பண்டைய நகரமான துவாரகை குஜராத் மாநிலத்தின் தேவபூமியாகும். ஸ்ரீகிருஷ்ணரால் நிறுவப்பட்ட இத்தலம் நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று. கண்ணன் மன்னனாய் ஆட்சிசெலுத்திய இடம்.திருக்குடந்தைக்குத் தென்கிழக்கே அக்காலத்தில் செண்பகவனம் ஒன்று இருந்தது. அங்கே ஆயிரத்தெட்டு முனிவர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களுள் தலைசிறந்தவராக வாஹிமுனி என்னும் முனிவர் இருந்தார். அவரின் வாரிசுகள் கோபிலர், கோபிரளயர் என்ற இரண்டு தவசிகள். அவர்கள் கண்ணனின் லீலைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரை தரிசிக்க துவாரகைக்கு புறப்பட்டனர்.வழியில் இரு முனிவர்களையும் சந்தித்த நாரதர், ஸ்ரீகிருஷ்ணபகவானின் அவதார நோக்கம் பூர்த்தியடைந்ததால் அவர் வைகுந்தம் திரும்பி விட்டதாகக் கூறக் கேட்டு வருத்தம் அடைந்தனர். அவர்களிடம் நாரதர், செண்பகாரண்யம் சென்று அங்குள்ள ஹரித்ரா நதியில் நீராடி தவம் செய்தால் கண்ணபிரானை தரிசித்து மோட்சமும் அடையலாம் என்றார். முனிவர்களும் அவ்வாறே அங்கு சென்று கடுமையான தவத்தில் ஈடுபட, பகவான் கிருஷ்ணர் காட்சி தந்தார்."நாங்கள் ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தின் சிறப்புமிக்க லீலைகளை தரிசிக்க துவாரகை நோக்கிக் கிளம்பினோம். ஆகவே எங்களுக்குத் தங்களின் லீலைகளைக் காட்டி அருளவேண்டும்!" என்று அவர்கள் இருவரும் வேண்டினர். அதனால் ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் தொடங்கி, கீதோபதேசம் வரையிலான முப்பத்திரண்டு லீலைகளையும் அவர்களுக்காக மீண்டும் நடத்திக் காட்டினார் கண்ணபிரான்..கண்ணனின் லீலைகள்:ஸ்ரீகிருஷ்ணரின் பெற்றோர் வாசுதேவர், தேவகி. இவ்விருவரையும் கம்சன் சிறையில் அடைத்தபோது பெருமாள் அவர்கள் முன்பு தோன்றி, தானே அவர்களுக்குப் பிள்ளையாகப் பிறக்கப்போவதாகக் கூறினார். இதுவே அவரது முதல் லீலை. தனது லீலைகளைக் காண விரும்பிய கோபிலர், கோபிரளயருக்கு முதலில் வாசுதேவராகக் காட்சி தந்தார். முப்பத்திரண்டாவது லீலையாக கோகுலத்தில் பசுக்கள் மேய்க்கும் இடையனாகக் காட்சி தந்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் இக்கோவிலில் மூலவர் "வாசுதேவர்" என்ற பெயரிலும் காட்சி தர, முனிவர்கள் அவரைத் தொழுது கலியுக மாந்தர்கள் கண்டு உய்ய இத்தலத்திலேயே நிரந்தர வாசம் செய்து அருளவேண்டுமென வேண்டிக் கொண்டனர். அதன்படி அங்கேயே ஸ்ரீகிருஷ்ணர் நிரந்தரமாக எழுந்தருளினார்.கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு:தற்காலத்தில் மன்னார்குடி என்று அழைக்கப்படும் செண்பகாரண்யத்தில் அமைந்துள்ள ஸ்ரீகண்ணபிரானின் கோவில் கி.பி. 1070 – 1125 ஆம் ஆண்டு குலோத்துங்கச் சோழரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு, அவருக்குப் பின் வந்த பல்வேறு சோழ மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே வந்துள்ளது. பின்னர், நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 7 பிராகாரங்கள், 7 மண்டபங்கள், 9 தீர்த்தங்களுடன் 23 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது கோவில். பொதுவாக எல்லா ராஜகோபுரத்திலும் சுதைச் சிற்பங்கள் நிறைந்து இருக்கும். ஆனால் இந்த கோவிலில் பிரதான ராஜகோபுரத்தில் சுதைச் சிற்பங்கள் கீழிருந்து முதல் ஆறு நிலைகளில் இல்லை..தீர்த்தம்:கோவிலின் குளம் ஹரித்திரா நதி என்ற பெயரோடு 1,158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டு பரந்து விரிந்துள்ளது. ஸ்ரீகிருஷ்ணர் நிகழ்த்திய முப்பத்திரண்டு லீலைகளில் கோபியருடன் ஜலக்ரீடை ஆடியதும் ஒன்று. அப்பொழுது கோபியர் பூசியிருந்த மஞ்சள், நதி நீரில் கலந்ததால்தான் ஹரித்ரா (மஞ்சள்) நதியென்ற பெயர் வந்ததாம். இது தவிர துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கரத் தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் இங்கு உண்டு. மூர்த்தி:கருவறை மூலவர் வாசுதேவன் என்ற திருநாமத்தோடு ஸ்ரீதேவி, பூதேவி உடனிருக்க 12 அடி உயரத்துடன் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார். உற்சவர் ஸ்ரீராஜகோபாலசுவாமி சோழர் காலத்தைச் சேர்ந்த செப்புத்திருமேனியாக இடையன் கோலத்தில் பாலகனாகக் காட்சி தருகிறார். அழகிய வேஷ்டி ஒன்றை அணிந்து, அதையே தலைப்பாகை போல் முண்டாஸாகச் சுருட்டிக் கட்டிக் கொண்டுள்ளார். வலது கையில் செண்டு எனப்படும் சாட்டை வைத்திருக்கிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகியவற்றை அணிந்திருக்கிறார். அவரோடு ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன. ஸ்ரீகிருஷ்ணர், பலராமர் இருவரையும் அழிப்பதற்காகக் குவாலயபீடம் என்னும் யானையைக் கம்சன் ஏவிவிட்டான். ஸ்ரீகிருஷ்ணர் அந்த யானையின் தந்தத்தை ஒடித்து அதனை அடக்கினார். அதனால் இவர் இடது கையில் தந்தமும் இருக்கிறது.ஒருசமயம் ஸ்ரீகிருஷ்ணர், யமுனையில் நீராடிக்கொண்டிருந்த கோபியருக்கு இடையே ஒரு போட்டி வைத்தார். கோபியர் நீராடிவிட்டு தங்களது ஆடை, ஆபரணங்களை சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டி! போட்டி துவங்கியதும், ஏற்கனவே கிருஷ்ணர், ஒரு கோபியின் தாடங்கத்தை (காதணியை) எடுத்து அணிந்துகொண்டார். கோபியர்களோ அதைக் கவனிக்காமல் தேடிக் கொண்டே இருந்தனர். இறுதியில் கண்ணனின் காதில் அது இருக்கும் அழகைப் பார்த்து நகைத்து, ஆனந்தம் கொண்டனர். இதன் அடிப்படையில் இங்கு ராஜகோபாலர் வலது காதில் குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அணிந்திருக்கிறார்..தனிக்கோவில் நாச்சியார் ஸ்ரீசெங்கமலத் தாயார்:இவருக்கு செண்பகலட்சுமி, ஹேமாம்புஜநாயகி, ரக்தாப்ஜநாயகி என்னும் பெயர்களும் உண்டு. இத்தாயார் படிதாண்டாப் பத்தினியாவார். இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தன்று செங்கமலத் தாயார் தேரில் எழுந்தருளும் உள்பிராகாரத் தேரோட்டம் நடைபெறும். ஊர்ப்பெயர்கள்: சோழர் காலத்தில் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த நல்லோர்கள் இங்கு வாழ்ந்தமையால் மன்னனின் பெயரோடு சேர்த்து ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த வனமாக காணப்பட்டதனால் செண்பகாரண்ய க்ஷேத்திரம் எனவும், குலோத்துங்கச்சோழன் திருத்தி அமைத்த கோவிலாகையால் குலோத்துங்கச் சோழ விண்ணகரம் என்றும், ஸ்ரீராஜகோபாலஸ்வாமி கோயில் கொண்டிருப்பதால் ராஜமன்னார்குடி என்றும், மன்னர்கள் ஸ்ரீகோபாலனுக்குக் கோயில் கட்டியதால் மன்னார்கோயில் என்றும் இம்மன்னார்குடித் திருத்தலம் அழைக்கப்படுகின்றது. மேலும் சுத்தவல்லி வளநாடு, வண்துவராபதி, வசுதேவபுரி, தென்நாட்டு துவாரகை என்ற காரணப்பெயர்களிலும் இத்தலம் அழைக்கப்படுகிறது. .விஜயராகவ நாயக்கரின் பக்தி: ஸ்ரீஇராஜகோபால சுவாமிக்கு மன்னார் என்ற பெயர் உண்டு. அவரை தனது குல தெய்வமாகக் கருதிய விஜயராகவ நாயக்கர் ‘மன்னாரு தாசன்’எனப்பட்டார். நாட்டியம், நாடகம் போன்ற கலைகளில் ஆர்வமுடைய விஜயராகவ நாயக்கர், தான் தெலுங்கில் இயற்றிய பல படைப்புகளை ஸ்ரீஇராஜகோபால சுவாமியின் திருவடிகளுக்கே சமர்ப்பணம் செய்துள்ளார். அது மட்டுமின்றி அவர் இயற்றிய பல நாடகங்களும் இத்திருக்கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்திலேயே அரங்கேற்றப்பட்டன.விஜயராகவ நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் இத்திருக்கோவிலுக்குப் பல கோபுரங்களும், மண்டபங்களும், குளங்களும் கட்டியதால் இன்றும் இக்கோவிலில் இராப்பத்து, பகல்பத்து உற்சவத்தின்போது ஸ்ரீஇராஜகோபால சுவாமிக்கு விஜயராகவ நாயக்கர் போன்ற அலங்காரம் செய்து, அவரது பெயரைச் சொல்லிக் கட்டியம் கூறுகின்றனர்..வளர் கோவில்:"வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு!" என ஒவ்வொரு ஊரின் சிறப்பையும் சொல்லி வரும் போது அழகிய கட்டுமானத்துடன் இக்கோவில் அமைந்திருப்பதால் அது தனிச் சிறப்பாகக் கொள்ளப்படுகிறது. மன்னை ராஜகோபாலனின் திருவுருவம் பசுவும் கன்றும் சூழ இருக்கும். இவ்வுலகில் மாடாகவும் கன்றாகவும் இருக்கும் மக்களைக் காக்க வலக்கரம் செண்டும் இடக்கரத்தினை ஜீவன் எனும் மாட்டின் மீதும் வைத்துக் காக்கின்றான் என்பது தத்துவபூர்வமான சிறப்பு விளக்கமாகும்.திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான பிரார்த்தனை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அபிமானத்தலம், மன்னார்குடி. இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீராஜகோபாலப்பெருமாள் பலருக்கு குலதெய்வம். அவர்களால் மொட்டையடித்தல், காது குத்துதல், துலாபாரத்தில் எடைக்கு எடை பொருள் வழங்குதல் போன்ற பல்வேறு பிரார்த்தனைகள் இங்கு நிறைவேற்றப்படுகின்றன. மன்னார்குடி நகரமே கோவிலைச் சுற்றி அமைந்துள்ளது.ராஜேந்திர சோழனின் மகன் இராஜாதிராஜ சோழனால் கட்டப்பட்டதால் ’இராஜாதிராஜ விண்ணகரம்’எனவும், பின்னர் உட்பிராகாரம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டதால் ’குலோத்துங்கச் சோழ விண்ணகரம்’என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு. பதினாறாம் நூற்றாண்டின் முடிவில் நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில் அச்சுதப்ப நாயக்கரால் இங்கு கருடத்வஜ ஸ்தம்பம் நிறுவப்பட்டது. கி.பி. 1633 - 1673 ஆம் ஆண்டுகளில் விஜயராகவ நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் வெளியே இருக்கும் பெரிய இராஜகோபுரம், ஆயிரங்கால் மண்டபம் போன்றவை கட்டப்பட்டன..விழாமிகு மன்னை:ஒவ்வொரு வாரமும் புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மக்கள் அதிக அளவில் தரிசனத்திற்கு வரும் இக்கோவிலில் ஆண்டின் எல்லா நாட்களிலும் ஏதாவது ஒரு உற்சவம் நடந்து கொண்டிருக்கும். குறிப்பாக விமரிசையாக சித்திரையில் கோடை உற்சவம் பத்து நாட்கள்; வைகாசியில் வசந்த உற்சவம் பத்து நாட்கள் நடைபெறுகின்றன. இதில் பத்தாவது நாளாகிய பெளர்ணமியன்று கருடசேவை நடைபெறும். ஆனி மாதம் தெப்போற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். இதில் ஒன்பதாம் நாள் பெளர்ணமியன்று ஹரித்ராநதி குளத்தில் தெப்பம் நடைபெறும்..ஆடியில் ஆடிப்பூரம் திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படும். அம்மாதத்திலேயே செங்கமலத் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். இங்கு வெண்ணெய்த்தாழி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. ஆவணியில் கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி திருமஞ்சனம், உறியடி, வழுக்குமரம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். பவித்ரோற்சவம் பத்து நாட்களும், புரட்டாசியில் நவராத்திரி பத்து நாட்களும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசியில் கோலாட்ட உற்சவம், தீபாவளி உற்சவம் ஆகியவையும், கார்த்திகையில் சொக்கப் பனை, மார்கழியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்புடன் இருபது நாட்கள் அத்யயன உற்சவம் நடைபெறும். தையில் பொங்கல் உற்சவம் பத்துநாட்கள், ஸ்ரீசெங்கமலத்தாயார் கனுப்பிடியுடன் நடைபெறும். மாசி மாதத்தில் டோலோற்சவம் (ஊஞ்சல் திருவிழா) பத்து நாட்களும், பங்குனியில் பதினெட்டு நாட்கள் பிரம்மோற்சவம் மற்றும் ஆழ்வார் ஆசாரியர்கள் உற்சவங்கள் மிகவும் சிறப்பாகவே இங்கு நடைபெறுகின்றன..முதலாம் இராஜராஜன் காலத்தில் இவ்வூர் உருவாகியதாகக் கருதப்படுகிறது. அது முதல் ஏறக்குறைய பதினேழாம் நூற்றாண்டுவரை பல்வேறு மன்னர்கள் இந்தத் திருக்கோவிலுக்குச் செய்துள்ள திருப்பணிகளைப் பற்றிய விவரங்களைக் கல்வெட்டுகள் மூலமாக நாம் அறிகிறோம். இப்பதிவுகள் இன்றும் நீடித்து நிலைத்து நின்று மன்னார்குடி திருத்தலத்தின் புகழையும், தமிழகத்தின் பெருமையையும் பறைசாற்றுகின்றன.எங்கே இருக்கு?திருவாரூர் மாவட்டத்திலுள்ள பெரிய நகரம் மன்னார்குடி.தரிசன நேரம்காலை 6.30 – பகல் 12; மாலை 4.30 – இரவு 9 -இரா.இரகுநாதன்