தூய அன்போடு தம்மிடம் பக்தி கொண்டவர்களை அந்த பரந்தாமன் ஆதரித்துக் காத்து நிற்பான் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அந்த வகையில் தன் அடியார் ஒருவரின் பக்தியை மெச்சி, அவரது கனவில் தோன்றி, தன் இருப்பிடத்தை உணர்த்திய சம்பவம் நடந்த திருத்தலம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வெளிவயல் ஆகும். பாண்டியர் ஆட்சிக்காலத்தில் மிழலைக் கூற்றம் என்னும் உள்நாட்டுப் பிரிவில் இப்பகுதி அடங்கியிருந்தது. அவ்வேளையில், இவ்வூர் வேளிர்வயல் என அழைக்கப்பட்டது. இந்த நெய்தல் நிலப்பகுதியில் பொட்டகவயல், அச்சுதவயல், அரண்மனை சிறுவயல், கிழவயல் என வயல்களின் பெயரால் பல ஊர்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு காலத்தில் வேளிர்வயல் என அழைக்கப்பட்ட இவ்வூர், பின்னர் மருவி வெளிவயல் என்றானது. முழுக்க முழுக்க மழை நீரால் பெருகி நிறையும் குளம் மற்றும் ஏரிப்பாசனமே இந்தப் பகுதியில் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. ஊருக்கு மேற்கே, ஏரிக்கரையில் கிழக்குப் பார்த்த வண்ணம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. தெற்குப் பக்கமும் ஒரு வாசல் உள்ளது. எண்ணூறு ஆண்டு பழம்பெருமைமிக்க இக்கோயில் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை சிறிய அளவிலான கோயிலாகவே இருந்து வந்தது. அவ்வேளையில், கலைநயமிக்க மூலவர் சிலை காணாமல் போய்விட்டது. ஆனாலும், ஊர்மக்களின் விடாமுயற்சியால் அந்தச் சிலை கண்டுபிடிக்கப்பட்டு மறுபடியும் பூர்வீக இடத்தில் வந்து அமர்வதற்கு 52 ஆண்டுகள் கடந்துவிட்டன..இந்நிலையில், பழுதடைந்த கோயிலை பெரும் பொருள்செலவில் புதிய வடிவமைப்பில் கட்டி சம்ப்ரோக்ஷணம் செய்து வைத்தனர். கோயிலுக்கு எதிரே விநாயகர் சந்நதியும், தீர்த்தக்குளமும் உள்ளன. முக மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் கோயில் அமைந்துள்ளது. முகமண்டபம் எதிரே கருடாழ்வார் சந்நதி உள்ளது. பிரதான வாசல் சாலக்கோபுர அமைப்புடன் காணப்படுகிறது. மகா மண்டப விதான உட்சுவரில் விஷ்ணுவின் தசாவதாரக் காட்சி நுட்பமான சிற்பங்களாக அமைந்துள்ளன. மகாமண்டபம் கிழக்கே சுவரின் உச்சியில் பிரமாண்ட நிலைக்கண்ணாடி உள்ளது. இதனை சேவார்த்தி ஒருவர் நேர்த்திக்கடனாகச் செலுத்தியுள்ளார். அவரை இத்தலத்திற்கு பெருமாள் வரவழைத்தது ஓர் ஆச்சர்ய சம்பவமாகும். வெளிவயலின் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த அந்த விஷ்ணு பக்தர் வருடம் தவறாமல் திருப்பதி சென்று ஏழுமலையானின் திவ்யதரிசனம் கண்டு மகிழ்ந்து வருபவர். ஏதோ காரணத்தால் ஒரு வருடம் அவரால் திருமலை சென்று தரிசனம் செய்யமுடியாமல் போய்விட்டது. அவ்வேளையில் ஒருநாள் அவர் கனவில் பெருமாள் தோன்றி, “இனிமேல் ஆண்டுதோறும் நெடுந்தூரம் பயணித்து திருமலை வந்து என்னை தரிசிக்கவேண்டாம். உன் ஊருக்கு அருகே வயல்வெளிகளுக்கு மத்தியில் சமீபத்தில் மகாசம்ப்ரோக்ஷணம் நடந்த கோயிலில் நான் எழுந்தருளியிருக்கிறேன். அங்கு வந்து என்னை வணங்கினாலே போதுமானது.” என்று அசரீரியாகச் சொல்லி மறைந்தார்.மறுநாள் பொழுது விடிந்ததும் அந்த பக்தர் ஆவலோடு கிளம்பி அக்கம்பக்கம் விசாரித்து ஒருவழியாக வெளிவயல் கோயிலுக்கு வந்து சேர்ந்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரது கண்களையே நம்ப முடியவில்லை. ஆம்! திருப்பதி ஏழுமலையானின் திவ்யதரிசனம் காண்பது மாதிரியே இத்தலத்தில் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளியிருந்தார். அதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார். அன்றுமுதல், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் சேவைசாதிக்கும் ஆதிகேசவப்பெருமாளை சனிக்கிழமைகளில் சென்று சேவிப்பதை வழக்கமாக்கிக்கொண்டார். அவரது அனைத்து கோரிக்கைகளையும் இப்பெருமாள் நிறைவேற்றி வைத்தார்..மகாமண்டப வடபுறம் சொர்க்கவாசல் உள்ளது. அர்த்தமண்டப வாசலில் துவாரபாலகரும், அர்த்த மண்டபத்தில் சேனை முதலியார், நம்மாழ்வார், இராமானுஜர், மணவாள மாமுனிகள் சந்நதியும் உள்ளது. கருவறை மூலவராக நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் அனைத்து பேறுகளை அருளும் மிகப்பெரும் வரப்பிரசாதியாக எழுந்தருளியுள்ளார். பாஞ்சராத்ர ஆகமப்படி தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. தேவகோட்டத்தில் தசாவதார மூர்த்திகளின் விக்ரகங்கள் உள்ளன. கோயிலின் வடபுறம் ஆஞ்சநேயருக்கு தனிக்கோயில் உள்ளது. சித்திரை தமிழ் வருடப்பிறப்பு, ஆனி உத்திரத்தில் வருஷாபிஷேகம், விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் திருமஞ்சனம், கடைசி சனிக்கிழமையன்று கருடசேவை, அன்னதானம், கார்த்திகை மகாதீபம், மார்கழி 30 நாட்கள் திருப்பள்ளியெழுச்சி, வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், நரசிம்ம ஜெயந்தி மற்றும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது. வெளிவயலைச் சுற்றியுள்ள முத்துக்குடா, பொன்பேத்தி, மீமீசல், ஆலத்தூர், ஆர்.புதுப்பட்டிணம், நிறைமங்கலம், நாட்டாணி, புரசக்குடி, அரியனேந்தல் ஆகிய ஊர் மக்கள் தங்கள் வீட்டு சுபகாரியங்களை இத்தலத்தில் வைத்து நடத்துவதை மங்கல நிகழ்வாகக் கருதுகின்றனர். முக்கிய விழாக்களில் குடும்பத்தோடு வந்து ஆதிகேசவப்பெருமாளை தரிசித்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எங்கே இருக்கு?புதுக்கோட்டை மாவட்டம், மீமீசல் - அறந்தாங்கி நெடுஞ்சாலையில் 6 கி.மீ. தொலைவில் வெளிவயல் அமைந்துள்ளது. தரிசன நேரம்காலை 7 – பகல் 10.30. கோயில் அருகே அர்ச்சகர் குடியிருப்பு உள்ளதால், அவரைத் தொடர்பு கொண்டால் உடனடியாக வந்து தரிசனம் செய்துவைப்பார்.- வெ. கணேசன்