திருமாலின் சிறப்பு வாய்ந்த திருநாமங்களுள் ஒன்று ஆதிகேசவன் என்ற திருநாமம். திருவட்டாறு, திருப்பெரும்புதூர், கூவத்தூர், பாண்டூர், மயிலாப்பூர், தேசூர் என பல தலங்களில் மகாவிஷ்ணு ஆதிகேசவப்பெருமாளாக எழுந்தருளி பக்தர்களைக் காத்து வருகிறார். ஆயிரம் நாமங்கள் ஸ்ரீமன் நாராயணனுக்கு வழங்கப்பட்டாலும் கேசவன் என்ற திருநாமத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. வேத வியாசர் பரதத்துவத்தை நிர்ணயம் செய்யும் வகையில் புனித கங்கையில் நீராடி துளசி மாலை சூடி வலக்கையை தூக்கி “கேசவனுக்குமேல் பரதத்துவம் இல்லை” என்ற மூன்று முறை கூறி சத்தியம் செய்தார் என்பது புராணம். வைதீகப் ப்ரமாணமும் “கேசவம் பிரதி கச்சதி” என்று முடிவடைகிறது. “எந்த தெய்வத்தை வழிபட்டாலும் அந்த வழிபாடு அந்த தெய்வத்திற்கு அந்தர்யாமியாகப் பிரகாசிக்கும் கேசவனையே சென்றடைகிறது” என்பது இதன் பொருள். இத்தகைய சிறப்புகள் பல வாய்ந்த ஆதிகேசவப் பெருமாள் எதிராஜவல்லித் தாயாருடன் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் செங்கற்பட்டு மாவட்டத்தில் மாம்பாக்கம் என்ற கிராமத்தில் எழுந்தருளினார். பசுமையான இந்தக் கிராமத்தில் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இருமருங்கிலும் ஓட்டு வீடுகளோடு ஒரு அக்ரஹாரம் இருந்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் பசுக்கள், கன்றுகள், ஆழ்வார்களின் அருளிச்செயலை அத்யயனம் செய்த பெரியோர்கள், கோயிலில் தொடர்ச்சியான பரிவேட்டை அத்யயன உத்சவம் மற்றும் விவசாயம் என பக்தி மணம் கமழத் திகழ்ந்தது. ஒரு கட்டத்தில் விவசாயம் பொய்த்துப் போக வேலை வாய்ப்பு வேண்டி நகரங்களில் குடியேற வேண்டிய கட்டாயம் அக்ரஹாரவாசிகளுக்கு ஏற்பட்டது. இதன் பின்னர் திருக்கோயில் பராமரிப்பு இன்றி மெல்ல மெல்ல சிதிலமடைந்தது. .ஒரு கட்டத்தில் கிராமத்துப் பெரியோர்களும் ஊர் மக்களும் இணைந்து இக்கோயிலை புனரமைக்கும் திவ்ய பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள 17.8.1998 அன்று சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் திருக்கோயில் புனரமைப்புப் பணிகள் துவக்கப்பட்டு 29.8.2010 அன்று மஹாசம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இக்கோயிலுக்கு இராஜகோபுரம் அமைக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் துவக்கப்பட்டு வெகுவிரைவாக இராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டு 25.4. 2022 அன்று நூதன இராஜகோபுர புனருத்தாரண சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இனி கோயிலை வலம் வந்து ஆதிகேசவனை தரிசித்துப் பேறு பெறுவோம். மூன்று நிலை இராஜகோபுரத்தை தரிசித்து உள்ளே நுழைந்தால் தலத்தின் பழமையைப் பறைசாற்றும் விளக்குத் தூணும், அடுத்தபடியாக பலிபீடமும், தொடர்ந்து பெரிய திருவடி சன்னதியும் அமைந்துள்ளது. சுற்றுப்பிராகாரத்தில் அமைந்த ஒரு சன்னதியில் ஆஞ்சநேயர், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், இராமானுஜர், மணவாளமாமுனிகள் சிலா ரூபங்களில் அமைந்து அருளுகிறார்கள். அர்த்த மண்டபத்தில் உற்சவ ரூபத்தில் ஆதிகேசவப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருளுகிறார். இத்தலத்தில் தாயார் எதிராஜவல்லிக்கு தனி சன்னதி இல்லை. இவர் உற்சவ கோலத்தில் அருளுகிறார். அருகில் காளிங்கநர்த்தனர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நம்மாழ்வார், இராமானுஜர், மணவாளமாமுனிகள் உற்சவர்களாக அமைந்துள்ளார்கள்..கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியோடு ஆதிகேசவப்பெருமாள் என்ற திருநாமம் தாங்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். தாயார் எதிராஜவல்லியை வேண்டிக்கொள்ள, திருமணத்தடைகள் விலகி ஆதிகேவசப்பெருமாளின் ஆசிகளோடு வெகு விரைவில் திருமணம் கைகூடுகிறது என்கிறார்கள் பயன்பெற்றவர்கள். இதனாலேயே இவர்களைத் திருமணத் தடை நீக்கும் திவ்ய தம்பதியர் என்று அழைக்கிறார்கள். எந்தத் தலத்திற்கும் இல்லாத சிறப்பு இத்தலத்திற்கு உண்டு. ஜனவரி 26 குடியரசுதினம், மே 1 தொழிலாளர் தினம், 15 ஆகஸ்டு இந்திய சுதந்திர தினம் மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி முதலான தேசிய விடுமுறை நாட்களில் இத்தலத்தில் சிறப்புத் திருமஞ்சனம், ஊஞ்சல் உற்சவம், திருக்கல்யாண உற்சவம் முதலான வைபவங்கள் நடத்தப்பட்டு அன்று மதியம் சமபந்தி போஜனம் நடைபெறுவது சிறப்பு. இத்தலத்தில் கிருஷ்ணஜெயந்தி, ஸ்ரீராமநவமி, அனுமன் ஜெயந்தி, திருவாடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள், சிறப்பு கல்யாண உற்சவம் முதலானவை விமரிசையாக நடைபெறுகின்றன எங்கே இருக்கு? செங்கற்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் கருங்குழி சாலையில் திருக்கழுக்குன்றத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் மாம்பாக்கம் அமைந்துள்ளது. செங்கற்பட்டு சாலூர் மார்கத்தில் இயங்கும் T72 என்ற நகரப்பேருந்தில் பயணித்து மாம்பாக்கத்தை அடையலாம். தரிசன நேரம்காலை 8 - 9. தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. -அபராஜிதா