கரூர் சம்பவம் சிபிஐ விசாரணைக்கு ஆனந்த், ஆதவ் அர்ஜூனா நேரில் ஆஜர்
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசாரப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்ஸுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், மின்வாரிய ஊழியர்கள் என பலரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், தவெக கட்சியின்முக்கிய நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலர் மதியழகன் உள்ளிட்டோரிடம் சிபிஐ காவல்துறையினர் இன்று விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டு, அவர்களை ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர்.
சிபிஐ அதிகாரிகள் தங்கி இருக்கும் பொதுப்பணித்துறையின் சுற்றுலா மாளிகைக்கு விசாரணைக்காக தவெக நிர்வாகிகள் இன்று நேரில் வந்தனர். ஏற்கெனவே சென்னை பனையூர் அலுவலகத்தில் சிபிஐ காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது நிர்வாகிகளை கரூர் வரவழைத்து நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?

