Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61 Kumudam.com, Kumudam Snegiti - ஆசிரியர் தின ஸ்பெஷல்
தாய்மொழியோ மராத்தி.. ஆனால் தமிழ் நல்லாசிரியருக்கான விருது பெற்றிருக்கிறார் இந்திரா பாய்! தமிழ் மாமணி விருது, சிறந்த தமிழாசிரியருக்கான கலைஞர் விருது என தமிழுக்காக பல விருதுகளைப் பெற்று தமிழர்களையே ‘அட’ போட வைத்திருக்கிறார் இவர்! கோடம்பாக்கத்திலுள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமையாசிரியையாக பணிபுரியும் இந்திராபாய் தனக்கு தமிழ் ஆர்வம் வந்த பின்னணியைச் சொல்கிறார்...
‘‘சரபோஜி மன்னரோட ஆட்சிக்காலத்துல தான் எங்க முன்னோர் மகாராஷ்டிராவுல இருந்து தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்திருக்காங்க. அப்புறம் எங்க நாடு, தமிழ்நாடு ஆகி டுச்சு. தாய்மொழி தமிழ் ஆகிடுச்சு! எங்கப்பா தமிழ்பண்டிட். அவர்கிட்ட தமிழ் கத்துக்கிறதுக்காக ஞாயிற்றுக்கிழமையில ஒரு கூட்டமே வீட்டுல இருக்கும். அவர் மூலமாதான் எனக்குத் தமிழ்ல ஆர்வம் வந்துச்சு... எனக்கு நினைவு தெரிஞ்சு நான் கத்துக்கிட்ட முதல் பாட்டே ‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா’ங்கிறதுதான்!
சின்னவயசுல விளையாடும் போதுகூட தமிழ் டீச்சர் வேஷம்தான் போடுவேன்! ஆனா காலேஜ் போகும் போது தமிழ் படிச்சா வேலை கிடைக்காதுன்னு சொல்லி என் னைக் கட்டாயப்படுத்தி இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிக்க வச்சாங்க. ஆனாலும் தமிழ் ஆர்வம் குறையலை. அப்புறம் அடம்பிடிச்சு எம்.ஏ’ல ஆரம்பிச்சு எம்ஃபில் வரைக்கும் தமிழிலேயே படிச்சி முடிச்சேன். தமிழ் படிச்சா வேலை கிடைக்காதுன்னு சொல்லி என்னை ஆங்கிலம் படிக்க வச்சாங்க. ஆனா பாருங்க... இன்னைக்கு தமிழ்தான் எனக்கு சோறு போடுது!’’ என்று பெருமிதப்படுகிறார் இந்தத் தமிழ் டீச்சர்.
‘‘பொதுவா தமிழ் டீச்சருக்குத் தமிழைத் தவிர வேறு எதுவுமே தெரியாதுங்கிற எண்ணம் ஸ்டூடண்ட்ஸ்கிட்ட இருக்கு. அந்த எண்ணத்தை மாத்தணும்ங்கிறதுக்காகவே கம்பராமாயணத்தில் வர்ற இராமன் சீதையை மட்டுமே உதாரணம் காட்டாம, வேதியியல், உயிரியல், சினிமான்னு எல்லாமே கலந்துதான் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடு ப்பேன்.
என்கிட்ட படிச்ச எத்தனையோ ஸ்டூடண்ட்ஸ் இன்னைக்கு நல்ல நிலைமையில இருக்காங்க... நீங்கதான் என்னோட ரோல்மாடல்னு அவங்க கடிதம் எழுதுறப்போ ஏதோ ஆகாயத்தைத் தொட்டது போல பூரிப்பா இருக்கும். அந்த அளவுக்கு நான் மாணவர்களோடு நெருக்கமா இருப்பேன்.
ஒவ்வொரு நாள் வகுப்புக்குப் போகும் போதும் மாணவர்கள்கிட்ட, ஒரு பேப்பர்ல உங்க கஷ்டத்தை எழுதிக் கொடுங்க.. என்னால முடிஞ்ச அளவுக்குத் தீர்த்து வைக்கிறேன்னு சொல்வேன். இதைச் சொல்லித்தான் வகுப்பையே ஆரம்பிப்பேன்.
இதனால் மாணவர்களோட நெருக்கமாகி, பாஸிட்டிவ் எனர்ஜியைத் தூண்டி, அவங்களை படிப்புல சிறந்தவர்களா மாற்ற முடியுது. ஒவ்வொரு வருடமும் நல்ல தேர்ச்சி விகிதம் கொடுக்கிறதுனால தமிழக அரசோட ஊக்கப் பரிசையும் வாங்கிக்கிட்டு இருக்கேன். தமிழ்ப்பாடம் நடத்திக்கிட்டு இருக்கும் போதே செத்துப் போயிடணும். இதுதான் என்னோட மிகப்பெரிய ஆசை’’ என இந்திராபாய் சொல்லி முடிக்கும் போது நிஜமாகவே அவருக்கு சல்யூட் அடிக்கத் தோன்றுகிறது.