உத்தமர்களான இராம இலக்குவர்கள், உயர்ந்த தவமுனியாகிய விஸ்வாமித்திரரோடு ஜனகன் என்னும் பேரரசன் ஆண்டுவருகிற ‘விதேக’ நாட்டிற்குள் பிரவேசிக்கின்றனர். இயற்கைவளம் பொருந்திய அந் நாட்டின் அழகு இராம இலக்குவரை வியக்கச் செய்கிறது. அந் நாட்டின் வயல்களுக்குள் வேலை செய்துகொண்டிருக்கும் உழவ மல்லர்கள், தம் காதலியரின் காதல் பார்வைக்காய் ஏங்கி நிற்கின்றனராம். அத்தகையவர்களுக்கு, அவ் வயல்களுக்குள் மலர்ந்திருக்கின்ற பெரிய தாமரைப் பூக்களும், அவற்றின் மேல், உழவர்களால் களை எனப் பிடுங்கி எறியப்பட்டு விழுந்து கிடக்கின்ற கருங்குவளை மலர்களும், அழகிய மலர்ந்த தமது காதலியரின் முகத்தையும் அதில் பொருந்தி இருக்கும் கரிய கண்களையும் நினைவூட்ட, அக்கண்கள் தரும் காதல் பார்வைக்காக ஏங்கிய அவர்கள், ஆசையோடு அவற்றின் அருகில் சென்று, அவை காதலியரின் முகமும், கண்களும் அல்ல எனக் கண்டு, தம் ஆசை வீணாக, மனவெறுப்பு எய்தி நிற்கின்றனராம். அதுபோலவே, அந்நாட்டில் வாழும் மென்மையான தன்மையை உடைய மகளிர் கூர்மையான வாள்களை அவற்றின் உறையுள் இட்டால் போல, தமது கூர்மையான கண்களைக் கைகளால் மூடிக்கொண்டு, குளங்களிலுள்ள நீரில் மூழ்கி எழுகின்ற காட்சி, பாற்கடலைக் கடைந்தபோது அதனுள் இருந்து மகாலட்சுமி எழுந்தாற்போல இருக்கின்றதாம்..இவ்வாறாக அந்நாட்டின் அழகிய இயற்கைக் காட்சிகளைப் பார்த்தபடி, விஸ்வாமித்திர முனிவரோடு இராம இலக்குவர்கள் மிதிலை நகரை அண்மித்து வருகிறார்கள். அப்போது அந்நகரைச் சுற்றி இருந்த மதிலின் வெளிப்புறத்திலே, வெற்றிடம் ஒன்றில் மேடாக உயர்ந்து தோன்றுகிற ஒளிவீசும் கருங்கல்லொன்றை அவர்கள் காண்கின்றனர். அக் கல்லின் அருகாக அவர்கள் நடந்து சென்றபோது, இராமனுடைய காலடிபட்டு மண்ணில் எழுந்த தூசிப்படலம், அக் கல்லின்மேல் பட, அந்த நிமிடமே அந்தக் கல், தன் வடிவம் மாறி ஓர் அழகிய பெண்ணாகியது. உருமாறி எழுந்த அப் பெண் இராமனின் பாதத்தைப் பணிந்து நிற்கின்றாள். இந்த அதிசயக் காட்சிகண்டு வியந்த இராமன் விஸ்வாமித்திரரை நோக்கி, ‘இஃது என்ன அதிசயம்?’ என்றும், ‘இப் பெண்மணி யார்?’ என்றும் வினவ, முனிவர், ‘இராமா! முன்னொரு காலத்தில் தேவேந்திரன் தன் இச்சைக்காக இவளது கற்பை வஞ்சனையால் பறித்தான். அங்ஙனம் செய்த இந்திரனுக்கு உடல் முழுவதும் ஆயிரம் கண்கள் உண்டாகும்படி இப் பெண்ணின் கணவனான கௌதம முனிவர் சாபம் கொடுத்தார். இவள் பெயர் ‘அகலிகை’ எனக் கூறி, அந்த அகலிகையின் வரலாற்றை இராமனுக்கு விரிவாக உரைக்கத் தொடங்கினார். இவ்வுலகமாந்தர் அனைவர்க்குமான அழகையெல்லாம் ஒன்றாக்கி, பிரம்மனால் படைக்கப்பட்டவள் இப்பெண்மணி. இவளுக்கு அகலிகை எனப் பிரம்மன் பெயரிட்டான். இவளது அழகுகண்டு மூவுலகத்தில் இருந்தோரும் மயங்கினார்கள். இவ்வழகிய அணங்கினை அடைவதற்காக தேவலோகத்தின் தலைவனான தேவேந்திரன் பெரிதும் ஆசைப்படத் தொடங்கினான். தனது கருத்திற்கு மாறாக அகலிகையை அடைய நினைந்த தேவேந்திரனுக்கு அவளைக் கொடாத பிரம்மதேவன், கௌதம முனிவரை அழைத்து, ‘இவளைப் பாதுகாப்பாயாக!’ எனக் கூறி அகலிகையை அவரிடம் ஒப்படைத்தான். பிரம்மனின் கட்டளையை ஏற்று, பலகாலம் அகலிகையைப் பாதுகாத்த கௌதம முனிவர், அவளில் சிறிதேனும் இச்சைப்படாமல் மீள அவளைக் கொணர்ந்து பிரம்மதேவரிடம் சேர்ப்பித்தார். அகலிகையின் அழகில் சலனப்படாமல் இருந்த கௌதம முனிவரது நல்லொழுக்கத்தைக் கண்டு, இம் முனிவரே அகலிகைக்குப் பொருத்தமான கணவர் எனக் கருதிய பிரம்மன், இவளை அந்தக் கௌதம முனிவருக்குத் திருமணம் செய்துகொடுத்தான். அகலிகைமேல் தான் கொண்ட ஆசை நிறைவேறாமல் போகவே. ஆத்திரமும் பொறாமையும் கொண்ட இந்திரன், வஞ்சனையாலேனும் அவளை அடைந்துவிட வேண்டும் என முடிவு செய்தான்..இவ்விடத்தில் முக்கியமான செய்தி ஒன்றை வாசகர்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நமது தமிழ் மரபில், மாற்றான் மனைவியின் மேல் இச்சைப்படுதல் என்பது பெருங்குற்றமாய்க் கருதப்பட்டது. குறித்த ஒருவனுக்கு என்று பெரியோர் முன்னும் தேவுக்களின் முன்னும் நிச்சயிக்கப்படுகின்ற ஒரு பெண்ணை, மற்றைய அனைவரும் தாயாய் நினைந்து போற்றுதல் வேண்டும் என்பதே நம் மூதாதையரின் முடிவாய் இருந்தது. அதனால்தான் அறம் வகுத்த வள்ளுவரும், ‘பிறனில் விழையாமை’என்னும் ஓர் அதிகாரத்தை அறத்துப்பாலில் வைத்தனர். அந்த அதிகாரக் குறள் ஒன்றில் சான்றோருக்கு பிறன்மனை நோக்காத பேராண்மையே அறமும் ஒழுக்கமும் ஆகும் என்கிறார் வள்ளுவர். வரைவற்ற காமத்தால், மாற்றான் மனைவியெனத் தெரிந்தும் அகலிகையை அடைந்துவிட வேண்டும் என, இந்திரன் அறம் மீறி நினைக்க ஆரம்பித்தான். அந்த நினைப்பினால் ஒருநாள், இருள் நீங்கி விடிவதற்கு முன்பாக, மாயையினால் கௌதம முனிவரைப் போல வேடம் பூண்டு, அம் முனிவரின் ஆச்சிரமம் நோக்கி அவன் சென்றான். அங்கு சென்ற அவன் சேவல் போல் கூவிச் சத்தம் எழுப்ப, பொழுது விடிந்துவிட்டதாக நினைத்த கௌதம முனிவர், தனது காலைக்கடன்களைக் கழிக்க இதுவே தருணம் என நினைந்து, வழக்கமாகத் தான் செல்லும் நீர் நிலையை நோக்கிச் சென்றார். முனிவர் அப்புறம் சென்றதும், கௌதமரின் வடிவம் கொண்டிருந்த இந்திரன், அவரது ஆச்சிரமத்திற்குள் நுழைந்தான். நுழைந்த அவன் பாவத்திற்குச் சிறிதும் அஞ்சாமல் அகலிகையின் அருகில் செல்ல, அரைத்தூக்கத்திலிருந்த அகலிகை, வெளியில் சென்ற தனது கணவர்தான் வந்திருக்கிறார் என நினைந்து, மாறுவேடத்திலிருந்த இந்திரனை அணைத்துக் கொண்டாள். இங்ஙனமாய்அகலிகையைஏமாற்றி, இந்திரன்அவளைஅனுபவித்துக்கொண்டிருந்தவேளையில், நீர்நிலைக்குச்சென்றகௌதமமுனிவர், அங்குஇயற்கையில்தோன்றியகுறிகளைவைத்து, இன்னும்பொழுதுவிடியவில்லைஎன்பதைஉணர்ந்தார். அங்ஙனமாயின்சேவல்கூவியதுஎப்படிச்சாத்தியமாயிற்று? எனநினைந்தஅவர், தனதுஞானதிருஷ்டியினால்பார்க்கஇந்திரன்செய்யும்வஞ்சனைச்செயல்அவர்அறிவில்பட்டது. ஆத்திரமுற்றஅவர்முக்கண்ணுடையசிவபெருமான் கோபித்து வந்தாற்போல, தனது ஆச்சிரமம் நோக்கி வேகமாய் வரத் தொடங்கினார்.உண்மையை உணர்ந்து முனிவர் வருவதை அறிந்த இந்திரன், முனிவரின் கோபத்திற்கு ஆளாக வேண்டுமே என அஞ்சி, ஒரு பூனையின் வடிவம் கொண்டு ஆச்சிரமத்தைவிட்டு ஓட முயன்றான். அப்போதுதான் அகலிகைக்கு வந்தது தன் கணவர் இல்லை என்னும் உண்மை புலப்பட்டது. அவளும் கணவரின் கோபத்திற்கு ஆளாக வேண்டுமே என அஞ்சிநின்ற அவ் வேளையில் முனிவர் கடுங்கோபத்தோடு அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தார். வந்த அவரது கண்ணில் பூனையாய் ஓடும் இந்திரன்பட, ஆத்திரத்தோடு அவனை நோக்கி, ‘ஒரு பெண்மேல் கொண்ட இச்சைக்காக, ஆன்றோர் வகுத்த தர்மத்தைமீறி வஞ்சனையாய் நீ நடந்து கொண்டாய். அதனால் உனது உடம்பு முழுவதும் ஆயிரம் பெண்குறிகள் முளைக்கட்டும்’ எனச் சாபம் இட்டார் முனிவர். அச் சாபம் உடனேயே நிறைவேற நாணமுற்ற இந்திரன் அவ்விடத்தைவிட்டு ஓடி மறைந்தான். இந்திரன் அந்த இடத்தைவிட்டு அகன்றதும், நடுக்கத்தோடு நின்ற தனது மனைவியாகிய அகலிகையை நோக்கி, ‘கணவனது தீண்டுதலுக்கும் மாற்றான் ஒருவனுடைய தீண்டுதலுக்கும் வேறுபாடு தெரியாமல் கல்லைப் போல நீ இருந்ததால் நீயும் கல்லாகக் கடவாய்’ எனச் சபித்தார் முனிவர். அச் சாபத்தினைக் கேட்டு அதிர்ந்துபோன அகலிகை, முனிவரது காலில் வீழ்ந்து கதறி அழுது, ‘பிழைசெய்தவர்களைப் பொறுப்பது பெரியவர்களின் கடன். எனக்குச் சாபம் தந்த நீங்களே அச் சாபத்திற்கான விமோசனத்தையும் சொல்லி அருளவேண்டும்’ என வேண்டி நின்றாள். கோபம் அடங்கிய கௌதம முனிவர் அவளுக்காய் இரங்கி, அவளை நோக்கி, ‘பெண்ணே அஞ்சாதே! ஒரு காலத்தில் அயோத்தியை ஆளுகின்ற தசரதனுக்கு இராமன் என்கின்ற புதல்வன் பிறப்பான். அவன் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தை முன்னிட்டு நீ கல்லாய்க் கிடக்கும் இவ் வழியாக நடந்து வருவான். அங்ஙனம் அவன் வருகையில், அவனது காலில் இருந்து எழும்பும் தூசிப்படலம் கல்லான உன்மேல்பட, நீ மீண்டும் பெண் உருவம்பெறுவாய்’ என சாபவிமோசனம் அளித்து அவ்விடத்தைவிட்டு அகன்றார். அவர் அப்புறம் சென்றதும் அகலிகை அவ்விடத்திலேயே கல்லாய்மாறி வீழ்ந்து கிடந்தாள்..தம் தலைவனான தேவேந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தால், தேவகுலம் இழிவுற்றமையை அறிந்து, தேவர்கள் பிரம்மதேவனிடம் சென்று அவனை இச்சாபத்திலிருந்து மீட்கவேண்டும் என வேண்டிக்கொண்டனர். அவர்களது வேண்டுகோளை ஏற்ற பிரம்மதேவன் கௌதம முனிவரிடம், ‘இந்திரனுக்குச் சாபவிமோசனம் அளித்தருள வேண்டும்’ என்று கேட்டனர். கோபம் தீர்ந்த கௌதம முனிவர், இந்திரனின் உடம்பில் தோன்றிய ஆயிரம் பெண் குறிகளும், ஆயிரம் கண்களாக மாறும்படி சாபவிமோசனம் அளித்தார். இதுவே இப் பெண்ணின் வரலாறு எனக் கூறிய விஸ்வாமித்திர முனிவர், கைகளால் தாடகையை அழித்தும், கால்களால் அகலிகைக்குச் சாபவிமோசனம் கொடுத்தும் நிற்கின்ற இராமபிரானைப் புகழ்ந்துரைக்க, இராமபிரான் அந்த அகலிகையை ‘தாயே!’ என்று அழைத்து வணங்கினான். பின்னர் விஸ்வாமித்திரரும், இராம இலக்குவரும் அகலிகையை அழைத்துக்கொண்டு கௌதம முனிவருடைய ஆச்சிரமத்தை அடைந்தனர். அங்கிருந்த கௌதம முனிவரிடம் விஸ்வாமித்திரர், ‘இவள் தெரிந்து பிழை செய்யாதவள். இந்திரனது வஞ்சனைக்கு ஆளாகியே இவள் தவறிழைத்தாள். ஆதலால் இவள் நெஞ்சினால் பிழைப்பிலள். அவளை நீ ஏற்றருள வேண்டும்’ எனக் கூற, அவரது வேண்டுகோளுக்கு உடன்பட்டு, கௌதம முனிவர் அகலிகையை மீண்டும் தன்னோடு சேர்த்துக் கொண்டார். அதன் பின்னர் விஸ்வாமித்திரரும், இராம இலக்குவரும் ஜனகனது யாகம் காண்பதற்காக மிதிலை நகர் நோக்கி நடக்கத் தொடங்கினர்.(இதிகாசம் வளரும்)