துள்ள பெரிய மலையின் மீது பனஸ், காரி, தய் என்ற மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த ராஜ்மஹால் அரண்மனையானது காண்பவர்களின் மனதை எளிதில் கவர்ந்து கொள்ளையடித்துச் செல்லும் எழிலுடம் அமைக்கப்பட்டுள்ளது, சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சிக்காக இங்குள்ள நீர்த்தேக்கத்தில் படகுச் சவாரி மேற்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
 
தோடா ராய் சிங் :
 
கி.பி. 4ஆம் நூற்றாண்டில் நாக வம்சத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட தோடா ராய் சிங்  நகரானது பின்னர்   யுகிலா மற்றும் சௌஹான் ஆகிய வம்சத்தினர்களால் ஆளப்பட்டு வந்தது. பிறகு கி.பி.15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் சோலங்கி ராஜபுத்திர வம்சத்தினரின் தலைநகராக விளங்கிய இந்நகரை ஆண்ட ராய்சிங் சிசோடியா என்ற புகழ்பெற்ற மன்னரில் பெயராலேயே தற்போது இந்நகரம் அழைக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ கிலேஷ்வர் மஹாதேவ் கோயில், நாகர்சிங் மாதா கோயில், ஆம் சாஹர், சந்த் பீபா ஜி கீ குப்ஹா, குஷால் பாக், ஹாதி ராணி கி பாவ்ரி (ஏரி), ராஜா ராய் சிங் மஹால், இஸார் பாவ்ரி மற்றும் போபாத் பாவ்ரி போன்ற பல அம்சங்கள் நிறைந்த பகுதியாக விளங்குகிறது தோடா ராய் சிங் டவுன்.