மகாபாரதம் என்றவுடனேயே, இரண்டு சங்கதிகள் நினைவுக்கு வரும்; ஒன்று, இது குரு வம்சத்துக் கதை; இரண்டாவது, நாடு பிடிக்கும் ஆசை, அல்லது நாட்டை ஆளுகிற ஆசை என்பதே இக்கதையின் மையச் சிக்கல்.இரண்டு சங்கதிகளுமே முக்கியமானவை என்பதால் இரண்டைப் பற்றியும் சற்றே உன்னிப்பாகக் காணலாம்.குரு வம்சத்துக் கதை. பாண்டவர்களோடு சண்டையிட்ட திருதராஷ்டிரப் புத்திரர்களைக் கௌரவர்கள் என்றே அழைக்கிறோம். சொல்லப் போனால், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமான போர் என்றே குருக்ஷேத்திரப் போரை விவரிக்கிறோம்.கௌரவர்களின் கதையைத்தான் மகாபாரதக் கதையாகவே காணப்போகிறோம். ஆனால், அதற்கு முன்பாகக் குரு நாடு என்பது என்ன என்று காணலாம்.வேத காலத்தின் இடைப் பகுதியில், அதாவது, கி.மு. 1500 -1200 ஆண்டுகளின் காலகட்டத்தில், இமயமலை அடிவாரப் பகுதிகளில், மேற்கே சரஸ்வதி நதிக்கும், கிழக்கே கங்கை ஆற்றுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இருந்த நிலப்பரப்பு. பெருநிலப்பரப்பாக இந்த நாடு உருவானபோது, உடன் பிறந்த நோயாகச் சிலச் சிக்கல்களும் உடன் தோன்றின.குமரிக் கண்டம் என்றழைக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளிலும், தக்காணப் பகுதிகளிலும், கங்கைப் பகுதிகளிலும் நாடுகளும் தேசங்களும் இருந்தன. இங்கெல்லாம், அரசர்களும் இருந்தனர்; அரசாட்சிகளும் இருந்தன. ஆனால், அதிகமான வசதிகளும் அதீதமான நிலப்பரப்பும் கூடுதலான ஆள்பலமும் ஏற்பட்டால், எப்படியெல்லாம் மனித மனம் மாறும் என்பதற்கும், எவ்வாறெல்லாம் சிக்கல்கள் தோன்றும் என்பதற்கும் குரு நாடு இடமாகிப்போனது. இப்படிப்பட்ட மாற்றத்தின் விளைவாகத்தான், குரு வம்சக் கதையானது, நாடு பிடிக்கும் கதையாகவும் ஆனது..மண்ணாசை, அதிகார ஆசை, அதிகாரம் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் ஆணவம் ஆகியவற்றுக்கும், குரு வம்சத்தவர் என்பதைக் குறிக்கும் கௌரவர் என்னும் பெயருக்கும் பிரிக்கமுடியாத பெருந்தொடர்பும் ஏற்பட்டுவிட்டது.குரு நாட்டின் வடக்கு – வடகிழக்குப் பகுதி, குறிப்பாக, மலையடிவாரத்திலிருந்த பகுதி, ஜங்கலம் (காடு) என்றும், சரஸ்வதி – திருஷ்டவதி நதிகளுக்கு இடைப்பட்ட வடமேற்குப் பகுதி க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்பெற்றன.மகாபாரதக் கதையைப் பயிலும்போது, ஒன்றுபுரிகிறது. தொடக்கத்தில் காடுகளாக இருந்த பகுதிகள், மெல்ல மெல்லத் திருத்தப்பட்டு, மக்கள் குடியிருப்புகளாக மாற்றப்பட்டன. இவ்வாறு மாற்றப்பட்டபோது, ஆளுகைப் பரப்பின் அகல நீள பரிமாணங்கள் அதிகரித்தன. இதனால், ஆளுகை அதிகாரங்களும் கூடின. ஆளுகை, அதிகாரம் – இவை அதிகரிக்க, அதிகரிக்க…. அடுத்தென்ன…….நானா, நீயா என்னும் போட்டி, பொறாமை, அடிதடி, நாசவேலைகள் இத்யாதி இத்யாதி.தொடக்கத்தில், கங்கை – யமுனை ஆகிய இரு நதிகளுக்கும் இடைப்பட்ட பகுதியிலும், அதற்கும் மேற்காக இருந்த பகுதியிலுமாகவே குரு நாடு பரந்திருந்தது. கி.மு. 1300 - 1200 வாக்கில், குரு நாட்டின் தலைநகரமாக இருந்த ஊர் ஆஸாந்தீவத் என்பதாகும். யமுனைக்கு மேற்கு – வடமேற்காக இருந்த (இருக்கும்) இந்த ஊரிலிருந்த தலைநகரம், பின்னர்தான், கங்கை நீரோட்டப் பகுதியான ஹஸ்தினாபுரத்திற்கு (அத்தினாபுரம்) மாற்றப்பட்டது. சந்திர வம்ச மன்னரான ஹஸ்தி என்பவர் நிர்மாணித்த நகரம் என்பதால் இது அவர் பெயரால் அழைக்கப்படலானது. சந்திர வம்சாவளியினரைப் பற்றிய தகவல்களை மகாபாரதம் தருகிறது. சந்திரன் மகன் புதன், புதன் மகன் புரூரவன் என்று தொடரும் இப்பட்டியல் மிக நீளமானது. இந்தப் பட்டியலில், துஷ்யந்தன் (நமக்கு நன்றாகப் பரிச்சயமான சகுந்தலையின் கணவர்), பரதன் (சகுந்தலையின் மகன்) ஆகியோருக்குச் சில தலைமுறைகளுக்குப் பின்னர் தோன்றியவர் ஹஸ்தி..பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டத்தின்போதே, பெருங்காடாக இருந்த பகுதி, பாண்டவர்களுக்கு வழங்கப்பட்டதென்றும், காட்டைத் திருத்தி அழகிய நகரமாக அவர்கள் மாற்றினார்கள் என்றும் படிக்கிறோம். இதுவே, இந்திரபிரஸ்தமாக உருவானது. ஹஸ்தினாபுரத்திற்குத் தென்மேற்காக இருந்தது (இருக்கிறது) இந்திரபிரஸ்தம் (இப்போதைய தில்லிப் பகுதி). க்ஷேத்திரம் என்னும் பகுதி, பெருவெளியாக இருந்துள்ளது. ஆங்காங்கே திட்டுத் திட்டாக மரங்களும் செடிகொடிகளும் அடர்ந்திருந்தாலும், பெரும்பாலும் பெருவெளிப் பிரதேசம். சொல்லப்போனால், பழைய தமைநகரமான ஆஸாந்தீவதத்திற்கு வடக்காக இருந்த பகுதி. ஆஸாந்தீவதம், க்ஷேத்திரம் இரண்டுமே சரஸ்வதி நதியின் நீரோட்டப் பகுதிகளில் இருந்தன. ஹஸ்திக்கும் பின்னர் வந்த அரசர்களில் ஒருவர் குரு. சரஸ்வதி நீரோட்டப் பகுதிகளில் குடியிருப்புகள் உருவாக உருவாக, இப்பகுதிகளில் தவம், சத்தியம், க்ஷமை (மன்னிப்பு), தயை (அன்பும் கருணையும்), தூய்மை, தானம், அர்ப்பணிப்பு ஆகியன செழிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் குரு. மொத்தத்தில் தர்மக்ஷேத்திரமாக இப்பகுதி விளங்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.தர்மக்ஷேத்திரமாக விளங்கவேண்டும் என்று ஆசைப்பட்ட இவரின் பெயராலேயே இப்பகுதியும் குருக்ஷேத்திரம் என்று அழைக்கப்படலானது. இங்கு வாழ்பவர்கள் தர்ம நெறியில் வாழ்வார்கள் என்பதால், இங்கு இறப்பவர்கள், சுவர்க்கத்தை அடைவார்கள் என்பதும் உணரப்பட்டது.வேடிக்கை பாருங்கள், இந்த இடத்தைத்தான், பாண்டவ - கௌரவ யுத்தத்திற்கான இடமாகத் தேர்ந்தெடுத்தார்கள். யார் தேர்ந்தெடுத்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் பலவிதமாகச் சொல்லப்படுகின்றன. ஆனாலும், யுத்தம் என்று ஒன்று ஏற்பட்டால், அது குருக்ஷேத்திரத்தில்தான் போரிடப்படவேண்டும் என்னும் சிந்தனை அநேகருடைய மனங்களில் இருந்திருக்கும் போலும்!ஊசிமுனை இடம் கூடத் தரமாட்டேன் என்று மறுத்த துரியோதனன், சபையைவிட்டு எழுந்து போய்விட்டான். பெரியவர்களோடு பேசிவிட்டுக் கண்ணனும் நகர்ந்துவிட்டான். இந்த நிலையில், தன்னுடைய தம்பிகளையும் ஆதரவாளர்களையும் சந்தித்த துரியோதனன், ‘யுத்தத்திற்கான ஆயத்தங்கள் உடனடியாகத் தொடங்கட்டும். இந்தப் போர் தொடங்கவில்லையானால் என்னால் ஒரு கணம்கூட உறங்கமுடியாது; உண்ணவும் முடியாது’ என்று கொதித்தான்..ஏற்கெனவே, ஹஸ்தினாபுரத்தில், கங்கைக் கரையில், துரியோதனனுக்குச் சார்பாக இருந்த அரசர்கள் திரண்டிருந்தனர். பகதத்தன், சல்லியன், பூரிசிரவஸ், கிருதவர்மன், ஜயத்ரதன், சுதக்ஷிணன், விந்தன், அனுவிந்தன் ஆகியோர் ஆளுக்கு ஒரு அக்ஷரோணி சேனையோடு வந்திருந்தனர். இன்னும் சில அரசர்கள் அழைத்து வந்திருந்த சேனைகளைச் சேர்த்தால், மூன்று அக்ஷரோணிகள் ஆகின. ஆக மொத்தம் 11 அக்ஷரோணி சேனைகள். பதினொரு அக்ஷரோணிகளையும் குருக்ஷேத்திரம் செல்லுமாறு துரியோதனன் கட்டளையிட்டான்.உபப்லாவிய நகருக்குச் சென்று, தன்னுடைய தூது பலிதமாகவில்லை என்று அங்குத் தங்கியிருந்த பாண்டவர்களிடம் தெரிவித்த கண்ணன், ’நடந்ததைச் சொல்லிவிட்டேன்; அரசர்கள் தங்களின் நாசத்தை எதிர்கொள்ள குருக்ஷேத்திரம் நோக்கிப் பயணப்பட்டுவிட்டனர்’என்றே உரைத்தான்.இதன் பின்னர், தங்கள் பக்கம் சேர்ந்திருந்த மன்னர்களையும், ஏழு அக்ஷரோணி சேனைகளையும் அழைத்துக்கொண்டு பாண்டவர்களும் குருக்ஷேத்திரம் புகுந்தனர்.குரு மன்னர் இந்தப் பகுதியைக் குடியிருப்புகளுக்காகத் தேர்ந்தெடுத்தபோது, சரஸ்வதியின் நீரோட்டம் பூமிக்கடியில் சென்றிருந்ததாகவும், ஏர் கலப்பை எடுத்து மன்னரே நிலத்தை உழுததாகவும் தெரிகிறது.எதற்காகக் குருக்ஷேத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெளிவாகத் தெரியாவிடினும், ஒன்றை ஊகிக்கமுடிகிறது. இங்கு மரணமடைந்தால், வீரசுவர்க்கம் புகலாம். போர்க்களத்துக்குச் செல்பவர்களின் சிந்தனை இப்படித்தானே இருந்திருக்கும்!ஆனாலும், பாரதம் நமக்குக் காட்டுகிற பேருண்மை என்ன தெரியுமா? தர்மத்தின் விளைநிலமாகக் குருக்ஷேத்திரம் இருக்கவேண்டும் என்று குரு மன்னர் ஆசைப்பட்டார். பிற்காலத்தில், போர்க்களமானாலும், அதர்மம் வீழ்ந்து, அறத்தைத் தழைக்கச் செய்யும் இடமாகக் குருக்ஷேத்திரம் நிலைத்தது.‘சுவர்க்கம் புகவேண்டுமானால், ஹரித்வாரில் கங்கை நீராடலாம்; காசியில் ஒரு துளி மண்ணெடுத்து வணங்கலாம்; அல்லது குருக்ஷேத்திரம் என்னும் பெயரை ஒரேயொருமுறை உரைக்கலாம்’ என்பார்கள்.குருக்ஷேத்திரம் எங்கே இருக்கிறது என்று வரைபடத்தில் பார்க்கலாமா? வேண்டாம். குருக்ஷேத்திரம் என்பது நமக்குள்ளே, நம் உள்ளத்துக்குள்ளே தான் இருக்கிறது. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நாளும் நமக்குள்ளே நடக்கிற போராட்டம்தான் குருக்ஷேத்திரப் போர். எத்தனைக் காலங்கள் ஆனாலும், எத்தனைத் தலைமுறைகள் ஆனாலும், யார் முன்னாலே போரெடுத்தாலும், யார் எத்தனை பலசாலியாக இருந்தாலும், எதுவானாலும், எப்படியானாலும், தர்மம், தர்மம் மட்டுமே நிறைவாக வெற்றி பெறும் என்பதே குருக்ஷேத்திரப் பாடம். பாரதப் பாடமும் இதுவே! (பாரதம் விரியும்)-டாக்டர் சுதா சேஷய்யன்