|
மோன தவத்தில் லேப்-டாப்பின் சுண்டெலியை நகர்த்திக் கொண்டி ருந்தார் வம்பானந்தா.
‘‘என்ன சுவாமி, 11 தமிழர்களுக்கு பத்ம விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஓவிய - சிற்பக் கலைஞர்களுக்கெல்லாம் கிடைத்திருக்கிறது ஆனால், வம்புக் கலைஞரான உங்களுக்கு மட்டும் எந்த விருதும் கிடைக்கவில்லையே..?’’- வம்பிழுத்தார் சிஷ்யை. ‘‘என்ன கிண்டலா?’’ -பொய்க் கோபம் காட்டிய வம்பானந்தாவை மேலும் சீண்ட வி ரும்பாமல், திவாகரன் விவகாரம் பக்கமாக அவரை திசைதிருப்பினார் சிஷ்யை.
‘‘ பாஸ் சிக்குவேனா என்கிறார்... அந்தக் கதைகளைத்தான் ஏரியா ரிப்போர்ட்டர் தந்திருப்பாரே! இருந்தாலும் எனக்குத் தெரிந்த சில தகவல்களையும் சொல்கிறேன் கேள்... மகாதேவன் வீட்டில் போலீஸார் சோதனையிடச் சென்றபோது முதலில் மறுத்தவர், பின்னர் அவர்களை ரூம் ரூமாக அழைத்துச் சென்று ‘அம்மா வந்தா இங்கேதான் உக்காருவாங்க, அம்மா வந்தா இந்த ரூம்லதான் தங்குவாங்க’ என்று ஜெயலலிதாவின் மலரும் நினைவுகளை அள்ளிவீசியிருக்கிறார். ஆனால், போகிற போக்கைப் பார்த் தால் மகாதேவன்கூட சிக்குவார் என்கிறார்கள் சில அதிகாரிகள்.’’
‘‘கதை அப்படிப் போகிறதோ!’’
‘‘திவாகரன் குறித்து சின்ன துப்புக் கிடைத்தாலாவது அதைவைத்து அவரைப் பிடித்துவிடலாம் என்று உளவுத்துறையும் ஆலாய்ப் பறக்கிறது. ஆனால் கடந்த வாரம் வெள்ளியன்றே ரிஷியூர் பண்ணை வீட்டில் இருந்து வெளியேறிய திவாகரன் அதன்பிறகு தனது செல்போனை பயன்படுத்தவே இல்லையாம். பொதுவாகவே திவாகரன் யாரிடமும் செல்போனில் பேசுவது கிடையாதாம். அதிகபட்சமாக அவரது அக்காவான சசிகலாவுடன் பேசுவதோடு சரி. இப்போது அதையும் செய்வதில்லை. அவர் யாரிடமாவது போனில் பேசினால் அதை வைத்து அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்துவிடலாம் என்று பார்த்தால் அது முடியாமல் போய்விட்டது. அதனால்தான் அவ ருக்கு நெருக்கமானவர்களுக்கு நெருக்கடி கொடுத்து அவர்கள் மூலம் பிடிக்க முடியுமா என்று அலைகிறது போலீஸ்!
‘‘போலீஸ் தரப்பிலும் திவாகரனுக்கு வேண்டியவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?’’
‘‘இல்லாமலா! அ.தி.மு.க. அரசு புதிய ஆட்சியை ஏற்றபோது டெல்டா மாவட்ட போலீஸ் அதிகாரிகள் அனைவரும் திவாகரனைப் பார்த்து ஆசி பெற்றார்கள். வராத ஒரே அதிகாரி திருவாரூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த சேவியர் தன்ராஜ் மட்டும்தான். சும்மா இருப்பாரா திவாகரன்... தன் கைங்கர்யத்தால் அவரை சென்னை ஆவடி பட் டாலியன் பிரிவுக்குத் தூக்கியடித்தார். இது குறித்து அப்போதே தன்ராஜ் டி.ஜி.பி. ராமானுஜத்திடம் சொல்லியிருக்கிறாராம். ‘வெய்ட் பண்ணுங்கள்’ என்று அப்போது டி.ஜி.பி. சொன்னாராம்..’’
‘‘சுவாரஸ்மாக இருக்கிறதே?’’
‘‘‘அப்புறம் என்ன.. சசிகலா குடும்பம் வெளியேற்றப்பட்டதும் அதே திருவாரூர் எஸ்.பி.-யாக வந்துவிட்டார் சேவியர் தன்ராஜ். அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கிய அசைன்மென்ட், திவாகரன் விவகாரம்தான். அதுதான் இப்போது வேட்டையாடு விளையாடு எ ன தொடர்கிறது. இருந்தும், டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் சரி, நிர்வாக அதிகாரிகளும் சரி பெரும்பாலும் திவாகரனின் விசுவாசிகளாகத்தான் இருக்கிறார்கள். காரணம், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ‘செழிப்பு’ என் கிறார்கள். பத்து போலீஸ் திவாகரனை தேடிச் சென்றால், இருபது போலீஸ் அவரைக் காப்பாற்ற தகவல் தட்டிவிடுகிறார்களாம். எனக்குத் தெரியவந்தவரை திவாகரன் வேறு எங்கும் சென்றுவிடவில்லை... இதே மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமத்தில்தான் இருக்கலாம்!’’
‘‘அடேயப்பா!’’
‘‘இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன். எப்படியாவது தன் தம்பி திவாகரனைக் காப்பாற்ற வேண்டும் என சசிகலா பல வழிகள் மூலமாக தொடர்ந்து கார்டனுக்கு தூ துகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறராம். ஆனால், திவாகரனைக் காப்பாற்ற சசிகலா செய்யும் வியூகங்கள் அனைத்தையும் தூளாக்கிவிட்டு தன் நோக்கத்தை சாதிக்க கறாராக இருக்கிறாராம் ஜெயலலிதா..’’
‘‘அடடே!’’
‘‘பெண்ணே, ராவணனைத் தொடர்ந்து மிடாஸ் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்ததில் தலைமைக்கு ரொம்பவே அதிர்ச்சியாம். அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி தி.மு.க.வினரு டனும் தோழமை கொண்டு பல தில்லுமுல்லுகளைச் செய்திருக்கிறாராம் மிடாஸ் மோகன். உதாரணமாக அண்ணாநகரில் தனது பெயரையே கொண்ட தி.மு.க. புள்ளி ஒரு வருக்கு தொழிற்சாலைகளில் ஸ்கிராப் கான்ட்ராக்ட் எடுக்க உதவியிருக்கிறார்.
இதில் ஏகப்பட்ட கோடிகள் விளையாடி இருக்கிறதாம். சாதாரண நகரச் செயலாளர் பதவியில் இருந்து சுற்றுச்சூழல் வரை உயர்த்தப்பட்ட மாவட்ட பிரமுகர் ஒருவர் செ ன்னை மற்றும் அதைச் சுற்றியிருந்த தொழிற்சாலைகளை மிரட்டி இந்த கான்ட்ராக்ட்களை ஏற்பாடு செய்து கொடுத்தாராம். சசி அண்ட் கோ வெளியேற்றப்பட்ட பிறகு கா ஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சில பெரிய கம்பெனிகள் கான்ட்ராக்ட்டை மாற்றத் திட்டமிட்டனர். இதனால், அந்த கான்ட்ராக்ட்டுக்கு ஆபத்து வர, அதை எடுத்த தி.மு.க. புள்ளியின் வாரிசும், மிடாஸின் சஞ்சீவி மலைகொண்ட வாரிசும் மாவட்ட பிரமுகரிடம் பேசியுள்ளனர். தன்னிடம் இப்போது சுற்றுச்சூழல் இல்லாவிட்டாலும் மாவட்டப் பதவியை வைத்து அந்த ஒப்பந்தங்களுக்கு உதவுவதாக கூறியிருக்கிறாராம் அந்தப் புள்ளி. இதுபோன்ற விஷயங்களைக் கேள்விப்பட்டதால், அப்செட்டான முதல்வர், மிடாஸ் சம்பந்தப்பட்டவர் மற்றும் அவரோடு தொடர்புகொண்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறாராம். அதன் முதல்கட்டமாக மிடாஸ் மோகன் கைது செய்யப்படலாம் என பேச்சு அடிபடுகிறது. இதைக் கேள்விப்பட்ட மோகன், சென்னை அடையாறில் உள்ள பூ மருத்துவனையில் நெஞ்சு வலி என சொல்லிவிட்டு அட் மிட் ஆகியிருக்கிறாராம்’’ என்ற வம்பானந்தா, சிணுங்கிய தனது போனை பேசிவிட்டுத் தொடர்ந்தார்...
‘‘முதல்வரின் கவனம் சசி குடும்பம் மேல்தான் இருக்கும். தி.மு.க.-வினர் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் வெள்ளக்கோவில் சுவாமிநாதன் மீதான நடவடிக்கை அதை உடைத்துவிட்டது. அவரைத் தொடர்ந்து ஐ.பெரியசாமி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்கிறார்கள்..’’
‘‘கோட்டைச் செய்திகள் ஏதாவது இருக்கிறதா?’’
‘‘ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இரண்டு பேர் இப்போது கோட்டையிலும், கார்டனிலும் முதல்வருக்கு ஆலோசனைகள் சொல்கிறார்களாம். நதி நீர் பிரச்னைகள் காரணமாக இப்போதைக்கு மாநிலத்தின் நீர் ஆதாரத்தைப் பெருக்குவதில்தான் முதல்வர் அதிக கவனம் செலுத்துகிறாராம். தமிழகத்தில் உள்ள நதிகளையாவது இணைப்பது, தண்ணீருக்காக பிற மாநிலங்களைக் கையேந்த வேண்டியிருப்பதைத் தவிர்க்க நிலத்தடி நீரை சேமிப்பது என அவர்களுடன் யோசித்து வருகிறாராம்.’’
‘‘தி.மு.க. பொதுக்குழு?’’
‘‘அதுதான் தனி மேட்டராக வருகிறதே... இருந்தும் சகோதரச் சண்டையைப்பற்றி தெரிந்ததைச் சொல்கிறேன். சகோதரர்கள் எப்படி சண்டை போடுகிறார்களோ அதேபோன்று அவர்களின் தொண்டர்களும் மோதத் தொடங்கியுள்ளனர். உதாரணம் சமீபத்தில் நடந்த போஸ்டர் யுத்தம்தான்.’’
‘‘போஸ்டர் யுத்தமா?’’
‘‘சென்னை நகரில் தி.மு.க. இளைஞர் அணியின் சார்பாக போஸ்டர் ஒன்றை ஒட்டியிருக்கிறார்கள். ‘மீண்டு வருவோம்! தளபதி தலைமையில் மீண்டும் வருவோம்!!’ என்று அதில் ஸ்டாலின் புராணம் பாடப்பட்டுள்ளது. இதுபோன்ற போஸ்டர்களில் கலைஞர் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்பதற்கு பதிலாக, தளபதி தலைமையில் மீண்டு வருவோம் என்று குறிப்பிட்டுள்ளது பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது.’’
‘‘அழகிரி தரப்பு சும்மா இருக்காதே?’’
‘‘கரெக்ட். அண்ணன் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களும் மதுரையில் ஒரு போஸ்டரை ஒட்டியிருக்கிறார்கள். அழகிரியை சிவன் வேடத்தில் சித்திரித்து ஒட்டப்பட்ட அந்த போஸ்டர்களில், ‘2016- ன் தமிழக முதல்வரே’ என்ற வாசகங்கள் இருக்க... சிவன் படத்தைப் பார்த்த இந்து அமைப்புகள் டென்ஷனாகிவிட்டன.’’
‘‘அப்படியா?’’
‘‘இதைக் கேள்.. தூத்துக்குடியில் நடந்த வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மீது ரொம்பவே கோபப்பட்டிருக்கிறார் வைகோ. ‘நான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மீது மிகப் பெரிய மரியாதை வைத்திருப்பவன். அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக முயற்சி செய்தவர்களில் நானும் ஒரு வன். அப்படிப்பட்டவர் கூடங்குளம் விவகாரத்தில் தவறு செய்துவிட்டார். அந்த விவகாரத்தில் அக்கறை செலுத்தும் அவர், முல்லைப் பெரியாறு பக்கம் வரவேண்டும் என்று மத்திய அரசையும் வைகோ கடுமையாகத் தாக்கியுள்ளார். தமிழர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி சுமார் இரண்டரை மணிநேரம் பேசிய அவர், சங்கரன்கோவில் இடை த்தேர்தலுக்கு நிதி கேட்க, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோயல், ஒரு லட்ச ரூபாய் பண மாலையை வைகோவுக்கு அணிவித்துள்ளார். தொண்டர்களிடம் இருந்தும் 15 ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளதாம்.’’ என்ற வம்பானந்தா, ‘‘பெண்ணே, இது நம் நாட்டின் 63-வது குடியரசு தினம். நீயும் ஒரு தேசியக் கொடியை மாட்டிக் கொள்...’’ என, தம் ஜிப்பாவில் கொடியை பொருத்திக் கொண்டார்.
காத்திருக்கும் மூப்பனார்!
மதுரையில் இரண்டு மூப்பனார் சிலைகள் திறப்பு விழாவுக்காகக் காத்திருக்கின்றன. ஜி.கே.வாசன் உள்பட யாரும் தேதி கொடுக்காத நிலையில் ஞானதேசிகன் காலத்திலாவது இதற்கு விமோசனம் கிடைக்குமா என்று காத்திருக்கிறார்கள் மதுரை காங்கிரஸ் தொண்டர்கள். அப்படியில்லையென்றால் மு.க.அழகிரியை வைத்து சிலையைத் திறந்து விடலாமா என்றுகூட யோசிக்கிறார்களாம்!
மீனவர்களின் மனிதநேயம்!
தமிழக மீனவர்களை தங்கள் கடல் எல்லையில் சிங்கள மீனவர்களும் அந்நாட்டுக் கடற்படையும் தொடர்ந்து தாக்கி வருகிறது. இந்நிலையில், கடலில் தத்தளித்துக் கொண் டிருந்த சிங்கள மீனவர்கள் சிலரை தமிழக மீனவர்கள் மீட்டு தமிழகத்துக்குக் கொண்டுவந்துள்ளனர். முறைப்படி அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
போதும் இந்த கௌரவம்!
மாதவன் நாயர் உட்பட நான்கு அதிகாரிகளை மத்திய அரசு, கறுப்புப் பட்டியலில் சேர்த்திருப்பது விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் நிறுவனமான தேவாஸுக்கு குறைந்த விலையில் முறைகேடாக எஸ் பாண்ட் செயற்கைக்கோள் அலைவரிசை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. பிரதமரின் உத் தரவுப்படி இது பற்றி விசாரணை நடந்துகொண்டிருக்க, மாதவன் நாயர் உள்ளிட்ட நால்வரும் அரசு உயர் பதவிகள் எதையும் வகிக்க இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. எஸ் பாண்ட் அலைக்கற்றை முறைகேட்டை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நெல்லை மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகள் அம்பலப்படுத்தியிருந்தனர். தாங்கள் நேரடியாக புகார் கொடுக்க முடியாது என்பதால், கருங்கல் ஷார்ஜ் என்பவர் மூலம் பிரதமர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பினார்கள். இதைத் தொடர்ந்து மாதவன் நாயருக்கு எதிராக கன்னியாகுமரியிலும், நெல்லையிலும் போராட்டங்களும் நடந்தன.
இந்நிலையில், ‘‘இந்த விவகாரத்தில் நானும், என் சகாக்கள் மூன்று பேரும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளோம். இஸ்ரோவின் இப்போதைய தலைவர் ராதாகிருஷ்ணன்தான் இந்த விஜயத்தில் அரசை தவறாக வழிநடத்துகிறார். விண்வெளிக்கு சந்திராயனை அனுப்பி சாதனை படைத்த எங்களுக்கு மத்திய அரசு செய்யும் கௌரவம் இதுதானா?’’ என்று மாதவன் நாயர் கொதிக்கிறார்.
ஆனால், மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகளோ, ‘‘இந்த மையத்துக்கு தனி மைய அங்கீகாரம் கிடைக்காமல் தடுத்ததில் மாதவன் நாயருக்கு முக்கியப் பங்கு உண்டு. தனது சீனியர் அதிகாரிகள் பலரையும் கடந்து குறுக்கு வழியில்தான் மாதவன் நாயர் இஸ்ரோவின் உயர் பதவியை அடைந்தார். அப்படிப்பட்டவருக்கு இந்த கௌரவம் போதும்’’ என்கிறார்கள்.
ஆரணி தொகுதி எம்.பி.யான எம். கிருஷ்ணஸ்வாமி ‘தானே’ புயலுக்கு அதிக நிதி கேட்டு பிரதமருக்கு கடிதத்தை தட்டிவிட அதைவிட வேகமாக ஆவன செய்வதாக பிரதமரிடம் இருந்து பதில் வந்திருக்கிறது!
‘அம்மா வந்தா இங்கேதான் உக்காருவாங்க, அம்மா வந்தா இந்த ரூம்லதான் தங்குவாங்க’
மிடாஸ் மோகன் கைது செய்யப்படலாம் என பேச்சு அடிபடுகிறது.
ஐ.பெரியசாமி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
அப்துல் கலாம் மீது ரொம்பவே கோபப்பட்டிருக்கிறார் வைகோ. |