Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61 Kumudam.com, Kumudam Reporter - வம்பானந்தா
‘‘பெண்ணே, என்னையும் நீ வம்பில் மாட்டிவிட்டு விடுவாய் போலிருக்கிறதே! அப்படியென்ன குஷி மூடு உனக்கு. பாட்டுப் பாடியபடி வருகிறாய்?’’ என்று சுவாமி கேட்டார்.
‘‘உனக்குத்தான் தெரிகிறதே. அதையும் சொல்லிவிடு’’ என்று ஆர்வமாக சுவாமி நிமிர்ந்து உட்கார்ந்தார்.
‘‘புதிய சட்டப் பேரவை வளாகத்தின் திறப்பு விழா இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டபடி வரும் 13-ம் தேதி நடக்கவுள்ளது. அதற்காக ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு என்றும் பாராமல் நேரில் வந்து கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டுச் சென்றார்.’’
‘‘அப்படியா? ஆச்சரியமாக இருக்கிறதே.’’
‘‘ஆமாம் சுவாமி. நான் ஏற்கெனவே சொன்னதைப்போல் புதிய சட்டப்பேரவை வளாகத்தில் கலைஞரின் உருவப்படம் வைக்கப்படுகிறது. அதற்காக அரசு கவின் கலைக் கல்லூரியில் கலைஞரின் படத்தை வரைந்து வருகிறார்கள். இதற்கு தி.மு.க. தரப்பில் பலரும் ஒப்புதல் கொடுத்திருக்கிறார்கள்.’’
‘‘அதுசரி, ஏற்கெனவே எம்.ஜி.ஆர். இறந்தபோது கலைஞரின் உருவச் சிலையை சிலர் அடித்து உடைத்து விட்டார்களே?’’ என்று சுவாமி தன் சந்தேகத்தைக் கேட்க, ‘‘ஆமாம் சுவாமி. கி.வீரமணி கூட உடைந்த சிலைக்குப் பதில் புதிய சிலை வைக்க முயற்சி எடுத்தார். அதற்கே கலைஞர் அனுமதி அளிக்க மறுத்துவிட்ட நிலையில், பேரவை வளாகத்தில் தன் உருவப்படத்தை வைக்க கலைஞர் ஒப்புக் கொள்வாரா, மாட்டாரா என்று பலரும் சந்தேகத்தோடு காத்திருந்தார்கள். எப்படியோ அனுமதி கிடைத்துவிட்டது.’’
‘‘பெண்ணே தலைமைச் செயலகத்தின் புதிய கட்டடம் திறக்கப்படும் நிலையில், அதுபற்றி சிலர் அதிருப்தியில் உள்ளதாக ஒரு செய்தி அடிபடுகிறதே?’’
‘‘ஆமாம் சுவாமி. சரியாகச் சொன்னீர்கள். அண்ணாசாலையில் புதிய பேரவை அருகே உள்ள ரிச்சி தெரு, வாலாஜா சாலையில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த மிரட்டல்கள் தொடர்ந்து வருவதால் வியாபாரிகள் கடும் அதிருப்தியில்தான் உள்ளனர். அதேபோல் புதிய பேரவை கட்டடத்தின் அருகே உள்ள வர்த்தக மையங்களில் உள்ள கடை வாடகைகள் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளதாலும் வியாபாரிகள் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள் சுவாமி.’’
‘‘அய்யோ போதும் பெண்ணே. புதிய பேரவை பற்றி நிறைய செய்திகளைச் சொல்லிவிட்டாய். மார்ச் 19-ம் தேதி தாக்கல் செய்யப்படும் தமிழக நிதிநிலை அறிக்கை பற்றி ஏதாவது செய்திகள் உண்டா?’’
‘‘இருக்கிறது சுவாமி. அ.தி.மு.க. எல்.எல்.ஏ.க்கள் எல்லோரையும் கொடநாடு வரவழைத்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை ஜெயலலிதா நடத்துகிறார்.’’
‘‘பட்ஜெட்டைப் புறக்கணித்துவிட்டு வெளிநடப்புச் செய்வார்கள் என்பது தெரிந்ததுதான் பெண்ணே. பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒரு நாள் விசிட்டாக ஜெ. வருவார் என்று ஏற்கெனவே நீ சொன்னது நடக்குமா பெண்ணே?’’
‘‘கார்டன் தரப்பில் இரண்டு விதமான கருத்துகள் சொல்கிறார்கள். புதிய பேரவைக் கட்டடத்திற்குள் முதல்வராகத்தான் ஜெ. நுழைவார் என்று கார்டன் வட்டாரத்தில் சொல்லி வருகிறார்கள். மற்றொன்று, தனது எம்.எம்.ஏ., பரிவாரங்களுடன் வந்து பட்ஜெட்டைப் புறக்கணித்துவிட்டு வெளிநடப்புச் செய்யலாம் என்றும் சொல்கிறார்கள்.’’
‘‘சரி, இரண்டில் ஒன்று நடக்கத்தானே போகிறது. அதையும் பார்ப்போம். கொடநாடு விவகாரம் வேறு ஏதாவது உண்டா பெண்ணே?’’
‘‘இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அகில இந்திய காங்கிரஸ் பிரமுகர்கள் கொடநாடு பங்களாவுக்குச் சென்று ஜெ.வைச் சந்தித்துப் பேசப்போகிறார்களாம். இதற்கான ஏற்பாட்டை முக்கிய தொழில் பிரமுகர் ஒருவரும், காங்கிரஸ் பிரமுகர் ஒருவரும் கவனித்து வருகிறார்களாம்.’’
‘‘உண்மையாகவா? இந்தச் சந்திப்புக்கு என்ன தேவை இருக்கிறது?’’
‘‘சுவாமி, எம்.ஜி.ஆர். ஃபார்முலாவை ஜெ., கடைப்பிடிக்கிறார். அதாவது இந்திரா-ராஜிவ் காலங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும், அ.தி.மு.க.வுக்கு 15 தொகுதிகளும் ஒதுக்கப்படும். இந்த விகிதத்தில் இப்போதும் தொகுதிகளை ஒதுக்கத் தயாராக இருப்பதாக ஜெ.விடம் இருந்து கிரீன் சிக்னல் வந்துள்ளதாம். அதோடு மத்திய அரசில் பங்கேற்காமல் நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும் ஜெ., கொடுத்துள்ள உறுதிமொழிகளால் காங்கிரஸ் அரசு ரொம்பவும் மகிழ்ச்சியில் இருக்கிறதாம்.’’
‘‘இளந்தலைவர் ராகுல் இந்த உடன்பாட்டிற்கு உடன்பட்டு, சோனியாவின் சம்மதத்தைப் பெற்று இந்த மூவ்கள் நடப்பதாக அ.தி.மு.க.-காங்கிரஸ் இடையே மீடியேட்டர்களாகச் செயல்படும் பிரமுகர்கள் சொல்லி வருகிறார் கள்.’’
‘‘அப்படியே ஆகட்டும். பென்னாகரம் தேர்தல் நிலவரம் குறித்து ஏதாவது தகவல்கள் உண்டா?’’
‘‘இருக்கிறது சுவாமி. பென்னாகரத்தில் தி.மு.க.வும், பா.ம.க.வும் மட்டும்தான் எதிர் எதிர் அணியில் களத்தில் மும்முரமாக இருக்கிறார்கள். அ.தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சிகள் சோர்ந்து போய் இருக்கிறார்கள், சுவாமி.’’
‘‘நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன். இதற்கு என்ன காரணம்?’’
‘‘மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த தம்பிதுரையை தேர்தல் பொறுப்பாளராக நியமித்ததில் உள்ளூரில் பெரும்பான்மையாக உள்ள வன்னிய சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் இடையே வருத்தம் நிலவுகிறதாம், சுவாமி. வழக்கமாக இடைத்தேர்தல்களில் வெளியூரில் இருந்து ர.ர.க்கள் தேர்தல் பணியாற்றுவதற்கு வருவார்கள். ஆனால், பென்னாகரத்தில் கொங்குமண்டலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்களைத் தவிர வேறு யாரும் வரவில்லை என்பதும் இந்த சோர்வுக்குக் காரணமாம்.’’
‘‘விழுப்புரத்தில் ஒரே நாளில் மூன்று நிகழ்ச்சிகளில் கலைஞர் கலந்துகொண்டது குறித்து ஏதாவது செய்திகள் உண்டா பெண்ணே?’’
‘‘ஆமாம் சுவாமி, மருத்துவக் கல்லூரி திறப்பு விழா, கலைஞர் அறிவாலயம் திறப்புவிழா மற்றும் கட்சி பொதுக் கூட்டம் என ஓய்வில்லாமல் அடுத்தடுத்து கலைஞர் கலந்துகொண்டது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய சிலர் கலைஞரின் வயதைக் குறிப்பிட்டு இந்த வயதிலும் ஓய்வில்லாமல் உழைக்கிறார் கலைஞர் என்று பேச, அதற்குப் பதிலளித்த கலைஞரோ, ‘எல்லோரும் வயதைக் குறிப்பிட்டு என் உற்சாகத்தை இழக்கச் செய்துவிடா தீர்கள்’ என்று பஞ்ச் வைக்க, கூட்டத்தினர் கலைஞரின் பேச்சை வெகுவாக ரசித்தார்களாம்.’’
‘‘பேச்சில் அவரை விஞ்ச யார்தான் உண்டு? ஆனால் கலைஞர் அந்தக் கூட்டத்தில் கோபப்பட்டதாகவும் ஒரு சேதி வந்ததே, அதுபற்றி?’’
‘‘எல்லா செய்திகளும் உங்களுக்கும் வந்து விடுகிறதே. அந்தக் கூட்டத்தில், கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் தங்கத் தட்டு வழங்கினார்கள். அதை வாங்கிய கலைஞர், ‘இது வெறும் தங்கத் தட்டாக இருந்தால் தூக்கி வீசியிருப்பேன். ஆனால், இந்தத் தட்டில் தங்கத்தைவிட நான் நேசிக்கும் சிங்கங்களான பெரியார், அண்ணா உருவப் படங்கள் இருப்பதால் நான் வாங்கிக் கொண்டேன். இந்தத் தட்டு கலைஞர் கருவூலத்துக்குப் போய்விடும்’ என்றார். அதேபோல் மறுநாளே கலைஞரும், ஸ்டாலினும் தங்கள் உதவியாளர்கள் மூலம் அந்தத் தட்டைக் கருவூலத்தில் சேர்த்துவிட்டனர்.’’
‘‘சபாஷ். காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் அணிவிக்கப்பட்ட தங்கச் சங்கிலிகள், கலைஞர் ஆணையிட்ட பிறகும் இன்னும் கருவூலத்துக்கு வந்து சேரவில்லையாமே பெண்ணே?’’
‘‘பற்ற வைத்துவிட்டீர்களே பரட்டை என்ற ரஜினி பட டயலாக்தான் இப்போது ஞாபகம் வருகிறது சுவாமி.’’
‘‘இந்தக் குசும்புதானே வேண்டாம். விழுப்புரம் பயணத்தில் கலைஞர் சந்தோஷப்பட்ட ஒரு நிகழ்வும் நடந்ததாகக் கேள்விப்பட்டேன்.’’
‘‘ஆமாம் சுவாமி. விழுப்புரத்தில் கலைஞர் பயணம் செய்த வழியெங்கும் தி.மு.க. ஆட்சியின் சாதனை விளக்க வாசகங்கள் அடங்கிய ஃப்ளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தனவாம். இதைப் பார்த்து கலைஞர் மகிழ்ச்சி அடைந்ததோடு, இனிவரும் காலங்களில் இதேபோல் விளம்பர வாசகங்கள் வைக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டிருக்கிறாராம்.’’
‘‘உனக்கே தெரியாத ஒரு விஷயத்தைச் சொல்கிறேன், கேள் பெண்ணே.’’
‘‘சொல்லுங்கள் சுவாமி’’ என்று கையால் வாயைப் பொத்திக்கொண்டு அடக்கமாக சுவாமி சொல்வதை கவனிக்கத் தொடங்கினார் சிஷ்யை.
‘‘கலைஞர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த அன்புமணி, இப்போது அவர் மீது மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம்.’’
‘‘ஏன் சுவாமி?’’
‘‘அந்த மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரமும், நிதியும் ஒதுக்கப்பட்டது அன்புமணி மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோதுதானாம். அதுமட்டுமின்றி விழுப்புரம் மாவட்ட மாநிலங்களவை எம்.பி. என்கிற முறையிலும் மருத்துவக் கல்லூரி திறப்புவிழாவில் தனக்கு அழைப்பு விடுக்காமல் அமைச்சர் பொன்முடி புறக்கணித்துவிட்டதாகவும், இதை அறிந்து முதல்வர் தன்னை அழைத்திருக்க வேண்டும் என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம்.’’
‘‘அப்படியா சுவாமி? வைகோ பற்றி ஒரு செய்தி சொல்கிறேன். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு செய்த தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாகவும் கேரள அரசை கண்டிக்கும் விதமாகவும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் ஒரு லட்சம் பேரைத் திரட்ட வைகோ முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதோடு தென்மாவட்ட விவசாயிகளும் ஆதரவு கொடுத்திருக்கிறார்களாம்.’’
‘‘அது சரி பெண்ணே. இப்போது வைகோ எங்கே போயிருக்கிறார்?’’
‘‘ஹைதராபாத்தில் உள்ள அவரது சகோதரர் மகன் வீட்டு விசேஷத்திற்குச் சென்றிருக்கிறாராம், சுவாமி.’’
‘‘வைகோ போனது இருக்கட்டும், பெண்ணே. அதே நேரத்தில் தீரா காதல் கொண்ட அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர், தன் துணைவியார் வீட்டுக்குச் செல்லாமல் பத்துநாட்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கிறாராமே?’’
‘‘வழக்கமாக அவர்களின் பிணக்கு இரண்டு நாட்களில் தீர்ந்து விடுமே சுவாமி. இந்த முறை இவ்வளவு நாட்களாகிவிட்டதே, என்ன காரணமாம்?’’
‘‘பெங்களூரு மகளுடன் துணைவியார் கடைப் பிடித்த மோதல் போக்கும், ஆட்சி அதிகாரத்தில் பெரிய அளவில் அவர் செய்த பரிந்துரையும்தான் இதற்குக் காரணமாம் பெண்ணே.’’
‘‘புரிகிறது சுவாமி. தன் பெற்றோருக்குள் ஏற்பட்ட இந்த ஊடலில் மகள் கூட சமாதானம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் அலுவலக விஷயமாக வெளியே வந்தவர் அந்த இடத்துக்கு தன் பேரனை வரவழைத்து சந்தோஷப்பட்டிருக்கிறார்’’ என்றபடி சிஷ்யை கிளம்ப ஆயத்தமாக, அங்கிருந்து எழுந்த சுவாமி, அருகே இருந்த தியான அறைக்குள் நுழைந்தார்.