3 வது சதம் விளாசிய ஏபிடி.. WCL கோப்பையை வென்றது தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி
பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று WCL கோப்பையை முதன் முறையாக வென்றுள்ளது தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி.

ஜூலை 18 ஆம் தேதி தொடங்கிய உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதியது. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அந்த வகையில், லீக் சுற்று முடிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதி ஆட்டங்களின் முடிவு:
பாகிஸ்தான், இந்திய அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி விளையாட மறுத்ததால், பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான அரையிறுதி ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்கா அணி முன்னேறியது.
ஏமாற்றம் தந்த பாகிஸ்தான் வீரர்கள்:
இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டி நேற்று (ஆகஸ்ட் 02) நடைப்பெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் சர்ஜூல் கான் அபாரமாக விளையாடி 76 ரன்கள் குவித்தார். மறுமுனையில் உமர் அமீன் 19 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த நிலையில் அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 195 ரன்களை தொட்டது. கேப்டன் ஹபீஸ், கம்ரான் அக்மல் போன்றோர் சொற்ப ரன்களில் விக்கெட்களை பறிகொடுத்து பாகிஸ்தான் ரசிகர்களை ஏமாற்றினர். பாகிஸ்தான் அணிக்கு கேப்டனுக்கு செயல்பட்டு வந்த ஹாப்ரிடி இறுதிப்போட்டியில் விளையாடாதது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டது.
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி. இந்தத் தொடரில் செம பார்மில் இருக்கும் ஏபிடி நேற்றைய இறுதிப்போட்டியிலும் வானவேடிக்கை நிகழ்த்தினார். இவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய அம்லா 18 ரன்களில் அஜ்மல் பந்துவீச்சில் அவுட்டாக, அதன்பின் களமிறங்கிய ஜேபி டூமினி, ஏபிடியுடன் இணைந்து பந்துகளை நாலாப்புறமும் சிதறடித்தார்.
தொடரில் 3-வது சதம்:
பாகிஸ்தான் அணியில் 7 வீரர்கள் பந்துவீசியும் ஜேபி டூமினி-ஏபிடி இணையினை பிரிக்க முடியாமல் திணறினர். அதிரடியாக விளையாடி வந்த ஏபிடி வில்லியர்ஸ் 47 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இந்தத் தொடரில் ஏபிடி-க்கு இது 3 வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
16.5 ஓவர்களில் இலக்கை அடைந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் கோப்பையினை வென்றது டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி. ஏபிடி வில்லியர்ஸ் 120 ரன்களுடனும், ஜேபி டூமினி 50 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு நடைப்பெற்ற உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்று கோப்பை வெல்லும் வாய்ப்பினை இழந்தது. இந்தாண்டும் இறுதிப்போட்டி வரை முன்னேறி தோல்வியுற்றதால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
What's Your Reaction?






