-ஆதலையூர் சூரியகுமார்தகுதியும் திறமையும் இருந்தும் உரிய பதவி கிடைக்கவில்லையே என்று ஏங்குபவரா நீங்கள்? அல்லது எல்லோருக்கும் கிடைக்கும் பதவி உயர்வு எனக்கு மட்டும் தாமதமாகிறது என வருத்தப்படுபவரா நீங்கள்? நியாயமான பணிசார்ந்த உங்கள் கோரிக்கைகள் எதுவானாலும், அதை விரைவில் நிறைவேற்றித் தரும் வரப்பிரசாதியாக பரமன் எழுந்தருளியுள்ள தலம், பட்டாபிஷேகபுரம்.கும்பகோணம் அருகே இராமாயணத்தோடு தொடர்புடைய பல ஊர்கள் உள்ளன. அதில் ராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட தலம் பட்டாபிஷேகபுரம் என வழங்கப்பட்டு தற்போது வடக்குப் பட்டம் என அழைக்கப்படுகிறது..இறைவன் பசுவாக மாறி அமர்ந்த தலங்களும், பார்வதி தேவி பசுவாக உருவெடுத்து இறைவனை வழிபட்ட தலங்களும், பசுவிற்கு இறைவன் வரம் அளித்த தலங்களும் நவ பசுபதீஸ்வரர் தலங்களாகக் கருதப்படுகின்றன. அதில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது.இந்த பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வருகிற 10.9.2023, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.பசுபதீஸ்வரரை தரிசிப்பதற்கு முன்னர் இராமர் சம்பந்தப்பட்ட சில விஷயங்களைப் பார்த்துவிடுவோம்.வடக்குப்பட்டு கிராமத்தின் வடக்குத் திசையில் லட்சுமணன் கோடு கிழித்த கோடு கிழியூர் உள்ளது. மேலும் இக்கிராமத்தின் அருகே பொன்மான் மேய்ந்த நல்லூர் என்ற ஓர் ஊர் உள்ளது. இதுதான் சீதாப்பிராட்டியார் பொன்மானாக வந்த மாயமானைக் கண்ட இடம்.பசுபதீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள இன்னொரு ஊர் சோலைப்பூஞ்சேரி. இந்த இடம் பல வண்ணப் பூக்கள் நிறைந்த சோலையாக இருந்திருக்கிறது. இங்குதான் சீதாதேவி தனது தினசரி பூஜைக்காக பூக்களைப் பறித்திருக்கிறார்..வடக்குப் பட்டம் கிராமத்தில் பாயும் வெட்டாறு நதிக்கரையில் அமைந்துள்ள ஏர்வாடி, இராவணன் தேரில் வந்து இறங்கி பிறகு தனது வேடத்தை மாற்றிய இடம். வடக்குப் பட்டம் அருகில் இருக்கும் இன்னொரு ஊரின் பெயர் இராமநத்தம். இதை நடுத்திட்டு என்றும் வழங்குகிறார்கள். சீதாதேவியை இராவணன் கவர்ந்து சென்றதை நினைத்து வருந்தி இராமபிரான் தன்னை தனிமைப்படுத்திய இடம். வடக்குப் பட்டம் கிராமம் வெட்டாற்றின் கரையில் உள்ள இன்னொரு ஊர் சங்கராம்பேட்டை. பொன்மானாக வந்த மாரீசனை ராமபிரான் தனது அம்பு கொண்டு வீழ்த்திய போது அவன் சங்கரா என்று ஓலமிட்டு விழுந்த இடம்தான் பின்னர் சங்கராம்பேட்டை என்று வழங்கப்படுகிறது.வடக்குப் பட்டம் கிராமத்தின் அருகில் உள்ள இன்னொரு ஊர் சுரைக்காயூர். இந்த ஊரில்தான் ஸ்ரீராமர் மற்றும் லட்சுமணரின் வில்லிற்கான (தாவர) கட்டுக்கொடி ஒன்றை இறைவன் தயார் செய்து கொடுத்திருக்கிறார். அந்தக் கொடியைக் கொண்டே இருவரின் வில்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. பிறகு அந்தக் கொடியைப் பயன்படுத்தி கற்களைக் கட்டி கடலில் மிதக்கவிட்டு இலங்கைக்குப் பாலம் அமைத்திருக்கின்றனர். .அந்த வகையான கட்டுக்கொடி இன்று வரை இந்த ஊரில் மட்டுமே வளர்கிறது. கொடியைக் கொண்டு வில் தயாரித்து பின்னர் இராவணனை எதிர்க்க தனது புஜங்களை வலிமையாக்க ஸ்ரீராமர் சுரைக்காய் ஊரிலுள்ள இறைவனை பூஜை செய்து வழிபட்டுள்ளார்.வடக்குப் பட்டம் கிராமத்தின் அருகில் உள்ள இன்னொரு ஊர் திருக்கருகாவூர். சீதாதேவியை விமானத்தில் கவர்ந்து சென்ற இராவணனிடமிருந்து தன்னுடைய கற்பைக் காப்பாற்ற அவர் போராடியபோது இவ்வூர் அம்மனை வேண்டினார். அம்பிகையும் அருள்புரிந்தார். அதனால் இவ்வூர் திருக்கருகாவூர் என்று பெயர் பெற்றது. அதுபோல சீதாதேவியின் கற்பை ரட்சிக்க வேண்டியதால் இவ்வூர் அம்பிகை கர்ப்பரட்சாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்.இப்பகுதியில் இரும்புத்தலை என்ற ஓர் ஊர் இருக்கிறது. மாரீசன் என்ற பொன் மானின் தலை விழுந்த இடம் இது. மேலும் இவ்வூரின் அருகில் கோவிந்தகுடி என்ற ஒரு ஊர் இருக்கிறது. கோபமாக இருந்த ஸ்ரீராமர் கோபத்துடன் வந்து தங்கியிருந்த இடம் இது. கோன் வந்த குடி என்ற பொருளில் கோவிந்தகுடி என்ற பெயர் வந்திருக்கிறது. அந்த வகையில் ராவண வதத்தை முடித்துவிட்டு ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட ஊர் தான் இது..நானூறு ஆண்டுகளுக்கு முன்பு நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோயில். பட்டம் என்றால் நல்ல சேறு குழப்பிய நாற்றங்கால் நிலம் எனப் பெயர். முதலில் பட்டம் என்ற ஒரே பெயருடன் நான்கு தெருக்களை உடைய சிறிய கிராமமாக இருந்தது. பிறகு நிர்வாக வசதிக்காக வடக்குப் பட்டம், தெற்குப் பட்டம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.வடக்குப் பட்டத்தின் நான்கு திசைகளிலும் செல்லியம்மன், உஜ்ஜயினி மகாகாளி, ஐயனாரப்பன், சாந்தப்ப விநாயகர் ஆகியோர் காவல் தெய்வங்களாக வீற்றிருக்கின்றனர். அவர்களுக்கு மத்தியில் ஊரிலுள்ள பெரிய அல்லிக்குளத்தின் மேற்குக் கரையில் கிழக்கு நோக்கி அனுபம குஜநாயகி சமேத பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.உயரமான நுழைவாயிலின் மேலே சுதையாலான கைலாயக் காட்சி நம்மை வரவேற்கிறது. உள்ளே மண்டபத்தின் முன்புள்ள நந்தியம் பெருமானை வணங்கி விட்டு உள்ளே சென்றால் கூம்பு வடிவிலான மகா மண்டபம், தொடர்ந்து அர்த்தமண்டபம். அதன் நுழைவாயிலில் வலதுபுறம் முருகப்பெருமானும், இடது புறம் ஸ்ரீ வல்லப கணபதியும் காட்சிதருகிறார்கள். பத்துக் கரங்களுடன் கூடிய இவரை வணங்கினால் அனைத்து பேறுகளும் கிடைக்கும். வல்லப கணபதி வரம் தரும் கணபதியாக இங்கு அருள்பாலிக்கிறார்..கருவறையில் இறைவன் பசுபதீஸ்வரர் லிங்க ரூபமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மூலவரை ஆசைதீர தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தால் மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி தனிச் சன்னதியில் எழுந்தருளியுள்ளாள் அனுபம குஜநாயகி அம்பாள். பிராகாரத்தில் தெற்கு நோக்கி தக்ஷிணாமூர்த்தியும், மேற்கு திசையில் லிங்கோத்பவர் இருக்க வேண்டிய இடத்தில் நாகநாதரும் அமர்ந்திருக்கிறார்கள். நாகநாதருக்கு எதிரே தனிச் சன்னதியில் முருகப்பெருமான் ஆறுமுகக் கடவுளாக வள்ளி, தெய்வானையுடன் அருள்கிறார். மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.கோயிலின் மேற்கு திசையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் எழுந்தருளி இருக்கிறார். மேலும் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகக் கோலத்தில் சகல பரிவாரங்களுடன் தனிச் சன்னதியில் கோயில் கொண்டுள்ளார். இதுவே ஸ்ரீ ராமர் இங்கு பட்டாபிஷேகம் செய்து கொண்டதற்கான ஆதாரமாக விளங்குகிறது..பசுபதீஸ்வரரை வேண்டிக்கொண்டால் பதவி உயர்வு, விரும்பிய பதவி விரைவில் உங்களைத் தேடிவரும். அரசு அதிகாரிகள், அரசியலில் பெரிய பதவிகளை எதிர்பார்த்து இருப்பவர்கள் தொடர்ந்து ஆறு வாரங்கள் கோயிலுக்கு வந்து அனுபம குஜநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் ஆலயம் வந்து பரமனையும், பட்டாபிஷேகக் கோலத்தில் இருக்கும் ஸ்ரீ ராமரையும் தரிசித்தால் எதிர்பார்த்த பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படி வழிபட்டு பெரிய பதவி பெற்ற பல அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தொடர்ந்து இக்கோயிலுக்கு வந்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்..எங்கே இருக்கு?கும்பகோணத்திலிருந்து ஆவூர் வழியாக அம்மாபேட்டை செல்லும் சாலையில் சந்திரசேகரபுரத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் வடக்குப் பட்டம் உள்ளது.தரிசன நேரம்காலை 7 – 11; மாலை 4 – இரவு 8.