|
பழமை...!
கை...கம்ப்யூட்டரின் ‘மவுசில்’ இருந்தாலும் கணக்குப் பிள்ளையின் காதில் இன்னும் கம்பீரமாய் வீற்றிருக்கிறது... பேனா...!
- இளங்கோ, மகராஜநகர்.
பர்சேஸ்!
புடவை வாங்கிப் போனேன் அம்மாவுக்கு. வாங்கிக் கட்டிக்கொண்டேன் மனைவியிடம்.
- வசீகரன், தேனாம்பேட்டை.
ஞாபக மறதி!
குரங்காட்டியின் - கோல் பிடித்துத் தாண்டும் குரங்கிற்கு நினைவில் இல்லை - தான் ஒரு கடல் தாண்டிச் சென்ற கதையும் ஒரு நகரம் அழித்த கதையும்.
576
வாலை ஆட்டியும், காலை நக்கியும் மிருகங்கள் சொல்லிவிடும் பிரியத்தை ஏனோ சொல்லத் தெரிவதில்லை நமக்கு எத்தனை மொழியிருந்தும்.
- ரமேஷ் அனந்தபத்மநாபன், மயிலாடுதுறை.
கிளி!
மயிலுக்குப்பதில் கிளியை தேசியப்பறவையாக்கி யிருக்கலாம்! அலகில் ஆரஞ்சு நிறம் பேச்சில் வெள்ளை மேனியில் பச்சை கண்கள் கருநீல அசோகச் சக்கரம்! பின் ஏன் விட்டுவிட்டார்கள்? ஒருவேளை - தேசிய ரகசியத்தைப் பாதுகாக்காது உளறிவிடும் என்று ஒதுக்கியிருப்பார்களோ?!
விபத்து!
நெரிசல்மிக்க சாலை நடுவே நசுக்கப்பட்டு கசங்கிக் கிடந்தது நர்சரி குழந்தை ஆட்டோவிலிருந்து தவறவிட்டிருந்த பிஸ்கட் பாக்கெட்!
- வளர்கவி, கோவை-22. |