ஆதிமூலமே காப்பாற்று என ஆனையின் அபயக்குரல் கேட்டதும் கருடவாகனத்தில் விஷ்ணு பகவான் விரைந்து வந்து முதலையின் பிடியிலிருந்து கஜேந்திரனைக் காப்பாற்றியது புராண வரலாறு.அதுபோல் இன்றும் தன்னைச் சரணடைந்தவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் பொருட்டு பல தலங்களில் பல நாமங்களில் அவன் எழுந்தருளியுள்ளான். அவற்றுள் ஒரு தலமாக விளங்குகிறது, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நடுவக்குறிச்சி வீரராகவப்பெருமாள் ஆலயம். இங்குள்ள மூலவர் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்.சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வணிகர் ஒருவர் வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு பொருட்களை வாங்கியும், விற்றும் கணிசமாகப் பொருளீட்டினார். நல்லபடியாக போய்க்கொண்டிருந்த வியாபாரம் ஒரு கட்டத்தில் துரதிஷ்டவசமாக நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தது. தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. நொடிந்துபோகும் சூழலுக்கே வந்துவிட்டார்.இருந்தாலும் மனம் தளராமல், கடைசி முயற்சியாக, தன்னிடம் இருந்த அத்தனை பொருட்களையும் விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு வாணிபம் செய்ய வெளிநாட்டுக்குக் கிளம்பத் தயாரானார். அதற்குமுன் இத்தல மூலவர் வீரராகவப்பெருமாள் சந்நதிக்குச் சென்று வழிபட்டு, இந்த முறை வெளிநாட்டுக்குச் சென்று வணிகம் செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை பெருமாளுக்குத் தருவதாக வேண்டிக்கொண்டார்..வெளிநாட்டிலிருந்து எண்ணெய் பீப்பாய்களை வாங்கிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகம் வந்து இறங்கினார். அருகில் இருந்த கிடங்கில் அத்தனை பீப்பாய்களையும் பாதுகாப்பாக வைத்துவிட்டு, அதை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார்.அவரது கெட்ட நேரம், எதிர்பார்த்த விலையில் எண்ணெய் பீப்பாய்களை வாங்க யாரும் வரவில்லை. குறைந்த விலைக்கு விற்றால் கடும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டி வரும். மனம் நொந்த நிலையில் அந்த வணிகர் வீரராகவப் பெருமாளிடம் கண்ணீர் விட்டு பிரார்த்தனை செய்தார். பின்னர் மனச்சோர்வில் அங்கேயே தூங்கி விட்டார். அன்றிரவு அவர் கனவில் தரிசனம் தந்த பெருமாள், காலையில் எண்ணெய் கிடங்குக்குச் சென்று பார்க்கும்படி கூறிவிட்டு மறைந்தார்.காலையில் சீக்கிரமே தூக்கம் கலைந்து எழுந்த வணிகர் வேக வேகமாக கிடங்குக்குப் போய் எண்ணெய் பீப்பாய்களைப் பார்த்தார். அங்கே, அவருக்கு ஆச்சர்யமும் அதிசயமும் ஒருசேரக் காத்திருந்தன. அதாவது, பீப்பாயில் இருந்த எண்ணெய் முழுவதும் நெய்யாக மாறி, ஆளையே கிறங்கடிக்கும் வண்ணம் கமகமத்தது. அவ்வேளையில், ஊருக்குள் நெய்க்குக் கடும் தட்டுப்பாடும், அதிக தேவையும் இருந்தது. இதனால் அவரது நெய்யை வாங்க வியாபாரிகள் பெரிய அளவில் போட்டி போட்டனர்.இந்த ஒரே சம்பவத்தால், அந்த வணிகருக்குப் பல மடங்கு லாபம் கிடைத்தது. கைவிட்டுப்போன பல சொத்துகளை மீட்டார். நல்ல நிலைக்கு வந்துவிட்டார். இந்த உயர்வுக்கு வீரராகவப்பெருமாளின் கருணையே காரணம் என மனப்பூர்வமாக நம்பி, ஆனந்தக் கண்ணீர் வடித்தார். ஏற்கெனவே பரம்பொருளிடம் போட்ட ஒப்பந்தப்படி, சொன்ன வாக்கைக் காப்பாற்றும் வகையில் குறிப்பிட்ட சதவீதத்தை பெருமாளுக்காக ஒதுக்கினார். இதன்மூலம் சுமார் நானூறு ஆண்டுகள் சிறிய அளவாக இருந்த கோயிலை பெரிய அளவில் விரிவுபடுத்தி, மகாசம்ப்ரோக்ஷணமும் செய்து மகிழ்ந்தார்.பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் இப்பகுதி கீழ்க்களக்கூற்றம் என்ற உள்நாட்டுப் பிரிவில் அடங்கியிருந்தது. பாண்டிய மன்னர்கள் விவசாயம் செழிக்க ஆற்றில் பெருக்கெடுத்து வரும் நீரை ஆங்காங்கே தேக்கி வைக்க ஏராளமான குளங்கள், ஏரிகளை வெட்டி வைத்தனர். அதனாலேயே நூற்றாண்டுகள் பல கடந்தும் இன்றைக்கும் இப்பகுதி பார்ப்பவரின் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் பச்சைப்பசேல் என வயல்வெளிகளாய் காற்றில் தலையசைத்தபடி காட்சியளிக்கின்றன.ஊரின் தென்புறம் கிழக்குப் பார்த்த வண்ணம் சாலக்கோபுர வாசலுடன் கோயில் அமைந்துள்ளது. நாலாபுறமும் உயர்ந்த, கலைநயமிக்க சிற்பங்கள் அமைந்த திருமதில் சூழ்ந்துள்ளது. பிரதான வாசல் தாண்டியதும் ஓங்கி உயர்ந்த இரு மாவலிங்க மரங்கள் தல விருட்சங்களாய், மருத்துவப் பலன்களைத் தந்தவண்ணம் நிற்கின்றன. .பரந்து விரிந்த வெளிச்சுற்றைத் தாண்டியதும் பலிபீடம், கருடாழ்வார் மண்டபம், முக மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்பில் கற்றளியாகக் கோயில் அமைந்துள்ளது.மகாமண்டப வடபுறம் சிறிய திருவடி, வேணுகோபாலன், நவநீதகிருஷ்ணன், இராமானுஜர் ஆகிய விக்ரகங்கள் உள்ளன. அர்த்த மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். கருவறை மூலவராக நின்ற கோலத்தில் வீரராகவப்பெருமாள் தன்னை நம்பிக்கையோடு நாடி வரும் சேவார்த்திகளுக்கு வேண்டியது வேண்டியபடி வரமளித்துக் காத்து நிற்கிறார்.இதற்கு உதாரணமாக இத்தலத்தில் நடந்த பல சம்பவங்களைக் கூறுகிறார்கள். அதில் ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.பெருமாளின் தீவிர பக்தர் ஒருவரின் மகனுக்கு உரிய மணப்பருவம் வந்தும் சரியான பெண் அமையவில்லை. இந்நிலையில் பரந்தாமனின் பரம பக்தரும் தொண்டருமான ஆஞ்சநேயர் விக்ரகம் ஒன்றைக் கோயிலில் பிரதிஷ்டை செய்து நாளும் தவறாமல் வணங்கி வந்தார். அவரது தூய பக்திக்கு வெகு விரைவிலேயே உரிய பலனும் கிடைத்தது. ஆம்! அவரது மகனுக்குப் பொருத்தமான பெண் அமைந்தது. மேலும், அவரது தொழில் கூடிய விரைவில் அமோகமாய் வளர்ந்து செல்வாக்கான நிலைக்கு உயர்ந்துவிட்டார். இந்த அற்புதத்தைக் கண்ட பக்தர்கள் பலரும் உள்ளன்போடு கோயில் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை எடுத்துக்கொண்டனர்.மூலவர் விமானம் வேசர வடிவில் அமைந்துள்ளது. பாஞ்சராத்ர ஆகமப்படி தினமும் இருகால பூஜை நடைபெறும் இத்தலத்தில் தினமும் விஷ்வரூப ஆராதனையின்போது கோமாதா பூஜை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. வெளிச்சுற்றில் அரசு, வேம்பு, நாகர் சந்நதி, குபேர விநாயகர் சந்நதி, கோசாலை, தீர்த்தக்கிணறு ஆகியவை உள்ளன. மாங்கல்ய பலம் தழைத்திருக்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாயாருக்கு திருமாங்கல்யம் காணிக்கை செலுத்தும் வழக்கமும் இருந்து வருகிறது..வெளிச்சுற்று முழுவதும் நித்ய பூஜைக்குரிய வாச மலர்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனம் குளுமையாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும் விசேஷ கோமாதா பூஜை மற்றும் திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. திருமணத்தடை நீங்க, சந்தான பாக்கியம் கிட்ட, தொழில் அபிவிருத்தி அடைய எனப் பல்வேறு கோரிக்கைகளுக்காக வேண்டிக்கொண்டு, அது நிறைவேறியதற்கு நேர்த்திக்கடனாக வஸ்திரம் சாத்தி திருமஞ்சனம் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது.சித்திரை முதல் நாளன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள், ஆடி சுவாதியில் கருடாழ்வார் திருமஞ்சனம், புரட்டாசி சனிக்கிழமைதோறும் கருடசேவை, கார்த்திகை பௌர்ணமி அன்று கோயில் வளாகம் முழுவதும் 1008 அகல்விளக்கு ஏற்றுதல், மார்கழி 30 நாட்கள் திருப்பள்ளியெழுச்சி, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம், சங்கடஹர சதுர்த்தி, மாதாந்திர கடைசி சனியன்று ஊஞ்சல் சேவை என ஆண்டு முழுவதும் அனேக உற்சவங்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. எங்கே இருக்கு?திருநெல்வேலி மாவட்டம், பாளை மார்க்கெட் - சீவலப்பேரி நெடுஞ்சாலையில் 10 கி.மீ. தொலைவில் நடுவக்குறிச்சி திருத்தலம் அமைந்துள்ளது.தரிசன நேரம்காலை 7 – பகல் 11.30; மாலை 5 – இரவு 7.30. - ஆர். சுப்புலெட்சுமி