உலகில் அதர்மம் அதிகரிக்கும்போது அரக்கர்களை அழித்து பக்தர்களைக் காக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள்தான் தசாவதாரம். அதில் பூர்ணாவதாரங்களுள் ஒன்று, கிருஷ்ணாவதாரம்.காவிய நாயகனான கிருஷ்ணருக்கு அகிலம் முழுவதும் ஆலயங்கள் உள்ளன. அதில் கோவை, வெள்ளலூர் அருகே வெள்ளாளபாளையம் கிராமத்தில் அமைந்த பாமா, ருக்மணி சமேத கிருஷ்ண சுவாமி கோவிலும் அடங்கும்.விளைநிலங்கள் சூழ்ந்த அழகிய கிராமமான வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையும், நூற்பாலைகளில் பணிபுரிவதையும் தொழிலாகக் கொண்டவர்கள்.ஆன்மிக நாட்டம் மிக்க அவர்கள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்று கூடி கிராமத்தில் சிறிய அறையில் ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணசுவாமி படத்தை வைத்து வழிபட்டு வந்தனர். மாலைவேளையில் பஜனை பாடல்களைப் பாடிவந்தனர். திருவிழாக்களையும் கொண்டாடி வந்தனர். நாளடைவில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களும்; அதைத் தொடர்ந்து புதிய குடியேற்றங்களும் உருவாயின. கோவிலுக்கு வரும் கூட்டமும் அதிகரித்தது..இந்நிலையில் கிருஷ்ணருக்கு சிறிய கோவில் எழுப்பி, 1947 ஆம் ஆண்டு எளிமையான முறையில் கும்பாபிஷேகம் நடத்தினர். நாட்கள் நகர்ந்தது. கோவிலை விரிவாக்கம் செய்யத்திட்டமிட்டு அதற்கான பணிகளைத் தொடங்கினர். கல்கார கருவறை, விமானம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், தீப ஸ்தம்பம் ஆகியவை நிர்மாணிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள 12.9.2008 அன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. அடுத்த கும்பாபிஷேகம் (கொரோனா பெருந்தொற்று காரணமாக) மிக எளிமையான முறையில் 2021 ஆம் ஆண்டு ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று மிகக் குறைந்த பக்தர்கள் (மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரைப்படி) கலந்து கொள்ள நடைபெற்றது.கிழக்கு நோக்கிய ஆலயத்தில் நுழைந்ததும் தீப ஸ்தம்பம், பலிபீடம், கருட மண்டபம் அமைந்துள்ளது. தீபஸ்தம்பத்தின் சதுரமான அடிப்பாகத்தில் ஆஞ்சநேயர், கருடாழ்வார், சங்கு, சக்கரம் ஆகியவை புடைப்புச் சிற்பமாய் செதுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மகா மண்டபத்தில் ஆதியில் வைத்து பூஜித்த படங்களும்; அர்த்தமண்டபத்தில் உற்சவர் பாமா, ருக்மணி சமேத கிருஷ்ண சுவாமியையும் தரிசிக்கலாம்.கருவறையில் மூலவராக பாமா, ருக்மணி சமேத கிருஷ்ண சுவாமி எழுந்தருளியுள்ளார். பாமா வலது கையிலும், ருக்மணி இடது கையிலும் நீலோற்பல மலரை ஏந்தி புன்னகை சிந்த, நடுவில் கிருஷ்ணசுவாமி இடது கையை இடுப்பில் வைத்தபடியும், வலது கையை அபயமாகக் காட்டியும், புல்லாங்குழலை இடுப்பில் சொருகிய நிலையில் சேவை சாதிக்கின்றார். பொதுவாக கிருஷ்ணர் ஒரு காலை மடக்கிய நிலையில் புல்லாங்குழலை இசைக்கும் கோலத்தில்தான் காட்சிதருவார். ஆனால் இங்கு அவர் வித்தியாசமான கோலத்தில் இருப்பது சிறப்பாகும். .கருவறை மீது ஏகக்கலசம் தாங்கிய இரு நிலை விமானம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தசாவதாரம், ஆஞ்சநேயர், கருடாழ்வார் மற்றும் பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணசுவாமியின் சுதைச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.ஆலயத்தின் தென்பகுதியில் பழமையான அரச மரத்தடியில் ராகு - கேதுவுடன் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. கிருஷ்ணர் கோவில் வைணவ சம்பிரதாயத்தில் இருந்தாலும், இங்கு வரும் பக்தர்கள் முதலில் விநாயகப் பெருமானை வணங்கி விட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.சனி மற்றும் திருவோண நட்சத்திரத்தன்று கிருஷ்ணசுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மாலையில் பண்டரி பஜனை நடைபெறும். வருடத் திருவிழாக்களில் மார்கழி மாதம் அதிகாலை 5 மணிக்கு திருமஞ்சனமும், தை 1ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்புத் திருமஞ்சனமும், ஐந்தாவது சனிக்கிழமை சுவாமி புறப்பாடும் நடைபெறும். இப்புறப்பாடு மாலை 5 மணிக்கு துவங்கி இழைப்பாற்றிப் பந்தலில் இளைப்பாறி, பஜனைகள் முடிந்த பின்பு விடியற்காலை 3 மணிக்கு கோவிலை வந்தடையும். கார்த்திகை தீபம், ஸ்ரீராம நவமி, வைகுண்ட ஏகாதசி எனப் பல திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும் இத்தலத்தின் முக்கியத் திருவிழா கிருஷ்ண ஜெயந்திதான். அதற்கு முதல் நாள் இரவு தொட்டிலில் திரு ஜனனம் எனும் நிகழ்வு நடைபெறும். அப்போது சுக்குப்பொடி கலந்த கரும்பு சர்க்கரையை பிரசாதமாக வழங்குவர். அடுத்த நாள் அதிகாலை சிறப்புத் திருமஞ்சனம், அலங்கார ஆராதனையும், மாலை சுமார் 4.30 மணியளவில் உறியடி உற்சவமும், தொடர்ந்து வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்வும் நடைபெறும். சிறுவர் முதல் பெரியவர் வரை இதை உற்சாகத்துடன் கண்டுகளிப்பர். இரவு சுமார் 7 மணி அளவில் சுவாமியி புறப்பாடு நடைபெறும். .வைஷ்ணவ ஆகமப்படி காலை 7, மாலை 6 மணிக்கு பூஜைகள் நடந்து வருகின்றன. கோவிலில் குழந்தைகளுக்குச் சோறு ஊட்டல், பெயர் சூட்டுதல் போன்றவை குருவாயூர் போல் அதிக அளவில் நடைபெறுகின்றன. கிராமப்பகுதியில் கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் வீட்டிலிருந்தே நைவேத்தியப் பொருட்களைத் தயார் செய்து வந்து பகவானுக்குப் படைத்து அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.இத்தலத்தில் நம்பிக்கையோடு ஆத்ம திருப்தியுடன் வைக்கப்படும் கோரிக்கைகளை கேட்டதும் கொடுப்பவனான கிருஷ்ணன் நிறைவேற்றி வைக்கிறார். குறிப்பாக, திருமண கோரிக்கைக்காக சுவாமிக்கு திருமஞ்சனம் நடத்தி, துளசி மாலை சாற்றி, நைவேத்தியம் படைத்து வேண்டிக்கொண்டால், விரைவில் விமர்சையாக திருமணம் நடப்பதாகச் சொல்லப்படுகிறது..இங்கு பூவாக்குக் கேட்டல் பிரபலம். சனிக்கிழமைகளில் சுவாமி சிரசில் உதிரிப்பூக்களை அடர்த்தியாக வைப்பார்கள். ஒருகாரியத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் நாம் சுவாமியிடம் பிரார்த்தனை செய்துகொண்டு வாக்குக் கேட்கும்போது வலதுபுறத்திலிருந்து பூக்கள் விழுந்தால் அது ஜெயம் என்றும், இடதுபுறத்திலிருந்து விழுந்தால் தடை என்றும் கொள்வர். பல்வேறு சுபகாரியங்களுக்கு சுவாமியின் உத்தரவுக்காக பூவாக்குக் கேட்பது வழக்கம்.வாய்ப்புக் கிடைக்கும்போது வெள்ளாளபாளையம் பாமா, ருக்மணி சமேத கிருஷ்ண சுவாமி ஆலயத்திற்கு நீங்களும் சென்று வரலாமே!எங்கே இருக்கு?கோவையிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் வெள்ளலூர் - வெள்ளாள பாளையம் கிராமம் அமைந்துள்ளது. காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து தடம் எண் 51, 55, 55 ஏ, 74 மூலம் மைதானம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி கோவிலை அடையலாம்.தரிசன நேரம்காலை 7.30 - 9.30; மாலை 6 - 8. - வி.பி.ஆலாலசுந்தரம்