|
படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ரசிகர்களை எதிர்பார்ப்புடன் இருக்கையில் அமரவைத்திருக்கும் ஒரு நல்ல படம் ‘மௌனகுரு.’
குடும்பத்தால் எந்த நேரமும் அலட்சியப்படுத்தப்படும் இளைஞன் ஒருவனும், பணத்தாசை கொண்ட போலீஸ் குழு ஒன்றும் எதிர்பாராமல் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து அந்த இளைஞன் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்கிறான் என்பதை திகிலாகச் சொல்லியிருக்கிறார்கள்.
குடும்பத்தால் அலட்சியப்படுத்தப்படும் சராசரி இளைஞனாக நடித்திருக்கும் அறிவுநிதி, அந்தப் பாத்திரத்திற்கு அட்டகாசமாக பொருந்துகிறார். போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே போய் ‘ஒருவரை அடித்துவிட்டேன்’ என்று சொல்வது, துப்பாக்கிச் சூட்டுக்கு பயந்து மற்ற மாணவர்கள் சிதறி ஓடும்போது அமைதியாக எழுந்து நிற்பது என அறிவுநிதிக்கு இயக்குநர் உருவாக்கியிருக்கும் ஹீரோயிஸம் அருமை.
படத்தில் குறிப்பிடும்படியான கேரக்டர், இன்ஸ்பெக்டராக வந்து ஸ்கெட்ச் போட்டு திகிலடிக்க வைக்கும் ஜான்விஜய்தான். பாடிலாங்வேஜ், டயலாக் என கிரிமினல் இன்ஸ்பெக்டர் கேரக்டரை பிரமாதமாக செய்திருக்கிறார். அதேபோல கொலைகளைக் கண்டுபிடிக்கும் நேர்மையான இன்ஸ்பெக்டராக உமா ரியாஸும் அசத்தியிருக்கிறார். கர்ப்பிணியாக தாய்மையின் வலியைச் சுமந்து கொண்டு கொலைவழக்கை விசாரிக்கும் தன்மை தமிழ் சினிமாவுக்குப் புதுசு.
குடும்பத்திற்கு பயந்து காதலிக்கும் பெண்ணாக இனியா. அழகாக வந்து போகிறார். கொஞ்சம் நடித்திருக்கிறார். ஃபாதராக வரும் ஆனந்த் வர்மா, ஜான் விஜய்யின் சகாக்களாக வரும் போலீஸார், மனநலம் சரியான பின்னரும் மருத்துவமனையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகதாஸ், விலைமாதுவாக வரும் காஜல், அம்மா சுஜாதா, அண்ணியாக வருபவர் என நடித்தவர்களில் யாருமே சோடை போகவில்லை.
மகேஷ் முத்துசாமியின் கேமரா, தமனின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.
போலீஸாரின் ‘என்கவுன்ட்டருக்கு’ எதிராக மட்டுமில்லாமல்... குழந்தைகளை எப்போதும் மட்டம் தட்டுவது, படி படி என டார்ச்சர் செய்வது என படம் முழுக்க சமூக விமர்சனங்களை காட்சியின் மூலமாகவே விளக்கியிருக்கிறார்கள். மகன் மீதான பாசத்தில் தவறு செய்யும் கவுரவமான ஃபாதரின் கைகள் நடுங்கும் காட்சி என நுணுக்கமாக கவனித்து ரசிக்கத்தக்க காட்சிகள் ஏராளமாக இருக்கின்றன. அறிமுக இயக்குநர் சாந்தகுமாருக்கு வாழ்த்துக்கள்.
மௌனகுரு ‘மௌனமாக சாதனை’ செய்திருக்கிறார்! |