ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரை என்பது எண்ணற்ற வைரங்கள் பதிக்கப்பட்டு ஒளிவீசும் அழகிய ரத்தின ஆபரணம் போன்றது.எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனில் தொடங்கி, ஸ்ரீமகாலட்சுமித் தாயார், விஷ்வக்ஸேனர், நம்மாழ்வார், நாதமுனிகள் ஆகியோருக்கு அடுத்த படியாக இவ்வாபரணத்தில் ஒளிவீசும் வைரமாகத் திகழ்பவரே உய்யக்கொண்டார் ஆவார்.ஸ்ரீரங்கத்தின் அருகில் உள்ள திருவெள்ளறை என்னும் திவ்வியதேசத்தில் சித்திரை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் அவதரித்த இவருடைய இயற்பெயர் புண்டரீகாக்ஷர் என்பதாகும்.நாதமுனிகளின் தேவியார் பெயர் அரவிந்தப்பாவை. ஒருமுறை அரவிந்தப்பாவையின் தாயாராகிய வங்கீபுரத்து ஆச்சி, தம்முடைய மகளைப் பார்க்கவேண்டும் என்று விரும்பியதால், அவரை அழைத்து வருவதற்காகத் தம்முடைய உறவினர் ஒருவரை நாதமுனிகளின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். நாதமுனிகளோ, வந்திருந்தவருடன் அரவிந்தப்பாவைக்குத் துணையாகப் புண்டரீகாக்ஷரையும் அனுப்பிவைத்தார்.மகளை நல்லபடி அழைத்து வந்த புண்டரீகாக்ஷரை உணவு உட்கொண்டுவிட்டுச் செல்லுமாறு வங்கீபுரத்தாச்சி கேட்டுக் கொண்டார். ஆனால், அவ்வீட்டில் இருந்த சிலரோ, புண்டரீகாக்ஷரின் மதிப்பை உணராமல், அவருக்குப் பழைய சோற்றினை வழங்கினால் போதுமானது என்று கூற, சற்றே மனம் தடுமாறிய வங்கீபுரத்தாச்சி அவ்விதமே பழைய சோற்றைப் படைத்தார். புண்டரீகாக்ஷரும் தம்முடைய ஆசாரியரின் மாமியார் வீட்டில் கிடைத்த பழைய சோற்றினைப் பிரசாதமாக எண்ணி மிகவும் மனமகிழ்ச்சியுடன் உட்கொண்ட பிறகு நாதமுனிகள் இல்லத்திற்குத் திரும்பி வந்தார்..வங்கீபுரத்தாச்சியின் இல்லத்தில் நடந்தவற்றைத் தம்முடைய யோகபலத்தால் அறிந்துகொண்ட நாதமுனிகள், “புண்டரீகாக்ஷரே, போன இடத்தில் உம்மை நன்கு உபசரித்தார்களா?” என்று அக்கறையுடன் வினவினார்.புண்டரீகாக்ஷரோ, “தலைசிறந்த பாகவதர்களாகிய தேவரீருடைய மாமியார் அகத்தில் அவர்கள் உண்ட உணவின் மிகுதியாகிய பாகவதசேஷம் என்னும் பிரசாதத்தையே அடியேனுக்கு அளித்து கௌரவித்தனர். இதைவிட கௌரவம் அடியேனுக்கு வேறு என்ன வேண்டும்?” என்று மகிழ்வுடன் பதிலளித்தார்.தம்முடைய சிஷ்யரும், பரமபாகவதருமாகிய புண்டரீகாக்ஷருக்கு வங்கீபுரத்தாச்சி பழைய சோற்றை அளித்ததற்காக மனம் வருந்தியிருந்தால் அவ்வம்மையாருக்குப் பாவம் உண்டாகியிருக்கும். அவ்வாறு மனம் வருந்தாமல், அப்பழைய சோற்றையே பாகவதப் பிரசாதமாகக் கருதிய புண்டரீகாக்ஷர் அதனை மனமுவந்து ஏற்றுக் கொண்டதால் அவ்வம்மையாரும் அவருடைய உறவினர்களும் பாவத்திற்கு ஆளாகாமல் தப்பித்தனர். இதனை உணர்ந்த நாதமுனிகள், “எம்மை உய்யக்கொண்டீரே!” என்று மகிழ்ச்சியுடன் புண்டரீகாக்ஷரைத் தழுவி உச்சிமுகந்து கொண்டாடினார். அதுமுதற்கொண்டு புண்டரீகாக்ஷர் உய்யக்கொண்டார் என்று அனைவராலும் மரியாதையுடன் அழைக்கப்படலானார்.குருகைக் காவலப்பன், புண்டரீகாக்ஷர் ஆகிய இருவரும் ஸ்ரீமந்நாதமுனிகளின் முக்கியமான சிஷ்யர்களாவர். இவர்களுள் குருகைக்காவலப்பனுக்கு யோக ரகசியத்தையும், புண்டரீகாக்ஷருக்கு வேதாந்தக் கருத்துகளையும் நாதமுனிகள் உபதேசித்தார். மேலும் அவ்விளக்கங்களைத் தம்முடைய மகனாகிய ஈசுவரமுனிக்குப் பிறக்கவுள்ள யமுனைத்துறைவர் என்னும் ஸ்ரீஆளவந்தாருக்கு உபதேசிக்கும்படியும் கட்டளையிட்டார்..தம்முடைய வாழ்நாளில் ஸ்ரீஆளவந்தாரைத் திருத்திப் பணிகொள்வதற்கான காலம் கனியாததால், அப்பொறுப்பைத் தம்முடைய சிஷ்யராகிய மணக்கால் நம்பிகளிடம் வழங்கிய உய்யக்கொண்டார் தம்முடைய ஆசாரியர் ஸ்ரீநாதமுனிகளின் திருவடிகளை தியானித்தபடியே முக்தியடைந்தார். அவருடைய அவதார ஜயந்தித் திருநாள் வரும் 22.4.2023 (சித்திரை ஒன்பதாம் நாள்) அமைகின்றது.எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் முதலும் முடிவும் இல்லாதவன். அவனுடைய வைகுண்ட உலகமும், அங்கே தொண்டுபுரியும் நித்தியசூரிகளும் எப்போது தோன்றினர் என்பதை யாராலும் கூற இயலாது. அப்படிப்பட்ட நித்தியசூரிகளுள் அனந்தன், கருடன், விஷ்வக்ஸேனர் ஆகிய மூவரும் முதன்மையானவர்கள்.சேஷி எனப்படும் பகவானுக்குத் தொண்டு செய்யும் பக்தனுக்கு சேஷன் என்று பெயர்.“சென்றால் குடையாம், இருந்தால் சிங்காதனமாம்” என்றபடி ஆதிகாலம் தொட்டு எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனுக்குத் தொண்டு செய்துவரும் பாம்பரசனாகிய அனந்தனை திருவனந்தாழ்வான், ஆதிசேஷன் என்றெல்லாம் வைணவர்கள் மரியாதையுடன் அழைப்பர்.அப்படிப்பட்ட ஆதிசேஷனின் அம்சமாக இந்தப் புண்ணியமான பாரதபூமியில், ஸ்ரீபெரும்பூதூர் என்ற புனிதத்திருத்தலத்தில் ஆயிரத்தைந்து வருடங்களுக்கு முன்பு அவதரித்தவரே ஸ்ரீராமாநுஜர். ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரை என்னும் ரத்தினமாலையின் நடுநாயகமாகிய வைரப்பதக்கமாக ஸ்ரீராமாநுஜர் ஒளிவீசித் திகழ்ந்து வருகின்றார்.திரேதா யுகத்தில் ஸ்ரீராமபிரானின் தம்பியாக அவதரித்த லட்சுமணனும் ஆதிசேஷனின் அம்சமே. அந்த லட்சுமணனுக்குரிய மற்றொரு திருப்பெயராகிய இளையாழ்வார் என்பது ஸ்ரீராமாநுஜரின் பற்பல திருப்பெயர்களில் ஒன்றாகும்.வேதங்கள், உபநிடதங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகங்களால் தொகுக்கப்பட்டதே பிரம்மசூத்திரம். அந்த பிரம்ம சூத்திரத்திற்கு அத்துவைத விளக்கம் அளித்தவர் ஸ்ரீஆதிசங்கரர். துவைத விளக்கம் அளித்தவர் ஸ்ரீமத்வாச்சாரியார்..அத்துவைதம், துவைதம் ஆகிய கருத்தாக்கங்களிலிருந்து மாறுபட்ட ஸ்ரீராமாநுஜர் அதே பிரம்மசூத்திரத்திற்கு விசிஷ்டாத்துவைத தத்துவத்தின் அடிப்படையில் விளக்கவுரை ஒன்றை இயற்றினார். அதுவே “ஸ்ரீபாஷ்யம்” என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.ஸ்ரீபாஷ்யத்தின் உயர்ந்த கருத்துகளைத் தங்களின் ஆசாரியர்கள் மூலம் அறிந்து கொள்வதும், தாங்கள் அறிந்து கொண்ட தத்துவத் தெளிவினை அடுத்த தலைமுறையினருக்குச் சொல்லிக்கொடுப்பதும் ஸ்ரீவைஷ்ணவர்களின் முக்கியக் கடமைகளில் முதன்மையானதாகும்.பகவானின் சேஷனாகிய ஆதிசேஷனின் மறு அவதாரமாக இம்மண்ணில் அவதரித்து ஸ்ரீராமாநுஜர் பல அதிசயங்களைப் புரிந்திருக்கின்றார்.மேல்நாடு எனப்படும் இன்றைய கர்நாட மாநிலத்திலுள்ள தொண்டனூர் என்ற திருத்தலத்திற்கு ஸ்ரீராமாநுஜர் விஜயம் செய்த பொழுது அப்பிரதேசத்தை ஆண்ட விட்டலதேவன் என்ற அரசனுக்கும் சாந்தலா என்ற அரசிக்கும் பிறந்த இளவரசியைப் பிடித்திருந்த ஆவியை விரட்டினார்.இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த அரசன் விட்டலதேவன் அதுவரையில் தான் சார்ந்திருந்த சமண மதத்தைத் துறந்து ஸ்ரீராமாநுஜரின் சீடனாகினான். ஸ்ரீராமாநுஜரும் அம்மன்னனுக்கு விஷ்ணுவர்த்தனன் என்ற புதிய பெயரைச் சூட்டிப் பஞ்சசம்ஸ்காரம் என்னும் புனிதச் சடங்கினைச் செய்துவைத்தார்.இதையடுத்து அம்மன்னனின் ஆட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்த பன்னிரண்டாயிரம் சமணர்களும் ஸ்ரீராமாநுஜரின் மீது கோபம் கொண்டு அவரை வாதுக்கு அழைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட சமணர்கள் பன்னிரண்டாயிரம் பேரும் அமர்ந்திருந்த சபையில் அவர்களுக்கும் தமக்கும் இடையில் ஒரு திரையை எழுப்பச் சொல்லி, அத்திரையின் பின்னால் இருந்தபடி ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேஷனாகவே மாறி அவர்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அசராமல் பதில் அளித்து அவர்களை வாதத்தில் வென்றார். வாதத்தில் தோற்ற சமணர்கள் அனைவரும் வைஷ்ணவர்களாக மாறினர்..இதுமட்டுமா -பிரசித்தி பெற்ற ஸ்ரீஅஹோபில மடத்தின் நாற்பத்து மூன்றாவது ஜீயராக (1951 முதல் 1957 ஆம் ஆண்டு வரை) விளங்கியவர் ஸ்ரீமத் தேவனார் விளாகம் அழகியசிங்கர் என்னும் ஸ்ரீவீரராகவ சடகோப யதீந்திர மஹாதேசிகன் சுவாமிகள் ஆவார். அவர் சந்நியாசி ஆவதற்கு முன்பு, ஒரு நாள் அவருடைய திருமாளிகையின் தோட்டத்தில் உள்ள பந்தலில் தம்முடைய சிஷ்யர்களுக்கு ஸ்ரீமத்பகவத்கீதையின் விளக்கவுரையை உபதேசித்த பொழுது பெரியதொரு நல்ல பாம்பு அவ்விடத்திற்கு வந்தது. பாம்பைக் கண்டு சிஷ்யர்கள் நடுங்கியதைக் கண்ட சுவாமிகள், “யாரும் பயப்பட வேண்டாம். இங்கே காலட்சேபம் நன்றாக நடக்கிறதா என்பதனை நேரில் காண்பதற்காக ஸ்ரீராமாநுஜரே இவ்விதம் சேஷனின் (பாம்பின்) உருவத்தில் வந்திருக்கிறார்” என்று கூறிவிட்டார். காலட்சேபம் முடிந்த பின்பு அந்தப் பாம்பும் தானாகவே சென்றுவிட்டது.இவ்விதம், வைகுண்டலோகத்தில் பன்னெடுங்காலமாக எம்பெருமானுக்குத் தொண்டு செய்துவரும் ஸ்ரீஆதிசேஷனின் அவதாரமாகிய ஸ்ரீராமாநுஜர் இப்பூவுலகில் திருஅவதாரம் செய்த ஜயந்தித்திருநாள் வரும் 25.4.2023 (சித்திரை மாதம் 12) அமைகின்றது.-சந்தான கிருஷ்ணன்