Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61
Kumudam.com, Kumudam Snegiti - விவாத மேடை

Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Kumudam Welcomes U
          Magazine
Kumudam Snegithi
தலையங்கம்
விழிப்புணர்வு ஸ்பெஷல்
தொடர்கள்
விவாத மேடை
ஆன்மிக தகவல்
சிறுகதை
மற்றவை
 
 01.03.10    விவாத மேடை

சென்ற தலைமுறையைச் சேர்ந்த 70 வயது வாசகி நான். அன்றும் சரி, இன்றும் சரி பெண்ணுக்கு நகைகள், சீர் செனத்தி என்று செய்வதை மனதார வெறுப்பவள். இருந்தாலும் ஒரு விஷயம் சொல்லுகிறேன்.

வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொள்பவர்கள் குறைந்த பட்சம் மூன்று நான்கு வருடங்கள் வரை நம் மகளை நன்கு வைத்திருக்கிறார்கள். பிறகு குத்தல் பேச்சு வந்துவிடும். பிறகு அந்தப் பெண் வாழ்க்கை சரிவர அமையவில்லை என்று தாய்வீடு வந்தால் அங்கு அவளைப் பார்த்துக் கொள்ள வயதான தாய் தகப்பனால் முடியுமா? இல்லை அண்ணன் தம்பிதான் கடைசிவரை அவளைத் தாங்க முடியுமா? ஏதோ ஒரு மாதம் சாப்பாடு போடுவார்கள். பிறகு நீ இங்கு வாழாவெட்டியாகத் தங்கி விட்டால் அடுத்த பெண்ணை யார் கட்டுவார்கள், அடுத்த பையனுக்கு யார் பெண் கொடுப்பார்கள் என்று வற்புறுத்தி மாமியார் வீட்டுக்கே அனுப்புவார்கள். அந்தப் பெண் அங்கும் வாழ முடியாமல் இங்கும் வர முடியாமல் தவறான முடிவை எடுப்பாள்.

அவளுக்கென்று போட்ட நகைகளோ பணமோ இருந்தால் அவளது திறமைக்கேற்றவாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். அதனால் இந்தக் காலகட்டத்திலும் வரதட்சணை கொடுப்பது அவசியமே.

-பங்கஜம் பாலசுப்ரமணியன், விழுப்புரம்.

 அந்தக் காலத்தில் பெண்ணின் பாதுகாப்பு கருதி, பெண் வீட்டிலே வரதட்சணை கொடுக்கப் போக, அதுவே தற்போதைய காலகட்டம் வரை கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. இதனால் நிறையப் பெண்கள் கல்யாண வயது கடந்தும் கரையேறாமல் இருக்கிறார்கள். சரி, வரதட்சணை வேண்டாம் என்றாலோ, வரதட்சணை கேட்காத பையனின் வீட்டையும், அவன் ஆரோக்யத்தையும் சந்தேகமாகப் பார்க்கிறார்கள். இது புலிவால் புடிச்ச கதையாகி விட்டது. கேட்டாலும் ‘ஆசையைப் பாரு’ என்கிறார்கள். கேட்காவிட்டால் ‘பையனுக்கு என்ன கோளாறோ’ என்று சந்தேகிக்கிறார்கள். இப்பொழுது பையனும், பெண்ணும் ஒரே அளவில் வேலை பார்த்து சம்பாதிப்பதால் என்னுடைய தனிப்பட்ட யோசனை, பெண் வீட்டாரும், பையன் வீட்டாரும் ஒரு குறிப்பிட்ட தொகையை, பிக்ஸட் டிபாசிட்டில் இவர்களின் பெயரில் போட்டு விடலாம். வரதட்சணையை ஒழிக்க முடியாது. ஒழிக்க முடியாததை நமக்கு ஏற்றாற் போல் மாற்றிக் கொள்ளலாம். அவ்வளவுதான்!

- ஆர்.மகாலட்சுமி, சென்னை-24.

 ‘மாப்பிள்ளை 40 ஆயிரம் சம்பாதிக்கிறார்.இது கூட நாம செய்யலன்னா எப்படி?’ என்று தான், பெண்ணைப் பெற்றவர்கள் வரதட்சணை கொடுக்கிறார்கள். ஒரு மீடியமான திருமணம் என்றாலே ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. நடுத்தரவர்க்கத்துக்கும் கீழான மக்கள்தான் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கொடுக்கவும் கூடாது. வாங்கவும் கூடாது என்ற உறுதி மனப்பான்மை இரு தரப்பினர்க்கும் வர வேண்டும் அது வரை வரதட்சணை சரியா? தவறா? என்று பட்டிமன்றம் நடந்து கொண்டேதான் இருக்கும்.

-ராஜேஸ்வரி வெங்கட், சென்னை-82.

 பெண்கள் சம்பாதிக்கும் பணம் யாவும் ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கு வரும்(வர) தட்சணை தானே? அப்புறமென்ன தனியாக ஒரு வரதட்சணை?

-சுகந்தாராம், சென்னை-59.

 ஆண்கள் உழைக்காமல், சுலபமாக ஆடம்பரமாக வாழ வரதட்சணை தேவைப்படுகிறது. அவ்வாறு உழைக்காமல் வரதட்சணை மூலம் மகிழ்ச்சியாக வாழ நினைக்கும் ஆணை ஒரு பேடி,  கையால் ஆகாதவன் என்று தான் சொல்ல வேண்டும்.

-செ.கலைவாணி, சென்னை-16.

 சில வாரங்களுக்கு முன்னால் செய்திகளில் முக்கியமான இடம் பிடித்தது, ‘ஜூனியர் என்.டி.ஆர் தன் திருமணத்தின் போது வரதட்சணையாக ஐநூறு கோடி’ பெற்றார் என்பதே... கோடிகளில் வாழ்பவர்கள் ‘கோடி கோடியாக’ வரதட்சணை கொடுப்பது, பெறுவது செய்தியாகலாம். ஆனால் ‘புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக இன்று நடுத்தரவர்க்கத்தினர் தங்கள் தகுதிக்கு மீறி வீடு, சொத்துக்களை விற்றோ, வைத்தோ பிரமாண்டமாய் செலவு செய்து திருமணம் செய்து வைக்கின்றனர். அதற்கு மேல் வரதட்சணை வேறா?

-எஸ். மங்கை, குளித்தலை.

 தற்போது சவரன் விற்கும் விலையில், பெண்ணிற்கு சீராக நகைகள் போடச் சொல்லிக் கேட்பது மிக மிகத் தவறு.

-கே.ராஜலக்ஷ்மி, சென்னை-61.

 குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளையும் நிர்வாகப் பொறுப்பையும் முன்பு ஆண்களே மேற்கொண்டு வந்தார்கள். ஆணாதிக்கத்தின் அடிப்படையிலேயே வரதட்சணை வாங்கி வந்தார்கள். இப்போது குடும்பத்தில் எல்லா நிலைகளிலும் ஆண், பெண் இருபாலரும் சமபங்கு வகிக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் - குழந்தை வளர்ப்பு, குடும்பப் பராமரிப்பு, குழந்தைகளின் படிப்புக்கு உறுதுணை யாயிருப்பது என்று ஒரு குடும்பத்தில் பெண்களின் பங்களிப்பு இன்று மிக மிக அதிகம். இப்படிப்பட்ட காலகட்டத்தில் வரதட்சணை முறை எந்த வகையிலும் நியாயமாகாது.

-கமலா ராஜசேகரன், பொள்ளாச்சி.

 உண்மையில் வரதட்சணை வாங்குவதும் குற்றம். கொடுப்பதும் குற்றம்தான். ஆனால் வரதட்சணை வேண்டாம்; பாவம் பெண்ணைப் பெற்றவர்கள் என்று நினைத்தால், அந்த இளைஞனுக்கு உடம்பில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று தவறாக எண்ணுகிறார்கள் பெண்ணைப் பெற்றவர்கள். பெண்ணோ ஒருபடி மேலே போய் புகுந்த வீட்டினரையும் கணவனையும் துச்சமாக நினைக்கிறாள். அதுமட்டுமல்ல, வரதட்சணை இல்லாமல் (கேட்காமல்) மணம் செய்து கொள்வதை சில பெண்களேகூட கேவலமாக நினைக்கிறார்கள்.

- கௌரி ராமச்சந்திரன், சென்னை-40.

 நம் வீட்டுக்கு வரும் மருமகள் நல்ல குணம். அழகு, குடும்பப்பாங்கு, நம் மகனுக்குச் சமமான படிப்பு இவைகளுடன் வரும்போது வறட்டு கௌரவத்துக்காக வாங்கும் வரதட்சணை எதற்கு?

-உஷா நாராயணன், சென்னை-44.

 மனித வாழ்வில் மிக முக்கியமான கட்டம் திருமணம். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஆயிரமாயிரம் கனவுகளுடன் திருமணம் என்ற பந்தத்தில் இணைகின்றனர். ஆனால் இருமனங்கள் இணையும் திருமணங்களில் எத்தனை பேருக்கு இல்லறம் இனிக்கிறது? திருமணப் பேச்சை ஆரம்பித்து பரஸ்பரம் பிடித்த உடனேயே வரதட்சணை தான் பேசப்படுகிறது. போகும் இடத்தில் தங்கள் பெண்கள் நன்றாக இருக்க வேண்டுமென்பதற்குத்தான் பெற்றோர்கள் தம் வாழ் நாள் சேமிப்பையெல்லாம் ஒரே நாளில் கரைக்கின்றனர்.

ஆனால் தாமாக அவர்கள் விரும்பிச் செய்ய வேண்டியதை, வற்புறுத்திக் கேட்பதால் உறவுகளில் உரசலாக ஆரம்பித்து, அதுவே விரிசலாகி பின் விவாகரத்து வரை செல்கிறது.

-மகாலக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

 வரதட்சணையின் பெயரால் அன்றாடம் பெண்களுக்கு அரங்கேறும் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவாவது வரதட்சணையை தடை செய்ய வேண்டும். ஆதியில் இல்லாமல் பாதியில் வந்த வரதட்சணை அரக்கனை இன்னும் ஒழிக்காமல் விட்டு வைத்திருப்பது மனிதகுலத்திற்கே பெருத்த அவமானம். எல்லா விஷயங்களிலும் மேலை நாடுகளுடன் போட்டி போட்டு அவர்களைப் பின்பற்றும் இந்தியர்கள், வரதட்சணையை மட்டும் கைவிடாதது ஏனோ?

- எச். அஹமது தஸ்மிலா, கீழக்கரை.

 பெண்சிசுக்கள் மரணம் (கொலை)  ‘வரதட்சணை கொடுமையால் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது என எல்லோருக்கும் தெரியும். மக்கள் தொகையில் பெண்களின் தொகை குறைந்து வருகிறதும் எல்லோரும் அறிந்ததே... இருப்பினும் வரதட்சணை அவலம் தொடர்கிறது. ஒரு பெண் எத்தனைப் படித்தவளாக இருந்தாலும் பெரிய பதவியில் இருந்தாலும் ‘வரதட்சணை’ கொடுத்தால்தான் கல்யாணசந்தையில் விலை போகிறாள். முதியோர் இல்லங்கள் பெருகிவருவதற்கும் கூட ‘வரதட்சணை’ கொடுமைகள் ஒரு முக்கிய காரணம்தான். வரதட்சணை கேட்டு துன்புறுத்தி தன்  பெற்றோரை கசக்கிப் பிழிந்த மாமியார், மாமனாரை எந்த மருமகள்தான் அன்போடு பராமரிப்பாள்?

  -மைதிலி சேஷாத்திரி, ஸ்ரீரங்கம்.

 மளிகைச் சாமான் வாங்குவது போல லிஸ்ட்டை போட்டு வைத்துக் கொண்டு பெண்ணைப் பெற்றவர்களை டிமாண்ட் செய்வது தவறு. என் மகனை டாக்டருக்குப் படிக்க வைத்திருக்கிறோம். இன்ஜினீயர் மாப்பிள்ளை என்று பேரம் பேசுவதும் கூடாது. யாருக்கு செய்யப் போறீங்க உங்க பொண்ணுக்குதானே என்று இளித்துக் கொண்டே வைரத்தோடு/மூக்குத்தி கேட்டுக் கொண்டிருக்கும் மாமியார்களின் வழக்கம் தவறானது.

  -  ரா. அனுபமாராம், மங்களூர் - 575001.

 தொன்றுதொட்டு வேரூன்றி வரும் இந்த நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். வரதட்சணை ஒழிப்பு சட்டங்கள் இருந்தாலும் அதையும் தாண்டி ‘வரதட்சணை’ வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியே பரந்த மனப்பான்மையுள்ள மணமகன்கள் வரதட்சணை எதிர்பார்க்காவிட்டாலும் அவனுடைய பெற்றோர்கள் பெண்ணைப் பெற்றவர்களை சும்மா விடுவதில்லை இவர்களை எப்படித் திருத்துவது?

-ஜி.ஆர். ராகவன், கரூர்.

 அந்தக் காலத்தில் பெண்களுக்கு பிறந்த வீட்டு சொத்தில் பங்கு கிடையாது. ஆனால் இந்த நூற்றாண்டில் பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று சட்டம் வந்தபிறகும் இது தொடர்வது சரியில்லை.

- சரோஜா சீனிவாசன், பெங்களூர் 560 005.

 ஐம்பத்து ஏழு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற எங்கள் திருமணத்தில் வரதட்சணை வாங்காதது மட்டுமல்ல - திருமணச் செலவும் என் கணவரே செய்தார்! அதே போல் என் பெண்களுக்கு வரதட்சணை நாங்கள் கொடுக்கவுமில்லை; மகன்களுக்கு வாங்கவும் இல்லை! இன்று வரதட்சணைத் தடுப்புச் சட்டம் வந்தும் வரதட்சணை வாங்குபவரை என்ன செய்ய முடிகிறது சொல்லுங்கள். திருடனையும் கொள்ளையடிப்போரையும் திருத்த முடியாது! அதே போல்தான் சட்டத்தை மதிப்பவரும் மிதிப்பவரும் உண்டு!

- சரோஜா திரவியம், சென்னை-92.

(இந்த கட்டுரைக்கும் படத்தில் இருப்பவர்களுக்கும் சம்பந்தமில்லை.)

எந்தக் காலத்திலும் தவறுதான்!

சைக்காலஜிஸ்ட் பிருந்தாஜெயராமன்:

திருமணம் என்பது புனிதமான பந்தம். அந்த பந்தத்தை இந்த வரதட்சணை வியாபாரமாக்கி விடும். ஒரு வண்டியில் பூட்டப்பட்ட இரட்டை மாடுகள் போலத்தான் கணவனும், மனைவியும். இரு மாடுகளும் சம உயரத்தில் இருப்பது எப்படி அவசியமோ அதுபோலத்தான் கணவன் & மனைவி மரியாதையின் சம நிலையும்... வரதட்சணை கொடுப்பதால் பெண் தன்னை சுப்பீரியராக நினைத்துக் கொண்டால் அவர்கள் வாழ்க்கையில் பிரச்னைகள் வருமே... இதைத் தவிர மாப்பிள்ளை வீட்டாருக்கும் இன்னும் கொஞ்சம் வரதட்சணை டிமாண்ட் செய்யலாமே என்ற பேராசையும் வந்துவிடலாம். மொத்தத்தில் ஆயிரங்காலத்துப் பயிராக திருமணம் இருக்க வேண்டுமென்றால் வரதட்சணை இருக்கவே கூடாது.

Current Issue
01-05-2012
Previous Issue
16-04-2012
   
Previous Issues
Please give your valuable feedback on this article/programme
( Examples for tamil font
ammaa = அம்மா, kumutham = குமுதம், vaNakkam = வணக்கம், thamiz = தமிழ் )
Tamil font help    தமிழ் English
Click here for sending feedback to a friend
 
<< Back to Homepage
 

About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.