- வெ. கணேசன்நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது ஆன்றோர்களின் அனுபவ மொழி. ஆக உயர்ந்த, உன்னதமான செல்வமாக அறியப்படும் பிணியில்லா நல்வாழ்வே யாவராலும், எக்காலத்திலும் விரும்பிப் போற்றப்படுகிறது என்பதை நம்மால் அறியமுடிகிறது..அத்தகைய உடல்நலப்பேறை அருளும் அரனார் எழுந்தருளியுள்ள திருத்தலமாகத் திகழ்கிறது பாளையங்கோட்டை. தமிழ்நாட்டின் ஆக்ஸ்போர்டு எனச் சிறப்பிக்கப்படும் இவ்வூர் கல்வியை மட்டுமன்றி உயரிய ஆன்மிக நெறியையும் காலம் காலமாக வளர்த்து வருகிறது என்பதே உண்மை. தாமிரபரணி பாய்ந்தோடி வளப்படுத்தும் செழிப்பான இவ்வூர் ஆயிரம் ஆண்டு பழம்பெருமைமிக்கது. மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தாமிரபரணியை ‘தண் பொருந்தம்’ என்று கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர். கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இவ்வூர் வேதம் கற்றுணர்ந்த அந்தணர்களுக்குத் தானமளிக்கப்பட்டு ஸ்ரீவல்லப சதுர்வேதி மங்கலம் என வழங்கப்பட்டது. இராஜராஜ சோழனின் ஆட்சியில் அம்மன்னனின் பெயரையும் சேர்த்து இராஜராஜ வளநாட்டு கீழ்களக்கூற்றத்து ஸ்ரீவல்லப சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது. கி.பி. 1600 வரை இப்பெயரே நீடித்திருந்தது. மதுரை நாயக்க மன்னர் ஆட்சியான கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் இப்பகுதி பாளையப்பட்டாக அறிவிக்கப்பட்ட பிறகு கோட்டை ஒன்று உருவாகி அன்று முதல் பாளையங்கோட்டை என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது..ஊரின் மத்தியில் உயர்ந்த திருமதில்கள் சூழ கிழக்குப் பார்த்த வண்ணம் அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை திரிபுராந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சுவாமி, அம்பாள் சந்நதிகள் தனிக் கோவிலாக தனி வாசலுடன் உள்ளது. அதன் வாசல்களில் மூன்று நிலை இராஜகோபுரம் எழிலாகக் காணப்படுகிறது. சுவாமி சந்நதியின் வலப்புறம் அம்பாள் சந்நதி உள்ளது. சுவாமி, அம்பாள் சந்நதிகளுக்கு மத்தியில் குமரக்கடவுள் சந்நதி அமைய, இது சோமாஸ்கந்தர் அமைப்பில் இரு சுற்றுகளுடன் பெருங்கோவிலாகக் காணப்படுகிறது. சோழர், பாண்டியர், சேர மன்னர்கள், விஜயநகர மன்னர்கள் என வெவ்வேறு காலகட்டத்தில் இங்கு திருப்பணி செய்து, தான தர்மங்களை வழங்கியுள்ளனர். இத்தலப் பெருமான் அடியார்களுக்கு ஏற்படும் பிணிகளைப் போக்கி நலமும், வளமும் குறைவின்றி அருள்வதாக ஐதிகம். இந்தச் செய்தியை தலபுராணம் நமக்கு உறுதிப்படுத்துகிறது. இனி அதனை சுருக்கமாகப் பார்ப்போம். ஒரு காலத்தில் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியில் உத்தாலன் என்பவன் நல்லாட்சி நடத்தி வந்தான். ஒருநாள் தனது பட்டத்தரசியோடு அரண்மனை உப்பரிகையில் அளவளாவிக் கொண்டிருந்தான். அதேவேளையில் வீதியில் துறவி ஒருவர் அவசரமாகப் போய்க்கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஏதோ சொல்லி இருவரும் சிரித்துக் கொண்டனர். இந்தக் காட்சியை எதேச்சையாக துறவி கவனித்து விட்டார். அவருக்கு அளவு கடந்த சினம் உண்டானது. அடுத்த கணமே மன்னனைப் பார்த்து அவர் சபிக்க, உடனடியாக மன்னனின் களையான முகமும், தேகமும் அவலட்சணமாய் மாறிப்போனது. இந்தச் சம்பவத்தால் மன்னன் நிலைகுலைந்தான். அரசனும், அரசியும் வாசலுக்கு விரைந்தனர். துறவியைப் பணிந்து மன்னிப்புக்கேட்டு இந்த அவலத்திற்கு விமோசனம் அளிக்குமாறு வேண்டினர். அதற்குப் பதிலளித்த துறவி, ‘தாமிரபரணி நதிக்கரையில் செண்பக வனத்தில் பரம்பொருளான சிவனை பிரதிஷ்டை செய்து வணங்கிவர, தேகம் பழைய நிலையை அடையும்!’ என்றார்..ஒருவாறு நிம்மதிப் பெருமூச்சு விட்ட மன்னன், சிவலிங்கம் ஒன்றை வேண்டி கௌதம முனிவரை பிரார்த்தித்தான். மன்னனின் நிலையை தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்த கௌதமர் அரசன், அரசியை அழைத்து செண்பக வனத்திற்குச் சென்றார். அப்போது வான்வழியே சஞ்சரித்துக் கொண்டிருந்த வாயு மைந்தனை வனத்திற்கு அழைத்து, அங்கே பிரதிஷ்டை செய்வதற்கு காசித் தலத்தில் இருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வரப்பணித்தார். அவ்வண்ணமே செய்து முடித்தான் அஞ்சனை புதல்வன். இந்த லிங்கத்தை வேண்டி இழந்த லட்சணத்தை திரும்பப் பெற்றான் மன்னன். அவ்வேளையில் முனிவர் சமயோசிதமாக இறைவனிடம், ‘பாண்டிய மன்னனின் கோரிக்கைக்குச் செவிசாய்த்துப் பிணித் தீர்த்து நலமும், வளமும் அளித்ததுபோல், காலங்கள்தோறும் இத்தலத்தை நாடி வரும் அடியார்களின் நோய் நொடிகளைத் தீர்த்து நலமளித்துக் காக்கவேண்டும்’ என வேண்டினார். அவ்வண்ணமே வரமளித்தார் இறைவனும். அதனையடுத்து அங்கே இறைவனுக்குக் கற்றளியாக அழகிய கலை வண்ணத்தில் ஒரு கோவிலை எழுப்பினான் மன்னன். அதுவே காலப்போக்கில் வளர்ச்சி கண்டு இன்றைக்குப் பெருங்கோவிலாக உருவெடுத்துள்ளது. சுவாமி, அம்பாள் சந்நதிகளை இணைக்கும் சங்கிலி மண்டபமாக 88 தூண்களைக் கொண்ட பிரமாண்ட முகமண்டபம் உள்ளது. இதில் துவார கணபதி, சுப்பிரமணியர், ஐயப்பன், ஆயிரத்தம்மன் சிலைகள் உள்ளன. ஆயிரத்தம்மனின் திருமேனி காண்போரின் மனதையும், கண்ணையும் கவர்கின்றன. முதலில் இந்த அம்மன் சிலையை மேற்கு ரத வீதியில் உள்ள அம்மன் கோவிலில் மூலவராக பிரதிஷ்டை செய்ய எண்ணி, திரிபுராந்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் சிற்பியைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் அப்போது சிற்பியின் கனவில் தோன்றிய அம்மன், இந்த சிவாலயத்திலேயே தான் எழுந்தருள விரும்புவதாகச் சொன்னதால், தனி சந்நதியில் இங்கு ஆயிரத்தம்மனை வணங்கி வருகின்றனர்.. சுவாமி சந்நதி வாசல் வழியே நுழைந்ததும் கம்பத்தடி மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகிய கட்டமைப்பு காணப்படுகிறது. கம்பத்தடி மண்டபத்தில் செப்புக்கவசம் போர்த்திய கொடிமரம், பலிபீடம், நந்தி தேவர் பீடம் உள்ளன. கொடிமர வடபுறம் நவகிரக சந்நதி உள்ளது. மகாமண்டப வடபுறம் தில்லைக்கூத்தர் சந்நதியும், தென்புறம் மகாகணபதி சந்நதியும் ஒரு வாசலும் உள்ளது. அர்த்த மண்டப வாசலில் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறை மூலவராக சாந்நித்தியமிக்க தெய்வமாக திரிபுராந்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இவரை வழிபட்டு நலமடைந்துள்ளனர். தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது. சித்திரை பிரமோற்சவப் பெருவிழா 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா முக்கிய நிகழ்வாக 6-ஆம் திருநாளில் 63 நாயன்மார்கள் புறப்பாடும், 8-ஆம் திருநாளில் தில்லைக்கூத்தர் பச்சை சாத்தி புறப்பாடும், 9-ம் திருநாளில் பிரம்மோற்சவமும், 10-ஆம் திருநாளில் தீர்த்தவாரியும், 11-ஆம் திருநாளில் தெப்ப உற்சவமும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. சுவாமி சந்நதி, ஆறுமுகர் சந்நதி, அம்பாள் சந்நதி ஆகிய மூன்றின் உள்சுற்றும் திருமாளிகை அமைப்பில் பாண்டிய நாட்டு கலைப்பாணியில் அமைந்துள்ளது. சண்முகர் சந்நதியில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமை மாலையில் திருப்புகழ் பாராயண நிகழ்ச்சி அடியார்களால் நடத்தப்படுகிறது. கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்வின்போது கோமதி அம்பாளின் திருவடிகளில் சாத்தப்படும் வளையல்களை மாங்கல்ய வரம் வேண்டி மங்கையர் பலரும் நம்பிக்கையோடு வாங்கிச் செல்வர். இதனால் வெகு விரைவில் திருமண யோகம் கூடிவிடுவதாக ஐதிகம். கோமதி அம்பாள் வலக்கையில் நீலோத்பவ மலர் ஏந்தியும், இடக்கையை தொங்கவிட்டபடியும் எழுந்தருளி இருக்கிறாள். ஐப்பசி மாதம் திருக்கல்யாண உற்சவம் 10 நாள் நடைபெறும். அதில் 10-ஆவது நாளன்று திருக்கல்யாணம் நடைபெறும். திருவாதிரைத் திருநாள் பத்துநாள் விழாவாக நடைபெறுகிறது. தைப்பூசத்தையொட்டி தீர்த்தவாரி நடைபெறும். கோவிலின் வடபுறம் புராதன தெப்பக்குளம் உள்ளது. அது நீண்ட காலத்திற்குப் பின் தற்போது புனரமைக்கப்பட்டு ரம்யமாய்க் காட்சியளிக்கிறது. மூலவர், அம்பாள், சுப்பிரமணியர் சந்நதி விமானங்கள் மற்றும் சுவாமி, அம்பாள் ராஜகோபுரங்கள் அனைத்தும் திருப்பணிக்காக தற்போது பாலாலயம் செய்யப்பட்டுள்ளது..மாதம்தோறும் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மாதாந்திர கார்த்திகை நட்சத்திர நாளில் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதி ஆங்கில மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் உழவாரப் பணியும், இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவாசக முற்றோதல் நிகழ்வும் நடைபெறுகிறது. தலவிருட்சம் வில்வம். வெளிச்சுற்று முழுவதும் மரங்கள் செழித்து வளர்ந்து காணப்படுகிறது. கடன் தொல்லையில் சிக்கி மீளமுடியாமல் தவித்துக் கிடப்பவர்கள் இத்தல மூலவருக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து மனமுருகி வழிபட்டுச் செல்கின்றனர். இந்த பிரார்த்தனைக்கு பரம்பொருள் மனமிரங்கி அவர்கள் வாழ்க்கையில் புதிய பாதையை அமைத்து நிம்மதியையும், கடன் இல்லா வாழ்க்கையையும் தந்தருள்வதாக இங்கு கூடும் பக்தர்கள் பலரும் நம்பிக்கையோடு சொல்லி மகிழ்கின்றனர். எங்கே இருக்கு?திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.தரிசன நேரம்காலை 6.30 – பகல் 12; மாலை 5 – இரவு 9.