பிரத்தியாகரம்அஷ்டாங்க யோகத்தின் ஐந்தாவது அங்கம் பிரத்தியாகாரம். பிராணாயாமம் கைகூடிய பிறகு அடுத்துப் பயில வேண்டியது பிரத்தியாகாரம். புலன்களின் பிடியில் இருந்து மனமானது தன்னை விடுவித்து உள்ளே திரும்புதலே பிரத்தியாகாரம் ஆகும். மன ஒடுக்கம் என்றாலும், பிரத்தியாகாரம் என்றாலும் ஒன்றுதான். உண்மையில் அதுதான் யோக நெறி நோக்கிய பயணத்தின் சரியான தொடக்கப் படிநிலையாகும்.இயமமும், நியமமும் யோகஞான வாழ்வியலுக்கான ஒழுக்க நடத்தை நெறிமுறைகள். ஆசனம் உடலுக்கானது. அடுத்த படிநிலைகளான பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை என்பன மனத்தை ஒருமுகப்படுத்துவன. யோக நெறியில் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம் என்பன பகிரங்க சாதனங்கள் என்பர். தாரணை, தியானம், சமாதி இவை மூன்றும் அந்தரங்க சாதனங்கள் என்பர். பகிரங்க சாதனங்களில் தேறினால்தான் அந்தரங்க சாதனங்கள் எளிதாகும். மூச்சு லயம் மனோலயம் என்பதால் பிராணாயாமப் பயிற்சியால் மட்டுமே, மனத்தைக் கட்டுப்படுத்தி விடமுடியாது. காரணம் மனம் எப்போதும் அசைவுடையதுதான். அது புலன்வழியே வெளியே அலைபாய்ந்து கொண்டிருக்கும். நாம் எப்போதுமே புலன்களின் பிடியில் சிக்குண்டுக் கிடக்கிறோம். எப்போதும் புறத்தே உள்ள பொருள்களின் மீது புலன் வழி பற்றியோடும் மனத்தைப் பயிற்சியின் மூலம் விடுபடச்செய்யும் கலையே பிரத்தியாகாரம் என்று யோக சாஸ்திரங்கள் கூறுகின்றன..பிரத்தியாகாரம் என்பது இந்திரிய ஜெயம்; புலனடக்கம். புலன்கள் வழியாக மனம் செல்வதைத் தடுத்து நிறுத்தி தன்னிலைக்கு - மூலத்திற்குத் திரும்புவது பிரத்தியாகாரம் ஆகும். அதாவது வெளிமுகமாகப் புலன் வழியே ஓடிக்கொண்டிருக்கும் மனத்தை அதன் போக்கில் செல்ல விடாது தடுத்து உள்முகமாகத் திருப்புதல் என்பதாகும். "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து"எனும் வள்ளுவர் வாய்மொழியின்படி, ஆமை தனது உறுப்புகளை வேண்டுங்கால் நீட்டியும், வேண்டாத போது ஓட்டினுள் அடக்கியும் தன்னைப் பாதுகாப்பது போல், மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐம்பொறிகளைத் தீய நெறியில் செல்லவிடாது அடக்கி, நன்னெறியின்பால் நீட்டித்திருத்தல் என்பது பிரத்தியாகாரப் பயிற்சிக்கான விளக்கமாகும். "சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு" என்ற குறளும் இங்கு சிந்திக்கத் தக்கது. தாம் பற்றியுள்ள புறப்பொருள்களை விட்டு வெளியேறி புலன்கள், மனத்தோடு ஒன்றி விடுவதேபிரத்தியாகாரம் என்கிறார் பதஞ்சலி முனிவர். "ஸ்வஸ்ய விஷய அஸம்ப்ரயோகே சித்த ஸ்வரூபானுகார இவ இந்த்ரியாணம் ப்ரத்யாஹார:|. - யோக சூத்திரம் 2.54 மேலும் பிரத்தியாகாரத்தினால் இந்திரியங்கள் மனத்தின் வசமாகின்றன என்கிறார். "தத: பரமா வச்யதா இந்த்ரியாணம்||"-2:55 இந்திரியங்கள் நமக்கு வசப்பட்டால்தான், மனம் எளிதில் தியானத்தில் ஈடுபட முடியும். எல்லா உணர்ச்சிகளையும், செயல்களையும் நாம் கட்டுப்படுத்த முடியும். அப்போது இந்த ஊனுடம்பு எவ்வளவு அற்புதமானது என்பதை உணர்வோம். பிரத்தியாகாரம் குறித்து பதஞ்சலி முனிவர் சுருக்கமாக ஓரிரு சூத்திரங்களில் குறிப்பிட, திருமூலர் பத்து மந்திரங்களில் பல விளக்கங்கள் தந்து சற்று விரிவாகப் பேசுகிறார். இந்திரியங்கள் தம்வழியே செல்லாமல் மனத்தைப் பற்றுதலே பிரத்தியாகாரம் எனப் பதஞ்சலியார் விளக்கம் தர, திருமூலரோ வெளியே பொருள்களைப் பற்றிச் செல்லும் பொறிகளைத் தடுத்து இழுத்து, அகத்தேயுள்ள சிவன்பால் பொருந்த வைப்பது பிரத்தியாகாரம் என்கிறார். "கண்டுகண்டு உள்ளே கருத்துற வாங்கிடில் கொண்டுகொண்டு உள்ளே குணம்பல காணலாம் பண்டு உகந்து எங்கும் பழமறை தேடியை இன்றுகண்டு இங்கே இருக்கலும் ஆமே." - 578 காணத்தக்க மூலப்பரஞ்சோதியை அகநோக்கிலே கண்டு கண்டு நிற்குமாறு மனத்தை அடக்கினால், அங்குத் தானே களிப்புப் பெற்று பயன்கள் பலவற்றை அடையலாம். முடிவில் அநாதியான பழமறைகள் எல்லாம் காண விரும்பிப் பண்டு தொட்டு எங்கு சென்று தேடியும் காணாத சிவப்பரம்பொருளை - இறைவனை இன்றே இவ்விடத்தே காணலாம். என்றும் இறவாமல் இருக்கலாம் என்கிறார். அடுத்து பிரத்தியாகாரப் பயிற்சிக்கான முறையையும் கூறுகிறார். " மூலத் துவாரத்தை முக்காரம் இட்டு இரு மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு காலத்தை வெல்லும் கருத்து இதுதானே." -583 இம்மந்திரத்தில் சூரிய மண்டலத்திற்கு மேலதாயுள்ள சந்திர மண்டலத்திற்குரிய ஒரே ஆதாரமான ஆக்ஞை எனப்படும் புருவ மத்தியதானத்துப் பயிற்சி பற்றிப் பேசுகிறார். இங்கு மூலத் துவாரம், மேலைத் துவாரம், வெளி என்பதெல்லாம் இருதய ஆகாசமெனும் புருவ மத்தியில் கோடி சூரியப் பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சோதி என்ற சுழிமுனையேயாகும். இதில் குடியேறும் பயிற்சியையே, திருவள்ளுவர் பிரானும், "மலர்மிசை ஏகினான்" என்கிறார். பிராண வாயுவை அடக்கல் பிராணாயாமம் எனப்படும்..புலனொடுக்குதலாகிய மன அடக்கமே பிரத்தியாகாரம் ஆகும்.நினைவை சுழிமுனை மார்க்கத்தில் செலுத்துதல் தாரணை என்பர்.ஆதாரங்களையும் அதிதெய்வங்களையும் அறிதல் தியானம் ஆகும்.மேலைத் துவாரமெனும் பிரம்மரந்திரத்தில் ஒளிரும் பிரம்மப் பிரகாசத்தில் அத்துவிதமாய் கலந்து இலயித்திருத்தல் சமாதியாம். மூலத்துவாரத்தை அடைத்தும், மேலைத் துவாரமெனும் பிரம்மரந்திரத்தில் மனத்தை சலனமற்று வைத்தும், சிதாகாசம் எனும் துவாதசாந்தப் பெருவெளியில் இந்திரியங்களில் மிகவும் பிரதானமான கண்களைப் பகிர்முகமாய்த் திறந்து வைத்தும் இரு. இவ்வாறான பயிற்சியே காலத்தை வெல்லும் உபாயம் - வழி - கருத்து என்கிறார். காலத்தை வென்றவர்க்கு நமனில்லை என்பதாம். இத்தகைய பிரத்தியாகாரப் பயிற்சியில் மனமானது ஆதாரத் தானத்திலேயே இலயித்திருப்பதால், ஐம்புலன்களும் ஒடுங்க, அவை ஏதும் தொழிற்பட மாட்டாது. " ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப் பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக் கரைத்துணர் வுன்னல் கரைதல் உள்நோக்கல் பிரத்தி யாகாரப்பெருமையது ஆமே." -585 மனத்தைப் பொறிவழிகளினின்றுப் பிரித்து, புறவுலகில் காணும் காட்சிகளை மெல்ல மெல்ல மறந்து, மனத்தை அகமுகமாக அறிவு வடிவாகிய இறைவன்பால் செலுத்தி, அந்த உணர்வினால் அவனிடத்து அன்பு மிகப் பெறுதலும், அந்த அன்பினால் அவனிடத்தே அழுந்திக் கிடத்தலுமே பிரத்தியாகாரம் என்கிறது திருமந்திரம். வேதாந்தம் எனப்படும் உபநிடதங்களிலும் அஷ்டாங்க யோகம் குறித்து பேசப்படுகிறது. அவற்றில் பிரத்தியாகாரம் குறித்து உபநிடதங்கள் கூறுவதில் சிலவற்றைக் காணலாம். மணடலப்ராஹ்மண உபநிடதம் (50), புலன்களை நாடிச் செல்லும் மனதை அடக்குதலே பிரத்தியாகாரம் என்கிறது. சாண்டில்ய உபநிடதம் (59), அஷ்டாங்க யோகத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. அதில் பிரத்தியாகாரம் பற்றிப் பேசுகையில், "வெளி விஷயங்களில் ஈடுபடும் புலன்களைப் பலாத்காரமாக உள்முகப்படுத்துதல் பிரத்தியாகாரம். எதெதைப் பார்த்தாலும் அதையெல்லாம் ஆத்மா என்று கருதுதல் பிரத்தியாகாரம்." ஆச்சாரியார் ஆதிசங்கரர், ஆன்ம விசாரத்தை மையக் கருத்தாகக் கொண்டு அருளிய கிரந்தம் அபரோக்ஷானுபூதி ஆகும். இந்நூலில் ஆச்சாரியர், அஷ்டாங்க யோகம் குறித்து விரிவாகப் பேசுகிறார். அதில் பிரத்தியாகாரம் குறித்து: "விஷயேஷ்வாத்மதாம் த்ருஷ்ட்வா |மனஸச் சிதி மஜ்ஜனம்ப்ரத்யாஹார: ஸ விஜ்ஞேயோஅப்யஸனீயோ முமுக்ஷுபி:||" - சுலோகம்:121 புறப்பொருள்களில் ஆத்மாவைக் கண்டு, மனத்தை சைதன்ய வடிவான ஆத்மாவிலேயே லயித்திருக்கச் செய்தல் "பிரத்தியாகாரம்" என்று அறியப்படுகிறது. அத்தகைய பிரத்தியாகாரம் முமுட்சுக்களால் பழகப்பட வேண்டும். "புறப்பொருள்களை விட்டு புலன்கள் மனத்தின் வடிவத்தை எடுப்பதே பிரத்தியாகாரம்" என்று பதஞ்சலி முனிவர் கூற, "சைதன்ய வடிவான ஆத்மாவில் மனம் இலயித்திருப்பதே பிரத்தியாகாரம்" என்கிறார் ஆச்சாரியார் ஆதிசங்கரர். எங்கள் ஞானாசரியர் பிரம்மத்தை அறிந்த மெய்வழி குழந்தைசாமி கவுண்டர் அவர்கள், புலன் வழிப் பற்றியோடும் மனத்தை உள்முகமாகத் திருப்பி ஆன்மாவில் லயிக்கச் செய்ய ஓர் எளிய உபாயம் சொல்லி யிருக்கிறார்கள். "பிரத்தியாகாரம். அது பர – தீ - ஆகாரம்பரத்தினிடமிருந்து வரும் ஞானத் தீ. "அதாவது பிரம்ம நிஷ்டராக வரும் குருமகான்மியரின் பராகாசத்திலிருந்து வரும் உள்ளொளியாகிய ஞானத் தீ - ஆகாய கங்கை - ஆன்மாவிற்கான அமிர்த வர்ஷிப்பை - வாய்மையை சீடனானவன், செவி வழியாக உட்கொள்ளும் போது மனமானது தானே அடங்கி ஞான சைதன்ய வடிவமாகும்" என்று பிரம்மத்தை அறிந்த மெய்வழி குழந்தைசாமி கவுண்டர் அவர்கள் அருளினார்கள்..தன்மூச்சை இவன் அறியாமலேயே வெளியேறாமல் அடக்கி வைப்பது, செவியுணவாகிய பாரவான்களின் நாதவொலி அமுதம்தான். இவ்வமுதம்தான் நாத மருந்தாகி, இவனுள்ளே குடியேறியுள்ள ஜீவனை சவமாக்காமல் சிவமாக்குகிறது. ஒரு மெய்ஞ்ஞானியின் முன்னிலையில் அமர்ந்து அவர்களது தேவ ஆவியாகிய திருவாக்கினைச் செவிமடுக்க மூச்சு தானே அடங்குகிறது. மெய்கண்ட பெரியோர்களின் திருவாக்குகளைக் கேட்பதுவே தவம், யோகம், முத்தியாகும். இது மெய்ஞ்ஞானப் பாதையில் பயணிப்போரின் கையேட்டு அனுபவம் ஆகும். முடிபாக அஷ்டாங்க யோகம் என்பது, படிப்படியாக ஆன்மாவை நோக்கி உள்ளே பயணிப்பது. பிரத்தியாகாரம் என்பது, நமது சொந்த வீட்டை - நடு வீட்டை நோக்கி எடுத்து வைக்கின்ற முதல் அடி - பயணத்தின் ஆரம்பமாகும். பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை கைவரவாகிய பின்னர் ஆன்மாவை நோக்கிய பயணத்தில் புறமுதுகிட்டுத் திரும்புதல் என்பது சாத்தியமில்லை. யோகத்தின் முடிபான தியானம், சமாதியில் நாம் நமது சொந்த வீட்டை வந்தடைகிறோம். அக்கணத்தில் உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயமாக, நாம் நமது உள்ளார்ந்த கோயிலின் கருவறையில் பிரவேசிக்க, கடவுளுக்குச் சமானமாய் ஆகின்றோம்.(யோகம் சித்திக்கும்)-தென்னம்பட்டு ஏகாம்பரம்