எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனின் பத்து அவதாரங்களில் மிகவும் வித்தியாசமானது நரசிம்ம அவதாரமாகும்.நம்மைப் போன்ற ஜீவாத்மாக்களுக்கு, அவரவர் செய்த வினைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு சோதனைகளையும் நெருக்கடிகளையும் கொடுப்பவரே எம்பெருமான்.ஆனால், அந்த எம்பெருமானுக்கே ஒரு சிறுகுழந்தையின் வார்த்தைகளால் திடீரென்று ஒரு நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. அந்தக் குழந்தை வேறு யாரும் இல்லை. ஹிரண்யகசிபுவின் புதல்வனாக அவதரித்து, இளம் வயதிலேயே ஹரிபக்தியில் ஊறி வளர்ந்து கொண்டிருந்த பக்தப்பிரகலாதனே அந்தச் சிறுகுழந்தை.அப்படி என்னதான் அந்தக் குழந்தை சொல்லியதாம்?“ஏ, பிரகலாதனே! நீ வணங்கும் ஹரி எங்கே இருக்கிறான் காட்டு!” என்று தன் தந்தை ஹிரண்யகசிபு கேட்டவுடன் சிறிதும் தயங்காமல், “தந்தையே! நான் வணங்கும் ஹரி தூணிலும் இருக்கிறார்; துரும்பிலும் இருக்கிறார்” என்று பெருத்த நம்பிக்கையுடன் கூறிவிட்டது, பிரகலாதன் என்னும் அந்தச் சிறுகுழந்தை.எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்தானே? அப்படி இருக்கையில் தூணிலும் துரும்பிலும் இருப்பதில் அவருக்கு என்ன நெருக்கடியும் சோதனையும் இருக்கப் போகிறது.நெருக்கடிக்குக் காரணம் பிரகலாதனின் வார்த்தைகள் மட்டும் அல்ல; ஹிரண்யகசிபு தவம் புரிந்து வாங்கி வைத்திருந்த வரங்களும்கூட!“ஒரு வீட்டின் வாசலும் அல்லாத உட்புறமும் அல்லாத இடத்தில், பகலும் அல்லாத இரவும் அல்லாத நேரத்தில், மனிதனும் அல்லாத மிருகமும் அல்லாத ஒருவனால், ஆயுதங்கள் எதுவும் இன்றி நான் கொல்லப்பட வேண்டும்” என்று ஒரு வில்லங்கமான வரத்தைப் பெற்றுள்ள அந்த அசுரனை பிரதோஷ காலம் முடிவதற்குள் கொல்லவேண்டும். அதற்கு உரிய (மனிதனும் மிருகமும் அல்லாத) நரசிங்க உருவத்தினை எடுத்துக்கொண்டு சட்டென்று அந்த அசுரன் மீது பாய்ந்து அவன் கதையை முடிக்கவேண்டும். அந்த ஹிரண்யகசிபு எந்தத் தூணைத் தட்டினாலும் அந்தத் தூணிலிருந்தே வெளிப்பட்டு அவனைக் கொல்லவேண்டும்.எனவேதான், தம்முடைய பக்தனாகிய ஒரு குழந்தையின் வாக்கு பொய்யாகக் கூடாது என்பதற்காக எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் அந்த அசுரனுடைய அரண்மனைத் தூண்கள் அனைத்திலும் நரசிங்கத் திருவுருவத்துடன் காத்துக்கொண்டிருந்தார்..குழந்தையாகிய பிரகலாதன் கூறிய வார்த்தைகளால் இது மட்டுமா நிகழ்ந்தது?படைப்புக் கடவுளாகிய பிரம்மதேவனுக்கு ஒரு பாட்டியும் கிடைத்துவிட்டாளாம். இதைச் சொல்லுபவர் சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்பு அவதரித்த ஆசாரிய புருஷராகிய ஸ்ரீவேதாந்ததேசிகர்.“நான்முகனை நாராயணன் படைத்தான்; நான்முகனும்தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் – யான்முகமாய்அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளைச்சிந்தாமல் கொள்மின் நீர் தேர்ந்து’’.என்று ஸ்ரீதிருமழிசையாழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி கூறுகின்றது.முழுமுதற்கடவுளாகிய ஸ்ரீமந்நாராயணன் முதலில் சதுர்முக பிரம்மாவைப் படைத்தார். பிரம்மா சிவபெருமானைப் படைத்தார் என்பது ஸ்ரீவைஷ்ணவர்களின் நம்பிக்கையாகும்.பிரம்மாவின் தந்தையாகிய ஸ்ரீமந்நாராயணன் ஸ்ரீநரசிம்மாவதாரமாக ஹிரண்யகசிபுவின் அரண்மனையிலுள்ள தூணிலிருந்து வெளிப்பட்டார். ஆக, பெருமாள் சிறிது காலம் தங்கியிருந்து வெளிப்பட்ட தூண் அப்பெருமாளுக்கே தாயாராக மாறிவிட்டதாம். அக்காரணத்தினாலேயே, அந்தத் தூண் (பெருமாளின் புதல்வராகிய) பிரம்மாவுக்குப் பாட்டியாகவும் ஆகிவிட்டது என்று தாம் இயற்றிய தசாவதார ஸ்தோத்திரத்தில் சுவைபடக் கூறுகின்றார் ஸ்ரீவேதாந்ததேசிகன். “ப்ரத்யாதிஷ்ட புராதந ப்ரஹரண க்ராம: க்ஷணம் பாணிஜை: அவ்யாத் த்ரீணி ஜகந்தி அகுண்ட மஹிமா வைகுண்ட கண்டீரவ: யத் ப்ராதுர்பவநாத் அவந்த்ய ஜடரா யாத்ருச்சிகாத் வேதஸாம் யா காசித் ஸஹஸா மஹாஸுரக் ருஹ ஸ்தூணா பிதாமஹ்யபூத் “என்ற அந்த சுலோகம் பக்திரஸம், கற்பனைவளம் இரண்டும் நிரம்பியதாக உள்ளது.ஸ்ரீவேதாந்த தேசிகரைப் போலவே மேலும் பல ஆசாரிய புருஷர்களும், ஆழ்வார்கள் பலரும் ஸ்ரீநரசிம்மாவதாரத்தின் பெருமைகளைப் பலவிதமாக வியந்து பாடியுள்ளனர்.“எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து என்று இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே?”மேற்கண்ட பாசுரத்தில் ஸ்ரீநம்மாழ்வார், “எங்கும் உளன் கண்ணன்” என்று பிரகலாதன் கூறியதாகப் பாடியிருப்பதும் நம் சிந்தனையைத் தூண்டவல்லதாகும்.பொதுவாக ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவைத்தான் கண்ணன் என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைப்பது வழக்கம். தம்முடைய கண்ணழகினாலும் கட்டழகினாலும் பதினாறாயிரம் கோபியர்களை மயக்கியவர் கண்ணபிரான்..“ராமோ ராஜீவ லோசன: - தாமரை போன்ற கண்ணுடையவர்” என்று ஸ்ரீராமபிரானுடைய திருக்கண்களின் அழகையும் போற்றுவது வழக்கம்.ஆனால், பார்த்தாலே பயத்தை ஏற்படுத்தக்கூடிய சிங்கத்தின் தலையுடன் அவதரித்த நரசிம்மமூர்த்தியை “கண்ணன்” என்று குறிப்பிடுவானேன்?“மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து”என்று ஸ்ரீஆண்டாள் பாடியது போன்று சிங்கத்தின் கண்களின் சீற்றம் அல்லவோ வெளிப்படும்? விஷயம் இப்படியிருக்க, ஸ்ரீநம்மாழ்வார் நரசிம்மமூர்த்தியைக் கண்ணழகு உடையவர்களுக்குச் சூட்ட வேண்டிய ’கண்ணன்’ என்ற திருப்பெயரால் அழைப்பானேன்?காரணம் இல்லாமல் இருக்குமா என்ன?ஸ்ரீநம்மாழ்வார் ’வேதம் தமிழ் செய்த மாறன்’ அல்லவா? அவருடைய திருவாக்கிலிருந்து உண்மையைத் தவிர வேது எதுவும் வெளிப்படுமா என்ன?ஸ்ரீநரசிம்மாவதாரத்தின் திருவுருவம் மனிதன், சிங்கம் ஆகிய இரண்டின் கலவைதானே! அப்பெருமானின் திருக்கண்களும் கருணை, கோபம் ஆகிய இரண்டையும் காண்பித்தனவாம்.தன்னுடைய பக்தனாகிய குழந்தை பிரகலாதனிடம் அளவில்லாத கருணையையும், ஹரிபக்தியில் ஈடுபட்ட காரணத்திற்காக அந்தச் சிறுகுழந்தைக்குத் துன்பம் விளைவிக்க முயன்ற ஹிரண்யகசிபுவிடம் எல்லையில்லாத கோபத்தையும் ஸ்ரீநரசிம்மப்பெருமானின் திருக்கண்கள் ஒரேநேரத்தில் வெளிப்படுத்தினவாம்.“திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்அங்கண் இரண்டும் கொண்டு நோக்குதியேல்,எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்!”என்று திருப்பாவையில் ஸ்ரீஆண்டாள் பாடியது போன்று, அன்பர்களிடத்தில் கருணையையும், தன் அன்பர்களுக்கு அல்லல் கொடுப்பவர்களிடத்தில் கோபத்தையும் ஒரே சமயத்தில் வெளிப்படுத்திய விசேஷமான கண்கள் ஸ்ரீநரசிம்மப்பெருமானுக்கு உரியவையாக இருந்தன. எனவேதான் ஸ்ரீநம்மாழ்வார் அவரைக் “கண்ணன்” என்று மனமுவந்து அழைக்கின்றார்..கவிச்சக்கரவர்த்தி கம்பனின் காலத்தில் எல்லாம் எப்படிப்பட்ட பெரும்புலவராக இருந்தாலும் அவர்கள் இயற்றுகின்ற காவியங்களுக்கான அங்கீகாரம் அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடாது.இலக்கிய இலக்கணச் சிறப்புகள் வாய்ந்த பத்தாயிரம் பாசுரங்களுடன் கூடிய கம்பராமாயணத்தினை அக்காலப் புலவர்கள் ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பதற்கும் கம்பநாட்டாழ்வார் காத்திருக்க வேண்டியதாயிற்று.அவ்விதத்தில், விபீஷணன் தன்னுடைய அண்ணன் ராவணனுக்கு அறிவுரை கூறும் விதமாக அமைந்த ’இரணியவதப் படலம்’ கம்பராமாயணத்தில் இடம் பெற்றிருப்பதற்குச் சில புலவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதைக்கேட்டு மனம் தளராத கவிச்சக்கரவர்த்தி கம்பர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் ஸ்ரீரங்கநாயகித் தாயார் சந்நதிக்கு அருகில் வடதிசை நோக்கி எழுந்தருளியுள்ள ஸ்ரீமேட்டு அழகியசிங்கர் சந்நதியின் முன்பு கூடியிருந்த புலவர்களின் முன்னிலையில் தாம் இயற்றிய இரணிய வதைப் படலத்தின் பாசுரங்கள் ஒவ்வொன்றாகப் பாட ஆரம்பித்தார். “நசைதிறந்து இலங்கப் பொங்கி “நன்று நன்று” என்ன நக்கு விசைதிறந்து உருமு வீழ்ந்தது என்ன ஓர் தூணின் வென்றி இசைதிறந்து உயர்ந்த கையால் எற்றினான் எற்றலோடும் திசைதிறந்து அண்டம் கீறிச் சிரித்தது அச்செங்கட்சீயம் ”என்ற பாடலைப் பாடி முடித்ததுதான் தாமதம், ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சந்நதியிலிருந்து “ஹா ஹா ஹா ஹா ஹா!” என்ற தெய்வீகச் சிரிப்பொலி எழுந்தது.“கம்பனின் கவிதையைப் புலவர்கள் என்ன அங்கீகரிப்பது. இதோ நானே அங்கீகரித்துவிட்டேன். இனி புலவர்கள் ஏற்றுக்கொண்டால் என்ன, ஏற்காவிட்டால்தான் என்ன?” என்று அந்த மேட்டு அழகியசிங்கரே கேட்பது போன்று எழுந்த அந்த சிரிப்பு சப்தத்தைக் கேட்டு அனைவரும் பிரமித்து நின்றனர். திருவரங்கத்துப் புலவர்கள் சபையைச் சேர்ந்தவர்கள் கம்பராமாயணத்தை உடனடியாக அங்கீகரித்தார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?ஸ்ரீநரசிம்மரின் அவதாரத் திருநட்சத்திரம் சுவாதி. அவதரித்த நேரம் பிரதோஷ காலம். இவருக்குரிய கிரகம் செவ்வாய்.வீடுகளில் பொதுவாக ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருவுருவப் படத்தை வைத்து வழங்குவதே நல்லது. யோக நரசிம்மர் அல்லது உக்கிர நரசிம்மர் போன்ற விக்ரகங்கள், படங்கள் போன்றவற்றை வைத்துப் பூசிப்பதற்கு மேலதிகமான நியமநிஷ்டைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.செவ்வாய்க்கிழமை, பிரதோஷம், சுவாதி நட்சத்திரம் ஆகிய நன்னாட்களில் அருகிலுள்ள திருக்கோயில்களுக்குச் சென்று பானகம் நைவேத்தியம் சமர்ப்பித்து ஸ்ரீநரசிம்மமூர்த்தியை அர்ச்சனை செய்து வழிபடுபவர்களுக்கு ஆயுள், ஆரோக்யம், மனோதைரியம், எதிரிபயம் நீங்கல், வழக்குகளில் வெற்றி, கல்வியறிவு, புகழ் ஆகிய அனைத்தும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. ஸ்ரீநரசிம்மாவதாரமே நொடிப்பொழுதில் தோன்றி நினைத்ததை முடித்த காரணத்தினால், அப்பெருமானைச் சரணடைந்தவர்களின் இன்னல்கள் பொடிப்பொடியாய் உதிர்ந்துவிடுவது நிச்சயம்.ஸ்ரீலட்சுமி நரசிம்மரைக் குறித்துப் பாடப்பட்ட அநேக திவ்யப்பிரபந்தப் பாடல்களையும், ஸ்ரீமந்திரராஜபத ஸ்தோத்திரம், ஸ்ரீருணவிமோசன ஸ்தோத்திரம், ஸ்ரீலட்சுமி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம் (ஸ்ரீஆதிசங்கரர் மற்றும் ஸ்ரீஅஹோபில மடத்தின் நாற்பத்து நான்காம் பட்ட ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஆகியோர் அருளியவை) ஆகிய ஸ்தோத்திரங்களையும் ஓதுவதன் மூலம் ஸ்ரீலட்சுமி நரசிம்மசுவாமியின் அருளைப் பெற்று மகிழலாம்! ஸ்ரீநரசிம்மரின் அவதாரத் திருநாளாகிய நரசிம்ம ஜெயந்தி இவ்வருடம் 4.5.2023 அன்று அமைகின்றது.ஸ்ரீ லட்சுமி நரசிம்மப் பெருமாள் திருவடிகளே சரணம்!-எஸ். ஸ்ரீதுரை