உலகநாயகனின் முடிசூட்டுவிழாச் செய்தியை அறிந்த, இராமனின் தாயான கோசலையின் தோழியர்களாகிய நான்கு பெண்கள் எல்லையற்ற மகிழ்ச்சி கொள்கின்றனர். ஆடியும் பாடியும் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அப்பெண்கள், அந்த மகிழ்ச்சி வெளிப்பாட்டோடு, தமது தலைவியாகிய கோசலைக்கு அச் செய்தியை அறிவிக்க நினைந்து, அவளது அரண்மனை நோக்கி ஓடுகின்றனர்.எல்லையற்ற மகிழ்வோடு தன்முன் வந்துநின்ற ௮ப்பெண்களைக்கண்டு ஆச்சரியப்பட்ட அன்னை கோசலை, அவர்களின் மகிழ்ச்சிக்கான காரணத்தினை வினவுகிறாள். அப்பெண்கள், “அன்னையே! நின் மைந்தனாகிய இராமனுக்கு நாளை முடிசூட்டப்போவதாக நம் சக்கரவர்த்தி முடிவுசெய்திருக்கிறார். அவரது முடிவை அரசவையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். சக்கரவர்த்தியின் வேண்டுகோளை ராமனும் ஏற்றுக் கொண்டான்” என்று உரைக்கின்றனர்.தன் மைந்தனான இராமனுக்கு முடிசூட்டப் போகிறார்கள் என்ற செய்தியைக் கேட்டதும், எல்லையற்ற மகிழ்ச்சி அன்னை கோசலையின் உள்ளத்தில் கடல்போல் பொங்குகிறது. ஆனால், ௮வள் உள்ளத்தில் பொங்கிய ௮ம் மகிழ்ச்சிக்கடல், மறுநிமிடமே வற்றிவிட்டதாக கவிச்சக்கரவர்த்தி கம்பர் கூறுகின்றார். அதற்கான காரணம் எதுவாக இருக்கும் என, நம் அறிவு ஆராயத் தொடங்குகிறது.௮க் கேள்விக்கான பதில் கிடைக்காமல்போக, கம்பரிடமே மீண்டும் நாம் சரணடைகிறோம். அச் செய்திக்காகக் கம்பர் தரும் விளக்கம்கண்டு நம் மனம் சிலிர்த்துப் போகிறது. கம்பர் தரும் அந்த விளக்கத்தைக் காணப் புகுவோம்.. கோசலையின் மனம், இராமனுக்கு முடிசூட்டுவிழா நடக்கப்போகும் காட்சியைக் கற்பனையில் நினைந்து மகிழ்கிறது. முடிசூட்டு விழாவிற்காய் நடக்கப்போகும் ஒவ்வொரு கிரியைகளையும், எண்ணிஎண்ணி மகிழ்கிறாள் கோசலை. அனைத்துக் கிரியைகளும் முடிவுற்றதும், சிம்மாசனத்தில் வந்தமர்ந்த இராமனுக்கு, முடிசூட்டுவதற்காய் வசிட்ட முனிவர் மேடையில் ஏறுகிறார். அவர், ௮ம் முடியினைக் கையில் எடுப்பதுவரை விரிந்ததான கோசலையினது கற்பனை, அவள் உள்ளத்தில் மகிழ்ச்சிக் கடலைப் பொங்குவிக்கிறது. அங்ஙனமாய், அவள் மனதில் பொங்கிய மகிழ்ச்சிக் கடல், இராமனுக்கு சூட்டப்படப்போகும் அம் முடி தன் கணவனான தசரதனின் தலையிலிருந்தே எடுக்கப்படப்போகிறது என நினைந்ததும், வற்றிப் போயிற்றாம். அதுவரை தாயாய் அவள் உள்ளத்தில் எழுந்த உவகைக் கடல், தன் கணவன் முடி இழக்கப் போகிறான் என்பதை நினைந்ததும், வறண்டு போயிற்றாம் என்கிறார் கம்பர். ஓர் உயர்ந்த கற்புக்கரசியின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டும் கம்பரின் காவியத் திறன் கண்டு நாம் சிலிர்ப்படைகிறோம்.கோசலை தன் மனக்கலக்கத்தை மறைத்து, தனக்கு மங்கலச் செய்தி சொன்ன தோழியர்க்கு வெகுமதிகள் அளித்தபின்னர், தனது மாற்றாளாகிய சுமித்திரையை அழைத்துக்கொண்டு, வழிபாடு இயற்றுவதற்காகத் திருமாலின் கோயிலுக்குச் செல்கிறாள். அங்கு சென்று இராமனின் முடிசூட்டுவிழா நல்லபடி நடந்து சிறப்புற வேண்டும் எனக் கவலையோடு பிரார்த்தித்த அவள், பின்னர் தவசிகளுக்கும், அந்தணர்களுக்கும் தானங்கள் கொடுத்து, அதன்பின் நோன்புகளை இயற்றத் தொடங்குகிறாள். அரண்மனையில் இருந்த தசரதன், மறுநாள் நடக்கப்போகும் பட்டாபிஷேகத்தின் முன்பாக, இராமனுக்குரிய சடங்குகளைச் செய்யவும், அவனுக்கு அரச தர்மங்களை உபதேசிக்கவும், வசிட்ட மாமுனிவரிடம் வேண்டிக் கொள்கிறான்..அவனது வேண்டுகோளை ஏற்று இராமனது அரண்மனைக்குச் சென்ற வசிட்ட மாமுனிவர், இராமனைக் கண்டு வாழ்த்தியபின், “இராமா! அரச பொறுப்பேற்க இருக்கும் உனக்கான உறுதிப்பொருள்கள் சிலவற்றை நான் சொல்லப் போகிறேன். கேட்பாயாக!” எனச்சொல்லி, உயர் அறங்களை இராமனுக்கு உபதேசிக்கத் தொடங்குகிறார்.“இராமா! உலக நன்மைக்காக வழிபாட்டியற்றும் தூய அந்தணர்களை, திருமால் எனவும் சிவன் எனவும் எண்ணி நீ போற்றுதல் வேண்டும். ௮வ் அந்தணர்கள், விதியால் வரும் பாதிப்புகளைக்கூடத் தடுக்க வல்லவர்கள் என்பதை நீ மறந்து போகாதே.மும்மூர்த்திகளும்கூட, தம் தொழில்கள் சிறப்புறுவதற்காக, அறத்தைப் பேணுகின்றனர் என்றால், நாட்டை ஆளப்போகிற நீ, அறத்தைப் பேணுவது எத்துணை அவசியம் என்பதை அறிந்து கொள்வாயாக!சூது முதலிய குற்றங்கள் உன்னிடம் சேராது நீ பார்த்துக்கொள்ள வேண்டும். துன்பங்கள் நேர்வதற்கு ௮க் குற்றங்களே காரணம் என அறிவாய்!யாரோடும் பகை கொள்ளாதிருந்தால், போர் ஒடுங்கி புகழ் சிறக்கும். நாள்தோறும் வருவாயைப் பெருக்கி, ஐம்புலன்களை ஒடுக்கி, நடுநிலை பொருந்த, மனஉறுதியோடு இராச்சியத்தைக் காப்பதென்பது, கூரிய ஒரு வாளின்மேல் இருந்து தவம் செய்வதற்கு ஒப்பான ஒரு செயலாகும். ௮வ் அருமை உணர்ந்து நீ ஆட்சியினைச் செய்தல் வேண்டும். முற்றும் துறந்த முனிவர்களுக்கே அன்பு இன்றியமையாத ஒன்றாகும். அப்படியிருக்க, மன்னுயிர் அனைத்தையும், தன்னுயிர் போலக் காக்கவேண்டிய மன்னனுக்கு, அந்த அன்பு எத்துணை அவசியமானது என்பதை நீ அறிவாயாக!.தன் நாட்டுமக்களை, தனது உயிராகக் கொண்டும், தன்னை அவ்வுயிர்களைத் தாங்கும் உடலாக நினைந்தும் செயற்படும் மன்னவர்கள், வேள்வி முதலிய நற்செயல்களைக்கூடச் செய்தல் ௮வசியம் அன்றாம்.முயற்சி உடையவனாகவும், பரிசுத்தம் உடையவனாகவும், வெற்றி உடையவனாகவும், நடுநிலையோடு இயங்கும் ஒரு மன்னன், இனிய சொற்களைப் பேசியும், வறுமை உற்றோர்க்குத் தானங்களை வழங்கியும் வாழ்வானாகில், ௮ம் மன்னவனுக்குக் கேடு என்பது எக்காலத்திலும் வாராதாம். தீயவற்றை நீக்கி, நல்லவற்றைப் பேணி, நடுநிலைமை தவறாது வாழும் அமைச்சர்களை, கண்ணாகக் கொண்டு நீ உலகைக் காக்க வேண்டும். விதியையும் கட்டுப்படுத்தவல்ல முனிவர்களையும் நீ பேணி வாழுதல் அவசியம்.”இங்ஙனமாய், பல தர்மங்களை எல்லாம் இராமனுக்கு உபதேசித்த பின்னர், அவனை அழைத்துக் கொண்டு, திருமாலின் ஆலயத்திற்குச் சென்று வணங்கிய வசிட்டர், பட்டாபிஷேகத்திற்கு முதல்நாளில் செய்யவேண்டிய சடங்குகளையெல்லாம் செய்துமுடித்து, தசரதனுக்கு ௮ச்செய்தியை அறிவிக்க, அதனைக்கேட்டு மகிழ்ந்த தசரதன் தன் நகரை அலங்கரிக்கும் படியாக உத்தரவிடுகிறான்.நாட்டுமக்களுக்குப் பறையடித்துச் செய்திகளை ௮றிவிக்கும் வள்ளுவர்கள், இராமனுக்கு முடிசூட்டுவிழா நடக்கப்போகும் செய்தியை, நகரெங்கும் அறிவிக்க, வள்ளுவர் தந்த செய்திகேட்டு அயோத்தி மக்கள் ஆனந்தம் கொள்கின்றனர்..௮ச் செய்தி கேட்டு ௮ம் மக்கள் ஆனந்தித்தும், ஆரவாரித்தும், ஆடிப்பாடியும் மகிழ்கின்றனர். வேறொருசாரார் ௮ச் செய்தி கேட்டு உடல் வியர்த்து நிற்கின்றனர். மற்றுமொருசாரார் ௮ச் செய்தியால் மயிர்க்கூச்செறிந்து தம் உடலைத் தமது உரோமத்தாலேயே போர்த்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் அந்த நல்ல செய்தி சொன்ன வள்ளுவர்களுக்குப் பொன்னையும், பொருளையும் அள்ளி௮ள்ளிக் கொடுக்கின்றனர்.பலவகை நிறங்கொண்ட பறவைகள் பறக்குமாற்போல, பலவிதமான வண்ணக் கொடிகளைக் கட்டிப் பறக்கவிட்டும், வாழை மரங்களையும், கமுகு மரங்களையும் கட்டி நிமிர்த்தியும், அழகான முத்துமாலைகளை அவற்றில் தொங்கவிட்டும், உயர்ந்தனவான கோபுர வாயில்களில் மகர தோரணங்களைக் கட்டியும், செம்மணித் தூண்களையும், பவளத் தூண்களையும் அமைத்தும், தம் நாட்டை அலங்கரித்து மகிழ்ந்தனர் அவர்கள்.நவரத்தினங்களைக் கொண்டு அவர்கள் நகரை அலங்கரிக்க, அந்த நவரத்தினங்கள் வீசிய ஒளியால் அந் நகரின் இருள் நீங்கிப் போயிற்று. இங்ஙனமாய், அயோத்தி நகர் தேவலோகமாய் அலங்கரிக்கப்பட்ட காட்சியை, அந்தப்புரத்தின் மாடத்தில் நின்றிருந்த ஒருத்தி காண்கிறாள். கைகேயியின் சேடியான மந்தரை என்கின்ற அவளுக்கு, உடலோடு உள்ளமும் கூனிக் கிடக்கிறது.இராமனுக்கு முடிசூட்டுவிழா நடக்கப்போவதால்தான் நகரில் இத்தனை பரபரப்பு என அறிந்ததும், அவளது உள்ளம் கொதித்தெழுகிறது. எப்படியும் இப் பட்டாபிஷேகத்தை நிறுத்த வேண்டும் என முடிவுசெய்த அவள், கடும் கோபத்தோடு, தன் தலைவியாகிய கையேயி இருக்கும் அரண்மனை நோக்கி ஓடுகிறாள்.எல்லாராலும் நேசிக்கப்படுகிற இராமனின்மேல், இந்த மந்தரைக்கு அப்படி என்னதான் கோபம்? அவள் ஏன் இராமனை வெறுக்கிறாள்? அவ் வெறுப்புக்கான காரணம் என்ன? அறிவோம். (இதிகாசம் வளரும்) -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்