13.03.08    ஹாட் டாபிக் 

 வ்வப்போது அரசியலில் அதிரடிப் போக்கை ஏற்படுத்துவதில் பேர் போனவர் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். அவர் இப்போது தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள ராஜ்ய சபா தேர்தலை மையமாக வைத்து மாபெரும் கலகத்தை உருவாக்கி வருகிறார்.

ஏற்கெனவே ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த ஜோதி, அகமது சையதுகான்,தங்கத்தமிழ்ச்செல்வன்,பெருமாள்ஆகியஅ.தி.மு.க.வினரின் பதவிக்காலமும்,தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் சண்முகசுந்தரம் பதவிக்காலமும்,காங்கிரஸைச்சேர்ந்தஜி.கே.வாசனின் பதவிக்காலமும் எதிர்வரும் ஏப்ரல் 2-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதையடுத்து, மார்ச் 26-ம் தேதி இந்த ஆறு இடங்களுக்கான தேர்தல் நடைபெறும் என்றும், மார்ச் 8-ம் தேதி இதற்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

ஒருவர்ராஜ்யசபாஎம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால்,ஏறத்தாழ முப்பத்து நான்கு எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவை.இப்போதைய கணக்குப்படி தமிழக சட்டசபையில் தி.மு.க.வுக்கு சபாநாயகரையும் சேர்த்து தொண்ணூற்றாறு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தமிழகச் சட்டமன்றத்தில், இப்போதைய கணக்குப்படி தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸைத் தவிர்த்து 133 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால், தி.மு.க. சார்பில் மூன்று பேர் போட்டியிட்டு ஜெயிக்க முடியும். அதேசமயம், அ.தி.மு.க. கூட்டணி இரண்டு எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்க இரண்டு எம்.எல்.ஏ.க்களின் வாக்கு குறைவாக உள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் சார்பில் முப்பத்தைந்து எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுத்ததுபோக, ஒரு வாக்கு உபரியாக இருக்கும்.

இப்படிப்பட்ட நிலையில்தான் பதினெட்டு எம்.எல். ஏ.க்களைக் கொண்ட பா.ம.க, இந்தமுறை தங்களுக்கும் ஒரு எம்.பி. பதவி வேண்டும் என்று அதிரடியாகக் கேட்டது. இதில் அப்செட்டான கலைஞர், உடனடியாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்திவிட்டு, தடாலடியாக பா.ம.க.வுக்கு சீட் கிடையாது என்று அறிவித்துவிட்டார். இப்படி பட்டவர்த்தனமாக கலைஞர் அறிவித்ததை எதிர்பார்க்காத ராமதாஸ், அவசர நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தி,கலைஞரைக் கடுமையாக விமர்சித்துவிட்டு, `எப்படியும் எங்களுக்கு சீட் வேண்டும்' என்று அடம்பிடிப்பதுதான் இப்போதைய அரசியல் வட்டாரத்தின் ஹாட் டாபிக்.

நடைபெறும் அரசியல் மாற்றங்கள் குறித்து நம்மிடம் பேசிக்கொண்டிருந்த மூத்த அமைச்சர் ஒருவர், "பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அரசியலுக்குள் வந்த நாளில் இருந்தே தன் தகுதிக்கு மீறி பேசியும், நடந்தும் வந்துள்ளார். அது தெரிந்துதான் தி.மு.க. கூட்டணியில் அவரைச் சேர்த்தார் கலைஞர். எங்களது துரதிருஷ்டம் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாமல் போனது. அதைச் சாக்காக வைத்து தங்கள் ஆதரவை வலிய வந்து கொடுத்த பா.ம.க., நாங்கள் ஆட்சியில் இருப்பதே தங்களின் தயவால்தான் என்ற ரீதியில் செயல்பட்டு வந்தார்கள். அடுத்தடுத்து இந்த அரசையும், அமைச்சர்கள் சிலரையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்திய ராமதாஸுக்கு உடனடியாக பதிலடி கொடுக்க நாங்கள் முயன்ற போதெல்லாம், தலைவர் கலைஞர் எங்களை பொறுமை காக்கச் சொன்னார்.

இதற்குக் காரணம் காங்கிரஸின் தமிழக கோஷ்டிகள் இஷ்டத்திற்குப் பேசியபடி ஆட்சியில் பங்கு கேட்கும் போக்கு அதிகமாக இருந்தது. தலைவர் கலைஞர் திட்டமிட்டு, தொடர்ந்து டெல்லி காங்கிரஸ் தலைவர் மற்றும் சோனியாகாந்தியிடம் அவ்வப்போது பேசி, தி.மு.க.விற்கான ஆதரவைப் பலப்படுத்த விரும்பினார். அந்தத் திட்டம் இப்போது முழுமையடைந்துவிட்டது. தி.மு.க., காங்கிரஸ் பலத்துடன் தனி மெஜாரிட்டி பெற்று ஆட்சியைத் தொடர டெல்லி அனுமதித்துவிட்டது. இந்நிலையில் இப்போது பா.ம.க. தயவு தேவையே இல்லை. இதற்காக மூவ் செய்த கலைஞரின் போக்குத் தெரியாமல், பா.ம.க. தயவில்தான் இந்த ஆட்சி தொடர்கிறது என்று தப்புக் கணக்குப் போட்டுள்ளார் ராமதாஸ்!'' என்றார் அந்த அமைச்சர்.

இதையடுத்து நம்மிடம் பேசிய அறிவாலயப் பிரமுகர் ஒருவர், "இப்போது தேவையில்லாமல் சர்ச்சையைக் கிளப்பும் பா.ம.க.வைச் சமாதானப்படுத்தி கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் பொறுப்பை காங்கிரஸின் தலைமையிடம் கொடுத்துவிட்டார் கலைஞர். காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்டைக் கொடுத்து தன் பெயர் பாதிக்காத வகையில் வெற்றியோ, தோல்வியோ அது காங்கிரஸ் சாமர்த்தியம் என்று காய் நகர்த்தியுள்ளார் கலைஞர்'' என்றவர், "கலைஞர் ராஜதந்திரி என்பதை மறுபடியும் நிரூபித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட ஒரு வருடமாக எந்தச் சூழ்நிலையிலும் முதல்வரை நேரில் வந்து சந்திக்காத ராமதாஸ், இப்போது எம்.பி. சீட் வாங்கவே சந்தித்தார் என்பது மக்கள் எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. அப்போதே ராமதாஸுக்கு ஒரு எம்.பி. சீட்டும், அந்த எம்.பி. பதவியை அடைந்த அன்புமணிக்கு மத்திய சுகாதார அமைச்சர் பதவி கிடைக்க, ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காதவர் முதல்வர் கலைஞர். இந்திய அளவில் பலம் வாய்ந்த சுகாதார இலாகாவை அடைந்த பிறகும், இப்போது மேலும் ஒரு எம்.பி.க்கு வம்பு செய்வதுதான் வேதனையாக இருக்கிறது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், அவர்கள் கோரும் எம்.பி. சீட் மூலம் ராமதாஸ், தன் மகள் கவிதாவைத் தேர்ந்தெடுத்து அவரையும், அமைச்சரவையில் சேர்க்க திட்டமிட்டு இருப்பதாகக் கிடைத்த தகவல்தான் கலைஞரை யோசிக்க வைத்துவிட்டது. மாறாக, பா.ம.க.வைச் சேர்ந்த ஓர் உண்மையான தொண்டருக்கோ, பொறுப்பாளர்களுக்கோ இந்தப் பதவியைக் கொடுப்பதாக இருந்தால் தாராளமாக விட்டுக் கொடுக்க கலைஞர் சம்மதித்திருப்பார்'' என்று கூறினார் அந்தப் பிரமுகர்.

இதையடுத்து நம்மிடம் மூத்த பத்திரிகையாளர் ஒருவர், "இப்போது நடக்கும் விஷயங்கள் பத்திரிகைகள் மூலம் மக்களுக்கு உடனுக்குடன் தெரிந்துவிடுவது நல்ல விஷயமாக இருக்கிறது. கலைஞர் தன் அறிக்கையில் பா.ம.க.வுக்கு ஏன் சீட் இல்லை என்று விலாவாரியாக தெரிவித்த பிறகு, ராமதாஸ் தன் கட்சி நிர்வாகக்குழுக் கூட்ட முடிவில் நிருபர்களிடம் கூறிய சில விஷயங்கள் கொஞ்சம் ஓவர்தான். அவர், `1996_ல் இருந்து எங்களைப் புறக்கணித்து வரும் கலைஞர், அவர் ஆட்சியில் இல்லாத காலத்தில் அவரை விழுப்புரத்துக்கு வரவழைத்து ஒரு முதல்வர் நாற்காலியைத் தயார் செய்து அவரை அமர வைத்தோம். அத்துடன் அவர் கைதாகி ஜெயிலில் இருந்தபோது ஓடோடிப்போய் முதலில் பார்த்தவன் நான். அப்படிப்பட்ட என் இயக்கத்திற்கு இப்போது ஒரு சீட் கொடுக்க மனமில்லாத இவர் கூறுவதெல்லாம் அநியாயம் மட்டுமல்ல. அபாண்டம்' என்றெல்லாம் தெரிவித்த விஷயங்கள் உடனுக்குடன் கலைஞருக்குத் தெரிவிக்கப்பட்டது. நிருபர் கூட்டத்திற்கு வந்திருந்த `கலைஞர் டி.வி.' நிருபர், தன் செல்போன் மூலம் ராமதாஸின் பதில்களை கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனைக் கேட்க வைத்து உடனடியாக முதல்வர் பார்வைக்கு அனுப்பி வைத்தார். அப்போது தனக்கு அழைப்பு அனுப்பி விட்டு இப்போது அவமானப்படுத்தி விட்டதாக ஆவேசமாகக் கூறினார் ராமதாஸ். உண்மையில் அந்தக் கூட்டத்தைக் கூட்டாமலேயே தங்களுக்கும் ஒரு சீட் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியதை ஏனோ நிருபர்களிடம் ராமதாஸ் மறைத்து விட்டதுதான் வேடிக்கை.

இதுமட்டுமன்றி சீட் பங்கீடு பற்றிப் பேசுவதற்கான கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தையும் கூட்டியிருந்தார் கலைஞர். ஆனால், ராமதாஸ் தொடர்ந்து போன் மூலமும் தன் கட்சித் தலைவரான மணி மூலமும் அந்தக் கூட்டம் நடப்பதற்கு முன்பாகவே தங்களின் சீட் பற்றிய அறிவிப்பை வெளியிட வற்புறுத்தியிருக்கிறார். இதையடுத்தே கலைஞர் சோனியாவிடம் போனில் பேசி ராமதாஸின் எதிர்பார்ப்பையும், போக்கையும் விளக்கமாக எடுத்துச் சொல்லிவிட்டு, `காங்கிரஸ் சார்பில் இரண்டு பேர் போட்டியிட்டால் நல்லது' என்று கலைஞரே தெரிவித்தாராம். அதை சோனியாவும் ஏற்றுக் கொண்டார்'' என்றார் அவர்.

இதன்பிறகு நம்மிடம் நடக்கும் விஷயங்களைப் பற்றி பல்வேறு தகவல்களைக் கூறிய பா.ம.க மூத்த நிர்வாகி, "நாங்கள் முதன்முதலில் நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்ததால்தான் கலைஞர் ஆட்சியில் அமர்ந்தார். அதன்மூலமே தி.மு.க.வினர் அமைச்சர்கள் பதவி மற்றும் வாரியத் தலைவர் பதவி போன்ற எல்லாவற்றையும் அனுபவித்து வருகிறார்கள். இப்படியிருக்கையில், மேல்சபை எம்.பி. சீட்டுகளில் ஒன்றே ஒன்றை எங்களுக்கு தி.மு.க. விட்டுக் கொடுப்பதில் முரண்டுபிடிப்பதுதான் வேதனையாக இருக்கிறது. அதிலும் டாக்டர் அன்புமணிக்கு கொடுத்த ராஜ்யசபா பதவி 2010_ ம் ஆண்டு வரை இருக்கிறது. அது காலாவதியாகும் வரை இன்னொரு சீட்டெல்லாம் கிடையாது என்று கலைஞர் கூறுவதுதான் அய்யாவை வேதனைப்படுத்துகிறது!'' என்றார்.

இதற்கிடையில், நடக்கும் விவரங்கள் குறித்து சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட காங்கிரஸ் மேலிடப் பிரமுகர் ஒருவர், "கலைஞரின் நடவடிக்கைகள் அனைத்தும் காங்கிரஸின் ஆலோசனைப்படிதான் நடக்கிறது என்பதை டாக்டர் ராமதாஸ் ஏனோ மறந்துவிட்டார். இந்தக் கூட்டணியின் தலைவரான கலைஞர் மீது சோனியா காந்தி அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார். அதனால் கலைஞர் எந்த முடிவெடுத்தாலும் அது காங்கிரஸுக்குச் சம்மதமான முடிவுதான். அதேசமயம், ராமதாஸ் சீட் விஷயத்தில் தொடர்ந்து அடம்பிடிக்கும்பட்சத்தில் சோனியாகாந்தி தலையிட்டு ராமதாஸை சமரசம் செய்வார் என்றும், அதன்மூலம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம் என்றும் ராமதாஸ் கணக்குப் போடுவதாகக் கேள்விப்படுகிறோம். மிகவும் தப்பான கணக்குப் போடுகிறார் ராமதாஸ். அவரின் செயல்பாடுகளில் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ள சோனியாகாந்தி, இதே ராமதாஸ் சமீபத்தில் டெல்லி வந்து சந்திக்க முயன்றபோது, நாசூக்காக மறுத்துவிட்டார். அப்போதே ஏன் இந்தப் புறக்கணிப்பு என்பதை அவர் புரிந்திருந்தால் இப்படியெல்லாம் தவறு செய்ய மாட்டார். இப்போது நடப்பவை அவருக்கு மட்டும்தான் வீழ்ச்சியே தவிர, தி.மு.க. கூட்டணிக்கு பலம் என்பது போகப்போக தெரிந்துவிடும்'' என்று கூறினார்.

இதற்கிடையில், இந்த மோதல் போக்கு ஒருவாறு சமரசம் ஆகி திட்டமிட்டபடி பா.ம.க. உள்பட அத்தனை தோழமைக் கட்சிகளும் முழு ஆதரவு தந்தாலும் காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் வெற்றி பெற, கூடுதலாக மூன்று வாக்குகள் தேவைப்படும். அதேசமயம், அ.தி.மு.க. துணிச்சலாக இரண்டாவது வேட்பாளரை நிறுத்தினால் அவர் வெற்றி பெற இரண்டு வாக்குகள் தேவைப்படும். இதற்காக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மறைமுகமான பேரத்தில் ஈடுபட்டிருக்கும் நிகழ்ச்சியும் ஜரூராக நடக்க ஆரம்பித்துவிட்டது.

இப்போதைய நிலவரப்படி தி.மு.க. தன் செல்வாக்கைப் பயன்படுத்தி ஏழு அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை தங்களுக்குச் சாதகமாக வாக்குப் போட தயார் செய்து விட்டதாக ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். மேலும், "காங்கிரஸுக்கு சீட்டு கொடுத்து பா.ம.க.வை ஓரங்கட்டிய கலைஞர், விஜயகாந்தை தி.மு.க. அணிக்குள் இழுக்கவும் ஒரு திட்டத்தைத் தீட்டியுள்ளார். கடந்த ராஜ்யசபா தேர்தலில் குதிரை பேரத்தைத் தடுக்கும் விதமாக அ.தி.மு.க.வே வெற்றிபெற விட்டுக் கொடுத்த கலைஞர், இம்முறை அதே பேரத்தில் பல ஜாம்பவான்களைக் குப்புறத்தள்ள காய் நகர்த்தி வருகிறார். அதாவது விஜயகாந்த் ஓட்டுப் போட வேண்டியது அவசியமாக இருக்கிறது. அவரது வாக்கு கண்டிப்பாக காங்கிரஸுக்குத்தான் இருக்கும். இதன்மூலம் தன்னை கன்னாபின்னாவென்று விமர்சிக்கும் விஜயகாந்த், தி.மு.க. அணிக்குள் வந்துவிடுகிறார். இதுதான் கலைஞரின் மாஸ்டர் பிளான்'' என்று சொல்லி முடித்தார் அவர்!

எப்படியோ, ஒவ்வொரு முறையும் சம்பிரதாயமாக நடைபெற்று வந்த ராஜ்யசபா தேர்தல், இம்முறை தமிழ்நாட்டு அரசியல் களத்தையும் புரட்டிப் போடும் அளவுக்குப் பூகம்பத்தைக் கிளப்பி இருக்கிறது!

ஸீ வி.குமார்
படம் : மீடியா ராமு