சோழர்கள் சைவ - வைணவ பேதம் இன்றி வாழ்ந்தார்கள் என்பதற்கு அத்தாட்சியாக அவர்கள் கட்டிய சிவாலயங்கள் மற்றும் பெருமாள் கோயில்கள் விளங்குகின்றன. அவர்கள் கட்டிய வைணவ ஆலயங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்று தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரத்தில் உள்ள கோபிநாத விண்ணகரம், கோவிந்த விண்ணகரம் எனும் ஸ்ரீ கோபிநாத திருக்கோயில். இங்கு ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சாவதாரம் கொண்டு சத்யபாமா, ருக்மணி சமேத கோபிநாதப்பெருமாளாக இருந்து சேவை சாதித்து வருகிறார். தென்னிந்தியாவின் துவாரகை என உ.வே.சுவாமிநாத ஐயர் இக்கோயிலைக் குறிப்பிட்டுள்ளார். பழையாறை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ அரசர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் சோழர்கள் மற்றும் நாயக்கர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழர்களுக்குப் பின்னர் விஜயநகரப்பேரரசு காலத்தில் இக்கோயிலுக்குப் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டது. பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக பழையாறை இருந்தபோது பட்டீஸ்வரம் மற்றும் கோபிநாதப்பெருமாள் கோயில்கள் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்ந்தது. சோழர்கள் இக்கோயிலில் தங்களது கருவூலப் பொக்கிஷங்களை யாரும் அறியாத வண்ணம் பாதுகாத்து வைத்திருந்தார்கள். எனவே கோயில் விமானத்தில் ஐம்பொன் கலசத்திற்குப் பதிலாக கற்கலசமே ஸ்தாபித்திருந்தார்கள். பட்டீஸ்வரத்தில் ஏராளமான சிவாலயங்கள் இருந்தாலும், இப்பகுதியில் உள்ள ஒரே பெருமாள் கோயிலாக இது திகழ்கிறது..போரில் வெற்றி தங்கள் வசப்பட, போருக்குச் செல்லும் முன் சோழர்கள் பட்டீஸ்வரம் கோயிலில் உள்ள துர்க்கை அம்மனை வழிபட்டார்கள். அதன்பிறகு போருக்கு உரிய செலவினங்களுக்கான செல்வத்தை (கருவூல பொக்கிஷம் இங்கு இருந்ததால்) கோபிநாதப் பெருமாளை வேண்டிப் பெற்றுக்கொண்டார்கள். பட்டீஸ்வரம் துர்க்கை அம்மனை தரிசனம் செய்பவர்கள் சோழ அரசர்கள் கடைப்பிடித்த மரபைப் பின்பற்றிகோபிநாதப்பெருமாளையும் தரிசனம் செய்வதால் இரட்டிப்புப் பலன்களைப் பெறலாம். சோழ அரசர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு காலகட்டங்களில் இப்பகுதியில் அன்னியர் படையெடுப்பு நடைபெற்றது. அப்போது எதிரிப்படைகள் இக்கோயிலையும் சோழர்களின் கருவூல பொக்கிஷத்தையும் சூறையாடி சென்றார்கள். அதனால் பரிதாப நிலைக்குக் கோயில் தள்ளப்பட்டது. கிழக்கு நோக்கிய ஏழுநிலை இராஜகோபுரம் சிதிலமடைந்து இரண்டு நிலை இராஜகோபுரமாகக் காணப்படுவது அவலத்தின் உச்சகட்டம். அதனையடுத்து உள்ளே சென்றால் வலதுபுறத்தில் நந்தவனம் உள்ளது..இரட்டை பனைமரங்கள்: இடதுபுறத்தில் கோயில் தலவிருட்சமான ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரட்டை பனைமரங்கள் உள்ளது. இதன் அடியில் இரண்டு சித்தர்கள் சூட்சும ரூபத்தில் வாசம் செய்வதால் பனை மரங்கள் இளமையுடன் காணப்படுவதாகச் சொல்கிறார்கள். இந்தப் பனை மரத்தை ஏழுமுறை பிரதட்சணமாக வந்து வழிபட்டால் எல்லாவிதமான நோய்களும் குணமாகுகிறதாம். இரட்டை அனுமார்கள்: இங்குள்ள இரட்டை ஆஞ்சநேய மூர்த்திகள் நின்ற நிலையில் வடக்கு நோக்கிய வண்ணம் தங்கள் வலது கையில் தாமரை மலரைப் பிடித்தவாறு சேவை சாதிக்கிறார்கள். இங்கு பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டி புதுத்துணியில் முழு மட்டைத் தேங்காயை வைத்துக்கட்டி மாட்டிவிட்டுச் செல்கிறார்கள். அனுமனுக்கு அமாவாசை மற்றும் மூல நட்சத்திர தினத்தில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. ஈரேழு பதினாலு உலகங்களை நினைவுபடுத்தும் வகையில் இக்கோயிலில் வலதுபுறத்தில் ஏழு படிகளும், இடதுபுறத்தில் ஏழு படிகளும் உள்ளது. இதன்வழியாக ஏறிச்சென்றால் கருடாழ்வார் சன்னதியை அடையலாம். மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களைக் குறிக்கும் வகையில் பத்துத் தூண்கள் கொண்டு உயர்ந்த மகாமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தில் சக்கரத்தாழ்வார், இதர தெய்வங்களின் கற்சிலைகள், ஆழ்வார்களின் கற்சிலைகள் இருபுறமும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது..கர்ப்ப கிரகம்: மகாவிஷ்ணு இக்கோயிலில் கோபிநாதப்பெருமாளாக ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன் மூலஸ்தானத்தில் காட்சியளிக்கிறார். ஸ்ரீமன் நாராயணன் இங்கு அர்ஜுனனுக்கு கோபியர் கண்ணனாகவும், அனுமனுக்கு ராமனாகவும் காட்சியளித்தார். இதனை நினைவுபடுத்தும் வகையில் மூலவருக்குப் பின்னால் நடுவில் மகாவிஷ்ணுவும், வலது புறத்தில் இராமபிரானும், இடதுபுறத்தில் கோபியர் கண்ணன் சிற்பங்களும் காணப்படுகிறது.பெயர்க்காரணம்:பால் தண்ணீருடன் சேர்ந்தால் இரண்டறக் கலந்துவிடுகிறது. பால் போன்ற மனிதர்கள் ஆகிய நாமும் தண்ணீர் போன்ற இந்த உலகில் அனைத்தின் மீதும் ஆசை கொண்டு அதில் இரண்டறக் கலந்து விடுகிறோம். பாலில் இருந்து எடுக்கப்பட்ட வெண்ணெய் தண்ணீருடன் சேராது. தனித்து இருக்கும். துவாரகையில் வாழ்ந்த கோபியர்கள் அனைவரும் வெண்ணெய் போன்றவர்கள். குடும்பம் என்கிற தண்ணீரில் கலந்துவிடாமல் வெண்ணெய் போன்று இருந்தமையால் தான் கோபியர்கள் அனைவருக்கும் கிருஷ்ணன் அனுக்ரஹம் கிட்டியது. கோபியர்களுக்கு அருள்புரிந்த கிருஷ்ணன் இங்கு கோபிநாதப்பெருமாளாக வீற்றிருக்கிறார். பாமா பூமாதேவி அம்சம். ருக்மணி லட்சுமிதேவி அம்சம். இவ்விருவரும் கோபிநாதப்பெருமாளுடன் காட்சிதரும் அழகைக் காண கண்கோடி வேண்டும். இக்கோயிலில் தரிசனம் செய்யும் பூலோக மக்களின் வேண்டுதல்களை பூமாதேவி வானத்தில் உள்ள லட்சுமிதேவியிடம் எடுத்துச் சமர்ப்பிக்கிறார். அதனை லட்சுமிதேவி கிருஷ்ணராகிய கோபிநாதப்பெருமாளிடம் சமர்ப்பித்து அருள் கிடைக்க வழிவகை செய்கிறார் என்பது ஐதிகம். பக்தர்கள் இக்கோயிலில் ஏழு தீபமேற்றி ஏழுமுறை பிரதட்சணமாக வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ரோகிணி நட்சத்திரம் அன்று சுவாமிக்கு அபிஷேகம் செய்து வெண்ணெயை நிவேதனம் செய்து வழிபட்டு, அதைப் பிரசாதமாகப் பெற்றுச் சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிட்டும் என்பது ஐதிகம். இக்கோயிலில் வெளிப்பிராகாரம் விஸ்தாரமாக உள்ளது. மேற்கு பிராகாரத்தில் சிதிலமடைந்த சிறிய கோபுரம் காணப்படுகிறது. இதன் நுழைவாயில் வழியாகச் சென்றால் கோயில் திருக்குளம் உள்ளது. ஆனால் தற்போது பராமரிப்பின்றி உள்ளது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் ரோகிணி மற்றும் மூல நட்சத்திரம், அமாவாசை, கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீராமநவமி, அட்சய திரிதியை, புரட்டாசி மாத சனிக்கிழமைகள் ஆகியவை விசேஷம்..பீமன் - அனுமன் சந்திப்பு: அந்தக் காலத்தில் இக்கோயிலின் அருகில் வாழைமரங்கள் சூழ்ந்த இடத்தில் அழகான பெரிய குளம் ஒன்று இருந்தது. அதில் வாசனைமிக்க ஆயிரம் இதழ் கொண்ட தாமரை உள்பட ஏராளமான தாமரை மலர்கள் பூத்திருந்தது. அதன் நறுமணம் எங்கும் பரவ, அந்த மணத்தை நுகர்ந்த திரௌபதி அவற்றை அடைய எண்ணி, பீமனிடம் ஆயிரம் இதழ் கொண்ட வாசனை மிக்க தாமரை மலரைக் கொண்டு வருமாறு சொன்னாள். நறுமணத்தை நுகர்ந்துவாறு தாமரைகள் இருந்த குளத்தை நோக்கி பீமன் விரைந்தான். வழியில் வானரம் ஒன்று ராம நாமத்தை ஜபித்தவாறு படுத்துக்கொண்டு இருந்தது. பீமன் அதை நகரச் சொன்னான். அதற்கு வானரம், தனக்கு வயதாகிவிட்டதாகக் கூறி, பீமனிடம் தன்னை நகர்த்தி விட்டுச் செல்லுமாறு கூறியது. வானரத்தை பீமன் பலமுறை நகர்த்திட முயற்சித்தும் முடியவில்லை. பிறகுதான் இது சாதாரண வானரம் அல்ல; அனுமனாக இருக்கும் என்பதை உணர்ந்தான். தன் தவறை உணர்ந்து அனுமனிடம் மன்னிப்பு கோரினான். அப்போது பீமனுக்கு அனுமன் விஸ்வரூப தரிசனம் காட்டினார். பீமன் அனுமனை வணங்கிய பிறகு குளத்தில் இருந்த ஆயிரம் இதழ் தாமரையைக் கொய்து திரௌபதியிடம் கொடுத்தான். எனவே இது மகாபாரதத்துடன் தொடர்புடைய தலமாகவும் விளங்குகிறது..அட்சய திரிதியை சிறப்பு வழிபாடு: புண்ணிய நகராகிய துவாரகையில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்து மணிமுடித்து மன்னராய் வீற்றிருந்த காலத்தில் வேதங்களைக் கற்று வறுமையின் பிடியில் வாழ்ந்து வந்த குசேலன் தன் மனைவியின் வேண்டுதலின் பேரில் தன் பால்ய நண்பன் ஸ்ரீ கிருஷ்ணரைக் காண துவாரகை சென்றார். குசேலனை ஸ்ரீ கிருஷ்ண பகவான் அன்பொழுகத் தழுவி வரவேற்று உபசரித்து விருந்தளித்து மகிழ்வுடன் பேசி தனக்குக் கொடுக்க கந்தல் துணியில் முடிந்த அவலைக் கேட்டு வாங்கி முகமலர்ச்சியுடன் இரண்டு கைப்பிடி உண்ணவும், குசேலன் குடிசை விண்ணைத் தொடும் மாளிகை ஆனது. துவாரகைக்கு நிகரான செல்வம் நிரம்பி வழிந்தது. அன்றைய தினம் அட்சய திரிதியை ஆகும். இந்த நன்னாளை நினைவுபடுத்தும் வகையில் பக்தர்கள் ஆண்டுதோறும் அட்சய திரிதியை அன்று கோபிநாதப்பெருமாளுக்கு அவரவர் கைகளால் மூன்று கைப்பிடி அவலை புது துணியில் முடிந்து, மூன்று முறை கோயிலை வலம் வந்து பெருமாள் பாதத்தில் அதைச் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இவ்வாண்டு இக்கோயிலில் அட்சய திரிதியை சிறப்பு வழிபாடு 23.4.2023, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு ருக்மணி, சத்தியபாமா சமேத கோபிநாதப்பெருமாளுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் சிறப்புத் திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வரும் அவல் முடிச்சுகளை இறைவன் பாதத்தில் சமர்ப்பணம் செய்து சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது. பெருமாள் பாதத்தில் வைத்த அவல் முடிச்சுகளை தீபாராதனைக்குப் பிறகு எடுத்து அதில் உள்ள அவலை தனியாக எடுத்து அத்துடன் நாட்டுச் சர்க்கரை மற்றும் தேங்காய்த் துருவல் கலந்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள். அட்சய திரிதியை அன்று மட்டும் நாள்முழுவதும் கோயில் திறந்து இருக்கும். காலை முதல் இரவு வரை பக்தர்கள் அவல் முடிச்சுகளை இறைவனுக்கு சமர்ப்பித்த வண்ணமாக இருப்பார்கள். அந்த அவல் பிரசாதத்தைச் சாப்பிடுபவர்களுக்கு குசேலன் பெற்ற குபேர வாழ்வு அமையும், தொழிலில் அபிவிருத்தி உண்டாகும், செல்வவளம் கிட்டும் என்பது ஐதிகம். குசேலனைப் போல நாமும் அவலைச் சமர்ப்பித்து சகலசம்பத்துகள் பெறுவோம்! எங்கே இருக்கு? தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும். அங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் கோபிநாதப்பெருமாள் கோயில் உள்ளது. ஆட்டோ வசதியும் உள்ளது. தரிசன நேரம் காலை 8 – 11; மாலை 5 – இரவு 7. விசேஷ தினங்களில் கூடுதல் நேரம் கோயில் திறந்திருக்கும்.