-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்உளத்துக்கினிய தனது காதல் மனையாகிய சீதையோடும், என்றும் தனைப்பிரியா இனிய தம்பி இலக்குவனோடும் அரண்மனையில் அமர்ந்திருக்கிறான் இராமன். தசரதன் கட்டளையை உரைக்க வந்த சுமந்திரன், இராமனைத் தொழுது, ‘ஐயனே! இந்த உலகை ஆளும் உன் தந்தையாகிய தசரதச் சக்கரவர்த்தி ஒரு காரியத்தை உரைப்பதற்காக, உன்னை அழைத்து வரும்படி என்னை அனுப்பினார்’ என்று உரைக்க, ‘தந்தை அழைத்தார்’ என்று கேட்டதும் மனம் மகிழ்ந்த இராமன், ‘பொருக்கென’ எழுந்து, தன் தம்பியாகிய இலக்குவன் தன்னைத் தொடர்ந்துவர நெடிய தேர் ஒன்றில் ஏறி அரண்மனை நோக்கிப் புறப்பட்டான்..இவ்விடத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்றுண்டு. அரண்மனையில் நடந்த ஆலோசனையின்போது, நடந்தவற்றையெல்லாம் அறிந்திருந்த சுமந்திரன், இராமனிடம் அச்செய்தி பற்றி ஏதும் உரைக்காமல், ‘தந்தை அழைத்தார்’ என்ற செய்தியை மட்டும் உரைக்கின்றான். இட்ட கட்டளையை மட்டும் நிறைவேற்றும் சுமந்திரனின் கீழ்ப்படிவை இவ்விடத்தில் நாம் கண்டு கொள்கிறோம். அதுபோலவே தந்தை அழைத்தார் என்ற செய்தி கேட்டதும், ‘ஏன்? எதற்கு?’ என்பதான வேறெந்த வினாக்களையும் தொடுக்காமல், உடன் எழுந்து செல்லும் இராமனின் செயலால் அவனது தந்தை மீதான பற்றினையும், மரியாதையினையும் ஒரு மகனுக்குரிய பணிவினையும் நாம் தெரிந்து கொள்கிறோம். வீதியில் சென்ற இராமனைக் கண்டு, ஊர் மக்களெல்லாம் ஒன்றுகூடி நின்று ஆர்ப்பரித்து வாழ்த்துரைக்கின்றனர். அந்த வாழ்த்துகளை ஏற்று, இன்முகம் காட்டியடி அவர்களைக் கடந்து சென்ற இராமன், தம்பியோடு தசரதன் இருந்த அரண்மனையை அடைகிறான். அங்கு சென்ற அவன், அரண்மனையில் அமர்ந்திருந்த, தம் குல குருவாகிய வசிட்ட மாமுனிவரை முதலில் வணங்கி, அதன் பின்னர் தன் தந்தையாகிய தசரதச் சக்கரவர்த்தியின் பாதங்களில் வீழ்ந்து வணங்குகிறான்..இவ்விடத்திலும் நான் உரைக்க வேண்டிய விடயம் ஒன்று உண்டு. இராமாயணக் கதையை நாம் படிப்பதன் நோக்கம் வெறுமனே அக் கதையை அறிவதற்காக மட்டுமன்றாம். இராம காதையை கற்கையில், நாம் தமிழர்களுடைய பண்பாடு, கலாசாரம், வாழ்வியல் போன்ற பல விடயங்களையும் கற்றுக் கொள்கிறோம். அத்தகைய நற்செய்திகள் வரும்போது அவற்றை உங்களுக்கு வெளிப்படுத்திக் காட்டவேண்டியது எனது கடமையாகிறது. அந்த வகையில்தான் இவ்விடத்தில் தமிழர் பண்பாடு சார்ந்த ஓர் செய்தியை உங்களுக்கு உரைக்கவேண்டி இருக்கிறது. தமிழில் ‘வரிசை’ என்று ஒரு சொற்பிரயோகம் உண்டு. ஒரு காரியத்தை நாம் செய்கையில் உயர்ந்தவர்களுக்கும், உயர்ந்தவற்றுக்கும் முறைப்படி முதலிடம் கொடுத்து செயற்படுவதினையே ‘வரிசை’ என்ற இச்சொல் குறிக்கிறது. பலர் அமர்ந்த ஓர் சபையில் ஒருவருக்கு மரியாதை செய்ய வேண்டுமாயின், ‘இவருக்கு அடுத்து இவர்’ என, தகுதியின் அடிப்படையில் வரிசைப்படுத்தியே அம் மரியாதையை செலுத்தவேண்டும். அதுபோலவே பல விடயங்களை ஒருமித்துச் சொல்ல வரும்போது, உயர்ந்ததன் அடிப்படையில் அவ்விடங்களை ஒழுங்கு செய்து உரைத்தலும் அவசியமாம். இந்த வரிசை முறையைத் தமிழர்கள் மிக முக்கியமான ஒன்றாய்க் கருதினர். தகுதி உடைய ஒருவர் இருக்க, அவரைவிடத் தகுதி குறைந்த ஒருவர்க்குச் செய்யப்படும் கௌரவத்தை, முதலாமவர்க்குச் செய்யப்படும் அவமரியாதையாகவே நம் மூதாதையர்கள் கருதினர். இன்றுங்கூட, இதனையே ஆங்கில மரபினரும்; ‘புரட்டக்கோல்’ (Protocol) என்று உரைத்து வருகின்றனர். இந்த வரிசை, மரபைக் கற்றறிந்ததாலேயே அவைக்கு வந்த இராமன், தமது குலகுருவாகிய வசிட்டரைத் தொழுததன் பின், சக்கரவர்த்தியாகிய தசரதனைத் தொழுகிறான்..தன்னைத் தொழுத புதல்வனை, தசரதச் சக்கரவர்த்தி தனது இரண்டு கைகளாலும் மார்புற அன்போடு தழுவிக் கொள்கிறார். இவ்விடத்தில் ஒரு கேள்வி பிறக்கும். எல்லோர்க்கும் பொதுவான அரச அவையில் வைத்து, தசரதன் தன் புதல்வன் என்ற வகையில், இராமன் மேல் அன்பு காட்டி அவனைத் தழுவிக் கொள்ளுதல் முறையாகுமா? என்பதே அந்தக் கேள்வியாம். இவ்விடத்தைச் சொல்லும்போது கவிச்சக்கரவர்த்தி கம்பர், மேற்சொன்ன கேள்விக்கான விடையை நயம்பட உரைக்கிறார். தசரதன், இராமனை மகன் மீதான பாசத்தோடு தழுவிக் கொள்ளவில்லையாம். இதுநாள்வரையில் தனது வலிமையால் நாட்டைக் காத்துவந்த அவன், இப்போது ஆட்சியை இராமனுக்குக் கொடுக்க நினைந்ததால், தனக்கு நிகரான தோள்வலிமை இராமனுக்கும் உண்டா? என அறிய விரும்பி, தனது தோளாலும், மார்பாலும் இராமனது தோளையும் மார்பையும் அளந்து பார்க்கவே இராமனைத் தழுவிக் கொண்டான் என்கிறார் அவர். ஓர் கவிஞனின் கற்பனை வளத்தை அறிந்து நாமும் மகிழ்கிறோம். இராமனைத் தழுவிய பின், அவனை நோக்கிப் பேசத் தொடங்கிய தசரதன், “மைந்தனே, இந்த மாநிலத்தைக் காக்கின்ற பெரிய பணியை இதுநாள்வரை மகிழ்வோடு நான் செய்து வந்தேன். இப்போது முதுமையின் காரணமாக அக் காரியம் எனக்குச் சுமையாகத் தோன்றுகிறது. அதனால் இந்தத் துன்பத்தில் நின்றும் நீங்கி, என் ஆன்மாவுக்கு நன்மை தரக்கூடிய, நன்மார்க்கத்தில் பிரவேசிக்க விரும்புகிறேன். அதற்கு நீ எனக்குத் துணைபுரிய வேண்டும்” என்கிறான். பெற்ற பிள்ளையிடம்கூட, தனக்கு வேண்டிய ஒரு காரியத்தைக் கட்டளையாய் உரைக்காமல், வேண்டுகோளாய் உரைக்கும் தசரதனது அதிஉயர் பண்பைக் கண்டு நாம் சிலிர்ப்படைகிறோம். அதுமட்டுமல்லாமல் அரச பொறுப்பைப் பிள்ளைக்குக் கொடுக்கப் போகும் மகிழ்வான செய்தியை இவ்வளவு தயக்கத்தோடு தசரதன் உரைக்க வேண்டுமா? எனும் கேள்வியும் நம் மனதில் எழுகிறது. அக்காலத்து அரசர்கள் அரச பதவியை, தமக்கான சுகபோக வாழ்வாய்க் கருதாமல், அதனை சுமையாகவே கருதினர். அதனால்தான் அச்சுமையைத் தனது மகன் மேல் சுமத்துகின்ற தயக்கத்தோடு தசரதன் பேசுகிறான் என்பதனை நாம் அறிதல் வேண்டும். இராமனை நோக்கி தசரதன் தொடர்ந்து பேசுகிறான். ‘உயர்ந்த புதல்வர்களைப் பெற்ற தந்தையர்கள் உலக பாரங்களிலிருந்து நீங்கி, இம்மை, மறுமை இன்பங்களை அடைவர். அப்படியிருக்க தர்ம தேவதையைப் போன்ற உன்னைப் பெற்ற யான், இவ்வுலகியல் துன்பங்களால் வருந்துதல் முறையோ? எனவே விரும்புவாயானால், இந்நாட்டை ஆளும் பொறுப்பினை இனி நீ ஏற்பாயாக?’ என்கிறான். மகனே! எமது சூரிய வம்ச மரபில் வந்த அரசர்கள், தமது முதுமைப்பருவத்தில், பெரிய பூபாரத்தைத் தாங்கும் பொறுப்பைத் தமது புதல்வர்களிடம் ஒப்படைத்து, தாம் துறவு நோக்கிச் செல்லவே முயன்றுள்ளனர். அவ்வழியிலேயே நானும் இப்பொறுப்பை உன்னிடம் தர விரும்புகிறேன். முன்னைப் பிறவிகளில் நான் செய்த நற்பயன்களாலும், இப்பிறவியில் நான் செய்த அறங்களாலும், உயர்ந்தவனான உன்னைப் புதல்வனாய்ப் பெற்றெடுத்தேன். இன்று நீ நாட்டை ஆளும் தகுதி பெற்ற நிலையில், இன்னும் இப்பூபாரத்தை நான் சுமப்பது பெருமையாகாது. ஆகவே இவ்வரசப் பொறுப்பை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்கிறான் தசரதன். `ஆட்சியை ஏற்றுக்கொள்!’ என்று தன் தந்தையாகிய தசரதன் வேண்ட, அதுகேட்ட இராமன், ஆட்சி என்னிடம் வந்ததே என மகிழ்ச்சி அடையாமலும், ஐயோ! இனி இப் பூபாரத்தைச் சுமக்க வேண்டுமே? என வெறுப்படையாமலும் நடுநிலை உணர்வோடு நின்றும், இன்பமோ துன்பமோ, தந்தையின் கட்டளையை ஏற்றுச்செயற்படுவதே தன்னுடைய கடமை என நினைந்தும், தந்தையின் வேண்டுகோளுக்கு இசைந்து, பணிந்து நிற்கிறான்..இராமனின் இசைவை, அவனது முகக்குறிப்பால் அறிந்து மகிழ்ந்த தசரதன், அவனை வாழ்த்தி அனுப்பிவிட்டு, தன் கீழுள்ள சிற்றரசர்களை அழைப்பித்து, தான் இராமனுக்கு முடிசூட்ட எடுத்திருக்கும் முடிவினை அவர்களுக்குக் கூறி, அது பற்றி அவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்கிறான். அரசனது கருத்தைக் கேட்ட சிற்றரசர்கள் அனைவரும், ‘தேன் குடித்த வண்டுகள் போல்’மயங்கி, மகிழ்ந்து தசரதனை நோக்கிப் பேசத் தொடங்குகின்றனர். ‘மன்னவா! இருபத்தொரு தலைமுறையாக, எமது சத்திரிய வம்சத்தினரை அழித்து வந்த, பரசுராமனது வீரத்தைக் கெடுத்து வென்ற இராமனுக்கு, முடிசூட்டுவது பொருத்தமான செயலே. அதுபற்றி நாம் மகிழ்கிறோம்’என்று உரைக்கின்றனர். அவர்கள் சொன்னதைக் கேட்டு உள்ளூர மகிழ்ந்த தசரதன், தன் மகிழ்ச்சியை முகத்தில் காட்டாது, மீண்டும் அந்த அரசர்களை நோக்கி, ‘நான் என் மகன் மேல் கொண்ட அன்பினால் அவனுக்கு ஆட்சியைக் கொடுப்பதாய்ச் சொல்ல, அதுகேட்ட நீங்கள் அனைவரும் ஒருமித்து அதற்குச் சம்மதிக்கிறீர்கள். உங்களது இந்தச் சம்மதம் என்னை மகிழ்விப்பதற்காகச் சொல்லப்பட்டதா? அன்றி உண்மையிலேயே சொல்லப்பட்டதா?’ என்று வினவுகிறான். மீண்டும் அம் மன்னவர்கள் தசரதனை நோக்கி, ‘சக்கரவர்த்தியே! நீங்கள் நினைப்பதுபோல் உங்களை மகிழ்விக்கவேண்டி நாம் எமது சம்மதத்தைக் கூறவில்லை. இராமனின் நற்குணங்களைக் கருத்திற் கொண்டே நாம் எமது சம்மதத்தை உரைத்தோம்’ என்று கூறினர். அதனால் மகிழ்ந்த தசரதன் தன்னிலும் தாழ்ந்த அவ் வேத்தவையோரை நோக்கி, ‘இராமனை என் மகன் என்று கருதாமல், அவனை உங்களது மகனாகவே கருதி, அவன் இப் பூபாரத்தைத் தாங்க துணைசெய்யுங்கள்! இனி அவனை உங்களுக்கு அடைக்கலம் ஆக்குகிறேன்’என்கிறான். தசரதனது அந்த பணிவுரையைக் கேட்டு வேத்தவையோர் மகிழ்வுறுகின்றனர். அவர்களை அனுப்பியபின், இராமனது பட்டாபிஷேகத்திற்குச் சுபமுகூர்த்தம் குறிக்க சோதிடர்களுக்கு உத்தரவிட்டுத் தன் அரண்மனை சேர்கிறான் தசரதன்.(இதிகாசம் வளரும்)