|
வழக்கமான காவி உடையில் இருந்து ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட்டில் இருந்தார் சுவாமி வம்பானந்தா. அப்போது அறைக்குள் வந்த சிஷ்யை ‘ஷாக்’காகிப் போனார்.
‘‘என்ன சுவாமி இது... திடீர்ன்னு அதிர்ச்சி கொடுக்கிறீங்க...’’
‘‘நான் மட்டுமா அதிர்ச்சி கொடுக்கிறேன்... எத்தனையோ பேர் அதிர்ச்சி கொடுக்கிறாங்க...’’
‘‘யார் அப்படி அதிர்ச்சி கொடுத்தது...?’’
‘‘தமிழக அமைச்சர் ஒருவர் குஜராத் முதல்வர் மோடியை சந்திச்சாரே... அது ஏன்?’’
‘‘ராஜராஜ சோழன் சிலையை தமிழகத்துக்குக் கொண்டு வர்றதுக்காக...’’
‘‘இப்படி வெளியே சொன்னாலும், அரசியல் வட்டாரத்துல வேறு மாதிரி சொல்றாங்க...’’
‘‘என்னன்னு...?’’
‘‘சட்டமன்றத் தேர்தல் வரும் நேரத்துல காங்கிரஸ் கட்சி தொடர்ந்து டிரபுள் கொடுத்துக்கிட்டு வருது... அவங்களுக்கு ஒரு ‘ஷாக்’ கொடுக்கத்தான் இந்த சந்திப்பாம்... ‘நீங்க தொந்தரவு கொடுத்தா நாங்க பி.ஜே.பி. கூட்டணிக்குப் போயிடுவோம்’னு சொல்லாம சொல்றாங்களாம்.’’
‘‘ஓ... கதை அப்படிப் போகுதா?’’
‘‘கட்சியில சீனியர்களுக்கு வைகோ ஒரு ‘ஷாக்’ கொடுத்திருக்கிறாராம்...’’
‘‘இன்னைக்கு என்ன ‘ஷாக்’ ஸ்பெஷலா?’’
‘‘கடலூர் மாவட்டச் செயலாளர் பத்மநாபனை கட்சிப் பதவியில இருந்து நீக்கிட்டாராம்...’’
‘‘அவர் கட்சியில ரொம்ப சீனியர் ஆச்சே... தி.மு.க.வில் இருந்து அவர் ம.தி.மு.க.வுக்கு வந்த போதே தி.மு.க.வில் அவர் நகரச் செயலாளரா இருந்தவராச்சே...’’
‘‘உண்மைதான்... அவர் ஒரு திருமண விழாவுல அமைச்சர் ஒருவருடன் கலந்துக்கிட்டாராம்... உடனடியா அவரை கட்சிப் பொறுப்புல இருந்து நீக்கி ‘ஷாக்’ கொடுத்திருக்காராம், வைகோ.’’
‘‘ஏனிந்த முடிவாம்?’
‘‘கட்சியில சீனியர் பலரும் ஆளும்கட்சியோடு ரொம்ப நெருக்கமா இருக்காங்களாம்... யாரையும் கண்ட்ரோல் பண்ண முடியலையாம். .. சென்னையில உள்ள மாவட்டச் செயலாளர் வீட்டு விழாவுக்கு திருமாவளவன் வந்தாராம். பக்கத்து மாவட்டச் செயலாளர் வீட்டுக்கு தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு, செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் வந்தாங்களாம். கோவை புறநகர் நிர்வாகியும், கண்ணானவரும் அமைச்சர் ஒருவரோடு நெருக்கம் காட்டி வர்றாங்களாம். நெல்லை மாநகர் நிர்வாகி வீட்டு விழாவில் அமைச்சர் ஒருவர் பழைய பாசத்தில் கலந்துக்கிட்டாராம்... வைகோவின் பி.ஏ. வீட்டு விழாவுக்கு அமைச்சருக்கும், டி.ஏ.கே. லக்குமணனுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டதாம்... மூத்த நிர்வாகிகள் பலருக்கும் ஆளும் கட்சியோட இருக்கிற தொடர்பு கட்சித் தலைமைக்குப் போனதால, அவங்க அத்தனை பேருக்கும் ஒரு பாடமா இருக்கட்டும்னு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா ம.தி.மு.க. வட்டாரத்துல பேச்சு அடிபடுது...’’
‘‘அன்புச் சகோதரி பாணியில் ‘ஷாக் கொடுக்கிறாராக்கும்...’’
‘‘தென் மாவட்டத்துல உள்ள முக்கியமான நகரத்துல நடந்த சம்பவம் இது. அந்த நகரத்துல உள்ள பிரபலமான இனிப்புக் கடைக்கு ஒருவர் போயிருக்கார். இனிப்புப் பண்டங்கள் சரியாக இல்லை என்று அவர் கமெண்ட் அடிக்க, கடை ஊழியர்கள் அவரைப் போட்டு பின்னி எடுத்துட்டாங்களாம்...’’
‘‘அய்யய்யோ... அப்புறம்...’’
‘‘அந்த அப்பாவி, போலீஸ்ல போய் புகார் கொடுத்திருக்கார். போலீஸாரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க களத்தில இறங்கியிருக்காங்க... எஸ்.ஐ. ஒருவர் கடைக்கு நேராகப் போய் ‘என்ன நடந்தது?’ என்று விசாரித்திருக்கிறார். அவருக்கும் அடி உதை விழுந்திருக்கு... உடன் அவர் இன்ஸ்பெக்டரிடம் புகார் பண்ண, அவரும் போயிருக்கார். அவரிடமும் கடைக்காரங்க பேசியிருக்காங்க ரூடா...
கொஞ்ச நேரத்துல இன்ஸ்பெக்டர் போன்ல கமிஷனர் வந்தாராம்... ‘எதுக்கு அங்கெல்லாம் போறீங்க... அவங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுட்டு ஸ்டேஷன் வாங்க’னு உத்தரவு போட்டாராம். ஸ்டேஷன் வந்த அவங்களை காத்திருப்போர் பட்டியல்ல வைச்சிட்டாங்களாம்...’’
‘‘அடக் கொடுமையே...’’
‘‘இந்த சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி, ஒரு லாரி ரோட்ல ரொம்ப ஸ்பீடா போயிருக்கு... அதை மறிச்ச இன்ஸ்பெக்டர், ‘இவ்வளவு வேகமா போறீயே... நீயெல்லாம் நல்லா இருப்பியா?’ன்னு கேட்டிருக்கார். அந்த லாரி மாவட்ட நிர்வாகியோடதாம். ‘அண்ணனைத்தான இப்படிச் சொன்ன’ என்று அவரையும் காத்திருப்போர் பட்டியலுக்குக் கொண்டு போயிட்டாங்களாம்... இந்த ரெண்டு சம்பவமும் போலீஸார் மத்தியில பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்காம்...’’
‘‘மீண்டும் போலீஸ் சங்க கோரிக்கை தலை எடுக்குமே... அவங்க ஏதாவது ‘ஷாக்’ கொடுத்திடப் போறாங்க...’’
‘‘ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸாரின் மன நிலை எப்படியிருக்கு... எந்தக் கட்சியோட கூட்டணி வைத்தால் தமிழகத்தில் வெற்றி பெறலாம்னு ஐ .பி.யை வைத்து சர்வே ஒன்றை நடத்தச் சொல்லியிருந்தாராம். சர்வே முடிவைப் பார்த்த அவர் அதிர்ந்து போயிட்டாராம்...’’
‘‘அப்படியென்ன இருந்துச்சு...?’’
‘‘இப்ப இருக்கிற கூட்டணி தொடர்ந்தால், தோல்வி உறுதின்னு சர்வே அடிச்சு சொல்லுதாம்... காங்கிரஸ் தொண்டர்களில் பெரும்பாலானவங்க இந்தக் கூட்டணியை விரும்பலன்னு அந்த சர்வேயில தெரியவந்திருக்காம்... அதனால காங்கிரஸ் தலைமையில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றவர்களுக்கு ‘க்ரீன்’ சிக்னல் கொடுத்துட்டாங்களாம்...’’
‘‘அப்படின்னா அவர் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கும்னு சொல்லுங்க...’’
‘‘அது மட்டுமல்ல, காங்கிரஸ் தலைமையில் தனி அணி உருவாக்கலாமா என்கிற தீவிர ஆலோசனையும் நடந்துக்கிட்டு வருதாம்...’’
‘‘அந்தக் கூட்டணியில யார் யார் இருப்பாங்க...?’’
‘‘விஜயகாந்த், டாக்டர் அன்புமணி ஆகியோரிடம் டெல்லித் தலைவர்கள் இது தொடர்பா பேசியிருக்காங்க... வேறு எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கிறது என்பதை தீவிரமா ஆலோசனை நடத்திகிட்டு வர்றாங்களாம்...’’
‘‘இப்படியொரு கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதால்தான், விஜயகாந்த் 40, 50 சீட்டுக்காக கூட்டணி வைக்க மாட்டேன்னு சொல்றாரா?’’
‘‘இருக்கலாம்... தி.மு.க.வுக்கு மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்கள் குறைந்துவிட்டதை கவனித்தாயா?’’
‘‘நானே கேட்க வேண்டும் என்று நினைத்தேன்... நீங்களே ஆரம்பித்துவிட்டீர்கள்... என்ன காரணம்?’’
‘‘நிறையப் பேர் வர தயாராயிட்டு இருக்காங்களாம்... அவங்களோட பேச்சுவார்த்தையும் தீவிரமா நடந்துக்கிட்டு இருக்கு... ஆனா, கட்சியில சேருவது மட்டும் இப்போதைக்கு வேணாம்னு சொல்றாங்களாம்...’’
‘‘அதான் ஏன்?’’
‘‘மேலவைத் தேர்தல் முடிந்ததும், பேரவைத் தேர்தல் அறிவிப்பு வந்துவிடும். அந்த சமயத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எதிர்க் கட்சியில் பலமாக உள்ளவர்களை தங்கள் கட்சியில் சேர்த்தால், எதிர் அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த மாதிரி இருக்கும். அந்த அணி பலவீனம் அடையும் என்று கருதுகிறார்களாம். அதுதான் இணைப்பு விழாக்கள் தாமதமாகிறதாம்...’’
‘‘எந்தக் கட்சியில் இருந்தெல்லாம் வர்றாங்களாம்...?’’
‘‘அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்ததில் மனித நேய மக்கள் கட்சியில் சிலர் அதிருப்தியில் இருக்காங்களாம்... அவர்களை இழுத்து வரும் பணியில் உளவுத்துறை தீவிரமா இருக்குதாம்... அதேபோல கம்யூனிஸ்ட் தொழிற்சங்க ஆட்களை தமிழகம் முழுவதும் கொண்டு வரும் பொறுப்பை கோவிந்தசாமியிடம் கொடுத்திருக்காங்களாம்... இதனால் கோபமாகி அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று நினைக்கிறார்களாம். அப்படி நடவடிக்கை எடுத்தால், அதைப் பயன்படுத்தி அவருக்கு தொ.மு.ச.வில் முக்கிய பொறுப்பு கொடுக்கவும் தி.மு.க. தலைமை தயாராக இருக்கிறதாம்’’ என்றார் வம்பானந்தா.
அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. உடன் சுவாமி வம்பானந்தா காரில் ஏறி புறப்பட்டார்.
துணை முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீஸனை, காலாவதி மருந்து விவகாரத்தில் இணைத்து ஷெயலலிதா பேசினார். இது தொடர்பாக ஷெயலலிதா மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய, சபரீஸன் எழும்பூர் நீதிமன்றத்துக்கு வந்தார். தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்த அவர், கோர்ட்டுக்கு வந்ததை பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கவில்லை. அவர் வந்து சென்ற பின்னரே பலருக்கும் இந்தத் தகவல் தெரியும். இந்த வழக்கில் ஷெயலலிதா என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. |