உருளைக்கிழங்கை இப்படி மட்டும் சாப்பிடாதீங்க.. பிரச்னை உறுதி!

தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் 3 முறை பிரஞ்சு ஃப்ரை சாப்பிட்டால், டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என 'பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்’ இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உருளைக்கிழங்கை இப்படி மட்டும் சாப்பிடாதீங்க.. பிரச்னை உறுதி!
comparing potato cooking methods and diabetes risk

உலகளவில் பிரதான உணவான உருளைக்கிழங்கு ஒரு மாவுச்சத்து நிறைந்த உணவு என்பது அனைவரும் அறிந்ததே. அதிக ஸ்டார்ச் உள்ளடக்கம் மற்றும் கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ள உருளையானது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்யும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கினை சிப்ஸாகவோ அல்லது பிரெஞ்ச் ஃப்ரைஸாகவோ சாப்பிடவே அதிகம் விரும்புகிறார்கள். இந்நிலையில், BMJ-யில் (பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்) வெளியிடப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சியின்படி, நீங்கள் ஒவ்வொரு வாரமும் மூன்று முறை பிரஞ்சு ஃப்ரை சாப்பிட்டால், டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிய வந்துள்ளது.

உருளைக்கிழங்கினை எந்த வகையில் உட்கொண்டால், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது தான் ஆய்வின் அடிப்படை நோக்கம். இதற்காக உருளைக்கிழங்கினை வேக வைத்து, மசித்து, வறுத்து என பல்வேறு முறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் உருளைக்கிழங்கினை வறுத்து சாப்பிடும் முறையானது நீரிழிவு நோய் வருவதற்கான அபாயத்தை அதிகப்படுத்துவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது..

சமைக்கும் முறைகளும்- மறைந்திருக்கும் ஆபத்துகளும்:

வேக வைத்த, மசித்த நிலையில் உருளைக்கிழங்குகளை உண்பது நீரிழிவு நோய்க்கான ஆபத்தை 5% மட்டுமே அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது வறுத்த உருளைக்கிழங்கைக் காட்டிலும் மிக குறைவான ஆபத்தினை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருப்பது வறுத்த நிலையில் உருளைக்கிழங்கினை (French Fries மற்றும் Chips) உண்பது தான். வறுத்த உருளைக்கிழங்கை வாரத்திற்கு மூன்று முறை உண்டால், டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 20% அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவே, வாரத்திற்கு 5 முறை உண்டால், இந்த ஆபத்து 27% ஆக அதிகரிக்கிறது.

உருளைக்கு மாற்று என்ன?

இந்த ஆய்வின் முடிவானது உருளைக்கிழங்கு உட்கொள்ளலைக் குறைத்தால், நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறையும் என்று தெரிவித்துள்ளது. மேலும், உருளைக்கிழங்குக்கு பதிலாக, முழு தானியங்களான பழுப்பு அரிசி (brown rice) மற்றும் முழு கோதுமை பாஸ்தா (wholemeal pasta) போன்ற சிறந்த மாவுச்சத்து உணவுகளை உட்கொள்ளலாம் என்றும் சில உணவுகளை பரிந்துரை செய்துள்ளது. இந்த உணவு வகை மாற்றத்தால் நீரிழிவு நோய் ஆபத்து 8% குறைந்துள்ளது. குறிப்பாக பிரெஞ்ச் ஃப்ரைஸ் சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்தினால், இந்த ஆபத்து 19% குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த மாற்று உணவுகளைத் தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில், வெள்ளை அரிசி போன்றவையும் அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகளாகும். இவையும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும்.

வறுத்த உருளைக்கிழங்குதான் (French Fries மற்றும் Chips) பெரும்பாலும் அதிக மக்களால் உண்ணப்படுகிறது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்பதால், பெற்றோர்களும் சிப்ஸ் சாப்பிடுவதற்கு பெரும்பாலான வீடுகளில் ’நோ’ சொல்வதில்லை. ஆனால், இந்த முறையில் உருளைக்கிழங்கினை சாப்பிடுவது நீரிழிவு நோய் ஆபத்தை 20% வரை அதிகரிப்பதாக ஆய்வின் முடிவுகளில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், உருளைக்கிழங்கை வேகவைத்து அல்லது பிசைந்து/மசிந்த நிலையில் உண்பது ஓரளவு ஆரோக்கியமானது என ஆய்வில் குறிப்பிட்டுள்ளது ஆறுதல் தரக்கூடிய விஷயம்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்க மாவுச்சத்து போன்ற உணவுகளில் கவனமாக இருப்பது அவசியம்.

ஆய்வு தொடர்பான முழுக்கட்டுரைக்கு: potato intake and risk of type 2 diabetes

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow