|
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவிப்பேரரசு வைரமுத்து என முக்கிய பிரபலங்களின் இல்லத் திருமண நிகழ்ச்சிக்குச் சென்று வந்த சுவாமி வம்பானந்தா குஷி மூடில்... ‘நீதானே எந்தன் பொன் வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்’ என்று ஹம்மிங் செய்தபடியே ஆசிரமத்திற்குள் நுழைந்தார் சுவாமி வம்பானந்தா. இதைக் கண்டு, ஏற்கெனவே வந்து காத்திருந்த சிஷ்யை ஆச்சரியப்பட்டு எழுந்து நின்றார்.
‘‘நீங்களே சினிமா பாட்டு பாடிட்டு வர்றீங்க... அப்ப நானும் பாட்டாலே கேள்வி கேக்குறேன். நீங்க அதுக்கேத்த மாதிரி தகவல் சொல்ல முடியுமா சுவாமி’’ என்று சிரித் துக்கொண்டே கேட்டார் சிஷ்யை.
‘‘பாடும்... பாடிப் பாரும்’’ என்று சுவாமி ஆமோதித்தார்.
‘‘நலம்தானா... நலம்தானா... உடலும் உள்ளமும் நலம்தானா?’’ என்று சிஷ்யை பாடியதும் தாமதிக்காமல் ‘‘வைரமுத்து இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போன்ற பிரபலங்கள் அரசியல் கலக்காமல் வாழ்த்திப் பேச, நன்றியுரை என்ற பெயரில் நீண்ட நெடிய வாழ்த்துரையாற்றிய வைரமுத்து மட்டும், ‘இங்கு கல்யாணக் கூட்டணி மட்டுமல்ல, கட்சிக் கூட் டணியும் உள்ளது’ என்று அரசியல் கலந்து பேசியதை முதல்வர் கருணாநிதி உள்பட யாரும் ரசிக்கவில் லை. மாறாக முதல்வர் பேசும்போது, நன்றியுரை என்ற பெயரில் அதிக நேரம் வைரமுத்து தன்னை காக்க வைத்ததைச் சுட்டிக்காட்டிப் பேசினார். கோவையில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் இளங்கோவன் பாணியில் ப.சிதம்பரம் அதிரடியாகப் பேசியதாலோ என்னவோ வழக்கமாக விழா மேடையில் இருப்பவர்களின் பெயரை குறிப்பிட்டுப் பேசும் முதல்வர் இம்முறை யார் பெயரையும் சொல்லவில் லை. உடலும், உள்ளமும் ஒத்துவரவில்லை போலும். ஏனெனில், முதுகுத்தண்டுவடத்திற்கு அழுத்தம் தரக் கூடாது என்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு செக்-அப் செய்யச் சென்றிருந்த முதல்வருக்கு டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இதன் அடிப்படையில், விழாக்களில் பங்கேற்க முதல்வரிடம் அப்பாய்ன்ட்மெண்ட் கேட்க வருபவர் களிடம் துணை முதல்வர் ஸ்டாலின் ‘ஒரு மணி நேரத்திற்குள் விழா முடிப்பது என்றால் அவரை அழைக்க வாருங்கள்’ என்பதுடன் ‘இனிமேல் விழாக்களில் அதிகமாக பங்கேற்க வேண்டாம். தேர்தல் நேரத்தில் முக்கிய இடங்களுக்குச் சென்று பிரசாரம் செய்ய வேண்டியுள்ளதால் இப்பொழுது இருந்து ஓய்வு எடுங்கள்’ என்று துணை முத ல்வரும் தந்தைக்கு அன்புக் கட்டளையிட்டுள்ளாராம்.’’
‘‘எங்கே நிம்மதி நிம்மதியென்று தேடிப் பார்த்தேன் அது இங்கேயும் இல்ல!’’
‘‘‘நீங்கள் விரும்பும் கூட்டணியை அமைப்பேன்’ என்று ரத்தத்தின் ரத்தங்களை உசுப்பேற்றி விட்டுள்ள போயஸ் தோட்டத்து அம்மையார், அதற்கான எந்த மூவ்வும் எ டுக்காமல் கொடநாட்டிற்குச் சென்று ஓய்வு எடுத்து வருகிறார். தேர்தல் நேரத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள தற்போது, 40 நாட்கள் மூலிகை சிகிச்சை மேற்கொண்டு வருகிறாராம். இதனால், இம்மாதம் நடக்க இருந்த மதுரை கூட்டமும், மூவேந்தர் முன்னணிக் கழகம், வன்னியர் அமைப்பு இணைந்து நடத்தும் பாராட்டு விழா கூட்டமும் அக்டோபர் மாத இறுதியில் நடைபெற உள்ளது. மேலும், கூட்டணி குறித்து ஆலோசிக்க வரும் 15, 16, 17 அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்தி முடித்த பின்பு மாவட்டப் பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகளை கொடநாடு அழைத்து ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளாராம்.’’
‘‘அம்மா.... நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை.....’’
‘‘கட்சித் தொண்டர்களிடம் புகார் மனு பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக ‘போயஸ் தோட்டத்து அம்மா’ உறுதியளித்ததால், ஆயிரக்கணக்கான புகார் மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனால் மனுக்கள் தொடர்பான விசாரணையோ, நடவடிக்கையோ இதுவரை ஏதும் இல்லை. மாறாக, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உன் மீது இவர் புகார்க் கடிதம் கொடுத்துள்ளார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டதும், புகார் கொடுத்த தொண்டர்களை அந்த நிர்வாகிகள் மிரட்டுவதும் ரவுண்ட் கட்டி அடிப்ப தும்தான் பல்வேறு மாவட்டங்களில் அரங்கேறி வருகிறதாம்.’’
‘‘ராஜா.... ராஜாதி ராஜனிந்தா ராஜா....
நேற்று இல்லை, நாளையில்லை எப்பவும் நான் ராஜா!’’
‘‘அஞ்சா நெஞ்சன் பிறந்த நாள் கொண்டாடி 8 மாதம் முடிஞ்சுபோச்சு, இந்தச் சூழலில் அறிவாலயம், சேப்பாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அழகிரி படம் போட்டு ‘ஜனவரி 30-ல் பிறந்தநாள் கொண்டாடும் ‘குமுகி’ அவர்களே பல்லாண்டு வாழ்க’னு ஒரு போஸ்டர் ஒட்டியிருக்காங்க. இதுதான் கோபாலபுரத்துக் குடும்பத்துல ஹாட்- டாபிக். மதம் பிடித்த யானைகள் மற்றும் வழி தவறி வந்த யானைகளை ‘கும்கி’ யானையைக் கொண்டு அடக்கி அந்த யானைகளை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்றுவிடுவார்கள். அ துபோல், கட்சியில் அடங்காதவர்களை அடக்கி வைக்கக் கூடியவர் அஞ்சாநெஞ்சன் என்ற அர்த்தத்தில் இப்படியொரு போஸ்டர். அதுவும் பிறந்தநாள் கொண்டாடி 8 மாதத்திற்குப் பின்பு, பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி...’’
‘‘என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா...’’
‘‘ஜாதிச் சான்றிதழ் முறைகேடு தொடர்பாக தாற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீதான சஸ்பெண்ட், ரத்து செய்யப்பட்டு மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் தலித் மக்கள் மீதான அதிருப்தி ஆளும்கட்சி மீது அதிகரித்துவிடக் கூடாது என்ற அரசியல் லாப நோக்கத்திற்காகவும், வலுவான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலும் அரசுத் தரப்பில் இப்படி பல்டி அடித்துவிட்டார்களாம்.’’
“நான் உள்ளதை சொல்லட்டுமா?...
ஊரறிய பாடட்டுமா?’’...
‘‘சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்தப் பிரபலமான கல்லூரியில் முதல்வராக இருந்தவரின் பதவிக்காலம் முடிந்து ஏற்கெனவே பதவி நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. தற்போது பதவி நீட்டிப்புக் காலமும் முடிந்துவிட்டதால் புதிய முதல்வரை நியமித்து சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒப்புதலுக்கு ஃபைல் அனுப்பியது கல்லூரி நிர்வாகம். அதனைக் கண்ட துணைவேந்தர், முதல்வர் நியமனத்தில் சரியான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று காரணம் கூறி ஃபைலை ரிஜெக்ட் செய்துள்ளார்.’ ‘என்ன செய்வது என்று தவித்துக்கொண்டிருந்த கல்லூரி நிர்வாகம், சமீபத்தில் அக்கல்லூரியில் படித்து தற்போது பிரபலங்களான முன்னாள் மாணவர்களை அழைத்துக் கூட்டம் நடத்தியது அல்லவா?’ அதனை மனதில்கொண்டு தற்போது பிரபலங்களாக உள்ள அக்கல்லூரியின் முன்னாள் மாணவ சகோதரர்களிடம் விஷயத்தை எடுத்துச் செல்ல, சகோதர தரப்பில் இருந்து துணைவேந்தருக்குக் கட்டளை பறக்க, துணைவேந்தரோ, மதுரைக்காரரிடம் புகார் கூற... ‘யார் சொன்னாலும் விதிமுறைக்கு மாறாக இ ருந்தால் அந்த ஃபைலில் நீ கையெழுத்துப் போடாதே’ என்று ஆணையிட, அவரின் பேச்சை வேதவாக்காக எடுத்துக்கொண்டு ‘நீங்க யார்கிட்ட போனாலும் உங்க ஃபைலில் கையெழுத்துப் போட முடியாது’ன்னு சொல்லிவிட்டாராம்.’’
‘‘ஏய்... ராசாத்தி ரோசாப்பூ.. வா... வா....’’
‘‘செம்மொழி மாநாடு நடத்திய கையோடு ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய சட்டசபை அரங்கினை தமிழ்ச் செம்மொழிக்கான நூலகமாக முதல்வர் மாற்றினார். அதனை சி.ஐ.டி. காலனியில் உள்ள அம்மா, கடந்த இரு தினங்களுக்கு முன்பு விசிட் அடித்தாராம். அப்படியே புதிய தலைமைச் செயலராகப் பொறுப்பேற்ற அந்தப் பெண்மணியைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாராம். உண்மையிலேயே லைப்ரரியை சுற்றிப் பார்க்க போனாரா அல்லது லைப்ரரியை சுற்றிப் பார்க்கும் சாக்கில் தலைமைச் செயலாளருக்கு வாழ்த்துச் சொல்ல போனாரா... அவரின் இந்த அணுகுமுறையே புதுசாக இருக்கிறதே என்று கோட்டையில் பேச்சு கேட்கிறது.’’
‘அடுத்ததாக என்ன பாடல் பாடலாம்’ என்று சிஷ்யை யோசித்துக்கொண்டிருந்த வேளையில்,
‘‘போய் வா நதியழகே... பூஜைக்கு பூ கொண்டு வா’’ என்று சுவாமி பாட, சிஷ்யை விடைபெற்றார். சுவாமியும் ஓய்வெடுக்க அவரது அறைக்குள் நுழைந்தார்.
தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்று எண்ணற்ற வேலைகள் இருக்கும்பட்சத்தில், தனது ஐ.பி.எஸ். என்ற இன்ஷியல் கொண்ட வாரிசுக்காக பழநி தொகுதியை இப்போதே ரிசர்வ் செய்து, தேர்தல் பணியைத் துவக்கிவிட்டாராம் அமைச்சர்.
திண்டுக்கல் பேகம்பூர் பெரியபள்ளி வாசலில் நடந்த இஃப்தார் நோன்பு நி கழ்ச்சியில் எங்கும் காணாத அதிசயமாக தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி போட்டு ஒன்றாகக் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பக்கத்தில் மா.கம்யூ. எம்.எல்.ஏ. பாலபாரதி, அடுத்த வரிசையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சி.சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு இஃப்தார் போஸ் கொடுத்தனர்.எல்லா கட்சியின் வி.ஐ.பி.களும் இதில் கலந்துகொண்டதுதான் சிறப்பம்சம்.
சத்தியமூர்த்திபவனில் 5-ம் தேதி நடக்க இருந்த ‘இஃப்தார் விருந்தினை’ தலைவர் தங்கபாலு திடீரென ரத்து செய்துவிட்டாராம். காரணம் கேட்ட தனது ஆதரவாளர்களிடம் ‘இடப் பற்றாக்குறை ஏற்பட்டு அது ஒரு செய்தியாகிவிடக் கூடாது’என்று மழுப்பலான பதில் சொல்கிறாராம்.உண்மை என்னவெனில் ஏற்கெனவே, இளங்கோவன் - தங்கபாலு கோஷ்டி இடையே போஸ்டர் யுத்தம் நடைபெறும் வேளையில்,கார்த்தி சிதம்பரம் ஒரு இஃப்தார் நிகழ்ச்சியை நடத்தி முடித்த பின்பு தானும் நடத்தினால், இது ஒரு சர்ச்சையாகிவிடும் என்று தலைவர் பயப்படுகிறாராம்.
அண்ணா அறிவாலயத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. கவுன்சிலரும், பகுதிச் செயலாளருமான தனசேகரன் மகள் திருமணம் 6-ம் தேதி நடந்தது. மணமேடையி ல் சிரித்த முகத்துடன் எதிர்கால கனவுகளுடன் இருக்க வேண்டிய மணமகள் முகத்தில் புன்முறுவல் கூட இல்லை. முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டி ருந்த நிலையில், மணமேடையில் அமர்ந்து இருந்த மணப்பெண் திடுக்கென எழுந்து,துணை முதல்வர் ஸ்டாலினிடம் ஏதோ கிசுகிசுக்க... ஸ்டாலின் முகத்தில் அதிர்ச்சி. அதனை வெளிப்படுத்தாமல் பெண்ணிடம் சமாதான பாணியில் அவர் ஏதோ சொல்ல... மீண்டும் மணமேடையில் அமர்ந்தார் மணப்பெண். இறுதியில் திருமணம் சுபமாக முடிந்தாலும் மணமகன் மட்டும் மிரண்டுபோய் இருந்தார். ஏனென்றுதான் பார்வையாளர்களுக்குப் புரியவில்லை. |