கார்த்திகை தீபம் ஏற்பாடுகள் தீவிரம் : மகாதீபத்திற்கு அண்ணாமலையார் கோயிலில் 4,500 லிட்டர் நெய் கொள்முதல்!
அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீபம் ஏற்றுவதற்காக 4,500 லிட்டர் நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து நடைபெறும் 10 நாட்கள் விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் டிச. 3-ம் தேதி அதிகாலை ஏற்றப்பட உள்ளது.
அன்றைய தினம் மாலை 6 மணி அளவில் கோயிலுக்கு பின்புறம் 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள தீபமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றுவதற்காக ஆயிரத்து 500 மீட்டர் காடாதுணி, 4 ஆயிரத்து 500 கிலோ நெய் பயன்படுத்தப்படும்.
இந்த மகா தீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். இந்நிலையில், மகா தீபம் ஏற்றுவதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் ஆவின் நிறுவனத்திலிருந்து 4 ஆயிரத்து 500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டு கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
தீபத் திருவிழா கொடியேற்றத்துக்கு முன்பாக ஊர்காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவம், பிடாரி அம்மன் மற்றும் விநாயகர் வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று இரவு துர்க்கையம்மன் உற்சவம், நாளை இரவு பிடாரி அம்மன் உற்சவம் விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுகளில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், காவல்துறை இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
What's Your Reaction?

