-டாக்டர் சுதா சேஷய்யன்எட்டாவது பிள்ளையை ஆற்றில் எறியாது நிறுத்திக் கொண்ட கங்காதேவி, முன் நிகழ்ந்த வரலாற்றைச் சொன்னாள்.சாந்தனுவுக்குப் புரிந்தது போலவும் இருந்தது; புரியாமலும் குழப்பியது..‘அம்மா, மனைவியாக வந்தாய்; மகப்பேற்றைத் தந்தாய்; வினைப் பயனின் விளைவுகளை உணர்த்தினாய். ஏழு பேரோடு மோட்சம் அடையாது, இங்கு தங்கியிருக்கும் இந்த எட்டாவது பிள்ளையைக் கண்ணும் கருத்துமாக வளர்ப்போம். குரு குலம் தழைக்கும்’, என்று தன் மனத்து ஆசையை சாந்தனு வெளிப்படுத்தினார்.சிரித்தாள் அவள். ‘அரசே, குரு குலத்தின் மேன்மையை மேலும் மேம்படுத்துபவனாக, தனக்கு நிகர் தானே எனும்படியாக, உலகமே பார்த்து வியக்கும்படியாக இப்பிள்ளை இருப்பான். ஆனாலும், குலம் தழைக்கச் செய்யும் விருப்பம் இவனுக்கு இருக்காது’, என்று அவள் உரைத்தவுடன், சாந்தனு சற்றே கலங்கித்தான் போனார். தொடர்ந்து என்ன சொல்வதென்றோ என்ன செய்வதென்றோ அறியாமல் அவர் விழிக்க… அவளே தொடர்ந்தாள்..‘இந்தப் பிள்ளையை இப்போது என்னோடு விண்ணுலகு அழைத்துச் செல்கிறேன். வருணனின் மறுபிறப்பே ஆயினும், என்னோடு தாங்கள் வரவியலாது. இன்னும் பல காலம் பூமியில் வாழ்ந்து, இத்தனை நாட்கள், என்னைத் தட்டிக் கேட்க இயலாது உங்கள் உள்ளத்தையும் உணர்வுகளையும் கட்டிக் காத்தீர்களே, அதற்குப் பிரதியாக, உலக இன்பங்களைத் துய்த்து, இவனுடைய காளைப் பருவத்தில் இவனை மீட்டும் உம்மிடத்தில் ஒப்படைக்கும்போது இவனைக் கண்டு மகிழ்ச்சியடையுங்கள்’, என்று கூறிவிட்டுப் பிள்ளையை வாரியணைத்துக் கொண்டு விடைபெற்றாள்.சாந்தனுவுக்கு பூமியே பாரமானது. கங்கையின் வடிவத்தை ஓவியத்தில் எழுதி, அதையே பார்த்துப் பார்த்து சற்றே பரவசமும் சற்றே ஆதங்கமுமாகக் காலம் தள்ளினார். அவளோடு வாழ்ந்த காலத்தில் பேசிய சொற்களையெல்லாம் எண்ணி எண்ணி அசைபோட்டுக் களித்தார். எதிரில் அவள் இருப்பதாகக் கற்பனை செய்து, அவளோடு பேசி மகிழ்ந்தார். எந்தப் பெண்ணின் முகத்தையும் ஏறெடுத்தும் காணவில்லை. காளைப் பருவத்தில் மகனை அழைத்து வருவேன் என்று சொன்னதைக் கொண்டு, அவள் வருவாள் வருவாள் எனக் காத்திருந்தார்..இப்படியே காலச்சக்கரம் உருண்டோட, அமைச்சர்களும் பிறரும் வற்புறுத்தியதால், வேட்டைக்குப் புறப்பட்டார் சாந்தனு. இருப்பினும், காட்டிற்குள் செல்லாமல், கங்கைக் கரையில் சுற்றி வந்தார். இங்குதானே பூங்கொடியாளாக அந்தப் புனிதவதி வந்தாள் என்று எண்ணியபடி, நீர்ப்பரப்பையே நோக்கியபடி நின்றார்.பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பிரவகித்துக் கொண்டிருந்த கங்கை, அப்படியே நின்றாள். கொப்பளித்துக் கொண்டு நுப்பும் நுரையுமாகப் பாய்வதே கங்கையின் வழக்கம்; அவளின் அபரிமித அழகும்கூட! ஆனால், இப்போதோ… ஏன் இப்படி நிற்கிறாள்? ஆற்று வெள்ளம், ஆடாமல் அசையாமல் அப்படியே நிற்கிறதே, எப்படி?திகைத்துப்போன சாந்தனுவும் மற்றவர்களும் சுற்றுமுற்றும் பார்வையைச் சுழலவிட……. சிலம்பு எனத் திரண்ட தோள் இணையும் விரிந்த நூல் மார்பும் ஆகி முன் நடந்தான் விழி களித்திட ஒரு வீரன்…..மலையெனத் திரண்ட தோள்களும், முப்புரி நூல் வளைந்தோடிய அகன்மார்பும் கொண்டு, கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி வந்தான் அழகிய இளையவீரன் ஒருவன். தன்னைப் போலவே தோற்றம் தருகிறான் என்பதை சாந்தனு உணரவில்லை. ‘சிவனாரின் மகன் முருகனோ? வசந்த காலத்து மன்மதனோ? இந்திரன் புதல்வன் ஜயந்தனோ?’ என்றெல்லாம் பலவாறாகச் சிந்தித்தார்.எதிரில் நிற்பவர் தன்னுடைய இளமை வடிவம் போல் தோற்றம் தருகிறாரே என்று அந்த இளைஞனும் எண்ணவில்லை. தன்னை எதிர்க்கிறார்போலும் என்று நினைத்தவன், அவர்மீது அம்பெய்யவும் மனம் வரவில்லை. மயக்கம் தரக்கூடிய கணையொன்றை எடுத்து, அதற்கான மந்திரத்தை ஓதி, அவர் மீது எய்துவிட்டான். சாந்தனு மன்னர் தரைமீது மயங்கிச் சரிய, அந்த வீரத்திருமகனும், வேகமாக நகர்ந்து, கங்கையின் நீர்த்திவலைகளில் கலந்துவிட்டான். மோகனக் கணையால மறையுடன் மார்புற எழுதி இந்திரத் தனுவோடு இந்திரன் எழிலி இடை மறைந்தனன் எனப் புடையே சிந்திய திவலைச் சிந்துவின் மறைந்தான் அரசனும் மகிதலம் சேர்ந்தான் நீராறாக நின்று தன் அன்புக் கணவனைக் கண்ணுற்ற கங்கை, உள்ளம் உருகிப் போனாள். வீரத்தின் விளைநிலமான சாந்தனு, மண்மீது இப்படியா சரிந்துகிடப்பது? ஓத வெண்திரையின் மதியுடன் உதித்த ஒண் மலர்க்கொடி என ஓடி தூதுளங் கனிவாய் மலர்ந்து இனிது அழைத்து சூடகச் செங்கையால் எடுத்தாள்.பாற்கடலில் சந்திரனுடன் தோன்றிய திருமகள் போன்ற அழகிய வடிவுடன் ஓடி வந்து, தன்னுடைய செம்மையான வாயால் அழைத்து, சூடகம் அணிந்த செங்கையால் தொட்டாள். மயங்கிக் கிடந்த மன்னர் மீது, கருணை மழை பொழிந்தாள். ஆலிங்கனம் செய்தாள். மெல்லக் கண் விழித்த மன்னரிடத்தில், அன்பும் அறிவும் ஒருசேர நின்ற வீரமகனை ஒப்படைத்தாள்.‘அரசரே, இவனே உம்முடைய மகன். பெயர் தேவ விரதன். அன்று நான் அழைத்துப்போன அன்புமகன். வசிட்டரின் உதவியால், மறைகளையும் பெரியோர் உரைத்த சாத்திரங்களையும் கசடறக் கற்றுள்ளான். பரசுராமரிடத்தில் வில் வித்தையும் போர்க்கலையும் பயின்றுள்ளான். இவன் கல்லாத கலையும் காசினியில் இல்லை. இனி இவன் உமது சொத்து. உங்கள் குல வாரிசு’ என்று மகனைக் கையடைப்படுத்தினாள்.தன்னோடு கங்கையும் வரமாட்டாளா என்று சாந்தனு ஏங்க, மீண்டும் ஏதேனும் சொன்னால் அவளைக் காயப்படுத்திவிடுமோ என்று அஞ்ச, மகனை மட்டும் தந்தையிடம் சேர்த்துவிட்டு அந்த மங்கை மறைந்துபோனாள்; நீருக்குள் நிறைந்துபோனாள்..நீர்ப்பெருக்கையே நிறுத்தும் வல்லமையில் அம்பெய்யத் தெரிந்திருந்த அன்பு மகனை, மீண்டும் மீண்டும் கண்களால் தழுவியபடியே, அம்மகனைப் பற்றிக் கொண்டு அரண்மனை திரும்பினார் அரசர்.இந்த தேவவிரதன்தான், பின்னாட்களில் தந்தைக்காகப் பெரும் சங்கல்பம் ஒன்றை மேற்கொள்ளப் போகிறான்(ர்). யார்க்கும் செய்ய முடியாத, எவரும் செய்வதற்குத் தயங்குகிற மிகப் பெரிய செயலைச் சர்வசாதாரணமாகச் செய்து, பீஷ்மர் என்னும் பெயர் பெறப் போகிறார். பாரத தேசத்தார் யாவருக்கும் பிதாமகர் (பாட்டனார்) என்னும் நிலைக்கு உயரப் போகிறார்.குலம் விளங்கச் செய்த அந்தத் தலைமகனுக்கு வாரிசுகள் இல்லை. போகட்டும், அந்தக் கதையைப் பின்னால் பார்க்கலாம்..ஆனால், பீஷ்மரைப் பற்றி, இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கும், அறிந்திருக்கும் தகவல்களிலிருந்து ஒன்றைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆணவம் என்பதோ, அகங்காரம் என்பதோ, கர்வம் என்பதோ பிதாமகருக்குக் கிஞ்சித்தும் இருக்கவில்லை.எப்படி என்கிறீர்களா?பிறந்த சிசுவாக இருந்த நிலையிலேயே, மகனை அள்ளிக்கொண்டு போய்விட்டாள் கங்காதேவி. ஆகாய மங்கையின் அன்புமகனாகவே பிள்ளை வளர்கிறது. தேவலோகத்தில் வளர்கிறது. வசிட்டரும் மாமுனிவர்கள் பலரும் மறைகளை உபதேசிக்கிறார்கள். இன்ன பிற சாத்திரங்களையும் கலைகளையும் விண்ணவரிடமிருந்தே தேவவிரதன் என்னும் சிறுவன் பெறுகிறான். தானும் உலகமெல்லாம் சுழன்று, உலகையும் தனக்குப் பின்னால் சுழலச் செய்யும் வித்தகம் கைவரப் பெற்ற பரசுராமரிடத்தில் அஸ்திர சஸ்திர பயிற்சி பெறுகிறான்.இத்தனை இருந்தும், தான் தேவலோகத்துச் செல்லப்பிள்ளை என்னும் மமதையோ, சின்ன வயதிலேயே எல்லா வசதிகளையும் வாய்ப்புகளையும் பார்த்துவிட்டேன் என்னும் கர்வமோ, எங்காவது என்றைக்காவது எப்போதாவது பீஷ்மரிடம் தென்பட்டதா?.இளமைப் பருவம் வரை விண்ணுலகப் பிள்ளையாக வளர்த்த தாய், சடாரென்று கொணர்ந்து சடுதியில் சாந்தனுவிடம் விட்டுவிட்டாள். திரும்பிப் பார்க்காமல் மறைந்து போனாள். நிலத்தில் நிற்க வைத்துவிட்டாளே என்று பிள்ளை தவித்ததா? ஒட்டாமல் ஒதுங்கி நின்றதா?தந்தை காட்டிய பாதையை ஏற்றுக்கொண்டு, ஊருக்காக உலகுக்காக என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்துகொண்டு பீஷ்மர் வாழ்ந்தார் என்பதுதான் அவரின் பெருஞ்சிறப்பு. வானலோகத்தில் வளர்ந்தவர் – ஆனால், பூவுலக நன்மைக்காகவே வாழ்ந்தவர். யாருக்கும் கிட்டாத அரிய கங்கை, அவரின் தாய் – ஆனாலும், தனக்குக் கிட்டிய பெரும்புண்ணியத்தைப் பிறரிடம் பீற்றிக் கொண்டவர் இல்லை.பூமியில் தர்மமுறைப்படி வாழ்ந்தாலேயே வானலோகத்துப் பெருமைகளைப் பெற்றுவிடலாம் என்பதை நம்பியவர்; வாழ்ந்தும் காட்டியவர். அதனால்தான், இன்றளவும், பூமியில் பிறந்தவர் யாவரும் பிதாமகரின் வாரிசுகளாகவே கருதப்படுகின்றனர். (பாரதம் விரியும்)